கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2017
பார்வையிட்டோர்: 9,617 
 

எனக்கு ஒரு ஒன்றுவிட்ட அக்கா இருந்தாள். வெகு காலத்திற்கு முன்பு சொற்ப நாட்களே அவளுடன் நான் பழகநேர்ந்தாலும் என்னால் அவளை மறக்கமுடியாது. கொஞ்சக் காலம் சென்ற பிறகு அவர்கள் எங்கோ நாங்கள் எங்கோ என்று பிரிந்து விட்டோம். பிறகு அவள் என்ன ஆனாள் என்று எனக்கு தெரிய வழியே கிடைக்கவில்லை.

சமீபத்தில் ஒருநாள் புறநானூறு படிக்கும்போது, ‘உடும்புரித்தன்ன வென்பெழு மருங்கிற் கடும்பின் கடும்பசி’ என்ற வரிகள் வந்ததும் அவள் ஞாபகம் எனக்கு பழையபடி வந்தது.

மோந்ததும் வாடிவிடுமாம் அனிச்சம்பூ. அப்படித்தான் சரசக்காவுடைய மனமும் மெல்லியது. இரக்க சுபாவம் கொண்டவள். சிறு துன்பத்தைக்கூட அவளால் சகிக்கமுடியாது. பூனைக்குட்டியோ, நாய்க்குட்டியோ கண்ணில் பட்டால் எடுத்து வைத்துக் கொஞ்சுவாள். பிச்சைக்காரர்கள் வந்தால் கைநிறைய அள்ளிப்போட்டு தாயிடம் பேச்சு வாங்குவாள்.

எவ்வளவுக்கு இரக்க சுபாவம் இருந்ததோ அவ்வளவுக்கு பிடிவாத குணமும் கொண்டவள். உடும்புப்பிடி என்று சொல்வார்களே, அப்படி ஒருவராலும் அவளை அசைக்க இயலாது.

அப்படிப்பட்டவள் காதல் வயப்பட்டதும் என்ன மாதிரி மாறிவிட்டாள்!

அவர்கள் வீட்டில் எல்லோரும் மாமிச பட்சணிகள்தான். சரசக்கா மாத்திரம் மரக்கறி உணவுதான் சாப்பிடுவாள். எப்படித்தான் மரக்கறி உணவுக்கு மாறினாள் என்ற பூர்வீகம் யாருக்கும் தெரியாது. ஆனால் அவளை மாமிசபட்சணியாக்க அவளுடைய தாயார் செய்த மிரட்டலுக்கெல்லாம் அவள் மசிந்து கொடுக்கவில்லை. அரக்கியர் நடுவே தவம் கிடந்த அசோகவனத்து சீதைபோல பிடிவாதமாக இருந்துவிட்டாள்.

சரசக்காவுடைய முகம்கூட இப்ப மறந்துவிட்டது. நினைவில் இருப்பதெல்லாம் அவளுடைய மூக்குத்தான். செதுக்கி வைத்ததுபோல அழகாக இருக்கும். எறும்புகூட போகமுடியாதபடி சிறிய துவாரங்கள். சிரித்த கண்கள், அவளை எப்பவும் ஈரமாகிக் கனிந்துபோய் இருக்கும்.

ஒருநாள் நாங்கள் ‘கொக்கான்’ விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த விளையாட்டில் அவளை விழுத்த முடியாது. கொக்கானுக்கென்றே பிறந்தவள்போல ஒருவித ஆவேசத்துடன்தான் விளையாடுவாள்.

கொக்கான் விளையாடுவதற்கென்று அக்கா நல்ல வழவழப்பான கற்களை பொறுக்கி வைத்திருப்பாள். கோவிலுக்க நேர்ந்துவிட்ட சேவல் ‘வதக், வதக்’ என்று கொத்துவதுபோல அக்கா விளையாடும்போது கற்களை கொத்திக் கொத்தி எடுத்துவிடுவாள். கற்களை பரவிக்கிடந்தால் முழங்கால் நுனியில் இருந்து கைகளை ஒரு வீசுக்க வீசி அவற்றை அள்ளிவிடுவாள். சவுக்கை சொடுக்குவதுபோல அவள் விரல்கள் வேகமாகப் பாயும்.

அப்போது என்னுடைய முறை. ‘புட்டுத்தள்ளும்’ முறை. வழவழப்பான கல் ஒன்றை எடுத்து கூரை முகடு வரைக்கம் மேலே எறிந்துவிட்டு கைவிரல்களைக் குவித்துப்பிடித்து ஏந்தினேன். அப்பாடா, ஒரு தத்து கழிந்தது! ஏந்திவிட்டு சரசக்காவைப் பார்த்தால் அவளைக் காணவில்லை. மாயமாக மறைந்துவிட்டாள்.

இந்தப்பெண்களுக்கே சத்தம் செய்யாமல் ஓடுவதற்கு வராது. நாங்கள் ‘கண்ணாரே கரையாரே’ ஒளிந்துப்பிடித்து விளையாடும்போது அவளுடைய வளையலும், கால் கொலுசும் ‘சிலுங் சிலுங்’ என்று காட்டிக்கொடுத்துவிடும். எப்பொழுது விளையாடினாலும் அதில் வெற்றி எனக்குத்தான். எப்படி இவன் திடீரென்று மாயமாய் போனாள்? சிமிக்கிடாமல் மறைந்து விட்டாளே!

நான் திரும்பிப் பார்த்தேன். இந்த அக்கா இப்படி மாயமாக மறைந்தற்கான காரணம் அங்கே சைக்கிளில் வந்துகொண்டிருந்தது. சிங்கப்பூர் மச்சான்தான். அவளுடைய சொந்த மச்சான். பளபளவென்று மினுங்கிய சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். நாலு கண்ணாடிகள் பூட்டிய கைப்பிடி வண்ண வளையங்கள் போட்ட சில்லுகள். குதிரை மீது ஆரோகணித்து வரும் ராஜகுமாரன் போல வந்து கொண்டிருந்தான்.

சிங்கப்பூர் மச்சான் என்று பெரிசாகப்பேரே ஒழிய அவனக்கு சிங்கப்பூர் எந்தப்பக்கம் என்றுகூடத் தெரியாது. தகப்பன் சிங்கப்பூரில் வேலை செய்து பென்சன் எடுத்தவர். ஊரிலே வந்து நாலு காணி வாங்கி, வட்டிக்கு பணம் கொடுத்து வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். இந்த வட்டிக்காசில் குளுகுளுவென்று வளர்ந்து வாலிபம் குன்றாமல் இருந்தான், இந்த மச்சான். சைக்கிளை கை முறியுமட்டும் துடைத்து பளபளவென்று வைத்திருப்பதுதான் இவனுடைய முக்கிய தொழில். சரசக்கா பருவமடைந்தபின் இந்தச் சைக்கிள் அடிக்கடி இந்தப் பக்கம் வரத்தொடங்கியது.

மாயமாக மறைந்த அக்கா ஜன்னல் வழியாகவும், கதவிடுக்கு வழியாகவும் தன் தரிசனத்தை தந்துகொண்டிருந்தாள். பாவாடை சுருக்குகளை நேராக்கினாள். சங்கிலியை மென்று, சரிசெய்தாள். சிங்கப்பூர் மச்சான் என்றால் சின்னம்மாவுடன் மிகவும் அவசரமானதும், பாரதூரமானதுமான பல விஷயங்களை அலசிக்கொண்டிருந்தான். அவன் கண்கள் மட்டும் டென்னிஸ் போட்டி பார்ப்பவருடைய கண்கள்போல அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தன.

சின்னம்மாவுக்கு எப்படியும் சிங்கப்பூர் மச்சானை மடக்கிவிடவேண்டும் என்ற ஆசை இருந்தது. அது பால்குடி மறவாத எனக்குக்கூட அப்பட்டமாகத் தெரிந்தது. இது ஊரிலே குமரிகளைக் கட்டிக்காத்துக் கொண்டிருக்கும் மற்ற அம்மாக்களுக்கு தெரியாமலிருக்குமா? அவர்கள் வழிப்பறிக் கொள்ளைக்காரர்போல சிங்கப்பூரின் வரவுக்காக வீதிகளிலே காத்துக்கிடந்தனர்.

சின்னம்மாவிடம் ஒர் அழகான சொற்பிரயோகம் இருந்தது. ‘மானம் கெட்ட தேவடியா’ மானம் கெட்ட தேவடியா’ என்று அடிக்கடி வைவாள். என் யுகத்தில் மானம் கெடாத தேவடியா சிலரும் அந்தத்தெருவில் உலா வந்தார்கள் என்றுதான் பட்டது. சண்டையென்று வந்தால் சின்னம்மா சிலிர்த்துப் போவாள். அர்த்தம் தெரியாத அழகான வசவுகளை எல்லாம் நான் இவளிடம்தான் கற்றுக்கொண்டேன்.

மச்சான் மற்ற அம்மாக்களுக்கு தப்பி அங்கு வரும் போதெல்லாம் சின்னம்மா விழுநது விழுந்து உபசாரம் செய்தாள். அவள் சொன்ன ஜோக்குகளுக்கெல்லாம் சிரித்தாள்; சொல்லாமல் விட்ட ஜோக்குகளுக்கு ஏங்குவது போல் இருந்தாள். எனக்கு எரிச்சல் எரிச்சலாக வரும்.

கிராமங்களில் காதலுக்கு அன்றன்று தூபம் போடத்தேவையில்லை. ஒரு பொறி கிடைத்தால் காணும். தன்பாட்டுக்கு காதலர்களின் கற்பனையில் விரிந்து சுவாலையாகப் பற்றிக்கொள்ளும்.

பார்த்துக்கொண்டிருக்கும்போதே அக்காவின் முகத்தில் மெருகு ஏறிக்கொண்டு வந்தது. என்னுடன் மும்முரமாக கொக்கான் விளையாடிக் கொண்டிருக்கும் சமயங்களில் அவளுடைய யோசனை பத்து யோசனை தூரம் சென்றுவிடும். கண்கள் எதையோ தேடத் தொடங்கியிருந்தன. குரலிலே புது உற்சாகம் வந்து சேர்ந்து கொண்டது. மாமரத்தின் கீழ் இருந்து அக்கா அடிக்கடி ‘நேற்றந்தி நேரத்திலே, நீராடும் துறைதனிலே’ என்று இனிமையான குரலில் பாடத்தொடங்கியிருந்தாள். அவள் குரலில் இருந்த குதூகலம் வீடுமுழுவதையும் வந்து நிறைக்கும்.

இந்தக்காதல் இப்படி அவர்கள் குல ஆசாரம் பிசகாமல் வளர்ந்து கொண்டிருததே தவிர இதுவரை அவர்கள் ஒரு வார்த்தைதாணும் பேசவில்லை.

அதற்கும் ஒருநாள் ஒரு சந்தர்ப்பம் வந்தது.

கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ தொடர் முடிந்து புத்தகமாக வந்துவிட்டது. சரசக்கா அதைப்படிக்கவேண்டும் என்ற அடங்காத ஆசையோடு தவித்தாள். மச்சானிடம் கேட்கும்படி என்னைத் தூண்டிவிட்டாள். நான், நீ போய்க்கேள், நான் என்னத்துக்கு?” என்று அக்காவை அவன் முன்னால் ஒரு நாள் தள்ளிவிட்டேன். இவளும் அடிப்பானை சோற்றை சுரண்டி எடுப்பதுபோல துணிச்சலை வரவழைத்துக்கொண்டு ‘சிவகாமியின் சபதம்’ என்று புத்தகத்தில் பெயரை முணுமுணுத்துவிட்டாள்.

சிங்கப்பூரில் சைக்கிளில் ஏறி பாரிஜாத மலருக்காக அலைவதுபோல எங்கெல்லாமோ அலைந்தது. கடைசியில் இணுவில் வாசகசாலையில் ஒரு புத்தகத்தைக் கண்டுபிடித்து கொண்டுவந்து கொடுத்தது. அதற்குப் பிறகும் எத்தனையோ புத்தகங்கள். இந்தச் சாக்கில் இருவரும் கொஞ்சம் கொஞ்சம் மூச்சுக் காற்றை வேகமாக விட்டபடி பேசிக்கொண்டார்கள்.

இவர்கள் கைகளையும் தங்கள் தங்களுக்கே வைத்துக்கொண்டார்கள் என்று சொல்வதற்கில்லை. வயது அப்படி அவர்கள் விரல்கள் அடிக்கடி அவர்களையும் மீறி அளைந்தன. நந்தியாவட்டை மரம் சிலிர்த்துப்போய் மற்றப் பக்கம் திரும்பிக்கொள்ளும்.

சரசக்காவின் பக்தி தீடிரென்று பத்து டிகரி கூடியது. அடிக்கடி தலையிலே பூ வைத்துக்கொண்டு கோவிலுக்கு போனாள். இந்த மாமிச பட்சணிகள் நடுவில் விரதம் காத்தாள். சின்னம்மா கைபடாமல் தானாகவே பொங்கிய பால் சோற்றை என்னுடன் பகிர்ந்துகொண்டு உண்டாள். அவளே சிருஷ்டித்த ஓர் உலகில் ஒரு தேவதைபோல பவித்திரமாக இருந்தாள். ஏதோ ஒரு சம்பவம் நடப்பதற்கு நாங்கள் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தது போல எனக்குப்பட்டது.

இந்தச் சமயத்தில்தான் இந்தக்காதலை இன்னும் ஓர் அங்குலம் முன்னால் நகர்த்தும் முகமாக சின்னம்மா ஓர் அருமையான யோசனையை முன் வைத்தாள்.

சிங்கப்பூரில் இருந்து வந்தவர்களுடைய சாப்பாட்டு முறைகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் சாப்பாட்டு பிரியர்கள். உடும்புக்கறி என்றால் உயிரையும் கொடுப்பார்கள். மச்சானுக்கு உடும்புக்கறி வைத்துக்கொடுப்பதென்று முடிவாகியது. உரும்பிராய் தண்­ர் குடித்தவர்களும், உடும்புக்கறி சாப்பிட்டவர்களும் திரும்பவும் அதை ருசிக்க வருவார்கள் என்பது எங்கள் ஊரில் தொன்றுதொட்டுவந்த ஐதீகம்.

இதிலே சில சங்கடங்கள் இருந்தன. எங்கள் ஊரிலே உடும்புகளுக்கு குறைவில்லை. எங்கள் வளவிலேயே அவை நிறைந்து கிடந்தன. ஆனால் அவற்றைப் பிடிப்பதற்கு ஸ்பெஷல் பயிற்சிவேண்டும். சில நாளில் அகப்படும்; சில நாளில் அகப்படாது. சனிக்கிழமை விருந்துக்கு வெள்ளிக்கிழமை இரவே அவை அகப்பட்டு ஒத்துழைக்கும் என்பது நிச்சயம்?

இந்த இடத்திலேயாவது சரசக்காவின் அப்பா, அதாவது என்னுடைய சித்தப்பா, பற்றி ஒரு அறிமுகம் செய்யாவிட்டால் அது பரம துரோகம் ஆகும். அவர் அந்த வீட்டில் இருப்பதும் தெரியாது, போவதும் தெரியாது. வாட்டசாட்டமான உடம்பு மகா சாது. அப்படியான சாதுக்களை கடவுள் படைப்பதை இப்போதெல்லாம் நிறுத்திவிட்டார். வீட்டின் நிர்வாகம் முழுக்க சின்னம்மாவின் கைகளில்தான். அதைப்பற்றி சித்தப்பா கவலைப்படவில்லை. அவர் வாயில் பொயிலை குதப்புவரை தடை செய்யாதவரையில் மிகவும் சந்தோஷமாகவே காணப்படுவார். யாராவது அவரிடம் கேள்வி கேட்டால், கேட்டவரை உற்சாகப்படுத்தும் முகமாக அவர் காலடியிலேயே பளிச்சென்று துப்பிவிட்டு பேசத்தொடங்குவார்.

சித்தப்பா நாற்பத்திரண்டு வயதை செலவழித்துவிட்டு மீதியை வைத்துக்கொண்டு காத்திருந்தார். அப்படியும் நடக்கும்போது கமக்கட்டில் கொப்புளம் போட்டதுபோல கைகளை அகலித்து, காற்றிலே வழிசெய்து கொண்டுதான் நடப்பார். நாளுக்கு மூன்று தரமாவது அவருக்கு குளிக்க வேணும். எப்பவும் கிணற்றடியில் துலாக்கொடியை பிடித்தபடி மயான காண்டத்து அரிச்சந்திரன்போல காணப்படுவார். அவருடைய வாகான உடம்புக்கு அதுதான் காரணமென்று சிலர் சொல்வார்கள். கிணற்றடியில் இருந்த கமுகு மரத்தில் முதுகைத் தேய்த்து தேய்த்து கமுகு மரம் வழவழப்பாகவும், செழிப்பாகவும் இருந்தது.

ஒரு காலத்தில் இவர் உடும்பு பிடிப்பதில் மன்னராக இருந்தவராம். இவரிடம் இந்தக்கலையைக் கற்றவர்கள் பலர் இப்ப கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஆனால் ஒருமுறை இவருக்கு ஏற்பட்ட அநுபவத்திற்கு பிறகு இவர் உடும்புகளுக்கு விடுதலை கொடுத்துவிட்டார்.

இப்படித்தான் இவர் ஒரு நாள் தன் வேலையாகப் போகும்போது ஓம் உடும்பும் இவரைக்கடந்து தன் சோலியாய் போனது. இப்படியாக காலடியில் வந்த சந்தர்ப்பத்தை யாராவது தவறவிடுவார்களா? உடனேயே ஒரு கூப்பாடு போட்டு அங்கே உள்ள குஞ்சுகுருமான்கள் எல்லோரையும் சேகரித்துவிட்டார். ஊர் எல்லாம் சுற்றி வளைத்து உடும்பை துரத்தியது. பாவம் உடும்பு, என்ன செய்யும்? வகையறியாமல், தனக்கு மரம் ஏறலாம் என்பதையும் மறந்து, அங்கே வசமாக வளர்ந்திருந்த ஒரு கறையான் புற்றுக்குள் போய் ஒளிந்து கொண்டது. இனி என்ன? உடும்பு கைக்கு கிடைப்பது நிச்சயம். தமிழ் சினிமா கதாநாயகனின் கற்பழிக்கப்படுவது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயம்.

சித்தப்பாவிடம் எடுத்த காரியத்தை நிறுத்தும் பழக்கம் கிடையாது. அத்தோடு, உடும்புக்கறி திண்ணும் ஆவேசமும் இப்போது சேர்ந்துகொண்டது. விடுவாரா?

அந்தப்புற்றைச் சுற்றியுள்ள ஓட்டைகள் எல்லாவற்றையும் அடைத்தார்கள். இரண்டைத்தவிர. சித்தப்பா, எப்பவும் வசதியாக வைத்திருக்கும் தனது மேல் வேட்டியை உருவி ஒரு பொந்தின்மேல் மூடினார். மற்ற ஒட்டையின் வாயில் ஒரு வாளி நிறைய அவசரமாகக் கரைந்த வெங்காய நீரை ஊற்றினார்கள். ஊற்றிவிட்டு எல்லோரும் பொந்தின் வாயையே ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு அதிசயம் நடந்தது.

ஓட்டை வாயில் மூடியிருந்த துணி மெல்ல அசைந்தது. சித்தப்பா பாய்ந்து வேட்டியை அப்படிய கமுக்கென்று பிடித்து இழுக்கத்தொடங்கினார். இழுத்தால் அது இழுக்க இழுக்க வந்துகொண்டே இருந்தது. மாவிட்டபுரம் தேர்வடம் போல. இவ்வளவு நீட்டுக்கு உடும்பு இருக்குமா? அப்பொழுது சமயோசித புத்தியுள்ள யாரோ கத்தினார்கள். ‘ஐயோ, பாம்பு! பாம்பு!” சித்தப்பா கீழ்வேட்டியும் போனது தெரியாமல் எடுத்தார் ஓட்டம், கோவணத்துடன். இந்த சித்தப்பா அதற்குள் பிறக இரண்டு நாள் படுக்கையில் கிடந்தாராம்.

இப்படியான பாரதூரமான காரியத்தை சித்தப்பாவிடம் நம்பிக்கொடுக்க முடியாததால் இந்த வேலையை கிட்ணனிடம் கொடுத்தார்கள். சனிக்கிழமை விருந்துக்கு எப்படியும் ஓர் உடும்பு பிடித்துத் தந்துவிடவேண்டும் என்பது ஒப்பந்தம். இந்தக் கிட்ணன் வல்லாளகண்டன். ஒரு கூடையையும், இரண்டு முழம் கயிறையும், ஒரு தடியையும் வைத்து காரியத்தை சாதித்து விடுவான். ஆனால் பேசியபடியே ஐம்பது சதக்காசு கொடுத்து விடவேண்டும்.

அடுத்த நாள் காலை அவன் சொல்லி வைத்தபடி ஒரு நல்ல சைசான உடும்போடு வந்துவிட்டான். இனிமேல்தான் பிரச்சனையே ஆரம்பமாகப்போகிறது. உடும்பு பிடிப்பது லேசு. ஆனால அதை ஆக்குவதில் சில வில்லங்கங்கள் இருந்தன.

முதலாவதாக உடும்பை உயிரோடு உரிக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த இறைச்சியில் நஞ்சு கலந்துவிடுமாம். இரண்டாவது, இறைச்சியில் ஒரு சிறு எலும்புத்துண்டு கூட சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். எலும்பு தொடையில் குத்தினால் பெரும் கலகம் ஏற்பட்டுவிடும். மூன்றாவது இறைச்சியை வெட்டிய உடனேயே கணங்காமல் சட்டியில் போட்டுவிட வேண்டும். இந்தச் சங்கடங்களையெல்லாம் உணர்ந்து நாங்கள் முன்னெச்சரிக்கையாக முதலிலேயே பேசிப்பறைந்து ஒரு தயார் நிலையில் நின்றோம்.

கிட்ணன் மாமரத்தில் ஓர் ஆறடி உயரத்துக்கு ஓர் ஆணி அடித்தான். உடும்பின் கழுத்தில் சணல் கயிறால் ஒரு சுருக்குப்போட்டு அதைக் கலண்டர் மாட்டுவதுபோல அந்த ஆணியிலே உயிருடன் மாட்டி தொங்கவிட்டான். பிறகு ஒரு மெல்லிய கத்தியை இடுப்பில் இருந்து உருவி அது பார்த்துக்கொண்டு இருக்கும் போதே அதன் தோலை வாழைப்பூ சீவுவதுபோல சீவத்தொடங்கினான். உடும்பும் இதை எதிர்பார்த்ததுபோல பூரணமான ஒத்துழைப்பைக் கொடுத்தது.

சின்னம்மா சமையலறையில் சட்டியை அடுப்பில் வைத்து ஆயத்தங்கள் செய்தாள். அக்கா வாசலில் நின்றாள். நான் கிட்ணனுக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன்.

கிட்ணன் இறைச்சி துண்டுகளை வெட்டி ஒரு பூவரசம் இலையில் வைத்து தருவான். நான் அதை தூக்கிக்கொண்டு ஓடிப்போய் அக்காவிடம் தருவாள். அவள் அதை சட்டியில் போடுவாள். இப்படியாக ஒரு assembly line முறையில் இறைச்சி தடங்கல் இன்றி சட்டியில் போய் சேர்ந்துகொண்டிருந்தது.

கிட்ணன் இறைச்சியை வெட்டும்போது உடும்பின் கண்கள் மாத்திரம் இரண்டு பக்கமும் அசைந்து கொண்டிருந்தன. நான் நாலாவது முறை ஓடிப்போய் திரும்பியபோது அந்த அசைவும் நின்றுவிட்டது. உடும்பு செத்துவிட்டது. மிகவும் செத்துவிட்டது.

சமையலறையில் தேங்காய் கூட்டு, மிளகாய் கூட்டு, மசாலா கூட்டு எல்லாம் தயாராக இருந்தன. குழம்பு கறியா, பிரட்டல் கறியா என்ற சர்ச்சை கொஞ்சநேரம் நடந்தது. இறுதியில் பிரட்டல் என்றே முடிவானது.

கறி முதல் கொதி கொதித்ததும் ஒரு மணம் பரவியது. வயிற்றை குமட்டும் மணம். சரசக்கா ‘ஓங்’ என்று வயிற்றைப் பிடித்தபடி வாசற்படிக்கு ஓடிவிட்டாள். சின்னம்மா மாத்திரம் முந்தானையால் மூக்கைப் போர்த்தியபடி சமையல் காரியங்களில் மும்முரமாக இருந்தாள்.

கிட்ணன் உடும்புத்தோலைச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டபோது பேசியபடி ஐம்பது சதம் கொடுத்து அனுப்பினார்கள். அந்தச்சமயம் பார்த்து மச்சான் வந்த இறங்கினார். மத்தியான வெய்யிலில் பளிச்சென்று மின்னும் சில்க் சட்டை போட்டுக்கொண்டு வந்திருந்தார். வாஸ்லைன் வைத்து இழுத்த தலைமுடி அழகாக படிந்துபோய் இருந்தது. வாசலடிக்க வந்த அக்கா இந்தக்காட்சியைக் கண்டு வாயூறி நின்றாள்.

சிங்கப்பூர் மச்சான் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். இவர்களோ சாதியில் மிகவும் தாழ்ந்த சாதி, ஏழை சாதி. தங்கள் வசதிக்க ஏற்ப மச்சானுக்கு பாய் விரித்து பணிவிடை செய்தார்கள். மனை ஓலை விசிறியால் விசிறினார்கள். துர்வாச முனிவருக்க குந்திதேவி செய்ததுபோல குற்றமற்ற சேவை. சுடு சோறும் உடும்புப் பிரட்டலும்தான். சின்னம்மாதான் பரிமாறினாள். அக்கா கதவிடுக்கில் பார்த்தபடியே நின்றாள். நான் அவளுக்குப் பக்கத்தில் துணையாக நின்றேன். நான் அவ்வளவு கிட்டத்தில் நின்றதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. நான் ஓடியோடிக் கொண்டுபோய் கொடுத்த இறைச்சியில் ஒரு சின்ன எலும்புத்துண்டு மாட்டுப்பட்டுப்போய் இருந்தது. இந்த எலும்புத்துண்டு செய்யப்போகும் உற்பாதத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தேன்.

சிங்கப்பூர் மச்சானுக்கு உடும்பு இறைச்சி சாப்பிடுவதற்கு சொல்லியும் கொடுக்க வேண்டுமா? நாலுதரம் போட்டு சாப்பிட்டார். பிறகு ரசத்தை ஊற்றி பிசைந்தும், உறிஞ்சியும் நக்கியும் சாப்பாட்டை முடித்துக்கொண்டார். அவருடைய சில்க் சட்டையில் தெறித்த கறித்துளிகளை வீரப்பதக்கம்போல அணிந்துகொண்டு எழுந்தார். இறுதியில், ‘ஆஹா! ஆஹா!’ என்று திருவாய் மலர்ந்தார். சிறு சாரலில் நனைந்ததுபோல அக்காவின் முகம் குளிரிந்தது. அப்படியே மெய்மறந்துபோய் நின்றாள்.

இந்த சந்தோஷம் எல்லாம் அன்று பின்னேரம் வரைக்கும்தான்.

எப்படித்தான் ரகஸ்யமாக வைத்திருந்தாலும் சிங்கப்பூர் மச்சானுக்கு உடும்பு இறைச்சி விருந்து வைத்த கதை சின்னாச்சிக் கிழவிக்கு எட்டிவிட்டது. அவள் வந்து ‘எடி’ பாதகத்தி’ உடும்பு இறைச்சி உறவைக் கெடுக்கும் என்று உனக்குத்தெரியாதா? எல்லாத்தையும் கெடுத்துவிட்டியே’ என்று ஒப்பாரி வைத்தாள். இரண்டு தலைமுறையாக உடும்பு இறைச்சி விருந்து செய்த அனர்த்தங்களை மயிர்க்கூச்செறிய விவரித்தாள். இந்த அதிர்ச்சியில் தாயும் மகளும் இருந்தபோது நாலு வெற்றிலையை உருவி மடியிலே செருகிக்கொண்டு போய்விட்டாள்.

சின்னம்மாவுக்கும், சரசக்காவுக்கும் திக்கென்றது. சின்னாச்சிகிழவியின் தீர்க்க தரிசனத்தை முற்றிலும் தள்ளிவைக்க அவர்களால் முடியவில்லை. சிங்கப்பூர் குடும்பத்துக்கும் இவர்களுக்கம் ஏணி வைத்தாலும் எட்டாது. நல்ல இடத்தில் மகளைக் கரை சேர்க்கவேண்டும் என்ற அளவில் சின்னம்மா யோசிக்காமல் இப்படிச் செய்துவிட்டாள். இதை முதலில் அல்லவோ யோசித்து இருக்கவேண்டும்?

செலுலர் வராத காலமது. இருந்தாலும் சிங்கப்பூரின் தகப்பனார் சிவப்பிரகாசத்திற்கு இந்தச் செய்தி ஐம்பது மைல் வேகத்தில் போய் சேர்ந்துவிட்டது. அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரரிடம். கந்தர்மடத்துக் கள்ளின் குணாதிசயங்கள் பற்றி ஒரு கதுத்துரை ஆற்றிக்கொண்டிருந்தார். அவருக்கும் கோபம் ரௌத்திரகாரமாகப் பற்றிக்கொண்டு வந்தது. பல் நீக்கல் வழியாகக் காற்று வேகமாக வீச பத்து வீடு கேட்க சத்தம் போட்டார். கால்களில் இடுக்கிலே கையை நீளத்துக்க விட்டு சொறிந்துகொண்டார். அப்படியம் ஆத்திரம் தீராமல் ஆகாயத்தை முறைத்துக்கொண்டு காத்திருந்தார்.

சின்னமுத்து கொட்டியதுபோல அவர் வீடு நிறையக் குழந்தைகள். பெரியமுத்து போட்டதுபோல அவருக்க ஒரு பெண்சாதி. சிங்கப்பூர்தான். மூத்த மகன் இப்படி கிலுசைகெட்டு திரியிறானே இந்தப்பாலி என்று அவர் ரத்தம் ஒவர்டைம் செய்து கொதித்தது.

சிங்கப்பூர் வீடு வந்ததும் முதல் முப்பத்துமூன்று செகண்டுகள் ஒருவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகக் கழிந்தது. அடுத்த கணம் பிரளயம் வெடித்தது. சிவப்பிரகாசம் ஓவென்று கத்தினார். எண்ணெயில் போட்ட பனங்காய் பணியாரம்போல மேலும் கீழும் துள்ளினார். காலால் உதைத்தார்; கையால் அடித்தார். கிடுகு வேலியில் பாய்ந்தார். வெயிலுக்கு ஒதுங்கிய ஓணான்கள் எல்லாம் பறித்துக்கொண்டு ஓடின. கிளுவந்தடியை முறித்துக்கொண்டு வந்தபோது மற்றவர்கள் அவரைப் பிடித்துவிட்டார்கள். இவ்வளவுக்கும் சிங்கப்பூர் மந்தநாவுள்ளவன் போல வாயைத் திறக்கவேயில்லை.

ஊர் முழுக்கக்கூடி இந்தக்காட்சியை மூச்சு விடுவதை ஒத்திப்போட்டு பார்த்துக் கொண்டிருந்தது. இப்படித்தான் முதலாம் பாகம், இரண்டாம் அத்தியாயம் முடிவடைந்தது.

காலம் தாழ்த்தாமல் சிங்கப்பூர் மச்சானுக்கு பல இடங்களிலும் பேச்சுக்கால் நடந்தது. சிவப்பிரகாசம் ஒரு வெறியோடு இந்தக்காரியத்தில் இறங்கினார். சம்பளம் குடுத்து வைத்ததுபோல் அங்கு நடக்கும் விசேஷங்களை நாளாந்தம் நாலைந்து வந்து சின்னம்மாவிடம் ஒப்பித்து போனார்கள்.

சின்னம்மா, அக்காவை ஒரு விரோதத்தோடு பார்க்கத் தொடங்கினாள், அக்கா இன்னும் கடுமையான விரதங்களை அநுட்டிக்கத்தொடங்கினாள். வீட்டிலே தினமும் மீனும் இறைச்சியும் காய்ச்சினாலும் இவள் தவறாமல் கோவிலுக்க போய்வந்தாள். சமையல் பாத்திரங்கள், அடுப்புகூட வேறாகிவிட்டது. நோன்பு இருந்தாள். நெய் மணக்க பால்சோறு பொங்கிப்படைத்தாள். ‘பாற்சோறு மூட நெற்பெய்து முழங்கை வழிவாரக் கூடியிருந்து’ நாங்கள் சாப்பிட்டோம். ஒன்றுமே நடக்காத மாதிரி கொஞ்ச காலம் எங்களை இப்படி ஏமாற்றிக்கொண்டோம்.

வாரங்கள் பல ஓடிவிட்டன. சரசக்காவை பார்க்க முடியவில்லை. வாசலையே பார்த்தபடி தன் வாழ்நாளைக் கழித்தாள். வெய்யிலில் எறிந்த கீரைத்தண்டுபோல அவள் முகம் வதங்கிவிட்டது. அனிச்சம்பூ மனம்கொண்ட அக்கா உடும்பு மாமிசம் சாப்பிடும் இந்த கோழையிடம் மனதைப் பறிகொடுத்து இப்படி உருகிக்கொண்டு போனாள். என்னதான் நான் அக்காவிடம் ஒட்டிப் பழகினாலும் அவளுடைய உள்மனதில் என்ன இருந்ததென்று எனக்கு தெரியவில்லை. இறுக்க ஒட்டிய கடித உறைபோல எந்தப் பக்கத்தில் இருந்தும் அவள் மனதை திறக்க முடியாமல் இருந்தது.

இந்த சமயத்தில் நாங்கள் எதிர்பார்த்தது நடந்தது. ஒரு நாள் மச்சானுக்கு ‘எழுத்து’ முடிந்துவிட்டது. துள்ளித் திரிந்து என்னுடன் எப்பவும் சண்டை போடும் அக்கா மறைந்து போனாள். அடிக்கடி ஏக்கப் பெருமூச்சு விட்டபடியே இருந்தாள். கொக்கான் விளையாட்டிலும், தாயம் விளையாட்டிலும்கூட என்னிடம் தோற்றாள்.

மாமரத்திலே ஆணி அடித்து அதிலே கட்டிய சணல்கயிறு இன்னமும் தொங்கிக்கொண்டு இருந்தது. நானும் அக்காவும் எங்கள் எங்கள் கல்லிலே உட்கார்ந்து பலப்பல கதைகள் பேசினோம். கிணற்றிலே வளர்க்கும் பால் ஆமை ஆணா பெண்ணோ என்பதைப்பற்றி விவாதித்தோம். அணில்பிளளையில் சத்தம் கேட்கும் போதெல்லாம் தகரத்தை அடித்து மாங்காய்களைக் காப்பாற்றினோம். அசோகமாலா கதை அக்காவுக்கு நிறைய பிடிக்கும். அதை எனக்க திருப்பி திருப்பி கூறுவாள். அந்த நேரங்களில் எல்லாம் சரசக்காவிடம் மச்சானைப்பற்றி கேட்கவேண்டும் என்று வாயை பலமுறை உன்னுவேன். ஆனால் முடியவில்லை அவள் மெல்லிய குரலில் பாடத்தொடங்கினாள்.

நேற்றந்தி நேரத்திலே
நீராடும் துறைதனிலே
நெருங்கி எனை ஜாடைகாட்டி
அழைத்தவர் யாரோ?

இந்த வரிகளை மறுபடியும் மறுபடியும் பாடினாள். கண்கள் பளபளத்தன. கடைசி வரியில் அவள் குரல் உடைந்துவிட்டது.

பாதி கிழிந்துபோன கவிதை எவ்வளவு அழகானது. மீதியிலே என்ன சொல்லியிருக்கும் என்பது தெரியாது. அதை எப்படி வேண்டுமானாலும் கற்பனையில் பூர்த்தி செய்து கொள்ளலாம் அல்லவா! இது ஏன் அக்காவுக்கு தெரியவில்லை? தண்­ரைக் குவித்து வைக்க அல்லவா முயற்சிசெய்து கொண்டிருந்தாள்! பெரும் யாகம் செய்து கிட்டிய அபிப்பாகத்தை யாரும் கழுதைக்கு வீசுவார்களா? என் அக்காவின் வாசனையைக் கெடுத்து பழந்துணிபோல வீசிவிட்டார்களே என்று எனக்கு துக்கமாக வந்தது.

அன்று அம்மன் கோவில் திருவிழா. எல்லோரும் திருவிழாவுக்கு போய்விட்டார்கள். நான்தான் அக்காவுக்கு காவல். மாமரக்கிளையில் சந்திர ஒளிபட்டு சிதறி விழுந்தது. விளக்கை மாடத்தில் வைத்துவிட்டு நாங்கள் திண்ணையில் விளக்கை மாடத்தை வைத்துவிட்டு நாங்கள் திண்ணையில் இருந்து வாண வேடிக்கையையும், மத்தாப்புவெடிகளையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தோம். மத்தாப்பு உயரத்தில்போய் வெடித்து விரியும் போதெல்லாம் அக்காவின் முகம் ஒருகணம் பிரகாசமாகி மறையும். அன்னியோன்யமாக நாங்கள் இதற்கு முன்பு இருந்ததில்லை. மோகனமான அந்த இரவில் அவள் முகம் பார்க்க சோகமாகவும், பாவமாகவும் இருந்தது.

சரசரவென்று ஓர் உடும்பு எங்களைத்தாண்டி ஓடியது இப்படியான சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்காது. கனகாலமாகக் கேட்க நினைத்ததை துணிந்து அக்காவிடம் கேட்கத் தீர்மானித்தேன்.

‘அக்கா, இந்த மச்சான் இப்பிடி செய்திருக்கக்கூடாது.’

விநாடி முள்போல நெஞ்சு படக்படக்கென்று அடித்து கொண்டது. முதல்தரமாக இப்போதுதான் நான் என் மனதில் கிடந்ததை வெளியில் சொன்னேன்.

‘போடா, பரவாயில்லை. உடும்புகளுக்கெல்லாம் நல்ல காலம்’ என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரித்தாள். சத்தமில்லாத சிரிப்பு. அவள் முகத்தில் கொஞ்சமும் கவலை தென்படவில்லை. உண்மையில் பார்த்தால் ஒரு நிம்மதிதான் தெரிந்தது.

– 1996-97, வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு), மணிமேகலைப் பிரசுரம், நவம்பர் 1997

நன்றி: http://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *