உறவுகளின் நிலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 10,620 
 

வருஷம் 1980:

”பீரியட்ஸ் தள்ளிப்போயிருக்கிறது”

“வேண்டாம் ராஜி! இப்போது வேண்டாம். கலைத்து விடுவோம்”

”இல்லைங்க. எனக்கு வேண்டும் என்றே தோண்றுகிறது”

”முட்டாள்தனமா பேசாத ராஜி! நாம தானே யோசித்து முடிவு செய்தோம் ? நம் சம்பளத்திற்க்கு ஒரு குழந்தையைத்தான் சமாளிக்க முடியும் என்று…… என்ன, கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கணும்!”

”இல்ல…”.

”இன்னும் ஒன்று யோசி ராஜி! போன குழந்தையைப் பார்த்துக்கொள்ள உங்க அம்மா கூட இருந்தார். ஆனா, இப்போது? தனியாக உன்னால் வேலை, வீடு, பெரியவன், நான், அப்பா..இப்படி எல்லோரையும் சமாளிக்க முடியுமா, சொல்லு?”

“ இல்லீங்க, ஒரு வேளை இது பொண்ணாக இருந்தால்..? என் அம்மாவே மறுபடி வந்து பொறந்தால் ? அம்மா போய் இன்னும் ஒரு வருஷம் கூட முடியலையே?”

வருஷம் 1990

”ராஜி! நானும் ப்ளான்செட் பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.நம்ம சுகுணா இல்ல, அவ போய் கேட்டாளாம். எல்லாம் ரொம்ப கரெக்டா வந்துதாம். அவளூக்கு நடந்ததெல்லாம் எதோ கூட நின்னு பாத்தா மாதிரி அப்படியே சொல்றாளாம். எனக்கு ஒண்ணு தோணுது, இந்த மாதிரி சொல்றவங்க நடந்த்ததை அப்படியே சொல்லிடறாங்க. ஆனா நடக்கப்போறது என்னன்னு வரும்போது சொதப்பல். பார்க்கலாம். சுகுணா மாமியார் சீக்கிரம் போய்ச்சேர்ந்துடுவாங்கன்னு வந்துதாம். அவ பயங்கர சந்தோஷத்துல இருக்கா!”

“நாமும் போய் பார்க்கலாமா மாலா ? நாளைக்கு ஆஃபீஸ் மட்டம், ஓகேவா?”

“ராஜி! உனக்கென்ன, ரெண்டே பிள்ளைகள். என்னை மாதிரியா மூணு பொண்கள். ப்ளான்செட் போய்ப் பார்ப்பானேன். உன் வாழ்க்கை அமோகந்தான்.”

“இல்ல, ப்ளான்செட்டுல செத்துப்போனவாங்களுடன் பேச முடியும்னு சொல்றாங்க ?”

“ஆமாம் , சொல்றாங்கதான். ஆனா தெரியவில்லை முடியுமா என்று..”

வருஷம் 1991:

”குருஜி! நானும் ஒரு வருஷமா வர்ரேன்.இதுவரை அம்மாவோட பேசவே முடியல்லியே?”

“ என்ன பண்றதும்மா? நாம ப்ளான்ச்செட் வழியா கூப்பிடும்போது அந்த ஸ்பிரிட் வரணுமே. உன் ராசி, யார் யாரோ வராங்க, உங்கம்மா மட்டும் வரவே இல்லியே”

ப்ளான்ச்செட் சுற்றி சுற்றி ஓடியது. பின்னர் நிலையானது.

”யாரு? ராஜியோட அம்மா ஜானகியா?

”இல்லை”

”சரி, அவங்களோட பேசமுடியுமா?”

காயின் இப்போது தறி கெட்டு ஓடியது. கொஞ்ச நேரத்துக்குப்பின்..”முடியாது”!

வருஷம் 1995:

“ ராஜி! நாந்தான் கோபால் பேசறேன்”

“அண்ணா ! என்ன செட்டில் ஆகிடீங்களா? புது ஊர் எப்படி இருக்கிறது ? குளிர் ஒத்துக்கொள்கிறதா?”

”இங்க எல்லாம் நன்றாக இருக்கும்மா. நான் ஃபோன் பண்ணியது ஒரு முக்கியமான விஷயத்திற்க்காக. நம்ம அம்மா ச்ரார்த்தம் அடுத்த வாரம் வருகிறது. இங்க சாஸ்த்ரிகள் கிடையவே கிடையாது. ஹிரண்யமா கூட பண்ணமுடியாது போல இருக்கு. நீ ஒண்ணு பண்ணு, மத்ய கைலாஷ் கோவில்ல போய் பணம் கட்டிவிடு. அவர்கள் திதி கொடுக்க ஏற்பாடு பண்ணுவார்கள். “.

“அண்ணா! நான் வேணடுமென்றால் இங்கே பண்ணட்டுமா?

‘அசடு! பெண் அம்மாக்கு திதி கொடுக்க முடியாது. அப்பா ச்ரார்த்தம் கூட வர்ரதே. அதற்க்கும் சேர்த்து பணம் கட்டிவிடு. நான் உனக்கு அனுப்பிவிடுகிறேன்”

வருஷம் 1996

” ராஜி! நான் பார்த்துக்கொண்டே தான் வருகிறேன். போன வருஷமும் சரி, இந்த வருஷமும் சரி, அம்மா திதி அன்று மொட்டை மாடியில் போய் என்ன பண்ணுகிறாய். போன வருஷம் சனிக்கிழமை. இந்த வருஷம் உனக்கு ஆஃபீஸ் இருக்கு. ஏகப்பட்ட வேலை, நீ மாடியிலேயே இருந்தா எப்படி?”

“இல்லை, நாம் திதிக்கு பிண்டம் வைக்கும்போது, அதை காக்கா ரூபத்துல மூதாதையர்கள் வந்து சாப்பிடுவார்கள் என்று சொல்வார்களே, அதுதான் அம்மா திதிக்கு சாப்பாடு வைக்கப்போகிறேன். அம்மா காக்கா ரூபத்தில் வர சான்ஸ் இருக்கு இல்லை?”

வருஷம் 2001:

”அம்மா! ஸ்கூல் மாகசினுக்கு பேரண்ட்ஸ் எழுதலாமாம். நீயோ அப்பாவோ எழுதித்தரலாம் ?”

“போடா! வீடு, ஆஃபீஸ், உங்க ரெண்டு பேர் ஸ்கூல்னு அம்மாவிற்க்கு ஓட்டம் தான்., எனக்கும் பேனாவைக்கையில் எடுத்தால் ஆஃபீஸ் நினைவில் தூக்கமாய் வருகிறது!”

”இல்ல, நான் எழுதித்தரேண்டா”

”போடு போ! நம்ம வீட்டில் ஒரு எழுத்தாளியா? பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு”

“ என்னடா ஆச்சு, நான் எழுதின ஆர்டிகிள்?

“ போம்மா எல்லாரும் கேலி பண்றாங்க.. உங்கம்மா என்ன இன்னும் தன்னோட அம்மா புராணம் படிக்கறாங்கன்னு. இந்த செண்டிமெண்ட் எல்லாம் இப்பொ ரொம்ப பழசு.. எல்லோரும் வேற எதாவது புதுசா திங்க் பண்ணி எழுதச்சொல்லு. லேடஸ்ட்டா ஈ-புக், ஸ்கூல் ப்ராப்ளம் மாதிரி எழுதணுமாம். உன்னோட ஆர்டிகிள் ரிஜக்ட்டட்”

வருஷம் 2010:

” அம்மா! எனக்கு பயமா இருக்கு, ஏதோ ஹை டெஃபனஷன் ஸ்கேனாம், அதைப் பண்ணணும்னு சொல்கிறார் டாக்டர்”

“ பயப்படாதே தீபா! குழந்தை கொஞ்சம் பெரிசாத்தான் இருக்கும். ஏற்கனவே ட்வின்ஸ்னு சொல்லி ஸ்கேன் செய்தார்கள். பயப்படாதே.ஒண்றும் ஆகாது”

“நீங்க கொஞ்சம் கூட வரமுடியுமா. எனக்கு தெம்பாக இருக்கும்?”

“தீபா! குழந்தையைப்பாரு !எப்படி கையை ஆட்டுகிறது? ரொம்ப சுட்டியா இருக்கும் போல.இது ஹார்ட் பீட்…. கேட்கிறதா?”

”டாக்டர்! அவ ரொம்ப பயத்தில் இருக்கிறாள்”

”நீங்க யாரு, அம்மாவா , மாமியரா?”

”மாமியார்”

”கவலையே படவேண்டாம். குழந்தை நார்மலா இருக்கு. சீக்கிரம் பாட்டியோட விளையாட வந்துடுவாள்”

”பொண்ணா?”

”ஏன். பொண்ணு வேண்டாமா ? இவ்ளோ ஷாக் காண்பிக்கிறீகள் ?”

“இல்லை டாகடர்! என் அம்மாவே எனக்கு பேத்தியா வருவார் எனும் சந்தோஷம்தான்!”

வருஷம் 2011

”அம்மா! வீடு முழுக்க புகையா இருக்கு, நமக்கே மூச்சு முட்டுகிறது. குழந்தைக்கு எப்படி இருக்கும்? நிறுத்தச்சொல்லும்மா”

:ஆனந்த்! வைதீக காரியம். எதுவும் சொல்லாதீங்க. நெல்லுல பேரு எழுதணுமே, யோசிச்சீங்களா?”

“ஆனந்த்! எனக்கு ஒரு பேர் தோன்றுகிறது, சொல்லட்டுமா?”

”சொல்லும்மா”

”ஜானகி”

”அய்ய! என்ன அம்மா இவ்ளோ பழைய பேரா?”

”தீபா! அது என் பாட்டியோட பேரு. சரிம்மா, ஜானகி வேண்டாம், ஜானவின்னு எழுதட்டுமா? ஜானகின்னு பாட்டி பேர் சொல்லிகூப்பிடுவதும் கஷ்டம்”

வருஷம் 2015:

” என்ன ராஜி! இந்த வருஷம் ரிடயர்மெண்ட்! என்ன பண்ணறதா இருக்கே? ஆனா உனக்கு என்ன, பேத்தியைப்பார்த்துக்கொள்ளவே நேரம் இருக்காது”

“இல்ல அவ என் கிட்டயே வரது இல்ல.அந்த பாட்டி வீட்டோடதான் இருக்கார் .அதனால ஸ்கூல் முடிந்து அங்கே சென்று விடுவாள். வாரக்கடைசியில ஹோம் ஒர்க், படிப்பு, பாட்டு டான்ஸ்ன்னு….. என் கூட இருக்க எங்கே நேரம் இருக்கு? ”

“ராஜி! உன் பேத்தி அப்படியே அவள் அம்மா மாதிரி தான்.. பேச்சு, நடை, அப்பா! தீபாவுடைய சின்ன ஜெராக்ஸ்தான்”

வருஷம் 2016:

” ராஜி! உனக்கு முடிவு நெருங்குகிறது. எல்லாருக்கும் கேட்பது போல உனக்கும் கேட்கறேன். அடுத்த பிறப்பு வேண்டுமா, வேண்டாமா?”

“கடவுளே! எனக்கு அடுத்த பிறப்பு வேண்டும். இந்த வீட்டில் என் பேத்தியப்பார்த்துக் கொண்டே இருக்கும்படியான ஓர் பிறப்பு வேண்டும்”

“ ஏனம்மா! என்னுடன் மேல்லோகம் வந்தால் உன் அம்மாவைப் பார்க்கலாம் !”

“இல்லை ஸ்வாமி! எனக்கு என் பேத்தியின் கல்யாணம் பார்க்கவேண்டும், அவள் குழந்தையைப் பார்க்கவேண்டும்,, எனக்கு மறு பிறப்பு வேண்டும் இறைவா….. !!!”

அம்மா நினைவுகள் பேத்தியின் நினைவுகளில் லேசாக அழிந்துதான் போயிருந்தன….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *