இன்னாய்யா நீ ஆம்பள

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 10,627 
 

தஸ்புஸ்ஸென்று மூச்சிரைத்தபடியே “அடியே, உமா என்னால முடியலைடி, என்னை விட்டுடுடி“ கதறினார் இமயவரம்பன்

“அதெப்படி விடமுடியும், வருஷா வருஷம் ஏமாத்துறாங்க… வரமாட்டேங்கறாங்க…. இந்த வருஷம் நடந்தே ஆகணும்…, ஒங்க வயசுக்கும்…. அனுபவத்துக்கும் இத செய்ய முடியலைன்னா இன்னாய்யா நீ ஆம்பள” ஒரு போடு போட்டாள்.

“இன்னாய்யா நீ ஆம்பள!“ வார்த்தை இமயவரம்பனை உசுப்பி விட்டது.

இதற்கு பிறகும் சுரணை வரவில்லையென்றால்“ அவள் கேட்ட கேள்வி உண்மையாகிவிடும்…அப்போதே… துண்டை தோளில் போட்டுக் கொண்டு வெளியேறினார்.

முதலில்….. அவர் போனது முதல்மகன் வீட்டிற்கு…

“வாங்க மாமா… வாங்க …“வரவேற்றாள் மருமகள்.

“இந்த வாரம்தான் நாங்களே ஒங்களைப் பார்க்கறதா இருந்தோம், நீங்களே வந்துட்டீங்க”

“இல்லேம்மா, ஒன் மாமியார் தொல்லை தாஸ்தியா போச்சு, இந்த வயசுல என்னைப் படுத்துறா அலையா விடுறா , சொன்னா கேட்க மாட்டேங்கறா, நீ வந்து ஒன் மாமியாரைப் பார்த்திடேன்”

“ஒங்க பிள்ளை வந்தப்பிறகு கேட்டுட்டு வந்து பார்க்கறேன்” மாமா

டபரா காபி காலியானதும், இடத்தைக் காலி செய்தார்.

அடுத்து இரண்டாவது மகன் வீட்டில்…

”என்னது இவ்வளவு தூரம்….நாங்கல்லாம் இரண்டாம் பட்சம்தான், எப்படியோ வந்திட்டீங்க… வாங்க..வாங்க” வாசற்படியிலேயே வறுத்து வரவேற்றாள்.

“எல்லாம் ஒன் மாமியா தொல்லைதான்” ஒன் பங்குக்கு வந்து கலந்துகிட்டா பிரச்சினை தீர்ந்திடும்-ன்னு நினைக்கிறேன், என்ன ஒன் புருஷன்கிட்டே கேட்கணுமா?

”அவர்கிட்டே எதுக்கு கேட்கணும்?, ஆதான் பூம்பூம் மாடு தலையாட்டிற மாதிரி எல்லாத்துக்கும் ஆமாம் போடுற புள்ளையா வளர்த்து வைச்சிட்டு… அவர்கிட்டே கேட்கணுமாமாக்கும்“

முதல் பிள்ளை வீட்டிலேயாவது டபரா காப்பி கிடைத்த து.

இங்கே…. ”மாமா, நேத்தைக்குத்தான் காபி பொடி தீர்ந்து போச்சு, ஆதனால, கொஞ்சமா சுடுதண்ணீ தரட்டுமா? ஒங்களுக்குத்தான் அப்பப்ப வாயு கோளாறுன்னு சொல்வீங்களே, அதுக்கு நல்லதுதானே” சுடுதண்ணீரால் அர்ச்சித்து விட்டு நான் வந்து…“ அத்தைக்கிட்டே பேசறேன்” என்று வாசல்வரை வந்து ”டாடா” காண்பித்தாள்.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ”அடடா, மாமானார் மேல இன்னா பாசம்” என்று பொங்கினார்கள்.

மூன்றாவது பிள்ளை விட்டில்….. காய்கறி வாங்க வாசலிலிலேயே இருந்தாள் மருமகள். “ வாங்க மாமா, அத்தை எப்படி இருக்காங்க? ஒடம்பு பராவாயில்லையா? அணுசுரணையாய் கேள்வியெழுப்ப தள்ளுவண்டி காய்கறி காரன் மூக்கின்மேல் விரல் வைத்தான்.

“அத்தை நல்லாத்தான் இருக்கா, அவ தொல்லைதான் தாங்கல, இதுக்கு கூட லாயக்கில்லை, நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா” துரத்தாத குறை. அப்படியா மாமா ! (மனதுக்குள்… அடடே, நம்ம டையலாக்கைத்தான் மாமியாளும் பேசறாளோ…இதுக்கு காபி ரைட் இருக்கே..கேஸ் போட்டுடலாமா?) என்று விவரத்தைக் கேட்டுக் கொண்டு சீக்கிரமாவே வந்துடறேன் மாமா கவலைப்படாதீங்க. இந்தாங்க இந்த புத்தகத்தை அத்தைக்கிட்ட குடுத்து படிக்க சொல்லுங்க, நிதானமாயிடுவாங்க”என்று ஒரு புத்தகத்தை பையில் திணித்தாள்.

புத்தக பையை எடுத்து கொண்டு பேருந்தில் பயணம் செய்து இப்போது நான்காவது மகன் வீட்டில்…. காலிங் பெல் அழுத்த… ஓடோடீ வந்து…. வாங்க.. வாங்க.. ஒங்க ஆசிர்வாதம் என்னைக்கும் எங்களுக்கு வேணும் காலை நமஸ்கரித்து வீட்டிற்குள் அழைத்து போனாள் மருமகள்.

“இன்னா மாமா, அத்தை தொல்லையா ? அவர் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே .. கேள்வி கேட்டதில்…. இது ஏதோ ஒரு மருமகளின் “எஸ்.எம்.எஸ்“ கைங்கர்யமென கணித்து விட்டார்.

”ஆமாம்மா”

வந்துடறேன் மாமா” கவலைப்படாதீங்க, அத்தை மனசு புண்படாத பார்த்துக்கோங்க நாங்க இருக்கோம்”

அப்பாடா! இன்னும் ஒருத்தன் வீடு. முடிச்சிட்டா போதும் என்று ஐந்தாவது மகன் வீட்டிற்குள் நுழையும் போதே…. “அம்மா… அம்மா, தாத்தா வந்திருக்கிறாரு” முதல் தகவலறிக்கையை அளித்து விட்டு தாத்தாவுக்கு கன்னத்தில் முத்தமொன்றை தந்து விட்டு கில்லி விளையாட போய்வீட்டான் பேரன்.

“ ஒங்களுக்கு தேவைப்படும்போதுதான் என் ஞாபகம் வரும்” இல்லேன்னா வருவீங்களா? பேச்சின் ஆரம்பமே சூடாயிருந்தது.

”எல்லாம் ஒன்னோட அத்தை ஆசை, அவ ஆசையை பூர்த்தி செய்யலைன்னு என்னை மட்டமா பேசறா” ஆதனால நீயும் வீட்டுக்கு வந்தீன்னா… எல்லோரும் சேர்ந்தா மாதிரியும் இருக்கும் ஒன் மாமியாருக்கும் திருப்தியா இருக்கும்… இன்னாம்மா வந்திடுறீயா” இமயவரம்பன் பேச்சு தொணியில் பணிவிருந்தது.

“அதெல்லாம் முடியாது, ஒங்களுக்கே தேவைன்னா கூப்பீடுவீங்க, இல்லைன்னா கண்டுக்க மாட்டீங்க., மத்த பிள்ளைங்க வீடு மாதிரி நினைச்சுக்காதீங்க, நானும் ஒங்க பிள்ளையும் ஒரு சட்டதிட்டம் வரையறுத்து வைச்சிருக்கோம். எது செய்வதாயிருந்தாலும்…. ஒங்க பிள்ளை, நான், ஒங்க பேரன், என்னோட அப்பா, அம்மா. அண்ணன். தம்பி, அண்ணி, தம்பி சம்சாரம். இவங்க எல்லாரும் சேர்ந்து பேசி முடிவெடுத்து தீர்மானம் போட்டு…. ஒங்களுக்கு தகவல் அனுப்புவோம். அப்புறம் நாங்களே நேர்ல வந்து…. அத்தையோட நிலைமைய ஆராய்ந்து மறுபடியும் மீட்டிங் போட்டு முடிவெடுப்போம்” என்று நீட்டிமுழக்கினாள்.

“ இந்தாங்க தாகசாந்திக்கு முதல்ல தண்ணீயைக் குடிங்க… அப்புறம்….. நீங்க சாப்பிடுறதுக்கு கேழ்வரகு தோசை போதும்ல, அதுதான் சுகருக்கு நல்லது”

கேழ்வரகு தோசையைக் கிள்ளி சாப்பிட்டவுடன்… டேய் …தாத்தா ஊருக்கு போறார்டா, வந்து தாத்தாவுக்கு ஒரு பிளையிங் கிஸ் அங்ஙன இருந்து குடுத்துடா” பிள்ளைக்கு சொல்வதாய் “சீக்கிரமாக கிளம்புங்கள்“ என்பதை உணர்த்தியதை புரிந்து கொண்ட இமயவரம்பன் துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு வெளியேறினார்.

பேருந்து பயணம் முடித்து… அப்பாடா,..அடியே உமா எல்லார்கிட்டேயும் பேசிட்டேன். எல்லாரும் வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்” என்றார்

“பார்க்கலாம்…பார்க்கலாம்…வந்து கலந்துக்கிறாங்களா இல்லையா தெரிஞ்சுடும் அப்ப தெரியும் ஒங்க திறமை” அப்போதும் குத்திக்காட்டினாள்.

“முதலில் ஒருத்தி வந்தாள்… …. தயங்கி ..தயங்கி அடுத்தவள். அதற்கு பிறகு முன்றாவது மருமகள், அடுத்து வந்தவள் பணிவாய் வாசலைத் தொட்டுக்கும்பிட்டு வந்தாள். கடைசியாய் வந்தவள் தெருவிலேயே நின்று உள்ளே வரலாமா? வேண்டாமா? ஆங்கேயே நடைபயின்று….. உள்ளே எட்டிப்பார்ப்பதும். . நடைபோடுவதுமாய் இருந்து கடைசியாய் உள்ளே நுழைந்தாள்.

“ஐந்து மருமகள்களும்… “அத்தே..அத்தே. என்று உமாவை சூழ்ந்திருந்தனர்.

“அப்பாடா ! என்று ரிலாக்ஸாகி ஈசிசேரில் சாய்ந்தபோது… “நீ ஆம்பளைதான்யா, ஒத்துக்கறேன்” என்று பாராட்டுப்பத்திரத்தை வழங்கினாள் உமா!.

எல்லாரும் சேர்ந்து இந்த வருஷமாகிலும்”ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா” கொண்டாடணும்கிற உமாவின் ஆசையை. நிறைவேற்றியவர்கள் கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, மற்றும் காவேரி என்ற மருமகள்கள்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *