கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 27, 2021
பார்வையிட்டோர்: 4,774 
 

நீண்ட வராண்டாவில் நித்திரையில்லாமல் தவித்துத் தவித்து நடப்பதும் இருப்பதும் சாய்வதுமாக இருந்த நான் கண்ணயர்ந்த வேளை! அண்ணை …. அண்ணை … ஐயா… சார் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு! சொன்ன நர்ஸ் தெய்வமானாள்…. உலகம் ஈர்ப்புவிசை தவறி ஓடிய உணர்வு! பட்டாம்பூச்சிகளின் பந்தியில் நான் முந்தி தேன் பருகினால்! எல்லாம் நல்லபடியா முடிஞ்சால் சரி, எப்ப வீட்டைவிடுவனமோ தெரியாது? எண்ணங்கள் பாய என் கை மொபைலில் எண்களைத் தட்டி அந்த இருட்டிலும் அந்த இனிய செய்தியைப் பந்தங்களோடு பகிர்ந்து கொண்டது.

கோசினி போல குழந்தையும் நல்ல நிறம், நல்ல முடி, மல்யுத்த வீரன் போல கைகளைப் பொத்தி கால்களால் உதையும் போது எல்லோருக்குமே ஆனந்தம். இரண்டு நாளில் துண்டு வெட்டி பறாளாயில் உள்ள எங்கள் வீட்டுக்கு வர ஆலத்தி எடுத்த அம்மாவுக்கு ஆண் பேரன் என்றவுடன் ஆணவம் அவளை ஆகாயத்துக்குத் தூக்க! வலது காலை தூக்கி வைத்து வாம்மா…

அதிகார ஆணையோ அன்பு வரவேற்போ! அணைத்த குழந்தையோடு அமைதியாக வீட்டுக்குள் நுழைந்தாள் கோசினி.

புதுவரவு வசந்தம் வீச எல்லோர் செயற்பாட்டிலும் ஓர் உத்வேகம். துடக்குக்கழிவு, பெயர் சூட்டல், கருமணி அணிவு, தொட்டில் பாட்டு என்று ஒரே அமர்க்களத்திற்குள்ளும் அமைதியாக இருந்தான் சங்கீர்த். ஆம், அதுதான் அவன் பெயர். எங்கள் தாத்தாவின் பெயர் சங்கரப்பிள்ளை . அதனால் சானா வரியில பெயர் வைக்க வேண்டும் – இது அப்பாவின் கட்டளை. வம்சம் பெருக ஒரு வழி பிறந்ததில் எல்லோரும் கூடிக் குதூகலிக்க வரலாறும், அரசியலும், சமயமும், சமூகமும், சரித்திரமும், சமகால நிகழ்வுகளும் சஞ்சரிக்க வீடு ஒரே அல்லோலகல்லோலப்பட்டது.

போண்டா ரீ…போண்டா ரீ…தெமிலி தெமிலி….ரடகஜு…அன்னாசி…பேர..அன்னாசி…பேர…ஓ…ஓ…என்ர பேர் இராஜேஸ்வரன்…ஆ…ஆ…அட என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கோணர் சீற்றில் சுகமாக உறங்கியதில் மாகோவுக்கு ரயில் வந்ததும், அன்னாசி வியாபாரியும் பேர (கொய்யா) வியாபாரியும் சந்திக்க அண்ணாச்சிபேர் எண்டு எனக்கு விளங்கி நித்திரை கலைந்தது…. சிந்திக்கமுன் பெயர் சொன்னதும்…! இனி இஞ்ச இறங்கி மாறவேணும். இன்னும் 1.30 மணித்தியாலத்தால திருகோணமலை இரயில் வரும். அதுவரை கன்ரீன் றோலும் காமியின் வடையும் தான் எனக்கு தஞ்சம்.

அடிக்கடி வீட்டு நினைவு என்னை ஆட்டிப் படைத்தது. இந்த இருபத்தெட்டு வருடத்தில் இப்படி ஒரு நிலை வந்ததில்லை. சிறுபிள்ளையாக இருந்தபோது எங்கள் அப்பாவின் சொந்த பந்தங்கள் எல்லோருமாக கூட்டுக் குடும்பத்தில் செல்லக் குட்டியாக இருந்து பின் ஏழு வயது முதல் பதினைஞ்சு வயசு வரை என் வயதுடைய உறவுகளுடன் கூடி விளையாடி மகிழ்ந்து, பதினாறு முதல் இருபத்து மூன்று வயது வரை நண்பர்களுடன் ஊர் சுற்றி உலகம் படித்ததும், பின் வேலையில் இணைந்த புது அனுபவப் பாடம், ஆர்வம், புது நண்பர்கள் என்று இப்பிடிப் போய் பேச்சுக்கால், கலப்பு, எழுத்து, கலியாணம் என்று நண்பியாக, ஆசானாக எனக்குக் கிடைத்த கோசினியின் இனிய தாம்பத்தியம் இப்போ…சங்கீர்த்…எல்லாத்தையும் விட்டு இனி வேலை…வேலை…வேலை.

என் எண்ண அசைவுக்கு மேலாக பிளாட்பாரம் அதிர்ந்தது… திருமலை ரயில் வண்டியில் ஏறிக்கொண்டேன். பயணக்களையில் கண்கள் செருகினாலும் என் கண்மணிகளை விட்டுவிட்டு வந்தது கண்ணில் நிழலாட மனத்திற்குக் கஷ்டமாக இருந்தது.

“கந்தளாய் பிரதேச சபை”, மும்மொழிகளிலும் நிமிர்ந்து நின்ற கட்டடம்தான் என் ஒபீஸ். இந்த நாலு வருசத்தில் என் சேவையைப் புகழாதோர் இல்லை. மூவின மக்களும் வாழும் இப்பிரதேசத்தில் எனக்கு வேலை செய்வது சிரமம். இருந்தும் இப்போ எல்லாம் பழகிவிட்டது. காதரின் கடைக்கு மேல்தான் என் ரூம். வீடு எடுத்து தங்க என் சம்பளம் இடம் தரவில்லை . காதர் கடை ரூம் அட்வான்சுக்குக் கூட சீதனக்காசுதான் கைகொடுத்தது. இந்த நிலையில் வீடு எப்படி எடுப்பது, கோசினி, சங்கீர்த்தை எப்படிப் பார்ப்பது…..?

அலுவலகத்தில் எல்லோரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். இராஜேஸ் நீங்க ஊர் போய் வந்ததில் இருந்து மூஞ்சி சரியில்லை. என்ன ஆயீத்து செல்லீங்க.* உங்களுக்கு இன்னும் இரண்டு வருஷத்தால ரான்சர் வரும். அல்லா வழிவிடுவார். வொறிபண்ணாம வேலிய பாருங்க….. சக ஊழியர் ராபீக்கின் ஆறுதல் கூட என் காதில் விழவில்லை …. யோசனை…! யோசனை…!

இப்ப நல்லா உடம்பு சரிப்பான், இப்ப தவழுறான், பிடிச்சு நடப்பான், பல்லுக் கொளுக்கட்டை கொட்டினாங்கள். ஏதோ இலவச செய்திகளாக எஸ்எம்எஸ் போல வீட்டுத் தகவல்கள் மட்டும் வரும். ஒன்றிலும் கலந்து கொள்ளவுமில்லை, பார்க்கவும் இல்லை, அனுபவிக்கவும் இல்லை. பிறந்த நாளுக்கு மட்டும் போய் வந்தேன். சங்கீர்த்தின், குறும்பும், விளையாட்டும், வினையும், சுமையும், என் மனத்தளத்தில் ஆணியில் மாட்டிய சித்திரமாய் நிலைத்து விட்டது. அவன் பிஞ்சுப்பாதம் உதைத்த என் நெஞ்சைத் தடவினேன். மழலை மணம் வீசுவது போன்ற உணர்வால் என் கண்கள் பனித்தன.

ஏடு தொடக்கி இப்ப முன்பள்ளிக்கும் போறானாம் சங்கீர்த். எனக்கும் நீர்கொழும்புக்கு மாற்றம் வர அப்பீலுக்கு மேல் அப்பீல் போட்டும் ஒண்டும் சரிவராமல் அன்பே நீ அங்கே நான் இங்கே இன்பங் காண்பது எங்கே? எண்டு ஆறு வருடம் ஓடிப்போச்சு. சுழிபுரம் விக்ரோரியாக் கல்லூரியில் தரம் இரண்டு வகுப்பறையில் சங்கீர்த்தும் ஒரு மாணவனாக. மூன்று மாதத்திற்கு ஒருமுறை தான் 3, 4 நாள் லீவில் வீடு போய் வருவேன். அந்த வேளை அப்பா எனக்கு தேவையான சாமான்கள் வேண்ட கடை கடையாய் திரிய, அம்மா அதைப் பக்குவப்படுத்த, கோசினி அதை பைக் பண்ண, சங்கீர்த் பள்ளிக்கூடம், ரியூசன், நண்பர்கள் என்று திரிய, நான் வீட்டில் மாட்டிக்கொண்டு அடுத்த பயணத்துக்கு ஆய்த்தமாக….. எங்கே…. யாருடன் எப்படி, என்ன… கதைப்பது……? தொழிற்சாலை போல வீடு இருந்தால் உறவு, பாசம், காதல், மோதல், இன்பம், துன்பம், சுகம் என்று எப்படி வரும்? எங்ஙனம் அனுபவிப்பது? என்னப்பா யோசனை? இரவு 8 மணிக்கு பஸ்சுக்கு புக் பண்ணியாச்சு. நாளைக்கு நேரத்துக்கு ஒபீஸ் போடுவியள். லீவு போட்டுடுவான்கள் என்று யோசிக்காதீங்கோ. கோசினிக்குக் கூட என் உணர்வுகள் சுடவில்லையா?

கொலசீப்பும் பாஸ் பண்ணிட்டான், அதோட செஸ்ரீமிலயும் – எடுபட்டிருக்கிறான். அதுக்கு வார 11ஆம் திகதி விழா வைக்கினமாம். அதுக்கு வரச் சொல்லி ரெலிபோன். நான் போகத்தானே வேணும். எனக்கென்று உள்ள உறவு, என் இலட்சியம், கனவு எல்லாம் என் மகன்தானே. விழாவுக்குப் போய் கலந்து கொண்டேன். என்ன! பூரிப்பு எல்லோர் முன்னிலையிலும் சங்கீர்த் பாராட்டுப் பெற என்னால் கைதட்டி சந்தோசத்தை வெளிக்காட்ட முடியவில்லை. நான் கோசினியின் கைகளைப் பற்றிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தேன். என் வேலையை உதறிவிட்டு வீட்டாருடன் கூடி வாழத்தான் மனது தூண்டியது. என்ன செய்ய? எல்லாரின் பொருளாதாரச் சுரங்கம் நான்தானே.

பயணங்கள் நீண்டு பிரிவுகள் தொடர்ந்ததால் சங்கீர்த்திற்கு சகோதரபலன் இல்லாமலே போனது. இரண்டு வாரத்தில் மீண்டும் ஊர் திரும்பினேன். ஆம்! அப்பா போயிட்டார். உயிர் கொடுத்து, உலகைக் கற்றுத்தந்த அவரின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை . ஊர்கூடி ஊர்வலமாக சுடுகாடு போய் எல்லாம் முடிய என் லீவும் முடிந்தது. வேலையில் மீண்டும் இணைந்தேன். ஓர் உயிர், உறவின் உணர்வு என்ன? எதிர்பார்ப்பு என்ன? நிலையில்லாத இந்த உலகில் எது நிலையானது? அன்புதானே. உறவுக்கு அத்திவாரம் அன்பு அருகிலிருந்தால்தானே பகரலாம். அண்டாட்டிக்காவிலும், ஆபிரிக்காவிலும் இருந்தாலும் அன்பு வைத்திருக்கலாம். ஆனால் அதன் வெளிப்பாட்டை, ஸ்பரிசத்தை, கனிவை அனுபவிக்க ஒருவருக்கொருவர் ஆறுதல் கூற அழைக்க கூடிவாழ வேண்டும். வெறும் வார்த்தையிலும், சடங்கிலும், அன்பு வாழ்ந்திடுமா? உறவுதான் நிலைத்திடுமா? அப்பாவின் தோற்றம், செயல், பேச்சு எல்லாம் என் ஆழ்மனதில் அமைதியாக உறங்க கடமையில் கண்ணானேன்.

சேவைக்காலத்தின் பிரகாரம் தரம் 2 நிலையில் பணிபுரிந்த நான் தரம் 1க்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற வானொலியில் இன்று நள்ளிரவுடன் பாண் 1 ரூபா 50 சதத்தாலும் பெற்றோல் மூன்று ரூபாவாலும் மற்றும் இறக்குமதி வரிகள் பதினைந்து வீதத்தாலும் உயர்வதாகச் செய்தி. பாடசாலைகளிலும் கல்வி மட்டும்தான் இலவசம். சப்பாத்து 1100 ரூபா, ரை 150 ரூபா, மொனிட்டர் பச் 100 ரூபா மற்றும் கொடி வாரம், நிறுவுனர் தினம், பரிசளிப்பு விழா, நவராத்திரி விழா, கலைவிழா, சுற்றுலா என்று ஏகப்பட்ட வருடாவருட நடைமுறைகளுக்கு ஓர் குடும்பஸ்தன்தானே கொடுக்க வேண்டும் பணம். ஓர் பிள்ளையுடன் எனக்கு இந்தப் பாடென்றால்…….!

அப்பன் ஏலாமக் கிடக்குது…. நீயும் எத்தின நாளைக்கு நிப்ப…. என்னப்பா பிறவேற்றா சனல் பண்ணிக் காட்டுவமே சரியா கஸ்ரப்பர்ரா. அம்மாவை விசேட வைத்திய நிபுணரிடம் காட்டி மருந்து மாத்திரைகளுடன் வீடு வந்து இரண்டு நாள் கூட இல்ல அம்மா எம்மை ஏமாற்றிவிட்டு ஆண்டவன் அடி சேர்ந்துவிட்டா. வாழ்வில் என்றும் இல்லாதவாறு அழுதேன்……. எத்தனை பேர் எப்படி ஆறுதல் கூறினாலும் என் அம்மாவின் இழப்பை ஈடுசெய்ய முடியுமா? அம்மா வாழ்ந்த தியாகவாழ்வு, குடும்பத்தை வழிநடத்திய பாங்கு, அயலவர்களுடன் வைத்த நேசம், கோசினியும் கதிகலங்கி விட்டாள். என் மன வேதனைக்கும் அடுத்து என்ன செய்யப் போகின்றேன் என்ற என் கேள்விக்கும், தம்பி……! இப்பிடி இருந்தால் ஒண்டும் நடக்காது, வா காடாத்த வேணும், நேரமாகுது இனி ஐயாவும் வந்திடுவார். பிள்ளை! வீட்டைக் கழுவுங்கோ, திருவடி நிலைக்குப் போகவானுக்கும் சொல்லியாச்சு. இரண்டு நாளக்க காட் அடிச்சாத்தான் சொந்த பந்தங்களுக்கெல்லாம் சொல்லி முடிக்கலாம். முப்பத்தொண்டுக்கும் இப்பவே ஆயத்தம் செய்ய வெளிக்கிட்டாத் தான் சரி. நீயும் தனியாளில்லே. மன வேதனையில் உலகமே வெறுத்திருந்த எனக்கு இந்தக் கிரியை, சடங்கு, சம்பிரதாயங்கள் தான் என் துன்பத்தின் வடிகாலாக, பிராச்சித்தமாக நேசமாக அம்மா மீது வைத்த அன்பை ஆத்மார்த்தமாக வெளிக்காட்டும் சாதனங்களாக இருந்தன. சமயமும், சடங்கும் இல்லையென்றால் என் போன்றவர்கள் பைத்தியம் என்ற கட்டம் போகாத மனநோயாளி களாகவே இருப்பர், வாழ்வர். கலை, கலாச்சாரம், மரபு, வழிபாடு என்பன மனிதன் எக்கால கட்டத்திலும் கைக்கொள்ள வேண்டியனவே. அம்மாவின் வீட்டுக் கிருத்தியத்தை என்னால் இயன்ற தான தர்மங்களோடு செய்தேன். கோயில் தேர் திருவிழா போல ஒரே கூட்டம். எல்லாம் முடிய இப்போ கோயில்களில் இடம்பெறும் புராணப்படிப்புப் போல படிக்கட்டில் நான், ஹோலில் கோசினி, கேற்றடியில் சங்கீர்த் என்று மூன்று பேர் மட்டுமே.

சங்கீர்த் ஏஎல் பாஸ் பண்ணி இப்ப கம்பசும் போறான். கோசினிக்கு வீட்டு வேலைகளே உறவாகி விட்டது நிலை, கதவு, கண்ணாடி, அடுப்பு, ஆடு எல்லாம் அவள் வேலையின் ஆற்றாமையில் பேச்சு வாங்கின. வேலைப் பளுவுக்கும் வேதனைக்கும் ஐடப் பொருட்களே வடிகாலாக அமைந்து விட்டன. அவளின் நோக்கம் சிந்தனை, செயல் எல்லாமே சங்கீர்த் ஆனவுடன் நான் அவள் மனதில் காணமல் போய்விட்டேன். எனக்கு நான் செய்யும் வேலையே தஞ்சமாக. ஓர் உதாரணபுருஷனாக, சேவையாளனாக சமூகத்தில் எனக்குப் பாராட்டும், கௌரவமும் கூடி வந்தது. இவையெல்லாம் நிரந்தரமா? கூட்டம் கூடுவர், கொண்டாடுவர், கும்மாளமிடுவர், நாளை ஓர் கும்புடுவுடன் விலகிச் செல்வர்.

எனக்கும் பென்சன். அப்பா….! இனியெண்டாலும் வீட்டில ஆறுதலாய் இருங்கோ. எங்களுக்காய் உழையுங்கோ – இது கோசினியின் அட்வைஸ். அப்ப இவ்வளவு நாளும் நான் உழைத்தது? பிரதேச சபையில் மக்கள் சேவைக்கு எனக்கு சம்பளம்தானே. அந்தச் சம்பளம் எனக்கு மட்டுமா? என் குடும்பத்துக்குத்தானே, இவளுக்கு மட்டும் ஏன் புரியவில்லை . உறவும் பரஸ்பர சம்பாசணையும் தடைப்பட்டு இடைவெளி நீண்டு விட்டதால் வந்த விபரீதமா இது?

‘கம்பஸ் பாஸ்அவுட் பண்ணவும் சங்கீர்த்துக்கு கனடாவில சம்பந்தம் கைகூடி வந்தது. நாங்கள் ஸ்ரீலங்கா வரேலாது… மாப்பிள்ளை படித்திருந்தால் சரி, வேலையொண்டும் செய்யாட்டிக்கும் பரவாயில்லை. பிள்ளை இஞ்ச பார்மசியில வேலை செய்யிறாள், அவள் பொன்ஸரில எடுப்பாள், நீங்கள் மாப்பிள்ளைய அனுப்பினாச் சரி. பிறந்த நாளன்று என் மார்பில் உதைத்தவன் இன்று அவர்களுக்கு மாப்பிள்ளை உறவாக. எனக்கு அவன் மகன் உறவா? இல்லை வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் உள்ள உறவா? அவன் வளர்ச்சிக்கு என் பணம் தேவையாக இருந்தது. இனி வெளிநாடு போய் வட்டியோட அனுப்பலாம். ஆனால் பாசம், உணர்வு, ஆசை, ஏக்கம் இவைகளால் நான் பட்ட அவஸ்தைக்கு, துன்பத்திற்கு, பரிதவிப்புக்கு அந்தப் பணம் மருந்தாகுமா?

ஆனால் நான் கையசைத்துக் கொண்டே இருந்தேன். எல்லோரும் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். எனக்கு வெட்கமாகவும் இருந்தது. ஆனால் எல்லாத்தையும் மீறி ஏனோ என் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கோசினியின் மடியில் படுத்து அழ வேண்டும் போல இருந்தது. அது இப்ப முடியுமா? கலியாணம் செய்த புதிதில் என்ன அந்நியோன்னியம். இப்ப நாங்கள் பக்குவப்பட்டவர்கள், வயதானவர்கள். என்ன இப்பிடி மனிசியின்ட மடியில படுக்குது இந்தாள் என்று சனங்கள் பார்வையாலேயே கொல்லுங்கள். எல்லாத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

கோசினி அடிக்கடி இருமிக் கொண்டே இருந்தாள், கொண்டேக்காட்ட காசநோய் எண்டிச்சினம். ஏதோ அவளால இயன்றத சமைச்சுத் தருவாள். நானும் ஒத்தாசை செய்வன். எங்கள் தேவைகள் குறைந்து கொண்டே போனது. மாதம் ஒருமுறை பக்கத்து வீட்டுக்கு சங்கீர்த்தின் போன் வரும். அந்த நாள் எங்களுக்குத் திருவிழாதான். அந்த ஒரு நாளுக்காகவே மீதி நாள் வாழ்க்கை ஆனது.

பனி கடுமையாகக் கொட்டியது. உடல் நடுங்கி அனுங்கிக் கொண்டு இருந்தவள் அமைதியாக அடங்கிப் போனாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் அவளை எழுப்பிக் கொண்டே இருந்தேன். அவள் அசையவில்லை. விடிய தேத்தண்ணியும் கொண்டு போய் எழுப்பினேன். அவள் எழும்பவேயில்லை. எனக்குள்ளேயே பேசிக்கொள்கிறேன். தலையை அடிக்கடி சரித்துக் கொள்கிறேன். அடிக்கடி தண்ணீர் குடிக்கிறேன். கால் விரல்களை எண்ணிக் கணக்கிடுகிறேன். ஒன்றுமே புரியவில்லை. மூன்று நாளின் பின்தான் பக்கத்து வீட்டுத் தம்பி வந்து ஐயா உங்களுக்கு கனடா கோல், கோசம்மா எங்க? எட்டிப் பார்த்தவன் கத்திவிட்டான். ஊதிப்பெருத்து ஒரே நாற்றம் தலைமாட்டில் காலை மாலை என்று நான் வைத்த ஆறு தேத்தண்ணிக் கோப்பை நிறைய ஒரே நுள்ளான். ஊர் கூடியது. பொலிஸ் கூட வந்தது. என்னை ஏதோ எல்லாம் கேட்டார்கள். சங்கீர்த்துக்கு ரிக்கெட் இல்லை. வரேல்ல என்று என் காதருகில் வந்து கத்திச் சொன்னார்கள்.

நான் எனக்குள்ளேயே பேசிக் கொண்டேன். நான் இனிக் கதைக்க உறவு இருக்கா? தலையை அடிக்கடி சரித்துக் கொண்டேன். இனி எனக்கு என்ன வேலை? தண்ணீர் அடிக்கடி குடித்துக் கொண்டேன். இனி இங்கு என்ன பற்று? கால்விரலை எண்ணினேன். நான் இருக்கும் உலகு விளங்கேல்ல! என்ற கையில கொள்ளிக்கட்டையைச் சேர்த்துப் பிடிச்சு யாரோ ஒரு ஊர்ப் பெரியவர் கோசினிக்குக் கொள்ளி வைத்தார். உறவு ஒன்று உலகில் இருக்கேக்க சடங்கு தேவையா இருந்திச்சு. இனி எதுக்குச் சடங்கு? சிதையில் பாயப்போன என்னைப் பல கரங்கள் தடுத்திச்சு. இது எல்லாம் உறவா? இல்லை சமூகக் கடமை மட்டுமே. ஆயிரம் ஔடதங்கள் அவனியில் இருந்தாலும் என் உறவின் பிரிவுக்கு அவை மருந்தாகுமா?

நீண்ட வராண்டாவில் நித்திரையில்லாமல் தவித்துத் தவித்து நடப்பதும் இருப்பதும் சாய்வதுமாக இருந்த நான் கண்ணயர்ந்த வேளை! அண்ணை …. அண்ணை .. ஐயா…. ஐயா…! டொக்டர்…..! இதுதான் புதுசா வந்த மெண்டல் பேசண்ட். சொன்ன நர்ஸ் தெய்வமானாள். உலகம் ஈர்ப்பு விசை தவறி ஓடிய உணர்வு. பட்டாம்பூச்சிகள் போல் நானும் கையை அசைத்துப் பறக்க முயற்சிக்கிறேன்.

**ஆயத்து செல்லீங்க – முஸ்லீம் மக்கள் பேசும் வார்த்தை

– என் மாதாந்திர ஓய்வூதியம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2012, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *