உடைந்த கண்ணாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 2,741 
 

(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“காந்தி!”

குளுகுளு என்று பசுமை கவிந்திருந்த மாந்தோப்பில், மாமரங்களுக்கிடையே வளைந்து நெளிந்து அழுத்தமாகப் பதிந்து கிடந்த ஒற்றையடித் தடத்தில் அவசரமற்று நடந்து கொண்டிருந்த யுவதியைக் குலுக்கியது அந்த அழைப்பு.

தனது நினைப்பும் தானுமாய் மெது நடை நடந்த அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். முன்னாலும் பின்னாலும் சுற்றுப்புறத்திலும் அவளது மருண்ட பார்வை புரண்டு சுழன்றது.

விடிவின் வெளிச்சம் இருள் அணையை உடைத்துக் கொண்டு வேகமாகப் பாய்ந்து பரவும் வேளை. புத்துணர்வும் புதிய எழிலும் இளமையும் குளிர்ச்சியும் எங்கும் வியாபித்து நின்ற உதய காலம். இரவு போய்விட்ட மகிழ்ச்சியினாலோ, ஒளி எங்கும் பரவி வருவதை உணர்ந்த அதிசயத்தினாலோ, பறவைக் கூட்டங்கள் ஒரேயடியாகக் கூச்சலிட்டு ஆரவாரித்தன. எங்கோ மறைந்திருந்த குயில் ஓங்கிக் கூவி, தனது உவகையை அறிவித்துக் கொண்டிருந்தது.

காந்திமதி வழக்கம்போல், விடிந்தும் விடியா வெள்ளிய இளம் பொழுதில் ஆற்றை நோக்கி வந்தாள். இனிமேல் தான் ஒருவர் இருவராக, பெண்கள் வருவார்கள். மழையோ, பனியோ, குளிரோ, கோடையோ – கவலையேயில்லாமல் தினசரி தவறாது அதிகாலையில் ஆற்றில் நீராடுவதை வாழ்க்கை நியதியாக வகுத்துக் கொண்டிருந்த இரண்டு மூன்று ஆண்கள், பெரியவர்கள், இயந்திர ரீதியில் தங்கள் தொழிலை முடித்துக் கொண்டு திரும்பி விட்டார்கள். காலை ஏழு மணிக்குமேல்தான் ஆற்றங்கரையில் ஜனநடமாட்டம் அதிகரிக்கும்.

அந்த ஊர்க்காரர்கள் ஆற்றில் நீராடுவதற்கு அவசரப்பட வேண்டிய அவசியமே இல்லைதான். ஆற்றங்கரையை ஒட்டி அமையும் பாக்கியம் பெற்ற ஒரு சில ஊர்களில் அதுவும் ஒன்று. அழகான இடமும் கூட. நதியை ஒட்டிய கரை புல் தரிசாக அகன்று செழிப்பான மாந்தோப்புக்களாக மாறி, ஊரின் கடைசித் தெருவோடு கலக்கும். அங்கேயே கடைத்தெருவும், வீட்டு வரிசைகளும் ஆரம்பமாகி விடுகின்றன. அந்த ஊர்க்காரர்களுக்கு ஆற்றங் கரையே பொழுதுபோக்கும் இடமாகும். ஊர் இளைஞர்களுக்கும் சிறு பையன்களுக்கும் ஆற்றின் மணல் பரப்பே விளையாட்டு மைதானம்; இதெல்லாம் சாயங்கால நேரத்தில்.

வைகறையின் போது ஆற்றங்கரை அமைதியின் கொலு மண்டபமாகத்தான் திகழும். அந்த நேரம்தான் காந்திமதி போன்ற யுவதிகளுக்கு அமைதியாய் நீராடிவிட்டு, குடத்தில் தண்ணிர் எடுத்துக்கொண்டு, வேகமாய் வீடு திரும்புவதற்கு ஏற்ற நேரம். அவள் தனியாகவோ, அல்லது அடுத்த வீட்டுப் பெண்ணு டனோ வந்து போவாள்.

இன்று தனியாக வந்தவள், கூப்பிடும் குரல் கேட்டு, தோழி லசுஷ்மிதான் வருகிறாளோ என்று தயங்கினாள். ஒரு கணம்தான். அந்த அழைப்பு தன் தோழியின் குரலில் தொனிக்கவில்லை; எனினும் நினைவுப்புலனில் ரீங்காரம் செய்த ஒரு பழகிய குரலாகவும் ஒலித்ததே என்ற திகைப்புடன், அவள் முன்னே அடி பெயர்த்து நகர்ந்தாள்.

“என்ன காந்தி, பயந்துட்டியா, ஹெஹஹ” தெறித்த சிரிப்பும், மகிழ்வால் முழுதலர்ந்த முகமுமாய் வந்து நின்ற இளைஞனைப் பார்த்ததும், அவள் முகம் அந்நேரத்திய இயற்கைபோல் எழில் பெற்றது. கீழ்த்திசை வானத்தில் பூத்துக் கிடந்த இளஞ்சிவப்பு அவள் கன்னங்களிலும் படர்ந்தது. அடிவான விளிம்பிலே ரேகையிட்ட சுடரொளி அவளது விழிகளிலும் பிரகாசித்தது. “அத்தான்!” என்ற ஒற்றைச் சொல்தான் உதிர்ந்தது அவளிடமிருந்து. உணர்ச்சிக் குழப்பம் அவளை ஊமையாக்கி விட்டது.

”நீ இந்நேரத்துக்கு இங்கு வருவாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் ஐந்து மணிக்கே எழுந்து இங்கே வந்தேன்.” சந்திரனின் உள்ளத்தில் ஆனந்தம் ஊற்றெடுத்துக் குபுகுபுத்தது. அது அவன் பேச்சிலே தெறித்தது; முகத்தின் மலர்ச்சியில் புரண்டது; கண் வீச்சில் மின்னி மிதந்தது.

“சுகம்தானா? எப்ப வந்தீர்கள்?” சம்பிரதாய விசாரணை மென்குரலாக உருவெடுத்தது. அவள் பேச்சும் நின்ற நிலையும், உயர்வதும் தாழ்வதுமாக ஊசலிட்ட பார்வையும் அவனுக்கு மகிழ்வளிக்கத் தவறவில்லை.

“நேற்று ராத்திரிதான் வந்தேன். நான் வருவதற்கு நேரமாகி விட்டதால், மாமா அத்தை எல்லோரையும் பார்க்க வரவில்லை. பிறகு வீட்டுக்கு வருகிறேன்” என்று அவன் அறிவித்தான்.

பண்பும் சமூகப் பழக்க வழக்கங்களும் அவளை உந்தித் தள்ள, “ஊம்! அவசியம் வாங்க. இப்ப நேரமாயிட்டுது. நான் குளிச்சு முழுகி, குடம் விளக்கி, தண்ணீர் எடுத்துக்கிட்டுப் போகணும்” என்று கூறியவாறே வேக நடை நடந்தாள். ஆயினும் அவள் மனம் அவன் பக்கமே சஞ்சரித்தது. அதை அடிக்கடி அவள் திரும்பிப் பார்த்தவாறு நடந்த செயலே உணர்த்தியது.

“காந்தி என்னமாய் – எவ்வளவு அழகாக வளர்ந்து விட்டாள்” என்று வியந்தவனாய் சந்திரனும் ஆறு நோக்கி நடந்தான். “வளராமல் எப்படி இருக்க முடியும்? பருவமல்லவா? இப்போது அவளுக்குப் பதினேழு வயசு இருக்குமே?” என்று மனம் பெரியதனம் பண்ணியது.

காந்திமதியும் அவன் அழகையும், தன் உள்ளத்தை ஈர்க்கும் உடல் வளர்ச்சியையும் பற்றித்தான் எண்ணியிருக்க வேண்டும். அவனோடு நடந்து, அர்த்தம் உள்ளனவும் அர்த்தமற்றனவு மாய், அவசியத்தோடும் அவசியம் இல்லாமலும் பலப் பல பேசி, பதில் பெற்றுக் காதினிக்க, மனம் இனிக்க, மகிழ்வுற வேண்டும் என்ற ஆசை அவளுக்கு மட்டும் இல்லாமலா போயிற்று? நிறையவே இருந்தது. ஆனால் அவ்விதம் செயல் புரியத் துணிந்தாலோ – பார்க்கிறவர்கள் என்னதான் நினைக்க மாட்டார்கள்? ஊர்க்காரர்கள் எவ்வளவோ பேசுவார்களே? அதற்கெல்லாம் இடம் கொடுக்கலாமா? அஞ்ச வேண்டுவன வற்றை அஞ்சுவதுதானே அறிவுடைமை?

அவள் பண்பு அதை அவளுக்கு உணர்த்தியது. அவனு டைய அறிவு அதையே அவனுக்கு எடுத்துக் கூறியது. ஆகவே, அவள்பாட்டுக்கு அவள் வேலையைச் செய்தாள். அவன் தனது அலுவல்களைக் கவனித்தான். ஆனாலும் மனசுக்கு விலங்கு பூட்ட முடியுமா? கண்ணோட்டத்துக்குக் கடுங்காவல் தண்டனை விதிப்பதும் சாத்தியமில்லையே!

சின்ன வயதில் – மூன்று நான்கு வருஷங்களுக்கு முன்புகூட காந்தி இப்படியா இருந்தாள்? வாய் கொடுத்து வாயடி வாங்குவதில் களிப்பு காணும் சுபாவம் உடையவளாக இருந்தாளே? ஒரு சமயம். அதன் நினைவு இனித்தது அவன் உள்ளத்தில், அது தந்த மணத்தை ருசித்தவனாய், அவள் அதை எப்படி ரசிக்கிறாள் என்று அறியும் ஆவல் கொண்டவனாய், சந்திரன் அவள் பக்கம் பார்வையை எறிந்தான்.

காந்திமதி குடத்தைப் பளபள வென்று மின்னும்படி தேய்த்துக் கழுவி மணல் மீது வைத்து விட்டு, நீரில் இறங்கியிருந்தாள். அப்போது அதிர்ஷ்டவசமாக ஆற்றில் வேறு எவருமே இல்லை. அதனால் சந்திரனின் விளையாட்டுக் குணம் தலையெடுத்தது. அவளோடு குறும்பு செய்தும் கேலி பேசியும் மகிழ்வதற்குரிய உரிமையை அவர்களுடைய உறவுமுறை கொடுத்திருந்தது. சந்திரன் மெதுவாகக் குடத்தை ஆற்றில் மிதக்க விட்டான்.

காந்தி நீந்திச் சென்று குடத்தை எடுத்து வந்தாள். அவன்மீது அவளுக்குக் கோபம் வந்தது. ஆனால் அதில் மகிழ்ச்சி அவளுக்கு இல்லாமலுமில்லை. “போங்க அத்தான்! ஆற்றில் வைத்து இப்படியா விளையாடுவது! யாராவது பார்த்தால்?” என்று சிணுங்கினாள்.

“உன்னோடு தாராளமாய்ப் பேசலாம் என்றுதானே நான் ஆற்றங்கரைக்கு வந்தேன்! நீ என்னடான்னா ரொம்பவும் வெட்கப்படுகிறாயே!” என்றான் அவன்.

“இப்பவும் நாம் சிறுபிள்ளைகளா!” என்று அவள் முனகினாள்.

“விளையாட்டுப் பிள்ளைகள்” என்று கூறிச் சந்திரன் அவள்மீது நீரை வாரி இறைத்தான்.

“ஐயோ, சும்மா இருங்களேன். ஆட்கள் வருகிற நேரமாச்சு” என்று அழும் குரலில் முணுமுணுத்தான் அவள்.

“தண்ணிருக்குள்ளே ஒடிப்பிடித்து விளையாடலாமா என்று கேட்க வந்தேன். முந்தி நீயும் உன் தோழிகளும் கண்ணாமூச்சி ஆடினிர்களே, அப்போ நீ…”

அவள் தன் குழப்பத்தை மறைப்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தாள். சிரித்துக் கொண்டே கரை ஏறினாள். அவள் அதை எப்படி மறக்க முடியும்? அதைப் பற்றி அவள் பேசத் தயார் தான். ஆனால், கரையில் சிலபேர்கள் வந்து கொண்டிருந்தார்களே!

அவர்களைக் கண்டதுமே சந்திரன் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து விட்டான். இல்லாவிடில், “இப்பவும் அதுபோல் நேர்ந்து உன் முகம் எப்படி மாறும் என்பதைப் பார்க்க வேணும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது, காந்தி!” எனச் சொல்லியிருப்பான்.

மூன்று வருஷங்களுக்கு முன்பு நடந்த அவ்வேடிக்கை நித்தியப் பசுமையோடு அவன் நினைவில் நின்றது. அப் பொழுது காந்திமதிக்குப் பதினான்கு வயசு ஆரம்பித்திருந்தது. அவளும் அவளை ஒத்த வயசுப் பெண்களும் வீட்டு முற்றத்தில் “ஒடிப் பிடித்து” விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாலை நேரம். பெரியவர்கள் தலைகாட்டாத இடம். சந்திரனும் அவன் நண்பனும் எங்கோ திரிந்துவிட்டு வந்தார்கள். காந்திமதியின் கண்கள் துணியால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன. அவள் இரு கைகளையும் முன் நீட்டி, காற்றில் துழாவி யாராவது பிடியில் சிக்குவார்களா என்று தேடித் திரிந்து கொண்டிருந்தாள். தோழிகள் ஆளுக்கொரு இடத்தில் பதுங்கி நின்று குரல்கொடுத்தும் முன்னே வந்து அவள் கைவீச்சுக்கு எட்டாத தூரத்தில் நின்று குதித்துக் கேலி பேசி ஏய்ப்பு காட்டியும் களிப்புற்று ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கே கலகலப்புக்கும் கூச்சலுக்கும் குறைவில்லை.

“ஏ, சந்திரா காந்தி யாரையோ தேடுகிறாளே! உன்னைத் தானோ என்னமோ!” என்று நண்பன் கேலி பண்ணினான்.

சந்திரனின் இயல்பான குறும்புத்தனம் வாலாட்டவே, “சத்தம் போடாதே, நான் ஒரு வேடிக்கை பண்ணுகிறேன்” என்று சொல்லிவிட்டு முன்னால் நகர்ந்தான். “பேசாதீங்க, ஒன்றும் சொல்ல வேண்டாம்” என்று வாயை விரல்களால் பொத்தி ஜாடை காட்டித் தோழிகளை எச்சரித்து விட்டு, காந்தி யின் முன்னால் போய் நின்றான்.

அவனைக் கண்டதும் மற்றப் பெண்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். என்ன நடக்கிறது, பார்க்கலாமே என்ற துடிப்பு அவர்களுக்கும் இருந்தது.

சந்திரன் அப்படியும் இப்படியும் நகர்ந்து சிறிது “பாய்ச்சல் காட்டி” விட்டு நின்றான். முன் நீண்டு, அகப்படப் பிடிக்க வேண்டும் என்ற தவிப்போடு துழாவிய வளைக்கரங்கள் இரண்டும் அவனை நெருங்கின. “இதோ பிடித்தாச்சு!” என்று உற்சாகத்தோடு கூவியவாறே காந்தி அவன் கையைப் பற்றினாள்.

“ஒகோய்!” “காந்தி மாப்பிள்ளையைப் பிடித்து விட்டாள் டோய்!” “காந்தி அது யாருடீ” – இப்படிக் கூச்சலிட்டும், கனைத் தும் கத்தியும் தோழிகள் ஆரவாரித்தனர். “சரி, புடிச்சாச்சு! அப்புற மென்ன காந்தி” என்று கேட்டுக் கொண்டே அவள் கண்கட்டை அவிழ்த்து விட்டான் சந்திரன்.

காந்திமதியின் எலுமிச்சம்பழ நிற முகம் தக்காளிப் பழமாய்ச் சிவப்பேறி மினு மினுத்தது. அவள் கண்கள் பனித்தன. “போங்கம்மா, விளையாட்டிலே இப்படித்தான் பண்றதாக்கும்?” என்று சீற்றம் காட்டினாள் அவள்.

“நாங்க என்னடீ செய்தோம்? நீ எங்களில் யாரையும் பிடிக்காமல், உன் அத்தானை ஆசையோடு கைப்பிடித்துக் கொண்டால் அதுக்கு நாங்க என்ன பண்ணுவோம்?” என்று ஒரு வாயாடி கத்தினாள்.

“அதுதானே? விளையாட வந்து விட்டு இப்போ கோபிக்கிறதிலே அர்த்தமே கிடையாது!” என்றான் சந்திரன்.

“”நீ பெரிய அண்ணாவி, தீர்ப்பு கூற வந்துட்டே, உன் கிட்டே யாரும் கேட்கலே, போ!” என்று அவள் எரிந்து விழுந்தாள். “பெண்கள் விளையாடுகிற இடத்திலே வெட்க மில்லாமே குறுக்கே வந்து விழுந்துவிட்டு.”

“அதுக்கு இப்போ என்னம்மா செய்யனும்கிறே? என் கண்ணைக் கட்டி விடணும்னு சொல்றியா? கட்டி விடு. நீ என்னைப் பிடிச்சதுமாதிரி, நானும் பதிலுக்கு உன்னைப் பிடித்து…”

தோழிகள் “டோடோய்!” என்று கூச்சலிட்டுக் கைகொட்டிப் பலத்த ஆரவாரம் செய்தார்கள். காந்திமதி ஒடிப் போய் ஒளிந்து கொண்டாள். அதன்பிறகு அவள் அவன் முன் இரண்டு நாட்கள் தென்படவில்லை. இருந்தாலும், அவளுக்கு அவன்மீது கோபமில்லை என்பதை அவள் வாயினாலேயே அவன் பின்னர் அறிந்து கொண்டான்.

தனது ஆசை அத்தான் என்ன குறும்பு பண்ணினாலும், அவளுக்குக் கோபமும் வேதனையும் கண்ணிரும் பொங்கி எழும்படி குறும்புகள் செய்தாலும், காந்திமதி அன்போடு சகித்துக் கொள்ளுவாள். அது சந்திரனுக்கு நன்றாகத் தெரியும்.

காந்திமதி பன்னிரண்டு வயசுச் சிறுமியாக இருந்தபோது வீட்டுத் தோட்டத்திலிருந்த மாமரத்தின் தாழ்ந்த கிளையில் ஒற்றைக் கயிற்றை நீளமாகக் கட்டி ஊஞ்சல் அமைத்திருந்தாள். அதில் அமர்ந்தும், நின்றும் வேகமாக ஆடுவதில் அவளுக்கும் அவள் சிநேகிதிகளுக்கும் ஆர்வம் அதிகம் உண்டு. வீட்டு வேலைகளைச் செய்து முடித்த பிறகு, எந்நேரத்திலும் அவர்கள் தோட்டத்தில் தான் காணப்படுவார்கள். ஒரு நாள் தோழிகளின் வருகையை எதிர்நோக்கியபடி, காந்தி தனியாக ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாள். தற்செயலாக அங்கு வந்து சேர்ந்தான் சந்திரன். அவளையறியாமல் பின்புறம் சென்று, அவளைத் தள்ளினான். ஊஞ்சல் தணிந்து வரும்போது, அவள் முதுகில் கைவைத்து வேகமாக முன்தள்ளி விட்டான்.

ஊஞ்சலில் வேகம் அதிகரித்தது. காந்தியின் பயமும் வளர்ந்தது. திரும்பிப் பார்ப்பதற்குத் துணிவில்லை அவளுக்கு. கயிற்றைக் கைகளால் இறுகப் பற்றிக்கொண்டு, “யாரது? யாரு இப்படித் தள்ளுவது? மெதுவாகத் தள்ளுடி. நான் கீழே விழுந்து விடுவேன்” என்று கத்தினாள். சந்திரனோ மெளனமாகச் சிரித்துக் கொண்டே மேலும் பலமாகத் தள்ளினான். “ஐயோ!. பயமாக இருக்குதே. ஏ, குரங்கே! யாரு இப்படி ஆட்டுறது? அப்புறம் நான் நல்லா ஏசுவேன். ஏ சவத்து மூதி, ஆட்டாமல் தள்ளி நில்லுடி!” என்று கூச்சலிட்டாள்.

“அப்படியே செய்யறேண்டி! இதுதான் கடைசித் தடவைடீ!” என்று கூறி, வேகமாகத் தாழ்ந்து வந்த ஊஞ்சலைப் பிடித்து, அதிகமான பலத்தோடு முன்னுக்குத் தள்ளி விட்டான். “ஐயோ, அம்மா, அம்மா”” என்று அலறிய காந்தியின் குரலில் பயம் வீறிட்டது. அவள் கைப்பிடி தளர்ந்தது. அவளே குப்புற விழுந்தாள் தரைமீது.
அப்பொழுது தான் தனது செயலின் கொடுமை அவனுக்கு உறைத்தது. பயமும் குழப்பமும் நெஞ்சை அழுத்த, அவன் அவளருகே ஓடினான். “காந்தி, காந்தி!” என்று தவியாய்த் தவித்து உருகினான். அவள் நெற்றியில் பலத்த காயம் என்றே தோன்றியது. அதிலிருந்து ரத்தம் பெருகி, புருவத்தை நனைத்துச் சொட்டியது. சந்திரன் பயந்து நடுங்கி விட்டான். “காந்தி! தெரியாமல் இப்படிச் செய்து விட்டேன். உன்னைக் கீழே தள்ளனுமின்னு வேகமாகப் பிடிச்சுத் தள்ள வில்லை. விளையாட்டுக்குத்தான் தள்ளினேன்” என்று பரிதாபமாக, திரும்பத் திரும்பச் சொன்னான்.

காந்திமதி வாய் திறந்து பேசவில்லை. அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தாவணியால் நெற்றிக் காயத்தை அழுத்தியபடி, மெதுவாக எழுந்தாள். அவள் கண்கள் நீரைக் கொட்டிக் கொண்டிருந்தன. அடிபட்ட வேதனையும், மனத்தின் வேதனை யும் அவளுக்கு மிகுதியாக இருந்தன என்பதை அவன் உணர முடிந்தது. “என்னை மன்னிச்சுடு, காந்திமதி நான் வேணுமின்னு செய்யலே” என்று துயரத்தோடு மொழிந்தான் அவன்.

“தள்ளாதே தள்ளாதேன்னு கெஞ்சினதைக் கூடக் கேட்காமல் பிடிச்சுத் தள்ளிப்போட்டு, இப்ப மன்னிப்பாம்! மன்னிப்பு என்ன வேண்டிக்கிடக்கு மன்னிப்பு?” என்று கொதிப்போடு கூறிவிட்டு அவள் திரும்பிப் பாராமலே அங்கிருந்து நடந்தாள்.

அவள் அப்பா அம்மாவிடம் சொல்லி விடுவாள்; தனக்குச் சரியானபடி ஏச்சு கிடைக்கும் என்று நிச்சயமாகப்பட்டது அவனுக்கு. அதனால் அவன் நேரே வீட்டுக்குப் போகாமல் ஆற்றங்கரைப் பக்கம் சென்று பொழுதை ஒட்டினான். அவன் மனக் குறுகுறுப்பு தணியவில்லை. இருட்டும் வேளையில் அவன் வீடு வந்தான். “ஏ சந்திரா, இங்கே வா. காந்தி முகத்தை நீயே பாரு” என்று குரல் கொடுத்தாள் அவன் அம்மா.

அவன் குற்றம் செய்த நெஞ்சுச் சுமை அழுத்த, என்னவோ ஏதோ என்ற கலவரம் தள்ள, மெதுவாகச் சென்றான். காந்தி நடந்துள்ள, அனைத்தையும் சொல்லியிருப்பாள், இப்பொழுது உரிய “மண்டகப்படி” கிடைக்கும் என்றும் மனம் அரித்தது.

காந்திமதியின் நெற்றி புடைத்திருந்தது. முகமே வீங்கிவிட்டது போல் தோன்றியது. சந்திரன் பயந்துகொண்டே வந்ததைக் கவனித்த அவள் உதடுகளில் சிறு சிரிப்பு ஊர்ந்தது. அவள் அவனைப் பார்த்த பார்வையிலும் ஏதோ அர்த்தம் மறைந்து கிடந்தது. அவன் உள்ளத்தில் பயம் நிறைந்திருந்த போதிலும், அவளுக்காக அனுதாபமும் கவலையும் கொள்வதற்கும் இடம் இருந்தது.

“ஊஞ்சல் என்ன ஊஞ்சல் வாழுது! அப்படியே ஆட நினைச்சாலும் வீட்டுக்குள்ளே சங்கிலிகளையும் ஊஞ்சல் பலகையையும் மாட்டி, ஏறியிருந்து ஆடுறது. மரத்திலே கயிற்றைக் கட்டிக்கொண்டு ஆடுவானேன்? கயிறு அறுந்து கீழே விழுவானேன்? நல்ல காலம், இலேசாகப் போயிட்டுது….” சந்திரனின் அத்தை தன் மகளைக் கண்டிக்கும் தோரணையில் பேசினாள்.

அவள் பேச்சுக்கு விளக்கம் கொடுப்பது போல் அவனுடைய தாய் விஷயத்தை எடுத்துச் சொன்னாள். கயிற்றில் உட்கார்ந்து வேகமாக ஊஞ்சல் ஆடியபோது, கயிறு அறுந்து அவள் தானாகக் கீழே விழுந்துவிட்டதாகக் காந்திமதி அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். இதைப் புரிந்து கொண்டதும் அவன் அதிக மகிழ்வு கொண்டான். காந்தி பேரில் அவனுக்கு இருந்த பிரியமும் அதிகரித்தது. அவன் நன்றியோடு அவளைப் பார்த்தான். அவள் கண்களில் குறும்புத்தனம் சுடரிட்டது. அவளிடம் கேலியாக ஏதாவது சொல்லவேண்டும் என்று அவன் மனம் துடித்தது. ஆனால், அப்படி ஏதாவது சொல்லப் போனால் அவள் கோபம்கொண்டு உண்மையை அறிவித்து விட்டால்? அந்தப் பயம் அவன் வாய்க்குத் தடை போட்டது. சில அனுதாப வார்த்தைகளைத் தான் சொல்ல முடிந்தது அவனால்,

இவ்வாறு சின்னஞ் சிறு வயசிலிருந்தே காந்திமதிக்குத் தன்னிடம் அதிக ஆசை உண்டு என்பதை எடுத்துக் காட்டும் இனிய நினைவுகளை அசை போட்டவாறே நீராடி விட்டுச் சந்திரன் மெதுவாக வீடு நோக்கிக் கிளம்பினான். காந்தி போய் எவ்வளவோ நேரமாகியிருந்தது.

ஆற்றோரத்து அழகிய ஊரிலிருந்து படிப்பதற்கென்று பக்கத்து நகரம் ஒன்றில் குடியேறிய குடும்பங்களில் சந்திரன் குடும்பமும் ஒன்று. அவன் தந்தை இறந்த பின்னரும் தாய் பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும் என்பதற்காக நகரிலேயே வசித்து வந்தாள். சந்திரனின் அண்ணன் சேதுராமன் காலேஜ் படிப்பை முடித்துவிட்டு, ஏதோ ஒரு உத்தியோகத் துக்குரிய படிப்பு படித்துக் கொண்டிருந்தான். சந்திரன் பத்தாவது பாஸ் செய்த பிறகு, “வேலை தேடுகிறேன்” என்று ஊரைச் சுற்றி வந்தான். கிராமத்திலிருந்த வீட்டையும் நிலத்தையும் அவர்கள் மாமா மேற்பார்த்து வந்தார்.

ஆண்டுதோறும் விடுமுறைக் காலத்தில் பார்வதி அம்மாள், மகன் சந்திரனோடு கிராமத்துக்கு வந்து தங்கியிருப்பாள். சேதுராமன் நண்பர்களோடு வெளியூர்களுக்குச் சுற்றப் போய் விடுவான். அல்லது நகரத்திலேயே தங்கி விடுவான். ஆற்றங் கரை அருகே இருந்தாலும், அழகான ஊராக இருந்தாலும், “பட்டிக்காட்டு ஊர் அவனுக்குப் பிடிப்பதில்லை. “அவன் ஒரு மாதிரி. முசுடு. சிடுசிடுத்த அண்ணாவி” என்பதுதான் மாமாவின் கருத்து.
மாமா சிதம்பரம் பிள்ளைக்குச் சின்ன மருமகன் மீதுதான் பிரியம் அதிகம். “சின்ன மாப்பிள்ளைப் பிள்ளே!” என்று அன்போடும் முக மலர்ச்சியோடும் அழைத்து ஏதாவது பேச்சுக் கொடுப்பார். “தமது அருமை மகள் காந்திமதியைச் சந்திரனுக்குக் “கட்டிக் கொடுத்து”, அவனையும் ஊரோடு இருக்கும்படி செய்துவிடலாம். நிலத்தைப் பார்த்துக் கொள்ளுவதோடு, கர்ணம் வேலைக்குப் படித்துக் கணக்குப் பிள்ளையாக உத்தியோகம் பெற்று விட்டால், காந்திமதியின் குடும்ப வாழ்க்கை உல்லாசமானதாக விளங்கும். இவ்விதம் அவர் திட்டம் வகுத்திருந்தார். அது அவர் மனைவிக்கும் பிடித்திருந்தது. காந்திமதிக்குக் கசந்தா கிடக்கும்?

காந்திமதி “பெரிய மனுவழி” ஆனவுடன், சிதம்பரம் பிள்ளை பார்வதி அம்மாளிடம் தமது கருத்தை அறிவித்தார். அவளுக்கும் திருப்திதான். “உங்கள் வார்த்தைக்கு நான் என்றைக்காவது மறுவார்த்தை பேசியது உண்டா, அண்ணாச்சி? நீங்க வந்து எல்லாருக்கும் நல்லதை எண்ணித்தானே காரியம் செய்வீங்க? சந்திரனுக்குக் காந்தி என்றாலே உசிரு. காந்திக்கும் சின்ன அத்தான் மேலே ஆசைதான்” என்று அவள் சொன்னாள். பெரியவனுக்குக் காந்திமதியிடம் வெறுப்புமில்லை, விருப்பு மில்லை என்று அவள் அறிந்திருந்தாள்.

காந்திமதி அவ்வப்போது அத்தை வீட்டில் தங்கிப் போக வருவதுண்டு. அவள் தோற்றமும் அழுக்குப் பாவாடையும், பழந்துணியைக் கிழித்துத் தலைப் பின்னலை முடிந்து வைத்திருப்பதும் சேதுராமனுக்குப் பிடிக்காது. “மூஞ்சியைப் பாரு பனங்காய் மாதிரி. சுத்தப்பட்டிக்காடு!” என்று குத்தலாகச் சொல்லுவான். அவளுடைய வாயரட்டையும் அவனுக்கு மகிழ்வு தந்ததில்லை. ஆனால் சந்திரனோ வேண்டுமென்றே அவள் வாயைக் கிளறி, வம்புக்கிழுத்து வசவு வாங்கிக் கட்டிக் கொள்வதில் உற்சாகம் காட்டுவான். “காந்திக்கும் சந்திரனுக்கும் தான் ரொம்பவும் பொருத்தம். அம்மான் பிள்ளை அத்தை பிள்ளை என்பது சரியாகத்தான் இருக்கிறது. இரண்டுபேரும் எப்பப் பார்த்தாலும் இசலிக் கொண்டே இருக்கிறார்களே! அப்படிக் கலகலப்பாக இருப்பதும் நல்லாத்தானிருக்கு” என்று பெரியவர்கள் பெருமைப்படுவது வழக்கம்.

இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைத்து விடலாந் தான். ஆனால், பெரியவன் இருக்கிறபோது சின்னவனுக்கு எப்படி முதலில் கல்யாணம் பண்ண முடியும்?

மாமா பெண் தேடிப் பெரியவனுக்குக் கல்யாணத்தை முடித்துவிடலாமென முயன்ற போது, சேதுராமன்தான் குறுக்கிட்டான். “எனக்குக் கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? உத்தியோகம் கிடைக்கட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுது கல்யாணத்தைப் பண்ணிக்கொண்டு யார் கஷ்டப்படுவது?” என்று உறுதியாகக் கூறினான் அவன். அவனுடைய மனசை யாரும் மாற்ற முடியவில்லை.

“வருசமாக ஆக வயசும் ஆகிக் கொண்டே போகிறதே. நம்ம காந்தியை எவ்வளவு காலம் வீட்டோடு கன்னியாகவே வைத்துக் கொண்டிருக்க முடியும்?” என்று காந்திமதியின் அம்மா முணுமுணுக்கத் தொடங்கினாள்.

“இந்தத் தடவை பார்வதி வரட்டும். ரெண்டுலே ஒண்ணு நிச்சயமாக முடிவு பண்ணிப் போடுவோம். சேதுராமனும் இம்முறை இங்கே வருவதாகச் சொல்லியிருக்கிறான். இரண்டு பேர் கல்யாணத்தையும் சேர்த்தே முடித்துவிடலாம்” என்றார் சிதம்பரம் பிள்ளை.

“என்ன மாமா, செளக்கிய மெல்லாம் எப்படி?” என விசாரித்தபடி வந்து சேர்ந்தான் சந்திரன். “நான் நேற்று இரவே வந்து விட்டேன். அம்மாவும் அண்ணனும் இன்று வருவார்கள்” என்று தெரிவித்தான்.

“கல்யாண விஷயமாகச் சேது என்னவாவது சொன்னானா? அவன் எண்ணம்தான் என்ன? உனக்குத் தெரிந்திருக்குமே?” என்று மாமா அவனிடம் விசாரித்தார்.

”அண்ணாச்சி இதுபோன்ற விஷயங்களை என்னிடம் சொல்வது கிடையாது. அவர்கள் அபிப்பிராயம் என்னவோ, எனக்கென்ன தெரியும்!” என்று கூறிச் சிரித்தான் சந்திரன், “காந்திக்காக நான் ஒரு பிரஸன்ட் வாங்கி வந்திருக்கிறேன். அருமையான கண்ணாடி, கையகலம் கண்ணாடியை வைத்துக் கொண்டு – அதிலும் ரசம் போய் மங்கிவிட்டதே – அவள் சிரமப்படுவதை நான் ஒரு சமயம் பார்த்திருக்கிறேன். அதனாலே நல்ல கண்ணாடியாக ஒன்று வாங்கி வந்தேன்”? என்று சொல்லி, முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவரிடம் கொடுத்தான்.

காந்திமதியின் மகிழ்ச்சியை அவளது வளைகளின் கலகலப்பு எடுத்தியம்பியது.

“இன்றைக்கு மாப்பிள்ளைக்கு மத்தியானச் சாப்பாடு நம்ம வீட்டிலே” என்று சொன்னார் சிதம்பரம் பிள்ளை.

“சரி. அப்புறம் வாறேன்!” என்று கூறி எழுந்த சந்திரனின் கண்கள் வீட்டின் உட்பக்கம் துழாவின. அவை ஏமாறவில்லை.

காந்திமதி அவன் பார்வையில் படும் இடத்தில் நின்றாள், ஒரு கையில் கண்ணாடியை வைத்துக்கொண்டு. அதை அவள் தன் முகத்துக்கு நேராக எதிரே பிடித்திருக்கவில்லை. ஒரு கன்னத்தின் பக்கம் வைத்திருந்தாள். அதில் அவள் முகத்தின் ஒரு கோணம் நிழலிட்டது. குறுகுறுக்கும் விழி ஒன்றும், குறும்புச் சிரிப்பு தீட்டும் இதழ்களின் ஒரு பகுதியும் மின்னின. அவள் கண்கள் சிரித்தன; இதழ்கள் சிரித்தன; முகம் முழுதுமே சிரிப்பால் மலர்ந்து எழிலுற்று விளங்கியது.

கண்ணாடியின் வழவழப்பு சிறந்ததா? அதனுடன் போட்டியிடும் கன்னத்தின் மினுமினுப்பு சிறந்ததா? இப்படிப் பரீட்சை நடத்துகிறாளோ என்னவோ!” என்று சிரித்தது அவன் உள்ளம். அதனால் அவன் முகமும் சிரித்தது. மகிழ்வு குலுங்கும் உள்ளமும் உருவமும் பெற்றவனாய் வெளியே போனான் சந்திரன்.

காலம் மனித உள்ளங்களோடும் உணர்வுகளோடும் விளை யாடத் தவிக்கிறது; விபரீத வேடிக்கைகளை விதைத்து மனித வாழ்க்கையையே தாறுமாறாக்கி விடுகிறது என்பதைச் சந்திரன் அந்த வேளையில் அறிந்திருக்கவில்லை தான். ஆனால், சீக்கிரம் அவன் உணர்ந்து கொள்வதற்குக் காலமே துணைபுரிந்தது.

சந்தோஷமாக வெளியே சென்ற சந்திரன் மகிழ்வே உருவானவன் போன்று அங்கே திரும்பி வருவதற்குள் மூன்று மணி நேரம் தான் ஓடியிருந்தது. ஆயினும் அது அவனுக்கு அதிர்ச்சியைச் சிருஷ்டித்து விட்டிருந்தது.

சந்திரன் திரும்ப வந்தபோது, அவ்வீட்டிலே ஏதோ சோக நிழல் கவிந்துகிடப்பதுபோல் உணர்ந்தான். சிதம்பரம் பிள்ளையின் முகத்தில் வாட்டம் மட்டும் படிந்திருக்க வில்லை. கவலையும் சிந்தனையும் முகாமிட்டிருப்பதையும் அவன் காண முடிந்தது. உள்ளே அடி எடுத்து வைத்த “சின்ன மாப்பிள்ளைப் பிள்ளை”யைக் கண்டதும் வழக்கமாக ஏற்படும் மலர்ச்சி அவர் முகத்தில் படரவில்லை. மாறாக, ஒரு வேதனை படர்ந்ததாகத் தோன்றியது. அவர் கண்கள் அவன் முகத்தில் பதிந்தன. எனினும் அவனைப் பாராத பார்வையே அவ்விழிகளில் படலம்போல் படிந்து நின்றதாகத் தெரிந்தது.

“என்ன மாமா?” என்றான் அவன். பெருமூச்செறிந்தார் பிள்ளை.

அவன் அக்கறையோடு கேட்கலானான். ”ஏன் மாமா ஒருமாதிரி இருக்கிறீர்கள்? திடீரென்று உடம்புக்கு ஏதாவது.”

சிதம்பரம் பிள்ளை பரிவோடு, பாசத்தோடு, வேதனையோடு அவனை உற்று நோக்கினார். “சந்திரா!” என்றார், எதை முதலில் ஆரம்பிப்பது, சொல்ல வேண்டியதை எப்படிச் சொல்லுவது என்று புரியாதவராய், மனக் குழப்பத்தோடும் உணர்ச்சிகளின் குழப்பதலோடும் அவர் அவனைப் பார்த்தார்.

“என்ன மாமா?” என்று பதறினான் அவன். “நீ வீட்டிலேயிருந்து தானே வாறே?” என்று அத்தை குரல் கொடுத்தபடியே முன் அறைக்கு வந்தாள்.

“இல்லையே. நான் வீட்டுக்கே போகவில்லை. எங்கெங்கோ சுற்றிவிட்டு வருகிறேன்” என்று திகைப்போடு பேசினான் சந்திரன்.

“உன் அண்ணன் இங்கே வந்திருந்தான்” என்று இழுத்தாள்

“ஓ” என்றான் அவன். “சந்திரா, உட்காரப்பா!” என்றார் மாமா, “உன்னிடம் இதை எப்படிச் சொல்வது என்றே புரியல்லே. ஆனாலும் சொல்லித்தான் ஆகணும்.”” தயக்கம் அவர் பேச்சுக்குத் தடை போட்டது.

சந்திரனின் உள்ளத்திலே இனம் புரியாத ஒரு கலக்கம் புகுந்தது. “சும்மா சொல்லுங்க, மாமா! ஏதாக இருந்தால் என்ன?” என்றான்.

“சேதுராமன் கல்யாணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறான்.”

அட பைத்தியக்கார மனுஷா இதுக்கா இவ்வளவு பீடிகை!

என்னமோன்னு நான் பயந்து விட்டேனே!” என்று கூறவேண்டும் போலிருந்தது அவனுக்கு.

மாமா தொடர்ந்து பேசினார்: “கல்யாணம் செய்து கொள்வது என்றால், காந்திமதியைத் தான் கல்யாணம் செய்து கொள்வேன். அவளை எனக்குத் தர இஷ்டமில்லை-யென்றால், இந்த வருஷமும் எனக்குக் கல்யாணம் கிடையாது; இன்னும் அஞ்சாறு வருஷத்துக்கும் நடக்காது. சந்திரனுக்கும் இப்போ நடக்க முடியாது; அவன் தண்டச் சோறு தின்றுவிட்டு ஊரைச் சுற்றி வருகிறான்; அவன் எப்படிக் குடும்பம் நடத்த முடியும்?” என்று சொன்னான். அவன் பிடிவாத குணம்தான் உனக்குத் தெரியுமே! காந்தி மீது உனக்குத்தான் பிரியம் கிடையாதே என்று சொன்னேன். “யார் அப்படிச் சொன்னது? அவ சின்னப் பிள்ளையாக இருந்தபோது – பம்பை பரட்டையாகத் திரிந்தபோது, அவளை நான் அலட்சியமாகப் பார்த்திருப்பேன். போன வருஷம் காந்தியைத் தற்செயலாக நான் பார்க்க நேர்ந்தது. குத்துவிளக்கு மாதிரி இருக்கிறாள் என்று தோன்றியது. அவள் என் மாமா மகள் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்பட்டன. அவளைக் கல்யாணம் செய்துகொள்ள எனக்கு உரிமை இல்லையா என்ன? இப்படி எவ்வளவோ சொன்னான்”.

“சரி. நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று சந்திரன் கேட்டான்.

“நான் என்னத்தைச் சொல்றது?” எனத் தயங்கினார் பெரியவர்.

“அண்ணனுக்கு முடிவாக என்ன சொன்னிர்கள்?” மாமா வின் தீர்மானத்தை அறியத் தவித்தான் அவன்.

“அவன் அப்படிப் பிடிவாதமாகப் பேசுகிற போது நான் என்ன செய்வது, சந்திரா? காந்தியை எவ்வளவு வருஷங்கள் கன்னியாகவே வைத்துக் காப்பாற்ற முடியும்?….”

“ஆமாம். அண்ணாச்சிக்கு நல்ல உத்தியோகம் கிடைத்து விட்டது. நகரத்தில் சுகமாக வசிக்க முடியும். உங்கள் மகள் செளக்கியமாக வாழட்டும்” என்று கூறிவிட்டுத் திரும்பி நடக்கலானான் சந்திரன்.

“சந்திரா சந்திரா. எங்கே போகிறே?” என்று கத்தினார் மாமா.

“இனி அது என் கவலை. எனது வாழ்க்கை என்றுமே என்னுடைய பிரச்னை” என்று கூறியபடியே நகர்ந்தான் அவன்.

“சாப்பிடாமல் போகிறாயே, சந்திரா! உனக்காக விசேஷ மாகச் சாப்பாடு தயாரித்து.” என்று அத்தை பேச்செடுத்தாள்.

“என் பசி எல்லாம் போயே போய் விட்டது” என்று கூறிய சந்திரன் வாசல் நடையை அடைந்தான். அவன் வீட்டினுள் திரும்பிப் பார்க்கவும் விரும்பினானில்லை. ஆயினும் அவன் செவிகளைத் தாக்கத் தவற வில்லை ஒரு ஒசை.

கைதவறிக் கீழே விழுந்து உடைந்த கண்ணாடி எழுப்பிய “சிலீர் ஓசை அது.

நெடிய பெருமூச்சு ஒன்றை உந்தியபடி தெருவில் இறங்கி வேகமாக நடந்தான் சந்திரன். அப்பொழுது வெய்யில் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தது. எனினும் எங்கும் இருண்டு கிடந்ததாகவே தோன்றியது அவனுக்கு.

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *