கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 10,149 
 

எலக்ட்ரீஷியனின் விரல்கள் வேகமாக செயல்பட்டாலும், வேலை முழுமை பெறவில்லை. ஒரு பேனை கழற்ற அரை மணி நேரமும், வாஷ் பேஷின் குழாயை கழற்றுவதற்கு கால் மணி நேரம் என்பதும் அதிகம். அவரால் முடியவில்லை; ஆனாலும், சோர்ந்து போகாமல் செயல்பட்டார்.
மேஜை மேல் டீயை வைத்த ராஜியின் வேகத்தில், கோபம் தெரிந்தது. “இப்படி ஒரு ஸ்லோ பார்ட்டியை அழைத்து வந்து என் உயிரை வாங்கு கிறீர்களே…’ என்று பார்வையாலேயே கேட்டதை, என்னால் உணர முடிந்தது. சேரில் அமர்ந்து எலக்ட்ரீஷியனை பார்த்தபடி இருந்தேன்.
ஐம்பதைத் தாண்டிய வயது; தளராத உடற்கட்டு; முகத்தில் ஒரு இறுக்கம்; ராணுவத்தில் பணியாற்றிய வலிமையான முதுமை.
ஆர்மி மேன்“”ஐயா… டீ சாப்பிடுங்க…”
ஸ்குரூ டிரைவரை வைத்துவிட்டு, டீயை எடுத்துக் கொண்டார்.
“”இன்னும் எவ்வளவு நேரமாகும்?”
“”எல்லாத்தையும் கழட்ட அரைமணி நேரமாகும். பேரிங் போட்டுட்டு பொருளையெல்லாம் வாங்கிட்டு வந்தேன்னா… ஒரு மணி நேரத்துல முடிச்சிடுவேன்.”
“”அவசரமில்லாம பொறுமையா முடிங்க…”
அடுப்படியில் இருந்த ராஜி, அங்கிருந்தபடியே என்னை கோபப் பார்வை பார்த்தாள்.
“ஆபிஸ், வீடு, மொபைல் போன்னு இருக்கீங்க… எப்பங்க வீட்டை கவனிக்கப் போறீங்க? பேன் ஓடல… வாஷ் பேஷின் ஒழுகுது. ரெண்டு ட்யூப் லைட் எரியல, பசங்க கம்ப்யூட்டர் ஒயர்ல ப்ராப்ளம்… ஆறு மாசமா நானும் கத்திகிட்டே இருக்கேன்; கண்டுக்காம இருக்கீங்க…’
காலை எழுந்ததுமே ராஜி, சுப்ரபாதம் பாடினாள். அவள் கூறியது, நூறு சதவிகித உண்மை. நீண்ட நாட்களாகவே அவளின் கோரிக்கைகள், காதில் விழுந்து கொண்டிருக்கிறது என்றாலும், ஏனோ அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. இன்றும் தட்டிக் கழித்தால், அடுத்த வாரம் அவள் அம்மா வருகையை நான் அலட்சிய படுத்துபவனாகி விடுவேன். ஆகவே, எலக்ட்ரீஷியனை தேடிப் புறப்பட்டேன்.
வேலை சுத்தமாக இருக்க வேண்டும்; பணம் அதிகமாகக் கேட்கக் கூடாது. இந்த இரண்டு கண்டிஷன் வீட்டில் நிரந்தரம். ஆகவே, அப்படியான ஆளைத் தேடி சாலிகிராமத்தின் தெருக்களில் அலைந்தேன்.
“இப்பல்லாம் நாள் கூலிதாங்க. இல்லேன்னா அரை நாள் சம்பளம். அதுக்குக்கூட இப்ப ஆள் கிடையாது. எல்லாரும் கான்டிராக்ட் வேலை பார்க்கிறாங்க. வேணும்னா சொல்லிட்டுப் போங்க… ரெண்டொரு நாள்ல அனுப்பறோம்…’
இதுவே எங்கெங்கும், எனக்குப் பதிலாக இருந்தது.
நான் வீட்டில் இருக்கும் போதுதான், மராமத்து வேலைகளை பார்க்க வேண்டும். இன்னும் இரண்டொரு நாள் என்றால், அதற்குள் ராஜியின் அம்மா வந்து விடுவார். அம்மா படுக்கும் அறையில் பேன் ஓடவில்லை என்றால், என் படுக்கை அறையில் அனலடிக்கும்… என்ன செய்யலாம்…
“சார்… தெரு கடைசில ஒரு எலக்ட்ரீஷியன் இருக்காரு; ரிடையர்ட் ஆர்மி மேன். அவர்ட்ட கேட்டுப் பாருங்க. மூடு இருந்தா வருவாரு…’
ஒரு வழியா வேலை முடிந்தபோது மதியமாகி விட்டிருந்தது. பேன் சுற்றியது; வாஷ்பேஷின் குழாய் இயங்கியது; கம்ப்யூட்டர் கனெக்ஷன் ஓகே; ட்யூப் லைட் பளிச்.
“”எவ்வளவு சார்?”
அவர், என்னைப் பார்த்தார்.
“”ஏதோ வேலை பார்த்திருக்கேன். பேரிங் மாத்தினது சரியா ஒர்க் அவுட் ஆகுமான்னு தெரியல. கண்ணு சரியா தெரிய மாட்டேங்குது; கண்ணாடி போடணும். ஏதாச்சும் பிரச்னைன்னா கூப்பிடுங்க… திரும்பவும் வந்து செஞ்சுச் தாரேன்…”
“”கூப்பிடறேன் பெரியவரே… கூலி எவ்வளவு சொல்லுங்க.”
இரண்டு மணி நேர வேலை… ஒற்றை ஆள். முன்னூறு கேட்பாரா?
“”ஐநூறு குடுங்க…”
ராஜி, அவரை சட்டென முறைக்க… நான் பணத்தை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்டு பொருட்களை எடுத்து, சற்று விறைப்பாகவே வெளியேறினார்.
“”ஏங்க… என்னங்க… பேன்லயிருந்து சத்தம் வருது. வாஷ் பேஷின்ல தண்ணி ஸ்லோவா வருது. கேட்ட காச கொடுக்கறீங்க…”
நான் அமைதியாக இருந்தேன்; ராஜி குரலுயர்த்தினாள்.
“”இதெல்லாம் என்னாத்துக்குன்னே தெரியல. எங்க போய் முடியப் போகுதுன்னும் தெரியல. காசோட அருமை புரியல உங்களுக்கு. இனிமே இந்த மாதிரிய வேலை எல்லாத்தையும், நானே ஆள கொண்டு வந்து பார்த்துக்கறேன்… விறுவிறுன்னு போனீங்க… எங்க போனீங்க… யார் இவரு? எங்க புடுச்சீங்க… முகத்த கொடுத்து பேசக் கூட மாட்டேங்கிறாரு… அநியாயத்துக்கு காசு வாங்கிட்டுப் போறாரு…”
குரலில் கோபம் காட்டினாள்.
நான் அமைதியாக இருந்தேன்.
“”ஏங்க உங்களத்தாங்க… எங்க புடிச்சீங்க இவர?”
டூ வீலரிலிருந்து இறங்கி, வீட்டின் கதவைத் தட்டும்போது உள்ளிருந்து வந்த பேச்சுக்குரல் என் கவனத்தை ஈர்த்தது.
“”ஏங்க… நாளையோட நம்ம பசங்க போயி எட்டு வருஷம் ஆகுதுங்க. ஒரே வீட்டுல ரெண்டு புள்ளைங்கள ஒரே நேரத்துல நாட்டுக்காக பறி கொடுத்தவங்க நாமளாதாங்க இருப்போம். அரசாங்கத்துல என்னென்னவோ, உதவி கொடுக்கறதா சொன்னாங்க. தேச சேவைக்கு காசு வாங்கக் கூடாதுன்னுட்டீங்க… ஏதோ ஒரு வீட்டு வாடகைல குடும்பம் ஓடுது. வருஷா வருஷம் பசங்க நினைவு நாளன்னைக்கு பக்கத்துல உள்ள அநாதை இல்லத்துக்கு சாப்பாடு வாங்கிக் கொடுப்பீங்க. இருபது பேருக்கு குறைஞ்சது ஐநூறு ரூபாயாவது ஆகும். ஒரு வாரமா எங்கயும் வேலைக்குப் போகல. வீட்டுச் செலவுக்கும் காசு இல்ல… பணத்துக்கு என்னங்க பண்ணப் போறீங்க?”
“”இன்னும் அதுக்கு முழுசா இருபத்து நாலு மணி நேரம் இருக்கு செண்பகம். பணம் வரும்… சாப்பாடு வாங்கிக் கொடுப்பேன்…”
கதவைத் தட்டவில்லை; பைக்கில் உட்கார்ந்து, திருப்பினேன்.

– ஜூன் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *