கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 8,005 
 

அனுசுயா-பட்டாபி இருவரும் தம்பதிகள், புற நகர்பகுதியில் வீடு கட்டி குடியேறி, பிள்ளைகள், கணேஷ் மூத்தவன் 12ம் வகுப்பும், சின்னவள் காவிரி 7ம் வகுப்பும் படிப்பதற்க்காக சொந்த ஊரான புன்செய் கிராமத்தை விட்டு வந்த ஐயர் குடும்பம், நல்ல ஆச்சாரமான குடும்பம், பய பக்தியோடு, பழி பாவத்திற்கு அஞ்சுபவர்கள். பட்டாபிக்கு ஆசிரியர் வேலை, அனு பட்டதாரி, வீட்டை நன்கு கவனித்து பிள்ளைகளை நன்றாக படிக்க டியூஷன் கொண்டு விட்டு அழைத்து வரும் வேலை ஆகியவற்றை திறம்;பட செய்யும் இல்லத்தரசி. கொஞ்சம் முன்கோபக்காரி.
இவர்களின் நேர் பின் மாடி வீடு.

பின் வீட்டில் இருக்கும் ஆசிரியர் குடும்பம், கணவன் பாண்டியன், பட்டாபி கூட அரசு பள்ளியில் வேலை பார்ப்பவர், மனைவி கோமதி கணேஷ் படிக்கும் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு அறிவியல் ஆசிரியை. அவர்கள் வீட்டில்; இரு பிள்ளைகள், இரட்டைகள். 7ம் வகுப்பு படிக்கும், கவின், நவினா இருவரும் காவிரியின் தனியார் பள்ளி மற்றும் வகுப்புத் தோழர்கள். பட்டாபி பள்ளிக்கு பாண்டியனோடு சேர்ந்தே போவார், வருவார் இருவரும் நல்ல நண்பர்களாகவும், தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவும், பொறுப்புடன் வளர்த்து வந்தனர். அனுசுயா மற்றும் கோமதி இருவரும் அவ்வளவு பழகவில்லை. அறிமுகமுண்டு, எப்பொழுதாவது பள்ளி பெற்றோர் மீட்டிங்கில் சந்தித்து பேசியதோடு சரி. அதற்கும் கோமதிக்கு நேரமே பள்ளியில் கழிந்துவிடும், மீதி டீயூஷனில் கழியும். இவ்வாறாக நாட்கள் நகர ஒரு சனிக்கிழமை நன்னாளில் இரு குடும்ப தலைவிகளுக்குள் முட்டிக்கொண்டது. அண்ணா? இங்க வாங்கோ!! இந்த அக்கிரமத்தை பார்த்தேளா? இவாகிட்ட எத்தனை தடைவ சொல்லியாச்சு! அசைவம் சாப்பிட்டு முட்டை ஓடுகள், மற்றதை எங்காத்து கொல்லைல போடாதிங்கோனு!
கேட்கிறாளா? நான்தானே சுத்தம் பன்றேன், நீங்க போய் என்ன ஏதுனு கேட்காம, நண்பனே! நண்பனே! னு பாட்டு பாடின்றுங்கோ! அவாத்து குப்பைய கொண்டுவந்து உங்க மேல போடறவரைக்கும், எனக்கு ஒன்றும் சரியா படலை,

அவா வேனுமின்னே செய்யறா! பொறாமை நம்ம காவிரி நன்னா படிக்கிறா, பாட்டு பாடறா அதெல்லாம் பார்த்து எரியறுது போல, அதான் நம்மல டிஸ்டர்ப் பன்றா….

பட்டாபி மூச்சுற்று நின்று.. ஆச்சா இன்னும் ஏதாவது இருக்கா, எங்க ஆரம்பிச்சு எங்க வந்து நிக்கிற நீ, இப்படியெல்லாம் யோசிப்பாளா?

ஏன் அவங்க வேலைக்கு போறா! அதனால் உனக்கு பொறாமைனு கூட சொல்லலாம்ல.. என்று படபடவென்று கூறி முடித்தான்..

அவளைப் பார்த்தான், பச்சை காளி போல, கண்கள் சிவந்து முறைத்தாள். அதானே! என்னடா இன்னும் வக்கீல் ஆஜர் ஆகலையேனு பார்த்தேன், அடுத்தாத்து மேல உள்ள அக்கரை கொஞ்சமாச்சும் நம்மாத்து மேல இருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன்னு வேற மேட்டருக்கு தாவினாள்..

பாவம் பட்டாபி;! சரி சரி! நான் அவாளைப் பார்த்து கேட்கிறேன்! கொஞ்சம் பொறுமையாய் இரு. என்றான். நல்ல வேலை பசங்க வீட்டில் இல்லை. அதற்குள், கோமதி அந்த பக்கம் அடுப்படி பால்கனி வர, அனு இங்கிருந்தே கோபமானாள், இங்க பாருங்கோ! நான் நிறைய தடைவ சொல்லிட்டேன் இந்த முட்டைஓடு, குப்பையெல்லாம் எங்காத்து கொல்லைல போடறேளே! இது நன்னாயிருக்கா! அதோடு முடித்திருந்தால் பிரச்சினை இல்லை, அறிவு இருக்கான்னு கேட்டதுதான் தாமதம், உஷ்ணமானாள் கோமதி, அதற்கு பிறகு பேசியது அனைத்தும் தேவையற்ற வார்த்தைகள் சண்டையை பெரியதாகச் செய்யும் பேச்சு என போய் கொண்டிருந்தது.

பாண்டியன் அங்கேயும், பட்டாபி இங்கேயும் சமாதான படுத்தியும் பிரயோஜனமில்லை. காவிரி, கவின், நவினா ஆகியோர் விளையாடிவிட்டு சண்டை பார்த்து வீடு வந்தாள், என்னாச்சும்மா? என்றதும் தான் ஓய்ந்தனர்.

பாண்டியன் வீடு, கோமதி, நாங்க போடலைனு சொல்ல வேண்டியதுதானே! நீயும்; கூட அவங்க கூட வம்பா பேசிகிட்டுருக்கே! ஏங்க! எங்க அந்தம்மா என்னை பேச விட்டது, அறிவு இருக்கான்னு கேட்டதுதான் எனக்கு கோபமாயிடுச்சு. நாம ஏங்க அங்கே போடனும், நான்தான் வீட்லேயே குப்பைத்தொட்டி வச்சு போடறேன், கீழே வாடகைக்கு இருங்காங்களே, அவங்கக்கிட்ட சொல்லிடுங்க! குப்பையெல்லாம் அங்கே போடாதிங்கன்னு.. அதை காதில் வாங்கின குடியிருப்பவர் நாங்க ஏன் போடறோம் எங்களுக்கு அறிவி;ல்லையா என்றார், காட்டமாக, இதை கேட்ட கோமதி, அப்ப எங்களுக்கு இல்லைங்கிறீங்களா?னு பிலுபிலு என பிடித்தாள். இவங்க சண்டையில், குடியிருந்தவர்க்கு வீடு காலி செய்ய நேரம் நிர்ணயிக்கப்பட்டது தான் மிச்சம். அம்மா இப்ப காவிரிகிட்ட நாங்க பேசலாமா? கூடாதா? அவளுக்கு முட்டை குடுப்பியா? என கேட்டான் கவின். நவீனாவோ, நாளைக்கு என்கிட்ட பேசுவாளா? எனக்கேட்டாள். அந்தம்மா ஏதோ கோபத்தில் அப்படி பேசிட்டாங்க, நீங்க ஒன்றும் மனசுல ஏத்திக்காதிங்க! நீங்க எப்போதும் போலவே பழகுங்க! கோமதி.

பட்டாபி சார் ரொம்ப நல்லவர், நான் அவர்கிட்ட நாளை பேசி சமாதானம் பன்னிடறேன், நீங்க எல்லோரும் இந்த விஷயமா யாரும் சண்டை போடவே கூடாது, என்ன என்றார் பாண்டியன். ஏங்க நாங்கள் சண்டைக்கா நிக்கிறோம், அந்தம்மா எப்போதுமே என்கிட்ட பேசாது, அதான் இன்னிக்கு ரொம்ப பேசிட்டு, விடுங்க இதெல்லாம் ஒரு பிரச்சனையா? என்றாள் முதிர்வாக.
பட்டாபி வீடு….

கணேஷ் வந்தான், நடந்தது அறிந்தான், என்னம்மா? இப்படி பன்னிட்டே? அவங்க என்னோட இயற்பியல் டீச்சர், போச்சு என பயம் காட்டினான்.

இன்டர்னல் மார்க் கவலை, அந்த டீச்சர் கோபத்தை நம்ம மேல ஏத்தி, மார்க்ல முட்டைய போட்டா. அவ்வளவுதான்.. என புலம்பினான். காவிரி, ஏம்மா? சண்டை போட்ட அவர்கள் எல்லாம் என்னோட ப்ரண்ட்ஸ் நாளைக்கு என்னை கிண்டல் பன்னுவாங்க! போம்மா என்றாள். அவளுக்கு இன்னொரு பெரிய கவலை, சண்டையில் தான் முட்டை சாப்பிடுவது தெரிந்துவிடுமோ, அவளுக்கு பிடித்த முட்டை இனிமேல் கிடைக்காதோனு வருத்தப்பட்டாள். ஆம் தினமும் அவர்கள் எடுத்து வரும் முட்டையில் இவளின் பங்கும் உண்டு. இவளுக்கு அவிச்ச முட்டை பிடிக்கும் என்பதாலேயே அவர்களும் எடுத்து வருவார்கள்.

பட்டாபிக்கோ, சக ஊழியர் பாண்டியன் என்ன நினைப்பாரோ? இனி அவர்கூட பள்ளி போக முடியுமா? எனக் கவலை. அல்பம் இந்த முட்டை ஓட்டினால் எவ்வளவு பிரச்சனை சே! என ஒவ்வொருவரும் புலம்பினர்.

மறுநாள் காலை,

பட்டாபி பள்ளி கிளம்பினான், எப்படி பாண்டியன் கூப்பிடுவாரா? இல்லையா? தெரியாமல் அவன் வண்டி எடுத்தான், வெளியே உருட்டினான், பாண்டியனும் வண்டி வெளியே எடுத்தான், ரோட்டிற்கு வந்தான், இவனைப்பார்த்து கண் அசைத்து அங்கே வாங்க என சைகித்தான். இவனும் புரிந்துகொண்டு அங்கே சென்று ஏறிச்சென்றான், என்ன சார், கோவிச்சுகிட்டு கிளம்பிட்டிங்க போல. என கிண்டலடித்தான். இல்லைப்பா! அவள் கண்ல பட்டா அவ்வளவுதான் அதான், தப்பில்ல சார், யாராயிருந்தாலும் வீட்ல அசிங்கம் விழுந்தா கோபம் வரும்தானே! ஆனா! அதை யாரு போட்டாங்கறதுதான் பிரச்சனை, நாங்க போடலை! அதனால் அதை நாங்க பெரிசா எடுத்துக்கலை. எனக்கு என்ன ஒரே வருத்தம், குடியிருந்தவரை கோபத்தில் காலி பண்ண சொல்லிட்டா என் மனைவி.

ரொம்ப பெரிய மனசு சார் உங்களுக்கு என்றார் பட்டாபி. எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்கறீங்க. சரி விடுங்க என்றார் பாண்டியன்.

பள்ளியில்..

காவிரி ஹாய் என்றாள்! கவினும் ஹாய் என்றான் பதிலுக்கு. நவீனாவோ உதட்டை சுலுக்கினாள் வாய் காது வரை போய் வந்தது. வா காவிரி! லஞ்ச் பண்ணலாம் இது கவின். டேய் கவின் வேண்டாம் அம்மாகிட்ட சொல்லுவேன்டா, என்றாள் நவீனா. போய் சொல்லிக்கோ! ஷேர் பன்னனும்னு அம்மாதான் சொன்னாங்க! இந்தா காவிரி உனக்கு பிடிச்ச அவிச்ச முட்டை. அது உனக்கு குடுத்தது, நீயே சாப்பிடு! எனக்கு வேண்டாம் என்றாள்.

லூசு இங்க பாரு, அம்மா எப்போதும் குடுப்பதை விட இன்னிக்கு நிறைய குடுத்திருக்காங்க! உனக்கு குடுக்கச் சொல்லிதான். அப்படியா என்றாள் குழந்தையாய், ஆசையாய் சாப்பிட்டனர், நவீனாவும் இனைந்துகொண்டாள். உங்கம்மா அவ்வளவு நல்லவங்களா? என்றாள் காவிரி. எல்லா அம்மாவும் நல்லவங்கத்தான் குழந்தைங்ககிட்ட.. என்றான் பெரியவனாய்.

பன்னிரெண்டாம் வகுப்பு.. இன்னிக்கு, ரெக்கார்ட் நோட் இறுதி நாள். என்ன ஆக போகுதோ? வகுப்பில் நோட்டை பார்த்து கொண்டிருந்தாள் கோமதி, இவன் நோட்டை நன்றாக பார்ப்பதாக உணர்ந்தான், புரட்டி புரட்டி பார்த்தாள், தனியாக எடுத்து வைத்துவிட்டு அவனைப்பார்;த்தாள். அவனுக்கோ பீதியில் சப்தமும் ஒடுங்கியது, போச்சு எங்க வீட்ல முட்டைய போட்டாளோ? இல்லையோ? இங்க நிச்சியமா போடப்போறானு நினைத்துப்பயந்தான்.

கணேஷ்! அப்புறமா என்னை வந்து பார் என்றாள் கோமதி. மிஸ், வரலாமானு கேட்டு நின்றான், வா! கணேஷ்! என்ன ரெக்கார்ட் எழுதியிருக்க! இரண்டு பேஜ் விட்டுட்டு, இப்படியே சப்மிட் பண்னினா மார்க் குறைஞ்சிடும், அதான் நான் எடுத்து வந்துட்டேன், இந்தா சரியா எழுதி என் கிட்ட கொடு, நான் வச்சிடுறேன்.

நல்லா படி ஏதாவது சந்தேகம் வந்தா தயங்காம கேளு, இயற்பியல்ல சென்டம் எடுக்கனும் என்ன! என்றார் கனிவாக, ஓகே மிஸ் என்றான்.

மாலை பஸ்ஸிலிருந்து வந்து கவின், நவீனா, மற்றும் காயத்ரி வந்திறங்கினர். காயத்ரி வந்ததும், நவீனாவிற்க்கு கடும் வயிற்று வலி என்றுச் சொன்னாள், தமக்கு 2 மாதம் முன் வந்த மாதிரி அடி வயிற்றை பிடித்துக்கொண்டிருப்பதாக சொன்னதுதான் தாமதம், தாயுள்ளம் புரிந்து கொண்டது. அச்சச்சோ, அவ அம்மா ஸ்கூல் விட்டு வர லேட்டாகுமே! உடன் அடுப்பில் வலி நிவாரண கஷாயம் வைத்துவிட்டு ஓடினாள், கோமதி வீட்டிற்க்கு, அவளை அழைத்தக்கொண்டு தன் வீட்டிற்கு வந்து கஷாயம் பருக வைத்தாள்,

காயத்ரியின் ஆடைகள் கொடுத்து மாற்றச்சொன்னாள், பயப்படாதே! இது இந்த வயதில் நடப்பதுதான், சுத்தமாக இருந்தால் போதுமானது எனக்கூறி அமைதி படுத்தி அவள் அறையில் தங்க வைத்து ஓய்வு எடுக்கச்செய்தாள். நவீனாவும் நன்றாக தூங்கிவிட்டாள். கவினும் காவிரியும் பால் அருந்திவிட்டு வெளியே விளையாடினார்கள்.

கோமதியும் பள்ளியிலிருந்து வந்தது, தெரிந்துகொண்டு அனுசுயா, கோமதி வீட்டுக்கு சென்று, நவீனா பூப்பெய்திய செய்தியை மகிழ்வுடன் தெரிவித்தாள், நவீனா நன்கு உறங்குவதாக கூறினாள், சிறிது நேரம் கழித்து கொண்டு விடுகிறேன் என்றாள். மாலை இருவரும் வந்து நவீனாவை அழைத்துச் சென்றனர். மறுநாள் காலை,

மாடியில் கோமதி துணி உணர்த்திக் கொண்டிருந்தாள். அனுசுயாவும் துணிகளை எடுத்துக்கொண்டு வந்தாள். ஒருவருக்கொருவர் பார்த்தனர், பேசத்தோணவில்லை, நவீனாவின் நேற்றைய பள்ளி சீருடையை உணர்த்துவதைப் பார்த்தாள் கோமதி, ஏதோ நெஞ்சம் கொஞ்சம் இளகி நெருடியது.

அப்பொழுது ஏதேச்சையாக மேலே பார்த்தாள் அனுசுயா! அங்கே அவள் வீட்டு தெண்ணை மரம் கிளைக்கு நடுவில் காக்கை கூடும், அருகே காகம் உட்கார்ந்து முட்டை ஓட்டினை வைத்து சாப்பிட, அது தவறி கீழே அனு வீட்டில் விழுந்ததை அனுவும், கோமதியும் ஓரே நேரத்தில் பார்க்க, இவர்கள் கோபமும் கீழே விழுந்த முட்டை ஓட்டைப் போல் சிதற, இருவரும் ஒரேசமயத்தில் புன்னகைத்தனர், வெட்கத்துடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *