இவர்களாலும் முடியும்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2021
பார்வையிட்டோர்: 3,616 
 

இருபத்தைந்து வயது கயல்விழி எதிரிலிருக்கும் ஆளுயரக் கண்ணாடியில் தன் அழகுப் பார்த்து, முந்தானையைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டுக் கவர்ச்சியாகச் சிரித்தாள்.

அதே சமயம்…..

உடலை முந்தானையால் மூடி… கவலை தோய்ந்த முகத்துடன் சோகமாக ஒரு பெண்ணுருவம் வாசல்படியில் ஏறுவது கண்ணாடியில் தெரிந்தது.

‘வழக்கமாக இந்த வீட்டுப் படியை ஆண்கள்தானே மிதிப்பார்கள், அதிகமாக வருவார்கள்.! இது என்ன வழக்கத்திற்கு மாறாய் பெண். !! யாரிவள்..? எங்கிருந்து வருகிறாள், வேலைக்காரியா..? வீட்டு வேலை தேடி வருகிறாளா..? இடம் தெரியாமல் வருகிறாளா..? ‘ – யோசனையுடன் இவள் வாசலுக்கு வந்தாள்.

அந்தப் பெண் இவளை எதிர்பார்த்து நிற்பது போல் அமைதியாக நின்றாள்.

“யாரும்மா… நீங்க…? “- கயல்விழிதான் கேட்டாள்.

“சு…. சுமத்ரா…!”

“என்ன வேணும்…?”

“இங்கே கயல்விழிங்கிறது….?”

“நான்தான்..!”

“நான் உங்ககூட கொஞ்சம் பேசனும்…”

“என்னிடமா..?! …” இவளுக்குள் வியப்பு வந்தது.

“ஆமாம்.!”

உள்ளுக்குள் லேசாக கலவரம் எட்டிப் பார்த்தது. ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு…

‘குடும்பப் பெண் மாதிரி இருக்கிறாள். கஷ்டப்படுபவள் போல் தெரிகிறாள். ஒரு வேளை தொழிலுக்கு வருகிறாளோ…!?’ – மனதில் ஓட…

“உள்ளாற வாங்க…”அழைத்து திரும்பி நடந்தாள்.

இருவரும் நடு வீட்டிற்குச் சென்றார்கள்.

“உட்காருங்க…”

எதிர் எதிரில் அமர்ந்தார்கள்.

“வீட்ல யாருமில்லையே…”- பயத்துடன் சுமத்ரா சுற்றும் முற்றும் பார்த்துக் கேட்டாள்.

“இல்லே..”

“நான் உங்க வருமானத்துக்கு இடைஞ்சலாய் இல்லையே…?”

‘தெரிந்தே வந்திருக்கிறாள் !’

“இல்லே…”

“…………………………….”

“என்ன விசயம்…?”

“வந்து… வந்து…. என் கணவர் இங்கே அடிக்கடி வர்றதாக் கேள்வி..”

“அப்படியா.. ! யார்…?”

“கோபால்…!”

‘ யார்..? ‘ மனதில் ஓட….

“ஓ… சிகப்பா, உசரமா…”கயல்விழிக்கு அவன் உருவம் வந்தது.

“அ… ஆமாம் அவரேதான்!”

“அவருக்கென்ன..?”

“அவரை நீங்க இங்கே வராமத் தடுக்கனும்…”

“நானா..? நான் எப்படி…?” இவள் இழுத்தாள்.

“செய்தாகனும்..”

“ஏன்..??….”

“அவர் மாச சம்பளம் எடுத்தாலும்… வீட்ல மாசத்துல பத்து நாளைக்குப் பசி, பட்டினி. நான் ஜாக்கெட் கிழிசலை மறைக்கத்தான் புடவை போர்த்தி இருக்கேன். அந்த அளவுக்கு வறுமை. இவர் என்னடான்னா எதுவும் தெரியாத மாதிரி அலுவகம் போகிறமாதிரி நறுவிசா உடுத்தி வந்து சம்பளத்தில் முக்காவாசியை குடிக்கும், இங்கேயுமாய் கொட்றார். “நிறுத்தினாள்.

சொல்லும்போதே சுமத்ராவிற்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

கயல்விழிக்கு இதயம் கனத்தது. அவளை பார்க்கப் பாவமாக இருந்தது.

“சுமத்ரா..! நீங்க சரி இல்லையா…? “கேட்டாள்.

“புரியல…?!…”

“இங்கே அடிக்கடி வர்றார்… அதுக்காக கேட்டேன்.”

“நான் சரியாத்தான் இருக்கேன்.”

“உங்களுக்குத் புள்ளைக் குட்டி…?”

“அஞ்சாறு வயசுல ரெண்டு பசங்க இருக்காங்க…”

“நோய் நொடி…?”

“எதுவும் கிடையாது. “என்றவள்…

“அதுக்குப் போட்டு கட்டுப்படியாகாது. “சட்டென்று சொன்னாள்.

“புரியல…?! ” – கயல்விழி அவளைக் குழப்பமாகப் பார்த்தாள்.

“சில ஆண்கள் பெண்களை இரும்பால செய்த மனுசின்னு நெனைச்சி, அவள் கஷ்ட நஷ்டங்கள் தெரியாம இஷ்டத்துக்கு ஆடி, இஷ்டத்துக்கு அனுபவிக்கிறாங்க. என் கணவர் கோபாலும் இப்படித்தான். இவர் இங்கே இருந்துட்டு வந்தாலும் நானும் தினம் படுக்கனும். கஞ்சா போதை ஏத்திக்கிட்டு தினம் இம்சை. இது இம்சை தாங்காமதான் நான் ரெண்டு பெத்ததும் குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்டேன். மனுசி என்ன எந்திரமா..? இல்லே கல்லால செய்த கட்டையா ..? எதுவும் இல்லை. தினம் படுத்து எழுந்திருக்கிறதுனால எனக்கும் ரொம்ப முடியாம, உடல் சோர்ந்து உடைஞ்சு போவுது. இது தொந்தரவு பொறுக்காம அதையும் பொறுத்துக்கிட்டுதான் படுத்து எழுந்திரிக்கிறேன். அப்படியும் அது இங்கே வந்து… காசைக் கண்ணுல காட்டாம… கஷ்டமா இருக்கு…”சொன்னாள். கண்களின் ஓரம் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

‘இவர்களெல்லாம் என்ன மனிதர்கள்…?’ – கயல்விழிக்கே நாராசாரமாய் இருந்தது. நாக்கைப் பிடுங்கிக் கொள்ளத் தோன்றியது.

‘இவர்களையெல்லாம் இழுத்து வைத்து அறுக்கலாம் ! குடியில்…இல்லை, கஞ்சாவில் துளி விசம் வைத்து சாகடிக்கலாம்!’ – நினைத்தாள்.

“என்ன யோசனை…? “சுமத்ரா அவளை ஏறிட்டாள்.

“ஒண்ணுமில்லே. உங்க கஷ்டம் எனக்குப் புரியுது. நான் அவரை இங்கே தடுக்கத் தயார். ஆனா அவர் இது மாதிரி வேற இடத்துக்குப் போக மாட்டார்ன்னு என்ன நிச்சயம்..?”

“அப்படிப் போகாம இருக்க நீங்கதான் அதுக்கும் ஒரு வழி பண்ணனும்..”

‘இது என்ன சுமை மேல் சுமை ! ‘ துணுக்குற்ற கயல்விழி….

“நானா…? எப்படி, என்ன பண்ணனும்..? புரியும்படியா சொல்லுங்க..? “என்றாள்.

“சுமையா நினைக்காதீங்க. நான் தடுத்தா அடி, உதை. தாங்க உடம்புல தெம்பில்லே. உங்ககிட்ட அப்படி நடக்காது..! அதனால்தான் பொறுப்பை உங்களிடம் விடுறேன் “என்றாள்.

கயல்விழிக்குப் புரிந்தது.

“சரி. என்னால கோபால் என்கிட்டே வராதே, என்னை மாதிரி வேறெங்கேயும் போகாதேன்னு எப்படி தடுக்க முடியும்..? “கேட்டாள்.

“முடியும் ! குடும்ப பெண்களால சாதிக்க முடியாத சமாச்சாரங்களை சமயத்தில் உங்களால சாதிக்க முடியும்..? “சுமத்ரா அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

இது கயல்விழிக்குத் திகைப்பாய் இருந்தது.

மேலும்…பிச்சைக்காரியிடமே வந்து பிச்சை கேட்கும் யாசகம் ! – கயல்விழி அவளை நிமிர்ந்து பார்க்கவே சங்கடப் பட்டாள்.

இதற்கு பலான ஒருத்தி தன் வருமானத்தை உதறி எப்படி சம்மதிப்பாள் என்று இவள் என்ன நம்பிக்கையில் வந்திருக்கிறாள்..? – எல்லாம் … வறுமை, ஏழ்மை, கஷ்டம் காரணம் ! – நினைக்கும்போதே கயல்விழிக்குள் சுமத்ரா மீது கழிவிரக்கம் தானாக வந்தது.

“கயல்.! தெரிந்தோ தெரியாமலோ உன்னிடம் உதவி கேட்டு வந்திருக்கேன். என் கணவருக்கு நீதான் புத்திமதி சொல்லி , திருத்தி , என் குடும்பத்தைக் காப்பாத்தனும். “என்று கமறி கண்கள் பணிக்க.. சட்டென்று கையெடுத்துக் கும்பிட்டாள் சுமித்ரா .

பதறிப்போனாள் கயல்விழி .

“அப்படியெல்லாம் செய்யாதீங்க..”என்று சட்டென்று எழுந்து அவள் கைகளைப் பிடித்துப் பிரித்தாள்.

இவளைப் போல் சில பெண்கள் இவளிடம் நேரடியாகவே வந்திருக்கிறார்கள். ஆனால்…அவர்களெல்லாம் சுமத்ரா போல் சாந்த சொரூபவமாக வரவில்லை.

மாறாக…. சிண்டைப் பிடித்து இழுத்துப் போட்டு மிதிக்கும் வெறியில் வருவார்கள்.

படி ஏறி… ஆளைப் பார்த்ததுமே அவர்களுக்குள் ஆத்திரம், ஆவேசம் விஸ்வரூபமெடுக்கும்.

“ஏண்டி தேவடியா முண்ட ! நாற நாயே ! என் புருசனை மடக்கிப் போட்டிருக்கியே . ! விடுடி அவரை. ! “கொதிப்பார்கள்.

“இனி ஒரு தடவை என் புருஷன் இந்த வீட்டுப் படி ஏறினால் உன்னைக் கொன்னு கூறு போட்டுடுவேன் ஆமா…!! “எச்சரிப்பார்கள்.

காளி ஆட்டம் ஆடி இவளை வெளியில் தலைக்காட்டாமல் செய்வார்கள்

அப்படி அவர்கள் ஆடி ரகளை செய்து முடித்து செல்லும்வரை இவள் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு உள்ளேயே இருப்பாள் . வேறென்ன செய்யமுடியும்….?

அடுத்து…. அவர்கள் கணவன்கள் வந்தால் படி ஏறுவதற்கு முன்பே கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போடுவாள்.

அவர்கள் ஜன்னல் வழியாக…

“பிளீஸ் ! பிளீஸ்..! கதவைத் திற,… ” கெஞ்சுவார்கள் .

“அதெல்லாம் முடியாது. நானே எல்லாம் உதிர்த்தவள். என்னால இனி இப்படி அவமானப்படமுடியாது!” துரத்துவாள், துரத்தி இருக்கிறாள்.

திறந்த வீட்டில் நாய் புகுந்த கதையாய் அப்படி சிலர் நுழைந்திருக்கிறார்கள்.

“நீங்க வெளியில போகலைன்னா… நான், நீங்க இங்கே வந்து தகராறு பண்றீங்கன்னு போலீஸ்ல புகார் கொடுப்பேன் ! “என்று கண்டிப்பு, கராறாகச் சொல்லி வெளியேற்றி கதவைச் சாத்தி இருக்கிறாள்.

ஆனால் இந்த சுமத்ரா…முற்றிலும் மாறுபாடு.

‘வராதே தடு. என் கணவனைத் திருத்து ! ‘ – மண்டியிடுகிறாள்.

‘என்ன செய்ய..?….’ யோசிக்கும்போதே…

“நான் வர்றேன் கயல்விழி ! “சுமத்ரா எழுந்து இவள் பதிலை எதிர்பாராமல் நடந்தாள்.

அவளுக்கு விடைகொடுக்க வேண்டும் என்கிற உணர்வுகூட இல்லாமல் கயல்விழி அப்படியே அமர்ந்திருந்தாள்.

‘ ஒரு குடும்பம் துன்பப்பட தானும் ஒரு காரணம் ! ‘ என்று நினைக்கும்போது மனசுக்கு சங்கடமாக இருந்தது.

‘ எப்படி திருத்த…? ‘

‘ தனக்கு உயிர்க்கொல்லி ‘ எயிட்ஸ்’ இருக்கிறது . வேண்டாம் ! வெளியே போ. ! ‘ சொல்லி கதவைச் சாத்தலாமா…? ‘ யோசனை வர….

‘ கூடாது. அது தொழிலுக்கு ஆபத்து. இது வாடிக்கையாளர்கள் காதுகளுக்குப் பரவ… தொழில் முடக்கம். எவரும் திரும்பி பார்க்க மாட்டார்கள். !’ நினைக்க…

வாசலில் நிழலாடியது.

பார்த்தாள்.

கோபால் !!

‘ வரட்டும் !! ‘ – இருந்த இடம் விட்டு எழாமல் இருந்தாள்.

அவன் வந்து அருகில் அமர்ந்தும் இவள் அசையவில்லை.

“என்ன கயல் உம்முன்னு இருக்கே..? “அவன்தான் இவள் தாடையை உரிமையாய்த் தொட்டு கேட்டான்.

“இன்னைக்கு இங்கே ஆள் வந்தாங்க…”

“யார்..?”

“ஒரு பெண் !”

“அப்படியா..?”

“பேர் சுமத்ராவாம் !”

“என்ன சுமத்ராவா…? “துணுக்குற்று அமர்ந்தான்.

“ஆமா…!”

“ஏன் வந்தாள்..? என்ன விசயம்..? “அவனுக்குள் சட்டென்று பதற்றம் தொற்றியது. குரலில் தெரிந்தது.

“வீட்ல புள்ளைக குட்டிக்கங்களெல்லாம் பசி, பட்டினி… கஷ்டமாம். ஒரு வேலை வேணும்ன்னு கேட்டாங்க…”

“உங்கிட்டேயா…? !! ”

“ஆமா…”

“அதுக்கு நீ என்ன சொன்னே..?”

“என்கிட்டே எந்த வேலையும் இல்லே. இங்கே என் பாலானத் தொழிலைத் தவிர வேற வேலை இல்லை சொன்னேன்.”

“அப்படியா..? அதுக்கு அவள் என்ன சொன்னாள்…”

”பரவாயில்லே. என்னையும் உங்க கூட்டாளியாய் சேர்த்துக்கிட்டு ஆள் பாருங்க…பிள்ளைக் குட்டிகளெல்லாம் மாசத்துக்குப் பத்து நாள் பசி, பட்டினி சொன்னாள்.”

“அப்படியா சொன்னாள். ? ஆள் எப்படி இருந்தாள்..?”

“என் வயசு . உருண்டை முகம். நல்ல களையாய் இருந்தாள்..!”

“அடிப்பாவி !! “அவன் அலறி கோபமாக எழுந்தான்.

“இருய்யா ! யார் அவள் . இப்படி அலறித் துடிச்சு எழறே?” என்று கையை இறுக்கப் பிடித்து நிறுத்தி கேட்டாள்.

“அவள் என் மனைவி!” அவன் உடல் நடுங்கியது.

“அப்படியா…? ! ஒரு பொம்பளை… தன் புருசன், குடிகாரன், கூத்தியாள் வைச்சிருக்கிறவன் குடும்பத்தைப் பார்க்காமல் கூத்தடிக்கிறான். என் புள்ளைங்க பசி, வறுமையைப் போக்க.. பலான தொழிலா இருந்தாலும் பரவாயில்லே. கொடுன்னு சொல்லி வர்றாள்ன்னா… அவள் நிலைமை, வறுமை எப்படி இருக்கும்ன்னு யோசிச்சுப் பாரு. நீ என்னடான்னா… வீட்டு நிலைமை தெரியாம, கவனிக்காம… குடி, கூத்தியாள்ன்னு கூத்தடிக்கிறே. நீ வீட்டை கவனிக்கலைன்னா உன் பொண்டாட்டி விபச்சாரியாவாள் புரிஞ்சிக்கோ. நீ என்ன… உன்னை மாதிரி எவன் இருந்தாலும் பொண்டாட்டிங்க இப்படி ஏதாவது செய்தாகனும் வேற வழி இல்லே. உன் மனைவி அப்படி ஆகாம இருக்கனும்ன்னா… இருக்கிற ரெண்டு கெட்ட பழக்கத்தை விட்டுட்டு போய்க் குடும்பத்தைப் பாரு…!

இன்னொரு உண்மையும் சொல்றேன். உன் பொண்டாட்டி உன்னைத் திருத்தச் சொல்லி இங்கே படி ஏறினாள். ஆளைத் திருத்தி என் குடும்பத்துக்கு வாழ்வு கொடுன்னுதான் மடி பிச்சைக் கேட்டாள். மத்தபடி வேலை கேட்டு வரல. பலான தொழில் செய்ய வரலே. இது எல்லாம் நான் இட்டுக்கட்டி சொன்ன பொய். புருசன்கள் குடும்பத்தைக் கவனிக்கலைன்னா… பொம்பளைங்க தன் வறுமை, புள்ளைங்களைக் காப்பாத்த இப்படி மாற வழி உண்டு. அதான் அப்படி சொன்னேன். அதனால… உன் வீட்டுக்குப் போய்… ‘ஏன்டி ! அவ வீட்டுப் போய் என் மானம், மரியாதையெல்லாம் வாங்கறேன் ‘ னு தாண்டி தோண்டியில குதிக்காம… அவள் வந்த சுவடு காட்டிக்காம குடி, கூத்தியாள் தொடர்பு விட்டு குடித்தனம் நடத்து, குடும்பத்தைக் கவனி ! “சொல்லி கையை விட்டாள்.

கோபாலுக்கு இப்போதுதான் கோபம் கரைந்து, உடல் நடுக்கம் மறைந்து…புத்தனுக்குப் போதி மரத்தடியில் ஞானம் வந்தது போல் புத்தி வந்தது .

“கயல்! இனி இங்கே வரமாட்டேன். வேறு எங்கும் போக மாட்டேன். கஞ்சா, குடியை விடுவேன். இது சத்தியம்!” திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

கயல்விழிக்குள் சந்தோசம் வந்து முகம் பளிச்சென்று பிரகாசித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *