உயிர்ப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 4,473 
 

ஏதாவது பண்ணனும். யோசிக்கணும். யார் வீட்டுக்கும் கொண்டு விடவும் பிடிக்கலை. இங்க நாம குடுக்கற வசதி எங்கயும் கிடைக்காது ஆன்ந்த். பாக்கலாம். நீரஜா அவனுக்கு போனில் தைரியம் சொன்னாள். அப்பாவைப்பற்றி கவலை ஆன்ந்துக்கு. அவர் நாளாக நாளாக டல் ஆகிறார். வீடியோ காலில் தெரிகிறது அவனுக்கு.

மனிதர்கள். மனிதர்கள் தான் அவர் மருந்து. இது நீரஜாவுக்குத் தெரியும். எப்படி? என்று தான் யோசித்துக்கொண்டு நடந்தாள் ஆபீஸுக்கு.

தினமும் அந்தத் தெருவைக்கடந்து தான் பாங்குக்கு போகவேண்டும். தெருவிலேயே பெரிய வீடு. அந்த கால வீடு. யாருமே இருக்க மாட்டார்கள் பெரும்பாலும். எப்போதாவது ஒரு கார் நிற்கும்.

இன்று நிறைய கார் நின்று கொண்டிருந்த்து.

இங்க என்ன ஷூட்டிங்கா? வாசலில் ஒருவரிடம் ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.

இல்ல இன்னிக்கு இங்க Day Stay துவங்கியிருக்காங்க.

அப்டின்னா?

குழந்தைகளுக்கு க்ரீச் இருக்கில்ல அது மாதிரி பெரிவங்களுக்கு.

ஓ. எத்தனை பேர் சேத்துபாங்க?

இந்தாங்க நோட்டீஸ். அந்த நீலச்சட்டை போட்ருக்காரு இல்ல, அவரு தான் ஓனர். கேட்டுக்குங்க. நாங்க எங்க மாமனார சேக்க வந்தோம்.

ஓ நன்றி.

சார், இது என்ன டே ஸ்டே? என்ன பண்ணுவாங்க?

உங்க வீட்ல பெரியவங்க இருந்தா இங்க விட்டுட்டு ஆபீஸ் போங்க. அவங்க நல்லா ஜாலியா அவங்க வயசுக்காரங்களோட பேசி சிரிச்சு, சந்தோஷமா இருப்பாங்க. சாயங்காலம் நீங்க வரும்போது கூட்டிட்டு போயிடலாம். சாப்பாடு நாங்க தருவோம். ஏதாவது குறிப்பிட்ட உணவு தான் குடுக்கணும்னா நீங்க குடுத்து விடணும். மாசம் ஃபீஸ் கட்டணும்.

சரி. நன்றி.

சாயங்காலம் வீட்டுக்குள் நுழையும் போதே மாமனார் ரொம்ப டயர்டா இருப்பது தெரிந்த்து. மாமா கஞ்சி தரேன். கொஞ்சம் இருங்க, கை கால் கழுவிட்டு வந்துடறென். ஏன் இவ்வளவு டயர்டா இருக்கீங்க?

என்னம்மா பண்றது. விட்டத்தையே எவ்வளவு நேரம் தான் பாக்கறது. தனிமை ரொம்ப கொல்றது மா என்றார் நொந்து போய்.

மாமா, இன்னிக்கு, ஆபீஸ் போற வழியில….. கண்டதையும், அங்க தெரிந்து கொண்ட விவரங்களையும் சொன்னாள்.

நீங்க அங்க சந்தோஷமா இருக்கலாம் மாமா. நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. என்ன மாமா சொல்றீங்க? உங்க பிள்ளை கிட்ட போன்ல பேசினேன். அப்பா விரும்பினா செய்ன்னு சொல்லிட்டார்.

சரிம்மா. ஆனா உனக்கு லீவு நாள்ல வேணாம். குழந்தை போல் பேசினார்.

இல்ல மாமா அப்போதான் நான் இருப்பேனே!!

மறுநாள், மாமா, இங்க பாருங்க, இந்த பாக்ஸ்ல ஸ்னாக்ஸ் வெச்சிருக்கேன். அப்ப்ப்போ இங்க இருக்கும் போது ஏதாவது டப்பாவையெல்லாம் உருட்டுவீங்க. அங்க அதெல்லாம் இருக்காது. அதுக்கு தான் வெச்சிருக்கேன். சாப்டணும். அப்றம், இன்னொரு செட் ட்ரஸ் வெச்சிரிக்கேன். வேணும்னா யூஸ் பண்ணிக்குங்க. தேவைப்படாது. இருந்தாலும் சங்கடமாயிடும் இல்லன்னா. அப்றம், உங்க அலெக்ஸா கூட வெச்சிருக்கேன். பாட்டு கேக்க. எத்தன பேர் இருக்காங்கன்னு தெரியல. இப்போதான் ஆரம்பிச்சிருக்காங்க. சரி வாங்க கார்ல உக்காந்திருங்க. நான் விட்டுட்டு போறேன். புதிதாக பள்ளிக்குப் போகும் குழந்தை போல பாவமாக கிளம்பினார் மாமா.

மனம் லேசானது நீரஜாவுக்கு. தனிமை யாருக்கும் கடினமானது தான். மாமா இனிமே ஆக்டிவ் மாமா ஆயிடுவார். விட்டத்தையே பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். அவர் உலகம் விரியும். அதில் புது நட்புகள் பூக்கும். புது உறவுகள் மலரும். வாழ்கை நட்பும், உறவும், பகிர்தலும், அணைத்தலுமாய் நகர வேண்டும். அப்போது தான் உயிர்ப்பிருக்கும்.

ஆனந்துக்கு ஒரு விடியோ எடுத்து அனுப்பினாள் மாமாவின் புது க்ரீச்சை.

க்ராமத்துல அத்தன பேரோட இருந்துட்டாரு. இங்க அவர கூட்டிட்டு வந்து தப்பு பண்ணிட்டோமோன்னு ரொம்ப கவலைப்பட்டான் ஆன்ந்த். நீரஜாவுக்குத் துணை என்று நினைத்து அழைத்து வந்தான். தனிமை அவரை ரொம்ப சுருக்கி விட்டிருந்தது. இப்போது நிம்மதி. மீண்டும் உயிர்ப்புடன் அப்பா…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *