ஆறுதலாய் ஒரு அழுகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 19, 2015
பார்வையிட்டோர்: 9,169 
 

பதினோராவது தடவையாக கைப்பேசியை உயிர்ப்பித்து மணி பார்க்கிறேன். வண்டி வரும் தடயமில்லை. 5.35 ஆகிடுச்சு. மத்தியப் பேருந்து நிலையத்தில் 5.20 க்கு சரியா கிளம்பியிருக்கணுமே… கெளம்பறச்சே பேருந்துல தான் ஏதேனும் கோளாறோ… மந்தாரக் குப்பம் போய்விடலாமா? விருத்தாசலம் வழியா வர்ற சேலம் –சிதம்பரம் வண்டி ஏதாவது கெடைக்கலாம்…. சிதம்பரம் போயி மாயவரம் போகணும். ம்ம்ம்…

என்னோடு புதுக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கும் மர நிழலில் தலை நுழைத்து நிற்கும் சிலரும் பேருந்து வரும் பாதையை நோக்கிய படி மனச் சலனம் புலப்பட தவிப்புடன் நின்றிருந்தனர்.

கிராமங்களில் குளமிருந்த காலத்தில் கும்மாளம் போடும் சிறுசுங்க கரையேற மனசில்லாம ஆட்டம் போடுறாப்ல சூரியன் மேற்கே வேகமா இறங்காத அழும்பினால் உடம்பு தன் தட்பவெப்பத்தை சமன் செய்துக்க வியர்த்துக் கொட்டுது. பொழுதுக்கும் சூடேறிய தார்ச்சாலையின் வெம்மையில் காற்றும் தாகத்துல தவிக்குது. பையிலிருக்கும் தண்ணீர் பாட்டிலில் கொஞ்சம் நாவறட்சியை பண்டமாற்றினேன்.

இருக்கிற கவலை போதாமல், இந்நேரம் தான் புறப்படும் அவதியில் தலைவலித் தைலம் எடுத்து வைத்துக் கொள்ளாதது நினைவுக்கு வந்து தொலைத்தது. எப்போதும் ஊர்ப்பயணத்துக்கு எடுத்துப் போகும் பையில் ஒரு தைல பாட்டில் இருக்கும். அதுவும் சாவு வீட்டுக்கு போகும் போது பணப்பை இருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ தலைவலித் தைலம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வேன். இன்று வேறு பை.

சாவு வீட்டில் ஓய்ந்து ஓய்ந்து கேட்குற ஒப்பாரி ஒலியும் பயணக் களைப்பும் தலைவலியை தட்டியெழுப்பிடும். எந்த பயணத்துக்கும் வீட்டு வாசலைத் தாண்டும் வரைக்கும் திரும்பி வரும் வரை தேவையான முன் தயாரிப்பு வேலைகளை செய்து முடிகும் அலுப்பு வேறு. சாவு வீடுகளில் மொத்தமாக கலந்து வைத்ததை திரும்பத் திரும்ப சுட வைத்து கொடுத்துத் தீர்க்கும் காபி எனும் தண்டனை இருக்கிறதே… அப்பப்பா. கடமைக்கு வற்புறுத்தி கையில் திணித்துப் போகும் மக்களை பார்த்தாலே மண்டை தெறிக்கும்.. இப்போதெல்லாம் அவங்க திணிச்சுட்டு நகர்ந்தவுடனே உட்கார்ந்த இடத்திலேயே மூலை முடுக்கில் அந்த அரைச் சூட்டுக் கசாயத்தை தள்ளிவிட்டு தப்பிக்க பழகியாச்சு.

சரி. சிதம்பரத்தில் இறங்கியவுடன் ஞாபகமாக ஒரு தைலம் வாங்கிக்கலாம். இவ்வளவு நேரமாகும்னு தெரிஞ்சிருந்தா கலந்த காபியை ஒரு ஆத்து ஆத்தியாவது குடிச்சிருக்கலாம்… சுட்டுகிட்ட நாக்கு முணங்கியது. எங்க கிளம்பினாலும் எந்த நேரமானாலும் ஒருவாய் காபியை ஊத்திகிட்டு தான் கெளம்பறது. பழகிப்போன பொம்பளைக் குடி. அவரோட வரும்போது சில நேரம் பேருந்து போயிட்டா அடுத்த வண்டி வர்ற வரைக்கும் நிற்கும் போது சொல்லுவார்… “அந்தக் காபியை போடாம கெளம்பி இருந்தா இந்நேரம் போயிட்டு இருக்கலாம்ல”.

‘வந்தாரய்யா பெருமாள்’ ன்னு விஜயலட்சுமி நவநீதக் கிருஷ்ணன் பாடும் உற்சாகக் குரலில் ‘வந்திருச்சு, வந்திருச்சு’ என்றபடி துவண்டிருந்த மக்கள் தத்தம் பைகளை எடுத்துக் கொண்டு அவசரமாக நகர்ந்தனர். எல்லாரும் சிதம்பரம் வண்டிக்குதான் நின்னதா? உட்கார எனக்கொரு இடம் வையப்பா பிள்ளையாரப்பா… முண்டிய கூட்டத்தில் கடைசியாக நின்றபடி மனசுக்குள் தோப்புக் கரணம் போட்டேன்.

பயணச்சீட்டு வாங்கிய கையோடு கைப்பேசியெடுத்து கணவருக்கு தகவல் சொன்னேன். “பஸ்ஸைப் பிடிச்சாச்சுங்க.”

“அப்பாடா… பத்திரமா போயிட்டு வா.”

சாவு வீட்டுக்கு தனியா போறது தைலமில்லாம போறது போல இன்னொரு கொடுமை. சாவு அன்னைக்கு எடுக்கிற நேரம் விசாரிச்சு அதுக்கேத்த மாதிரி போய் கும்பலோட கும்பலா நின்னு சொல்லாம கொள்ளாம பாடை கிளம்பியதும் கிளம்பிடலாம்..

எல்லா ஊரிலிருந்தும் அக்கம்பக்கம் உறவு சனத்தோட கும்பலா வருவாங்க. நகரத்தில் வாழ்க்கைப்பட்டு அருகில் உறவுக்காரங்க இல்லாம கல்யாணமாகி வந்த நாளா எந்த காரியத்துக்கும் தலையில அடிச்ச மாதிரி தனியாத்தான் போக வேண்டியிருக்கு. கருமாதிக்கு இன்னொரு சிரமம்… . பொம்பளைங்க தான் முதல் நாளே வீட்டு வேலைகளை வேகவேகமா முடிச்சி, அந்தி சாய கிளம்பி இராத்திரி சாப்பாட்டுக்கு காரியக்காரங்க வீட்டிலிருக்கிறாப் போல போயாகணும்.

ஆம்பளைங்க பாடு தேவலாம். காலையில ஆற அமர கரும காரியம் செய்யற துறைக்கு போய்க்கலாம்.

இராத்திரி முதல் படையல் எல்லா ஊரிலேயும் பத்து மணிக்கு மேல தான். அதுவும் இன்னைக்கு திங்கட்கிழமைங்கறதால சம்பிரதாயப்படி பன்னெண்டு மணிக்கு மேலதான் முதல் படையலே படைப்பாங்க. விடிய விடிய முழிச்சிருந்து வந்திருக்கிற எல்லா உறவுக்காரங்க கிட்டயும் எல்லா கதையும் பேசி, விடிகாலம் துறைக்கு கூடை கிளம்பியதும் வண்டியேறினா பிள்ளைங்கள பள்ளிக்கு கெளப்ப சரியா இருக்கும். நான் போனதும் கிளம்பி நேரா கருமாதி துறைக்கு போயிட்டு மதிய சாப்பாடு வரைக்கும் காரியக் காரங்க வீட்டில் இருக்கறது கணவர் வேலை. இந்த ஏற்பாட்டால் குழந்தைங்க தனியா இருக்கற கவலையும் கிடையாது.

வீட்டுக்கு போய் பின்கட்டு கதவு திறந்து தலையில தண்ணீ ஊத்துறப்ப தான் எல்லாரையும் பார்த்துப் பேசிக் களைச்ச கண்ணெல்லாம் கபகபன்னு எரிய ஆரம்பிக்கும் எனக்கு. ஈரத் துணியை தலையிலயிருந்து அவிழ்த்துட்டு, பாரமா கனக்கிற தலைய சமாளிக்க ஒரு ரெங்கான டீயை சுடச்சுட ஊத்தியாகணும். ஆட்டுக்காரன் குழையைக் காட்டி வீட்டுக்கு ஓட்டி வர்ற குட்டியாடாட்டம் பிள்ளைங்க பள்ளிக்கூடம் கெளம்பற வரைக்கும் தாங்கும் அது.

பிறகென்ன.. கதவை இழுத்து பூட்டிகிட்டு ஒரு தூக்கம். கருமாதி வீட்டிலிருந்து இவர் வந்து கதவை தட்டுறவரைக்கும் எழுந்திரிக்க வேணாம். அவர் சாப்பாடு அங்கேயே முடிஞ்சதால பசிக்கிற என் வயிறுக்கு ரெண்டு தோசை போகும். அடுத்து பிள்ளைங்க பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பறதுக்குள்ள பரபரன்னு ஏதாச்சும் கொறிக்க, குடிக்க… இருந்தாலும் அடுத்த ரெண்டு நாளைக்கு ஒரு கிறுகிறுப்பாத்தான் இருக்கும் உடம்பு. முடியவேயில்ல, முடியவேயில்லன்னு அனத்திகிட்டே வீட்டு வேலைகளை பார்ப்பேன்.

அடுத்த இழவுக்கு ‘உனக்கு தான் முடியாம போகுதே, கருமாதிக்கு நான் மட்டும் காலையிலே போய் வர்ரேன்’ என்பார் இவர். “அதெப்படி… நாளை பின்னே முகத்துல முழிக்கறது? எல்லோரையும் ஒரே இடத்துல பார்த்துப் பேசினது போலவும் ஆச்சு… முடியலன்னு எதைத் தான் நிறுத்தறோம்?” எப்படியாச்சும் போயிடணும். வந்தும் புலம்பணும்.

சிதம்பரத்துல தயாரா நின்னுச்சு மாயவரம் வண்டி. ஏறி இடம்பிடிச்ச பிறகுதான் தைலம் நினைப்பு. வண்டி ‘பச்சையப்பா’ நிறுத்தம் தாண்டிடுச்சே அதுக்குள்ள. போகுது போ. இறங்கி வாங்கிக்கலாம். இல்லாட்டி அங்க யார்கிட்டயாவது கேட்டுக்கலாம்.

பஸ்காரர் கியரை போடுபோடுன்னு போட்டுகிட்டுல்ல ஆக்சிலேட்டரை அழுத்தின மேனிக்கு போறாரு! சகல வளைவு நெளிவுகளிலேயும் குறையாத வேகம். ஆட்டமா ஆடி ஒடம்பெல்லாம் வலியெடுத்துடுச்சு. ஆனா, எட்டரைக்கே போயாச்சு சாவு வீட்டுக்கு.

வாசலிலேயே மறிச்சுகிச்சு கும்மோணம் அத்தாச்சி. “வாம்மா. என்னா சாவு அன்னைக்கு ஆளை காணலே?”

“சாவு சேதி கிடைச்சப்ப தான் குடும்பத்தோட பழனியில இருந்தோம்ல… நல்லாயிருக்கீங்களா அத்தாச்சி?”

“ம்ம்…என்னா எளைச்சுட்டே?”

“அதெல்லாம் அப்படியேதான் இருக்கேன். நாளாகி பார்க்கறதால அப்படி தோணுது. வடிவு வரலை?” வடிவு பால்ய காலத்து தெருச்

“வந்திருக்கா, வந்திருக்கா… அவளுக்கு சின்ன மாமியா பக்கத்து தெருவில இருக்காங்க. அங்க போய் பேசிட்டு இருக்கா. சாப்பாடு எடுக்க ஓட்டலுக்கு ஆள் போயிடுச்சு. போய் கூட்டியாறேன். நீயும் வர்றியா? பையெல்லாம் அங்கியே வைச்சுட்டு வந்தா காலையில போய் குளிச்சுக்கலாம்.”

“நீங்க போங்க அத்தாச்சி. நான் மாத்து துணி எடுத்துட்டு வரலே. காலையில மொத வண்டிக்கு கிளம்பிடுவேன். “ அத்தாச்சி வெளி கேட்டை திறக்க, நான் உள் கேட்டை திறந்தேன்.

வீட்டுக்குள் நுழைந்ததும் கதிர்வேல் எதிர்ப்பட்டான். “வாக்கா” அப்படியே சித்தப்பா நடந்து வர்றது மாதிரியே தோணுது. அவன் கைகளைப் பிடித்துக்கொண்டேன். “சேதி கிடைச்சப்ப ஊரிலில்லேப்பா. கடைசி முகமுழிக்கு எங்களுக்கு கொடுப்பினையில்லாம போச்சு.

“பரவாயில்லக்கா. அதான் உடனே போன் பேசினீங்களே… ஒருமாசமா டைபாயிடு அவருக்கு. நல்லாயிட்டு ஒருவாரம் இருந்தாரு. வெய்யில் தாங்காம கடைத்தெரு போறச்சே தன்னிஷ்டத்துக்கு ஜுஸ், லெசி, சர்பத்துன்னு வுட்டுகட்டினதுல திருப்பிகிச்சு. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில காட்டியும் பிரயோஜனமில்ல…”

“நாம கொடுத்து வைச்சது அவ்வளவுதான் போல.” என்றேன். மெதுவாக கைகளை விடுவித்துக் கொண்டான்.

“உட்காருங்கக்கா. சாப்பாடு எடுக்க ஆள் போயிருக்காங்க. விட்டுப் போன ஒண்ணு ரெண்டை வாங்க வேண்டிய வேலையிருக்கு…” உள்ளறையிலிருந்து வெளிப்பட்ட பெண்ணைக் கூப்பிட்டான்.

செளம்யா, இங்க வா… உள்ளே கூப்பிட்டுப் போய் காபி கொடு வானதி அக்காவுக்கு.”

“வாங்க. நல்லாயிருக்கீங்களா… சின்ன வயசுக் கதை பேசும் போதெல்லாம் உங்களைப் பத்தி சொல்வாரு “

“நல்லா இருக்கேம்மா… கதிரைப் பத்தி நானும் வீட்டில் அடிக்கடி பேசுவேன். பொண்ணு எங்க? ஸ்கூல் போட்டாச்சா? என்ன பேரு?”

“ஸ்மிருதி. ப்ளே ஸ்கூல் போறா. அடுத்த வருஷம் தான் சேர்க்கணும்.”

“ஆமாமா, சித்தி இறந்தப்போ ரெண்டு மாசக் குழந்தையா இருந்தா இல்ல…”

“ம்ம்… வெளிய விளையாடிட்டு இருக்கா. கூப்பிடறேன்.”

“பரவாயில்ல. அப்பறம் காட்டு.”

உள்ளேயிருந்தவங்க கூட போய் சேர்ந்துகிட்டேன். சாப்பாடு ஆட்டோவில் வந்திறங்கிச்சு. இட்லி, ரவா கிச்சடி, ரெண்டு வித சட்னி, சாம்பார். காபி கேன் ஒண்ணு.

வீட்டில் செஞ்ச பயத்தங் கஞ்சியை செளம்யா ஒரு சின்ன குவளையில் கொண்டு வந்து சாப்பாட்டோடு வைத்தாள். குழைய வெந்த பாசிப் பயறும், தூக்கலான வெல்லமும், அளவான ஏலப் பொடி மணமும் அப்பவே ரெண்டு டம்ளர் குடிக்க ஆசையை தூண்டுச்சு. கடையிலே இருந்து வந்தவற்றை எடுத்து பாத்திரம் மாத்தி, பாய் விரிச்சு, இருந்தவங்களை சாப்பிடக் கூப்பிட்டு, பரிமாறி என நேரம் போனது. பொடிசுங்க எல்லாம் வெளியே பந்தலில் விளையாட்டு மும்முரம். எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து உட்கார வெச்சாச்சு.

‘எனக்கு இதுவேணாம், அது வேணும்’,

‘போதும், பசிக்கலை’,

‘என் தண்ணிய இவன் குடிச்சிட்டான்’

‘அங்க பாருங்க, அவன் கீழே எல்லாம் இறைக்கிறான்’

‘அடாடா.. எட்டூரை கட்டி மேய்ச்சிடலாம், இதுங்களை சமாளிக்கறதுக்குள்ள…’ அலுத்துக் கொண்டார் உடன் பரிமாறியவர்.

அவற்றின் அட்டகாசம் எனக்கு ரசிக்கும்படியாகவே இருந்தது.

சன்னமாய் வந்துகொண்டிருந்தவங்களை அப்பப்போ உட்காரவெச்சு பரிமாறினோம். நாங்களும் சாப்பிட்டாச்சு. ஆனா பயத்தம் பாயசம் ஒரு வாய் தான் கிடைச்சுது. இன்னும் நாலைஞ்சு பேர் சாப்பிடும் அளவு சாப்பாடு மீதமிருந்தது.

இன்னும் வரவேண்டியவங்க இருக்காங்களா? யாரோ கேட்க, யாரோ சொன்னாங்க, “புதூர்க்காரங்களைக் காணலையே?”

“கதிர் தாய்மாமா வீட்டுக்காரங்க தானே… ஏ கதிரு, போன் போட்டுக் கேளப்பா கிளம்பிட்டாங்களான்னு.”

“கேட்டாச்சு. வந்துடுவாங்க. பன்னெண்டுக்கு மேல தானே படையல்…”

“அப்போ, இன்னும் கொஞ்சம் சாப்பாடு வாங்கியாங்கப்பா. நாலைஞ்சு பேருக்கு மேல வந்தா தடுமாட்டமா போயிடும்.”

“பதினோரு மணிக்கு மேல வர்றவங்க சாப்பிடாமயா இருக்கப் போறாங்க?”

“வர்றவங்களை நாம சாப்பிடச் சொல்றது தான் முறை. எத்தனை மணிக்கு வந்தாயென்ன? ஒரு இருபது இருபத்தியஞ்சு இட்டிலி மட்டும் வாங்கினா கூட சமாளிச்சிக்கலாம்.”

இப்பவே மணி பத்தை தாண்டியாச்சு. எங்க போய் இருபத்தஞ்சு இட்லி வாங்குவான் கதிர்?

“சரி, பார்க்கிறேன்” என்ற கதிர், மறுபடி போய் வாங்கியும் வந்துவிட்டான்.

“படைக்க இட்லி, சுழியன், வடையெல்லாம் செய்யற வேலையை ஆரம்பிக்கலாமே…” சோழகனூர் சின்னம்மா குரல் கொடுத்தாங்க.

“அதெல்லாம் ஆர்டர் செஞ்சாச்சாம்.”

“என்னாடியம்மா … சாப்பாடுதான் ஆள் வெச்சு செய்யற காலம் மலையேறி ஆர்டர் தர்ற காலமாச்சு. படையலுக்கு கூடவா?!” முகவாயில் கை வைத்து அதிசயித்தார் சின்னம்மா.

“ஆமா. காசைக் கொடுத்தா எல்லாம் கிடைக்கும் போது எதுக்கு மெனக்கிடு? உசிர் இருக்கும் போது செய்யறது தான் முக்கியம். செத்த பிறகு செவுத்துக்கு வச்சிதானே படைக்கறோம்?”

“நல்லாயிருக்கு இந்த ஞாயம்!” சின்னம்மா முகத்தை சுழித்துக் கொண்டது எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்தது.

“அவாளு வரவரைக்கும் செத்த கட்டைய சாய்ப்போம்.” எல்லாரும் கிடைத்த இடத்தில் கிடத்தினார்கள் உடம்பை. தலையணை இல்லாத சாய்மானம் அவ்வளவு சிலாக்கியமானதாய் இல்லைதான்… வேறு வழி?

பதினொன்றரைக்கு வந்திறங்கினார்கள். சொன்னது போல் தாமதமாக கிளம்பியதாலும் இங்கே சாப்பிட வேண்டியிருக்கும் என்பதாலும் பசியோடு தான் வந்திருந்தாங்க.

நேரம் கடந்ததால் கிச்சடியை யாரும் சீண்டவேயில்லை. அது சீண்டும்படியுமில்லை. சாம்பார் ஒப்புக்கு கொஞ்சம் இருந்தது. தேங்காய் சட்டினியும் உயிரை விட்டிருந்தது. இட்லியோடும் இரண்டாவதாக வந்த காரச் சட்னியோடும் வீட்டு இட்லிப்பொடியோடும் ஒப்பேறியது அவர்களின் சாப்பாடு.

“மணி ஆச்சு, படைக்க எடுத்து வைய்யுங்கப்பா.” சாப்பிட்டு எழுந்த புதூர் மாமா சொல்லிக்கொண்டே கை கழுவினார்.

முறைக்காரர்களெல்லாம் தாம் வாங்கிவந்தவற்றை எடுத்து தாம்பாளம் சேகரித்து வரிசைப் படுத்தினாங்க. வயசில் பெரிய சின்னமனூர் அத்தை, தெற்குமுகமா ஒரு நாற்காலி போட்டு, விபூதி பட்டை போட்டு, சந்தனம் குங்குமம் வச்சு சித்தப்பா செத்த அன்னைக்கு போட்டிருந்த வேட்டி துண்டை நாற்காலியில் போர்த்தி மேலே ஒரு பூச்சரத்தை சூட்டினாங்க. பெரிய தலைவாழை இலைகள் மூணை நெடுக்குவாகில் பக்கம் பக்கமா போட்டு அவங்கவங்க வாங்கி வந்ததை எடுத்து அடுக்கினாங்க. நாற்காலியிலும் ஒரு சின்ன நுனி இலையில் வெற்றிலை பாக்கு வாழைப்பழ சீப்பு, எல்லா பழவகைகளிலும் ஒவ்வொண்ணு, கொஞ்சம் இனிப்பு, காரம் அப்புறம் சித்தப்பா விரும்பி சாப்பிடற சிலதுன்னு நிரப்பினாங்க. செளம்யாவை கூப்பிட்டு சித்தப்பாவோட கைக்கடிகாரம், கண்ணாடி, எப்பவும் போட்டிருந்த நீலக்கல் மோதிரம் எல்லாத்தையும் எடுத்து தரச் சொல்லி நாற்காலி மேலயே வச்சாங்க.

சகுந்தலா படத்துக்கும் ரவ்வோண்டு பூ வைம்மா. சுமங்கலியா போனவ பாரு. ரெண்டு வருஷத்துக்கு முன்னே ‘போயிட்ட’ சித்தி படத்துக்கு அவங்க அம்மா வீட்டுக்காரங்க வாங்கிவந்த பூவை எடுத்து சார்த்தினாங்க.

“பூ வெக்கிறவங்களை அடையாளம் தெரியுதா உனக்கு?” சற்று முன் ஒருவழியாக சின்ன மாமியார் வீட்டிலிருந்து வந்து சாப்பிட்டு, பக்கத்தில் உட்கார்ந்திருந்த வடிவு என் காதில் கிசுகிசுத்தாள்.

“பார்த்தமாதிரியே இருக்கு. சட்டுன்னு பிடிபடலை.”

“கதிர் அம்மா செத்தப்ப ‘தம்’ ‘தும்’ன்னு இடி இடிக்கிறாப்புல மாரடிச்சி கிட்டு அழுதாங்களே… உரை பாட்டெல்லாம் கூடப் பாடினாங்களே… அவங்க பெரியம்மா பொண்ணு… குளத்தூர்க்காரங்க…”

“ஓ… அவங்களா! அப்ப சும்மா ‘கிண்’ணுன்னு இருந்தாங்க. சித்தியோட ஒண்ணுவிட்ட அக்கா, குளத்தூரிலே பெரிய பண்ணையாச்சே. இப்ப என்ன இப்படி கண்ணெல்லாம் குழிவிழுந்து ஒட்டி ஒலர்ந்து… அடையாளமே தெரியாம…!”

“பண்ணையெல்லாம் வெண்ணையா உருகிடுச்சு. மவன்காரன் மொடாக்குடி. சேர்மானம் சரியில்ல. சொத்தெல்லாம் அடமானத்துல. பத்தாததுக்கு வூட்டுக்காரருக்கு கேன்சரு.”

“அடப் பாவமே… கீழ் மேலாக, மேல் கீழாக மாறிட்டே இருக்கற ராட்டினமாட்டம் ஆகிடுதே வாழ்க்கையும்! . எங்கேடி வடிவு, சித்திக்கு தங்கை ஒருத்தங்க இருப்பாங்களே… நெடுநெடுன்னு… கிளிமூக்கோட… ஆளைக் காணல…?”

“கதிர் அம்மா இருந்த வரைக்கும் வசதிக் குறைவான அந்த தங்கச்சிய கதிர் அப்பாவுக்கு தெரிஞ்சும் தெரியாமலும் தாங்கினபடிதான் இருந்தாங்க. அக்கா செத்தா மச்சான் உறவு அறுந்துச்சுன்னு ஆயிடுச்சு. காலையில வருவாங்களாயிருக்கும். பால் தெளிக்கு கூட இல்லாம சாவு அன்னிக்கே கிளம்பினவங்களாச்சே.”

“ஏதோ, ரொம்ப படுக்கையில் கிடக்காம போனது அவருக்கும் புண்ணியம். கெடந்தா இருக்கறவங்களுக்கும் பாடு தானே.”

“ஆமாமா… நேத்து காலையிலேயிருந்து ஓட்டல் சாப்பாடுதான். கதிர் பொண்டாட்டி கொடுத்து வச்சவதான். நம்ம வூடுகளிலே இப்படியெல்லாம் தாங்குவாங்களா? ஒவ்வொரு நல்லது கெட்டதுக்கும் பெண்டு நிமிர்ந்திடாது…”

“நாலுபேர் வந்தா நகரமுடியாத நகரத்து குட்டி வீடு. எல்லா பொண்ணுங்களும் வீடு தங்காம வேலைக்குப் போகும்படி விலைவாசி நிர்பந்தப் படுத்திடுச்சு. அந்தக்காலம் மாதிரியே இருக்கணும்னு எதிர்பார்க்கறது சரிவருமா?” சப்பை கட்டினேன்.

“போற போக்குல நாமெல்லாம் முதியோர் இல்லத்துல அனாதைங்க மாதிரியில்ல சாவோம் போலிருக்கு … முறை சொல்லவும் செய்யவும் யார் இருப்பா?” வடிவு வாடிப் போனாள்.

“மணி பன்ணெண்டை தாண்டிடுச்சு. கதிர்… வெளிய இருக்கற ஆம்பளைங்களைக் கூப்பிட்டு வா… படையல் போட்டுடலாம்.” சின்னமனூர் அத்தை குரல் கொடுத்தார்.

கட்டையை சாய்த்த பெண்டுகளில் சிலர் ஆழ்ந்த குறட்டையில் இருக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் அவர்களைத் தட்டியெழுப்பினர்.

படையல் முன் மூன்று இடத்தில் சூடம் பிரித்து வைக்கப்பட்டது. கதிர் இரண்டு மூன்று முறை மூக்கை உறிஞ்சிக் கொண்டான். சித்தப்பாவுக்கு ஒற்றைப் பிள்ளைக்கு பதில் பெண்ணாக பிறந்திருந்தாலும் விம்மி அழுதிருப்பாளோ…

சூடத்தை ஏற்றி விழுந்து வணங்கினான். . ‘எதற்கும் கலங்காதிருக்க’ உபதேசிக்கப்பட்ட ஆண்பிள்ளையாகிவிட, நடுநிசியில் ஊரெல்லாம் சூழ்ந்திருந்த இருள், வெளிச்சமிருந்த அவ்வீட்டிலும் குரலற்ற அமானுஷ்யத்தை பரப்பியது.

வரிசையாக எல்லோரும் ஏற்றிய சூடம் அணையாமல் தங்கள் பங்குக்கு எரிவதில் ஒவ்வொன்று சேர்த்து விழுந்து வணங்கி விபூதி பூசிக் கொண்டனர். ஆம்பிளைகள் வெளியே சென்றுவிட்டனர். சூடம் மலையேறும் வரை மயான அமைதி.

பிறகு அத்தை குரல் கொடுத்தார். ரத்த சொந்தக்காரங்க, மருமகள், மகள் முறையுள்ளவங்க அழலாம்.

செளம்யா கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள். இன்றைய நாகரீக உலகம் அடுத்தவர் முன் அழுவது அநாகரீகம், அசிங்கம் என்று போதித்திருக்கிறதே. எனக்கும் இருபது வருட நகர வாழ்க்கை கட்டிக்கொண்டு ஒப்பாரி பாட இடம் கொடுக்கவில்லை. உடையவர்கள் யாராவது அழுதால் சேர்ந்து அழத் தயாராக எல்லாரும் அமர்ந்திருந்தனர். உடல் கிடந்த அன்றேனும் கலங்கி அழுதிருப்பார்கள். உடையிருந்த நாற்காலி துக்கத்தை சூனியமாக்கி இருந்தது.

சித்தி இருந்து சித்தப்பா போயிருந்தால் அவளது ஒற்றைக் குரலாவது அவரது இழப்பை அர்த்தப்படுத்தியிருக்கும். அவளுக்காக அழுபவர்களேனும் உடன் அழுதிருப்பர். தொடக்கப் புள்ளியற்ற அலங்கோலமாய் ஆனது சூழல் செளம்யா எழுந்து உள்ளே போய் கடையிலிருந்து வரவழைத்த காபியை பேப்பர் கப்களில் ஊற்றி எடுத்து வந்து அனைவருக்கும் வழங்கினாள். தூக்கத்தை தொடர எண்ணியிருந்தவர்கள் காபி வேண்டாமென்று விட்ட இடத்தில் குறட்டையை தொடர ஆயத்தமாயினர். என்னைப் போல் வடிவு மாதிரி பேச்சுக்கு ஆள் இருந்தவர்கள் காபியில் ஆவி வருகிறதா என்று பார்த்து வாங்கிக் கொண்டனர்.

வெளியிலிருந்து ஓடிவந்து “அம்மா.. அம்மா” என்றபடி காபி கொடுத்துக் கொண்டிருந்த செளம்யாவை கால்களைக் கட்டிக் கொண்டாள் ஸ்மிருதி.

“இரும்மா, கையில் காபி தட்டு வைச்சிருக்கேன்ல. தட்டிடாதே. வர்றேன்.”

“நான் அவளை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டு, “காபி குடிக்கிறியாடா செல்லம்?” என்றேன்.

“ம்ஹும். பசிக்குது எனக்கு. இக்லி வேணும்.”

“இட்லியா…? இதோ பிஸ்கெட் பழமெல்லாம் இருக்கு பாரு. ஏதாவது சாப்பிடுவியாம்.”

“ம்ஹும்… எனக்கு இக்லிதான் புடிக்கும். இக்லிதான் வேணும்.”

காபி விநியோகித்து முடித்திருந்த செளம்யா வந்து ஸ்மிருதியை தூக்கினாள். “இதோ பாரு. நடு ராத்திரி. இப்ப சாப்பிடக் கூடாது. நாளைக்கு வயிறு வலிக்கும். எல்லோரும் சாப்பிடும்போது நீ எங்க போனே?”

“எனக்கு இப்ப தான் பசிக்குது. நா இக்லி சாப்பிடணும். இதெல்லாம் வேணாம்.”

“அடிச்சுடுவேன் பாப்பா. சொல்றதைக் கேளு. வேற ஏதாச்சும் சாப்பிடு. இக்லி தீர்ந்துடுச்சு.”

“முடியாது. முடியாது. எனக்கு இக்லி தா.”

ஸ்மிருதி குரலெடுத்து அழத்துவங்கி விட்டாள்.

செய்வதறியாமல் செளம்யாவும் அழ, குறட்டை விட்டுக் கொண்டிருந்த ஜனமெல்லாம் வாரிச் சுருட்டி எழுந்தனர்.

எனக்கு நெற்றிப் பொட்டில் ‘விண் விண்’ என்று தெறிக்கத் துவங்கியது வலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *