ஆசையின் மறுபக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 14, 2022
பார்வையிட்டோர்: 2,826 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மோகன் தனியார் கம்பெனி ஒன்றில் அஸிஸ்டென்ட் மானேஜராக வேலை பார்ப்பவன். நித்யாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரதட்சணையின்றித் திருமணம் செய்து கொண்டவன். ஆடம்பர வாழ்க்கையை வெறுத்து எளிய வாழ்க்கைக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன்.

அவன் தனக்குக் கிடைக்கும் சுமாரான சம்பளத்தில் மாதாமாதம் தன் தாய் தந்தையர்க்கு அனுப்பி விட்டு, குடும்பச் செலவை கவனித்துக் கொண்டு தான் வைத்திருக்கும் ஸ்கூட்டருக்கும் அடிக்கடி தீனி போட்டு விட்டு அதிலும் மிஞ்சும் தொகையை வங்கியில் சேர்ப்பித்து விடுவான்.

வங்கியில் சேர்ப்பித்தத் தொகையில் தான் கடந்த ஆண்டு நித்யாவிற்கு வளையல், தோடு, மூக்குத்தி எல்லாம் செய்து போட்டான். நாட்டின் நலன் கருதியோ சொந்த நலன் கருதியோ குழந்தைப் பிறப்பையும் தள்ளிப் போட்டான்.

“என்னங்க. நான் ஒங்கக் கிட்டே ஒண்ணு கேட்பேன். வாங்கித் தருவீங்களா? “நித்யா குழைந்து கேட்டாள்.

“என்னடா கண்ணு, நான் யாருக்காக சம்பாதிக்கிறேன். எல்லாம் உனக்காகத் தானே, என்ன வேணும் கேளு” மோகன் நயமாக சொன்னான்.

‘ஒண்ணுமில்லே, பக்கத்து வீட்டு பார்வதி அக்கா புதுசா ஒரு செயின் செய்து போட்டிருக்கா. நாலு சவரனுக்குத் தான் செஞ்சதாம். ரொம்ப நல்லாயிருக்கு. அது மாதிரி எனக்கும்…’

மோகனுக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘கடந்த ஆண்டு தானே எல்லாம் செய்து போட்டேன். அதற்குள் மறுபடியும் நகையா? அதுவும் நாலு சவரனில்! பெண்களுக்கு நகை மீது என்ன அப்படியொரு மோகம்’ மோகன் மேலும் மேலும் குழம்பினான்.

சற்றே சுதாரித்தவனாய், “அதுக்கென்னடா கண்ணு நாலு சவரன் தானே, செய்துட்டாப் போச்சு”

மனைவியை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு டிரெஸ் செய்து கொண்டு ஆபிஸ் புறப்பட்டான். ஆபிஸில் அவனுக்கு வேலையே செய்ய முடியவில்லை. அவனுக்கு மீண்டும் மீண்டும் மனைவியைப் பற்றிய நினைவுதான் வந்தது.

‘இவளுக்கு திடீரென்று நகையின் மீது ஆசை வந்து விட்டதே! ஒவ்வொரு வருடமும் இது மாதிரித்தான் நகை கேட்டுக் கொண்டிருப்பாளோ? இதற்கொரு முடிவு கட்ட வேண்டுமே, சேலை அது இதுன்னு வாங்கிக் கேட்டாலும் பரவாயில்லை. சரி போகட்டும்! அவளிடம் சொன்னவரை இந்த செயினை எப்படியாவது கடன்பட்டு அவளுக்கு செய்து போட்டுடுவோம். நினைவிலிருந்து ஆபிஸிற்குத் திரும்பினான்.

ஆபிஸில் அன்றைய வேலை முடிந்ததும் வீட்டிற்குத் திரும்பினான். மனைவியிடம் ரெண்டு நாளில் செயின் வாங்கித் தருவதாகச் சொன்னான். அன்றைய இரவு அவனுக்கு இன்பமாக முடிந்தது.

அடுத்த நாள் ஆபிஸிற்கு சென்று, பியூன் மூலம் பாங்கில் இருந்த சிறு தொகையை எடுத்து வரச்சொல்லி வைத்துக் கொண்டு மானேஜரிடம் அவசரத் தேவையென்று சொல்லி கொஞ்சம் கடன் வாங்கி, மாலையில் சீக்கிரமே வீடு வந்து மனைவியை நகைக் கடைக்கு அழைத்து சென்று அவளுக்குப் பிடித்த டிஸைன் ஆர்டர் செய்து பணம் கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தான்.

மறுநாள் – கடைக்காரர் சொல்லியிருந்த படியே காலையிலேயே செயின், ஆள் மூலம் வீடு வந்து சேர்ந்தது. நித்யா பூரித்துப் போனாள். கணவனிடம் சொல்லிவிட்டு காலையில் சென்று மாலையில் வந்து விடுவதாக தன் அம்மா வீட்டுக்கு பக்கத்து ஊர் சென்றாள் புதிதாக வாங்கிய செயினை அணிந்துகொண்டு.

மோகன் அன்று ஆபீஸ் முடிந்து வீடு வந்து தங்கியிருந்தான். ஊர் சென்றிருந்த நித்யா வந்தாள். வந்ததுமே ‘ஓ’ வென அழத் தொடங்கினாள். தனது செயினை எவனோ ஒருவன் அறுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகச் சொன்னாள். மோகன் நித்யாவை பரவாயில்லையென சமாதானப் படுத்தினான்.

நித்யா கேட்பதாக இல்லை, தேம்பித் தேம்பி அழுதாள். “எனக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு இந்தச் செயினை செய்துப் போட்டீங்க. பாவி இப்படி தொலைச்சுட்டு வந்து நிற்கிறேனே” நித்யாவின் கண்கள் சிவந்து போயிருந்தன.

“இங்கே பார் நித்யா, இதுக்காகப் போய் ஏன் இப்படி அழறே. போனது போகட்டும் விடு. இன்னொரு செயின் வாங்கிக்கிட்டா போகுது “ மோகன் தேறுதல் சொன்னான்.

“வேண்டாங்க எனக்கு இனிமே நகையே வேண்டாங்க” புலம்பியவாறே மோகனின் தோள்களில் சாய்ந்தாள்.

‘நான் மட்டும் ரௌடி ரங்கனை விட்டு செயினை அறுத்துக் கொண்டு வரச் செய்திருக்கா விட்டால், இவள் இப்படித் திருந்தியிருப்பாளா?’ மோகன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

– நெகிழ்ச்சியூட்டும் சிறுகதைகள்!, முதற் பதிப்பு: 2005, மல்டி ஆர்ட்ஸ் கிரேஷன்ஸ், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *