இதோ லட்சுமி…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 4, 2021
பார்வையிட்டோர்: 4,103 
 

“இங்க போட்டுக்கலாமா … இல்லன்னா இங்க போடலாமா ? அம்மா கேட்டுக்கொண்டே இருந்தாள் . காலையிலிருந்து அப்பா அம்மா , தங்கை தாரிணி , நான் என்று நான்கு பேருமாய் தோட்டத்தின் ஒவ்வொரு இடமாய் அங்குலம் அங்குலமாய் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தோம் , கூடவே மணி நாக்கை தொங்கபோட்டுக் கொண்டு வாலை ஆட்டிக்கொண்டு வந்தது . எந்த இடம் சரியாக இருக்கும் என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தோம் . ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் பிடித்திருந்தது அதற்கு காரணமுமிருந்தது , அதேபோல் மற்றவர்களுக்கு அதை நிராகரிப்பதற்கு காரணமிருந்தது .கடைசியாக அந்த இடத்தை ஒரு மனதாக தேர்ந்தெடுத்தோம் . வீட்டின் கொல்லை புறத்தின் வலப்புறம் இருந்த அந்த இடம் தான் வசதியாகபட்டது . அந்த இடத்தின் பக்கவாட்டில் இருந்த வேப்ப , பூவரச மற்றும் நாவல் மரங்களும் அந்த இடத்தின் பின் புறம் மதில் சுவரை ஒட்டி இருந்த சீதாப்பழ மரமும் அந்த இடத்தை மெருகேற்றியிருந்ததன . அந்த மரங்களுக்கிடையில் வசதியாக கொட்டகை வேய்ந்துவிட்டோம் . எப்படியும் அந்த இடம் நான்கு அல்லது ஐந்து மாடுகளை கட்டி புழங்க போதுமானதாக இருக்கும் என்று தோன்றியது . இப்போதைக்கு நாம் வாங்கி இருப்பது ஒரு மாடுதானே, தாராளமாய் புழங்க முடியும் . வீட்டின் உள்ளே இருந்துகொண்டு சாளரம் வழியாக மாடுகளை கவனிக்க முடியும் என்பது கூடுதல் காரமா அந்த இடத்தை தெரிவு செய்ததற்கு .

பசு மாடு வாங்கி வளர்த்து பராமரிக்க வேண்டும் என்பது எங்களது நீண்ட நாளைய நிறைவேறாத ஆசை . பாலுக்கும் மோருக்கும் மட்டுமில்லை , பசுவின் மென்மை தன்மையும் வீட்டில் செல்வம் பெருகும் என்ற மேன்மையான நம்பிக்கையும் கூட பசுமாட்டின் தேவை என்ற உந்துதலின் பின்னல் ஒளிந்திருந்த காரணங்கள் . கோனார் மாட்டைப் பிடித்துக் கொண்டு மாலை வருவதாக சொல்லியிருந்தார் . ஆனால் அதற்குள்ளாகவே அவர் ஏற்பாடு செய்திருந்த வைக்கோல் பொதி வண்டி மதியமே வந்து சேர்ந்திருந்தது . அதை வீட்டின் கொல்லை புறத்தின் இடது புறத்தில் வண்டி போகுமளவு இடம் விட்டு வைக்கோல் போர் தயார் செய்தோம் . அதன் பின்னால் இருபதடி தூரத்தில் மதில் சுவர் இருந்தது . வலது ஓரத்தில் வருடமுழுதும் வற்றாத கிணறு இருந்தது . அதனருகில் குளியலறை , அதிலிருந்து ஒரு இருபது அடி தள்ளி கழிப்பறையும் என்று எங்கள் வீட்டுத் தோட்டம் விரிவாகவே இருந்தது . வைக்கோல் போருக்கு பின்னால் மாமரமும், எலந்தை மரமும் , தென்னை மரமும் மதில் சுவரை ஒட்டி மற்றொரு மூலையில் குப்பைகொட்டி மக்கவைப்பட்டும் இருந்தது . இந்த காரணங்களால் எப்போது ஏதாவது ஒரு பறவை இசைக்கும் ராகம் கேட்டுக் கொண்டேயிருக்கும் .

காலையிலிருந்து நாங்கள் செய்த இந்த வேலைகளையெல்லாம் ஒரு வயது மணி நாக்கை வெளியில் நீட்டிக்கொண்டு ஒன்றும் புரியாமல் எங்களுடனேயே சுற்றிக்கொண்டிருந்தது .எப்போது பசு வந்து சேரும் என்று தங்கை கேட்டுக்கொண்டே இருந்தாள் .எனக்கும் கூட எதிர்பார்ப்பு அதிகமாகிக்கொண்டேப் போனது .நொடிக்கொருதரம் வீட்டிற்கும் வாசலுக்குமாக தாரிணியும் மணியும் அலைந்து கொண்டிருந்தார்கள் . சூரியன் மறைந்து லேசாக கருப்பு வண்ண இருள் பரவ தொடங்கியிருந்தது . சலிப்பேயில்லாமல் எங்கள் மூவரின் எதிர்ப்பார்ப்பு படலம் தொடர்ந்தது . கோனார் தெரு முனையில் வந்து கொண்டிருப்பது கண்ணில் பட்டவுடன் “அம்மா “என்று கூவிக் கொண்டே தாரிணி உள்ளே ஓடினாள், அவள் வேகத்திற்கு ஈடுகொடுத்து மணியும் ஓடியது . இனம் தெரியாத மகிழ்ச்சியில் நான் வாயிலிலேயே நின்றிருந்தேன் .

கோனார் கையில் கயிறு அதன் மறுமுனை அந்த பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்தது . வெள்ளை வெளேர் நிறத்தில் , நடுத்தரமான உயரத்தில் இளமையாக அமைதியாக ,அழகாக மிரட்சி கண்களோடு நீண்டிருந்தது . கொம்பு இன்னும் வெளியில் தெரியும்படி பெரிய அளவில் வெளியில் வளர்ந்திருக்கவில்லை . மாடு என்றும் சொல்ல முடியாமல் கன்று என்றும் அழைக்க முடியாமல் அது இருந்தது . நான் பயந்து கொண்டே அதன்முதுகுப் பகுதியை சட்டெனெ தொட்டுப் பார்த்தேன் , மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது . வாலை ஆட்டிக்கொண்டே இருந்தது .

“யம்மோவ் ஆலங் கரைச்சி கொண்டாங்க , திருஷ்டி சுத்திட்டுதான் உள்ளே கூட்டிட்டுப் போவணும் . ஒங்க வீட்டுக்கு மஹாலட்சிமியே வந்திருக்கு பாருங்க . சீக்கிரமா வாங்க ” என்றார் கோனார் .

அம்மா கரைத்துவைத்திருந்த மஞ்சளும் சிவப்பும் கலந்த அந்த தண்ணீரை கொண்டுவந்து கடன் மேல் வெற்றிலை வைடித்து கர்ப்பூரம் ஏற்றி மூன்று சுற்று இடதும் வலதுமாக சுற்றிவிட்டு அதிலிருந்து நீர் எடுத்து நெற்றியில் போட்டு வைத்துவிட்டு அந்த நீரை தெருவில் ஊற்றிவிட்டு வந்தார் .கோனார் பசுவை மெதுவாக கூட்டிக்கொண்டு உள்ளே சென்று கொல்லைப்புறத்தை அடைந்து அந்த கொட்டகையில் அடித்துவைத்திருந்த முளைக்குச்சியில் கட்டிவிட்டு நிமிர்ந்தார் . மணி உள்பட எல்லோரும் கூட்டத்தில் கூடினோம் .

“யம்மோவ் இது சின்ன கன்னு , தங்கமான சாதுவான புள்ள . ஒசந்த சாதி . செனபோட இன்னும் கூட்டிட்டு போவல, இனிமே தான் கூட்டிட்டு போவணும் . ஒன்னு இரண்டு வாரம் போவுட்டும் , நானே வந்து கூட்டிட்டுப் போறேன் . வெள்ள வெளர்னு இருக்குப் பாருங்க , புள்ளயாவோ மாதிரி நல்லா பழவும் . கவனமா பாத்துக்குங்க . பொறவு இந்த நாய கட்டிவைங்க , கடிச்சி கொதறிவுடப் போவுது” பேசிக்கொண்டே போனார் கோனார் . அவர் சொன்னதில் பாதி எனக்கு புரியவில்லை . மணி குளிக்காமல் அமைதியாக பசுவையே பார்த்துக் கொண்டிருந்தது . “ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவ தண்ணி காட்டணும் , தீவனம் வைக்கணும் . வக்கே , புண்ணாக்கு ,வடிச்சகஞ்சி ,சோறு , வெள்ள அரிசி , புல்லு , வாழப்பழம் எல்லாம் குடுக்கலாம் . எதாவுது வித்தியாசமா சத்தம் கேட்டாலும் , சட்டம் போட்டாலும் ஒடனே வந்து பாருங்க . ஒங்க புள்ளயே வளக்கற மாதிரி இதையும் பாத்துக்கணும் ” என்று கோனார் சொல்லிக்கொண்டிருந்தார் . கோனார் புறப்பட எத்தனித்தபோது “அம்மாஆஆ … “என்று குரல் கொடுத்தது அந்த பசு . அம்மா அந்த பசுவை மெதுவாக வருடிக் கொண்டிருந்தார் முதுகில் . ஏதோ நினைவு வந்தவராக திரும்பிய கோனார் “புது எடம் , புது ஆளுங்க , கொஞ்சம் மெறலும் ,பழவ ரெண்டு மூணு நாலு ஆவும் , பாத்து அன்பா , பொறுமையா பத்திரமா பாத்துக்கோங்க ” . தன கடமையை முடிந்த திருப்தியோடு அவர் நகர்ந்தார் .

தாரிணி தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டாள் . நான் தான் தைரியமாக அவளை அழைத்துக்கொண்டுபோய் முதுகில் கையால் தொட வைத்தேன் . அது ஒன்றும் செய்யாமல் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தது . அந்த பசுவிற்கு என்ன பெயர் வைக்கலாமென்று எங்களுக்குள் பெரிய விவாதமே நடந்து கொண்டிருந்தது . அம்மா “காமாட்சி “என்று சொல்ல “நல்லால்ல “என்றால் தாரிணி .”செல்லம்”என்று அப்பா பரிந்துரைக்க “ரொம்ப பழசா இருக்கு “என்று சொல்லி நான் நிராகரித்தேன் . “தேனுண்ணு வைக்கலாமா “என்று நான் சொல்ல “இதும் நல்லால்ல என்றால் தங்கை . எதையோ புரிந்துகொண்டது போல் லொள் லொள் எண்று மணி தன் பங்கிற்கு .கொஞ்சம் யோசித்து கடைசியாக “லட்சிமினு கூப்டுலாம் “என்றால் தாரிணி . “பாழா இருந்தாலும் பரவாயில்லை இந்த பெயரே இருக்கட்டும் .நாம வீட்டுக்கு யோகத்தை கொண்டு வந்திருக்கு இந்த லட்சுமி , அப்பா சொன்னார் .எல்லோரும் ஒரு மனதாக அந்த பெயரை ஏற்றுக்கொண்டுவிட்டோம் . அதன் காதில் “லட்சுமி …லட்சுமி … லட்சுமி என்று அம்மா மூன்று முறை சொன்னார் .. அந்த பெயரை ஏற்றுக்கொண்டது போல பலமாக தலையை ஆடியது லட்சுமி .நான் ஓடிச் சென்று பூஜையறையிலிருந்த அந்த சிறிய மணியை ஒரு கயிறில் கோர்த்து கொண்டு வந்தேன். அப்பா அதை வாங்கி லட்சுமியின் கழுத்தில் கட்டி அழகு பார்த்தார் . அந்த மணி லட்சுமிக்கும் பிடித்துவிட்டது போல, அதுவும் இரண்டு முறை பலமாக தலையை ஆட்டியது .அப்போது மணிச்சத்தம் தாலாட்டு போல் எங்கள் காதுகளை குளிர்வித்தது .

நாங்கள் நால்வரும் , கூடுதலாக மணியும் , லட்சுமியை கவனமாக பார்த்துக்கொண்டோம் . மணி அப்படியொன்றும் முரட்டுத்தனமாக நடந்துகொள்ள வில்லை . அதற்கும் கூட லட்சுமியை பிடித்துவிட்டதுபோல் தெரிந்தது . வாலை ஆட்டிக்கொண்டு வாஞ்சையோடு பக்கத்தில் சென்றது , அதன் கண்ணில் சினமில்லை மாறாக நட்பு தான் தெரிந்தது . நாங்கள் எல்லோரும் விழுந்து விழுந்து லட்சுமியை கவனித்துக்கொண்டோம் , நாட்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன . லட்சுமி சினையுற்றிருந்தது .

அன்று காலை தாரிணி சீத்தாப்பழம் பறித்து தின்று கொண்டிருந்தாள் கிணற்றடியில் . லட்சமி அதையே பார்த்துக் கொண்டிருந்தது . நான் வைக்கோல் போரில் வைக்கோல் அள்ளிக்கொண்டிருந்தேன் . பெரும்பாலான நேரங்களில் லட்சுமியை நாங்கள் கட்டிவைப்பதில்லை . சுதந்திரமாக தோட்டத்தில் சுற்ற விட்டிருந்தோம் , அதற்கும் அதுவே பிடித்திருந்தது . லட்சுமி எங்கள் குடும்பத்தின் ஆதார் கார்டு இல்லாத , ரேஷன் கார்டில் பெயர் இல்லாத ஒரு உறுப்பினர் . யார் அருகில் சென்றாலும் நாக்கால் நக்கி தன் அன்பை வெளிப்படுத்தியது லட்சுமி . தென் கோடியில் எலந்தை மரத்தின் கீழ் நின்றது மெதுவாக கிணற்றடிக்கு சென்று தாரிணியை தன் தலையால் அவளது பின்புறத்தத்தில் முட்டுக்கு கொடுத்து தள்ளிக் கொண்டுவந்தது . அவள் பயந்து போய் “ஐயோ… அம்மா … மாடு முட்டுது என்று சத்தம் போட்டாள் . நான் ஓடி வர அதற்குள் அம்மாவும் அப்பாவும் தோட்டத்தை நோக்கி ஓடிவர லட்சுமி தாரிணியை தள்ளிக் கொண்டுபோய் சீதாப்பழ மரத்தின் கீழ் நிறுத்தியிருந்தது . அவள் கையையும் அதில் எஞ்சியிருந்த பழத்துணுக்குகளையும் நக்கியது .

“ஏண்டி இப்ப கத்தின ? அது ஒன்னும் ஒன்ன முட்டல ..”என்றேன் .

“நீ சும்மா இருடா .. புள்ள எப்படி பயந்து போயிருக்கு . வேர்த்து விறுவிறுத்துப் போய்ட்டாய் பாரு … ” அம்மா அவளை அணைத்துக் கொண்டே சொன்னார் .

“அது ஒன்னுமில்லடா … லட்சுமிக்கு அந்த பழ வாசனை ரொம்ப புடிச்சிடிச்சி, அதுக்கும் சாப்டுனும்போல இருந்திருக்கும் . அதான் அது ஒன்ன மரத்துக்கிட்ட தள்ளிக்கிட்டு வந்திருக்கு . இனிமே சாப்பிடுறப்ப அதுக்கும் குடு என்ன … “என்று சொல்லியபடியே தாரினையை அமைதிப்படுத்திவிட்டு இரண்டு பழங்களை பறித்து லட்சுமிக்கு முன் போட்டார் அப்பா . அந்த மிகவும் கனிந்து போன பழத்தை லட்சுமி மிகவும் சுவைத்து சாப்பிட்டது எச்சில் ஒழுக . இப்போது தாரிணிக்கி புரிந்திருந்தது லட்சுமியின் எதிர்பார்ப்பு என்ன வென்று .

“அதுக்கு பேசவா தெரியுது . நீ சாப்பிட்டதை பார்த்து அதுக்கு வேணும்னு கேட்கறதுக்கு பதிலா ஒன்ன மரத்துக்கிட்ட தள்ளிக்கிட்டு வந்திருக்கு மெதுவா அவ்ளோதான் … பயப்படாத ! லட்சுமி ரொம்ப சாது, யாரையும் முட்டாது “என்றேன் . “நா கூட பயந்துட்டேன் என்றார் அம்மா . அன்றிலிருந்து தாரிணி என்ன சாப்பிட்டாலும் லட்சுமிக்கும் மணிக்கும் தனித்தனியாக பங்கு கொடுக்க ஆரம்பித்த்துவிட்டாள்.

அன்று காலை அம்மா பதற்றமாக என்னை அழைத்தார் . “டேய் ரகு இங்க வா .. சீக்கிரமா வா . அப்பா எங்கோ வெளியே சென்றிருந்தார் . அவசரமாக ஓடிவந்தேன் தொழுவத்தை நோக்கி . லட்சுமியின் அருகில் அம்மா கவலையோடும் படபடப்போடும் நின்றிருந்தார் . லட்சுமி ஈன சுவரத்தில் வித்தியாசமாக குரல் கொண்டிருந்தது . வாயில் எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது . என்ன ஏது என்று எங்களிருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. “அதுக்கு ஒடம்பு சரியில்லடா … தீனி ஒன்னும் திங்கமாட்டேங்குது … சீக்கிரமா போயி நம்ப நடுத்தெருவு டாக்டர் மாமாவை கூட்டிகிட்டு வா … ஓடு … அவரு வூடு தெரியும்ல?” என்றார்.

“தெரியாதும்மா”

நடுத்தெருவுக்கு போயி அங்க யார்கிட்டயாவுது கேளு .. வூட்டக் காட்டுவாங்க . சீக்கிரமா வா” . அம்மாஎன்னை அவசரப்படுத்தினார். அவருக்கு லட்சுமிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற கவலை . ஓடிச்சென்று வீட்டைக்கண்டுபிடித்தேன் . நல்லா வேலை மாமா வீட்டில் இருந்தார் . மூச்சு வாங்க செய்தியை அவரிடம் சொன்னேன் . “நீ எந்த தெருவுடா கண்ணா “இனிமையான குரலில் பொறுமையாக கேட்டார் டாக்டர் மாமா . அவர் பையை நன் எடுத்துக்கொள்ள டி வி எஸ் 50 பின்னால் நான் அமர்ந்து கொள்ள ஐந்து நிமிடத்தில் எங்கள் வீட்டிலிருந்தோம் .லட்சுமியை பார்த்தவர் , கண்ணைத் திறந்து பார்த்தார் , வயிற்றை அழுத்தி தடவிப் பார்த்தது விட்டு சொன்னார் “ஒன்னும் கவலைப்படாதீங்க , ஏதோ தீனி அதுக்கு சேரல , வயித்துக்கு கோளாறு . வாயில எச்சி ஒழுவுச்சா , சாணி தண்ணி தண்ணியா போவுதா ? ” கேள்விகளாய்க் கேட்டார் . . அம்மா எல்லா கேள்விகளையும் ஆமோதித்தாள் . லட்சுமியின் வாயைத் திறந்து மஞ்சள் நிறத்திலிருந்து இரண்டு மருந்து உருண்டைகளை உள்ளே தள்ளினார் . தடிமனான ஒரு ஊசியை மருந்தில் இழுத்து அதன் முதுகில் குத்தினார் . “காலையில எல்லாம் சரியாப்போயிடும் . காலையில் வரைக்கும் தானி வைங்க , கழனி தண்ணி வைங்க , வேற எதுவும் வைக்கவேண்டாம் . காலைல நா வந்து பாக்கறேன் ” . அம்மா சொன்னார்”டேய் ரகு தண்ணி கொண்டாந்து வையி”. தண்ணீர் வைத்ததும் லட்சுமி வேகமா குடித்தது , அந்த மருந்து கொஞ்சம் காரம் போலும் . அடுத்த நாள் காலையிலிருந்து லட்சுமி எப்போதும் போலிருந்தது.

அன்று நல்லா வெயில் , உருக்கி உருக்கி எடுத்துக் கொண்டிருந்தது . வியர்வை பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது . கிணற்றடியில் அப்பா நீரை வாளியில் இறைத்து ஆனந்தமாய் நீராடி விட்டு ஈர வேட்டியுடன் வந்து கொண்டிருந்தார் . லட்சுமி அவரின் பிருஷ்டத்தில் தலையைவைத்து கிணற்றடிக்கு தள்ளிக் கொண்டு போனது . சாளரத்தின் வழியே எதேச்சையாகப் இதை கவனித்துவிட்டு பக்கத்து வீடு மாமா ” ம்ம்ம் … ம்ம்ம் … ம்ம்ம் ” என்று தோட்டத்ததைக் காட்டி ஏதோ சொன்னார் . பதைபதைப்புடன் வந்த அம்மா “என்ன .. என்னாச்சி ? “என்று கேட்டார் . வாய்நிறைய வெற்றிலைப் பாக்குடன் எச்சிலுடன் இருந்த மாமா மீண்டும் ம்ம்ம்… என்றார் .

துப்பிட்டு வந்து சொல்லுங்க , ஒன்னும் புரியல .. என்று சலிப்போடு சொல்ல , மாமா எச்சிலை துப்பிவிட்டு வந்தவர் “ஓம் புருஷன மாடு மீட்டி இழுத்துட்டு போவுது , ஓடியா … என்றபடியே தோட்டத்திற்கு ஓடினார் . பின்னாலேயே நானும் அம்மாவும் ஓடினோம் . அங்கே கண்ட காட்சி எங்களை வியப்பில் ஆழ்த்தியது . லட்சுமி கிணற்றடியில் நின்று கொண்டிருக்க அப்பாவாளியில் தண்ணீர் மோந்து அதன் மேல் ஊற்றிக்கொண்டிருந்தார் . அது ஆனந்தமாய் குளியல் போட்டுக் கொண்டிருந்தது. “என்னாச்சு “என்றார் அம்மா படபடப்போடு . “ஒன்னுமில்ல தங்கம் , நா குளிச்சிட்டு வந்தேன் , இந்த லட்சுமி என்ன தள்ளிக்கிட்டு இங்க வந்து நின்னுச்சி . அதுக்கும் குளிக்கணும்னு ஆச வந்துடிச்சி போல. அதான் சொல்லாத தெரியாம என்ன தள்ளிக்கிட்டு வந்துடிச்சி. சரின்னு தண்ணி மோந்து ஊத்திட்டு இருக்கேன் என்றார் அப்பா. அப்போதான் புரிந்தது மாமாவுக்கும் எங்களுக்கும் என்ன நடந்தது என்று.

மூன்று முறை லட்சுமி கன்று ஈன்று விட்டது , இரண்டு முறை பசுக்கன்றும் , ஒரு முறை காளைக்கன்றும். காளைக் கன்றை ஈன்ற பொது அம்மாவுக்கு மிகுந்த வருத்தம். பெண்ணுக்கு பெண்குழந்தை பிறந்தால் வருத்தம் , பசுவுக்கு காளைக் கன்று பிறந்தாலோ , ஆடு கெடா குட்டிப் போட்டாலோ வருத்தம். நாய் என்றால் ஆண் நாய் தான் வேண்டும் , இதில் விதி விளக்கு லாப்ரடார் வகை நாய்கள் . அவற்றின் குட்டிகளுக்கு வணிக மதிப்பு அதிகம் என்பதால் . மனிதமனங்களில் தான் , அவர்களின் எதிர்பார்ப்பில் தான் எத்தனை முரண்பாடுகள்? ஒன்றிலிருந்து நான்கு மாடுகளை பெருகிப் போயிருந்தது எங்கள் வீட்டுத் தொழுவம்.

அன்று மாலையிலிருந்து பலத்த மழை பெய்துகொண்டிருந்தது . மழையில் நனைந்து கொண்டே லட்சுமியை தொழுவாதத்தில் முளைக்குச்சியில் கட்டிவிட்டு தேவையான தீனியை போட்டு தண்ணி வைத்து விட்டு கடைசியாக நான் தான் கதவையடைத்தேன் . மணி எங்களுடன் திண்ணையில் சுருண்டு கொண்டது . நாடு நிசியிலும் மழை பெய்துகொண்டே இருக்க லட்சுமி இரண்டு, மூன்று முறை சத்தம் போட்டது, அந்த சத்தம் சற்று வித்தியாசமாக இருந்தது . மணியும் கொஞ்சம் குறைத்து அடங்கியது . தூக்க கழகத்தில் இருந்த நாங்கள் அதை பொருட்படுத்தாமல் தூங்கிப் போனோம்.

அதிகாலையில் அம்மா தோட்டத்திற்கு சென்ற போது லட்சுமியை காணாமல் அலறிக் கொண்டு ஓடி வந்தார் . எல்லோரும் போய்ப்பார்த்தோம், தொழுவத்தில் லட்சுமியை காணவில்லை. அம்மா அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்தார் . அப்பா காவல் துறையில் புகார் அளித்தார் , யாரோ கயிற்றை அறுத்து ஒட்டிக்கொண்டு போயிருப்பதாக எங்களுக்குப் பட்டது . தன்னை காப்பாற்றக் கோரி தான் நாடு இரவில் சத்தம் போட்டதோ லட்சுமி ? . காவல் துறை வந்து பார்த்துவிட்டுப் போனது. அந்த இரும்பு கதவில் இருந்த பூட்டை உடைபட்டு கிடந்ததை வைத்து யாரோ லட்சுமியை திருடி ஒட்டிக் கொண்டு போனது உறுதியானது . ஒரு வேலையும் ஓட வில்லை , எல்லோருக்கும் சொல்ல முடியாத வருத்தம் .தொழுவத்தைப் பார்க்கும்போதெல்லாம் அந்த மொச மொச வெள்ளை லட்சுமியின் ஞாபகம் மனதை பிடிங்கித் தின்றது . மணியோசை கேட்காமல் நிசப்தம் நிலவியது இதயம் வலித்தது.

இரண்டு நாட்களில் அப்பா ஐந்து முறை காவல் நிலையம் சென்று வந்துவிட்டார். இன்னமும் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. புலம்பலும் ஏமாற்றமும் மட்டுமே மிச்சமிருந்தது . அப்பாவும் நானும் ஊரின் நான்குபுறங்களிலும் சென்று தேடித் பார்த்துவிட்டு வந்தோம் . எங்கும் வெறுமையும், ஏமாற்றமும் மட்டுமே விஞ்சியிருந்தது, கண்ணில் லட்சுமி படவேயில்லை . தேடித் தேடி அலுத்துப் போனதுதான் மிச்சம்.மணி கூட என்னுடன் சோகமாகத் திரிந்து கொண்டிருந்தது. வீடே காலை இழந்து இருட்டாய் பயங்கரமான அமைதியை அப்பிக்கொண்டிருந்தது . இரண்டு நாளை அம்மா அழுது அழுது கண்கள் வீங்கிப் போயிருந்தார். எத்தனை சொல்லியும் மனதை தேற்றிக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

தூக்கமில்லாமல் எல்லோரும் புரண்டு புரண்டு படுத்துக்க கொண்டிருந்தோம் . நாடு நிசியில் யாரோ கதவை பலமாக காட்டுவதை போலிருந்தது . நான் தான் முதலில் அதை உணர்ந்தேன், மீண்டும் அதே சத்தம். அப்பாவையும் அம்மாவையும் எழுப்பிக் கொண்டு கதவை திறந்து பார்த்தால் அங்கே லட்சுமி நின்று கொண்டிருந்தது. எங்களை பார்த்தவுடன் “அம்மாஆஆ “என்று சத்தம் போட்டது. முதுகில், முகத்தில், நெற்றியில் ரத்தக்கறைகள், யாரோ அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள் என்பது புரிந்தது. கழுத்தில் மணியை காணவில்லை. எப்படியோ தப்பித்து வழி கண்டு பிடித்து வந்து விட்டது .

“காலையில முதல் வேலைய டாக்டர் கிட்ட போயி மருந்து வாங்கியாந்து காயத்துக்குப் போடணும்” என்று சொல்லிக்கொண்டே லட்சுமியை இறுக்கமாக கட்டிக்கொண்டார் அம்மா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *