இதுவல்ல உன் கனவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 10,202 
 

வாசலுக்குப் போய் கையெழுத்து போட்டேன். நியுயார்க்கில் இருந்து என் மகன் எனக்கு இரண்டு ஷர்ட்டுகள் அனுப்பியிருந்தான். அடுத்த வாரம் என் பிறந்தநாள் வருவதை ஞாபகம் வைத்திருக்கிறானே என்று சந்தோஷமாக இருந்தது. உள்ளே போனபோது பெல் அடித்தது. மறுபடி வாசலுக்கு வந்தேன்.

யாருப்பா? என்றேன்.

ஒரு இளைஞன் நின்றிருந்தான். நல்ல சிவப்பாக நல்ல உயரத்தில் இருந்தான். தலைமயிரின் கறுப்பும் அடர்த்தியும் மிக வசீகரமாக இருந்தன. திருத்தமான முகத்தில் வியர்வையும் டென்ஷனும் இருக்க, உடையில் நவீனத்துவம் பளிச்சிட்டது.

சார்…. அயாம் கணேஷ்……… கணேஷ் விஸ்வநாதன். ஆப்பிள்ல சிஸ்டம் அனலிஸ்ட். மாடில ஓரு போர்ஷன் காலியா இருக்குன்னு கேள்விப்பட்டேன்…….. கரெக்டா? என்றான்.

கரெக்ட்…..ஆனா பாச்சிலர்க்கு விடற ஐடியா இல்லேப்பா…. என்றேன்.

இல்லே சார். அயாம் கோயிங் டு பி மாரீட் சூன் என்றான். கர்ச்சீப் எடுத்து முகம் துடைத்து மாடியை பார்த்தான்.

சரி வா…. என்று தாழ்ப்பாள் நீக்கினேன்.

தாங்க்யூ சார். உள்ளே வந்தான். தாழ்வாரத்தில் ஷ§க்களை கழற்றிவிட்டு குழாயடியில் கைகளைக் கழுவிக் கொண்டு உட்கார்ந்தான்.

யூ நீட் வாட்டர்?

யெஸ் சார்…..

சில்லென்று நீட்டினேன். ஒரே மடக்கில் குடித்து விட்டு. தாங்க்யூ……….. என்று

புன்னகைத்தான். சொல்லுப்பா…. எப்ப கல்யாணம்? வெஜிடேரியனா இல்லையா? ஆபிஸ் எங்கே?என்றேன்.

வந்து சார்….. என்று மறுபடி முகம் துடைத்தான். உங்ககிட்ட எதையும் மறைக்கப் போறதில்லை. லவ் மேரேஜ், ஐ மீன் போட்டோஜிஸ்டர் மேரேஜ் செஞ்சுக்கப் போறேன். ஒரு மாசம் டயமிருக்கு….. அவ பேரு ஷகீலா……. அவ அப்பா ஹஜ் கமிட்டில இருக்கிற தீவிரமான முஸ்லீம்…. எங்கப்பா விஸ்வநாதன் சிவன் கோவில் ட்ரஸ்டி……. எப்படி சம்மதம் கிடைக்கும்? செங்கல்பட்டு காலேஜ்ல படிக்கும்போது அவளை மீட் பண்ணி இப்ப கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு…. ரெண்டு பேரும் மேஜர்……… எனக்கு பதினெட்டாயிரம் கெடைக்கறது….. சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கை இருக்கு…. உங்களுக்கும் என் வார்த்தைகள்ல நம்பிக்கை இருந்தா வீடு கொடுங்க சார்…. ஐ லைக் திஸ் பிளேஸ் வெரி மச்.

அவனையே உற்று பார்த்தேன். கண்களில் கள்ளத்தனம் எதுவுமில்லை. இளங்கன்று ரகம். இன்னும் விளையாட்டுத்தனம் போகாத உச்சக்கட்ட சிறுவன் போலிருந்தான். எதிர்பார்ப்புடன் என்னையே பார்த்தான்.

இது என் ஐடி கார்ட்…… இது எங்க வீ;ட்டோட ஐ மீன் எங்க ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் காப்பி…. இது ஸாலரி பில்……. இதெல்லாம் யுனிவர்ஸிட்டில நான் வாங்கின சர்டிபிகேட்ஸ் என்று ஃபைல் திறந்து அக்கறையாக சுட்டிக்காட்டினான். என்னை ஆர்வமாக பார்த்தான்.

சரி கணேஷ்….. எப்ப வேணா வா….. டோக்கன் அட்வான்ஸா நூறு ரூபா கொடு. வாடகை ஆயிரம் ரூபாய் என்றேன்.

தாங்க்ஸ் சார்…. தாங்க் யு வெரி மச் என்றான் மலர்ச்சியுடன்.

கணேஷ் குடித்தனம் வந்து ஒரு வாரம் ஓடி விட்டது. பொறுப்பான பையனாக இருக்க வேண்டும் என்கிற என் யூகத்தை நிஜமாக்கினான். ஒரு பர்னர் கொண்ட காஸ் ஸ்டவ். சின்ன குக்கர். பச்சை காய்கறிகள், ரொட்டி செஃப் மாஸ்டர். உடற்பயிற்சி கருவிகள். ஹரிஹரனின் பாடல்கள். விவேகானந்தர் படம். பில்கேட்சின் ப்ரொஃபைல் எல்லாமே கச்சிதமான இடம் பார்த்து வைத்திருந்தான். காலையில் பிரட், மதியத்துக்கு தயிர் சாதம், ராத்திரி ரெடிமேட் ரொட்டி,

கிரீன் ஸாலட் என்று அசத்தலாக தயாரித்தான். தினம் என்னுடன் அரைமணி நேரமாவது பேசினான். மாடி ஏறிப் போனேன். டெலிவிஷனில் க்விஸ் பார்த்துக் கொண்டிருந்தவன் உடனே வால்யூமை குறைத்தான். வரவேற்றான்.

உட்காருங்க சார்….. கார்ன் சூப் செய்யப்போறேன்சாப்பிடறீங்களா?

கார்னா? காளானான்னு சிரித்தேன். நா சுத்த சைவம்பா கணேஷ்.

நான் மட்டும் என்ன சார்? என்று அவனும் சிரித்தான். கேக் கூட சாப்பிட மாட்டேன்… முட்டை வாசனை கொமட்டும். எங்க வீட்டுல பூண்டு ஒரு நாள் கூட வாங்கினது கிடையாது.

நீ பழகிக்கணும்பா…. ஷகிலா பிரியாணி சாப்பிட்டு வளர்ந்த பொண்ணில்லையா?

வேணும்னா அவ சாப்பிடட்டும் சார்.

ரெண்டு பேருக்கும் ரெண்டு சமையலா. வெரிகுட் என்று சிரித்தேன்.

இந்தா….. லெட்டர் வந்தது மத்தியானம்.

அப்படியா என்று வேகமாக வந்து வாங்கினான். இப்படி அப்படி திருப்பி பார்த்தான். டேபிளில் போட்டான். முகம் மாறிவிட்டது.

ஏம்ப்பா கணேஷ் யாரு லெட்டர்? ஷகிலாவா?

இல்லே….. எங்கம்மா.

பிரிச்சு படிக்கலையா?

அவசியம் இல்ல சார் என்றான் தரையை பார்த்து. ஒண்ணு அழுதிருப்பா…….. வேண்டாண்டா இந்தக் கல்யாணம், கெஞ்சிக் கேக்கறேன் வந்துடுப்பான்னு ஒப்பாரி வெச்சிருப்பா….. மூட் ஸ்பாயில் ஆயிடும்.

ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு சானல்களை மாற்றினான். மெக்கா மெதினா வந்ததை மாற்றி, யாஸர் அராஃபட்டை மாற்றி, அரசியல் கட்சி ஊர்வலம் மாற்றி, டாப் டென் மாற்றி, டாக்ஷோ மாற்றி கடைசியில் சிதம்பரம் கோவில் வந்து…….. நிறுத்தினான். என்னதான் யாதும் ஊரே யாவரும் கேளிர்னு சொன்னாலும் நம்ப பாணி கோவில்களோட அழகே தனிதான்…… இல்லையா சார்? அந்த அமைதி, அந்த ஸ்கல்ப்ச்சர், அந்த கற்பூர வாசனை,

அந்த கண்டாமணி…. ஸம்திங் வொண்டர்ஃபுல். புன்னகைத்தேன், கிளம்பினேன்.

முழுதாக ஒரு நாள் மாடியிலிருந்து சப்தமே இல்லை. கணேஷ் செங்கல்பட்டு போய்விட்டானா என்று சந்தேகமாக இருந்தது. மாடிக்குப் போனேன். திகைத்தேன். கட்டிலில் கிடந்தான். ஒரே நாளில் ஐந்து கிலோ குறைந்த மாதிரி இருந்தான். முகத்தில் அபார சோர்வு.

என்னப்பா கணேஷ். என்ன ஆச்சு? என்று உட்கார்ந்தேன்.

வயிறு கட்பட் ஆயிடுத்து சார்… என்று அடிக்குரலில் சொன்னான். நீங்க சொன்னீங்களே பழகிக்கணும்னு….. போட்டோ ஹோட்டல் போய் பிரியாணி சாப்பிட்டேன் சார்…. வாயும் ஒத்துக்கலே, வயிரும் ஒத்துக்கலே, பயங்கர அப்செட்… மாத்திரை சாப்பிட்டும் இன்னும் சரியாகலே.

கஞ்சி தரட்டுமா?

இல்லே சார்…. லங்கணம் பரம ஒளஷதம்னு எங்க பாட்டி சொல்லுவா…. ஷி இஸ் ரைட்.

எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் ஜீரணமாகாது கணேஷ்.

சார்….. பழக்கங்களுக்கு நாம அடிமை…. வழக்கங்கள் நம்மோட எஜமான்கள். அதனாலதான் சுத்தம், சுகாதாரம், ஒழுக்கம்னு எல்லாமே சின்ன வயசுல இருந்தே ஊட்டப்பட்டு வருது நமக்கு. தொட்டில் பழக்கம்னு சொல்றோமே அதான். பிறந்த சூழல், வளர்ந்த வீடு, பழகிட்ட வாழ்க்கை முறை, ஏற்படுத்திண்ட வழக்கம் எதையும் மாத்திக்க முடியாது. ரொம்ப கஷ்டம். மாத்திக்க நினைக்க நினைக்க கஷ்டம். எதுக்கு மாத்திக்கனும்? எதுக்கு அவஸ்தைப்படனும்? உன்னைப் போலவே பிறந்து வளர்ந்த சூழல்ல இருந்து ஒரு வாழ்க்கைத் துணை உனக்கு கெடைக்கும்போது அடிப்படை பிரச்சனைகள் எதுவுமே வரப்போறதில்லையே….. பேஸிகலா எல்லாமே நெறைவா இருக்கும்போது உன் வேலைல நீ மேலே மேலே கான்ஸன்ட்ரேட் பண்ணின்டு போகலாமே? சாதாரண அனலிஸ்ட்டா இருக்கிற நீ, வைஸ் பிரஸிடென்ட் ஆஃப் ஆப்பிள்னு ஆகலாமே? அதைவிட்டு தெனம் தெனம் சாப்பாட்டையும் ஸ்வாமியையும் பழக்கத்தையும் பிரச்சனைகள் ஆக்கிண்டு….. சகதிக்குள்ளேயே சுழண்டுண்டு…..

சார்……

பெரியவாளுக்கு சரியா சொல்ல தெரியல கணேஷ்…. அதுதான் பிரச்சனை. மேலோட்டமா பாத்தா ஜாதி, மதம்னு உணர்ச்சிகரமான காரணங்கள்தான் சொல்லப்படறது. ஆழமா பாரு கணேஷ் சிக்கலான வாழ்க்கை முறையை இன்வைட் பண்ணிக்கிறதுதான் காதலா? டோட்டலா மாறுபட்டு இருக்கிற துருவங்கள் ரொம்ப சிரமப்பட்டு பின்னி பிணைஞ்சு மூச்சு திணர்றதுதான் காதலா? பெத்தவங்களோட கனவை சிதைச்சுட்டு சுயநலமா சந்தோஷபடறதுதான் நியாயம்னு நினைக்கிற காட்டு தர்பார்தான் காதலா?

இல்லேப்பா… எது வாழ்க்கையை சுலபமாக்குதோ அது காதல்! எது வாழ்க்கைக்கு இன்னும் இனிப்பு சேக்குதோ அது காதல்….புரியறதா?

புரிஞ்சுது சார்….. என்ற கணேஷ். எழுந்து உட்கார்ந்தான். பரவாயில்லையா சார்?

எதுப்பா?

நாளைக்கே வீட்டை காலி பண்றேன் சார்…. அம்மாகிட்டயே போயிடறேன்.

வெரிகுட் கணேஷ் என்று தட்டிக் கொடுத்துவிட்டு திருப்தியுடன் கீழே வந்தேன். வெரோனிகா செலஸ் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாய் என் மகன் ஈ- மெயிலில் கொடுத்த தகவல் எனக்காக காத்திருந்தது.

– நவம்பர் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *