இதா சுதந்திரம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 11, 2013
பார்வையிட்டோர்: 9,499 
 

“ஐயையோ… நேரம் ஆயிடுச்சே. இன்னிக்கும் இருக்கு அர்ச்சனை”, என்று வாய் முணுமுணுத்தாலும் அதற்கு மேல் என்ன சொல்ல முடியும்!

எப்படியோ சிக்னல்ல பஸ்ஸ பாத்ததுனால ஓட்ட பந்தய வீராங்கனையைப்போல ஓடி வந்து பஸ் எடுக்கும் முன் முன்ஜென்ம பந்தத்தின் விட்டகுறை தொட்டகுறையாக படிகளில் தொத்திக்கொண்டு வந்து சேர்ந்தேன்.

‘வா வா, ரொம்ப நேரமாச்சுன்னு பாத்துக்கிட்டு இருந்தோம்.’ என்று என் மாமியார் வரவேற்றார்.

‘நாளைக்கு ஹெட்ஆபீஸ்ல இருந்து வராங்கன்னு எல்லா ரிப்போர்ட்டும் ரெடி பண்ணிட்டு வர லேட் ஆச்சு. நேத்திக்கே சொன்னேனே.” என்றபடி உள்ளே சென்றேன்.

‘ஆமா, நீயும்தான் தினமும் ஒன்னு சொல்லற. அம்மா.. கிருஷ்ணா ராமான்னு போறகாலம் வந்தாச்சு. ஒண்ணுமே முடியலை’ என்றபடி நன்றாக கால்களை நீட்டி டிவியை காண அமர்ந்துவிட்டார்.

டின்னிங் டேபிள் மேல் புத்தகத்தை வைத்துக்கொண்டு எழுதிக்கொண்டு இருந்த என் பெண்ணும் பிள்ளையும் என்னை பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தனர், விட்டயிடத்திலிருந்து.

“ஆமா, கிருஷ்ணா ராமான்னு கோவிலுக்கு போக முடியாது, வீட்டு பூஜையறையிலும் ஒக்கார முடியாது. அப்படி என்ன வேலை செஞ்சிடாங்க? காலைல 4.30 மணிக்கு எழுந்து காலைல டிபன், மத்தியானம் சாப்பாடு எல்லாம் அவங்க மெனு போட்டு தந்தத நான் சமைச்சு வச்சிட்டுப்போனா இவங்களுக்கு முடியல.’ என்று என் மனதில் கூறிக்கொண்டே காப்பிபோட்டு தந்துவிட்டு

‘அத்தே, ராத்திரிக்கு என்ன சமைக்கணும்’ என்று கேட்டேன். போன ஜென்மத்தில் ஹோட்டல்ல வேலை செய்தேனோ என்று தோன்றியது. பவ்யமாக அவர் கூறிய எல்லாவற்றையும் சமைத்துவிட்டு வரும்போது மாமியாரும் மாமனாரும் மும்முரமாக விட்டால் டிவியின் உள்ளேயே சென்றுவிடும் அளவிற்கு ஒன்றிபோய் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

வந்ததில் இருந்து உட்கார நேரமில்லாமல் இப்பொழுது கிடைத்த நேரத்தில் பிள்ளைகளிடம் அமர்ந்தேன். அன்று நடந்த நிகழ்ச்சிகளை பகிர்ந்துக்கொள்வதில் ஆர்வமாக இருந்தனர்.

அதற்குள் அவர்கள் பார்த்துக்கொண்டு இருந்த சீரியல் முடியும் நேரம் கணவரின் தம்பியும் வந்துவிடவே எல்லோருக்கும் பரிமாறினேன். என்னுடைய அர்த்தநாரி வருவதற்கு எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். அதற்குள்ளே மறுநாள் சமைக்க வேண்டிய பட்டியலைப் பெற்றுக்கொண்டு மற்ற வேலைகளை முடித்துவிட்டு நிமிரும் நேரம் அவரும் வந்தார்.

அன்றிரவு பிள்ளைகள் உறங்கியபின் ‘அம்மாவுக்கு முடியல ஒருவாட்டி பாத்துட்டு வரட்டுமா?’

‘ம்..போய்ட்டுவா’

‘அப்போ கொஞ்சம் பணம் வேணுமே..’

‘என்கிட்டே எங்க இருக்கு. அம்மாவை கேட்டுக்கோ’ என்று கூறிவிட்டு அவர் சுவர்க்கத்தை அடைந்துவிட்டார். எப்படித்தான் இந்த மனுஷன் படுத்தவுடன் கண்ணு மூடி தூங்க போறாரோ? ஒருவேளை இவரைப் பார்த்துதான் படுக்க வைத்தால் கண்ணை மூடும் பொம்மையை கண்டுபிடிச்சாங்களோ!

‘ம்.. அப்போ அப்போ கொண்டு கொட்ட இங்க பணம் எங்க இருக்கு? இந்த காலத்துல சம்பாதிக்கிற அகம்பாவம், நாம ஒன்னு சொல்லிட முடியுமோ.. அப்புறம் பெண் சுதந்திரத்தை பத்தி பேசுவாங்க.’ என்று அன்றைய பாடலை அவர் பாடவும், மாமனாரும், கணவரும் தப்பாமல் தாளம் போட்டனர்.

‘இவ்வளவுக்குப் பின்னும் அம்மாவிற்கு தர பணமில்லை. திருமணமாகி வந்த முதல் மாதமே சம்பளத்தை மாமியாரின் கையில் தந்து என்னை அடமானம் வைத்துவிட்டேன்.

அடமானம் வைக்கப்பட்ட நான், பெண் சுதந்திரத்தின் எடுத்துக்காட்டாக, ‘ஐயையோ .. லேட் ஆச்சே. இன்னிக்கி ஹெட் ஆபீஸ்ல இருந்து வராங்களே.” என்று கிடைக்காத பணத்தை ஒரு நப்பாசையில் கேட்டு “இல்லை” என்ற பதிலின் உந்துதலில் வீராங்கனையாக ஓட்டம் பிடித்தேன், அடைமானத்தின் வட்டியை தீர்க்க, ஆபீஸ்க்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *