கதையாசிரியர்: ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 15,613 
 

கன்னட மூலம்: சுமங்கலா
தமிழில்: நஞ்சுண்டன்

லத்யா மாமு கருப்புக் கண்ணாடிக்கு அப்பால் பார்த்தவாறு மனசை வேறெங்கோ பறிகொடுத்து உட்கார்ந்திருந்தான். அவனது எஸ்டிடி பூத்துக்கு நேர் எதிர்ச் சாலைக்கு அந்தப் பக்கம் காய்கறி மார்க்கெட். அங்கே இரண்டு மூன்று வரிசைகளில் கூடைகளுடன் உட்கார்ந்து காய்கறி விற்பவர்களில் கமலம்மாவும் ஒருத்தி. இரண்டு மூன்று தினங்களாக அவள் மாமுவின் கண்ணில்படவே இல்லை. அது மாமுவுக்கு விசித்திரமான ஆதங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாருடைய கல்யாணத்துக்கோ சீமந்தத்துக்கோ அல்லது என்ன காரணத்தாலோ அவள் தன் உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும் தினத்துக்கு முன்னதாக இவன் ஸ்பெஷல் டீ குடிக்க வெளியே போகும்போது, ஏதோ பேச்சுக்கு நடுவே மாமுவிடம் சொல்லிவிடுவாள். யாருடைய இறுதிச் சடங்குக்கோ எதிர்பாராமல் போவதற்கு முன்னால் எதுவும் சொல்லாமல் போய்விடுவாள். மீண்டும் மறுநாள் காய்கறிக் கூடையுடன் ஆஜராகிவிடுவாள். ஒரு நாள் வெயிலில் உட்கார்ந்து காய்கறி விற்காவிட்டால், ஒரு வேளைச் சாப்பாடு கிடையாது என்று சொல்லிக்கொண்டிருந்தவள், இரண்டு மூன்று தினங்களாக எங்கே காணாமல்போய்விட்டாள் என்பதே மாமுவுக்குப் பதில் கிடைக்காத கேள்வியாக இருந்தது. குளிர்காலத்துக்குப் பிறகான இளவேனிற்காலம் முடிந்து கோடைகாலம் காலெடுத்து வைக்கும் தினங்கள். பலபலவென்னும் விடியலில் இளஞ்சிவப்பாகவும் சற்றுக் குளுமையாகவும் இருந்துகொண்டிருந்த சூரியன், மத்தியானம் பன்னிரண்டாகும்போது, எல்லோருடைய நெற்றியும் சுளீர் என்னும்படி கத்தியைச் சுழற்றிக் கொண்டிருந்தான்.

மாமுவின் சின்ன டெலிபோன் பூத்தின் கருப்புக் கண்ணாடி வழியாகப் பார்த்தால், வெயில்கூடத் தூங்கிவிட்ட நிலவாகத் தோன்றுகிறது. கமலம்மாவைப் பற்றிய கவலையில் உட்கார்ந்திருந்தபோதுதான், அந்தப் பெண் சற்று வேகமாகப் பூத்துக்குள் வந்தாள். ‘உஷ்’ என்று பொறுமையில்லாமல் வந்தவள் கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தபடி நின்றபோதுதான், அனேகமாக வெளியே வெயில் தீவிரமாக இருந்ததாக மாமுவுக்குத் தோன்றியது. டைரக்டரி கேட்டு வாங்கிக்கொண்டவள், ஏதோ எண்ணைத் தேடியவாறு ‘ஊஹூம் இதுல இல்ல’ என்று தலையாட்டினாள்.

‘என்கொயரியில் கேளுங்க’ தன் வழக்கமான பதிலைக் கிஞ்சித்தும் மாற்றாத பாணியில் மாமு சொன்னான்.

‘நம்பர் என்ன?’ ரிசீவரைப் பிடித்துக்கொண்டே கேட்டாள்.

‘ஒன் நைன் செவன்’ என்றவன், தானே அந்த எண்ணை அழுத்தினான். அந்தப் பக்கத்திலிருந்து வெறும் கொய்ங் கொய்ங் என்னும் எங்கேஜ்ட் சத்தம்.

‘வெறும் எங்கேஜ்ட் சத்தந்தான் வருதுங்க.’

‘அப்படியா?’ என்றவன் மீண்டும் அழுத்தினான். இப்போது அவள் களுக்கெனச் சிரித்தாள். மாமு தலை நிமிர்ந்து பார்த்தான். மெலிதாகச் சிரித்துக்கொண்டே அவன் தலைக்கு மேலிருந்த, கருஞ்சிவப்பு மலரின் சித்திரத்தை எம்ப்ராய்டரி செய்திருந்த, வெள்ளை நிற வட்டத் தொப்பியைப் பார்த்துக்கொண்டே ‘நோன்பு இருக்கிறீங்களா?’ என்றபடி அவள் மீண்டும் சிரித்தாள்.

‘நான் என்ன செஞ்சா இவளுக்கு என்னவாம் . . . இதென்ன அதிகப் பிரசிங்கித்தனம் என்று எண்ணி மாமுவுக்குக் கோபம் வந்தது. ‘நான் நோன்பு இருக்கறனாங்கற சந்தேகம் இவளுக்கு எதுக்கு? அதுவும் இல்லாம ஃபோன் நம்பர் அழுத்துறதுக்கும் நோன்பு இருக்கறதுக்கும் என்னா சம்பந்தம்?’ என்னும் ஆர்வமும் உண்டாகி ஏனென்று கேட்க வேண்டும் என்று எண்ணுவதற்குள், ‘இல்லீங்க ஒன் நைன் செவன்கறீங்க. ஒன் நைன் த்ரீ டையல் செய்றீங்க. அதுதான் பாவம் பசியால மூளை வேலை செய்யலியான்னு’ என அவள் மீண்டும் சொன்னாள்.

மாமுவுக்குத் தன் முட்டாள்தனம் புரிந்து சற்று வெட்கமும் ஏற்பட்டு அசட்டுத்தனமாகச் சிரித்தான். மீண்டும் அப்பாவியைப் போல, ‘நீங்களே பாருங்கம்மா . . .’ என்றவன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தான்.

என்கொயரிக்காரரிடம் ஏதோ ஆஃபீஸின் எண் கேட்டவள், மாமுவுக்குச் சைகைசெய்து பேப்பர் வாங்கிக்கொண்டு அந்த எண்ணை எழுதிக்கொண்டாள். பிறகு அந்த எண்ணை டயல்செய்து தனக்கு வேண்டியிருந்த யாரையோ தொடர்புகொள்ள முயன்று வேறு ஏதோ விபரம் கேட்டு ஃபோனை வைத்தவளையே மாமு ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான். இன்றைக்கும் அவனுக்கு ஃபோன் என்னும் இந்தச் சின்ன இயந்திரம் ஆச்சரியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. மயிரிழை அளவுள்ள சின்னக் கம்பியொன்று எங்கோ உட்கார்ந்திருக்கும் நபர்களை இணைக்கும் இந்த முறை . . . பரிச்சய மற்றவர்களைக் கம்பித் தொடர்பு கிடைத்தவுடனே பரிச்சயப்படுத்தும், நெருங்கிய சினேகிதர்கள் இன்னொரு முறை இந்த நம்பருக்கு ரிங் செய்யாதே என்று ஃபோனை ஓங்கி வைத்துக் கம்பித் தொடர்பு அறுபடுவதைவிட வேகமாக உறவை வெட்டிக்கொள்ளச் செய்யும் அதன் ஆழமான பரவலைக் கண்டு மாமு வியப்படைந்து கொண்டிருந்தான்.

பர்சிலிருந்து இரண்டு ரூபாய் நாணயத்தைத் தேடியெடுத்துக் கொடுத்துக்கொண்டே, ‘குடிக்கத் தண்ணி இருக்குதுங்களா?’ என்று கேட்டாள். ‘ஓ நீங்க நோன்பு இருக்கறீங்கல்ல’ என்றவள் அவன் பதிலுக்கும் காத்திருக்காமல் புன்சிரிப்போடு வெளியே போய்விட்டாள். அந்த நடுவயதுப் பெண் விட்டுப்போன வியர்வை நாற்றத்தைவிட அவளது விளையாட்டுத்தனமான இளம் சிரிப்பே தன் சின்னப் பூத்துக்குள் நிறைந்திருந்ததாக எண்ணி, வெளியே போனவளின் பின்னாடியே பார்வையைச் செலுத்திய மாமுவின் கண்களுக்கு மீண்டும் தெரிந்தவை காய்கறிக் கூடைகளே. தலைக்கு மேல் குடைகூட இல்லாமல் உட்கார்ந்திருந்த மங்கிப்போன சேலையுடுத்த பெண்கள். எட்டணா ஒரு ரூபாய்க்குப் பேரம்பேசியபடி, அப்படியெல்லாம் பேரம்பேசிப் பணம்சேர்ப்பதில் சமர்த்தர்களானால்தான் சொத்துபத்து சேர்க்கலாம் என்னும் பிரமையிலிருக்கும், கிராக்கிகள் . . . மாமு நோக்கமில்லாமல் உட்கார்ந்தான்.

n n n

மாமுவின் முழுப் பெயர் லத்தீஃப். பெரிய அக்காவுக்கு விரைவில் திருமணம் நடந்து வரிசையாகப் பிறந்த அவள் பிள்ளைகள் ‘மாமு’ என அழைக்கத் தொடங்கியது போலவே அக்கம் பக்கத்துப் பையன்களும் ‘மாமு’ என்று கூப்பிடத் தொடங்கினார்கள். அதோடு, அவன் குறும்புக்கார நண்பர்களின் வாயில் லத்தீஃப் என்பது லத்யா ஆகியிருந்தது. அது எப்படியோ மாமுவோடு சேர்ந்துகொண்டு லத்யா மாமு ஆகிவிட்டிருந்தான். இந்தப் பெயரே எவ்வளவு பரிச்சயமாக நிலைத்துவிட்டதென்றால், லத்யா மாமு அல்லது மாமு என்னும்போது அவனது தோற்றம் நினைவுக்கு வருகிறளவு லத்தீஃப் என்னும்போது யாருடைய நினைவுக்கும் வரவில்லை. மாமுவுக்குப் பெரிய அக்காவோடு இன்னும் இரண்டு அண்ணன்கள். படிப்பு தலையில் ஏறாமல், காலைச் சற்று இழுத்து நடக்கும் மாமு வெறுமனே சாப்பிட்டுவிட்டு வெட்டியாக அலைந்துகொண்டிருந்ததைப்பார்த்து அவனுக்கு இங்கே ஒரு எஸ்டிடி பூத் வைத்துக் கொடுத்தார்கள். அதற்கும் முன்னால், வேலை கற்றுச் சிறிது அனுபவம் பெறட்டும் என்று தங்களுக்குத் தெரிந்த ஒருவரது பூத்தில் நான்கு மாதங்கள் மாமுவை வேலைக்கு அனுப்பியிருந்தார்கள். எஸ்டிடி பூத்தின் சின்ன சுத்தமான அழகிய கௌண்டருக்குள் உட்கார்ந்ததும் அசட்டுக்களை கொண்ட மாமுகூடச் சற்றுக் களையாகக் கொஞ்சம் நல்ல பான்ட்சர்ட் அணிந்து நீட்டாகயிருக்கத் தொடங்கியிருந்தான். பூத்தில் கூட்டமில்லாது சலிப்பேற்பட்டால், மாமு டீ குடிக்க எதிரிலிருக்கும் சாலைக்கு அந்தப் பக்கப் பெட்டிக்கடைக்குப் போவான். சில சமயம் சைகைசெய்து அல்லது பலமாகக் கத்தி உட்கார்ந்த இடத்திலிருந்தே டீ தருவித்துக்கொள்வான்.

இப்படி ஒருமுறை பெட்டிக்கடையில் டீ குடித்துவிட்டுக் காய்கறிக் கூடைகளுக்கு எதிரில் உட்கார்ந்திருந்த பெண்களைப் பார்த்தவாறு வந்துகொண்டிருந்தபோதுதான், சுற்றியிருந்தவர்களைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் முந்தானையால் விசிறிக்கொண்டு எங்கோ பார்த்தபடி உட்கார்ந்திருந்த கமலம்மா மாமுவின் கண்ணில்பட்டாள். அப்படி விசிறிக்கொண்டபோது, அரைக் கணம் தெரிந்து மறைந்த அவளது மதர்த்த குண்டு முலைகளையே பார்த்தபடி மாமு நின்றுவிட்டான். நான்கைந்து நிமிடங்களுக்குப் பிறகு பெட்டிக் கடைக்குப் பக்கத்தில் நின்றிருந்த இன்னும் நான்கு பேரும் தன்னைப் போல அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது கவனத்துக்கு வந்தவுடனே ஒரு வகையான சங்கடத்தில் காய்கறி வாங்குகிறவனைப் போல அவள் முன்னால் சற்றுக் குனிந்து நின்று கருப்புக் குண்டுக் கத்தரிக்காய்களைத் தொட்டுப் பார்த்தபடி, ‘முந்தானையைக் கொஞ்சம் சரியாப் போட்டுக்கக் கூடாதாம்மா?’ என்று சொன்னான்.

சுற்றிலும் பார்த்துத் தடக்கென்று முந்தானையைப் போட்டுக்கொண்டு ‘நாலு பெத்து முடிச்சிருக்கறேன். என்னாத்தெப் பாக்குதுங்களாம் கேடுகெட்டதுங்க?’ என்று என்னவோ முணுமுணுத்துவிட்டு, ‘எத்தனை கிலோ?’ என்று கத்தரிக்காயை எடைபோடத் தொடங்கினாள்.

அதன் பிறகு அவ்வப்போது டீ குடிக்கப் போகும்போது, வீட்டில் அண்ணன்மார்கள் காய்கறி வாங்கிவரச் சொல்லியிருக்காவிட்டாலும், காய்கறி வாங்கும் சாக்கில் கமலம்மாவுடன் பேச்சுக்கொடுப்பான். நான்கு பிள்ளைகளில் இரண்டு ஒன்றிரண்டு நாள்களிலேயே செத்திருந்ததை, இன்னொன்று வயிற்றிலேயே இறந்து பிறந்ததை அங்குலம் அங்குலமாக வர்ணித்துக்கொண்டிருந்த கமலம்மா கணவனைப் பற்றி மட்டும் பேச்செடுப்பதில்லை. மாமு தானாகவே இரண்டு மூன்றுமுறை கேட்ட பிறகு, ‘ஓடிப்போய்விட்டான்’ என்று சுருக்கமாகச் சொல்லி ஏன் எப்போது என்னும் கேள்விகளுக்கு வாய்ப்பில்லை என்பதைப் போலப் பேச்சை முடிப்பாள். ஏழாம் கிளாஸ் ஃபெயிலாகி இனிப் பள்ளிக்கூடத்துக்குப் போகமாட்டேன் என்ற மகனை அவன் போக்கில்விட்டிருந்த கமலம்மா, மகன் பாடுக்கு வந்தால் தன்னைப் பிடிக்க யாரிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இன்னும் பதின்மூன்று பதினான்கு வயது முடியாத பையன், பிறவியிலேயே அடம்பிடிக்கிறவனாம். அம்மாவுக்கு ஏதேதோ உதவினாலும், அவளில்லாதபோது தன்னைவிடப் பெரியவர்களான வெட்டி ரௌடிகளோடு சேர்ந்துகொண்டிருந்ததை அவ்வப்போது மாமுவிடம் கொட்டிக்கொண்டிருந்தாள்.

‘அவன் வழிக்கு வந்துட்டா போதும்’ என்னும்போது அவள் தொண்டையிலேயே தங்கிக்கொண்டிருந்த – அவனுடைய அப்பாவைப் போல ஆகாதிருந்தால் போதும் என்னும் – வார்த்தைகளை மாமு தானாக அர்த்தப்படுத்திக்கொண்டிருந்தான்.

ஆறு மாதங்களுக்கு முன்னால் கமலம்மாவின் கணவன் திரும்பி வந்திருக்கிறான் என்னும் செய்தி காய்கறிக்கூடைகளுக்கு நடுவே நுழைந்து தேய்ந்துபோன பழைய நாணயங்கள் ஏற்படுத்தும் சத்தத்தில் மாமுவின் காதையும் எட்டியது. கமலம்மா மட்டும் ஒவ்வொரு நாளும் விற்பனைக்கு வரும் புதிய காய்கறிகளைப் போல இருந்தாள். ‘அவன் கூப்புடறதுக்கு வந்தா போகக் கூடாதா? வெயில்ல ஒக்காந்து இப்புடிக் காய்கறி விய்யின்னு யாரு சொன்னாங்க?’ என்று பக்கத்துக் கடை பஸம்மா சொன்னதற்கு ‘அவன் கூப்புட்டப்பப் போறதுக்கும் அடிச்சு வெளியில தள்ளுனா வர்றதுக்கும் நான் என்னா அவன் வச்சிக்கிட்டிருக்கற கூத்தியான்னு நெனச்சிட்டியா?’ என்று கறாராகச் சொன்னாள். இருவருக்கும் இடையில் நடந்த இப்படிப்பட்ட பேச்சால், தான் என்ன சொல்வது எனப் புரியாத மாமு திருதிருவென விழித்துக்கொண்டே நின்றுவிட்டான்.

‘எட்டு மாசக் கொளந்தை வயித்துல இருந்தப்ப அடிச்சி வெளிய தொறத்துனான். அதுக்கப்பறந்தான் அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனான். அன்னக்கிருந்து இன்னக்கிவரைக்கும் பொண்டாட்டியும் கொளந்தையும் செத்தாங்களா பொளச்சாங்களான்னு கண்டுக்காதவன் இப்ப வந்தா என்னா? போனா என்னா? ஔச்சிச் சாப்புடற ஜீவனுக்கு இத்தினி நாளுவுட்டு இப்ப எதுக்கு ஜோடி வேணும்?’ என்றபடி கூடையிலிருந்த வாடிய காய்களை எடுத்துவைத்துக் கூறுகட்டி வைக்கலானாள்.

இப்படிப்பட்ட கமலம்மாவை மகனின் மகாவெட்டித்தனம் மட்டும் உள்ளுக்குள் கலங்கவைத்திருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒரு திருட்டு வழக்கில் இன்னும் இரண்டு பெரிய பையன்களோடு மாட்டிக்கொண்ட அவனைச் சின்னப் பையன் என்று சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்ததை மாமுவிடம் சொல்லிக்கொண்டபோது, முந்தானை முனையைக் கண்ணில் ஒற்றிப் பிடித்துக் கொண்டேயிருந்தாள். சீர்திருத்தப் பள்ளியில் பையன்களைத் திருத்துவார்கள், ஏதாவது கற்றுத் தருவார்கள் என்று தன்னிடம் யாரோ சொன்னதையே மேலும் கொஞ்சம் சேர்த்து அவளிடம் மாமு சொன்னான். ‘என்னாத்துக்கு வீணாக் கவலைப்படுற . . . ? எல்லாம் சரியாப் போகும். . . என்று சமாதானப்படுத்தியிருந்தான். கமலம்மா அப்படி இருக்கலாமோ. . . அங்கேயாவது கொஞ்சம் திருந்தி மகனுக்குப் புத்திவந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு அமைதியடைந்தாள்.

பிறகு எல்லாம் வழக்கம்போலவே இருந்தது. கமலம்மா கணவனோடு போகவில்லை என்பது ஒரு வகையான நிம்மதியை ஏற்படுத்தியது. அதோடு அவள் கணவனைப் பற்றிய பேச்சே எடுக்காதிருந்ததுங்கூட மாமுவை அவளோடு அதே நெருக்கத்தோடு இருக்கச் செய்தது. ஆனால் கமலம்மா இப்போது மூன்று தினங்களாக மார்க்கெட்டுக்கு வரவில்லை என்பது மட்டும், பூத்தில் வாடிக்கையாளர்கள் இல்லாமல் தன்னந்தனியாக உட்கார்ந்தபோது, மாமுவுக்குக் கேள்விக்குறியாக உள்ளும் புறமும் போய்வந்துகொண்டிருந்தது.

n n n

மீண்டும் நான்கு தினங்களுக்குப் பிறகு அந்தப் பெண் ஃபோன் செய்வதற்கு வந்திருந்தாள். அவள் பேசிய விதத்திலிருந்து யாரோ தோழியாக இருக்கலாம் என்று மாமு நினைத்துக்கொண்டான். எண்களை ஒற்றியவள் சிரித்துக்கொண்டே பேசினாள். இடையே மகளுக்கு உடம்பு சரியில்லை என்று விவரித்து, ‘மாத்திரை சொல்லு எழுதிக்கறேன்’ என்றாள்.

அந்தப் பக்கத்திலிருந்து சொல்லியிருக்க வேண்டும். எழுதிக்கொள்ள ஒரே கையால் பேனாவின் மூடியைத் திறக்க முயன்றவளின் கையிலிருந்து மாமு பேனாவை வாங்கி மூடியைத் திறந்து கொடுத்தான். சரசரவென்று பெயரைக் கிறுக்கியவள் மிக மெதுவாக, மாமுவுக்குக் கேட்காதிருக்கட்டும் என்பதைப் போல, ‘என்னா அம்பது அறுபது ரூபாய்க்கு இவ்வளவு மாத்திரை வருமா?’ என்று கேட்டு மீண்டும் ‘மாசக் கடைசி . . . பர்ஸ் காத்துல மிதக்குற அளவுக்கு லேசாயிப் போயிருக்குது . . .’ என்று சிரிக்க முயன்றாள். மாமு அவளுக்குச் சங்கோஜம் ஏற்பட வேண்டாம் என்று கருப்புக் கண்ணாடி வழியாக வெளியே பார்ப்பதைப் போல உட்கார்ந்திருந்தான். எதிர்ப் பக்கத்துக் குரல் என்ன சொல்லியதோ தெரியவில்லை. ‘வழக்கம்போலத்தான் . . . நாள் பூரா ஏதாவது டென்ஷன் இருக்கறதுதான். ஏதாவது சண்டை, கத்தறதும் இருக்கறதுதான். எனக்கோ போதும் போதுன்னாயிருக்குது. . .’ என்றவாறு தோற்றுப்போனவளைப் போல மேஜையின் மூலையைப் பிடித்தவள் கண்ணில் உண்டோ இல்லையோ என்பதைப் போல ஈரப்பசை ஏற்பட்டது. எல்லாம் அரை நொடி மட்டும். மீண்டும் பேச்சை மாற்றிச் சிரித்தபடி என்னவோ சொன்னாள். சொன்னதில் பாதிக்குப் பாதி ஆங்கிலத்தில் இருந்ததால், அலுவலகம் தொடர்பான ஏதோ வேடிக்கை என்று மட்டும் மாமுவுக்குப் புரிந்தது. அந்தப் பக்கத்திலிருந்தும் சிரித்து ஏதோ சொல்லியிருக்க வேண்டும். இவளது சிரிப்பு மேலும் அதிகமாயிற்று. இப்போதெல்லாம் எதிர்ப் பக்கத்தவர்களின் பேச்சு இப்படியிருக்கலாம் என்று ஊகிக்கிற அளவு மாமு விற்பன்னனாகிவிட்டிருந்தான்.

அவள் பேசி முடித்து ரிசீவரை வைத்துவிட்டுக் கைக் குட்டையால் முகத்தைத் துடைத்தவாறு பணம் எடுத்துக்கொடுப்பதற்குள் மாமு ‘தண்ணி இருக்குதுங்க’ என்று அவள் கேட்பதற்கு முன்பாகவே தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து வெளியே வைத்தான். கடகடவெனத் தண்ணீர் குடித்துவிட்டுக் கைக்குட்டை முனையால் வாய் துடைத்துக்கொண்டே இவன் பக்கம் பார்வையைச் செலுத்தாமல் வெளியேறியவளின் நடையில் மருந்துக் கடைக்குச் செல்லும் அவசரம் இருந்தது. அவள் போன பிறகுதான் அவள் பேனாவின் மூடி தன் கையிலேயே தங்கிவிட்டதென்று மாமுவுக்குத் தெரிந்தது. அவளைக் கூப்பிடுவதென்றாலும் எப்படிக் கூப்பிட வேண்டும் எனத் தெரியாமல் பேசாமலிருந்தான். தன் பூத்திலிருந்து வெளியேறி வேகமாக நடந்து போன அவள், வெளி உலகத்துக்குள் சேர்ந்ததே – இவ்வளவு நேரமும் தன் னெதிரிலேயே தன் சொந்தச் சங்கதிகளைக் குட்டி ரிசீவரில் பகிர்ந்துகொண்டு, பேச்சைக் கேட்டுக்கொண்டும் கேட்காதவனைப் போல உட்கார்ந்திருந்த தன்னிடமிருந்து – அன்னியமான ஏதோ பரிச்சயமற்ற உலகத்துக்குள் அவள் வழுக்கிச் சென்றதைப் போல மாமுவுக்குத் தோன்றியது. அந்த உலகத்தில் தாங்கள் இருவரும் என்றைக்கும் சந்திக்கப்போவதில்லை; சந்தித்தாலும் பரஸ்பரம் பரிச்சயமான புன்னகையை மிளிரவைக்கக் காரணமே இல்லாமல் போகலாம் என்று மாமுவுக்குத் தோன்றியதுமே தன் எஸ்டிடி பூத் மேலும் நெருக்கமானதாகத் தோன்றியது.

மேலும் இரண்டொரு தினங்களுக்குப் பிறகும் கமலம்மா காணப்படாததால் பஸம்மாவிடம் விசாரித்தான். கமலம்மா இப்போது கோட்டைக்குப் பக்கத்தில் காய்கறிக் கூடையோடு உட்கார்ந்திருக்கிறாள் என்று அவள் சொன்னபோது, இத்தனை வருடங்களாகக் காய்கறி விற்றுக்கொண்டிருந்த இந்த இடத்தைவிட்டு அங்கே ஏன் போனாள் என்னும் புதிய கேள்வி அவனை வாட்டத் தொடங்கியது. ஒருமுறை கோட்டைப் பக்கம் போய் வரலாமா என்று மாமு யோசித்தான் என்றாலும் ஏதேதோ வேலைகளுக்கு இடையே அது சாத்தியப்படவே இல்லை. அதில்லாமல் காந்தி சௌக்கிலிருந்து கோட்டை போய்வரக் குறைந்தபட்சம் அவனுக்கு ஒன்றிரண்டு மணி நேரம் தேவையாயிருந்தது. அவ்வளவு நேரம் பூத்தை மூடிவிட்டுப் போவதற்கும் மனம் வரவில்லை.

பிறகு ஒரு நாள் காலை மாமு பூத்துக்கு பஸ்ஸில் வந்துகொண்டிருந்தபோது, ஜெயஸ்ரீ டாக்கீஸ் ரவுண்டானாவுக்கு அந்தப் பக்கம் உயரமான பரண்மேல் நின்று ஒரு பையன் வெள்ளைப் போர்டில் விளம்பரப் படம் வரைந்துகொண்டிருந்தது தெரிந்தது. பெரிய அகலமான போர்டுக்கு முன்னால் அந்தச் சின்னப் பையன் பரண் மேல் ஊசலாடியவாறு வண்ணம் பூசிக்கொண்டிருந்ததைப் பார்த்த மாமு அவன் ஏதாவது பாலன்ஸ் தவறி விழுந்துவிடுவானோ என்று ஆதங்கப்பட்டான். அந்தப் பையனை எங்கோ பார்த்ததைப் போலிருந்தது. அவன் வண்ணம் பூசியபடி ஊசலாடிக்கொண்டிருந்தபோது, இரண்டு பக்கமும் தெரிந்த தோற்றம் சற்றுப் பரிச்சயம் எனத் தோன்றியதும் யார் என்று மாமு தலையைப் பிய்த்துக்கொள்வதற்குள் நினைவுக்கு வந்தது . . . அவன் கமலம்மாவின் மகன் என்று. ஒன்றிரண்டுமுறை தன்னோடு அழைத்துவந்திருந்த கமலம்மா, சங்கோஜத்தால் எங்கோ பார்த்தவாறு நின்றிருந்தவனை, மகன் என்று பெருமையோடு காட்டியிருந்தாள். அவனே இந்தப் பையன் என்று தீர்மானிப்பதற்குள் சிட்டிபஸ் முன்னுக்குச் சென்றுவிட்டிருந்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப் போய்ப் பார்த்துவிடலாமா எனத் தோன்றினாலும் அவன் கமலம்மாவின் மகனாகவே இருந்தாலும் என்னவென்று பேசுவது? எல்லாவற்றுக்கும் மேலாக இவன் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பித்து வந்திருக்கலாமோ? இது கமலம்மாவின் கண்ணிலும் பட்டிருக்கலாமோ? அதனால்தான் இப்படியெல்லாம் போர்ட் வைக்க இடமே இல்லாத கோட்டைப் பக்கம் போய் வழக்கம்போலக் காய்கறி விற்றுக்கொண்டு உட்கார்ந்துவிட்டாளோ என்றெல்லாம் சந்தேகம் தொடங்கி எந்த முடிவுக்கும் வர முடியாமல் எஸ்டிடி பூத்துக்குள் வந்தான்.

தூசு துடைத்து வழக்கம்போல ஊதுவத்திக் கொளுத்திவைத்து உட்கார்ந்த மாமுவுக்கு ‘அவன் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து ஏன் விடுதலையாகி வந்திருக்கக் கூடாது? அங்கே என்னென்னவோ கற்றுத் தருகிறார்களாமே? அதில் போர்ட் எழுதுவதற்கும் கற்றுத் தந்திருக்கலாமல்லவா? சீர்திருத்தப் பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பியிருக்கலாமல்லவா?, என்னும் ஓர் இயல்பான சாத்தியப்பாடு தோன்றியதும், முதலில் மோசமான சந்தேகங்களே எதற்குத் தோன்ற வேண்டும் என்று சங்கோஜப்பட்டான்.

அன்று வாடிக்கையாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில் மாமு பெட்டிக்கடைக்குப் பக்கத்தில் டீ குடித்துக் கொண்டு இருந்தபோது, அவனுடைய பெரிய அண்ணனின் மனைவி வந்து வீட்டுக்கு ஏதோ சாமான் வாங்க வேண்டும் பணம் கொடு என்று வற்புறுத்தத் தொடங்கினாள். தான் எல்லாப் பணத்தையும் சேர்த்து மறுநாள் பில் கட்ட வேண்டியிருக்கிறது என மாமு சொன்னாலும், வெறுமனே சாப்பிட்டுவிட்டுத் தூங்கியெழுந்து போகும் அவனுக்குக் குடும்பப் பொறுப்பே இல்லையென்றும் அதனால்தான் தாங்கள் அவனுக்கு இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் வாயிலடித்துக்கொண்டு சொன்னாள்.

‘பெரியவனுக்கு நாலு பிள்ளைங்க . . . அடுத்தவனுக்கு மூணு . . . பிள்ளைங்களுக்குச் சாப்பாடு போடாம குப்பையில விளையாடவிடறது . . . எப்பவும் ஒன்னுல்ல இன்னொன்னுக்கு ஒடம்பு சரியிருக்கறதில்ல . . . அவங்க ரண்டு பேரையும் இத்தனை பிள்ளைங்களைப் பெத்துக்கச் சொன்னது யாரு? எனக்குப் பொண்ணு பாத்துக் கல்யாணம் பண்ணுற எண்ணமே இல்லாம அவங்களோட குடும்பத்துலயே முழுகியிருக்கறாங்க. எவ்வளவு பணம் குடுத்தாலும் சண்டைதான் . . .’ என மாமுவுக்கு மனசுக்குள்ளேயே கோபம் வந்தது. ஒவ்வொரு மாதமும் தன் பங்கு என்று சற்று அதிகமாகவே பணம் கொடுத்தாலும், மேலும் மேலும் எப்படிக் கொடுப்பது என்று நினைத்துக்கொண்டு அவனும் சண்டை போட்டான்.

அப்படிச் சண்டை போடும் ஆவேசத்தோடு நின்றபோதுதான் அவன் கவனத்துக்கு வந்தது . . . காந்தி சௌக்கிலிருந்து உள்ளே வலது பக்கம் வரும் சாலையில் ஒரு கடைக்கு முன்னால் பைக்கின் மேல் உட்கார்ந்திருந்தவனுக்கு அருகில் நின்று, அன்றைக்குப் பேனாவின் மூடியை மறந்துவிட்டுப் போன பெண் ஏதோ சொன்னபடி நின்றிருந்தாள். மாமு சண்டையை அப்படியே நிறுத்திக் கவனித்தான். பைக்கின் மேலே உட்கார்ந்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தவன் அவள் கணவனாகத்தான் இருக்க வேண்டும். கடுகடுத்த முகத்தோடு அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, அவள் தலையாட்டிக்கொண்டு நின்றிருந்தாள். பிறகு பைக்காரனுக்குப் பின்னால் அவள் உட்கார எத்தனித்தபோது, இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள். பர்தாவிலிருந்த அண்ணி அவ்வளவு மோசமாகச் சீறியபடி தன்னைத் திட்டிக்கொண்டிருந்தது அவள் கவனத்துக்கு வந்ததோ என்னவோ என்னும் வெட்கம் மாமுவுக்கு. அதோடு பைக்மேலிருந்த கடுகடுத்த முகத்தவன் அவளைத் திட்டியதைத் தான் பார்க்கவில்லை என்பதைப் போலக் காட்டிக்கொள்ள வேண்டும் என்றும் மாமுவுக்குத் தோன்றியது. என்ன செய்வதெனத் தெரியாமலேயே மாமு நின்றிருந்தபோது, அவன் அண்ணியின் குரல் உச்சத்தையடைந்தது. இதெல்லாம் வழக்கந்தான் என்பதைப் போலப் புடவை மடிப்பை நீவிவிடும் இயல்போடு ஒரு நெருக்கமான சிரிப்பை இவனிடம் எறிந்துவிட்டுப் புர்ரென்று புறப்பட்ட பைக்கில் போன அந்தப் பெண் . . . எஸ்டிடி பூத்தின் வெளியே பரிச்சயமற்ற உலகத்தில்கூட இப்படிக் காரணமில்லாமல் பரிச்சயமான சிரிப்பை வீசச் சாத்தியமாகிவிட்ட அந்தக் கணங்கூட அடியோடு இயல்பாகவே இருந்தது. இந்தப் பர்தாப் பெண்ணைத் தன் மனைவியென்று அவள் நினைத்துவிட்டாளோ என்னும் சந்தேகம் மாமுவுக்கு இருந்திருந்தாற்போலத் திடீரெனத் தோன்றியதும் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

‘இல்ல இல்ல இந்தப் பர்தாப் பொம்பளை என் அண்ணி . . . இன்னும் எனக்குக் கல்யாணமாகல்ல . . . கல்யாணமானாலும் இப்படிப் பர்தா போடச் சொல்றவனில்ல நான் . . . அப்படி முரட்டுத்தனமா நடத்துறவனுமில்ல . . . அதோட நான் இப்படிப்பட்ட சண்டைக்காரியைக் கல்யாணம் பண்ணிக்கிறதா இல்ல . . . இன்னொருமுறை அந்தப் பெண் பூத்துக்கு வந்தால் இதையெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்ட மாமுவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

தான் இவ்வளவெல்லாம் ஆகாயத்தையும் பூமியையும் ஒன்று சேர்த்து நாலைந்து காய்கறிக் கூடைக்காரிகள், பெட்டிக்கடை, பீடாக்கடை முன்னாலிருக்கும் ஆண்களின் கவனத்தை ஈர்த்தவாறு கத்திக்கொண்டிருந்தாலும் அவர்களெல்லாம் ‘பணம் குடுத்துடு மாமு. சண்டை எதுக்கு? . . . கொஞ்சம் பணம் குடுத்துறக்கூடாதாப்பா?’ என்றெல்லாம் தன் சார்பாக வக்காலத்து வாங்கிப் பேசினாலும், மாமு கடைசிக் கடைசியாகச் சண்டைக்கு வலு சேர்க்காமல் சாலையின் எதிர்ப் பக்கம் பார்வையைச் செலுத்தித் தியானிக்கும் பாணியில் சிரித்தபடி நின்றிருந்ததைப் பார்த்து அவன் அண்ணிக்கு மிகவும் சலிப்பேற்பட்டது. ‘சாயந்தரம் வீட்டுக்கு வா. பாத்துக்கறேன்’ என்று கடைசியாகச் சத்தம்போட்டுச் சொல்லி முகத்திரையை இழுத்துவிட்டுக்கொண்டு சரசரவென நடந்தாள்.

அதிரடிச் சண்டைகள் நிறைந்த சினிமா பார்த்துவிட்டுத் தியேட்டரிலிருந்து வெளியே வந்த ஜனங்கள் தத்தம் உலகத்துக்குள் போய்ச்சேருவதுபோல அவ்வளவு நேரம் இவர்கள் சண்டையைப் பார்த்தவர்களும் இடையிட்டுப் பேசியவர்களும் அமைதியாகித் தங்களுடைய வழக்கமான அமளியில் முழுகினார்கள். அதன் பிறகு மாமு எதுவுமே நடக்கவில்லை என்பதைப் போல, பள பளக்கும் தன் சின்னப் பூத்துக்குள் போய் உட்கார்ந்துவிட்டான். அன்று வெயிலுங்கூடக் கடுமையாக இருந்தது. அரசாங்க விடுமுறை ஏதோ இருந்ததாலோ அல்லது வெயிலின் கடுமையாலோ சாலையில் வாகனங்களின் போக்குவரத்தும் ஜனங்களின் நடமாட்டமும் குறைவாகத் தெரிந்தன. தார்ச் சாலையில் தொடர்ந்து விழுந்த வெயில் மெதுவாகச் சூடான காற்றாகி, புழுதியாகி மேலேயெழுந்து சுற்றிலும் பரவியபடி இருக்க, வெக்கையும் வேர்வையும் உண்டாக்கும் கசகசப்பால் எல்லாவற்றின் மீதும் எரிச்சலுற்றுச் சண்டையிடச் சின்னக் காரணம் ஒன்று பின்தொடர்ந்து எல்லோரும் சிடுசிடுக்கக் காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியதும் ‘இந்த ஊருக்கு இதெப் படிப்பட்ட கோடைகாலமப்பா’ என்று கோபம் வந்தது.

சாயந்திரமாவதற்குள் அவனுக்கு லேசாகத் தலைவலிக்கத் தொடங்கி, ‘தூத்தேரி நஷ்டம் ஆனா ஆகட்டும், என்று முணுமுணுத்துக்கொண்டே கடையை மூடிவிட்டு நின்ற மாமுவுக்கு அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்குப் போகவும் மனம் வரவில்லை. அப்படி இப்படிப் பார்த்தவாறு ஸ்டேஷன் ரோடில் மெல்ல நடந்தான். ஜெயஸ்ரீ டாக்கீஸ் ரவுண்டானாவுக்குப் பக்கத்தில் வந்துகொண்டிருந்தபோது, தெரிந்தவன் ஒருவன் கிடைத்துப் பேசிக்கொண்டு நின்றான். பேசிக்கொண்டிருந்தபோது மாமுவின் கவனம் ரவுண்டானாவுக்கு அப்பால் போர்டின் பக்கம் சென்றது. காலையில் அந்தப் பையன் வண்ணம் பூசியிருந்த போர்ட் முழுக்கத் தயாராயிருந்தது. அங்கே பரண் இருக்கவில்லை. முழுமையடைந்த சித்திரத்தைப் பார்த்தவுடனே அவனுக்கு ஒரு வகையான நிம்மதியேற்பட்டது.

எவ்வளவோமுறை இப்படி நடந்திருக்கிறது. அங்கும் இங்கும் பரண்மேல் நின்று போர்ட் எழுதும் இளம் பையன்களைப் பார்த்து விசித்திரமான ஆதங்கத்தில் உழன்று அதன் பிறகு அந்தப் போர்ட் முழுமையடைந்திருந்ததைப் பார்த்து நிம்மதியடைந்து பையன் பத்திரமாகக் கீழே இறங்கியிருக்கலாம் என்னும் உணர்வை மனத்தில் நிறைத்து ஆழமாக மூச்சிழுத்துக்கொண்டிருந்தான். இன்றைக்கும் அதே உணர்வில் போர்டின் பக்கமே பார்த்தவாறு நின்றபோது, இவன் கவனம் பேச்சைவிட்டு வேறெங்கோ இருந்ததைக் கவனித்த அவன் பேச்சை முடித்துக்கொண்டு புறப்பட்டுப் போனான். மாமு மெதுவாகச் சாலையைக் கடந்து அந்தப் போர்டுக்குக் கீழே வந்தான். அந்தப் போர்டை நிறுத்தியிருந்த இரண்டு இரும்புக் கம்பங்களுக்கு நடுவே காலியான இரண்டு மூன்று சின்ன வண்ண டப்பாக்கள் விழுந்திருந்தன. அவற்றுக்குப் பக்கத்திலேயே தூரிகை ஒன்று விழுந்திருந்தது. சந்தேகமே இல்லை. இது அந்தப் பையனுடையதுதான் எனத் தோன்றி, தேய்ந்துவிட்டது என்று நினைத்து விட்டுப்போயிருக்க வேண்டும் எனக் கையிலெடுத்துப் பார்த்தான். சற்றுப் பழையதாயிருந்த, வண்ணம் தோய்ந்த தூரிகை இன்னமும் கொஞ்சம் ஈரமாயிருந்தது.

போர்டைப் பார்த்தால் ஏஷியன் பெயிண்ட்ஸ் விளம்பரம். மூலையில் வண்ண டப்பாவைப் பிடித்துச் சாய்ந்து நின்ற அப்பாவிப் பையனின் சித்திரம். ஏனோ பையனின் முகத்தில் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து தப்பித்துக்கொண்டு ‘நான் இப்பத் திருந்திட்டேன் அம்மா’ என்னும் தோற்றத்தில் நின்ற பையனின் சாயலே இருந்ததாக என நினைத்து மாமு சட்டென்று தூரிகையைச் சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டான். மாமு அப்படியே நின்று சாலையில் புர்ரென்று ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ க்கள், பஸ்கள், டோ ங்காக்கள், இரண்டு சக்கர வாகனங்களில் போய்க்கொண்டிருந்தவர்களைப் பார்த்தவாறு நின்றான். அப்போது மெதுவாக மேகம் கவியத் தொடங்கியது. திடீரென்று சூறைக்காற்றோடு மழைத்துளி விழத் தொடங்கியது. மாமுவின் முகத்தில் சின்னச் சின்னக் கற்கள் விழுந்ததைப் போலிருந்தது. பார்த்தால் ஆலங்கட்டிகள் . . . ! வானத்தில் இடிமின்னல். மேக அரண்மனையின் கூரை விரிசல்விட்டுச் சிதறும் கண்ணாடித் துண்டுகளைப் போலத் தெறிக்கும் ஆலங் கட்டிகள்!

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு ஆலங்கட்டி மழையைப் பார்த்த மாமு மகிழ்ச்சியடைந்து கைக் குவிப்பிலும் கீழேயும் விழுந்த ஆலங்கட்டிகளை எடுத்து வாயில் போட்டுக்கொண்டிருக்க, எதிர்ப் பக்கத்து ஆட்டோ ஸ்டாண்டிலிருந்தவர்களும் கடைக்காரர்களும் இவனைப் போலவே மகிழ்ச்சியிலிருந்தார்கள். மாமு நடைபாதையில் விழுந்த ஆலங்கட்டிகளைக் கீழே குனிந்து பொறுக்கியபோது, சட்டைப்பையிலிருந்த தூரிகை கீழே விழுந்தது. அன்றைக்கிருந்து பத்திரமாக எடுத்துவைத்திருந்த அந்தப் பெண்ணின் பேனா மூடிகூடக் கீழே விழுந்தது. மாமுவின் முகம், தூரிகை, பேனா மூடி, வண்ண டப்பாக்கள் எல்லாவற்றின் மேலும் படபடவெனப் பெய்யத் தொடங்கிய பருவமழை . . . கடும் கோடையின் எத்தனையோ நாள்களின் வெப்பத்தைக் கரைப்பதைப் போல ஆகாயத்தில் சூரியனிலிருந்து தொடங்கிப் பூமியின் மேலுள்ள எல்லோர் நெஞ்சமும் குளிரும்படி இடிமின்னல் காற்றோடு பருவமழை ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. தூரிகையிலிருந்து புறப்பட்ட வண்ணத் தண்ணீரில் அந்தப் பெண், கமலம்மா, கண்ணியமான போஸில் நின்ற ஏஷியன் பெயிண்ட்ஸ் பையன், மழையில் நனைந்தவாறு நின்ற மாமு எல்லோருடைய சித்திரங்களும் கலந்து வந்ததைப் போலிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *