உபயோகமில்லாத தியாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2020
பார்வையிட்டோர்: 6,342 
 

மாமா ஏதாவது உயில் எழுதிட்டு போயிருக்கிறாரா? கேள்வியிலேயே தமக்கை விமலாவின் பேராசை வெளீப்பட்டதாக தேவகிக்கு தென்பட்டது.இதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள் தேவகி. சிறிது நேரம் தேவகியின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த விமலா அவள் பதில் எதுவும் பேசாமல் இருப்பதை பார்த்து தோளை குலுக்கி விட்டுக்கொண்டு உள்ளே சென்றாள்.

என்ன மனிதர்கள் இவர்கள்? கணவன் இறந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் எத்தனை எதிர்பார்ப்புகள். இருக்கும்போதும் மாமாவிடம் எவ்வளவு கிடைக்கும் என்று சுற்றி வந்த கூட்டம் அவர் போய் இரண்டு நாட்களானாலும், இன்னும் ஏதாவது கிடைக்குமா என்றுதான் அலைகிறார்கள்.

இரவு தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த தேவகி சற்று காற்றாட வராந்தாவுக்கு வரலாம் என்று முன் ஹாலுக்குள் வரும்போது வெளியில் வாசல் தாழ்வாரத்தில் பேச்சு சத்தம் கேட்டு அப்படியே நின்று விட்டாள்.

என்ன விமலா உங்க அக்கா ஏதாவது சொன்னாளா? இது விமலாவின் கணவன் குமாராக இருக்க வேண்டும். எந்த வேலையும் நிரந்தரமில்லாமால் மாத்த்தில் பாதி நாள் இவர்கள் வீட்டில் வந்து உட்கார்ந்து வாழ்க்கையை ஓட்டி வந்தவன்.

ஒண்ணும் பேசாம அமுங்கினியாட்டம் உட்கார்ந்திருக்கா ! விமலாவின் குரலில் ஆதங்கமா, அலுப்பா தெரியவில்லை.

நீ கேட்டு பார்க்கவேண்டியதுதான அக்கா? இது தம்பி ராமையாவின் குரல் அவன்

மாமாதான் எனக்கு தெய்வம் என்று அடிக்கொருதரம் சொல்லிக்கொண்டிருப்பவன், இப்பொழுது மாமாவின் சொத்துக்காக அக்காவிடம் தூது போக சொல்லி விரட்டிக்கொண்டிருக்கிறான்.

இவனுக்கும் விமலாவுக்கும், கடைசி தங்கை மஞ்சுளாவுக்கும் எவ்வளவு வயசிருக்கும்? எனக்கு கல்யாணம் ஆகும்போது? மனசுக்குள் எண்ணிப்பார்த்தாள். இப்பொழுது விமலாவுக்கு நாற்பதுக்கு மேல் இருக்கும், அடுத்து தம்பிக்கு இரண்டு வயசு குறைவு, கடைசி குணாவுக்கு அதை விட இரண்டு வயசு குறைவு, அப்பா சரியாக இரண்டு வருசத்துக்கு ஒரு முறை வாரிசை உருவாக்கி விட்டு போய் சேர்ந்து விட்டார்.

அம்மா எப்படியோ சமாளித்து உருப்படியாக்கினாள் என்றாலும், தன்னுடைய தம்பியை இதற்கு பலிகடாவாக்கித்தான் சமாளித்தாள். தேவகிக்கி இருபது வயதிருக்குமா? அவளுக்கும் மாமனுக்கும் பத்து வருடத்துக்கு மேல் வித்தியாசம் இருந்தும் இவளை கல்யாணம் செய்து கொடுத்து வீட்டுக்கு ஒரு ஆம்பிளை துணையை வைத்து பாவம் தம்பியின் சம்பாத்தியத்தை தன் குடும்பத்து பக்கம் திருப்பிக்கொண்டாள்.

இதனால் அம்மாவின் அப்பா, அம்மா, மகள் சம்பந்தியானாலும் அவள் செய்த இந்த செயலுக்கு வீட்டுக்கு வருவதையே நிறுத்திக்கொண்டார்கள். அதனால் தாத்தா பாட்டி உறவு கூட இவளுக்கு கிடைக்காமல் போய் விட்டது. அப்பொழுதெல்லாம் இவள் கணவன் சம்பாதித்து கொட்டிக்கொண்டுதானே இருந்தார். அதனால்தானே இந்த மூன்று பேரையும் ஆளாக்கி கல்யாணம், காட்சி, வேலை என்று ஒவ்வொருவராக கரை சேர்க்க முடிந்தது.

அதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்?

இப்பொழுது கடைசியாய் வளர்ந்து ஆளாகி நல்ல வேலையும் வாங்கிக்கொடுத்து, கல்யாணமும் ஆகியிருந்த குணாவின் குரல் கேட்டது. மாமா இவ்வளவு தூரம் நமக்காக செஞ்சிருக்காரு, இன்னும் நாம் அவர்கிட்ட எதிர்பார்க்கறது தப்பு !

அப்பா இவன் ஒருவனாவது மனசாட்சியோடு பேசுகிறானே என்று இவள் நினைத்துக்கொண்டிருந்த பொழுது, அவன் மாமாவுக்கு கடைக்குட்டி ராசு மேலதான் கொள்ளை ஆசை, அவனும் தாத்தா, தாத்தான்னு அவர் தோள் மேலையே தொங்கிட்டு திரிவான்.இவர் கூட ஒரு முறை இவன் தான் எனக்கு வாரிசு அப்படீன்னு சொல்லியிருக்காரு, சொல்லிக்கொண்டே போனவன், மாமா நம்ம குழந்தைகளுக்குத்தான் ஏதாவது செய்துட்டு போயிருப்பாரு. என்று முடிக்கவும். அவனை பற்றி சற்று நேரம் உயர்வாக நினைத்து விட்டோமே என்று தேவகி தன்னையே நொந்து கொண்டாள்.

யாருக்காக நாம் வாழ்ந்தோம்? நமக்காகவா? இல்லை இவர்களுக்காகத்தானே, பாவம் தன் இளமை முழுக்க என்னுடைய குடும்ப மாரத்தை சுமந்து சுமந்து தனக்கு என்று ஒரு வாரிசு இல்லாமல், போய் சேர்ந்த பின்னாலும், தனக்கு ஏதாவது செய்து விட்டு போயிருக்கானா? என்று எதிர் பார்க்கும் இந்த கூட்டத்துக்கா நாம் இருவரும் வாழ்ந்து இருக்கிறோம்? நினைக்கும்போதே இவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.எப்பொழுதாவது தனிமையில் நமக்காக வாழ்ந்திருக்கிறோமா? நான் இருபதிலும் நீ முப்பதிலும் இணைந்து குடும்பம் நடத்தி உன் அக்காவின் குழந்தைகளைத்தானே இல்லை, என்னுடைய சகோதர சகோதரிகளைத்தானே வளர்த்தி ஆளாக்கி இருக்கிறாய்? நமக்கு என்று ஒன்றுமே உருவாகவில்லையே? நானும் அவர்களுக்கு உடந்தையாக உனக்கு துரோகம்தானே செய்திருக்கிறேன். நினைக்க நினைக்க அவளுக்கு தன் கணவனுக்கு துரோகம் செய்துவிட்டோமே என்று ஆய்ந்து போகிறாள்.

மறு நாள் காரியங்கள் எல்லாம் முடிந்த பின்னால் தேவகி எல்லோரையும் இருக்க சொல்கிறாள். வக்கீலை வர சொல்லி இருக்கிறேன், அவர் வருவார் என்று சொல்லவும் உறவுகள் பரபரப்பாயினர். ஒவ்வொருவர் மனதிலும் எனக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கீடுகள் மனதுக்குள் போட்டு பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

வக்கீல் வந்து உயிலை வாசித்தார். மாமாவின் சொத்துக்கள் அனைத்தையும் ஒரு ஒரு அநாதை குழந்தைகள் காப்பகத்தின் ட்ரஸ்ட்டாக உருவாக்கி அதனுக்கு தேவகியை தலைவராக்கி அவள் முடியும் வரை அதனை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், முடியாத கட்டத்தில் அவள் விருப்ப்ப்பட்டால் வேறு ஒருவரை நியமித்து கொள்ளலாம் என்றும் எழுதி இருந்ததை வாசித்து விட்டு தேவகியிடம் விடை பெற்று கிளம்பினார்.

அவ்வளவுதான் அவளின் உடன் பிறந்தவர்கள் தேவகியின் மீது பாய்ந்து விட்டனர்.

எப்படி மாமா அப்படி ஒரு உயில் எழுதலாம்? நாங்க எல்லாம் இல்லையா? அவருக்கு வாரிசுதான் கிடையாதே, அப்புறம் எங்களை வாரிசா போட்டு எழுதி கொடுக்கறதுக்கு என்ன?

இதுக்கெல்லாம் நீதான் உடந்தை, நீ எங்களுக்கெல்லாம் பெரிய துரோகம் பண்ணிட்டே, நீ நல்லாவே இருக்க மாட்டே, ஏதேதோ தூற்றினர்.

அத்தனை பேச்சுக்களையும் அமைதியாய் காதில் வாங்கிக்கொண்டு நின்றிருந்த தேவகி சரி நீங்க எல்லாம் கிளம்புங்க என்ற் சொன்னவள் “போதும் உங்களுக்காக நான் அவருக்கு செஞ்ச துரோகம், நீங்க எல்லாம் கைக்குழைந்தங்களா இருக்கும்போது எங்க எனக்கு குழந்தைங்க உண்டாகி மாமாவும் நானும் எங்க குழந்தைங்களை கவனிக்க ஆரம்பிச்சுடுவோமுன்னு நம்ம அம்மா என்னைய பத்து வருசத்துக்கு குழந்தை பிறக்காம இருக்கறதுக்காக அவள் சொன்னபடியெல்லாம் செஞ்சு கடைசியிலே என் கருப்பைக்கு இனி குழந்தையே பிறக்கற வாய்ப்பு கிடையாது அப்படீன்னு டாக்டர் சொல்லிட்டாரு. நான் இது அவருக்கு செஞ்ச துரோகம்தானே.இந்த அம்மா பேச்சை கேட்டுத்தானே அவருக்குன்னு ஒரு வாரிசை உருவாக்காம செஞ்சேன். இதை நான் கடைசியில மனசு பொறுக்காம அவர்கிட்ட சொன்னபோது அவர் பரவாயில்லை விடு, நாலு குழந்தைகளை வளர்த்து போதும், அப்படீன்னு சொன்னாரு. போதும் இதுவரைக்கும் உங்களுக்காக வாழ்ந்தது. இனி அநாதையா இருக்கற நாலு குழந்தைகளை நான் வளர்த்தறேன், அவர அப்பான்னே அறிமுகப்படுத்தி வளர்க்கப்போறேன்.

எதிர்காலத்துல அவங்க இவரோட ஆஸ்தியில வளர்ந்தவங்க அப்படீன்னு சொன்னா போதும்.சொல்லி விட்டு விறு விறுவென உள்ளே சென்று விட்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *