உறவு வரும், பிரிவு வரும்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 5,944 
 

லாம்பி ஸ்கூட்டர் சேட்டைக்குப் பேர் போனது. நான் தனியாய் சவாரி செய்கிற போது சமத்தாயிருக்கும். இவள் பின்னால் ஏறிக் கொண்டு வருகிறபோது, அது தன்னுடைய வேலையைக் காட்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மாட்னி ஷோவுக்குப் போகலாமென்று கிளம்புகிற போது, பாதி தூரத்தில் ஆஃப் ஆகிவிடும். வேகாத வெயிலில் ஸ்கூட்டரோடு நான் மல்லுக்கட்டிக் கொண்டி ருப்பேன். ஸைடு கதவைக் கழட்டி, பெட்ரோல் ஓட்டத்தைச் செக் செய்து, ஸ்பார்க் ப்ளக்கைக் கழட்டித் தேய்த்துத் தேய்த்துத் திரும்ப மாட்டி, உதையோ உதையென்று உதைத்து…

இத்தனைக்கும், ஓரமாய் மர நிழலில் நின்று கொண்டு இவள் அர்ச்சனைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருப்பாள். என்னமோ நான்தான் இந்த ஸ்கூட்டருக்கு சொல்லிக் கொடுத்து, பாதி வழியில் மக்கர் செய்ய ஏற்பாடு செய்திருக்கிற மாதிரி.

ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து கொண்டு வருகிறபோது அடக்கமாயிருக்க மாட்டாள்.
ஹாண் அடிக்க…. பிரேக் புடிங்க….
இந்த எடத்துல ஓவர்ட் டேக் செய்யாதீங்க..
இவ்வளவு ஓரமாப் போகாதீங்க…
கியரச் சேய்ஞ்ஜ் பண்ணுங்க..

”இப்ப நா எந்த கியர்ல போய்ட்டிருக்கேன்னு தெரியுமா?”

”ம்? தெரியாது.”

”அப்ப எந்த கியர்லயிருந்து எந்த கியருக்குச் சேய்ஞ்ஜ் பண்ணச் சொல்ற?”

”…”

”இந்தா பார், ஒனக்குக் கார் ஓட்டத் தெரியும், அதனால பக்கத்துல ஒக்காந்துக்கிட்டுத் தொணதொணத்துக்கிட்டே வந்த, நா சகிச்சிக் கிட்டேன். ஸ்கூட்டர் ஓட்ட ஒனக்குத் தெரியாது. ஸோ, கம்னு வா.”

பின் ஸீட்டில் நிசப்தம். வெற்றி. ஹ.! வெற்றி.

அட்லாஸ்ட்!

பிறகு, மெட்ராஸுக்கு மாற்றலாகி வந்தபோது நம்ம ஸ்கூட்டரும் எங்களோடு நெல்லை எக்ஸ்ப்ரஸ்ஸில் பயணமானது. விசாலமான மவுன்ட் ரோடிலும், குறுகலான பாரிஸ் கார்னர் கிளைச் சாலைகளிலும் நெரிசலான தி நகரிலும் என்னைச் சுமந்து கொண்டு ஓடியிருக்கிறது.

ஆனால் இவளையும் சுமந்து கொண்டு செல்கையில், என்னைக் காலைவாரி விடுவதில் கவனமாயிருந்தது.

இவளிடமிருந்து பல சந்தர்ப்பங்களில் விதவிதமான, வித்யாசமான, விசேஷமான வசவுகளைப் பெற்றுத் தந்த வாகனமாயிருந்த போதும், அந்த ஸ்கூட்டரோடு எனக்கொரு பாசப்பிணைப்பு ஏற்பட்டுப் போனது.

பிற்காலத்தில், வெளிநாட்டு ராட்சசக் கம்பெனிகளின் கூட்டுத் தயாரிப்பாய் அட்டகாசமான ட்டூ வீலர்கள் சென்னைச் சாலைகளை ஆக்கிரமிக்கப் புறப்பட்ட பின்னால், லாம்பி தயாரிப்பு நின்று போய், கம்ப்பெனி காணாமலே போய்விட்டது.

ஆர்ப்பாட்டமான புதிய வாகனங்களுக்கு இணையாய் சாலையில் ஓடுவதற்கு நம்ம லாம்பி சங்கோஜப்படுவது தெரிந்தது. தாழ்வு மனப்பான்மையில் சங்கடப்பட்டுக் கொண்டு அடிக்கடி நோய்வாய்ப்பட்டது.

அதோடு, எனக்கு ஆஃபீஸர் ப்ரமோஷன் கிடைத்து, ஆஃபீஸில் கார் லோன் போட்டு ஒரு மாருதி 800 வீட்டுக்கு வந்த பின்னால் லாம்பியின் சேவை அதிகமாய்த் தேவைப்படவில்லையாதலால் அதற்கு விஆர்எஸ் வழங்கப்பட்டுவிட்டது.

இந்த ஸ்கூட்டரை விட வயதில் சிறியவனான என் மகன், இஞ்ஜினியரிங் முடித்து, அமெரிக்காவுக்குப் பறந்து விட்டான்.

”’இந்த சனியன் எதுக்குங்க வாசல அடச்சிக்கிட்டு நிக்கிது, வித்துத் தொலக்கிறது தான”’ என்று இவள் ஆரம்பித்தாள்.

இவள் சொன்னது ஸ்கூட்டருக்குக் காதில் விழுந்திருக்க வேண்டும். ரொம்ப சோகமாய் இருந்தது. வாரத்துக்கொரு முறை தூசி தட்டி நான் குளுப்பாட்டி விடுகிற போது, என்னை நன்றிப் பெருக்கோடும் அதே சமயம் பாவமாயும் பார்க்கும்.

”’எதுக்குங்க இந்த வெட்டி வேல பாத்துட்டிருக்கீங்க? இத வித்துத் தல முழுகாம, சீவி முடிச்சி சிங்காரிச்சிட்டிருக்கீங்களே”’ என்று இவள் கரித்துக் கொட்டுவாள்.

அதாவது, யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்வதற்கு எதிர்மறையாய், நம்ம லாம்பி ஸ்கூட்டர் ஆரோக்யமாயிருந்த காலத்திலும் எனக்குத் திட்டு, நோய்வாய்ப்பட்டுப் போன காலத்திலும் எனக்குத் திட்டு.

நன்றாயிருந்த காலத்தில், இளமை முறுக்கில் கொஞ்சம் திமிர்த்தனமாய் நடந்து கொண்டு எனக்கு வசவு வாங்கிக் கொடுத்ததற்கு இப்போது இது விசனப்படுவது புரிந்தது.

சரி! அதற்கு இதனால் இப்போது என்ன செய்ய இயலும், பரிதாபமாய் என்னைப் பார்ப்பதைத் தவிர!
அதன் உணர்ச்சிகள் எனக்குப் புரியத்தலைப்பட்டன.

மாமா வாங்கிக் கொடுத்தது தானே என்கிற மனக்குறை யெல்லாம் மறந்துபோய் ரொம்ப நாளாச்சு.
அதை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறபோது, பரிவாய்த் தட்டிக் கொடுப்பேன். லேசாய் அணைத்துக் கொள்ளுவேன்.

டாடி மம்மியைப் பார்க்கிற ஆசை வந்து, இவள் கொழும்புக்குக் கிளம்பினாள்.

புறப்படுகிறபோது எச்சரித்துவிட்டுப் போனாள்.

”நா திருப்பி வர்றப்ப இந்த சனியன் இங்க இருக்கக் கூடாது. என்ன சரியா? சும்மா தலையாட்டி வக்யாதீங்க. பி ஸீரியஸ்.”

நான் ஸீரியஸ்ஸோ இல்லையோ என்னுடைய லாம்பியின் நிலைமைதான் ரொம்ப ஸீரியஸ்ஸாய் ஆகிவிட்டிருந்தது.

அதைக் கருணைக் கொலை செய்தே ஆகவேண்டிய நிர்பந்தம். அவள் திரும்பி வருவதற்குள் இதைக் காலி பண்ணவில்லை யானால், அறம் பாடியே என்னைச் சின்னாபின்னப் படுத்தி விடுவாள்.

ரெண்டு மெக்கானிக்குகளிடம் விசாரித்துப் பார்த்தேன். பேரீச்சம்பழத்துக்குப் போடலாம் என்று ரெண்டு பேருமே அபிப்ராயப்பட்டார்கள்.

இவள்கூட ஊரில் இல்லாத சமயத்தில் அத்தனை பேரீச்சம் பழங்களோடு நான் தனியாளாய் எப்படி போரடிப்பது என்று திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில், விசாலமான காரியர் வைத்த சைக்கிளொன்றில் வந்தவன், ”’சார்! இந்த ஸ்கூட்டர ஒரு ரேட் போட்டு எடுத்துக்கலாமா சார்”’ என்று வந்தான்.

ஆயிரம் ரூபாய் என்று அவனே விலையையும் நிர்ணயம் செய்தான்.

”ஒண்ணும் யூஸ் ஆகாது சார். எல்லாத்தயும் பார்ட் பார்ட்டாப் பிரிச்சு விக்யணும். நமக்கு ஒரு நூறு ரூவா நிக்யும். ஐயாவுக்குத் திர்நவேலின்னு சொன்னாக. நமக்கும் திர்நவேலிப் பக்கந் தாங்கய்யா. கொங்கராயக்குறிச்சி.”

மீன்பாடி வண்டியொன்று அமர்த்திக் கொண்டு வந்தான்.

வண்டிக்காரனும் அவனுமாய் ஸ்கூட்டரைத் தூக்கி வண்டியி லேற்ற ப்ரயத்தனப்பட்டபோது, நானும் கை கொடுத்தேன்.

கனத்துக்கிடந்தன. ஸ்கூட்டரும், மனசும்.

ஆசையாய் வளர்த்த கால்நடைச் செல்வத்தை அதனுடைய சேவைக் காலம் முடிந்ததும் அடிமாட்டுக்குக் கொடுப்பதைப் போல ஒரு சோகமும் குற்றவுணர்ச்சியும் மனசுக்குள் வியாபித்தன.

என்னுடைய குட் ஓல்ட் லாம்பி ஸ்கூட்டரின் உடம்பை வாஞ்சையோடு வருடிக் கொடுத்து வழியனுப்பி வைத்தேன். கண்கள் பனித்தன. பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றேன்.

ஒரு வருஷம் ஓடிப்போய் விட்டது.

நேற்று, நேரம் போகாமல், போன வருஷத்து டைரியை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்த போது என் லாம்பியை அடிமாட்டுக்குக் கொடுத்த துயரநாள் நாளைய தேதிதான் என்பது தெரிய வந்தது.

லாம்பி என்னிடமிருந்து பிரிந்து போன தருணத்தை நினைவுபடுத்திப் பார்த்துக் கெகொண்டிருக்கையில் இவள் வந்தாள்.

”நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். சொல்லவா?”

”ம்.”

”நாளக்கி நமக்கு வெட்டிங் அனிவர்ஸரி. அதத்தான நெனச்சிட்டிருக்கீங்க? இருவத்தி மூணு வருஷம் ஆச்சிங்க! ஆமா, போன வருஷம் அனிவர்ஸரிக்கி நா கொழும்புல இருந்தேன். நீங்க தனியா என்ன செஞ்சீங்க?”

அன்றைக்குத்தான் நான் தனியாய் ஆனேன் என்று சொன்னால், இவள் புரிந்து கொள்ளவா போகிறாள்?

(நன்றி : ஆனந்தவிகடன், 10.03.2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *