கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2013
பார்வையிட்டோர்: 9,370 
 

“அம்மா அந்த ஆளுகூட வாழவே முடியாது. என்னோட சம்பளம் மட்டும் போதாதுன்னு இருக்கற எல்லா லோன்னும் எடுத்தாச்சு. இப்போ தான் ஒரு லோன் முடிஞ்சது, திரும்ப எடுக்கணும்னு ஒரே ரகளை. நீங்க எனக்கு போட்ட நகையும் வேணும்னா எப்படி மா?”

“அப்படி சொல்லாத விமலா. குடும்பம்ன்னா முன்ன பின்ன இருக்கும். எல்லாத்தையும் அனுசரிச்சு போகணும், அதுதான் பொண்ணுக்கு அழகு.”

“அப்படி ஒன்னும் நான் அழகா தெரியவேண்டாம்” என்று முணுமுணுத்த பெண்ணை பார்த்து என்ன சொல்லி இவளுக்கு புரிய வைப்பது என்று குழம்பினாள், விமலாவின் தாய்.

அன்று சாயந்திரம் மகளுக்கு வேண்டிய பொடிவகைகள், இனிப்பு காரம் என்று ஒரு மூட்டையை தயார் செய்து அவளின் வீட்டிற்கே அனுப்பி வைத்தார்கள் அவளின் பெற்றோர்கள்.

“என்ன போன வேகத்தில இன்னிக்கே வந்துட்ட? எல்லாம் கட்டி குடுத்து விட்டாங்களா?” என்று இளகாரமாக கேட்ட மாமியாரையும்

“இப்படிதான் வரும் என்று எனக்கு தெரியும்” என்ற எண்ணத்தைப் பிரதிபலிக்கும் முகமுமாய் இருந்த கணவனை பார்த்து மனம் கனத்தது.

“என்ன கேட்டுட்டான் என் பையன், அவனோட தங்கைக்கு கல்யாணம் செய்ய வேண்டிய கடமை உங்களுக்கு தானே. ஒரு இருவது பவுன் நகைய நாத்தனாருக்கு போட்டா என்ன வந்தது?” என்று புலம்பிக்கொண்டே இருந்த மாமியாருக்கு

“பாத்து தொண்டை தண்ணி வத்திபோச்சு, இந்த காப்பிய சூடா குடிச்சிட்டு தொடருங்க” அப்படின்னு மனதில் சொல்லியபடியே காப்பி கோப்பையை நீட்டினாள்.

எல்லா வேலையையும் தன் கைகள் செய்தாலும் மனம் எதிலும் லயிக்காமல் தன் வாழ்க்கையை அசைப்போட்டது. “ச்சே சரியான மாட்டின் ஜென்மம், வாயை திறக்காம எல்லாத்தையும் மனசுல போட்டு அறைச்சிக்கிட்டே இருக்கும் ஜென்மம்” என்று தன் தோழி தன்னை திட்டுவது அசரீரியாக ஒலித்தது.

நல்ல கணவனாக இருந்தால் எதுவும் சிரமமாகவே தெரியாது…ஆனால் வாய்த்தது!!! ஏதாவது நல்ல விஷயம் உண்டோ? தான் ஆண் என்ற கர்வம். பெண் என்பவள் அவன் வேண்டும்போது அனுபவிக்கும் சதை பிண்டம். கண்டிப்பாக என் மகளுக்கு இதுபோன்ற வரனை நான் பார்க்கமாட்டேன். என்று மனம் மௌனமாகவே தன் வாழ்வின் சங்கீதத்திற்கு ஏற்றாற்போல் பிடில் வாசித்துக்கொண்டிருந்தது.

பெண் பார்க்க வந்த சம்பவம் மனதில் ஓடியது…”மாப்பிள்ளை பெரிய கம்பெனியில் நல்ல உத்தியோகம். கை நிறைய சம்பளம். கம்பெனியே வீடும், காரும் கொடுத்து இருக்கு. ஒரே தங்கை, இப்போ ஸ்கூல்ல படிச்சிகிட்டு இருக்கா. அவங்க அப்பா ரெண்டு வருஷம் முன்னதான் இறந்துவிட்டார்” என்ற நீளமான பட்டியலும், வந்தவர்கள் நடந்துக்கொண்ட விதமும், மாப்பிளையின் அழகும் திருமணத்திற்கு சரி சொல்ல வைத்தது.

மாப்பிள்ளையுடன் தனித்து பேசும் சந்தர்பத்திலும் “என்ன விமலா என்னை கண்டிப்பா பிடிச்சி இருக்கும்ன்னு நினைக்கறேன். எங்க அம்மா அப்பா எங்களை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. கடைசி வரைக்கும் நம்பதான் அம்மாவை பாத்துக்கணும். என்னோட தங்கைக்கு நல்ல எடத்துல கல்யாணம் முடிக்கணும். அதுக்கப்புறம் நீதான் சொல்லணும். உன்னோட வேலை எப்படி போகுது? சீக்கிரமே ப்ரோமோஷன் இருக்கும் அப்படின்னு சொன்னாங்க. அதுவும்கூட நல்லதுதான். நீயும் வேலைக்கு போனா நல்லபடியா லைப்ல செட்டில் ஆகலாம்.” என்று அவனின் விருப்பத்தை சொல்லும்போது பேக்கு மாதிரி மண்டைய ஆட்டினது தப்போ என்று இப்போது தோன்றியது.

“என்னோட பெற்றோர்களும்தான் என்னை வளர்க்க கஷ்டப்பட்டு இருப்பார்கள். என்னுடைய தம்பி தங்கைக்கு திருமணம் செய்வது அவர்களின் கடமையாகவே நினைக்கிறார்கள். வீட்டு வேலை செய்யவும், அவனுடன் அவனுக்கு தேவைபடும்போது படுக்கவும், என்னுடைய சம்பளமுமே இவர்களுக்கு தேவை, நான் தேவையில்லை. படிப்பிற்கும் ஒரு மனிதனின் விசாலமான சிந்தனைக்கும் சம்பந்தம் உண்டோ? ” என்ற மௌன பாஷையில் மனம் பேசிக்கொண்டிருக்கும்போது விமலாவின் பத்து வயது மகள் டியூஷன் முடிந்து வந்தாள். அன்று மகள் மாமியாருடன் உறங்க போனபின் எல்லா வேலையும் முடித்துவிட்டு தங்கள் அறைக்கு வந்த போது கணவன் விட்டத்தை நோக்கி யோசித்துக்கொண்டிருந்தான்.

“நாளைக்கு லோன் அப்ளை பண்ணிடு. எனக்கு ரெண்டு நாள் வெளியூர் போகணும் காலைல பெட்டில எல்லாம் எடுத்து வைத்துவிடு.” என்று பதிலை எதிர் பார்க்காமல் திரும்பி படுத்துவிட்டான்.

காலையில் அவசரத்தில் பெட்டியை தயார் செய்வதைவிட இப்போதே செய்யலாம் என்று எப்போதும் கொண்டுபோகும் பெட்டியை தயார் செய்ய ஈடுபட்டாள். காலியான பெட்டியில் ஏதோவொரு பொருள் சைடு ஜிப்பில் இருப்பதுபோல் தோன்றியதால் அது என்னவென்று கையை விட்டு எடுத்தபோது, இதயமே ஒருகணம் நின்றுவிட்டு இயங்கியது.

“என்ன இது?”

அதை கண்டு ஒரு கணமே முகம் மாறியது, சுதாரித்துக்கொண்டு “இதுகூட தெரியாதா?” என்று கேட்டவனை என்னவென்று சொல்ல?”

“இது எதுக்கு உங்க பெட்டியில வந்தது? இது உங்க ஆபீஸ் வேலைக்கு தேவையில்லாததாச்சே” என்று கேள்விகள் சரமாரியாக வெளிவந்தது.

“இதெல்லாம் உனக்கு தேவையில்லாதது. ஒரு மனைவியா கணவன் சொல்லறத கேட்டு நடந்துக்கோ அதுதான் உனக்கு நல்லது.”

இப்படியே அந்த பெட்டியில் கண்டெடுத்த ஆணுறையால் வாக்குவாதம் கைகலப்பாய் முடிந்தது. கணவன் எப்போதுமே கை நீட்டுபவன்தான் ஆனால் இம்முறை அதை எப்போதும்போல் எடுத்துக்கொள்ள முடியவில்லை. செய்வதெல்லாம் செய்துவிட்டு அது அவனின் பிறப்புரிமை போல் நடந்துக்கொள்வதை பார்த்தால் பற்றியெரிந்தது.

“கை நீட்டுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்” என்ற மனைவியை பார்த்து ஆத்திரம் மூண்டது. ஏற்கனவே நகைக்காகவும், பணத்திற்காகவும் மனைவி தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதும், இப்போது இதுவும் சேர்ந்து அவனை, ஏற்கனவே மனிதனாக இல்லாதவனை மேலும் மோசமாக நடந்துக்கொள்ள தூண்டியது.

“நான் ஆம்பிள்ளை என்னையே நீ கேள்வி கேக்கறையா?” என்று அருகில் இருந்த பொருளால் ஓங்கி அடித்தான்.

அலறல் சத்தத்தை கேட்டு மாமியார் ஓடி வந்தார். அங்கு ரத்தம் சொட்ட இருந்த மருமகளை பார்த்து பதறாமல் “என்னடா ஆச்சு?” என்று மகனிடம் ஓடினார், அவரை பொறுத்தவரையில் இந்த அடிதடி நகை மற்றும் பணத்திற்காகவே.

“வெளிய தெரிஞ்சா என்ன நினைப்பாங்க. போய் மருந்து கொண்டுவந்து போடு. கடவுளே பாவம் என் பையன் யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டான். ஏதோவொரு பேயோ பிசாசோதான் என் பையன இப்படி செய்ய வெச்சிருக்கும். பாரு விமலா இத பெருசு பண்ணாத. நம்ப குடும்ப கெளரவம் என்ன ஆகறது. இது மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிஞ்சா அவங்க நம்பள பத்தி என்ன நினைப்பாங்க” என்று வேதனையில் துவண்டுக்கொண்டிருக்கும் மருமகளுக்கு குடும்ப பெண்ணை பற்றி உபதேசம் செய்துக்கொண்டிருந்தார்.

மாமியார் சென்றவுடன் அவளின் கணவனிடம் அவனின் நடத்தைக்கு விளக்கம் கேட்ட பொழுது அவனும் தற்போது இதிலிருந்து தப்பிக்க “எனக்கே தெரியல விமலா. ஏதோ பேயோ பிசாசோதான் என்னை இப்படி ஆட்டிப்படைகுத்து” என்று உளறினான்.

“அப்போ சரி, நானே பேய ஓட்டறேன்!” என்று விளக்கமாற்றால் விளாசித்தள்ளினாள்.

மறுநாள் தன் மகனின் மேல் இருந்த காயத்தை பார்த்து, “நீ எல்லாம் பொண்ணா? இப்படி புருஷன போட்டு அடிச்சி இருக்க?” என்ற மாமியாரிடம்

“நீங்களே சொல்லுங்க இவர் பண்ண காரியம் சரிதானா? ஆபீஸ் விஷயமா வெளியூர் போறேன்னு சொல்லிட்டு வேற பொம்பள கூட இருந்துட்டு வராரே”

“ஆம்பிள்ளைங்க அப்படி இப்படிதான் இருப்பாங்க. இதையெல்லாம் பெருசு பண்ணாத. என் மகன் உனக்கு என்ன குறை வெச்சான்” என்று கேவலமாக நடந்துக்கொள்ளும் மகனுக்கு வக்காலத்து வாங்கும் மாமியாரை பார்த்தால் அருவருப்பாக இருந்தது.

“உங்க மகளுக்கு வர மாப்பிள்ளையும் இப்படி நடந்துகிட்டா எனக்கு சொல்லறதையே உங்க மகளுக்கும் சொல்லுவீங்களா?”

“அடியே, என்னோட பொண்ணு நல்லபடியா வாழணும்னு நினைக்காம இப்படி சொல்லறே, நீ எல்லாம் குடும்ப பெண்ணா? இப்படிப்பட்ட குடும்பத்துல போய் தெரியாத்தனமா பொண்ண எடுத்துட்டோமே” என்று ஒப்பாரி வைத்து பாடுவதை மௌனமாக கேட்டுக்கொண்டு இருந்த கணவனையும் நாத்தனாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கு பயந்துபோய் போய் பார்த்துக்கொண்டிருந்த மகளை பள்ளிக்கு தயார் செய்து அனுப்பினாள்.

“ராதா வீட்டுல நடந்த எதைப்பற்றியும் யோசிச்சி வருத்தப்படாத. உன்னோட மனசு மொத்தமும் படிப்புலையும், உன்னோட நல்ல எதிர்க்காலத்தை அமைசிக்கறதுலையும் தான் இருக்கணும். உனக்கு பக்கபலமா அம்மா இருப்பேன்” என்று மகளை தெளிவு படுத்தி அனுப்பிவைத்தாள்.

அந்த சம்பவத்திற்குப்பிறகு வீட்டில் ஒருவித அமைதி நிலைத்திருந்தது. ஒருநாள் வேலை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வரும்போது பீச்சில் யாரோ ஒரு பெண்ணை கட்டிப்பிடித்துக்கொண்டு சென்ற கணவனை பார்த்ததும் மனம் அடித்துக்கொண்டது. “ச்சே இவனெல்லாம் திருந்த மாட்டான்” என்று மனம் அறிவுறுத்தியது.

மனமோ பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தது, “இவனை இப்படியே விட்டா சரியாகுமா? நான் என்ன செய்தாலும் சமுதாயத்தின் கண்ணில் என்னைத்தான் குற்றவாளியாக நிறுத்துவார்கள். ஆண், ஆம்பிள்ளை என்ற எண்ணம் எந்த தவறையும் செய்யலாம் என்ற அங்கீகாரம் இச்சமுதாயம், ஆணாதிக்க சமுதாயம் கொடுத்திருக்கிறது. இதை எல்லாம் மீறி நான் என்ன செய்யமுடியும்? என்ற விவாதங்களின் முடிவில் ஒரு எண்ணம், ஒரு தண்டனை மனதில் தோன்றியது. அதை செயல் படுத்த ஒருவித தயக்கம் இருந்தது. ஆனால், பாதிக்கப்பட்ட பெண் ஜென்மம் உள்ளுக்குள் கதறியது.”

எப்படியோ தைரியமாக முடிவெடுத்ததை செயல்படுத்த ஏற்பாடாக்கினாள். எத்தனை பெண்கள் பாதிக்கபடுகிறார்கள், ஒருவனாவது தண்டிக்க படவேண்டாமோ? இவர்களுக்கு நீதிமன்றம் தண்டனையை தருமா?! இவர்கள் நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பித்துவிடலாம். ஆனால் இப்பொழுது செயல் படுத்தபோகும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது, வெளியே சொல்லவும் முடியாது. திருடனுக்கு தேள்கொட்டிய கதையே!

அன்று மாலை மெரீனாவில் நீண்டநாட்களுக்கு பிறகு பழைய கிராக்கியோடு, அவனுடைய பாஷையில், தன் கணவன் அந்த பெண்ணின் தோளில் கையைப்போட்டுக்கொண்டு செல்வதை பார்த்து ஆனந்தப்பட்டது, விமலாவின் மனம்.

“ஏய், வா அந்த லோட்ஜ்கே போகலாம் அன்னிக்கி மாதிரி” என்று அழைத்தவனை.

“இப்போவே வேண்டாம். கொஞ்சநேரம் இந்த பீச்ல காத்து வாங்கிட்டு அப்புறம் போகலாம்., இப்போ வாங்க அந்த பக்கமா போகலாம்.” என்று மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்றாள்.

கொஞ்சம் இருட்டிய பின், ஆள் அரவம் குறைந்தது. இவர்களை போல் இருந்த இரண்டு ஜோடிகள் எதையும் உணரும் நிலையில் இல்லாமல் தங்கள் காம களியாட்டத்தில் மூழ்கியிருந்தனர். அதை காணும்போது அவனுக்கும் அவன் சொல்லும் ஆண்மை, விழித்தெழுந்து.

“ம்ம்.. சீக்கிரம் வா போகலாம்” என்று அழைத்தவனை மேலும் பேசவிடாமல் ஆக்கிய அப்பெண் அவன் உணரும்முன்பே அங்கிருந்த நறநற என்று இருந்த மண்ணுடன், உடைந்த கிழிஞ்சல் துண்டுகளையும் பேசிக்கொண்டிருந்த போதே சேர்த்து இருந்ததை அவனின் ஆணுறுப்பில் நன்கு தேய்த்துவிட்டுவிட்டு ஓடிவிட்டாள்.

அப்பெண்ணின் செய்யல் அவனின் ஆணுறுப்பை நன்கு பதம் பார்த்துவிட்டது, அங்கு செல்லும் ரத்தநாளங்கள் எல்லாம் அறுப்பட்டு, வேதனையை தாங்கமுடியாமல் அவன் மயங்கிவிட்டன். வெகுநேரம் கழித்து யாரோ அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவனின் வீட்டிற்கு அழைத்து கூறினார்.

அவனின் ஆண்மை என்பது இப்போது இல்லையே. இதுவா ஆண்மை?

கண்டிப்பாக ஆண்மை என்பது இது இல்லை, இதை எவ்வாளவு பேர் ஒத்துக்கொள்ளுவார்கள்? ஆண்மை என்பது செய்யலில், நல்ல சிந்தனையில். சுய சிந்தனையில், தன்னை நம்பி வந்த பெண்ணை வாழவைப்பதில், காப்பதில், அவர்களை மதிப்பதில், அவர்களின் முன்னேற்றத்தை தன் முன்னேற்றமாக கருதுவதில்.

சரிதானே?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *