உயிரில் கலந்த உறவு…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 5,028 
 

ஒரு ஞாயிற்றுக் கிழமை தன் அறையில் அமர்ந்து படித்து கொண்டிருந்த சாவித்திரியிடம் அவள் தாய் சிவகாமி தயக்கத்துடன் போய் அமர்ந்தாள்.

” என்னம்மா..? ” என்றவாறு தாயின் முகத்தைப் பார்த்தாள் அவள்.

” ஓ…. ஒண்ணுமில்லேம்மா… ”

தாயின் தடுமாற்றம் தயக்கத்தைப் பார்த்த சாவித்திரி…

” சும்மா சொல்லுங்கம்மா…” என்றாள் .

” வ.. வந்து உனக்கொரு வரன் பார்த்திருக்கேன்ம்மா…” – இவள் வந்த விசயத்தை உடைத்தாள் .

” என்னம்மா சொல்றீங்க..? ! ” அலறினாள் சாவித்திரி .

” ஆமாம்மா. மாப்பிள்ளை பொதுப்பணித்துறையில் வேலை பார்க்கிறார்…”

” தயவு செய்து என்னை வற்புறுத்தாதீங்கம்மா…” – தொண்டை கரகரத்தது சாவித்திரிக்கு.

சிவகாமி விடுவதாய் இல்லை.

” எத்தனை நாளைக்கு இப்படியே இஇருக்கப்போறே..?! ஏதோ நடந்தது நடந்து போச்சி . எல்லாத்தையும் மறந்துட்டு நீ ஒரு வாழ்க்கையை நல்லவிதமா அமைச்சிக்கிட்டீன்னா எனக்கும் நிம்மதியா இருக்கும். ” துக்கம் தொண்டையை அடைத்தது சிவகாமிக்கு.

” உங்க நிம்மதிக்காக… என் காதலுக்கு நான் துரோகம் செய்ய முடியுமாம்மா..? ” – சாவித்திரி அவளைத் திருப்பிக் கேட்டாள் .

”சந்தோஷ் உயிரோட இருந்தா நீ சொல்றது , நியாயம். அவன் போயிட்ட பிறகு அவனையே நினைச்சி உருகுறீயே இதுவா காதல்..? !! வீணா பிடிவாதம் பிடிக்காம உன்னோட வாழ்ற எங்களையும் கொஞ்சம் யோசனைப் பண்ணிப்பாரு சாவித்திரி. உன்னோட பொறந்த இரண்டு தங்கச்சிங்க இருபது வயசுக்கு மேல இருக்காங்க. அவுங்களுக்காகவாவது….” சிவகாமிக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை.

தெரிந்ததுதான். அம்மா சொல்ல…….. அது வலித்தது.

மெல்ல கண்களை மூடிக்கொண்டாள் சாவித்திரி.

‘ தான் இப்படி இருக்கையில் தங்கைகளுக்குத் திருமணம் என்பது குதிரைக்கொம்புதான் . அதற்காக …. நான் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா..? ‘ – அவளுக்குள்ளாகவே கேள்வி கேட்டாள் .

‘ ப்ளீஸ்ம்மா ..! ‘ – என்று கெஞ்சும் விழிகளில் கண்ணீர் பளபளக்க உட்கார்ந்திருக்கும் தாயைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

மனதை என்னவோ செய்தது.

” அதெல்லாம் மறந்துட்டு , ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிச்சு , எங்க வயித்துல பாலை வார்ம்மா ..” என்றவாறு கைகளை பிடித்துக்கொண்ட அம்மாவைப் பார்க்கப் பார்க்க இதயத்தின் அடியில் வலித்தது சாவித்திரிக்கு

” கொஞ்சம் அவகாசம் கொடுங்கம்மா..! ” – தாயைப் பார்த்துப் பரிதாபமாகச் சொன்னாள் சாவித்திரி .

” சரிம்மா..” என்றவாறு சிவகாமி நகர்ந்தாள்.

‘ தன் வாழ்வின் பாதையை மாற்றி , நடைப்பிணமாக ஆக்கிய அந்த நிகழ்ச்சி….!! மறக்கக்கூடிய விஷயமா… ?! அது வடுவாக மாறிப் போனதாயிற்றே ! அதை எப்படி மறப்பது..? ‘ என்று நினைக்குப்போதே அந்தக் காட்சி கண்களில் விரிந்தது சாவித்திரிக்கு .

கோட்டுச்சேரி கிராமத்தில் சசாவித்திரியும் , சந்தோசும் காதல் சிட்டுகளாய்ப் பறந்த காலம் அது.

சந்தோஷ்….. தூரத்து உறவு , மாமா பையன். ஆகையால் கல்யாணம் கைகூடும் ஏற்கிற நினைப்பில் இருவருமே ஒருவரையொருவர் உயிருக்குயிராய் நேசித்தார்கள்.

ஆனால் விதி இவர்கள் எண்ணத்தில் குழி பறித்தத்து.

இவர்கள் விஷயம் தெரிந்ததும் பணக்கார மாமா……..

” உறவாய் இருந்தாலும் தன் தகுதிக்கு ஏழை வீட்டுப் பெண்ணையா மருமகளாய் ஏற்பது..?? ” என்று குதித்தார்.

அம்மா சிவகாமிக்கு இது அவமானமாக இருக்க…… சந்தோசை மறந்துவிடும்படி மகளை வற்புறுத்தினாள் .

இப்படி இரு தரப்பிலுமே சம்மதிக்காமல் போகவே…… காதலர்கள் மனமுடைந்து போனார்கள்.

தங்கள் காதல் கைகூடி வராது போலிருக்கே..! – என்கிற பயம் உந்தித்தள்ள வாழ்க்கையில் ஒரு சேர முடியாதவர்கள் சாவிலாவது ஒன்று சேர முடிவெடுத்தார்கள் .

அதன்படி…… ஊருக்கு ஒதுக்குப்புறமாய் உள்ள மாந்தோப்பில் ஒருநாள் இருவரும் விஷம் குடித்தார்கள்.

மயங்கிய நிலையில் கிடந்த இவர்களை யாரோ பார்த்துவிட்டுத் தகவல் சொல்ல , ஊரே திரண்டு அலறி அடித்துக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

ஆனால்…… இவளுடைய துரதிர்ஷ்டம் . தீவிர சிகிச்சைக்குப் பின் இவள் பிழைத்துக்கொண்டாள் .

சந்தோஷ் மரணத்தைத் தழுவினான் !!

அந்த நினைவுகள் , அவமானங்கள் மகளைப் பாதிக்குமே என்கிற பயத்தில் சிவகாமி நிலபுலன்களையெல்லாம் விற்று எடுத்துக் கொண்டு தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளுடன் சென்னைக்குக் குடியேறிவிட்டாள் .

அந்தக் கண்டத்திலிருந்து தப்பித்த சாவித்திரி…… தான் பிழைத்ததிற்கும் , சந்தோஷ் மரணமடைந்தற்கும் ஏகமாய் வருத்தப்பட்டு , பாதிக்கப்பட்டு நடைபிணமானாள்.

காலம் கொஞ்சம் கொஞ்சமாய் அவளை மாற்றியது.

அந்த அதிரிச்சியிலிருந்து மனதைத் திசை திருப்ப……. படித்த படிப்பிற்கு வேலைக்குப் போனாள் சாவித்திரி.

ஆனாலும் ……. இறந்து போன சந்தோஷ் அவள் இதயத்தில் சாகாமல் வாழ்ந்து கொண்டிருந்தான்.

‘ காதலுக்காக சாவின் விளிம்புவரை போய்விட்டு வந்த தனக்குத் திருமணமா ?! இறந்தவன் இதயத்தில் இருக்கையில் இது சாத்தியமா..?!! ‘ – சாவித்திரிக்குள் ஓடியது.

சரி… தன் முடிவை மாற்றிக்கொள்ளாமல் இப்படியே இருந்துவிட முடியுமா..? முடியுமென்றால் தங்கைகளுக்குத் திருமணம் சீக்கிரம் நடந்து விடுமா..? மூத்தவள் இருக்க இளைவர்களுக்கு வரன் வருவது சாத்தியமா..?

தன் முடிவை மாற்றிக்கொள்ளலாமா ? மாற்றிக் கொண்டால்… கட்டியவனுக்கு விஷயம் தெரிந்து பின்னால் பிரச்சனையாகி விடாதா.? சரி….. எல்லாம் தெரிந்ததுமே ஒருவன் மணம் முடித்துக்கொள்கிறேன் என்று வந்தால் அவனுடன் மனமொப்பி வாழ முடியுமா…?

முடியாது ! முடியாது !! முடியாது !!

ஏற்கனவே தன்னால் ஏற்பட்ட பெரிய இடியைத் தங்கியது தாய் மேலும் இந்த இடியைத் தாங்குவாளா..?

‘ நீதான் வீணாகிப் போய்விட்டாய் உன்னால் தங்கைகளும் வீணாகிப் போகப் போகின்றார்களே ஏன்னு மருகுவாளே..! இந்த தர்ம சங்கடத்திலிருந்து விடுபட செத்து போகலாமா..?

மீண்டுமொருமுறை தற்கொலை முயற்சி செய்தாலோ.. செய்துகொண்டாலோ அம்மா நிச்சயம் தாங்கவே மாட்டாள்.

இதென்ன சோதனை..? கடவுளே..! என்னையும் அப்போதே அழைத்துக்கொண்டு சாவிலாவது எங்களை ஒன்று சேர்த்திருக்கிலாமே !.. அப்படி செத்துப் போயிருந்தால் இந்தப் பிரச்சனையெல்லாம் வருமா..? வந்திருக்குமா..?

என்னைச் சித்திரவதை செய்ய வேண்டுமென்றே பிழைக்க வைத்தாயா..? நானென்ன பாவம் செய்தென் உனக்கு. !

இவர்களின் பாதிப்புக்குப் பயந்து மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு நான் திருமணம் செய்து கொண்டால் சந்தோசின் ஆத்மா சாந்தியடையுமா..? – ‘ யோசிக்க யோசிக்க துக்கமும் வேதனையும் போட்டிப் போட்டுக்கொண்டு இம்சித்ததது சாவித்திரியை .

இரவு படுக்கையிலும் மனம் விழித்துக் கொண்டு முள்ளாய்க் குத்தியது

ஏகமாய்க் குழம்பினாள் .

ஆனாலும் ஒரு முடிவிற்கு வந்தாள் .

காலையில் கண்விழித்த சிவகாமி தன் மகளை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தாள் .

” என்னம்மா.. இது ?!…” பதறினாள்.

” அம்மா ! உங்க பிரச்சனைக்கும் என் பிரச்சனைக்கும் இதுதாம்மா முடிவு . தாலி கட்டினாத்தான் கணவனா..? ஒருத்தனை மனசார நினைச்சுட்டாலும் அவன் கணவன்தான்ம்மா . அப்படிப் பார்க்கிறப்போ… கணவன் செத்துப் போய்ட்டா மனைவி இப்படித்தானேம்மா இருக்கணும். இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் என்னுடைய இந்த முடிவு பத்தாம் பசலித்தனமாய்த் தோன்றலாம். ஆனா… எங்களுடைய ஆழமான காதலுக்கும் , உயிரில் கலந்த எங்கள் உறவுக்கும் இதுதான்ம்மா சரியான முடிவு. என்னை மன்னிச்சுடுங்கம்மா. ” என்று சாவித்திரி அழுத்தம் திருத்தமாகச் சொல்ல..

விதவைக் கோலத்துடன் நிற்கும் மகளையும் , அவள் காதலின் திண்மையையும்…. உணர்ந்த சிவகாமி தன் மகளை அணைத்துக் கொண்டு மவுனமாகக் கண்ணீர் விட்டாள் .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *