எது துரோகம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2017
பார்வையிட்டோர்: 7,085 
 

அந்த நட்சத்திர ஹோட்டலில் நடந்த இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி செமினார் ஃபிரேக்கின் போது ராமனைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் விதி வியப்பானது. 25 வருடங்களுக்குப் பிறகு இருவரும் சந்திக்கிறோம். இந்த 25 வருடங்கள் எங்கள் சந்திப்பின் இடைவெளி மட்டுமல்ல; உடையவே உடையாது என்று பார்த்தவர் எல்லாம் பாராட்டிய எங்கள் நட்பு முறிவின் சில்வர் ஜூபிலியும் கூட.

முதலில் அவனைப் பார்த்ததும் என் கண்கள் விரிந்தன. ஒரு சின்ன ஸ்மைல் பண்ண நினைத்தேன். ஆனால் உடனேயே என்னை அடக்கிக் கொண்டேன்.

“ இனிமேல நீயும் நானும் பிரெண்ட்ஸ் இல்ல. எங்கயாவாது பார்த்தாக்கூட நானும் ஸ்மைல் பண்ண மாட்டேன் நீயும் பண்ண வேண்டாம்”

சட்டென்றுத் திரும்பி காஃபி சர்வ் செய்து கொண்டிருந்த கவுண்டர் அருகில் சென்றேன். மிகவும் வினயத்துடன் அந்தக் கவுண்டர் பர்சன் என்னை நோக்கி நகர்த்திய கோப்பையை எடுத்துக்கொண்டு அங்குப் போடப்பட்டிருந்த சேர்களில் ஒன்றில் அமர்ந்தேன். பதினைந்து நிமிட ப்ரேக். காஃபியை ஒரு சிப் உறிஞ்சினேன்.

“டேய்! இப்படி உறிஞ்சிக் குடிச்சா எங்க வீட்டுல செம்ம அடிவிழும்” என்று ராமன் சொல்லிச் சிரித்தான்.

“ம்ம்” என்று முனகி விட்டு அவன் வாட்டர் பாட்டிலைத் திருப்பி கொடுத்தேன்.

“ஹாய்! ஐயாம் ராமன்! வாட்ஸ் யோர் நேம்?” என்று ஸ்நேகமாக அவன் நீட்டிய கை வியர்வையால் ஈரமாக இருந்தது. எனக்கு ஈரக் கைகள் பிடிக்காது. இருந்தாலும் குடிக்கத் தண்ணீர் கொடுத்த நன்றிக்காக பட்டும் படாமலும் பற்றிக்கொண்டேன்.

“வெங்கட்!”

“குட் நேம். என் சொந்த ஊர் விளாங்குடி. நான் இங்க மதுரைல பாட்டி வீட்டுல இருந்து படிக்கறேன். அப்பாவுக்கு விவசாயம். வீட்டுல அப்பா அம்மா ஒரு அண்ணன் நான். அண்ணன் அப்பாவுக்கு ஹெல்பா இருக்கான். படிப்பு ஏறல. நான் நல்லா படிக்கறேன்னு அப்பா என்ன இங்க தங்க வச்சிருக்கார்” என்று நான் கேட்காமலேயே விவரங்கள் சொன்ன ராமனை எனக்குப் பிடித்துப் போயிற்று. சொல்லிவிட்டு கண்களாலேயே “நீ?” என்றான்.
“ ஐ டோல்ட் யூ மை நேம். என் அப்பா பாங்குல வேலை பண்றார். சீனியர் மானேஜர். அம்மாவும் அதே பாங்குல வேற பிராஞ்சுல வொர்க் பண்றா. நான் ஒரே பையன்”

“க்ளாட் டு மீட் யூ டா” என்றபடி ஸ்நேகமாக தோளில் கை (ஈரக்கை!) போட்டான்.

தோளில் கை விழுந்ததும் துணுக்கென்றது எனக்கு. காஃபி கொட்டியிருக்கும். நல்ல வேளை தப்பித்தது.

“என்னடா வெங்கட்! பாத்தும் பாக்காத மாதிரி வந்து உக்காந்துட்டே? நல்லா இருக்கியா? அப்பா அம்மா சௌக்கியமா? கல்யாணம் ஆகியிருக்கும் இல்ல? வொய்ப் என்ன பண்றா? எத்தனக் குழந்தைகள்?” ராமன் மாறவே இல்லை. இத்தனை வருஷங்களில் அவன் ஈரக்கையும் மாறவில்லை. ஒரே மூச்சில் பல கேள்விகள் கேட்கும் பழக்கமும் மாறவில்லை.

“ம்ம்ம்”

“என்னடா ம்ம்ம்? இன்னுமா இந்தப் பழக்கம் போகல? வெவரமாச் சொல்லுடா.” என்றவன் பார்வை தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தது.

“ சரி, சரி! செமினார் ஆரம்பிச்சுடும். நான் இதே ஹோட்டல்ல செகண்ட் ப்ளோர்ல தங்கியிருக்கேன். ரூம் 215. நீ எங்க தங்கியிருக்க? “

“நான் 226.”

“வெரி குட். சாயந்திரம் செமினார் முடிஞ்சதும் பேசலாம்.”

“சரிடா! ஸ்கூல் பெல் அடிச்சுடும். ஈவ்னிங் பேசலாம்” என்றேன் நான். மாலையில் பள்ளி விட்டதும் வெளியே வந்த எனக்கு ராமன் மறந்து போயிருந்தான். ஏதோ நினைவில் பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்த என்னை அவன் குரல் தடுத்து நிறுத்தியது.

“வெங்கட்! பேசலாம்ன்னு சொன்னியே! இப்ப கெளம்பிட்ட?”

“சாரி ராம்! மறந்துட்டேன்”

“பரவாயில்ல. எங்க பாட்டி வீடு பக்கத்துல தான் இருக்கு. வரியா? டிபன் பண்ணி வச்சிருப்பாங்க. சாப்ட்டுட்டு போ.”

மத்தியானம் சந்தித்தவனிடம் அவன் காட்டிய கரிசனம் எனக்குப் பிடித்துப் போயிற்று. சரி என்று அவனுடன் சென்றேன். அவன் பாட்டியும் அவனைப் போலவே மிகவும் அன்புடன் என்னை உபசரித்தாள். டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பியவனிடம், வாடா உன் வீடு வரையில் நானும் வர்றேன். உன் வீட்டையும் பார்த்தா மாதிரி இருக்கும். லீவு நாள்ல நீ என் வீட்டுக்கோ நான் உன் வீட்டுக்கோ வர வசதியா இருக்கும்” என்றான்.

இப்படி ஆரம்பித்த எங்க நட்பு காதலை விட வேகமாகவும் நெருக்கமாகவும் வளர்ந்தது. ஒன்றாகப் பிறந்து ஒன்றாக வளர்ந்தவர்களைப் போன்ற நண்பர்கள் ஆனோம். ஒன்று நான் அவன் வீட்டில் இருப்பேன். அல்லது அவன் என் வீட்டில் இருப்பான். அவன் பாட்டிக்கு நானும் செல்லம் ஆனேன். என் பெற்றோருக்கும் இவனை ரொம்பவும் பிடித்துப் போயிற்று.

ஸ்கூலில் கூட எங்கள் ப்ரெண்ட்ஷிப் ரொம்ப பிரபலமானது. ஆசிரியர்கள் கூட வியந்தார்கள். இப்படி இருந்த எங்கள் நட்பில் யார் கண் பட்டது என்று தெரியவில்லை. ஒரு ஞாயிறு அன்று காலை ராமன் கதவைத் தட்டினான்.

“ என்னடா, வெயிட் பண்ணு என்று சொன்னேனே! சரி பரவாயில்லை. நீ ரூம் நம்பர் சொன்னதால வசதியாப் போச்சு” என்று சொல்லியபடியே உள்ளே வந்தவன் என் ரூமில் முன்னால இருந்த சோபாவில் தொப்பென்று உட்கார்ந்தான்.

“என்னடா இருக்கு சாப்பிட? ட்ரிங்க்ஸ் சாப்பிடுவ இல்ல? நான் ஏற்கனவே ரூம் சர்வீசுக்குச் சொல்லிட்டேன். வந்துட்டே இருப்பாங்க” என்று அவன் சொல்லி முடிக்கவும் “சர்! ரூம் சர்வீஸ்!” என்று கதவு மெதுவாகத் தட்டப்படவும் சரியாக இருந்தது.

வந்தவன் எல்லாவற்றையும் ஒரு வித மரியாதையுடன் டேபிளில் எடுத்து வைத்து விட்டு செல்லும் வரையில் மெளனமாக இருந்த ராமன், அவன் சென்றதும் “சொல்லுடா” என்று சுமார் முப்பது வரிகளுக்கு முன்னர் கேட்ட கேள்விகளை மீண்டும் கேட்டான். பதில் சொல்லாமல் அவன் விடப்போவதில்லை என்று எனக்குத் தெரிந்தது.

“அப்பா அம்மா சௌக்கியம் தான். கோவைல இருக்காங்க. எஸ் ஐயம் மாரீட். வனிதா. ஷி இஸ் எ ஹௌஸ் வைப். ஒரே பையன். சென்னை IITல படிக்கிறான். நான் சென்னைல செட்டில்ட். உன்னப் பத்தி சொல்லு”

“அப்பா தவறிட்டார். அம்மா இஸ் இன் அவர் வில்லேஜ் ஒன்லி. எனக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு பெண் குழந்தைகள். பெரியவளுக்கு கல்யாணம் ஆயாச்சு. சின்னவ படிச்சிக்கிட்டு இருக்கா. மனைவி சுந்தரி.”

ராமன் எனக்கும் தனக்குமாக இரண்டு பெக் தயார் செய்தான். ஒன்றை என் கையில் தந்து தன் கோப்பையால் லேசாக இடித்து சியர்ஸ் சொன்னான். ஒரு சிப் அருந்திவிட்டு, கீழே வைத்தான். டேபிளில் இருந்த சிகரெட் பாக்கெட்டைத் திறந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.

“அண்ணா எப்படி இருக்கார்?” என்றேன் நான் ஈனஸ்வரத்தில்.

“ ஏன் அண்ணி எப்படி இருக்காங்கன்னு கேக்க மாட்டீங்களோ?” என்று சொல்லி சிகரெட்டை ஆழமாக இழுத்து ஒரு புகை வளையத்தை என் முகத்தின் மீது விட்டான்.

“ டேய்! இந்த மாதிரி என் மூஞ்சுல பொகைய விடாதடா. எனக்குப் பிடிக்காது” என்ற என்னிடம் “கோச்சுக்கதடா வெங்கட்! இந்த மாதிரி என்ஜாய் பண்ணத் தானே உன்ன என் கிராமத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்கேன்? இங்க ஒருத்தரும் வர மாட்டாங்க. இந்தா நீயும் ஒண்ணு அடி என்று சொல்லி ஒரு சிகரெட்டைக் கொடுத்தான்.

ஆமாம். நாங்கள் இருவரும் ராமனின் கிராமத்தில் தான் இருந்தோம். எங்க காலாண்டு பரீட்சை விடுமுறைக்கு என்னைத் தன் கிராமத்துக்குக் கூட்டி வந்திருக்கிறான். என் பெற்றோரிடம் மன்றாடி பர்மிஷன் வாங்கி. காலையில் தான் வந்தோம். டிபன் சாப்பிட்டுவிட்டு தோட்டத்துக்குப் போகிறேன் என்று சொல்லி என்னையும் அழைத்து வந்து இங்கே தம்மடிக்கிறான்.

எதற்கும் இருக்கட்டும் என்று அவன் தந்த சிகரெட்டை பற்ற வைத்து புகையை உள்ளிழுத்து விட்ட போது தான் அவளைப் பார்த்தேன். புகையினூடே ஒரு தேவதை போல் தெரிந்தாள். சுமார் 25 வயதிருக்கும். கிராமிய பாணியில் கட்டியிருந்த புடவை அவள் அழகை மறைக்க முடியாது திணறியது.

“ஐயோ! அண்ணி! என்று அலறிப் புடைத்து சிகரெட்டை விட்டெறிந்து எழுந்து நின்ற ராமனைப் பார்த்து அவள் சிரித்தாள். எனக்கு என்ன பண்ணுவதென்று தெரியாமல் புகையும் சிகரெட்டைக் கையிலேயே வைத்திருந்தேன்.

“என்ன மைத்துனரே! எப்பப் பெரியவர் ஆனீங்க? சொல்லவே இல்லை!” சிரித்தபடியே சொன்னவள் என்னைப் பார்த்து” ஒண்ணு தம்மு அடிக்கணும்; இல்லேன்னா தூக்கிப் போட்டுறனும். இப்படிக் கைல வச்சிருந்தா வெரல் சுட்டுரும்” என்றாள்.

“ அண்ணி! மன்னிச்சுக்குங்க அண்ணி! தெரியாத்தனமாப் பண்ணிட்டோம். யாரு கிட்டேயும் சொல்லிடாதீங்க” என்று ராமன் கெஞ்சினான். “நீயும் சாரி சொல்லுடா” என்றான்.

நானும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு “ அண்ணி நல்லா இருக்காங்களா?” என்றேன்.

“தே காட் டைவர்ஸ்ட்” என்றான் சிக்கனமாக.

“மை காட்! டைவர்ஸுக்கு என்ன காரணம்?” என்ற என்னிடம் “ Infidelity” என்றான் சுருக்கமாக.

“சாரிடா” என்றேன் சம்பந்தமே இல்லாமல்.

“சாரி எல்லாம் வேணாம்பா. ஒடம்புக்கு ஆகாதில்ல?” என்ற அண்ணி “என் பேரு ரேவதி. நான் ராமன் அண்ணி.” என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

“அண்ணி, என் பேரு வெங்கட்” என்றேன்.

“தெரியும். வாங்க ரெண்டு பேரும் கை கால் கழுவிக்கிட்டு. அப்பாவும் அண்ணாவும் வயக்காட்டிலேர்ந்து வந்துட்டாங்க” என்று சொல்லிப் போனாள்.

சிறிது நேரத்தில் நாங்கள் வீட்டை அடைந்தோம். ராமன் என்னைத் தன் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் அறிமுகப் படுத்தி வைத்தான். அவன் அண்ணன் என்னை ஒரு மாதிரிப் பார்த்தான். அப்போது தான் நான் கவனித்தேன் ரேவதி என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை. எனக்கு வியர்த்தது.

“ உனக்கேண்டா இப்படி வேர்க்குது? ஆச்சர்யமா இருக்கா?” என்றவன் என்னை ஏற இறங்கப் பார்த்தான்.

ஏற இறங்கப் பார்த்த அண்ணன் கண்கள் என்னை அளவெடுத்தன. எனக்கு ஒரு மாதிரி கூசியது. அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

அப்புறம் மதியம் சாப்பாடு. பிறகு அவர்கள் இருவரும் வயல் காட்டுக்குச் சென்று விட்டார்கள். நானும் ராமனும் கிராமத்தைச் சுற்றி வந்தோம்.

இரவும என்னை வீட்டினுள் படுக்கச் சொன்னார்கள். ராமன் அப்பாவும் அம்மாவும் வீட்டுத் திண்ணையில் படுத்தார்கள். ரேவதி தன் அறையில். நானும் ராமனும் அவன் அறையில்.

இப்படியே இரண்டு நாள் ஓடியது. எனக்குக் கிராமம் ரேவதி இருந்ததால் போரடிக்காமல் இருந்தது. வெளியில் செல்வதைக் குறைத்துக்கொண்டு வீட்டிலேயே அவளுடன் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் போலத் தோன்றியது.

ரேவதி படித்தவள். நன்றாக பாடவும் தெரியுமாம். மிக முக்கியமாக நன்றாக ரம்மி விளையாடினாள். நாங்கள் மூவரும் உட்கார்ந்து விளையாடும்போது எனக்குப் பொழுது போவதே தெரியாது. அதுவும் சில சமயம் அவள் விளையாட்டாக என்னைச் செல்ல அடி அடித்து கார்டைப் போடும் தருணங்களுக்காக ஏங்க ஆரம்பித்தேன். ஆனால் இது ராமனுக்குத் தெரியாமல். ஆனால் ரேவத்திக்குத் தெரிந்து விட்டது என்பது இரண்டு நாளிலேயே புரிந்து விட்டது. ஒரு நாள் மதியம் சாப்பிட வந்த அண்ணனும் ரேவதியும் பின்கட்டில் புழக்கடையில் பேசிக்கொண்டிருந்தார்கள். தற்செயலாக அங்கே வந்த எனக்கு “ வேணாங்க. அதெல்லாம் தப்பு.” என்ற ரேவதியின் வித்தியாசமான குரல் கேட்டது. “ எல்லாம் எனக்குத் தெரியும். நான் சொல்லித் தானே செய்யுற? “ என்றார் அண்ணா. எனக்கு ஒன்றும் புரியவில்லை.

இரவும் ஆயிற்று. ராமனும் அவன் அண்ணாவும் வயல் காவலுக்குச் சென்றார்கள். என்னையும் ராமன் கூப்பிட்டான். ரேவதி தான் மறுத்தாள். “அவனுக்கு அதெல்லாம் பழக்கமிருக்காது மைத்துனரே! நீங்க போய் வாங்க”
எல்லாருக்கும் குட் நைட் சொல்லிவிட்டு நான் தூங்க முயற்சி செய்தேன். தூக்கம் வரவில்லை. திடீரென்று கதவு தட்டப்பட்டது. திறந்தால் ரேவதி. கையில் பால் டம்ப்ளருடன்.

“இதக் குடுச்சிட்டுப் படுங்க” என்றவள் குளித்திருந்தாள். வேறு புடவை அணிந்திருந்தாள். தலை வாரியிருந்தாள். பூச் சூடியிருந்தாள். மெலிதாக பெண் வாசம் அடித்தாள்.

குடித்து விட்டு டம்ப்ளரை அவள் கையில் கொடுத்தபோது தொட்டு வாங்கினாள். “தூங்கிடாதீங்க” என்று சொல்லிச் சென்றாள்.

எனக்கு வியர்த்தது. கடவுளே! தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தேன். ஒரு மணி நேரம் கழித்து என் அறைக் கதவு லேசாகத் திறந்தது. பூ வாசம். ஒரு மெலிதான கை என் மீது விழுந்தது. பெண் வாசம். ரேவதி.

“அண்ணி இது தப்பு!”

“தெரியும். அண்ணாவுக்கும் தெரியும். அவருக்கு ரெண்டு வருஷம் முன்னாடி ஆக்சிடெண்டு ஆச்சு. புள்ள பொறக்காது அவர் மூலமா. ஊர் பேச்சு தாங்கல. தற்கொல பண்ணிக்கப் போயிட்டார். நான் தான் காப்பாத்தினேன். வேற கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னார். முடியாதுன்னுட்டேன். அதான்… தப்புதான். ஆனா அவரு மானம் காப்பாத்த…. ஒரு சிகிச்சை மாதிரிதான்….”

அதற்கப்புறம் நடந்தவை கழிவிரக்கமா காமமா? எனக்குப் புரியவில்லை.

மறுநாள் காலையில் புழக்கடையில் யாரும் இல்லை என்று நினைத்து அவள் கையைப் பிடித்து “ரேவதி” என்று கொஞ்சியபோது ராமன் பார்த்து விட்டான். அப்புறம் தான் நான் மேலே சொன்ன பிரகாரம் எங்கள் நட்பு முறிந்தது.

பின்னர் படிப்பு நிமித்தம் நான் IIT சேர்ந்தது, வேலைக்குப் போனது. கல்யாணம் பண்ணிக் கொண்டது, குழந்தை பெற்றுக்கொண்டது, இதோ இந்த செமினாருக்கு வந்தது என்று 25 வருஷம் ஓடிபோயாச்சு.

“என்ன நிகழ்காலத்துக்கு வந்திட்டியா?” ராமன் சிரித்தான்.

“என் மேல ரொம்ப கோவமா இருந்தியே, எப்படி கோவம் போச்சு?”

“ஆமாண்டா ரொம்ப வருஷம் உன் மேல கோவமாத் தான் இருந்தேன், உண்மை தெரியாம. அப்புறம் ஒரு நாள் திடீர்னு அப்பா என்ன அவசரமா கூப்பிட்டு அனுப்பிச்சாரு. வீட்டுக்குப் போனா, ஒரே களேபரம். அண்ணனும் அண்ணியும் பிரியப் போறாங்கன்னு. அண்ணனைத் தனியாகக் கூப்பிட்டு விசாரித்தேன். அண்ணிக்கு வேற யாரோடயோ தொடர்பாம். அது அண்ணனுக்குத் தெரிஞ்சு விவாக ரத்து வரைல போயிடித்து.

எனக்கு ரொம்ப அதிர்ச்சி ஆயிடித்து. அண்ணனைப் பார்க்கவே ரொம்ப பரிதாபமா இருந்தது. சொல்ல வேண்டாம்னு நெனைச்சேன். அப்புறம் என்னால அடக்க முடியாம உன் விஷயத்தையும் அவர்கிட்ட சொல்லிட்டேன். இதுனால நம்ம ரெண்டு பேர் பிரெண்ட்ஷிப்பும் முறிஞ்சதையும் சொன்னேன்.

விஷயத்தைக் கேட்ட அண்ணன் ரொம்ப நேரம் அமைதியா இருந்தார். அப்புறம் என்ன நேரா பாக்கத் தைரியம் இல்லாதமாதிரி தலையக் குனிஞ்சுக்கிட்டு “ அது நான் சொல்லித் தான் நடந்துச்சுடா” என்றார்.

“சத்தியமாச் சொல்றேண்டா வெங்கட்! அந்த நிமிஷத்துல இருந்து உன்மேல இருந்த கோவம் போயிருச்சுடா. அன்னியிலிருந்து உன்னத் தேடிக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லியபடி எழுந்தான்.

மெலிதான போதையில் தள்ளாடியபடி என்னருகில் வந்தான். என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டான்.

என்னுடைய நினைப்பென்னவோ அந்தச் சமயத்தில் ரேவதியைப் பற்றித்தான் இருந்தது.

– ஜூலை 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *