கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 13,474 
 

ஹரிணி அன்று காலை கண் விழிக்கையில் முன் கூடத்து கடிகாரம் ஏழு முறை ஒலித்துவிட்டு ஓய்ந்திருந்தது. அவசரமாகப் படுக்கையறையைவிட்டு வெளியே வந்து, முன் கூடத்துக்கு விரைந்தாள். அங்கே மாமனார் இல்லை. வெளிவாசல் தெளித்து, கோலம் போடப்பட்டிருந்தது.

“அடக் கடவுளே. சரோஜாவும் வந்தாச்சு வெளிக்கோலம் அவள் கைவண்ணம்தான். பாத்திரம் தேய்க்கப் போட வேண்டுமே! வந்தவள், ஒரு குரலாவது, கொடுக்கக் கூடாது. இன்றைக்குப் பார்த்து இப்படித் தூங்கிவிட்டேனே’ தனக்குள்ளே புலம்பியபடி வீட்டின் பின் பக்கம் விரைந்தாள். அங்கே வேலைக்காரப் பெண் சரோஜா பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

ஹரிணியைக் காணவும் புன்னகையை வழிய விட்டாள். “”நல்லாத் தூங்கிட்டீங்களாம்மா? உங்களைக் கூப்பிடலாம்னு நெனைச்சேன். ஆனாக்கா பெரியய்யாவே வந்து பாத்திரமெல்லாம் எடுத்துப் போட்டாங்க.. வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்”

ஹரிணி கேட்காமலே விவரங்களைக் கூறி முடித்தாள்.

“”ஆமாம். இன்னிக்குக் கொஞ்சம் அசந்திட்டேன்” என்ற ஹரிணி குளியலறைக்குச் சென்று விரைவாய் குளித்து முடித்து வெளியே வந்தாள். பூஜையறைக்குச் சென்று குத்துவிளக்கை ஏற்றி அவசரமாய்க் கும்பிட்டுவிட்டு சமையலறைக்கு வந்தாள்.

அங்கு காஸ் அடுப்பில் பால் காய்ச்சி பக்கத்தில் காப்பி ஃ பில்டரில் டிகாஷனும் போட்டு வைக்கப்பட்டிருந்தது.

“கடவுளே ஒருநாள் லேட்டா எழுந்திருந்தாக் கூடப் போதும். இவரே எல்லா வேலையையும் முடிச்சுடுவார் போலயிருக்கு’ சுடச் சுட காப்பி தயாரிக்க பாலையும் காய்ச்சி டிகாஷனையும் போட்டு வைத்த மாமனாரைப் பாராட்டாமல், மனதிற்குள் பொருமினாள் ஹரிணி. என்னவோ மறைமுகமாக அவளைக் குத்திக் காட்டுவதுபோல் ஓர் உணர்வு. ஆனால் அடுத்த நிமிடமே மனம் மாறியது. “சே, சே. நான் லேட்டா எழுந்துவிட்டு , உதவி செய்து வைத்திருக்கிற அவரைப்போய் தப்பா நினைச்சுக்கிட்டு. சாரிப்பா’ மனதுக்குள்ளேயே மாமனாரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள்.

“”சரோஜா, உனக்கு காப்பி கலக்கவா இல்ல, போறப்ப குடிக்கிறியா?” தனக்கு ஒரு டம்ளரில் காப்பி கலந்து கொண்டே பின்பக்கம் நோக்கி குரல் கொடுத்தாள் ஹரிணி.

“”வேண்டாம்மா. இப்பத்தான் குடிச்சேன். பெரியய்யா அவரு குடிச்சிட்டு எனக்கும் போட்டுக் குடுத்திட்டாரு. நல்லாவே காப்பி போடுறாரும்மா” மாமனாரின் காப்பிக்கு வேலைக்காரி சான்றிதழ் கொடுக்கவும், “”அப்ப, இத்தன நாளா நான் கொடுத்த காப்பி நல்லா இல்லையாக்கும்?” ஹரிணியின் சூடான கேள்வியில் வாயை மூடிக் கொண்டாள், வேலைக்காரப் பெண் சரோஜா.

அதே சமயம், கையில் காய்கறிப் பையுடன் வீட்டுக்குள் நுழைந்தார் ஹரிணியின் மாமனார் சிதம்பரம்.

“”ஹரிணி, இந்தா. பிஞ்சு பீன்ஸா இருந்தது. உனக்குப் பிடிக்குமேன்னு வாங்கிண்டு வந்தேன்”

ஹரிணியிடம் காய்கறிப் பையை நீட்டினார். பையை வாங்கிக் கொண்டவள் அவரை நிமிர்ந்து பார்க்கச் சங்கடப்பட்டுக் கொண்டு, சமையலறைக்குச் சென்றுவிட்டாள்.

திருமணமாகி, இந்த ஆறு வருடங்களில் மாமனாரால் இந்த மாதிரி அன்புத் தொல்லைகள்தாம் உண்டே தவிர, வேறு எந்தத் தொந்தரவும் கிடையாது. மாமியார் இல்லாத அந்த வீட்டில் அவள்தான் ராணி.

நாள்காட்டியில் அன்றையத் தேதியைப் பார்த்தவளின் மனம் சட்டென்று மகிழ்ச்சிக்குத் தாவியது. உற்சாகம் பூப்பூத்தது. நாளை அவள் கணவன் ராஜேஷ் நான்கு மாதத்துக்குப் பின் வெளிநாட்டிலிருந்து வரப் போகிறான் என்ற நினைவே உற்சாகத்துக்குக் காரணம்.

சென்னையில் பிரபல மென்பொருள் நிறுவனமொன்றில் ராஜேஷிற்கு உயர்நிலைப் பதவி. வருடத்துக்கு பதின்மூன்று லட்சத்துக்கு மேல் சம்பளம். இடையிடையே இப்படி வெளிநாட்டுப் பயணங்கள் வேறு. வசதியான வாழ்க்கை. ஆறு ஆண்டு திருமண வாழ்க்கையின் அர்த்தமாக , ஐந்து வயதில் ஒரு துருதுரு பெண் குழந்தை ஷீலா.

ஆண் பறவைராஜேஷும், அவன் அக்கா நளினியும் சிறுவயதாக இருந்தபோதே ராஜேஷின் அம்மா இறந்துவிட்டாள். தாயுமானவராய் இருந்து வளர்த்ததெல்லாம் தந்தை சிதம்பரம்தான். அவன் தந்தை வழிப் பாட்டிதான் கூடவே இருந்தாள். பேத்திக்கும், பேரனுக்கும் திருமணமானவுடன், பொறுப்புத் தீர்ந்த நிம்மதியில் போய்ச் சேர்ந்து இரு வருடங்களாகின்றன.

ராஜேஷின் தந்தை சிதம்பரமும், மருமகளைத் தன் மகளாகவே நினைத்தார். தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து கொண்டு பேத்தியுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார். மாலை வேளைகளில் வசதியில்லாத ஏழை மாணவர்களுக்குக் கணிதம், ஆங்கிலம் என சிறப்பு வகுப்புகள் எடுத்தும் தன் வாழ்க்கை முறையை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டிருந்தார். இதைத் தவிரவும், எத்தனையோ அனாதை இல்லங்கள், ஆதரவற்ற முதியோர், சிறார் இல்லங்களுக்கு ஆண்டுதோறும் தன் ஓய்வூதியத்திலிருந்து நன்கொடைகள் அளித்தும் வந்தார். ஆனால் எதையும் யாரிடமும் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளமாட்டார்.

ஹரிணியும் வசதியான வீட்டுப் பெண்தான். கணவன் நல்ல வருமானம் உள்ள வேலையிலிருந்ததால், தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, தாயில்லா அந்தக் குடும்பத்தின் பொறுப்பை மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டாள். கணவன் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பல முறை அவளும் கூடவே சென்றிருக்கிறாள். இந்தத் தடவை குழந்தை ஷீலா மழலையர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்ததால், கணவனுடன் அமெரிக்கா செல்லவில்லை. ராஜேஷும் நான்கு மாதம் பயிற்சி கொடுத்துவிட்டு நாளை திரும்புகிறான். வீடெங்கும் உற்சாகத் தென்றல் வீச ஆரம்பித்திருந்தது.

ராஜேஷ் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து ஏறத்தாழ ஒரு மாதமாகப் போகிறது. அன்று சிதம்பரம் தன் நண்பரின் மகள் திருமணத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் சென்றிருந்தார். அன்று ஞாயிற்றுக்கிழமையானதால் ராஜேஷும் வீட்டிலிருந்தான். குழந்தை ஷீலா தொலைக்காட்சியில் பூனை எலியைத் துரத்துவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள். மதிய உணவு முடிந்து, ராஜேஷ் கையில் ஒரு கதைப் புத்தகத்துடன் முன்னறையில் வந்த அமர்ந்தான். சிறிது நேரத்தில் ஹரிணியும் வந்து அவனெதிரில் அமர்ந்தாள்.

“”ப்ளீஸ்”

ஹரிணியின் குரல் கேட்டுத் தலைநிமிர்ந்த ராஜேஷ் மெüனமாக அவளைப் பார்த்தான். என்ன விஷயம்? என்றது பார்வை.

“”புதுசா என்ன சொல்லப் போறேன்? ஏற்கெனவே சொன்னதுதான். நானும் எத்தனை தடவை சொல்லிட்டுருக்கேன். ஸ்டேட்ஸிலேயே ஒரு வேலையப் பாத்துக்குங்கன்னு உங்க திறமை, அனுபவத்துக்கு எந்தக் கம்பெனியிலும் கண்டிப்பா வேலை கிடைக்கும். ஆனால் உங்களுக்குத்தான் அக்கறையே இல்லை. உங்களைக் காட்டிலும் திறமை குறைஞ்சவங்க கூட வெளிநாட்டில போய் செட்டில் ஆயிடறங்கா. எவ்வளவு சந்தோஷமா, எவ்வளவு மதிப்பா இருக்காங்க. உங்களுக்கு மட்டும் ஏன் இந்த வறட்டுப் பிடிவாதம்? என்னவோ நீங்கதான் இந்த நாட்டையே தாங்கப் போறமாதிரி, அசையவே மாட்டேங்கறீங்க. இந்த வயசில சம்பாதிச்சாத்தானே பின்னால நல்லா இருக்கலாம்”

“”ஏன் நான் இப்ப நல்லா சம்பாதிக்கலயா? இங்கே வீடு, வாசல் இல்லையா? இல்ல வசதி எதுவும் இல்லையா? அதான் அடிக்கடி ஃபாரின் டிரிப் போயிட்டு வர்றேனே? வீடு நிறைய வெளிநாட்டுச் சாமான்கள். இன்னும் என்னதான் வேணும் உனக்கு?”

ராஜேஷின் பேச்சில் சலிப்பு மிகுந்திருந்தது.

“”இதெல்லாம் இல்லைன்னு சொல்லலை. ஆனால் ஃபாரின்ல வேலை கிடைச்சு, அங்கேயே செட்டிலானா, அது எவ்வளவு நல்லது. இங்க வாங்கற சம்பளத்தைப் போல மூணு மடங்கு சம்பாதிக்கலாம்”

“”ஹரிணி எனக்கு வெளிநாட்டுக்குப் போய் நிரந்தரமா வேலை பாக்கறதும், அங்கேயே குடியுரிமை வாங்கிக்கிட்டு இருக்கறதும் பிடிக்கலை. போதுமா?” ராஜேஷ் அழுத்தமாகவே பதில் கூறினான்.

“”அதுதான் ஏன்? எப்பவும் இப்படியே மழுப்பலா பதில் சொன்னா எப்படி? மனசில என்னதான் நெனைச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு ஒப்பனாகவே சொல்லுங்க” கணவனின் பேச்சு முடிவதற்குள்ளாகவே பொரிந்தாள் ஹரிணி.

“”ஓ.கே. சொல்றேன். கேட்டுக்கோ. என் அப்பாவ இங்க தனியா விட்டுட்டுப் போக எனக்கு இஷ்டமில்லே. இதுதான் உண்மை. போதுமா?” ராஜேஷின் குரலில் வெப்பம் தகித்தது. எப்போதுமே குரலை உயர்த்திப் பேசாதவன், இப்போது அடிக்கடி ஹரிணியிடம் குரலை எழுப்ப வேண்டியிருந்தது.

“”அட, இதுதான் காரணமா? இது ஒரு பிரச்னையா? என்ன? இந்தச் சின்ன விசயத்துக்காகவா உங்க எதிர்காலத்தையே வீணடிக்கப் போறேங்கறீங்க?” ஹரிணியின் குரலில் இருந்த இறுக்கம் தளர்ந்தது.

“”ஓ… இது ரொம்பச் சின்ன விஷயமா? ஓ.கே. நாம நிரந்தரமா கிளம்பிப் போன பிறகு அப்பாவ யாரு கவனிச்சுக்குவாங்க? இங்கேயே தனியா இருக்கட்டுமா?”

“”ஏங்க தனியா இருக்கணும்? நாம செட்டிலாகி கிரீன் கார்டு வாங்கற வரை, கொஞ்ச வருஷம் உங்க அக்காவோட இருக்கட்டுமே” ஹரிணி அடுத்த வழியைக் கூறினாள்.

“”புரிஞ்சுதான் பேசறியா ஹரிணி? அக்காவோட மாமனார், மாமியார் எல்லாம் ஒண்ணாத்தான் இருக்காங்க. அவங்க நல்லவங்கதான். நிலைமையைச் சொன்னா சந்தோஷமா சம்மதிப்பாங்க. ஆனா அங்க போய் இருக்க அப்பா சம்மதிப்பாரா? நிச்சயம் ஒத்துக்கவே மாட்டார்” தந்தையைப் பற்றித் தீர்மானமாகவே கூறினான் ராஜேஷ்.

“”அப்ப, மொதல்ல உங்களுக்கு வேலை கிடைச்சதும், ஒரு வீட்டைப் பாருங்க. நாம அங்க போவோம். அப்புறம் எல்லாம் க்ளியர் ஆகவும் அப்பாவையும் அங்கே அழைச்சுக்கலாம். அதுவரை…”

“”அதுவரை….?” ராஜேஷ் ஹரிணியின் கண்களை ஊடுருவிப் பார்த்தான். ஹரிணி மேற்கொண்டு தன் கருத்தைக் கூறாமலேயே வாயை மூடிக் கொண்டாள்.

“”ஹரிணி, அப்பா, அக்கா கூட இருக்கவோ, இல்ல வெளிநாட்டுக்கு வந்து நிரந்தரமாகத் தங்கவோ ஒருக்காலும் ஒத்துக்கமாட்டார். இந்த நாடும், அம்மாவோட இருந்த இந்த வீடும் அவருக்கு ரொம்ப முக்கியம்”

“”ஹரிணி, எல்லாப் பெற்றோரும் தங்களோட பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி நல்ல நிலைமைக்குக் கொண்டு வர்றாங்கதான். ஆனா தாயில்லாத எங்களை ஒரு தாயா இருந்து எப்படி வளர்த்தார் தெரியுமா? எங்கம்மா இறந்தபோது எங்களுக்குச் சரியா விவரம் புரியாத வயசு. எங்கப்பாவுக்கு நாற்பது வயசு கூட ஆகலை. எங்கப்பாவை இன்னொரு கல்யாணம் செய்துக்கச் சொல்லி எத்தனை பேர், ஏன் எங்க பாட்டியே கூட சொல்லியிருக்காங்க. ஆனா எங்கப்பா எதுக்கும் அசைஞ்சு கொடுக்கலை. நாங்க அம்மா இல்லாத குறையைப் பெரிசா உணர்ந்ததேயில்லை. தன் மனம் அலை பாயாம இருக்கணும்னு, தன் நேரம் முழுவதையும் வேலை. எங்களோட வளர்ப்புக்குன்னே செலவழிச்சார். அந்த வயசிலேயே தன் மனசைக் கட்டுப்படுத்த தன் நாக்கையும், உணவையும் கூட கட்டுப்படுத்திக்கிட்டார். பறவை கூட இறக்கை முளைச்சு பறந்து போனலும், அது கூட்டுக்குத்தான் திரும்ப வரும். நான் மனுஷன். அவரோட தியாகத்துக்கு நன்றியா, அவரோட வயதான காலத்தில அவரை நம்ம கூட- இல்லையில்லை- அவர் கூட நாம இருக்கணும் ஹரிணி. சொர்க்கமே கிடைச்சாலும் நான் எங்கப்பாவ விட்டுவிட்டு வரவே மாட்டான்”

ஆவேசமாகப் பேசியவன், சட்டென்று ஒரு கடித உறையை எடுத்து ஹரிணியிடம் நீட்டினான். உள்ளேயிருந்த கடிதத்தைப் பிரித்துப் படித்தாள் ஹரிணி. அது ஒரு முதியோர் இல்லத்திலிருந்து வந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“”பார்த்தியா நாம சொல்லாட்டியும் எப்படியோ நாம பேசற விஷயம் அவருக்குத் தெரிஞ்சிருக்கு. நமக்குத் தடையா இல்லாம தானே விலகிக்க அவர் தயாராயிட்டார். இப்படிப்பட்டவரை விட்டுவிட்டா என்னைக் கிளம்பச் சொல்றே?”

தன் மாமனாரின் தியாகத்தை முழுமையாகப் புரிந்து கொண்ட ஹரிணியால் பேச முடியவில்லை. கண்களில் நீர் வழிய தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தாள். சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து ராஜேஷைப் பார்த்தாள்.

“”மன்னிச்சிடுங்க ப்ளீஸ். உங்கப்பா அருமையை சரியா உணராம இந்த அளவுக்கு உங்களைத் தொந்தரவு செய்திட்டேன். ரொம்ப ரொம்ப சாரிங்க” என்று இதயபூர்வமாகக் கூறிய ஹரிணி, “”ஓ.கே. இனிமே ரிலாக்ஸா இருங்களேன்” சட்டென்று மகிழ்ச்சியான குரலுக்கு மாறினாள்.

சுற்றிலும் கிழிந்த காகிதத் துண்டுகள் இறைந்து கிடக்க, எதற்கு இப்படி கணவனும் மனைவியும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குழம்பியவாறே ஊரிலிருந்து திரும்பிய சிதம்பரம் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.

முன்னறையில் இருந்த கடிகார குக்கூப் பறவை ஒலியெழுப்பி அவரை வரவேற்றது.

– ஜூன் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *