உயிருக்கு உயிர்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 6,778 
 

எட்டுமாடி ஆஸ்பத்திரிக் கட்டிடத்தின் ஆறாம் மாடியில் உள்ன தீவிர சிகிச்சை பிரிவில்; முப்பத்திநாலாம் நம்பர் கட்டிலில், படுத்திருந்த ஒரு வயோதிப நோயாளி மூச்சுவிடச் சிரமப் பட்டுக்கொண்டிருந்தார். மூக்கில் ஒக்சிஜன் டியூப் இணைக்கப்பட்டிருந்தது. கட்டிலுக்கு பக்கத்தில் உள்ள மின் திரையில் இருதயத்தின் துடிப்பு வண்ணக் கோலங்களாகத் தோற்றமளித்தன. மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட சித்த வைத்தியர் சிற்றம்பலம் அம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்ட போது அவர் உயிர் பிழைப்பாரோ என்று எல்லோருக்கும் யோசனை. தீவிர சிகிச்சைப் பிரிவிக்கு வெளியே உள்ள பார்வையாளர்கள் அறையில், கவலை தோய்ந்த முகத்துடன், சிற்றம்பலத்தின் மனைவி செல்லம்மாவும் மூன்று பிள்ளைகளும் இருதய வைத்தியர் நிபுணர், டாக்டர் ஸ்மித் என்ன சொல்லப் போகிறாரோ என ஏங்கி நின்றனர். பலரின் உயிர்களை, தன் கைராசி மூலமும் சித்த வைத்தியத்கி திறமையாலும்; காப்பாற்றிய கணவரை கடவுள் காப்பாற்றுவாரா? இது தான் செல்லம்மா மனதில் தோன்றிய கேள்வி.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏரிகளும், பூக்காடும் , நெல்வயல்களும்; நிறைந்த குக்கிராமம் பூனகரி, பூ ூ நகர் ூ ஏரி என்பதில் இருந்து பூனகரி என்ற பெயர் மருவியதாக கதையுண்டு. மல்லிகை, ரோஜா, செவ்வந்தி பொன்ற பல பூத்தோட்டங்கள் அல்லி ராணியின் அரண்மனைகளுக்கும் , கோயில்களுக்கும் தேவையான மலர்களை வழங்கிவந்தன. இன்று போரின் பாதிப்பினால் பல ஈழமக்களின்; சிதைந்த வாழ்வைப் போல் உருக்குளைந்து அப் பூத்தோட்டங்கள் இருந்த இடம் தெரியாhமல் தோற்றமளிக்கின்றன.. சுற்றாடல் சிதைக்கப்பட்டாலும் கிராமத்தின் மண்வாசனையும் என்றும் நினைவைவிட்டு அகலாத கிராமவாசிகளின் அனுபவங்களும் இன்றும் மனதைவிட்டு பிரியாது.

அறுபபது வருடங்களுக்கு முன் அந்த கிராமத்தின் முன்னேற்றத்துக்காக அரும்பாடு பட்டவர் ஆயுர்வேத சித்த வைத்தியர் சிற்றம்பலம். அவரின் தகப்பனார் பேரம்பலமும் ஆயுர்வேத வைத்தியத் தொழில் புரிந்தவர். சித்த வைத்தியததை முறைப்படி கற்றவர். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதற்கிணங்க, சிற்றம்பலம் தகப்பனைப்போல் தொட்டதெல்லாம் பொன்னாகும் கைராசி உடையவர். அவரைச் செல்லமாக வைத்தியர் சித்தர் என ஊர்வாசிகள் அழைத்தனர். காலையில், சூரியஉதயத்துக்கு முன்பே எழும்பி, தன் நிலபுலன்களை சுற்றிவந்து, பின் கிணற்று குளிர்தண்ணீரில் குளித்து அதன்பின் முருகனுக்கு பூஜைசெய்து, நெற்றி நிறம்பிய திருநீற்றுடனும் சந்தனப் பொட்டுடனும் அரை மணி நேரம் தியானம் செய்தபின்னரே காலை நீராகாரம் அருந்துவார். அந்த கிராமவாசிகளின் உடல் நலம் சம்பந்தப்பட்ட சரித்திரம் அவர் மூளையில் பதிவாகியிருந்தது. அதனால் மருத்துவத்துக்கு அவரை நாடி வரும் கிராமத்து மக்களிடம் பல கேள்விகள் கேட்காமலே கைநாடித்துடிப்பு, கண்கள் , விரல்கள் , நாக்கு ஆகியவற்நின் நிறம் பார்த்து மருத்துவம் செய்யும் திறமை உடையவர் சித்தர். தன் பாவிப்புக்கு தேவையான மூலிகைச் செடிகளை வீட்டுதோட்டத்தில் வளர்த்தார்.

பூனகரி கிராம விதானையார் சிவலிங்கம் (சிவா) , சித்தரின் உற்றான்மை நண்பர். இருவரும் ஒரெ பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள். வழக்கத்துக்கு மாறாக, காலை நேரம் சிவா அவசரம் அவசரமாக மருத்துவமனைக்குள் உள்ளுடுவதைக் கண்ட சித்தருக்கு புதிராக இருந்தது. சிவாவின் முகத்தைப் பார்த்தவுடன் , அவருக்கு ஏதோ முக்கிய பிரச்சனை இருப்பது சித்தருக்கு தெரிந்தது.
“ என்ன சிவா இந்த நேரம் அவசரம் அவசரமாய். ஏதாவது முக்கிய பிரச்சனையா? வழக்கத்திலை இந்த நேரத்திலை என்னை நீ சந்திக்க வருவது கிடையாது.”

“ ஓம் சித்தர். பிரச்சனைதான். உம்மோடை தனிய பேசவேண்டும். “ சிவா சுற்றி உள்ளவர்களைப் பார்த்து ஒரு கண்ணோட்டம் விட்டார். அறைக்குள் தமிழ் வாத்தியார் முருகேசு இருப்பதை கண்டார். ஊர் வம்பு கதைப்பதில் பிரசித்தமானவர் முருகேசு என்று அவருக்கு நல்லாய் தெரியும். ஒன்றை இரண்டாக்கி ஊர் முழுவதும் பரப்பக் கூடயவர் அவர். முருகேசுக்கு ஊரிலை “தினச் செய்தி” என்ற பட்டப்பெயர் வேறு.

“சித்தர். உமக்கு வசதியிருந்தால் நீரும் நானும் கொஞ்ச நேரம் அடிவளவுக்குள்ளை போய் கதைக்க முடியுமெ? “ சித்தருக்கு சிவாவின் நிலை விளங்கிவிட்டது.

“ அதுக்கென்ன சிவா. இவையள் மூன்று பேரையும் பார்த்து மருந்து குடுத்திட்டு வாரன். கொஞ்சம் பொறும் “.

“ சித்தர் நான் உதிலை இருக்கிறன், நீர் வேலையை முடிச்சிட்டுவாரும்.;“. சிவா பக்கத்தில் உள்ள கதிரையில் போய் அமர்ந்தார்.

சிவாவுக்கு சித்தரைப் போல் வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். அவர் சிவகாமியை திருமணம் செய்யும் போது வயது முப்பது. சிவகாமிக்கும் அவருக்கும் வயதில் பத்து வருஷ வித்தியாசம். சிவாகாமி தாயைப் போல் அழகானவள். செக்கச் செவேல் எனறு நல்ல நிறம். நீண்ட கரு கரு என்ற தலைமயிர். திருமணமான புதுதில், அவள் அழகைப்பார்த்து பலர் “ பூநகரி ரோஜா“ என்று விமர்சிப்பதை கேட்டு சிவாபெருமை படுவார். சீதனம் இல்லாமல் சிவாகாமியை திருமணம் செய்ய அவள் அழகும் ஒரு முக்கிய காரணம். கிட்டதட்ட இருபத்தைந்து வருஷத்திருமண வாழ்க்கையில் ஐந்து பெண்பிள்ளைகளுக்கு தாயாகியும் சிவகாமி இளமை குன்றாமல் பதினாறு வயது குமரியைப் போல் இருந்தாள். தங்களுக்கு கடைசி காலத்தில் கொள்ளிவைக்க ஒரு ஆண் வாரிசு இல்லையே என்று சிவா தம்பதிகளுக்கு பெரும் கவலை. போகாத கோயில் இல்லை. உள் ஊர் சாஸ்திரி கூட ஆண்வாரிசுக்கு சாத்தியமில்;லை என்று சொன்னது அவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. மூத்த மகளை நல்ல இடத்திலை கட்டி குடுத்தாச்சு. இரண்டாவதும் மகளும் கலியாணம் செய்துகொண்டு இங்கிலாந்துக்கு போயிட்டாள். மற்ற மூன்று பேரையும் குறையில்லாமல் நல்ல இடத்தில் கட்டி குடுத்திட்டாள் நிம்மதியாய் கண்ணை மூடலாம் என்று நினைக்க தெயவம் வேறுமாதிரி நினைக்கிறது.

“ என்ன சிவா அப்படி யோசனை?. வாரும்; அடிவளவுக்குப் போய் கதைப்போம். “.சித்தரின் கணீர் என்ற குரல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த சிவாவை சுயநிலைக்குக் கொண்டு வந்தது. இருவரும் மௌனமாக மாட்டுக் கொட்டிலடிப் பக்கம் போனார்கள்.

“சரி இனி விஷயத்தக்கு வாரும். உம்முடைய பிரச்சனை என்ன? உம்மையும் என்னையும் இந்த இரண்டு பசுமாடுகளையும் வேறு ஒருத்தரும் கிட்டையில்லை. “

“சித்தர் உமக்கு எப்பவும் பகிடி. நான் சொல்லப்போகிற இந்த விஷயம் எங்கள் இரண்டு பேருக்குள்ளை இருக்கட்டும். உம்முடைய மனுசிக்கும் தெரிய கூடாது“

“அப்படி என்ன என்றை மனுசிக்குக் நான் சொல்ல கூடாத இரகசியம்?. கெதியிலை விஷயத்துக்கு வாரும் “

“என்றை மனுசி சிவகாமி மூன்று மாசம் முழுகாமள் இருக்கிறாள் “. சிவா பதட்டத்துடன் ஏதோ குற்றம் புரிந்தவர் போல் சொன்னார்.

“என்ன விசர் கதை கதைக்கறீர். இந்த வயசிலையோ? “. சித்தருக்கு ஆச்சரியமாய் இருந்தது.

“நான் ஏன் விசர் கதை கதைக்க வேண்டும். கிளிநொச்சி ஆஸ்பத்திரியிலை போய் எல்லா பரிசோதனைகளும் செய்தபிறகு தான் இந்த செய்தியை உமக்கு சொல்லுறன். “

“இனி என்ன. சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே. எனது வாழ்த்துக்கள். இந்த முறை நிட்சயம் உமக்கு மகன் பிற்கப்போகிறான். உங்கள் இரண்டு பேருடைய நீண்ட கால ஆசை நிறைவேறப்போகுது. “ சிவாவின் கையைப்பிடித்து குழுக்கி தன் மகிழச்சியை தெரிவித்தார் சித்தர்.

“பகிடிவிடாதையும் சித்தர். ஆண் குழந்தை பிறக்கும் என்று என்ன நிச்சயம்? சாஸ்திரிமார் சொன்னது பிழையாகுமா? இந்த வயசிலை பேரப்பிள்ளைகள் இருக்கக்கை எங்களுக்கு பிள்ளை பிறந்தால் ஊர்ச்சனம் என்ன நினைப்பினம். எங்களுக்கு இருக்கிற பிள்ளைகள் போதும். இனியும் வேண்டாம் “

“ஏன் சிவா. ஊரில் எத்தனை குடும்பங்கன் பிள்ளையள் இல்லாமல் கவலைப்படுகிதுகள். உங்களுக்கு கடவுள் தந்தும் வேண்டாம் என்கிறியள். உங்களுக்கு வேண்டிய சொத்து பணம் இருக்குது. பிள்ளையளை வளர்த்து விட்டால் கடைசிக் காலத்திலை உங்களை கவனிக்காமலே போகப் போகுதுகள்“

“இல்லை சித்தர். உமக்கு தெரியும். எனக்கு வயசு ஐம்பத்தாறாகப் போகுது. இப்ப எங்களுக்கு பிள்ளை பிறந்தால் ஊர் சிரிக்கும். சொந்தக்காரர் பகிடிபண்ணுவினம். இங்கைபார் இந்த வயசிலை துள்ளிவிளையாடுது என்று. எப்படி நான் ஊரிலை தலைகாட்டமுடியும்? “

“இதெல்லாம் நடக்க முந்தி யோசிச்சிருக்க வேண்டும் “ சித்தர் சிரித்தபடி சொன்னாhர்.
“ஏதோ எதிர்பாராத விதமாய் நடந்திட்டுது. இப்ப எனக்கு உம்முடைய உதவி தேவை. செய்வீரே? “

சித்தருக்கு சிவா என்ன உதவி கேட்கப்போறார் என்று விளங்கிவிட்டது.

“ இப்ப என்னை என்ன செய்யச்சொல்லுரீர் ? “

“மனுசியிண்டை வயிற்றில் உள்ள கருவைக் கலைக்க ஏதாவது மருந்து தேவை. தருவீரே ? “

சித்தர் அந்த கேள்வியை எதிர்பார்த்த படியால் சிவா கேட்ட உதவி அவரைத் திகைக்க வைக்கவில்லை. சற்று நேரம் சிந்தித்தார். தன் மருத்துவ துறையின் கோட்பாடுகளுக்கு எதிராக தான் எப்படி செயல் பட முடியும்? சிவாகாமியின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதன் பழி தன் மேல் விழும் என்பது அவருக்குத் தெரியும். துய்மையான கொள்கையுடன் வாழ்பவர் சித்தர். இதையெல்லாம் சிவாவுக்கு விளங்கப்படுத்தி உணரவைக்கமுடியாது என்பதும் அவருக்கு தெரியும். அதுவுமன்றி மருந்தில்லாமல் சிவா இடத்தைவிட்டு நகரமாட்டார் என்றும் தெரியும்.. யோசித்து தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தார்.

“சரி என்னோடை வாரும். “

சிவாவும் சித்தரும் திரும்பவும் மருத்துவமனைக்கு சென்றனர். மருந்து கையுக்கு வந்தவுடன் சிவாவின் முகத்தில் ஒரு மகிழச்சி. மருந்தை எப்படி பாவிக்க வேண்டும் என்பதை விளக்கினார் சித்தர்.

“சித்தர். இந்த உதவியை நான் எப்பவும் மறக்கமாட்டன். “ சிவா பூரணதிருப்தியுடன் போவதை பார்த்து சித்தர் புன்னகையுடன் வந்திருந்த நோயாளியை கவனிக்கத் தொடங்கினார்.

******

மாதங்கள் உருண்டோடின. சிவாகாமியின் வயறு பெருத்ததே தவிர வேறுமாற்றங்கள் அவளில் ஏற்படவில்லை. சித்தரின் மருந்து வேலை செய்யவில்லை என்று தெரிந்து கொள்ள சிவாவுக்கு அதிக நாட்கள் எடுக்கவில்லை. சித்தர் தன்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்தது. ஒரு நாள் தன் கோபத்தை ஒரு நாள் சிதத்ர் மேல் பொரிந்து தள்ளினார். நம்பிக்கைத் துரோகி எனத் திட்டினார். கரு கலைவதற்கு மாறாக குழந்தை குறையின்றி ஆரோக்கியத்துடன் வளர்வதற்கு தான் ”சிவனப்பிரகாச லேகியம்” கொடுத்த காரணங்களை எவ்வளவோ சொல்லியும் சிவா ஏற்றுகொள்ளவில்லை. சித்தர், தன்னை ஊர் சனங்கள் ஏளனமாக பேசி அவமானப்படுத்தவே அவர் செய்ததாக சிவாவின் வாதம். சிவகாமிக்கு உள்ளுக்குள் குழந்தை குறையின்றி வனர்வதையிட்டு சந்தோஷம். கணவனுக்குத தெரியாமல் கணவனின் செயலுக்கு சித்தரிடம் மன்னிப்பு கேட்டாள். தான் செய்யும் மருத்துவ தொழிலின் தர்மத்துக்கு எதிராக அவளது உயிருக்கும் கருவில் வளரும் குழந்தையினது உயிருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு செயல்பட வேண்டியிருந்ததென விளக்கினார் சித்தர் . ஊர் சனங்களின் கருத்தை விட கருவின் உயிரே முக்கியம் என்ற அவர் கொள்கையை நினைத்து அவள் பெருமைப்பட்டாள்.

கொழு கொழு என்று ஒரு ஆரோக்கியமான அழகான ஆண் குழந்தை பிறந்த போது சிவா தம்பதிகள் பூரிப்படைந்தனர். தனக்கு கொள்ளி வைக்க ஒரு மகன் பிறந்திட்டான’ என்ற சந்தோஷம் சிவாவுக்கு. குழந்;தைக்கு கஜேந்திரன் என்று பெயர் வைத்தார்கள். சிவகாமி மனதுக்குள் சித்தருக்கு நன்றி தெரிவித்தாள். ஆனால் சிவாவுக்கு சித்தர் தன்னை ஏமாற்றிய கோபம் மட்டும் விட்டுப் போகவில்லை. சித்தர் குடும்பம் குழந்தைக்கு பரிசாக அனுப்பிய தங்கச் சங்கிலியைக் கூட ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

ஈழத்துப் போர் நிமித்தம் ஊரைவிட்டு புலம் பெயர்ந்த பூனகேரி குடும்பங்கள் பல. சித்தர் குடும்பமும் சிவா குடும்பமும் அக்குடும்பங்களில் ஒன்று. ஒவ்வொரு திக்கில் பிரிந்த அவர்கள் தொடர்பு விட்டு திரும்பவும் ஒன்று சேரும் சந்தாப்;பம் கிட்டாமல் போய்விட்டது. அந்த இன்பகரமான , அமைதியான கிராமவாழ்க்கையை நினைத்தும் தன் கணவன் பொது சனத்துக்கு செய்த சுயநலமற்ற சேவையையும் தற்போது அவர் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருப்பதை நினைத்துப் பெருமூச்சு விட்டாள் செல்லம்மா.

”அம்மா , என்ள யோசிக்கிறியள் ” என்று தோளில் மகள் கைவைத்த போது செல்லம்மா சுயநிலைக்கு திரும்பினாள்.

”டொக்டர் என்னவாம் பிள்ளை ? செல்லம்மா பதட்டத்தோடு மகளைப் பார்த்து கேட்டாள்.

“டொக்டர் ஸ்மித்தோடை கதைத்தனான். அப்பாவுக்கு ஓரு மாதத்துக்கு முன் செய்த பரிசோதனையின் ரிப்போர்ட்டும் இப்ப செய்த பரிசோதனைகளின் ரிப்போர்ட்டுகளின் படியும் இருதய சத்திர சிகிச்சை செய்யவேண்டியது அவசியமாம். அதுவும் கெதியிலை செய்யவேண்டுமாம். அப்பாவுடைய நல்ல காலத்துக்கு பிரபல சேர்ஜன் ஒப்பிரேசன் செய்ய உடன்பட்டுள்ளாராம். உங்கடை ஒப்புதல் வேண்டுமாம்“.

அழுதாவாரே சத்திர சிகிச்சைக்கு ஒப்புதலை படிவத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தாள் செல்லம்மா.

******

மறுநாள் சத்திர சிகிச்சை முடியும்மட்டும் சித்தர் குடுப்பத்தின் மனம் பதட்டப்பட்டுக்கொண்டிருந்தது. வெயிட்டிங் அறைக்குள் தலையில் கைவைத்தபடி இருந்த செல்லம்மா ஒப்பிரேசன் முடியுமட்டும் தண்ணீர் கூட குடிக்க மறுத்துவிட்டாள். காலை எட்டு மணிக்கு ஒப்பிரேசன் அறைக்குள் சித்தரை கொண்டு போய் நாலு மணி நேரம் ஆகியும் செய்;தி ஒன்றும் வராதது அவர்களுக்குப் பயத்தை கொடுத்தது. என்ன செய்தி வருமோ என்று எதிர் பார்த்து கொண்டிருந்தார்கள். செல்லம்மா வேண்டாத தெய்வமில்லை. வருடா வருடம் கந்தசஷ்டி வரதம் பிடிப்பவாள் அவள். தொடர்ந்து பிடிப்பதாக வேண்டிக் கொண்டாள்.

ஒருபடியாக ஐந்து மணித்தியாலத்துக்குப்பின் பச்சை உடுப்பும் வெள்ளை தொப்பியுடனும் ஒப்பிரேசன் செய்த சேர்ஜன் சிரித்த முகதததுடன் நடந்துவந்தார். செல்லம்மா மரியாதை கொடுத்து எழும்பி நின்றாள்.

“அம்மா நீங்கள் இருங்கள். ஒப்பிரேசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இனி அவர் உயிருக்கு ஆபத்து இல்லை. நாங்கள் நினைத்த மாதிரி அவ்வளவு ஆபத்தான கட்டத்தில் அவர் இருக்கவில்லை “ என்று சேர்ஜன் தமிழில் பேசியபோது எல்லோரும் வாயடைத்து நின்றனர். செல்லம்மா அவரை கை எடுத்துக் கும்பிட்டாhள்.

“ சீ இதென்ன செய்யிறியள். நீங்கள் என் தாய் மாதிரி. ஒரு காலத்திலை உங்கள் கணவர் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். அந்த உயிர்களில் என் உயிரும் ஒன்று . தன் செயல் மூலம் நல்ல கர்மாவை தேடிக்கொண்டார். அவர் என்னைக் காப்பாற்றிய படியால் தான் நான் அவர் உயிரைக் காப்பாற்றமுடிந்தது. அவர் உயிரை காப்பாற்ற இந்த சந்தர்ப்பம் கிடைத்ததிற்;கு இறைவனுக்கு என் நன்றி. இன்னும் அரை மணி நேரத்தில் அவரை ஐ சி யூ க்கு கொண்டு வருவார்கள். அவர் உடல் நிலையைப் பொறுத்து நாளை வார்டுக்கு மாற்றுவார்கள். இதோ என் பிஸ்னஸ் கார்ட். நான் அடிக்கடி அவரை வந்து பார்க்கிறேன். ஒன்றுக்கும் யோசிக்காதைங்கோ. எனக்கு இன்னொரு ஒப்பிரேசன் இருக்கு நான் போகவேணும் ”. சேர்ஜன் பதிலை அவர்கனிடம் எதிர்பார்க்காமல் ஒப்பிரேசன் தியெட்டரை நோக்கிச் சென்றார்.

செல்லம்மா வார்த்தைகள் வராமல் வாயடைத்து மகளைப் பார்த்தாள்.
பிஸினஸ் கார்ட்டை வாசித்த அவள் மகள் “சேர்ஜன்டை பெயர் டொக்டர் சிவா கஜன். உங்களுக்கு அவரை தெரியுமா அம்மா ?” மகள் கேட்டாள்.

செல்லம்மாவை சேர்ஜன் சொன்ன வார்த்தைகள் திரும்பவும் பழம் கால நினைவுகளுக்கு எடுத்துச் சென்றது. “ ஒருகாலத்தில என் உயிரைக் காப்பாற்றியவர உஙகள் கணவர்.” என்று சேரஜன் கொன்ன வாரத்தைகள் அவளால் நம்பமுடியிவில்லை . மகளின் கேள்விக்கு புன்முறுவல் மூலம் பதில் அளித்தாள்.

Print Friendly, PDF & Email

1 thought on “உயிருக்கு உயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *