இருமுனைத் தேடல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 5,002 
 

அந்த காவல் நிலையத்தில் வருவோரும் போவோருமாக வழக்கத்தைவிட கொஞ்சம் அதிக நடமாட்டமாகஇருந்தது. ஏற்கெனவே சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டனுடன் பேசிய இளைஞன் சிவக்குமார் ஸ்டேஷனுக்குவந்தபோது, அவன் வந்து நின்றதை கவனிக்காமல் மணிகண்டனுடன் ரைட்டர் கருணாவும் ஏதோ முக்கிய பேச்சு விவகாரத்தில் இருந்தனர்.

“என்னய்யா இது… இன்னுமா அந்த பெரியவரின் பிரச்னையை நீங்க முடிக்கலே? சரி …அவர் கொடுத்தஅந்த பையன் போட்டோவை காட்டுங்க” என்றார் மணிகண்டன். கருணா தன்
கையிலிருந்த போட்டோவை நீட்டினார். அதைப் பார்க்க நேர்ந்த சிவக்குமார் சற்று திடுக்கிட்டு, “சார்… அந்த போட்டோவை நான் பாக்கலாமா?” என்றான்.

“ஆமா…நீங்க யார்?” மணிகண்டன் புருவங்களை நெறித்தார்.

“நான்தான் சார் உங்களை கூப்பிட்டு பேசினது… என் வயசான அப்பாவை நாள் முழுக்க காணோம்னு சொன்னேனே… அந்த சிவக்குமார்…”

“ஓ…சரி… இந்த போட்டோவுல இருக்கிற பையனை இன்னக்கி எங்கேயாவது பாத்தீங்களா?“ ஏதாவதுசின்ன ‘லீட்’ கிடைக்காதா என்ற நைப்பாசை…

போட்டோவை பார்த்த சிவக்குமாரின் கண்கள் பனித்தன. மணிகண்டனையும் கருணாவையும் ஒருமுறைபார்த்துவிட்டு, போட்டோவை நோக்கி சொன்னான்.

“இந்த போட்டோவுல இருக்கிறது நான்தான் சார் சின்ன வயசுல…” சிவக்குமாரின் குரல் சற்றுநடுங்கியது. “இதை உங்ககிட்ட கொடுத்தவர் இங்கே இருக்காரா?“ அவன் தொடர்ந்தான்.

கருணா அந்த பெரியவரைஅழைத்து வந்தார். எண்பதை எட்டிய ஒரு பெரியவர் தயக்கத்துடன்நின்றிருந்தார். நரைத்த முடி, முகத்தில் முதுமை பதித்த கோடுகள், பழுப்பேறிய வேட்டி, வெளிர் நீல சட்டை, வெறித்த பார்வை – எதையோ, எப்போதோ தொலைத்துவிட்டது போல் நின்றிருந்தார்.

‘குமார்… என் பையன்…அவனைக் காணோம்’ இதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டு போட்டோவைகாட்டினார் என்று பெரியவரைப் பற்றி கருணா சொன்னார்.

சிவக்குமார் பெரியவரிடம் சென்று, அவருடைய இரண்டு கைகளையும் மெல்ல பிடித்துக் கொண்டுபேசினான்.

“என்னப்பா இது? நான் உங்களை எங்கெல்லாம் தேடறேன். உங்களை காணோம்னு புகார் கொடுக்கஇங்க வந்தேன்… ஆனா நீங்க? என்னைத் தேடிகிட்டு என் போட்டோவை எடுத்துகிட்டு இங்கே வந்து நிக்கறீங்களே?”

பெரியவரின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் தெரியவில்லை. சிவக்குமாரின் கையிலிருந்துபோட்டோவை எடுக்க முயன்றார். அதை அவரிடம் தந்தான் சிவக்குமார். மணிகண்டனும் கருணாவும் திகைத்து நின்றனர்.

சிவக்குமார் பேசினான். “சார்… என் அப்பாவுக்கு ஞாபக மறதி – பெரிய பிரச்னையா இருக்கு… எப்போவோ இவர் வாழ்க்கையில நடந்த சில நிகழ்ச்சிகள் இவருக்கு நினைவில் இருக்கலாம்… ஆனா…இப்பநடக்கறது எதுவுமே நினைவுக்கு எட்டறதில்லை. நேத்து வீட்ல நாங்க பழைய போட்டோக்களை பாத்துகிட்டுஇருந்தோம்… அப்ப, இவர் என் போட்டோவை எடுத்து, ‘இது குமார்…குமார்…’ அப்படின்னு சொல்லிகிட்டேஇருந்தார். போட்டோவையும் தங்கிட்டேயே வைச்சிகிட்டார். இன்னிக்கு பையனை காணோம்னு இங்கே வந்துநிக்கறார்… என்ன செய்யறதுன்னு தெரியலே…”

“நான் சின்ன வயசுல ஒரு தரம் வீட்டை விட்டு ஓடி, நாள் முழுக்க ஒரு பிரண்ட் வீட்டுல இருந்துட்டேன். இந்த போட்டோவை எடுத்துகிட்டு என்னை தேடினவர், இதே ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்தார்…நேத்துபோட்டோவை பாத்ததும் அந்த நிகழ்ச்சி இவருக்கு பழைய நினைவை கிளறியிருக்கு… அதனால… ஸ்டேஷனுக்கு வந்து உங்களையும் குழப்பிட்டார்… உங்க நேரத்தை வீணாக்கிட்டோம்…எங்களை மன்னிச்சிடுங்க… நாங்க புறப்படலாமா, சார்? அப்பாவுக்கு ரொம்ப களைப்பு…”

இருமுனைத் தேடல்!

பிள்ளையைத் தேடிய அப்பாவும் தந்தையைத் தேடின தனயனும்… அவர்கள் போவதைப் பார்த்து மணிகண்டனும் கருணாவும் பெருமூச்சு விட்டனர். சிவக்குமார் தன் அப்பாவைதன்னுடனேயே வைத்து கவனித்துக் கொள்கிறானே… ஒருவகையில், இந்த அப்பா-பிள்ளை பாசப் பிணைப்புமனதுக்கு இதமாகவே இருந்தது. அதே நேரத்தில், முதியோர் இல்லங்களில் விடப்பட்ட எத்தனையோ அம்மா, அப்பாக்களின் பரிதாப நிலையை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியுமா?

மணிகண்டனுக்கு வேதனை மனதைக் கவ்வியது…நெடு நேரம் அப்பாவும் பிள்ளையும் சென்ற திசையிலிருந்து பார்வையை திருப்பவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *