எண்ணங்கள் மாறலாம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 17, 2015
பார்வையிட்டோர்: 7,855 
 

புதிய படமாதலால் தியேட்டரில் நல்ல கூட்டமிருந்தது. எனினும், திரைப் படத்தில் மனம் செல்லாது, முந்தைய தினம் தன் பெற்றோர்களுடன் பார்த்துவிட்டு வந்த பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான் மூர்த்தி.

இவனுக்கு கோகிலாவை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் பெண்ணின் தகப்பனார் இவன் பெற்றோர்கள் எதிபார்த்த அளவு வரதட்சினை கொடுத்து, சீர் செனத்திகள் செய்ய முடியாத இயலாமையைத் தெரிவித்தபோது மூர்த்தியின் தந்தை, தான் கடிதம் போடுவதாக ஒப்புக்குச் சொல்லிவிட்டு வந்ததை நினைக்கையில் இவனுக்கு மனம் கசந்தது.

கோகிலாவும் தன்னை விட்டு நழுவி விட்டாள் என்பதை நினைத்தபோது மூர்த்திக்கு தன பெற்றோர்கள் மீது கோபமும் எரிச்சலும் ஏற்பட்டது.

கலைந்த கூட்டத்தைப் பார்த்து ‘இடைவேளை’ என்கிற உணர்வு வந்தவனாய் எழுந்து வெளியே வந்தான். “டேய் மூர்த்தி” என முதுகில் எவரோ தட்டவும் திரும்பிப் பார்த்தபோது தியாகு நின்று கொண்டிருந்தான்.

பல வருடங்களுக்குப் பிறகு தியாகுவை எதிர்பாராமல் சந்தித்த மகிழ்ச்சியில் அவன் கைகளைப் பற்றி, “என்னடா தியாகு, இங்க திருநெல்வேலியில்தான் இருக்கியா… கல்யாணம் ஆயாச்சா?” என்றான்.

“ஆமாண்டா திருநெல்வேலியில்தான் தற்போது குடித்தனம், கல்யாணமெல்லாம் ஆயாச்சு”

“ஒரு இன்விடேஷன்கூட அனுப்பாம நம்முடைய நட்பை மறந்துவிட்டாய் பார்த்தியா?”

“டேய் எல்லாம் அவசரத்தில் முடிஞ்சுதுடா, நான் யாரையுமே என் திருமணத்திற்கு அழைக்கவில்லை. ரொம்ப சிம்பிளா முடிச்சுட்டேன். நாளைக்கு நான் வீட்டில்தான் இருப்பேன், கண்டிப்பா வாயேன்.”

விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான் தியாகு.

இடைவேளை முடிந்ததற்கான அறிவிப்பு மணி அடிக்கப்பட்டதும் இருவரும் பிரிய நேரிட்டது. விளக்குகள் அணைக்கப்பட்டு இருட்டானது.

தனக்கு இன்னமும் திருமணமாகவில்லையே என்கிற ஏக்கம் மூர்த்தியினுள் அதிகரித்தது.

மனம் தியாகுவைப் பற்றி அசைபோடலாயிற்று…

காரைக்குடி பொறியியற் கல்லூரியில் படிக்கும் காலங்களில், சக மாணவர்களுடன் மூர்த்தியும் சேர்ந்துகொண்டு புகைபிடித்தல், சீட்டாடுதல் போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையானபோது, ரூம்மேட் தியாகு இவனை திருத்த முயன்று தோற்றான்.

தியாகு சக மாணவர்களிடமிருந்து சற்று வித்தியாசமானவன். விவேகானந்தர் எழுதிய புத்தகங்களைப் படித்துப் புரிந்துகொண்டு உயர்ந்த சிந்தனைகளையும், எண்ணங்களையும் தன்னுள் வளர்த்துக் கொண்டவன்.

நம் வாழ்க்கையை நாம்தான் அர்த்தமுள்ளதாக, நேர்மையாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்வான்.

காரைக்குடியில் இஞ்சினியரிங் முடிந்ததும் மூர்த்தி பிசினெஸ் மானேஜ்மென்ட் படிப்பதற்காக ஐ.ஐ.எம் அகமதாபாத் சென்றவுடன், நண்பர்களிடையே கடிதப் போக்குவரத்து குறைந்துகொண்டே சென்று இறுதியில் நின்றும் விட்டது.

மறுநாள்…

வீட்டைக் கண்டுபிடித்து அழைப்பு மணியை அழுத்தியபோது, தியாகுதான் வந்து கதவைத் திறந்தான். “வாடா மூர்த்தி வா…” மகிழ்ச்சியுடன் கூடத்தினுள் அழைத்துச் சென்று அவனை அமர வைத்து தானும் எதிரில் அமர்ந்தான். அப்போது கூடத்தின் நடுவே தொட்டிலில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை சிணுங்கிக்கொண்டு அழ ஆரம்பித்தது.

“என்னடா, உன்னோட குழந்தையா?”

“ஆமாண்டா” எழுந்து சென்று தொட்டிலை ஆட்டிவிட்டு குழந்தையின் சிணுங்கல் நின்றதும் மூர்த்தியின் எதிரே வந்து அமர்ந்தான்.

“அப்ப கல்யாணமாகி ஒரு வருஷத்துக்கு மேல் ஆச்சுன்னு சொல்லு..”

“இல்லடா, எட்டு மாசம்தான் ஆச்சு…”

“அப்ப தப்பு பண்ணிட்டுத்தான் கல்யாணம் பண்ணிக் கொண்டாயா?”

“அந்த தப்பையும் நான் செய்யலைடா…”

“தியாகு என்னடா சொல்ற நீ, இது காதலுக்காக நடந்த கல்யாணமா, இல்ல நீ மாட்டிக்கொண்ட நிர்பந்தத்தினால் ஏற்பட்ட கல்யாணமா?”

“இரண்டுமே இல்லடா, நானா விரும்பி செய்து கொண்ட கல்யாணம்.”

அப்போது தியாகுவின் மனைவி ஒரு ட்ரேயில் காப்பியுடன் கூடத்தினுள் நுழைந்து, இவர்கள் எதிரேயிருந்த டீப்பாயின் மீது ட்ரேயை வைத்தாள்.

“இவள் என் மனைவி பாகீரதி… பாகீ, என்னோட நண்பன் மூர்த்தி வந்திருக்கான். நாங்க இஞ்சினியரிங் ஒன்றாகப் படித்தோம்…”

பாகீரதி ஒரு அனுமானத்துடன் மூர்த்தி இருந்த திசையை நோக்கி நமஸ்கரித்தாள்… பாகீரதிக்கு பார்வை கிடையாது என்பதைப் புரிந்துகொண்ட மூர்த்தி அதிர்ந்தான்.

பாகீரதி உள்ளே சென்றதும், “என்னடா தியாகு என்னதான் நடந்தது?” உடைந்த குரலில் வினவினான்.

“என் மனைவிக்கு கண்பார்வை கிடையாது. சிறிய வயதிலேயே பார்வையை இழந்து விட்டாள்.. நான் திருநெல்வேலியிலேயே சொந்தமாக தொழில் ஆரம்பித்த புதிதில், தினமும் காலையில் குளித்த பிறகு, ஜங்ஷனில் உள்ள சாலைக் குமாரர் கோவிலுக்குச் சென்று முருகனை தரிசனம் செய்து விட்டுத்தான் அலுவலகம் செல்வேன். அப்போதுதான் நான் பாகீரதியைத் தினமும் கோவிலில் காண நேரிட்டது.

“கோவிலில் கூட்டமேயிராத அந்தக் காலை நேர அமைதியில், இவள் முருகன் சன்னதியின் முன்பு அமர்ந்துகொண்டு தோளில் புரளும் ஈரக் கூந்தலுடன் நெற்றியில் வீபூதி குங்குமம் பளிச்சிட கந்தர் சஷ்டி, கந்தர் அலங்காரம் போன்றவைகளை மனமுருகி நல்ல சாரீரத்துடன் பாடும் போது, நான் தினமும் மெய்மறந்து கேட்டிருக்கிறேன்.

“இவளை நான் பார்த்த போதெல்லாம், பார்வையற்ற பெண் என்கிற இரக்கமும், இவளுக்கிருந்த தெய்வீக தேஜஸின் மேல் பக்தி கலந்த மரியாதையும்தான் எனக்குள் ஏற்பட்டது…

“ஒருமுறை தொடர்ந்தாற்போல் பதினைந்து தினங்கள் பாகீரதியை கோவிலில் காணவில்லை. காலை நேரத்திய அந்த ரம்மியமான தெய்ய்வீகச் சூழ்நிலைக்காக எங்க ஆரம்பித்து இருப்புக் கொள்ளாது தவித்தேன்…

“மனம் பரிதவிக்க ஒருநாள் கோவில் அர்ச்சகரிடம் அவளைப் பற்றிக் கேட்டபோது, பாகீரதி தன வீட்டில் தனித்திருந்தபோது நான்கு கயவர்கள் அவளது வாயைக்கட்டிப் போட்டு அவளை மானபங்கப் படுத்திவிட்டு ஓடி விட்டார்கள்.” என்றார்.

“அவளுக்கு நடந்த இந்தக் கொடுமை என் மனதை மிகவும் பாதித்தது. அன்று இரவு தூங்காமல் படுக்கையில் ரத்தக் கண்ணீர் வடித்தேன். விடியும் போது என்னுள் என்னால் அவளை திருமணம் செய்துகொண்டு வாழ முடியும் என்கிற எண்ணம் தீவிரமாக உறுவெடுத்தது…

“…………”

மூர்த்தி, நான் இப்பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா? பார்வை இல்லாத குறையும், கற்பிழந்த கறையும் இவளுடைய குற்றமல்ல. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், உயர்ந்த சிந்தனைகளும் நல்ல எண்ணங்களும், தெய்வ நம்பிக்கையும் உள்ளவள் என் மனைவி. எங்களுக்கு திருமணமான போது அவள் மூன்று மாத கர்ப்பம். என்னுடைய வீட்டின் பலத்த எதிர்ப்புக்கிடையே நான் பாகீரதிய மணந்து கொண்டேன்…

“இதோ தொட்டிலில் படுத்திருக்கிறதே குழந்தை அதை எங்களுடைய குழந்தையாக நினைத்து அன்பு காட்டி வளர்த்து வருகிறேன்.”

நீண்ட பெருமூச்சு விட்டான்.

“தியாகு யு ஆர் ரியலி கிரேட்… நீ அடிக்கடி சொல்வாயே ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழணும்னு, அது இப்பத்தாண்டா எனக்குப் புரியுது.” மூர்த்தியின் குரல் தழுதழுத்தது.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.

அமைதியைக் கலைக்க எண்ணிய தியாகு, “என்னடா உனக்கு எப்ப கல்யாணம்?” என்றான்.

ஒருகணம் தான் அடிக்கடி பெண் பார்த்துவிட்டு வரதட்சினை எதிர் பார்ப்பினால் அவைகள் தட்டிப்போகும் உண்மையை தியாகுவிடம் சொல்லி விடலாமா என்று நினைத்தவன் அடுத்த கணம், இவனைப்போன்ற ஒரு பெருந்தன்மையானவனிடம் நம்மைப் பற்றிச் சொன்னால் எவ்வளவு கேவலமாக நினைப்பான் என்று எண்ணியவனாய் “சீக்கிரம் பண்ணிக் கொள்ள வேண்டும்” என்று மட்டும் சுருக்கமாகப் பதிலளித்தான்.

தன் நண்பனிடம்கூட நேர்மையாக இருக்க முடியாது திராணியற்றுப் போனதை எண்ணி வெட்கினான்.

தன் வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த மூர்த்திக்கு, மனதில் புதிய சிந்தனைகள் தொடர்ந்து அரும்பலாயின…

தான் கோகிலாவை பெண் பார்த்த விஷயத்தை தன உற்ற நண்பனிடம் மறைக்க நேர்ந்தது எதனால்? வரதட்சினையினால் தன திருமணம் அடிபட்டுப் போகிறது என்கிற உண்மையை அவனிடம் சொல்ல நாக்கு கூசியதால்தானே!

தன் பெற்றோர்களின் மனதில் படிந்திருக்கும் வரதட்சினை என்கிற மனப் பாசிக்கு இதுகாறும் தான் தந்த மறைமுக அல்லது அமைதியான ஆதரவு தானே காரணம்… தன்னால் ஏன் வீறு கொண்டு எழ முடியவில்லை? பெற்றோர்கள சொல்வது அனைத்திற்கும் நான் ஏன் கோவில் மாடு மாதிரி தலையாட்ட வேண்டும்?

சிகரெட், குடி, ரேஸ், சீட்டாடம் போன்ற இன்னபிற கெட்ட பழக்கங்களைத் தொடரும்போது பெற்றோர்களுக்குப் பயப்படாத நான், இந்த வரதட்சினை சீர் செனத்தி விஷயங்களில் மட்டும் அவர்களுக்கு அடங்கிய பிள்ளையாக ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்கிற வாக்கின்படி நடந்துகொள்வது எவ்வளவு கேவலம் ?

தியாகுவைப்போல் பெரிய பெரிய தியாகங்கள் செய்ய முடியாவிடினும், ஒரு சராசரி சுரணையுள்ள வாலிபனாக வாழ முடியாது போனது எங்கனம்…?

கேவலம் நம் வீட்டின் உபயோகத்திற்காக ஒரு ஜடப்பொருளை வாங்கும் போது அதற்கு விலையாக நாம் பணம் தர வேண்டியிருக்கிறது… இதற்குப் பெயர் வியாபாரம்.

ஆனால் தனக்கு மனைவியாகாப் போகின்ற ஜடப் பொருளல்லாத, உணர்ச்சிகள் உள்ள ஒரு பெண்ணை திருமணம் என்கிற போர்வையில் நம் வீட்டிற்கு விளக்கேற்ற அழைத்து வந்து, அதற்கு விலையாக நாம் பணம் தராது, அவளையே பணம் பொருள் என எல்லாவற்றையும் கொண்டுவரச் சொல்கிறோமே! இது எந்த வகை வியாபாரத்தைச் சேர்ந்தது?

இவ்வகை அசிங்கமான வியாபாரத்திற்குப் பிறகு திருமணம் என்கிற புனிதமான சடங்கில் ஐக்கியமாகி எவ்விதம் அவளுடன் வாழ்க்கை நடத்த முடியும்? அப்படியே வாழ்க்கை நடத்தினாலும் அது பொய்யுடன் செய்து கொள்ளும் சமரசமல்லவா?

ஓர் உறுதியான முடிவுக்கு வந்திருந்தான் மூர்த்தி. ஆரோக்கியமான இலக்கில் அவனது எண்ணங்கள் திசை மாறியிருந்தன.

மூர்த்தி வீட்டையடைந்தபோது அவன் தந்தை பரசுராமன் ஒரு கடித உறையுடன் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்.

“அப்பா யாருக்கு லெட்டர் போஸ்ட் செய்யப் போறீங்க?”

“அதாண்டா, நீ பொண்ணு பார்த்தியே கோகிலா, அவ அப்பாவுக்கு இடம் ஒத்துவரலைன்னு நாலு வரி எழுதினேன். போஸ்ட் பண்றதுக்கு போறேன்..”

மூர்த்தி அவரை தடுத்து நிறுத்தி, அவர் கையிலிருந்த உறையைப் பிடுங்கி, தன எதிர்ப்பைத் தெரிவிக்கும் வண்ணம் அதை சுக்குநூறாக கிழித்தான்.

முதன் முறையாக தன் தந்தையை நிமிர்ந்து நோக்கி குரலில் உறுதியுடன், “ஏம்பா நீங்க என்னைப் படிக்க வெச்சது என்னுடைய பிற்கால நல் வாழ்விற்கா.. அல்லது வரப் போகிறவளிடம் பணம் பறிக்கும் கேவலத்திற்கா? எனக்கு கல்யாணம்னு ஒண்ணு இருந்தா அது கோகிலாவுடன்தான்… அதுவும் எப்படித் தெரியுமா, வரதட்சினை சீர் செனத்தி ஒரு ஜபர்தஸ்து இருக்கக் கூடாது. திருமணத்தை எளிதாக நடத்தினால் போதும். இதை இப்பவே எழுதிப் போட்டுவிட்டு, கோகிலாவை எனக்குத் திருமணம் முடிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்க… இதுக்கெல்லாம் நீங்க ஒத்துக்கலைன்னா மூர்த்தின்னு ஒரு மகன் இருந்தான்கறதையே மறந்துடுங்க…”

மூர்த்தியின் கண்களில் நீர் முட்டியது. உடம்பு படபடத்தது.

மகனின் உண்மையான வேகத்தையும் உறுதியையும் பார்த்த பரசுராமன் அதிர்ந்து போனார். மேற்கொண்டு எதுவும் பேச இயலாது ‘மூர்த்தி-கோகிலா’ திருமணத்திற்கு நாள் குறிக்குமாறு கோகிலாவின் தந்தைக்கு கடிதம் எழுத அமர்ந்தார். அக்கடிதத்தில் தன மகன் விருப்பப்படியே வரதட்சணை, சீர் எதுவும் வேண்டாமென்று எழுத அவர் தவறவில்லை.

– ஓம் சக்தி மே 2005 இதழில் பிரசுரமான கதை

Print Friendly, PDF & Email

1 thought on “எண்ணங்கள் மாறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *