ஈஸ்வர வடிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,496 
 

கருணாவின் மரணம் தனக்குள் எந்தவித அதிர்வையும் ஏற்படுத்தாததை அவன் யோசித்தான். போகவேண்டுமா என்றிருந்தது. சித்திக்கு எதிர்வீடு. முப்பத்தி இரண்டு வருடங்களுக்குப் பின் சித்தியை பார்க்க வேண்டுமா என்றிருந்தது.

அம்மா, பூக்குட்டியை பிரசவித்தபோது அவனுக்கு பத்து வயது. அவள் அவனை தள்ளி தள்ளி விட்டாள். சித்திதான் அவளை ஏற்றெடுத்துக்கொண்டாள். அம்மாவின் மீதான பால்வாசனை ஏக்கம் கொள்ளவைத்தது. அவள் சுடுசொல் சொல்லாமல் இருந்தால் போதும் என்று இருந்தது. சித்தி கல்யாணம் செய்துகொண்டு அந்த ஊருக்கே வந்து விட்டது ஆறுதலாக இருந்தது. சித்தப்பாவும் பிரியமாக இருந்தார். சித்தி நெஞ்சில் அழுத்திக்கொண்டு தலை வாரி அனுப்புவாள். எப்போதும் அவளிடம் ஒரு தீர்மானம் இருக்கும். வார்த்தைகளில் பிரியமாக வழியாது. செயல்களில்
பொங்கும். அந்தப் ப்ரியம் அவனை கவிழ்ந்து மூடியது.

மூன்று கல் தொங்கும் மூக்குத்தி மின்ன சிரிப்பாள். ‘கோயில்ல இருக்க சாமி மாதிரி இருக்க சித்தி’ என்று சொல்லும்போது, ‘ஏண்டா, இப்படி மெத்துன்னு இருக்கே?’ என்பாள். எல்லாவற்றிலும் ஒரு தாயாக இருந்தாள். பதின்மத்தில் உடல் மாறியபோது ஒரு தலை கோதல். இது இயல்புதான் என்ற பிரியம். ‘பெரியவனாயிட்ட’ என்று அவன் உணர்வுகளை கவுரவித்தாள். அவன் சித்தி வீட்டில் மூத்த மகனாகவே இருந்தான். எல்லாம் இயல்பாக பேதமின்றி நடந்தது.

எல்லாவற்றையும் சித்தியிடம் விட்டுவிட்ட மாதிரி இருந்தது. அவன் வாழ்க்கையை ஆசீர்வதிக்கிறவளாக, ஒரு சிறகு போல பறக்க உதவுபவளாக இருந்தாள். சொந்தத்தில் தேன்மொழியை அவள்தான் பார்த்தாள். ‘பிடிச்சிருக்காடா?’ என்று போகும்போதும், வரும்போதும் கேட்டுக்கொள்வாள். அவன் வெட்கப்பட்டு சிரிப்பான். தரையில் நடக்காமல் அலைந்துகொண்டே இருந்தாள். பார்த்து பார்த்து செய்தாள். புடவை வாங்க, நகை வாங்க, பத்திரிகை வைக்க என்று விட்டு விட்டு தேன்மொழியைப் பார்க்க முடிந்தது. அவள் கண்களின் ஆழம் சிலிர்த்தது. உள்ளுக்குள் ஏதோ விரிந்தது.

‘நான் மயில் பச்சை பிடிச்சிருக்குன்னு சொன்னேன், உன் பெண்டாட்டி கரும்பச்சை எடுத்துகிட்டா’, சித்தியின் குரல் தேய்ந்திருந்தது. கல்யாணம் வரை சின்ன சின்ன உரசல்களில் சித்தியே பேசப்பட்டாள். முதலிரவில், ‘சித்தி’ என்று அவன் ஆரம்பித்தபோது, தேன்மொழி வெட்டி, ‘அந்தம்மாவைப் பத்தி பேசாதீங்க’, என்றாள்.

அவன் எழுந்து வெளியில் வந்தான். தெருவெங்கும் மரமல்லிகையின் வாசம் வீசியது. பேசி, சிரித்து, விளையாடிய முற்றம், தெரு, இந்த வாழ்க்கை எல்லாமே பயமுறுத்தியது. நெஞ்சுவெடித்துவிடும் போன்ற உணர்வில் தலையைப் பிய்த்துகொண்டு ஓடலாமா என்று இருந்தது. நிழலாடியது. சித்தி.

‘உள்ளே போய் படு. உலகம் என்னைத்தான் சொல்லும்’. மூக்குத்தி மின்னியது. அழுகை இல்லை. வேதனை இல்லை. தீர்மானம் மட்டுமே இருந்தது அவளிடம். சரசரவென்று உள்ளே போய்விட்டாள். சித்தி இரண்டுமுறை அவன் இருப்பிடம் வந்தபோதும் தேன்மொழி முகம் கூம்பியே இருந்தது.

தேன்மொழி அவனிடம் வெறியாக இருந்தாள். எண்ணை தேய்த்து விட்டாள். நகம் வெட்டினாள். ஒரு குறை இல்லை. அவள் அட்டவணை அவனை சார்ந்து இருந்தது. அவள் விரல் வழியிலும், குரல் வழியிலும், வார்த்தைகளற்ற மவுனத்திலும் பொங்கும் ப்ரியம் அவனை சீராட்டியது. அவனைக் கூடும்போது வாசனைப் பூக்கள் வேண்டும் அவளுக்கு. ‘நீ, என்கூட படுக்கிறியா, இல்ல, பூகூட படுக்கிறையா?’ என்று அவளைக் கேலி செய்வான்.

யாருக்கும் விட்டுத் தரமாட்டேன் என்ற உன்மத்தம் அவளிடம். அவனுக்குப் புரிந்தது. அம்மா தள்ளியபோது சித்திமீது வீசிய பால் வாசம் தேன்மொழி மீதும். தேன்மொழி உண்டானபோது சித்தி வந்திருந்தாள். இவன் காய் வாங்க கடைக்குப் போய்த் திரும்பும்போது சித்தி பையுடன் தெருவில் இறங்கி இருந்தாள்.

அவன் திகைத்து நின்றான். ‘பஸ் ஏத்தவாவது வரேன்’ என்றவனை, ‘மாசமா இருக்கா அவளைப் பாரு, உடம்பை
பார்த்துக்கோ’, என்று விறுவிறுவென போய்விட்டாள். முகத்தில் அவளின் தீர்மானம். அதுதான் அவளைக் கடைசியாய்ப் பார்த்தது. ‘குழந்தை பிறந்தபோது கூட சித்தப்பா மட்டுமே வந்தார். அவன் கண்களைத் தவிர்த்தார். தன் மகளைத் தூக்கி கொஞ்சுவாள், எல்லாமே சரியாகிவிடும் என்று நினைத்திருந்தவனை வெறுமை சூழ்ந்தது. அவனுள் ஏதோ அறுந்து தொங்கியது.

பெயரிடவும் வரவில்லை. ‘என் பேரைக் கெடுக்கணும் அவங்களுக்கு’ என்று கத்தினாள் தேன்மொழி. எல்லோருமே இருந்தும் யாருமே இல்லாதது போல உணர்ந்தான். நண்பன், ‘அம்மாங்களுக்கும் இவளுங்களுக்கும் இடையில நாமதான் அழியணும். என் பெண்டாட்டி என் அம்மாவை திட்டாம ஒருநாள் கூட என்கூட படுக்கமாட்டா, விடுடா’, என்றபோது மனம் ஆறுதல் அடைவதை உணர்ந்தான். சித்தி எல்லா குடும்ப விசேஷத்திலும் எப்படியாவது அவனை தவிர்த்து விடுவாள்.

அம்மா இறந்தபோது ‘இப்போ என்ன செய்வ?’ என்று அவன் மனதில் ஒரு குருரம் ஓடியது. அந்த மூக்குத்தி மின்னும் முகத்தைப் பார்க்க அவன் மனம் காந்தியது. பார்த்தவுடன் எல்லாம் சரியாய் போய்விடும் என நம்பினான். ஆனால் அவன் போவதற்குள் அவள் வந்துபோய் இருந்தாள். அம்மா செத்ததை விட அவள் தீர்மானம் அவனை உடைத்து நொறுக்கியது.

அதன்பின் அவன் சித்தியைத் தேடுவதில்லை. எந்த விசேஷத்திற்கும் ஊருக்கும் போகவில்லை. அவன் மக்களின் திருமணத்திற்கும் சித்தப்பா மட்டுமே வந்திருந்தார். எது கொண்டும் நிரப்ப முடியாத சித்தியின் வெற்றிடத்தை தேன்மொழி வெறிகொண்டு நிரப்பிக்கொண்டு இருந்தாள்.

அவன் அலுவலகம் முடிந்து வரும்போது கோவில் அய்யரின் பெண், ‘தேனக்கா பூ கேட்டாங்க, கொடுத்துடுங்க’ என்று சிரித்துக்கொண்டே கொடுத்தபோது தேன்மொழி மீது கோபமாக வந்தது. பூவின் வாசத்தோடு நடக்க நடக்க அவளின் கதகதப்பு நினைவில் ஆடியது. அவன் உள்ளே நுழைந்தபோது வீடு பரபரப்பில் இருந்தது.

‘பூக்கு சொல்லிவிட்டேன். வாசலுக்கு வந்தபோது நிலைப்படி தட்டி கீழே விழுந்துட்டா. எழலடா உன் மகராசி’ என்று அவனைக் கட்டிக்கொண்டு யாரோ அழுதார்கள். அவன் நிலைகுலைந்து குந்தி சரிந்தான். பூ கசங்கியது. தேன்மொழி கரைந்துவிட்டாள் கற்பூரம் போல. இறுக்கி இறுக்கி நேசித்தது இதற்காகவா என்றிருந்தது.

மக்கள் கூபிட்டபோதும் அவன் போகவில்லை. ‘மனசு கொஞ்சம் சமம் ஆகட்டும், வரேன்’ என்று சொல்லிவிட்டான். பைத்தியம் பிடித்துவிடுமோ என்று இருந்தது. தூக்கத்தில் திடுக்கிட்டு எழுந்து உட்காருவான்.

ஒரு நொடி வீசிச்செல்லும் பால்வாசனை யாருடையது?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *