இயற்கையின் நியதி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,115 
 

காலை, ஒன்பது மணி.
தலைமை நர்ஸ் பேஷன்டுகளை பார்வையிட வந்தார்.
மனைவி நாகம்மாவின் கட்டில் அருகில் அமர்ந்திருந்த சத்தியமூர்த்தி, எழுந்து ஜன்னல் பக்கம் எட்டிப் பார்த்தார்.
மருத்துவமனை வாசலில் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். அவள், தவிப்புடன் நிற்பது தெரிந்தது.
அவர், “ஒரு நிமிஷம் நில்லும்மா… இதோ வந்துடறேன்…’ என்று கை ஜாடை காட்டினார்; அவள் தலையசைத்தாள்.
திரும்பி கட்டிலருகே வந்தார்.
மனைவி நாகம்மா, சோர்வுடன் படுத்திருந்தாள். சற்று முன்தான் அவளுக்கு முகம் துடைத்து, தலை வாரி, பொட்டு வைத்து, உணவும், மாத்திரைகளும் கொடுத்திருந்தார்.
இயற்கையின் நியதி!அவளிடம், “”தேவகி வந்திருக்கா… காலேஜ் அட்மிஷனுக்கு இன்னைக்கு கடைசி நாள். நான் துணைக்குப் போயிட்டு வந்துடறேன்,” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, நர்ஸ் அங்கு வந்து விட்டார்.
“”என்ன மிஸ்டர் சத்தியமூர்த்தி… எங்கே போகப் போறீங்க? இன்னும் கொஞ்சம் நேரத்தில் தலைமை டாக்டர் வர்றார். உங்கள் மனைவி ஆபரேஷன் பத்தி முக்கியமான முடிவெடுக்கவிருக்கிறார். அதோடு பேஷன்ட்டைப் பார்க்க, ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஒருவரும் வர்றார். தெரியுமில்லையா?”
“”நான் அதுக்குள்ள திரும்பிடுவேன் சிஸ்டர்!”
“”இந்த நேரத்துல மனைவி பக்கத்துல இல்லாம, அப்படியென்ன தலை போற காரியம்?” அதட்டினார் நர்ஸ்.
“”போயிட்டு வரட்டும் சிஸ்டர்… அது, ஒரு பொண்ணோட எதிர்காலம் சம்பந்தப்பட்டது,” என்று சொன்னாள் நாகம்மாள்.
ஓட்டமும், நடையுமாக படியிறங்கி வெளியில் வந்தார் சத்தியமூர்த்தி.
பாவாடை தாவணியில் இருந்த தேவகி, துணிப்பை ஒன்றை மார்போடு அணைத்து, திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்.
“”வாம்மா தேவகி… வந்து ரொம்ப நேரமாச்சா?”
“” இப்பதான் வந்தேன் மாமா… மாமி எப்படி இருக்காங்க. நான் பார்க்கலாமா?”
“”இப்ப முடியாதும்மா… விசிட்டர்ஸ் அவர்ஸ்லதான் உள்ள விடுவாங்க. காலேஜ் வேலையை நாம முடிச்சிருவோம். சர்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கிட்டியா?”
“”ம்…”
“”வா… போகலாம்…”
மருத்துவமனைக்கு பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தார். பின் தொடர்ந்தாள் தேவகி.
“”டாக்டர் என்ன சொல்றார் மாமா?”
“”ஆபரேஷன் பண்ணி குணப்படுத்திடலாமாம். பயப்பட வேணாம்ன்னு தைரியம் சொன்னாரு… இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் வருவார். அதுக்குள்ள காலேஜ் மேட்டரை முடிச்சுட்டு திரும்பணும்…”
“”சாரி மாமா… உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தறேன்!”
“”சேச்சே… அப்படியெல்லாமில்லைடா…”
“”மாமிக்கு முடியாம இருக்கிற நிலையிலும்… எனக்காக…” அவள் நெகிழ்ந்தாள்.
“”இதுவும் என் கடமைதானேம்மா… தவிர, துணைக்கு போகச் சொன்னதே மாமிதான்!” என்று சொன்னபடி வேக நடை போட்டார்.
அவரை பின் தொடர்ந்து சென்றாள் தேவகி.
இரண்டு பெண்கள் கொண்ட குடும்பத்தில் மூத்தவள் தேவகி; இளையவள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். பல வருடங்களுக்கு முன், கட்டட வேலை செய்யப் போன இடத்தில், எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்து, ஸ்தலத்திலேயே மாண்டு விட்டார் அப்பா. அவருடன் வேலைக்கு போயிருந்த அம்மா காமாட்சியும், விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாய் உயிர் தப்பினாலும், கால் ஊனமாகி விட்டது.
எதிர்காலமே இருண்டு விட்டது போல ஆயிற்று. பார்த்தவர்கள் எல்லாம் பரிதவித்தனர்.
“ரெண்டு பெண் பிள்ளைகளை வச்சுக்கிட்டு, எப்படித்தான் கரை சேர போறாளோ இந்த காமாட்சி…’ என்று, கண்ணீர் விட்டனர்.
அப்போது, 10 வயதுதான் தேவகிக்கு; ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
எதிர் வீட்டில் குடியிருந்த சத்தியமூர்த்தியும், அவர் மனைவி நாகம்மாவும் தான் ஆறுதல் சொன்னதோடு, ஆதரவாகவும் இருந்தனர். பல நாள் அவர்கள் வீட்டில்தான் சாப்பாடு.
காமாட்சிக்கு தையல் வேலை கற்க வைத்து, யார் யாரையோ பிடித்து, எங்கெங்கோ அலைந்து, கையாலேயே இயக்கும் தையல் மிஷினை வாங்கித் தந்தார் சத்தியமூர்த்தி.
தேவகியும் தையல் கற்று, ஒத்தாசையாய் வீட்டில் இருக்கக் சொல்லி விட்டாள் காமாட்சி.
“உதவியாக இருக்கட்டும். அதுக்காக படிப்பை நிறுத்த வேண்டாம். இந்த காலத்துல பெண்களுக்கு கல்விதான் சொத்து!’ என்று வாதிட்டு, அவள் கல்வி தொடர உதவினார். அவ்வப்போது நோட்டு, புத்தகம் வாங்கி கொடுப்பார். நலிவடைந்தவர்களுக்கான உதவித் தொகைகள் அரசாங்கத்திலோ, தனியாரோ கொடுப்பதாக தெரிந்தால், அது, அந்தக் குடும்பத்துக்கு கிடைக்கச் செய்வார்.
தேவகி குடும்பத்துக்கு மட்டுமல்ல… அந்தப் பகுதியில் யாருக்கெல்லாம் உதவி தேவைப்பட்டாலும், தன்னால் முடிந்தால் செய்து கொடுப்பதும், முடியாத பட்சத்தில் யாரை அணுகினால் உதவி கிடைக்கும் என்பதையும் தெரிவிப்பார்.
சமையல் கான்ட்ராக்டர் ஒருவரிடம் தலைமைச் சமையல்காரராய் இருக்கும் சத்தியமூர்த்திக்கு, குழந்தைகள் இல்லை.
அந்தக் குறை தெரியா வண்ணம், “உனக்கு நான் குழந்தை; எனக்கு நீ குழந்தை…’ என்று அன்போடு வாழ்ந்து கொண்டிருந்தனர்.
சில மாதங்களுக்கு முன்தான், நாகம்மா முதன் முதலாக தலைவலி என்று சொன்னாள்.
அதுநாள்வரை அவளை ஒரு நோயும் அண்டியதில்லை. சாதாரண தலைவலி என்றும், தைலத்தால் சரி பண்ணிவிட முடியுமென்றுதான் ஆரம்பத்தில் நம்பினார். போகப் போக தலைவலி விஸ்வரூபம் எடுத்தது.
மருத்துவமனை பரிசோதனையில், மூளையில் கட்டி வளர்வதாக தெரிய வந்ததும், அதிர்ந்து போயிருந்தார்.
துன்பம் ஒரு புறம்; செலவுச்சுமை குறித்த கவலை மறுபுறம், விசாரித்த வரை, பல லட்சம் ரூபாய் செலவாகும் என்று தெரிந்தது.
அந்த துன்பச் செய்தி தேவகி குடும்பத்தையும் திகைக்க வைத்திருந்தது.
பிளஸ் 2 முடித்து, கல்லூரியில் சேர ஆயத்தமாகிக் கொண்டிருந்த தேவகி, அதற்காக அம்மா சேர்த்து வைத்திருந்த பணம் இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு அவரிடம் விரைந்தாள்.
“இந்தாங்க மாமா…’
“என்ன இது?’
“பணம்… இதை வாங்கிக்குங்க. மாமியோட மருத்துவச் செலவுக்கு வச்சிக்குங்க…’
“வேணாம்மா… இது நீ காலேஜ்ல சேர்றதுக்காக சேர்த்த பணமாயிருக்கும். அந்த வேலையை கவனிம்மா…’
“மாமா… இன்னைக்கு நாங்க பிழைக்கறோம்ன்னா நீங்க செய்த உதவிகளால்தான். பதிலுக்கு உதவி செய்ய ஒரு வாய்ப்பு கிடைச்சதா நினைக்கிறேன். தொகை குறைவுன்னு யோசிக்காம, வாங்கிக்கணும்!’
“பெரிய மனுஷி… சொல்லிட்டா. தேவகி… நான் உனக்கு ஒரு உதவி செய்தால், பதிலுக்கு நீ தான் செய்யணும்ன்னு இல்லை. வேற யாராவது, வேறு ஏதாவது வகையில எனக்கு உதவுவாங்க; அது, இயற்கையின் நியதி. நீ சங்கடப்படாம காலேஜ்ல சேரப் பாரு…’ என்றார்.
“மாமாவுக்கு யார் வந்து உதவப் போகின்றனர். பெரும் தொகை கொடுத்து உதவுகிற அளவுக்கு அவருக்கு வசதியான உறவோ, நட்போ இல்லையே…. கான்ட்ராக்டரும் சொல்லிக் கொள்ளும்படியான நிலையில் இல்லையே…’ என்று கவலைப்பட்டாள்.
தானே விண்ணப்பம் வாங்கி, பூர்த்தி செய்து, ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் பெற தாலுகா ஆபிசுக்கு அலைந்து, நோட்டரி பப்ளிக்கிடம் சர்ட்டிபிகேட், மார்க் லிஸ்ட்டுக்கெல்லாம் அட்டெஸ்ட்டேஷன் வாங்கி… அவள் வகுப்பு ஆசிரியரிடம் பேசி, எந்த கோர்சில் சேரலாம் என்று முடிவு செய்தாள்.
“காலைல ஆஸ்பத்திரியாண்ட வந்துடு. ஸ்பாட் அட்மிஷன். நல்ல மார்க் எடுத்திருக்கே… நீ விரும்பிய பிசிக்ஸ் குரூப் கிடைச்சிடும்…’ என்று தைரியம் சொல்லிவிட்டு போயிருந்தார் சத்தியமூத்தி.
தேவகியின் பெயர் அழைக்கப்பட்டது.
இருவரும் எழுந்து சென்றனர். சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டது.
“பதிவு எண் கொடுத்து, பீஸ் கட்டிட்டு சலானை கொடுத்து, ஸ்டடி மெட்டீரியல் வாங்கிட்டு, கிளாஸ் ரூமுக்கு போகலாம்!’ என்றனர்.
காப்பாளர் என்ற இடத்தில் கையெழுத்திட்ட சத்தியமூர்த்தி, சலானை வாங்கிச் சென்று, பீஸ் கட்டினார். அந்த சலானை வேறொரு பிளாக்கில் கொடுக்க, அவர்கள் புத்தகக்கட்டு ஒன்றை கையளித்தனர்.
அதை தேவகியிடம் கொடுத்து, “”காலேஜ் கனவு ஈடேறியாச்சு. நல்லா படிச்சு முன்னுக்கு வரணும். உன் குடும்பமே உன்னை எதிர்பார்த்துகிட்டு இருக்குங்கறத மனசுல வச்சுகிட்டு, வேறெந்த விஷயங்களுக்கும் மனசுல இடம் கொடுக்காம படிக்கணும்… சரியா?” என்றார்.
தேவகி கண்களில் நீர் துளித்தது.
“”தாங்க்ஸ் மாமா!”
“”நன்றி சொல்லிச் சொல்லி நாக்கு தேஞ்சிரும் போலிருக்கே. நமக்குள் என்னம்மா பார்மாலிட்டி… நல்லா படிச்சு முன்னுக்கு வா… அது போதும்!” என்று சொல்லி வகுப்புவரை சென்று சேர்த்துவிட்டு, கல்லூரியை விட்டு வெளியேறினார்.
அதுவரை சற்று விலகியிருந்த மனைவி குறித்தான கவலை மீண்டும் அவரை ஆக்ரமித்தது. வேகமாக வந்து சேர்ந்தும் தாமதமாகி விட்டது.
“”பொறுப்பில்லாதவரா இருக்கீங்களே… டாக்டர் ரொம்ப கோபப்பட்டார். டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லிட்டார்!” என்றார் நர்ஸ்.
“”ஏன்… ஏன்?”
“”போய் அவர்கிட்ட கேளுங்க…”
பதறியடித்து ஓடினார்.
“”டாக்டர்… என் தலையை அடகு வச்சாவது ஆபரேஷனுக்கு பணம் ரெடி பண்ணிடறேன். தயவு பண்ணி எங்களை விரட்டிடாதீங்க…” என்று கும்பிட்டு நின்றார்.
“”அதற்கு அவசியமே இல்லை மிஸ்டர் சத்தியமூர்த்தி… உங்களுக்கொரு நல்ல செய்தி. இந்த வருஷத்திலிருந்து… வருஷத்துக்கு, பத்து ஏழை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யறதுன்னு போர்ட் ஆப் டைரக்டர்ஸ் முடிவு பண்ணியிருக்காங்க…
“”இது, அடுத்த மாதத்திலிருந்து நடைமுறைக்கு வருது. முதல் ஆபரேஷனே உங்க மனைவிக்குத் தான். அதுவரை, கொடுக்கிற மருந்து, மாத்திரைகளை வீட்டிலிருந்து சாப்பிட்டு வரட்டும்… நாங்கள் குறிப்பிடற தேதியில வந்து அட்மிட் பண்ணாப் போதும்!” என்று டாக்டர் சொல்லச் சொல்ல, கொஞ்ச நேரம் முன்பு, அவரை விட்டு போனது போல் இருந்த உயிர், மீண்டும் திரும்பி வந்தது போல் உணர்ந்தார்.

– மார்ச் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *