இவரும் அவளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 9,321 
 

அண்ணா தன் அழுகையை என்னிடம் மறைக்கப் பார்க்கிறார். எனக்கோ, அவருக்குத் தர்மசங்கடத்தையுண்டாக்க விரும்பாமல்,,அவரின் கண்ணீரைக்கண்டும் காணாதமாதிரிப் பாவனை செய்ய வேண்டிக் கிடக்கிறது. அண்ணா சொல்லும் விடயங்களால் நான்தான் அழுது துடிக்கவேண்டியவள். அவர் எனக்கு முன்னால் கண்கலங்கப் பல காரணங்கள் இருக்கலாம்.

அதிலொன்று, அவர் சொல்லிக் கொண்டிருக்கும் விடயங்களால்,அவர் எதிர்பார்த்து வந்தமாதிரி, நான் குமுறாமல் இருப்பதைப்பார்த்த எரிச்சலாகவுமிருக்கலாம். என்னிடம் அவர் சொல்ல வேண்டியதை,அவர் எத்தனைதரம் தன் மனதுக்குள் ஒத்திகை பார்த்திருப்பார் என்று எனக்குத் தெரியும்.

திருமணங்களும்,அதைத் தொடரும் வாழ்க்கையமைப்பும் அண்ணன் தங்கையைத் தூரத்தில் வைத்து விட்டாலும்,என் அண்ணாவைப் பற்றிய அன்பான அபிப்பிராயங்கள் அதிக தூரத்தில் இல்லையென்பது அவருக்குத் தெரியாதா?

எனது ஆறுவயது மகன் பள்ளிக்கூடத்தால் வரப்போகிறான்.அவன் சாப்படுவதற்காக, பிஸ்கட் டின்னை எடுத்து மேசையில் வைத்து விட்டு,அண்ணாவுக்குத் தேனிர்போடச் சமயலறைக்குட் போகிறேன். வெளியில் நான்கு மணி வெயில்,வீட்டுக்குள்ளும் பரவி; ஆகோரமாக உடம்பைச் சுடுகிறது.

முன்னறையில், தலைகுனிந்து,சோர்ந்து போய்க் காட்சியளிக்கும் அண்ணாவின் தோற்றம் என் அடிவயிற்றை ஏதோ செய்கிறது. அவர் நினைப்பதுபோல்,தங்கையின் வாழ்க்கையில் ஏற்பட்ட அவலம் மட்டுமல்ல, தங்கைக்காக அவர் வேட்டையாடிப் பிடித்த லண்டன் மாப்பிள்ளை, தன்னைப் பேய்க்காட்டுகிறானே என்ற ஆத்திரமும் அவராற் தாங்கமுடியாதிருக்கலாம்.

எனது கணவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டுதான் அவருக்கு என் அண்ணா ஏழுவருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தாரா? அல்லது லண்டனில் வாழும் வாலிபர்களின் குறும்புச் சேட்டைகள் திருமணம் செய்துவைத்தால் சரியாகப் போய்விடும் என்று நப்பாசையில் எனக்கு என் கணவரைக் கொண்டுவந்தாரா?

எப்படியிருந்தாலும் இவ்வளவு காலத்தின்பின் இவை நடக்கின்றனவே? அண்ணா தன்தலைமீது பழியைப் போட்டுக்கொண்டு என் வாழ்க்கைக்காக ஒப்பாரி வைப்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

என் எண்ணங்கள் கொதிக்கின்றன.இவ்வளவு காலமும் தெரிந்தும் தெரியாமலும் என் மனத்தையுறுத்திய சந்தேகத்தை அண்ணா இன்று அப்பட்டமாகச் சொல்லி விட்டார்.என்றோ ஒருநாள் தெரியவரத்தானே போகிறது என்ற அரைகுறைத் தயக்கம் இன்று ஒரேயடியாகப் பறந்து விட்டது.

என் அண்ணா இன்று என்னுடைய இவரையும் ‘அவளையும’ ஒன்றாக நேரிற் கண்டாராம்.இவ்வளவு நாளும், எத்தனையோபேர்,சாடை மாடையாக அவளையும் இவரையும் பற்றி எத்தனையோ சொன்னார்களாம்,ஆனால் தான் அவர்களை நேரிற் காணும்வரை மற்றவர்களின் பேச்சுக்களை, அண்ணா கணக்கில் எடுக்கவில்லையாம்.

என்னத்தை அண்ணா நேரிற் கண்டாராம்? என் கணவரும் அவருடன் பல காலமாக ஒன்றாக வேலை செய்யும் அவருடைய ‘பேர்ஸனல் செக்ரட்டரியான’; அவளும் ஒன்றாகத் தியேட்டருக்குச் சோடியாப் போவதைக் கண்டாராம்.

‘அவர்கள் இருவரும் பத்து வருடங்களாக, அவர் என்னைத் திருமணம் செய்ய முன்னிருந்த காலம் தொடக்கம் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.அவர்கள் வேலை விடயமாக அடிக்கடி ஒன்றாக வெளியில் செல்பவர்கள், இன்று ஒன்றாகத் தியேட்டருக்குப் போனாற்தான் என்ன?’

நான் என்குரலில் நிதானத்தை வரவழைத்துக்கொண்டு அண்ணாவிடம் கேள்வி கேட்கிறேன்.

‘அவர்கள் ஒன்றாய்த் திரிவது பெரிய விடயமில்லையே. அவர்கள் பலகாலமாய் ஒன்றாக வேலை செய்கிறார்கள்,அவர்கள் வேலையப்படி’

அதைவிட அவர்களுக்குள் ஒரு நெருக்கமான ரகசியமும் இல்லை என்பதை அண்ணாவுக்கு அழுத்திச்; சொல்கிறேன்.

அண்ணா நான் கொடுத்த தேனிரை வாங்கிக் கொண்டு கரகரத்த குரலில்,’ கௌரி விசர்த்தனமாக ஏமாறாதே.அவர்களின் பார்வைகளையும், சிரிப்பையும் நெருக்கமான நடத்தைகளையும் பார்க்கும் எந்த முட்டாள் கூட அவர்களுக்குள் ‘ஏதோ’ இருக்கிறதென்று சொல்வான்’ அண்ணாவின் குரலில் கோபம் கொதிக்கிறது.

அண்ணாவால் மேலே ஒன்றும் சொல்ல முடியாத அளவு கோபம் வருகிறது என்பது அவரின் முகத்திற் தெரிகிறது. தேனிர்க் கோப்பையைக் கீழே வைக்கிறார். அவரின் நாக்கில் தேனிர் சுடலாம். எனது வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கும் விடயங்களால் எனது மனம் எவ்வளவு சூடாகவிருக்கும் என்பதை அண்ணா பார்த்துவிடக்கூடாது என்பதற்காக எனது பார்வையை ஜன்னலுக்கப்பாற் பதிக்கிறேன்.

தோட்டத்தில் எனது சின்ன மகன், தான் எறிந்த பந்தை எடுக்கப்போகும் வேகத்தில் நான் நட்டுவளர்த்த தக்காளிக் கன்றுகளை மிதிக்கிறான்.

அவன் தக்காளிக் கன்றுகளைத் துவம்சம் செய்வதைக் கண்டு,’கவனமாக விளையாடு’ என்று அவனிடம் கோபப்படுவதா அல்லது எனது எனது உணர்வுகளை, குடும்ப உறவை,என் ஆத்மாவின் துடிப்பை மிதித்துக் கொண்டு ‘அவளுடன்’ அவர் திரிவதைக்; கேட்டுக் கோபப் படுவதா?

வெளியிலிருந்து மூத்த மகனின் குரல் கேட்கிறது. பாடசாலையிலிருந்து எனது சினேகிதி தன் காரிற் கொண்டு வந்து இறக்கி விட்ட மகன் கதவைத் தட்டுகிறான். ‘ஹலோ மாமா,என்ன விஷேசம்? இந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள்?’ மருமகனின் கேள்விக்கு அண்ணா மறுமொழி சொல்லவில்லை. மகன் அண்ணாவின் மறுமொழிக்குக் காத்திராமல் தம்பியுடன் விளையாடத் தோட்டத்திற்கு ஓடுகிறான்.

‘இந்தப் பக்கம் வர என்ன விஷேசமாம். ம்ம்…’ அண்ணா முணுமுணுக்கிறார்.

நான் பேசாமல் இருக்கிறேன்.

‘கௌரி..உன்னுடைய புருஷனுக்கு ஒரு பாடம் படிப்பிக்காட்டா என்ர பெயர் முத்துலிங்கம் இல்லை’ அண்ணா கறுவிக் கொள்கிறார்.

தன்னை ஏமாற்றியவருக்கு அண்ணா பாடம் படிப்பிக்கப்போகிறாராம்.அதற்கு நான் உதவி செய்யவேண்டுமாம். எனது வீட்டில் காலடி எடுத்து வைத்த நேரத்திலிருந்து அண்ணா திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்.

‘உனக்குத் துரோகம் செய்யுற புருஷனோட இன்னும் இருக்கப்போறியா? அவனுக்கு மானம் மரியாதை இருந்தால் உன்ர முகத்தில இனி முழிக்க மாட்டான்.உடனே பிள்ளைகளையம் கூட்டிக்கொண்டு வெளிக்கிடு’ அண்ணா ஏதோ என்னை ஷொப்பிங் செய்யக்கூட்டிக் கொண்டு போகவந்தவர்போல் சொல்கிறார்.

நான் எனது குழப்பத்தை வெளிக்காட்டாமல் நிதானமாக மௌனமாகவிருப்பது எனக்கே ஆச்சரியமாகவிருக்கிறது.

அண்ணா என்னவரிடமிருந்து எனக்கு விவாகரத்து வாங்கித் தரப்போகிறாராம். ஓருவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியைப் பறைசாற்ற ஒரு உடன்படிக்கையா?

‘கொஞ்ச நாளைக்கு மற்றவர்கள் உனது வாழ்க்கை எவ்வளவு பரிதாபமானது என்று சொல்வார்கள்,அல்லது பலதையும் சொல்வார்கள். அவன விட்டிட்டுப் போய் ஊரில அம்மாவோட கொஞ்ச நாளைக்கு இரு.’ அண்ணா பேசிக் கொண்டேயிருக்கிறார். அவரிடமிருந்து எனக்காக எவ்வளவு ‘கறக்க முடியுமோ அதைக் ‘கறக்கப்’ போகிறாராம்!

பணத்தின் அடிப்படையிலா ஒவ்வொருத்தரின் நிகழ்காலமும் எதிர்காலமும் பின்னிப் பிணைக்கப் பட்டிருக்கிறது?

கல்யாணங்களும் அப்படித்தானே?

எனக்கும் என் குழந்தைகளுக்கும் பணமும் மற்றவர்களின் பரிதாப வார்த்தைகள் மட்டும்தான் தேவையா?

ஆரம்பத்தில் பரிதாபம் காட்டுபவர்கள் கண்மூடித்திறப்பதற்குள் தங்கள் நச்சு நாவால் என்னைப் பரிகாசம் பண்ணத் தொடங்கி விடுவார்கள் என்றும் எனக்குத் தெரியும்.

‘ கௌரி நல்ல மனைவியாயிருந்தால் ஏன் அவாவின்ர புருஷன் வெள்ளைக்காரிட்ட போனார்.?’ அவர்கள் என்னைக் கோயிலிலும், கடைகளிலும் காணும்போது காது படச் சொல்வார்கள்.அது நிச்சயமாக நடக்கும். காலம் காலமாக,வலிமையற்றவர்களை,மிகப் பெரிய வாய் படைத்தவர்களும். வசதி படைத்தவர்களும் சொற்களாலும் செய்கைகளாலும் சித்திரவதை செய்வது நடந்துகொண்டிருக்கிறது.

‘என்ன கௌரி யோசிக்கிறாய்?’

‘அண்ணா, கண்ணால் காணுவதும் பொய், காதற் கேட்பதும் பொய், எதுக்கும் நான் அவரைக் கேட்கிறன்’ வேதனை மனதைச் சுண்டியிழுத்தாலும், எனது வார்த்தைகளை அண்ணாவின் முகத்தைப் பார்க்காமற் சொல்கிறேன். எனது குரலில் நிதானம் இருந்தாலும், மனதில் பொங்கும் துயர் எப்போதும் வெடிக்கும்போலிருக்கிறது.

அண்ணாவுக்க எனது பிடிவாதம் கோபத்தைத் தந்திருக்கவேண்டும் என்பது அவர் நடையிற் தெரிந்தது.அவர் கார்க் கதவை அடித்துச் சாத்தியதிலிருந்து அவருக்கு என்னிலும் எனது கணவரிலும் உள்ள ஆத்திரம் அளவிடமுடியாதது என்பது பிரதி பலித்தது.

அண்ணா போய்விட்டார். குழந்தைகள் தோட்டத்தில் அம்மாவின் மனதில் பிரளயம் நடப்பதையுணராமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எங்கேயாவது ஓடிப்போய்த் தனியாக இருந்து அழவேண்டும்போலிருக்கிறது.

தொட்டியிற் தண்ணீர் நிறைத்து விளையாடிய எனது மகன்கள் தெப்பமாக நனைந்து சேறும் சகதியுமாக வருகிறார்கள்.மாலை நெருங்குகிறது. இன்று வெள்ளிக்கிழமை. அவர் பெரும்பாலும் கொஞ்சம் முந்தி வருவார். குழந்தைகளைக் குளிப்பாட்டி, சாப்பாடு செய்து கொடுத்துவிட்டு, அவருக்காகக் காத்திருப்பது எனது வழக்கம்.

அப்படி கொஞ்சம் முந்தி வீட்டுக்கு வரமுடியாவிட்டால்,எப்போதும் போன் பண்ணிச் சொல்வார்.

அவர் வரும் நேரம் கடந்து விட்டது. அவரும் வரவில்லை. பிந்தி வருவதாக டெலிபோன் காலும் வரவில்லை.

வீட்டுக்கு வந்ததும் என்ன சொல்லப் போகிறார்? ஓவர்டைம் செய்தேன், போன் பண்ணிக் கொண்டிருக்க நேரமில்லை என்று சொல்லப் போகிறாரா?

என்னவர், லண்டனிலுள்ள அமெரிக்கன் கொம்பனி ஒன்றில் பெரியவேலையாகவிருக்கிறார். அவருக்கென்று ஒரு காரியதரிசியுமுண்டு. அவள்தான் அண்ணா சொல்லிக் கொண்டிருந்தவள்.அவள் பெயர் மெலனி.

கல்யாணம் முடிந்து லண்டனுக்கு வந்ததும், லண்டனிலுள்ள உறவினர்களுக்கும் சினேகிதர்களுக்கும் எங்கள் திருமண றிசப்சன் நடந்தது. தனது ஆபிசலிருந்து தனது காரியதரிசி உட்படச் சிலர் எங்கள் றிசப்சனுக்கு வருதாக அவர் சொன்னார். பலகாலமாக அவருடன் வேலை செய்பவள் கொஞ்சம் வயதுபோன பெண்ணாக இருப்பாள் என்று எதிர்பார்த்தேன்.

‘இதுதான் எனது செகரட்டரி மிஸ் மெலனி கிறின் ‘என்று என் கணவர் அவளை எனக்கு அறிமுகப்படுத்தியபோது திடுக்கிட்டுவிட்டேன்.

இவளா வருடக் கணக்காக என் கணவரின் காரியதரிசியாக இருக்கிறாள்? ஓரு தங்கத்தோர் தெருவிலிறங்கி ஊர்வலம் வந்ததுபோல் அவள் அங்கு வந்திருந்தாள்.

வார்த்தெடுத்த இந்த சிற்பத்துக்கு முன்னால் காலை தொடக்கம் இருப்பவர் மனம் சலனப் படாமலிருக்க முடியுமா?

என் மனதில் பல யோசனைகள். புல கேள்விகள்இ பல சந்தேகங்கள்

விளையாட்டாக அவரிடம் சிலவேளை அவளைப் பற்றிக் கேட்டாலும்,அதாவது ‘அவர்கள்’ ஒன்றாக வேலை செய்யும்போது மற்றவர்கள் குறும்புத் தனமாக ஏதும் சொல்வதில்லையா என்று அவரைக் கேட்டிருக்கிறேன்.

அவர் கோபித்தது கிடையாது. ‘நாங்கள் ஒன்றாக வேலை செய்யும் இரு வித்தியாசமான மனிதர்கள்.அவளுடன் அதற்குமேல் எனக்கெந்த வேலையும் கிடையாது. எனது உத்தியோகம் எனக்கு மிக மிக முக்கியமானது’ என்று ஒரு பெரிய விளக்கத்தைத் தந்தார்.

அவர் சொல்வது உண்மையாகப் பட்டது. ஆனாலும், சில தடவைகளில் அவரிடம் திரும்பத் திரும்பச் சாடையாக எனது சந்தேகங்களை வெளிப் படுத்துவேன். அவரின் அன்பான கரங்களுக்குள் என்னைப் புதைத்துக்கொண்டு,’ எனது அன்பில், நேர்மையில் உனக்குச் சநதேகமா என்று கேட்பார்.

அவருக்கு அவரின் குடும்பமும் குழந்தைகளும் மிக மிக முக்கியம் என்று எனக்குத் தெரியும்.

என் நினைவுகள் அலைபாய்கின்றன. கண்களில் நீர் பெருக்கெடுத்து என் மடியில் விழுகின்றன.

அன்பும் அறிவுமுள்ள என் கணவர்,எனது அழகிய வீடு. எனது அன்பான குழந்தைகள்,வசதியான லண்டன் சீவியம்

எல்லாமே வெறும் மாயையா?

குழந்தைகளின் உடுப்புக்களை வாஷிங் மெஷினிற் போடுகிறேன்; கழுவுகிறேன். எதிலும் மனது பதிய மாட்டேன் என்கிறது.

இரவு சாப்பாட்டுக்குத் தோசை போட்டிருக்கிறேன். குழந்தைகளுக்கு எங்கள் சாப்பாடுகள் அதிகம் பிடிக்காது. ஆனாலும் எங்கள் சாப்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் குழந்தைகள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அவர்களுக்குத் தோசை, இடியப்பம் என்று செய்து கொடுப்பதுண்டு.அவர்கள் தங்களின் ஆசை தீர ; பட்டரும் ஜாமும்; போட்ட பாண்துண்டுகளைச் சாப்பிடுவதைத் தடுக்காமல் மரத்துப் போயிருக்கிறேன்.

பின்னேரம் ஆறமணியாகிறது. ஆனாலும் நல்ல வெயிலடிக்கிறது.

தங்கள் முகத்தில் கிடந்த பட்டரைத் துடைத்துக்கொண்டு, ‘பார்க்குக்குப் போகலாமா அம்மா?’ என்று என்னைக் கேட்கிறார்கள்.

‘அப்பா வரும் நேரம் எங்கேயும் போகவேண்டாம்’ என்று சொல்ல வாய்வருகிறது. ஆனாலும், அவர் எங்களைக் கேட்டா எல்லாம் செய்கிறார் என்று என்னையே நான் கேள்வி கேட்டுக்கொண்டு, வீட்டுக்கதவைப் பூட்டிவிட்டுக் குழந்தைகளுடன் பார்க்குக்குப் போகிறோம்.

அவர்கள் அங்கு பல விளையாட்டு உபகரணங்களிலும் ஏறி ஓடியாடி விளையாடிக் களைத்துப் போகிறார்கள்.

நாங்கள் வீடு வந்து சேர நேரம் எட்டு மணியாகிறது.

‘அம்மா, அப்பா இன்னும் வரவில்லையா?’

குழந்தைகள் கேட்கிறார்கள்.

‘அப்பா ஓவர் ரைம் செய்கிறார்’ மனதறிந்த பொய் சொல்கிறேன்.

ஓவர் டைம் செய்கிறாரா? எனக்குக் கோபம் வருகிறது;.இன்று தோசை செய்ய மா அரைத்து வைத்திருந்தேன். தோசை செய்ய மனம் வரவில்லை; வீட்டுக்கு வந்ததும் என்ன சாப்பாடு இல்லையா என்று கேட்டால் சண்டை பிடிக்கலாம்! நான் சண்டைக்குத் தயார் சண்டைக்கு ஆள்தான் இல்லை.

குழந்தைகள் படுக்கைக்குச் செல்லும் நேரம்.அவர்களின் முகம் கைகால்கள் கழுவி, அவர்களுக்குப் பிடித்த சாப்பாட்டைச் செய்து கொடுத்துவிட்டு, அவர்களைப் படுக்கைக்கு அழைத்துச் செல்கிறேன். அவர்கள் வழக்கம்போல் கதை சொல்லச் சொல்லிக் கேட்கிறார்கள்.கதையா?

யார்கதை?

என் கதையா? அல்லது உங்கள் அப்பாவின் கதையா?

ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம் என்று பிரித்து வைத்திருக்கும் சமுதாயத்தைப் பற்றிய கதையா?

அவர்களுக்கு இந்தச் சிக்கலாத உலகத்தைப் பற்றி என்ன தெரியும்?

‘அம்மாவுக்குச் சரியான தலையிடி. நாளைக்குக் கதை சொல்கிறேன்@

பெரிய மகன் பிடிவாதம் பிடிக்கிறான்.

அவனுக்குப் பிடித்த கதைகளின் பெயர்கள் சொல்லி நச்சரிக்கிறான்.

இராமர் கதை சொல்லட்டாம் அந்தக்கதையில் வரும் பொல்லாத கூனியும் குரங்குப் படைகளும் அவர்களுக்கு விருப்பம்.

குறும்புக்காரக் கண்ணனைப் பற்றிச் சொல்லட்டாம். அசுரனை வதை;த அழகிய குமரன் கதை சொல்லட்டாம்.

அவர்களின் நச்சரிப்புக்களக்கு நான் ஏதோ சாட்டுப் போக்குகள் சொல்லித் தட்டிக்கழிக்கும்போது என் மனதில் ஏதோ உறுத்துகிறது.

எந்தக் கதையிலும் ஒடுக்கப்பட்டவர்கள் போராடி வெற்றியடைகிறார்கள்.;.

பெண்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் அவர்கள் வாழ்க்கை ஒரு முடிவில்லாத போராட்டமா?

பெண்கள் எப்போதுமே மற்றவர்களுக்காக வாழவும், மற்றவர்களால்ஆளுமைசெய்யப் படவும், அடக்கி வைக்கப் படவும் பிறந்தவர்களா?

குழந்தைகள் கண்ணயர்கிறார்கள். எனது சிந்தனைகள் மனதையழுத்துப் பெருமூச்சுடன் அவர்களின் அறையை விட்டு வெளியே வருகிறேன்.

அவர் இன்னும் வரவில்லை. லேட்டாக வருவேன் என்று போன்பண்ணச் சொல்ல முடியாதளவு பிஸியா?

மெலன்p கிறின் ஞாபகத்தைத் தட்டுகிறாள். அவள் பெயர் மனதில் பட்டதும் எரிச்சல் வருகிறது.

அவளில் எனக்கேன் கோபம் வரவேண்டும்?

குடும்பத்தின், குழந்தைகளின் அருமைதெரியாத ஆண்கள் அவளைச் சுற்றினால் அதற்கு அவளா பொறுப்பு? ஆண்கள் தாங்கள் நினைத்தபடி நடந்தால் அதற்கு ஏன் பெண்களிற் பழியைப் போடவேண்டும்?

ஓருவிதத்தில் இப்படியெல்லாம் யோசிப்பது எனக்கே வேடிக்கையாக இருக்கிறது.டெலிவிஷன் போடக்கூடமனம் வரவில்லை.

வீPடு அசாதாரணமான நிசப்தமாகவிருக்கிறது. சட்டென்று சின்ன மகனின் அழுகை கேட்கிறது. கனவு கண்டு அழுகிறானா?

ஓடிப் போய் அவனை அணைத்துத் தேற்றியபடி யோசிக்கிறேன்

அவர் வந்தவுடன் அண்ணா சொன்ன விடயங்களைக் கேட்பதா?

கம்பீரமும் கவர்ச்சியுமான எனது கணவரின் உருவம் அருகில் நிற்பதுபோலிருக்கிறது.

அப்படி நான் கேட்டால் என்ன மறுமொழி சொல்வார்?

‘இவர்கள் சொல்வதெல்லாம் பொய்’ என்பாரா? அல்லது,’ஆமாம் எல்லாம் உண்மைதான், ஆனால் உனக்கு என்ன குறைவைத்தேன்.என்னுடன் இருக்க விருப்பமென்டால் இரு அல்லது உனது அண்ணா சொல்வதுபோல் மூட்டையைக் கட்டிக்கொண்டு போய்விடு’என்று சொல்வாரா?

குடும்ப வாழ்க்கை என்ன குழம்புக்கறியா,உப்புக் கூடினாற் தூக்கியெறிய?

டெலிபோன் மணியடிக்கிறது.

அவராகத்தானிருக்கும்.எனக்கு ஏனோ உடம்பு நடுங்குகிறது.மனம் பதறுகிறது. டெலிபோன் அடித்துக் கொண்டிருக்கிறது;. எனது கைகள் நடுங்குகின்றன.

டெலிபோனைத் தூக்குகிறேன்.

‘ஹலோ கௌரி’

டெலிபோனில் அவரில்லை. எனது மாமி பேசுகிறாள்.அண்ணா அவளுக்கும் விசயத்தைச் சொல்லியிருக்கலாம்.மாமிக்கு ஏதும் தெரிந்தால் அது ஊருக்கே தெரிந்தமாதிரித்தான்!

நான் ‘ஹலோ மாமி’ என்று சொல்லிவிட்டுப் பேசாமல் நிற்கிறேன்.

‘அவன் செய்த வேலையைப் பார்த்தாயா?’ எவன் செய்தவேலையைப் பற்றி மாமி பேசுகிறாள்?

என் கணவர் செய்த வேலையைப் பற்றிப் பேசுகிறாளா?

.

‘ரவீந்திரனைப் படிப்பித்து ஆளாக்கினேன். தகப்பனை இழந்த பையன் என்று வளர்ந்ததனத்தைக் காட்டிவிட்டான்’;

நான் ‘உம்’ கொட்டுகிறேன்.

மாமா இறந்துபோய் ஏழெட்டு வருஷமாச்சு,மாமிதான் பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு வளர்த்தாள்.லண்டனில் வளரும் சில இலங்கைப் பிள்ளைகள்போல்,வெள்ளைக்காரத்தனத்தில் வளர்ந்து மாமியைப் படாதபாடு படுத்துகிறார்கள்.

மாமி விம்முகிறாள்.’அவர் செத்துப் போனது என்ர தலைவிதிமட்டமல்ல இதெல்லாம் அதுகளின்ர தலைவிதியம்தான்.அவர் இருந்தால், ரவி படிப்பைக் குழப்பிப்போட்டு யாரோ ஒருத்திக்குப் பின்னால திரிய விட்டிருப்பாரா?’ மாமி புலம்பிக்கொண்டேயிருக்கிறாள். அவளுக்க என்ன மறு மொழி சொல்வது எப்படித் தேற்றுவது எனக்குத் தெரியவில்லை. மாமி பாவம், தனது குழந்தைகளின் எதிர்கால நன்மைக்காக எத்தனை வேதனைப் படுகிறாள்.

எனக்கே மனம் குழம்பிப்போய்க் கிடக்கிறது.தகப்பன் இல்லாமல் குழந்தைகள் வளர்வது பற்றி அவள் சொன்னதும்,’அவன் கிடக்கிறான்,அவன் யாரோடும் வாழட்டும்,குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வெளிக்கிடு’ என்று சொன்ன அண்ணாவின் குரலும் என் மனதைக் குழப்பியது.

வாழ்க்கை என்பதே மற்றவர்களைத் திருப்திப் படுத்த,மற்றவர்களின் திருப்திக்காக எங்கள் வாழ்க்கையை முழுக்க அர்ப்பணிப்பு செய்வதுதான் தாய்மையா? பெண்மையா?

இருண்ட படுக்கையறையிற் படுத்தபடி யோசிக்கிறேன்.வெளியில் கார் வந்து நின்ற சத்தம் அதைத் தொடர்ந்து கதவு திறபடும் சத்தம்.உடனே வழக்கம்போல்,’ கௌரி’ என்று கூப்பிடுகிறார்.எனது மனம் படபடக்கிறது.

மேலே படியேறி வருகிறார்.

எனது வாழ்க்கையில் இன்றுதான் அவரைத் தனியாகச் சந்திக்கப்போகிறேன் என்பதுபோல் உணர்வு படபடக்கிறது.

படுக்கையறை லைட்டைப் போடுகிறார். அவசரமாக ஓடிவந்து என்னையணைத்துக் கொண்டு,தலையைத் தடவியபடி,’ என்ன கௌரிக் குஞ்சு சுகமில்லையா?’என்று கேட்கிறார். இல்லை என்பதுபோல் தலையாட்டுகிறேன்.’கொஞ்சம் களைப்பாக இருந்தது’ நான் பொய்யை முணுமுணுக்கிறேன்.

அவர் மெல்லமாகக் குனிந்து முத்தமிடுகிறார்.

‘இந்த அன்பால் என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டுதானே கண்டபாட்டுக்க ஆடுகிறீர்கள்?’ அப்படிக் கேட்க எனது நா துடிக்கிறது.

‘ஏன் போன் பண்ணவில்லை?’ ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கேட்கிறேன்.

‘அவசரமாக மனேஜ்மென்ட மீற்றிங் ஒன்றுக்குப் போகவேண்டியிருந்தது’அவர் தனது ஜக்கட்டைக்கழட்டியபடி சொல்கிறார்.

இப்படி எத்தனை சாட்டுகளை நான் கேட்கவேண்டும்.? நம்பவேண்டும்?

இனியும் போலியாக வாழ என்னால் முடியாது.

‘அண்ணா வந்தார்’.இப்போது அவர் பக்கம் திரும்பி அவரை நேரே பார்த்படி சொல்கிறேன்.

‘உம்’ கொட்டியபடி உடை மாற்றுகிறார்.

அவர் குரலிலோ நடத்தையிலோ எந்த மாற்றமும் இல்லை. அண்ணா என்ன சொன்னார் என்று சொல்ல நா வரவில்லை.

அண்ணா சொன்னதை விட், நானே அவரிடம், ‘மெலனிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு’ என்ற கேட்டால் என்ன?

அவர் எனது பக்கத்தில் வந்திருந்கொண்டு என்னை உற்றுப் பார்க்கிறார்.

அடக்க முடியாத அழுகை பொத்துக் கொண்டு வருகிறது.

‘ ஜையையோ கௌரி என்ன இந்த அழுகை?’ அவர் குரலில் பரிவு பாசம் இழையோடுகிறது. இன்னொருத்தியுடன் இருந்து விட்டு வந்திருந்தால் ஒரு மனிதனால் இப்படி அன்புடன்,ஆதரவுடன், காதலுடன், நடித்துக் கொள்ள முடியுமா? அப்படி நடித்துக் கொள்ளவேண்டும் என்று அவருக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை.

அண்ணா சொன்னதெல்லாம் பொய்யா?

என்னால் தொடர்ந்து சிந்திக்க முடியவில்லை.’ சாப்பாடு செய்யவில்லை’ அவர் தனக்குப் பசியாகவிருக்கிறது என்று சொல்ல முதல் நான் சொல்கிறேன்.

‘மீற்றிங் நடந்த இடத்தில பெரிய சாப்பாடு..இனிப் பசிக்காது’அவர் என்னையணைத்தபடி சொல்கிறார்.

சாப்பாட்டைச் சாட்டு வைத்து சண்டை தொடங்கலாம் என்றால் அந்தச் சந்தர்ப்பமும் நழுவி விட்டது.

அவரின் அணைப்பிலிருந்து விலகி அடுத்தபக்கம் திரும்பிப் படுத்து அழுகிறேன்.

‘நான் லேட்டாக வருவேன் என்று போன் பண்ணாததற்கு இவ்வளவு அழுகையா?’ அவர் அப்பாவித்தனமாகக் கேட்கிறார்.

ஏனது அழுகைக் காரணமான அண்ணா சொன்ன விடயங்களை,எனது மனதில் அடைபட்டுக் கிடக்கும் துயரங்களை எப்படிச் சொல்வேன்?

‘நேற்று மெலனியுடன் தியேட்டருக்குப் போனிர்களாம்’ எனக்கோ ஆச்சரியமாக இருக்கிறது,எப்படி இப்படித் திடிரென்ற அவரிடம் அந்தப் பெரிய விடயத்தைக் கேட்டேன்?

அவர் ஒரு துளி ஆச்சரியமுமின்றிச்சொல்கிறார்.

‘தியேட்டர் முதலாளி மெலனியின் சொந்தக்காரன்.ஏதோ விசேஷக் காட்சியென்று வரச் சொல்லிக் கெஞ்சிக் கேட்டான். உனக்குத்தான் நாடகங்கள் பிடிக்காதே. ஆபிசிலிருந்து சிலபேர் வந்தார்கள் அதில் மெலனியும் ஒருத்தி. அவன் கூப்பிட்டதற்காகப் போய் இடைவெளி நேரத்தில் வந்துவிட்டேன்.’ அவர் குரல் களங்கமற்றிருந்தது.

நம்பலாமா?

அல்லது உங்களை நான் நம்பவில்லை என்று சொல்லிவிட்டு அவரைப் பரிந்து விட்டு அண்ணா வீட்டுக்குப் போவதா?

அவர் நடிக்கிpறாரா? அல்லது அண்ணா போன்றவர்கள் உண்மையை உணராமல் பொய்யை உண்மையென நம்பி என்னைக் குழப்புகிறாரா?p

இவருக்கும் அவளுக்குமிடையில் ஒன்றுமே இல்லையா?

அல்லது அவளையும் என்னையும் பாகுபாடன்றிக் காதலிக்கிறாரா?

நான் குழம்புகிறேன் யார் பதில் சொல்வார்கள்?

(‘வாழ்வில் சில நடிகர்கள்’; என்ற பெயரில்);சிந்தாமணி பிரசுரம்-இலங்கை-26.10.1980

(யாவும் கற்பனையே)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *