உத்தராயணம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 20, 2019
பார்வையிட்டோர்: 6,643 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உத்தராயணம் ஆத்மகதியில் சற்று முன்னேற்றம் கண்டு விட்டால் முதலில் உணர்வது தன் தனிமை தான்.

நியாயமிருக்குமிடம் தெரிந்தும், தான் எடுத்துச் சொன்னால் செல்லாது என்ற தலை குனிவில் அடைத்துப்போன வாய்.

பாரதயுத்தம் இன்னமும் ஓயவில்லை. நாம் இன்னும் குருகேஷத்ரத்தில்தானிருக்கிறோம். காங்கேயர்கள் (பீஷ்மர்கள்) வீழ்ந்தவர்கள் வீழ்ந்தபடி சாப்படுக்கை அன்று விரித்தது விரித்தபடி.

“Tommy எங்கிருந்தோ ஒடி வந்து என் முகத்தை ஓரிருதடவை முகர்ந்து பார்த்து பிறகு தலைமாட்டில் உட்கார்ந்து மூக்கை வானத்துக்கு நீட்டி ஒரு நீண்ட ஊளை- –

இதுவேதான் என் உத்தராயணமா?

துாரத்தில் சிரிப்பு கேட்கிறது.

தொகுதி: உத்தராயணம்

அஜந்தா கொண்டைக்கு எல்லாருக்கும் கூந்தல் கொடுப்பனை இருக்காது.

நெற்றியிலிருந்து பின்னுக்கு இழுத்து, அழுந்த வாரி இறுகப் பிணைத்து எழுப்பிய கொண்டையின் கோபுரம் நெஞ்சை முட்டுகிறது. ஸ்து பிபோல் உச்சியில் ஒரு குமிழ் வேறே; சீப்பைத் தப்பிவிட்ட பிடரிச் சுருள்கள் கினைவில் குறுகுறுக்கின்றன.

பிறப்போடு வந்து விட்டாற் போல் உடலோடு ஒட்டி வெள்ளை ரோஜா நிறத்தில் கடல் நுரையில் நெய்தாய ஆடையினூடே மார்க்கச்சு விண்ணென்று தெறித்துத் தெரிகின்றது. ரவிக்கை பூணாது, திரண்ட பனித்தோள் குமிழ்கள், கழுத்தின் விலாசம், யார் இவள் முகம் பார்க்கு முன்–?

“வயதானவர் மொட்டை மாடியில் படுக்கக் கூடாதுன்னு எத்தனையோ தடவை சொல்லியாச்சு. கேக்க மாட்டேன்கறேள் அப்பா-1”

தோளைக் குலுக்கும் கையைத் தூக்கக் கலக்கத்தில் திமிரப் பார்க்கிறேன். தாக்கம் கலையவில்லை, கனவு கலைந்துவிட்டது.

“எழுந்திருங்கோ அப்பான்னா!’

முடியை அள்ளிச் செருகிக் கொண்டு சாந்தா முகத்தில் தான் இன்று முதல் முழி. வெட்டுக்கிளி போல் லேசாக ஆகாயத்தைப் பார்த்து அஞ்சலி , செய்யும் நாசிதுனியில், குந்துமணி, மண்ணைப் பிசைந்தவன் கிள்ளியெறிந்துவிட்ட தால் மூக்கு சற்றுமொண்ணை. முகத்தில் வெண்ணெய் பள பளக்கிறது. அவளும் பாவம் மாற்றி மாற்றிச் சந்தனத்தை அரைத்துப் போடுகிறாள்; மனமில்லாமல் மஞ்சளைப் பூசிக் கொள்கிறாள்; விக்கோ-டர்மரிக், கிளியர்ஸில், அப்பப்போ வர்த்தக ஒலிபரப்பில் என்னென்ன விளம்பரம் கேட்கிறாளோ அத்தனையும் வாங்கியாகிறது. இன்று அமுங் கினாற்போல் இருந்தது; களைக் காலை எழுந்து கண்ணாடியில் பார்த்தால் கிளைத்திருக்கிறது; உடனே உற்சாகம், அடுத்து உடனே அயர்வு. கொஞ்ச காட்களாய் அவள் காலம் இப்படித்தான் தள்ளுகிறது. ஆயினும் பரந்த முகத்தில் பேரழகு ஒன்று உண்டு.

விடிவேளையின் அயர்த்தலில் கண்டது தோற்றம்!

இதன் தெளிந்த கிழல்தானோ?

கையை ஆட்டிவிட்டு சாக்தா இறங்கிப் போயாச்சு.

கீழ்வானத்தில் பெரிய யாகம் கடந்து கொண்டிருக் கிறது. மேகப்பாறைகள் நெகிழ்ந்து உடைந்து கரைந்து, ஆஹாதியில் கவிழ்கின்றன. தழல் ஆட்டம், வான் பூரா பரவுகிறது. சூடு உரைக்கவே நானும் எழுந்து இறங்கு கிறேன்.

ஏணியிலிருந்து கால் தரையிலிறங்கினதுமே சுருக்’ பல்லுக்கிடையில் தோன்றிய சாபத்தைக் கடித்து விழுங்கு கிறேன். சேகரின் உபயம். பொழுது போகவில்லை. சொல் லச் சொல்ல வேளையோடும், வேளையில்லாமலும் முள் வேலிக்கு முடி வெட்டி (அவன்முடி சொல்லச் சொல்லத் தோளில் புரள்கிறது) மீசை ஒதுக்கி, வெட்டி வீழ்த்தித்ய முள்ளை வென்னிரடுப்புக்காக, ஏணியடியில் சுவரோரம் சேர்த்து வைத்திருக்கிறான். வெய்யிலில் காய்வதற்காகத் தட்டிக் கொட்டிப் பரப்பி வைத்திருக்கிறான். வென்னிரடுப் புக்கும் அதை எரிக்கப் போவதில்லை. எனக்குத் தெரியும். முள்ளைக் கையில் குத்திக்கொள்ளாமல் எரிக்கத் தனிப் பொறுமை சிரத்தை, Knack வேண்டும்.

கிணற்றடியில் வாழை இலைகள் காற்றில் கர்த்தன. மாடி வரவேற்கின்றன. சத்தியமா (விட்டேன்) அவை என்னை அடையாளம் கண்டுகொண்டுதான் அப்படிச் செய் கின்றன. மாலையில் ஒன்றிரண்டு வாளிகள் நான் இழுத் துக் கொட்டுவதைக் கொண்டு, இலை ஒவ்வொன்றும் ஆள் படுக்கலாம். அல்ல பாவாடை கட்டிக்கலாம். என்ன ஜாதியோ தெரியவில்லை. தாருக்கு இன்னும் எத்தனை நாள் போகணுமோ?

எங்களை இலையைத் தொடக் கூடாதுன்னு பழியா விக்கறேள், மத்யானம் பாருங்கோ பாளம் பாளமாச் காத்து கிழிச்சுடறதே, என்ன சொல்றேள்?

காற்றுக்கு அலங்கோலமாக அதற்கு இஷ்டம், அதற் காக உன் கத்திக்கிரையாகக் காத்திருக்குமா?

–நான் சொல்லவில்லை, வாய்திறந்து சொல்லி விட்டால் பந்து என்மேலேயே திரும்பி வந்து மோதும்.

பிராம்மணனுக்கு வயசுக்கேத்த பேச்சா இருக்கா பாரு!’

கண்ட கனவுக்கேற்ற வயது கடந்து எத்தனையோ வயதாகிவிட்டபோதிலும் வயதுக்கேற்ற கனவு என்று காண வருமோ?

நடுப்பிள்ளையும் அடுத்தவனும் பல் தேய்த்துக் கொண்டிருக்கிறான்கள்.

“இந்த வீட்டில் ஒரு பேஸ்டா, மண்ணா, ஒண்ணு உண்டா? எப்பவும் மாசக்கடைசிதானா?”

“ஏன், மண் இருக்கே,”

இவனுக்கு அவன், அவனுக்கு இவன், சமயத்துக் கேற்ப ஒருவனுக்கு ஒருவன் உடுக்கடி, இவர்கள் பாஷையில் ‘Boss’,

Tommy வாலையாட்டிக் காலை வந்தனம் தெரிவித்துக் கொள்கிறது, எங்கிருந்தோ, என்றோ வந்தது. எங்கோ போகிறது, வருகிறது. திடீரென்று நினைத்துக்கொண்டு கனகாரியமாக ஓடுகிறது. எங்குபோனாலும், வந்தாலும் இரவு இங்குதான். எல்லாம் பகல் பத்துமணிக்கும். இரவு பத்துமணி வாக்கிலும், கிணற்றடியில் வைக்கும் ஒரு கவளம் சோறு பண்ணும் வேலை. “தொதோ’ கூடக் கொட்ட வேண்டாம், எங்கிருந்தாலும் பறந்தோடி வந்து விடுகிறது. சொறி பிடிக்கறது. சொறி உதிர்கிறது. ஆனால் கண்களில் மட்டும் உள்ளொளியின் அழகு மங்கவில்லை. வாலையாட்டிக்கொண்டு காக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, கான் இருக்கிறேன் உனக்கேன் கவலை?’ என்று கண்கள் பேசுகின்றன.

“சனியனே எட்டிப்போ காலைச் சுத்திண்டு!”

உதையை வாங்கிக் கொண்டு, குரைக்கக் கூட இல்லை. தென்னை மரத்தடியில், தான் ஏற்கெனவே பறித்து வைத்திருக்கும் பள்ளத்துக்குப் போய்ப் படுத்துக் கொள் கிறது.

“டே, ரொம்பப் பொறுமையா இருக்குடா !”

“Yes Yes, முன் ஜன்மத்தில் ஸ்வாமி ஜியா இருந்திருக்கு மோடா?’’

ஈதெல்லாம் காயைக் குறிப்பிடுவன அல்ல. என் காது கேட்க என்னைக் கேலி பண்ணுகிறார்களாம். தனிப்பட்ட முறையில் அப்பாவை அல்ல, தலைமுறையைத் தலை முறையின் பழிப்பு. எங்களை அவர்கள் பங்கப் படுத்து கிறார்கள்.

நடுப்பிள்ளை என்னைக் கேட்கிறான்: என்ன அப்பா வாரம் ஒருநாள் மெளன விரதம் என்று வாயை அடைச்சுட்டு கண்ணால் பேசிக் கொண்டிருக்கிறாய். பேசுகிறாயா சுட்டெ ரிக்கிறாய். ஒரு கதவை மூடி விட்டு இன்னொரு கதவைத். திறந்து விடுகிறாய். அவ்வளவு தானே! இப்படிக் கண்ணால் கரிப்பதற்குப் பதிலாக வாயைத் திறந்து எங் களைத்திட்டிவிடலாம். ஆமாம் காங்கள் கொம்மாளம் தான் அடிப்போம். ரேடியோ சில்லோன் தான் கேட்போம். முழு வால்யூமில்தான் முடுக்கி விடுவோம். சினிமாப் பேச்சுத்தான் பேசுவோம். நீ பொறுத்துண்டு தானிருக்கனும். இல்லாட்டி இதென்ன மெளனம்? உனக்கு ‘ததரினன்னா’ன்னா எங்களுக்கு “லலலலா”. நாங்கள் நீயா? வேலையும் கிடைக்க மாட்டேன்கிறது. எங்களுக்குப் பொழுது போக்குக்கு என்னதான் வழி?. வீட்டுக்குவீடு போய்ப் பாருங்கள். சத்தம் உங்களுக்கு B.P. எங்கள் எங்கள் பீதிக்கு அதுதான் மறதி, வழித்துணை. கடன்வாங்கியோ, திருடியோ கலகலப்பாய் இன்னிக்கு இன்றையோடு போச்சா? நாளையை காங்கள் எங்கே கண்டோம்? உங்களுக்கு நாளை இருந்தது.’

நான் பதில் பேசவில்லை. பேசுவதில்லை, பேச்சு நியாயம் எப்பவோ தாண்டியாச்சு.

கண்ணன் அந்த நாளிலேயே செல்லம், கொடுத்த சலுகைகளுடன், தானாக எடுத்துக் கொண்ட உரிமைகளும் இப்போ சேர்ந்துவிட்டன. அவன் தம்பி மெளனமாய் எனக்கு விழும் சாட்டையடியைப் பார்த்துக்கொண்டு கிற்கிறான். Boss இன் hatchet man.

நான் இன்னும் வெறுக்கவில்லை. ஆனால் இவர்கள் உலகத்தை வெறுத்தாச்சு.

கட்ட பயிர் அம்புகளாய்க் காய்க்கிறது. சரப்படுக்கை யில் படுத்து, உன் உத்தராயணத்துக்குக் காத்திரு.

“கிருஷ்ணா! அது எங்கே கிருஷ்ணா என்று கத்து கிறது? அருவருப்பான, அபஸ்வர அழுகையின் தேம்பல் போன்ற ஒரு சத்தம். ஆனால், அதைக் கேட்டதும் ஹரிணி பாதி பேசும் படத்தை மார்பில் கவிழ்த்துக் கொண்டு படுத்த வண்ணமே கன்னத்தில் போட்டுக் கொள்கிறாள். உண்மையிலேயே பக்தி சுபாவம் உள்ளவள்தான். அதுவும் இதுபோன்று கோகாமல் புண்ணியம் சம்பாதிப்பதில் பலே கெட்டிக்காரி.

காலைக்கும் மதியத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்!

இங்கேயே தெளித்தாற்போல் எட்ட எட்டத்தான் வீடுகள். மனைகளை வாங்கிப் போட்டவர்களுக்கு வீடு கட்ட இன்னும் வசதி கிட்டவில்லை. உச்சிவெய்யிலில் பூமி பாளம் பாளமாக வெடித்திருக்கிறது. தாரதுாரக் கட்டடங் கள் கானலில் நடுங்குகின்றன. இது வரை இரண்டு தடவை கிணற்றிலிருந்து மொண்டு மேலே கொட்டிக்கொண்டச்சு. கசய்ஞ்சாச்சு, ஆனால் உடல் வாணலியாய்ப் பொரிகிறது” இனிமேல் ஈரம்பட்டால் இந்த வயதுக்கு மார்பில் கொலுசு தான். ஒரு தினுசான மயக்கமா? மதிய உறக்கமா?

அந்தந்த நாளுக்கு அதன் போக்கை நடாத்த தேவதை உண்டோ? உண்டெனில் அவள்தான் இன்றுகாலை எனக்குத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டனளோ?

சூரியனிடமிருந்து லகானை வாங்கிக் கொண்டா? பிடுங் கிக் கொண்டா? ரதத்தை அவள்தான் கடத்துகிறாளோ? இவன் பொக்கை வாயை இளித்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருப்பான். ஒரு வேளை, இந்த வேளைக்கு ட்யூட்டி மாறி, தேவதையே வேறோ? நமக்குத்தான் காலடி யில் இடறும் கூழாங் கல்லெல்லாம் சாமியாச்சே! அதனால் தான் வெய்யில் இப்படிக் காய்கிறதோ? இல்லை. நான் தப்பாய் கினைக்கிறேன். காயத்தானே வெய்யிலே.

வாழையடியில் ஒரே அமளி, எட்டிப்பார்க்கிறேன்.

இரு கழுத்துகளும் ஒரு கழுத்தாய்ப் பின்னிக்கொண்டு ஈருடல் இருதலையில் ஒரு புதுப் பட்சியை உருவாக்கிக் கொண்டு இரு வான்கோழிகள் சண்டையில் உருள்கின்றன. கழுத்துகளை லேசில் விடுவித்துக் கொள்ள முடியவில்லை போலும் அந்த உருவிலேயே புரண்டு புரண்டு முள்வேலி யில் ஒரு சந்தின் வழி வெளியேறி, அப்பாடா! எப்படியோ ஒன்றினின்று ஒன்று விடுபட்டு உருவம் பிளந்து, தொப்பைப் பாட்டிகள் போல் லொங்கு லொங்கென்று ஓடுகின்றன.

பின்னால் ஒரு குடிசையில் ஒரு ஸாஹிபா வளர்க் கிறாள். ஆனால் அவற்றிற்கு வேட்டைக்காடு;இங்கேதான். மல்லிச் செடியை மிதித்துக் கொண்டு, கொத்தமல்லி விதை யைக் கொத்திக் கொண்டு, கறிவெப்பிலைக் கன்றை வேரோடு சாய்த்து-ஹரிணி வாய் விட்டு அழுதே விட்டாள் -கண்ட சேற்றை மிதித்துக்கொண்டு ஏமாந்தால் சமைய லறைவரை நீளும் கால்கள்.

Tommy தென்னங்கன்றடியில் அதுவே பறித்துக் கொண்ட குழியில் படுத்திருக்கிறது. வெய்யில் தாங்காது வயிறு கொல்லன் துருத்திபோல் குபுக் குபுக். என்றைக்கு ஒரு நாள் மண்டை கலங்கி வெடுக்கென்று பிடுங்கப் போகிறதோ? இப்போது அதற்குக் கோழிகளைத் துரத்தக் கூடத் தெம்பு இல்லை. எனக்குத் தெரிந்தவரை இது குரைக்கிற நாயுமல்ல, கடிக்கிற நாயுமில்லை. நாய்களில் ஊமை உண்டோ? அப்போ இதன் பிறவிப் பயன்தான் என்ன? ஒரு காரியமுமில்லாமல் கனகாரியமாக குடுகுடு வென்று ஓடுவதும்.ஒடுவதும்.ஒடுவதும்…அவ்வளவு தானா?

அலமாரியிலிருந்து கைக்குத் தட்டுப்பட்ட புத்தகத்தை இழுத்துப் புரட்டுகிறேன். மத்வாசாரியரின் சங்கர திக் விஜயம். வயதுக்கேற்ற புத்தகம்தான். ஆனால் இந்த வேளைக்கு மண்டையில் ஏறுமா? ஏதாவது ஜேம்ஸ் பாண்ட் வரும் என்று நினைத்தது போக! தோல்வி காணாத பாண்ட். அடி, வெட்டு, குத்து, சுடு, 007 சட்ட பயமில்லாமல் யாரை வேனுமானாலும் கொல்லலாம். சூப்பர் மேன் பாண்ட்.

மண்டை இடிக்கிறது, பெருமாள் எப்பவோ வந்து தயாராக வைத்திருந்த ஏனத்தில் பாலை ஊற்றி விட்டுப் போய் விட்டான். ஹரிணி தயவு பண்ணனும். ஆனால் அவள் அயர்ந்து துரங்குகிறாள்!

பிற்பகல் வாடைக் காற்று கிளம்பி விட்டது. வாச லுக்கு வெளியே புல் தரையில் சாய்வு நாற்காலியைக் கொணர்ந்து போட்டுக் கொள்கிறேன். வானத்துக்கும் வெய்யிலுக்கும் காற்றின் மத்யஸ்தம் நடந்து கொண்டிருக் கிறது. வெறிச்சிட்டுக் கிடந்த வான வீதியில் போக்கு வரத்து தொடங்கி விட்டது. மேகங்களின் பவனி. பட்சி ஜாலங்களின் விதவிதமான வரிசைக் கட்டுக்கள். ஆட்டத் தில் கையிலிருந்து துள்ளிக் கம்பளத்தில் விழும் சீட்டில் காண்பது போல, டட்சிக் கூட்டங்கள் மேகத்தின் பின்னணி யில் விதவிதமான பொட்டுகள் வைக்கின்றன. மேற்கு, மணக்கோலம் பூணுகிறது. பெண்ணுக்கு எந்தப் புடவை யும் பிடிக்கவில்லை. அவிழ்த்துப் போட்ட புடவைகள், வித விதமாய் போர் போராய்க் குவிகின்றன. ஐரிகைகள், கலர் கள், மோஸ்தர்கள் மிளிர்கின்றன்.

வானத்தின் கவானில் லேசாய் ஒரு தேமல் படர்ந்திருக் கிறது.

கிணற்றடியிலிருந்து, வாய் குழறியபடி எங்கேயோ சுட்டிக் காட்டிக்கொண்டு ஹரிணி ஓடி வருகிறாள். பதறிப் போய்ப் பார்க்கிறேன். தோய்க்கிற கல்லின்கீழ் விட்டிருக் கும் சந்தில் பாம்பு சட்டை.

ஹரிணி குதிக்கிறாள், துள்ளுகிறாள், துடிக்கிறாள், முற்றுப்புள்ளியில்லாமல் கத்துகிறாள். அத்வானம் பிடிச்ச இந்த இடத்தில் வீட்டை வாங்கிப் போட்டுட்டு, ஒரு காளைப் பார்த்தாப்போல் நான் வயத்தில் நெருப்பைக் கட்டிண்டு. ஐயையோ என்னால் இனிமேல் முடியாது. உங்கள் வீட்டை நீங்கள் காவல் காத்துண்டு கிடங்கோ. எங்களை எங்காணும் மயிலாப்பூரில் குடி வெச்சுடுங்கோ’மூச்சு விடாமல் வார்த்தைகளின் கோவை கூட சரியாகப் புரியாமல் இன்னும் ஏதேதோ குளறுபடி.

“ஆமாம் அதென்ன மயிலாப்பூர் கணக்கு: மாம்பலம்: சைதாப்பேட்டை, வடபழனி, சாலிக்ராமம், கங்க. நல்லூர் வேளச்சேரி-பேர்களுக்கா குறைச்சல் இடம்தான் ஊசி முனைக்குக்கூட வழியில்லை.

“நான்தான் லப லப லபன்னு அடிச்சுக்கிறேன். ஆனால் அழுத்தமா உங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு பதில் தானே! மெளனம் ஸர்வார்த்த ஸாதகம்-“

தைரியத்துக்கு அவள் முதுகில் ஒரு வுெ.ாட்டு கொடுக் கிறேன். அவளுக்கு முகக்கடுப்பு இதற்குமேல் சாத்தியமா? என் கையை உதறுகிறாள்.

“‘காடு வாவா என்கிறது. என்ன வேண்டிக் கிடக்கு?’ ஹரிணிக்கு என்றைக்குமே ஒரு வழிப் பாதைதான். வீட்டுக்கு வந்த புதிதில், அந்த முகக்கடுப்பே அவளுக்கு ஒரு களை கொடுத்தது. அவள் வீட்டில் ஆறு அண்ணன் தம்பி களுக்கிடையில் அவள் ஒரே பெண். உடன் பிறந்தான்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அந்தச் செல்லம் அவளுகுக் இன்னமும் செல்கிறது. அந்தக் கோபத்தின் அமுகே என் நெஞ்சை எத்தனை முறை அள்ளியிருக்கிறது! ஆனால் இப்பவோ —

தோளை வியர்த்தத்தில் தூக்குவதைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை. வெய்யிலடித்தால், மழை பெய்தால், பாம்பு சட்டையுரித்தால், அசல் வீட்டுக் கோழி இங்கு மேய்ந்தால், Tommy-க்கு என்றேனும் பைத்தியம் பிடித்தால் சைக்கிளைப் போட்டுக் கொண்டு கறிவேப் பிலைக் கொத்துக்குக் காய்கறிக் கடைக்குப் போனால், அங்கு கடைக்காரன் கைவிரித்தால், வழியில் சைக்கிள் பங்க்ச்சர் ஆனால், வேலைக்காரி ஒரு வேளைக்கு வரா விட்டால், சினிமாவுக்குக் கிளம்பிப் போய்ச் சேருவதற்கு முன் படம் ஆரம்பித்து விட்டால், தையல்மெஷின் ரிப்பேர் ஆனால், திடீரென்று மின்சாரம் தோற்று விட்டால், எல்லாம் என் குற்றம்தான். அத்வானம் பிடித்த’பல்லவிக்கு ஈதெல்லாம், இன்னும் சொல்ல விட்டுப்போன தெல்லாம் சரணங்கள் தாம்.

“மொட்டைமாடியில் காத்து வாங்கலாம்னா படிகிடை யாது. என்ன வீடுகட்டி வாழறோமோ?’’

மாடிப்படி கட்டுவதற்குள், பணம் போண்டி. அப்படி யும் விடவில்லை. ஏணி வைத்து ஏறுகிறோம்.

“பிராமணன் bar விளையாடற வயசைப்பார்!’ ஹரிணிக்கு ஏணியில் ஏறமுடியாத எரிச்சல். என்றுமே அவளுக்கு எல்லாரைக் காட்டிலும் உசிர் வெல்லம். உடம்பு வேறே தடித்து விட்டது.

ஆனால் அவள் பயங்களை மறுப்பதற்கில்லை. இங்கு இயற்கை, தன் ஆட்சியை பட்டண வாசத்தின் தடங்க லின்றிச் செலுத்துகிறது. வீட்டைச் சுற்றி முள்வேலி. பூமி யில் வளைகள், எதிலிருந்து எது வேண்டுமானாலும் வரலாம். என்னைக் கேட்டால்? பூமியென்றிருந்தால், வளை கள், குழிகள், வெடிப்புகள், ஏன் இங்கிருந்து மயிலாப்பூரில் அப்பர் சாமி கோவில் தெரு, பழைய கெ. 30, அடுக்குள் தொட்டி முற்றத்தில் ஐலதாரைவரை சுரங்கமே ஒட வழி யுண்டு. நான் என்ன செய்ய?

பாட்டி ஆசையாகப் பேரக்குழந்தைகளுக்கு, வடாம், வற்றல் வறுத்து பொட்டலங் கட்டி அங்கு போட்டால், அந்தப் பக்கம் மேடாயிருந்தால், அந்த மேடு ஒரே சீராய் இந்தப் பக்கம் தாழ இறங்கினால்-எந்த மூஞ்சூரைக் கேட் பேன்? உஷ், வேண்டாம். தமாஷாக்கு அங்கும் லாயக் கில்லை. இங்கும் லாயக்கில்லை! சிரிக்கத் தெரிந்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்?

சென்ற மூன்று வருடங்களாக சென்னைக்கும் லண்டன் வெதர் வந்து விட்டது, திடீர் கோபம் திடீர் அழுகை, திடீர் மூக்கைச் சிந்திப் போடு, உடனே சிரி எல்லாம் நம் மாதிரிதான்.

நெற்றி கொப்புளிக்கிறது. இந்த திடீர் மூட்டம் எப்படி வந்தது? புழுக்கம் எனக்கு மூச்சுத் திணறுகிறது. காற்றின் ஒட்டத்தை ஆகாயப் போலீஸ்காரன் ஹோல்ட் ஆன்’ பண்ணிவிட்டு என்ன கேஸ் எழுதுகிறான்?.

தரையிலிருந்த குப்பை எல்லாம் வாரி, முகத்தில் துரவிக்கொண்டு ஒரு பெருமூச்சுக் கிளம்பி, சுழல் காற்றாக மாறுகிறது. ரஸகுண்டு போல் நீர் கோர்த்துக் கொண்ட மேகங்கள் ஒன்றுடன் ஒன்று இடித்துச் சீர்குலைகின்றன. ஒன்றிரண்டு பாஷ்பங்கள் கூட மேலே உதிர்கின்றன. வானம் ஒரேயடியாய் இருள்கின்றது, இதோ ஆகாச கங்கை அவிழப் போகிறாள். ஈஸ்விச்சேரை மடக்கிட் வேண்டியது தானா?.

இல்லை. ஆர்ப்பாட்டத்துடன் சரி. எண்ணெய் கடைச் செட்டியார் சத்தம் போடாத சிரிப்பில் முகம், தோள், தொந்தியெல்லாம் பிசைந்த மாவாய்க் குலுங்குவது போல், தனக்கே உரிய ரகசிய சிரிப்பில் மூட்டம் கலைந்து விட்டது. வானத்தில் இங்குமங்குமாய்ப் பிசுபிசு பஞ்சு மிட்டாய்ப் படர்ச்சிகள். புலு புலு ரோஜா மொக்குகள். கசங்கிய மாலியங்கள் சிதறிக் கிடக்கின்றன. இருளை இதமாய், நல்ல வார்த்தை சொல்லி ஒதுக்கிவிட்டு மலர்ந்த மினுமினு வெளிச்சம், இடத்துக்கே தண்ணொளியை வர்ணமாய்த் தீட்டுகிறது. ஏதோ ஒரு abstract ஒவியம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

பகல் கனிந்து பழம் போல் கழுவி இருளின் திறந்த வாய்க்குள் விழப்போகும் ஒரு தினுசான அச்சம்தரும் இசை கேடான முகூர்த்தம். கயிறு மேல், கழைக் கூத்தாடியின் கர்ணத் தருணம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சமயங்கள் ஒருங்குகின்றன. சாமக்ரியைகள் சேர்கின்றன, காத்திருந்த ஒரையும் வருகின்றது, நேர்கிறது, கடக்கிறது. கழிகிறது. இருளும் ஒளியும் கலந்த வேளை, ஆனால், இதோ இரவு தோன்றி விட்டேன் எனும் அந்தக் கலவை நேர்ந்த அந்த அசல் சமயம், அந்த ரஸாயனம், கம் இத்தனை காவலையும் நழுவி விடும் ஜாலம் என்ன?.

ஆனால், இதெல்லாம் என்ன அசட்டு யோசனை? யாருக்கு என்ன பயன் எனச் செவிட்டில் அறைந்து விளக்குவதுபோல் புறப்பாடுகள் ஆரம்பமாகிவிட்டன.

கண்ணன் Bond box உடன் நிற்கிறான். எப்போ கையில் பெட்டியைத் தூக்கி விட்டானோ இரவு வீடு திரும்பப் போவதில்லை என்று அர்த்தம். பாட்டி வீடோ, மாம்பலத்தில் ரவியோ மூன்றாம் காட்சி பார்த்து விட்டு மிச்சம் போதுக்குத் தலைக்கு அணை, பெட்டியை வைத்துக் கொண்டு ப்ளாட் பாரத்தில் தூங்கினால்-எனக்கென்ன?.

அவர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். தங்களுடைய சந்தோஷம் தங்களுக்குச் செலுத்திக் கொள்ளும் முதல் கடமை, மிச்சமெல்லாம் துச்சம் எனப்பாவிக்கும் அவர்கள் தத்துவத்தில் ‘எங்கே போகிறாய்? எப்போ வருவாய்?” எனும் கேள்வியே அவர்களுடைய அல்வாத் துண்டில் மயிர் சிக்கினாற் போல். எனக்கும் வயிற்றைக் குமட்டுகிறது.

கண்ணன் என் எதிரே நின்று கொண்டிருக்கை யிலேயே, சேகர் அவனைத் தாண்டி அவசரமாகப் போகி றான். Boss அவனுக்கும் சேர்த்துச் சொல்லி விட்டதாக அதனுடைய அர்த்தம். ஆகையால் அவன் தனியாகச் செலவு பெற்றுக் கொள்ளத் தேவையில்லை.

இப்போ எனக்கு கினைவு வருகிறது. எல்லாம் ஏற் கெனவே நினைப்பிலிருப்பவைதான். படங்கள் திடுக் கென்று எகிறுகின்றன.

இப்போ தான் மூன்று வருடங்களுக்கு முன் என் தாய் காலமானாள்.

நான் வழக்கமாய் வீடு திரும்பும் வேளைக்குச் சற்று நேரம் தப்பி வந்தாலும் வாசற்படியில் வந்து உட்கார்ந்து விடுவாள்.

“என்னம்மா இங்கே உட்கார்ந்திருக்கே?”.

“ஒன்றுமில்லை. உள்ளே புழுக்கமாயிருந்தது. ஏதோ காத்து சில்லுனு வரதேன்னு…”

நானும் பக்கத்தில் அமர்கிறேன். பாஷையே பரிபாஷை. உண்மைக் காரணம் எங்களுக்குத் தெரியும்.ஆனால் வெளிப் படுத்திக் கொள்ளமாட்டோம், உள்ளேயிருந்து குரல்கள் வேணுமென்றே எங்களுக்குக் கேட்கும்படிக் கிசுகிசுக் கின்றன.

“அம்மாவும் பிள்ளையும் பேசிக்கறா பார்த்தையா?”

நாங்கள் எங்கே பேசிக்கிறோம்? எங்களைப் பிணைக் கும் மெளனச் சரடே எங்கள் பேச்சென்றால் நாங்கள் நிறையப் பேசுகிறோம்.

‘அம்மாவும் பிள்ளையும் என்கிறார்கள். ஆனால் அவர்கள் பொருள்படுத்துவது வேறு, பல்லைக்கடித்துக் கொண்டு கிழங்கள்! அசடுகள்!”

அட, இங்கே இன்னொரு செட் கிளம்புகிறதே!

சாந்தா, தோள்பட்டையில் மேலாக்கு மடிகளைச் சீண் டிய வண்ணம், “அப்பா, கட்டை தொட்டி நாடார் டி.வி. செட் புதுசா வாங்கியிருக்கார். எங்களை வரச்சொன்னார். போயிட்டு வரோம்.’

என் புருவங்கள் என்னையுமறியாமல் கேள்வியில் உயர்ந்திருக்க வேண்டும், ஏனெனில், காட்சி முடிந்து திரும்பப் பத்து, பத்திரை ஆகிவிடுமே! தனி வழி, பெண்டு கள், இரவு வேளை…

“அதெல்லாம் ஒண்னுமில்லை. -வெடுக்கென்கிறாள். இத்தனைக்கும் கான் வாய் திறக்கவில்லை. ஆனால் சாக்தா இந்த வருடம் 10+1. ஏற்கெனவே கிறைய மார்க்கு வாங்குவாள். ஆகையால் கான் வாய் திறக்கு மளவுக்கு அவள் மக்கு இல்லை. என் வாயை அடைக்கவும் அவளுக்குத் தெரியும். பக்கபலம் வேறு இருக்கிறதே!

“முன் நிலாத்தான். நியூஸ் வரைக்கும் இருக்க மாட்டோம். மெயின் முடிஞ்சவுடனே திரும்பிடறோம். அப்பா, நீங்கள் டி. வி. வாங்கியிருந்தால், பிறத்தியார் வீட்டில் எங்களுக்கென்ன வேலை?”

ஹரிணி, கொண்டையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே “மோருஞ் சாதம் கரைச்சு, பழையது மூலையில் வெச்சிருக்கேன். வீடு ஜாக்கிரதை”.

இப்போ வீட்டில் நான் மட்டும்தான். அரணை ஒன்று என் காலில் உராய்ந்து விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறது. ஒன்று திடீரெனப் புலனாகிறது. மனிதனைத் தவிர மற்றெந்தப் பிராணியும் எப்பவும் ஏதோ ஒரு ஜோலியில் ஈடுபட்டுத்தானிருக்கிறது. பொழுது போகவில்லையே ன்னும் நிலை அதற்கில்லை, காலப்ரமாணத்தில் மிகச் சிறிய அளவைக்கூட அதன் முழுமைக்கு வாழ்வதனால், அதற்குப் பொழுது போதவில்லை. மனிதன் தான், மோவாயைக் கைக் கிண்ணத்தில் ஏந்திக் கொண்டு, காலைக் கால் மேல் மடித் துப் போட்டுக் கொண்டு, அல்லது, ஒடுக்கிக்கொண்டு, Rodin அப்படியே ஒரு சிலை வடித்து, அதையே காயமான கியாயமாகச் சாதித்துக் கொண்டு… .

நான் இப்போது உணர்வது என் தனிமையையா வெறுமையையா!

வானத்துத் தேமல் சிலவாகப்பூத்து விட்டது. ஆனால் என் கண்ணில் சதையால், பார்வையின் சிதைவில், எட்டாய் விண்டு தெரிகிறது. பூசணிபத்தைகள்.

முள்வேலியில் காட்டாமணிச் செடி, இடையிடையே பூவரசு, நுணா, ஒதிகை மரங்கள் நெருக்கமாக இலை பின்னிக் கொண்டு, நான் ஒரு குஞ்சுபோல், ராrஸ்க் கூட்டில் காத்திருக்கிறேன். எதற்கு?

கொஞ்ச நேரம் மொட்டைமாடியில் காற்று வாங்குவோமா!

ஏன் கனத்தடியில் ஏணி படிக்குப்படி முனகுகிறது.

மாடியில் உடம்பை கீட்டுகிறேன். ஆ! இஸ் திஸ் பியூட்டிபுல்!

தோள்மேல் சுதந்திரமாய்ப் போட்ட கைப்போல், தண்டவாளம், எட்ட, தொடுவானை அனைத்து ஒடுகிறது.

திடீரென வானத்தில் பூக்கள் மண்டிக் கிடக்கின்றன. மொட்டுக்கள், மலர்கள், பிய்ந்த இதழ்கள், மூச்சுவிடும் விண்மீன்கள், சின்னதும் பெரிதுமாய்ச் சீனாக்கற்கண்டு கட்டிகள், வைரச்சிதறல்கள், உறைந்துபோன கண்ணிர்த் துளிகள்-இதய உதிரிகள் – இவற்றிலிருந்து இழுத்த ஜிகினாச்சரடுகளில் ஏதேதோ நினைவுகள், தோற்றங்கள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கோவிலில் விதவிதமான காய் கறிகளைக் கட்டித் தொங்கவிட்டு ஒரு உற்சவமாமே! அது மாதிரி-

-என் பையல் பருவத்தில், நான் வளர்த்த ஒரு குச்சுகாயின் சடைமறைத்த முகம்;

-இளம் வயதில் மரித்த என் தம்பி;

-ரீதி கெளளையின் ஒரு சொகுஸ வளைவு:

-ஹரிணி கொடியாயிருந்த நாளில் அவள் கூந்தலி லிருந்து பிய்த்தெறிந்த தாழம்பூ மடல்,

-இரவுவேளை கடலோரம் அலைகள் மோதி மீள்கையில் விட்டுச் செல்லும் துறைத் துளிகள். பொரியும் முத்துக் கொதிகள்:

-டெலிபோன் மணியோசை;

-தச்சன் இழைப்புளியிலிருந்து கூடம்பூரா சிதறும் மரச் சுருள்கள்;

-குப்பையில் மாணிக்கக் கற்கள்;

-கண்ணிரும் கம்பலையுமாக அம்மாவின் முகம்; (என்?)

-கன்யாகுமரியின் மூக்குத்தி

இன்னும் ஏதேதோ சொல்லுக்குள் அடங்கினவை, அடங்காதவை. திடீரென இதுவரை எப்படியும் தோன் றாத எண்ணம் ஒன்று அதன் பெருமிதத்தில் தானே உடல் விம்முவதாகத் தோன்றுகிறது. இந்த மொட்டை மாடியின் அடைப்பில் அடங்கிய வானவரைக்குள் அடங்கிய இத்தனை சொத்துக்களும் என்னுடையதுதானே?

சரி, என்ன செய்யப் போகிறாய்! அத்தனை கட்சத் திரங்களையும் வாரிக் கூடையில் அள்ளிப் போட்டுக் கொண்டு, பீச்சில் சுண்டல் விற்கப் போகிறாயா அல்லது நட்சத்திரப் பூக்கள் தொடுக்கப் போகிறாயா!

இந்த எண்ணத்தின் மிதப்பே அரை மயக்கம். கால் துரக்கம். கால் நினைவில் எல்லாம் ஒன்றி குழம்பி விழித்துக் கொண்டிருந்தேனா, மயங்கிக் கிடந்தேனா, தூங்கியே போய் விட்டேனோ ?- திடீரென Brindavan Express இன் அறை கூவலில்தான் நினைவின் இயக்கம், தடுத்த நீர்வீழ்ச்சி போல் தடதடவென என்மேல் இறங்கிற்று.

புகைப் போக்கியின் வழி சமையலறையில் ஏதோ பண்டம் உருளும் சப்தம்.

இரண்டு நாட்களாக ஒரு மஞ்சள் பூனையின் நடமாட்டம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.

ஏணிப்படியில் கால் வைத்ததும்ஏணிதான் தரையில் சரியாகப் பதிந்ததில்லையோ, ஏற்கெனவே கைந்து, கட்டு முறிந்ததோ

இசைகேடாய், தூக்கக் கலக்கத்தில் கான்தான் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விட்டேனோ? –

ஏணி சிலை பிசகி, ஏணியோடு, சேகர் வெட்டிச் சுவரோரமாய்ப் பரப்பி வைத்திருக்கும் முள்படுக்கையில் சுமார் இருபது அடி உயரத்திலிருந்து-

முட்கள் வாழைப்பழத்தில் ஏறுவதுபோல் முதுகில், பின் மண்டையில், சப்பையில் நுழைகையில் என்னையறி யாமல் வீறலில் வாய் திறந்தது. ஆனால் சத்தம்வரவில்லை, ஒருக்களிக்க முயன்றேன். முடியவில்லை. இடது பக்கம் மறுத்துவிட்டது l Ohmy God வாய் பொத்திய ரிசப்தம். பயத்தில் இலை கூட அசையவில்லை. எனக்கு என்ன நேர்ந்து விட்டது. No No. No.

பல்லிவாயில் தும்பிபோல், வார்த்தைகள், அலறல்கள் தொண்டைக்குள் இறக்கையடித்துக் கொண்டன.

இனி என்ன?

சாந்தியும் ஹரிணியும் வரும்வரை இங்கேதானா?

வந்தாலும் அவர்கள் என்னை அவர்களிடையே துரக்கிக் கொண்டு போய் உள்ளே சேர்க்க முடியுமா?

முடியாவிட்டால், இரவு பூரா இங்கேயே இப்படித் தானா?

Tommy எங்கிருந்தோ ஓடிவந்து என் முகத்தை ஓரிரு தடவை முகர்ந்து பார்த்து பிறகு தலைமாட்டில் உட் கார்ந்து, மூக்கை வானத்துக்கு நீட்டி ஒரு நீண்ட ஊளை-

இதுவேதான் என் உத்தராயணமா?

தூரத்தில் சிரிப்பு கேட்கிறது.

– புற்று சிறுகதைகள் – ஐந்திணைப் பதிப்பகம் – மார்ச் 1989

Print Friendly, PDF & Email

1 thought on “உத்தராயணம்

  1. பல்லிவாயில் தும்பிபோல், வார்த்தைகள், அலறல்கள் தொண்டைக்குள் இறக்கையடித்துக் கொண்டன….

    லா.சா.ராவுக்கு மட்டும் உவமைகள் எங்கிருந்து கொட்டுகின்றது.??? மூப்பின் தனிமை.வெறுமை..கதையல்ல..காவியம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *