கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 13, 2014
பார்வையிட்டோர்: 14,179 
 

வலி அவ்வப்போது ப்ரக்ஞையின் முழுமையையும் சிறைப்படுத்தியது. அந்தக்கணத்தில் புற உலகத்திலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டாள். பெருகி வரும் ஒவ்வொரு வலியலையும் புற உலகத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அவளை விசிறி அடித்தது. அங்கிருந்து மீண்டு மீண்டு வருவது ஆயாசமான தன்னிச்சை செயலாயிற்று. அவளால் தாங்கமுடியாதபடி இருந்தது வலியின் மூர்க்கம். பெரிய அரக்கனின் அகண்ட கைக்குள் நசுக்கப்படுவதை போலுணர்ந்தாள். வலியின் உக்கிரம் அதிகரிக்க, காலம் நகராமல் நின்றுபோய் விடுவது போல் இருந்தது. அந்த சில கணங்களில் எல்லாம் அழிந்து போய், வெறும் வலி மட்டுமே உடலாய் மாறி நிற்கிறது

இது இன்னும் சில மணி நேரங்கள் தான். மருத்துவர் சொன்னது படி இன்னும் சில நேரம் பொறுத்துக் கொண்டால் போதும். எண்ணங்களை உடலின் அசெளகரியங்களின் பிடியிலிருந்து கழற்றிக் கொள்ளப் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. பிடிவாதமாய் நினைப்புகளை வேறு வேறு திசையில் செலுத்தினாள்.

அந்த அறையின் வெளிச்சம் கண்களுக்கு இதமாய் இல்லை . மூலையில் இருந்த மேஜையின் மேல் அம்மா படித்து கொண்டிருந்த புத்தகம் கவிழ்ந்திருந்து. காற்றில் அதன் முனைகள் லேசாக படபடத்துக் கொண்டிருந்தன. இன்னும் சிறிது நேரத்தில் அவனும் வந்துவிடுவான். அலுவலகத்தில் சிலவேலைகளை இன்னொருவரிடம் மாற்றிக் கொடுக்கும் ஏற்பாடுகளை செய்துவிட்டு வருவதாய் சொல்லி விட்டு போனான். அம்மா அவளுடன் இருப்பாள். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மருத்துவர் இன்னும் நேரமிருப்பதாய் சொல்லியிருக்கிறார்.

குழந்தை எப்படியிருக்கும் என்று ஊகம் அவளுக்கு பிடித்தமான ஒன்று. எத்தனையோ நேரங்கள் அவள் மனம் அதில் தான் ஈடுபட்டிருக்கும். அலுப்பற்று. இருவரின் சந்தோஷமும் ஒன்றிணைந்த வடிவம் உச்ச அழகின் பிரதிபலிப்பாகத் தான் இருக்கும். அதை இப்போதே தொட வேண்டும் போலிருந்தது. இறுக மூடிக்கொள்ளும் பிஞ்சுவிரல்களின் இடுக்குக்குள்ளே தன் விரலை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த இளஞ்சூடு தானாய் உள்ளுக்குள் பரவியது. லேசாக உடல் நடுங்கியது.

*

அவள் உடலுக்குள் நடுக்கம் நீர்வளையங்களைப் போல பரவியது. அவனுடையக் காதில் அவள் உச்சரித்தாள்,

இன்றையக்கணங்களின் சந்தோஷம் என் உடலுக்குள் ஊறுகிறது. அது உயிர்க்கொள்ளும் அதிர்வுகள் உனக்கு கேட்கிறதா.

அவன் முனகினான். அவனுடைய கிளர்ச்சி அவளின் வார்த்தைகளால் தீவிரமடைவது போலிருந்தது. அவளைப் பற்றியிருந்த அவன் கைகள் இறுகியது. அவனுடைய வேகம் கூடுவதை அவள் உணர்ந்தாள் அவளுக்குள் அது இன்பமான வலியை உண்டாக்கியது. கண்களின் கிறக்கம் கூட, ப்ரக்ஞை முழுவதும் நரம்புகளின் அதிர்வுகளும் கிளர்ச்சி உருவாக்கும் உத்வேகம் மட்டுமே மிஞ்சியிருந்தது. தொடுதல் எல்லா விளிம்புகளையும் அழித்து பெருகியோடும் நதியாய் பரவி பிரவாகித்தது. அழுத்தத்தில் உடலின் தசை பரப்புகள் அகண்டு விரிந்து எங்கும் சதையிலான உலகத்தில் நழுவி விழுந்திருந்தாள். உச்சக்கட்டத்தில் குவிமையமான ஒரு புள்ளியில் உடலும் ப்ரக்ஞையும் தொலைந்திருந்தன.

அவனுடைய துவளலும், இறுகப் பற்றியிருந்த கரங்களின் இளகலும் திடாரென்று எங்கும் வியாபித்த வியர்வை வாசனையும் அவளை நகர்த்தியது. அவன் முகத்தை பற்றி அவள் வயிற்றின் மேல் வைத்தாள். கேட்கிறதா உனக்கு. நம் உயிர் அணுக்களின் ஆனந்தக் கூச்சலை. கைக்கோர்த்து துள்ளி விளையாடும் ஓசை கேட்கிறதா. புதிதாய் குமிழிடும் உயிரின் சத்தம் கேட்கிறதா.

அவன் ‘ரொமான்டிக் ஃபூல் ‘ சிரித்தான். ‘ மை அடோரபிள் ரொமான்டிக் ஃபூல் ‘ மெதுவாய் வயிற்றில் முத்தமிட்டான். சில்லென குழைந்தது.

*

எங்கு குழந்தைகளைப் பார்த்தாலும் அள்ளி எடுத்துக் கொள்ள வேண்டும் போல பரபரத்தது. பார்க்கும் ஒவ்வொரு குழந்தையும் வயிற்றுக்குள் இருப்பதை அடையாளப்படுத்தியது. தெருக் குழந்தைகளுக்குக் கொடுக்கப் படும் ஒவ்வொரு முத்தமும் தனக்குள் இருக்கும் குழந்தைக்குத் தான் என்பதை உணர்ந்திருந்தாள். பிறந்து வளர்ந்தவைகள் பிறக்கப் போவதை எதோ ஒரு வகையில் தொட்டுக் கொண்டே இருக்கின்றன என்று நினைத்தபடியிருந்தாள். கனவாய் காலம் போகையில் அதிகரிக்கும் உடலின் அசெளகர்யங்கள் அவளுக்கு ஒரு பொருட்டாக இல்லை. அம்மாவிற்கும் பானுவிற்கும் இன்னும் எத்தனையோ குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்களுக்கும் அவளின் உடல் மாற்றங்களை பற்றி இருந்த கரிசனக் கேள்விகளுக்கு அவளுக்கு பதில் சொல்ல பொறுமையற்றுப் போனது.

குழந்தையின் ஞாபகம் எப்பொழுதும் அவளை சூழ்ந்து கொண்டிருந்தது. சில சமயம் கரு தரித்தது உடலா மனதா என்ற கேள்வி எழுந்தது. சின்ன சின்ன விஷயங்கள் கூட வரவிருப்பதை ஞாபகத்தில் நிறுத்திக்கொண்டிருந்தன. அவன் எத்தனையோ பொம்மைகளையும் துணிகளையும் வாங்கி குவித்துவிட்டான். அம்மாவின் எதிர்ப்புகளை மீறி. அம்மாவிற்கு எப்போதும் இவள் உடம்பை பற்றியே கவலை. விதவிதமான ஆலோசனைகளை சொல்லிக் கொண்டேயிருந்தாள். அவள் காதுகளில் அவை வெறும் சப்தமாக மட்டுமே விழுந்துகொண்டிருந்தது. சில சமயம் தன்னை தனியாக விட்டு விட்டு இவர்கள் எல்லோரும் சென்றால் தேவலை என்று தோன்றிற்று. தனியாய் படுக்கையில் மல்லாந்தபடி குழந்தையுடன் தன் உரையாடலை தொடரவே அவள் விரும்பினாள். மனதின் மத்தியில் ஒரு குரல் தொடர்ந்து தன் வயிற்றுக்குள் பேசிக் கொண்டே இருந்தது. அந்த உரையாடலின் திரி அறுந்து போகும்படியான இடையூறுகள் வரும் போது எரிச்சல் பட்டாள்.

அதை அவன் வெறுப்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவளுடைய உலகத்தில் தன்னுடைய இடம் சுருங்கிபோய்விட்டதையும் அதை அவனுடைய உள்ளுணர்வு அடையாளம் கண்டுகொண்டுவிட்டதையும் அவள் அறியாமலில்லை. பொங்கி வரும் உணர்வுகளின் மத்தியில் பொறாமையையும் கைவிடப்பட்டத் தன்மையையும் அவன் ஒரு நாள் சந்தித்தப் போது அவனுக்கு தன் மேலே மிகுந்த வெறுப்பும் அவநம்பிக்கையும் ஏற்பட்டது. அவன் எத்தனையோ இரவுகள் , அவளின் பருத்த வயிற்றைத் தடவியபடி அருகில் மெளனமாய் படுத்திருக்கிறான். சில சமயம் அவன் முனைப்பாய் பேசும்போது நடுவில் அவள் தன்னை அறுத்துக்கொண்டு தனக்குள்ளான பரவசத்தில் தொலைந்து போய்விடுவதை பார்க்கையில் அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. அவளுக்கு அவனுடைய வெறுப்பும் பொறாமையும் ஒரு விதமான கிளர்ச்சியை அளித்தது. அப்போதெல்லாம் அவள் அவனை சிறு பிள்ளையைக் கொஞ்சுவது போல அள்ளியெடுத்து முத்தமிட்டுக் கொஞ்சினாள். எல்லாவற்றையும் கழற்றியெறிந்து விட்டு அவன் அவளிடம் தடையற்று சரணடைவது போலிருந்தது. அந்தக் கணங்களில் அவளை அவன் நன்றியுடன் பார்ப்பதாய் உணர்ந்தாள். ஆனால் பல சமயங்களில் அவனுடைய அருகாமையும் துணையும் அவளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

*

தூக்கம் போலிருந்த நிலையில் ஆழ்ந்திருந்த போது அந்தத் தோற்றம் அவளுக்குத் தோன்றியது. கண்ணாடி கோலிக்குண்டு போல காணப்பட்ட ஒரு கோளத்தின் மத்தியில் அதைப் பார்த்தாள்.வெளிரிப்போயிருந்த கோளத்தின் சுவர்கள் வழியாக பார்க்கையில் அதன் சருமம் லேசாக பளபளத்தது. மெதுவாய் உள்ளுக்குள் குழந்தை மிதந்தபடியிருந்தது. அந்தக் கோளத்தின் லேசான அசைவைப் பார்க்கையில் அது முழுக்க நீரினால் ஆனது என்று புலப்பட்டது.குழந்தையின் தலை நகர்ந்து அவள் பக்கம் வருகையில் அதன் கண்கள் தெரிந்தன. கோடு போன்ற புருவங்களும் மிகக்குறைவான இரப்பைகளும் அதன் கண்கள் கொண்டிருந்தன. கண்களில் ஒரு புன்சிரிப்பு வெளிப்பட்டது. அவளைப் பார்த்ததும் அது தன் சிறிய கரத்தை மெதுவாய் மேல் தூக்கி அவளை வா என அழைப்பது போல் அசைத்தது. அதன் மெல்லிய அதரங்கள் அகன்று சிரித்த போது இனம் புரியாத உருக்கம் அவளுக்குள் ஊடுருவியது. அந்த அழகை தாங்க முடியாது, மூச்சு நின்று விடும் போல இருந்தது. கண்ணுக்குத் தெரியாத ஒரு கரம் அவளை அந்தக் கோளத்தை நோக்கி தள்ளிவிடுவது போலிருந்தது. அவள் பார்த்துக் கொண்டேயிருக்கையில் அது காற்றில் மெதுவாய் மிதந்த மிதந்து அவளருகே வந்தது. அந்த அசைவுகளில் குழந்தை அங்குமிங்கும் அல்லாடுவதை பார்க்கும் போது அவளுக்கு திகிலாய் இருந்தது. இரண்டு கரங்களாலும் அந்தக் கோளத்தை ஏந்திக் கொள்வது போல் நீட்டினாள். அது அவள் கரங்களில் மேல் நழுவி அவள் மார்பின் இடைவெளியில் தேங்கியது. அதைத் தன்னுடலோடு இறுக அணைத்துக் கொள்ள அவள் நீட்டிய கரங்கள் அந்தக்கோளத்துக்குள்ளே இருப்பதை அவள் அதிர்ச்சியுடன் பார்த்தாள். குழந்தை அவளின் கைவிரல்களின் மேல் நீந்திய போது சில்லிப்பாய் இருந்தது. அதன் குளிர்ந்த சிறு விரல்கள் அவளுடைய மார்புகளில் பட்டப் போது அவளுக்குள் அலை அலையாக எல்லாம் எழுந்தது. அந்தக் கோளம் படிப்படியாக அவள் உடல் முழுவதும் பரவியது. வெம்மையான நீர் அவளை சுற்றிலும் சூழ்ந்தது. வெற்று உடம்பின் வாசம் எல்லாவிடத்திலும் பரவியிருந்ததை அவள் உணர்ந்தாள். நீர்கோளத்துக்குள்ளே அவளும் மிதக்கத் தொடங்கினாள். குழந்தை சுருண்ட தன் பிஞ்சுக் கரங்களால் அவளைப் பற்றியபடி அவள் இடையோரம் ஒட்டியபடி மிதந்தது. நீர்பரப்பின் எல்லையில் வெளிச்சம் அதிகமாவதை சற்று நேரத்தில் உணர்ந்தாள்.அப்போது அவள் மிகவும் இலேசாக, எடையற்றதாய் உணர்ந்தாள். அவள் பார்க்க பார்க்க கோளத்தின் உள்பரப்பு அதிகமடைந்து கொண்டே வந்தது. சற்று தூரத்தில் நீரில் அலையும் கரையும் , அடியில் நிழலைத் தேக்கியிருக்கும் மரங்களும், அதையும் கடந்ததொலைவில் சிறு குன்றுகளும் , மரகதப் பச்சை வெளிகளும் தோன்றின.

வியர்த்து போய் விழித்தாள். உடல் பரவசமான ஒளியில் பளபளத்தது. அவனிடம் மறுநாள் அந்தக் கனவைச் சொன்னதும் அவன் முகம் தீவிரமான

நிலைக்கு மாறியது.

இந்த மாதிரி சமயங்களில் மனோநிலை தெளிவாக இல்லாது போக சாத்தியங்கள் இருக்கின்றன உடலில் ஏற்படும் மாற்றங்களால். அதனால் தான் இப்படிப் பட்ட குழப்பமான தோற்றங்கள் வருகிறது. உனக்கு இந்தக் குழந்தை குறித்து மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. நீ உன் எண்ணங்களை வேறு திசையில் செலுத்துவது நல்லது.

அவளால் அதை அப்படியே ஒதுக்க முடிவதில்லை. அவளுக்குள் முதலில் தோன்றிய எண்ணம் இந்தத் தோற்றம் எனக்குள் உருவாகியிருக்கும் பிரபஞ்சத்தை உருவகப்படுத்துகிறது

என்பது.

எனக்குள் பிரபஞ்சம். பிரபஞ்சத்தில் ஒரு பகுதியாயிருக்கும் எனக்குள் பிரபஞ்சத்தின் ஒரு பிளவு உருவாகியிருக்கிறது. எனக்கும் என் குழந்தைக்குமாய் உருவான பிரபஞ்சம். வெளியிலிருப்பது என் மூலமாக உள்ளிருப்பதை தொட முயல்கிறது.

அவளுக்கு இந்த நினைப்பே அலாதியான போதையை அளித்தது. எனக்குள் பிரபஞ்சம் எனக்குள் பிரபஞ்சம் என மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டாள். அது அவளை மற்றவர்கள் இருக்கும் தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு மேலேற்றி விட்டதாக தோன்றிற்று. குழந்தையுடனான உறவை இது இன்னும் விசேஷப் படுத்துவதாக உணர்ந்தாள்.

இந்த பெளளதீகமான உடல் அதன் எல்லைகளை மீறி இன்னொரு பரிமாணத்திற்குப் போகிறது. எனக்கே எனக்கான பிரபஞ்சம். என் குழந்தைக்காக நான் உருவாக்கியுள்ள

உலகம்.

*

வலியின் வேகம் கூடிக் கொண்டே போனது. இன்னும் சிறிது நேரத்தில் அந்தப் பிஞ்சு உடலை கைகளில் ஏந்த முடியும் என்பதிலிருந்து தன் வலி பொறுக்கும் சக்தியை

அதிகரித்துக் கொண்டாள்.

வலியின் தீவிரத்தில் அவ்வப் போது அவளுக்கு நினைவு தப்பியது. நினைவுக்கும் மயக்கத்துக்கும் இடையில் ஊசலாடுகையில் அந்தக் கோளமும் நீந்தும் குழந்தையின் அசைவுகளும், எல்லையில் உயர்ந்தோங்கும் மரங்களும் அவளுக்கு தோற்றமளித்தது. என் பிரபஞ்சம்.. என்று அவள் உதடுகள் லேசாய் அப்போது முணுமுணுத்தன. மயக்கத்திலிருந்து வலியின் சீற்றத்தினால் விடுபட்டு எழுகையில் சூழலின் இருப்பும், மருத்துவர்களின் குரல்களும் அலை போல அவளை சூழ்ந்தது. அவளிடம் ஏதோ அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கண்டு அவள் வியப்படைந்தாள். ஒரே சமயத்தில் அவள் இரண்டு மூன்று தளங்களில் இருப்பது போலிருந்தது. அவளின் கால்கள் அகற்றி தொடைகளை வெள்ளை நிற உடையில் நின்றிருந்த ஒருத்தி பிடித்துக் கொண்டிருந்தாள்.

அவள் ஏதோ ஒரு குரலின் ஆணைக்கேற்ப்ப அடி வயிற்றில் இருந்து வெளியே தள்ள பிரயத்தனப்படுவதைப் உணர்ந்தாள். மறுபடியும் அவளின் நினைவு சரிந்தது. கண்முன் கோளத்தின் மத்தியிலிருந்து குழந்தை உற்றுப் பார்த்தது. அந்தக் கோளத்தின் சுவர்கள் கரைந்து நீராய் வேகத்துடன் எங்கும் தரையில் வழிந்து கொண்டிருந்தன. குழந்தையின் கண்களில் நீர் வழிவதைப் பார்த்தாள்.அது சத்தம் வராமல் அழுவதைப் போலிருந்தது. கரையும் கோளத்தின் நீர்ப்பெருக்குடன் வழிந்து ஓடாமல் இருக்க ஒற்றைக் கரத்தை அவளை நோக்கி நீட்டியது. அதன் கரத்தை பற்றி இழுக்க தான் கரம் நீட்டுவதையும் அவள் பார்த்தாள்.அவள் உதடுகள் திரும்ப திரும்ப முணுமுணுத்தவாறு இருந்தன. உடல் முழுவதும் ஒரு வித விரைப்பு நிலை பரவியது.

*

அவள் நினைப்பு தட்டியபோது சூழல் மிக அமைதியாக இருந்தது. வெளிச்சம் மட்டுப் பட்டிருந்தது. கண்களை மிகச்சிரமத்துடனே விழிக்க வேண்டியிருந்தது. தொண்டையில் எரிந்தது. நீர் குடித்தால் தேவலை போலிருந்தது. லேசாகத் தலையைத் தூக்கி பார்த்தாள். கீழே தரையில் அம்மா படுத்திருந்தாள்.

அவளின் குரல் கேட்டதும் அம்மா சட்டென்று எழுந்தமர்ந்தாள்.

‘எழுந்திட்டியா. ஜாக்கிரதை. உடம்பை அசைக்காத ‘ என்றாள்.

அம்மாவை பார்த்து அவள் புருவத்தை உயர்த்தினாள். அம்மா தன் விரல்களால் அவள் முகத்தை தடவி தலைமயிரை ஒதுக்கி விட்டாள்.

‘நல்லபடியா பேத்தி வந்தாச்சு. ஆனா நீ செய்த கலாட்டா போல நான் பார்த்ததில்ல. எத்தனை பிரவசம் பார்த்திருக்கன் நான். விடாப்பிடியா வயித்த இறுக்கிக்கிட்டியே ீ. கடைசில ஸிஸேரியன் பண்ண வேண்டியதா போச்சு. எத்தனை டென்ஷன் தெரியுமா எங்க எல்லாருக்கும். ‘

‘இரு. நர்ஸைப் பாத்து குழந்தைய எடுத்துக்கிட்டு வர்ரேன். ‘

அவளுக்கு உடலைப் பற்றிய உணர்வு தோன்ற, தலையை சரித்து பார்த்தாள். வீக்கம் அடங்கி தொய்ந்து போயிருந்தது. தன் வயிற்றையே பார்த்துக் கொண்டிருந்தாள் சற்று நேரம். பக்கத்தில் விழுந்திருந்த கையை தூக்கி வயிற்றின் மேல் வைத்து, வயிற்றை லேசாகத் தடவினாள்.எந்த விதமான உணர்வுகளுமற்று ஏறக்குறைய தட்டையாக இருந்தது. இடுப்பை லேசாக அசைத்தாள். லேசாக எடையற்று இருந்தது உடல்.

குழந்தையுடன் அம்மா உள்ளே வந்தாள். அவளிடம் பெருமிதத்துடன் நீட்டினாள். குழந்தையை பார்த்தாள். மூடியிருந்த இமைகளை மெதுவாய் திறந்து அவளைப் பார்த்த குழந்தை, அறிமுகமற்ற சாயலுடன் இருந்தது.

முற்றிலுமான அன்னியத் தன்மையுடன் குழந்தையை பார்த்தாள். வயிற்றுக்குள் இருந்தது வெளி வருகையில் தன்னுடனான நுட்பமான ஒரு இணைப்புக்கண்ணியை துண்டித்து வேறோர் உருக்

கொண்டது போலிருந்தது.

அப்போது உடல் முழுவதும் வெற்றிடமொன்று பரவியிருப்பதை அவள் உணர்ந்தாள். அது ஏற்படுத்திய இழப்பு அவளால் தாங்கமுடியாததாக இருந்தது.

– ஜுன் 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *