அவ ஆசைப் பட்டது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 6,347 
 

விழுப்புரத்தின் வெளிப் புரத்தில் இருந்தது அந்த குடிசைப் பகுதி.வழக்கம் போல் சூரிய வெளிச்சம் மங்கும் வரை வாசலில் உட்கார்ந்துக் கொண்டு தன் பள்ளிக்கூடக் கணக்குகளைப் போட்டுக் கிட்டு இருந்தாள் ஜோதி.

அம்மா செண்பகம் முறத்தில் அரிசியில் கல்லை பொறுக்கி தூரப் போட்டுக் கிட்டு இருந்தாள்.கையில் ‘க்வார்ட்டருடன்’வந்த காளி குடிசைக்கு உள்ளே வர வழியிலே காலால் ஜோதியை ஒரு உதைக் கொடுத்து ”படிச்சது போதும் கழுதை.சீக்கிரமா போய் நாலு மசால் வடை வாங்கிகிட்டு ஓடி வா” என்று சொல்லி ஒரு பத்து ரூபாய் நோட்டை கீழேப் போட்டான்.

செண்பகத்துக்கு கோவம் வந்து “தே,நீ இந்த ‘க்வார்ட்டரை’ இங்கே குந்தி கின்னு அடிக்க,நீயே மசால் வடையை வரபோதே வாங்கி கிட்டு வரது தானே. படிக்கிற ஜோதியை இப்படி உதைச்சு ஏய்யா விரட்டறே.நீதான் படிக்கலே.அவளாவது நாலு எழுத்து படிக்கட்டுமே” என்று கத்தினாள்.

ஒன்னும் பேசாமல் குடிசைக்கு உள்ளே போய் விட்டான் காளி.

ஜோதி உடனே அவ கணக்கு நோட்டை அப்படியே போட்டு விட்டு தெருக் கோடி கடைக்கு ஓடிப் போய் பத்து ரூபாயைக் கொடுத்து நாலு மசால் வடையை வாங்கிக் கொண்டு வந்து தன் அப்பாவிடம் கொடுத்தாள்.

காளி ஒரு ‘பிள்டர்’ கிட்டே ‘மேசனாக’ வேலை செஞ்சு வந்தான்.செண்பகம் அதே ‘பிள்டர்’ கிட்டே ஒரு சித்தாளா வேலை செஞ்சு வந்தாள்.

அந்தக் குடிசைப் பகுதியிலே வேலை செஞ்சு விட்டு வரும் ஆண்கள் வேலையை விட்டு வரும் போது குடித்து விட்டு குடிசைக்கு வந்து கெட்ட,கெட்ட, வார்த்தைகளில் அவர்கள் பெஞ்சாதியையும் ,கூட வேலை செஞ்சு வரும் சகாக்களையும் திட்டி வருவதையும், திட்டு வாங்கின அந்த பெண்ஜாதி களும்,திருப்பி அந்த ஆண்களை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டு வருவதையும் தன் காதுளை பொத்திக் கொண்டு கேட்டு வருவாள் ஜோதி.

குடிசை வாழ் பகுதியிலே தினமும் நடந்து வரும் நிகழச்சி தானே இது.பத்தாவது படித்து வந்த ஜோதிக்கு அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அசிங்கமா திட்டுவதின் அர்த்தம் நல்லாப் புரியுமே!!.வெக்கப் பட்டுக் கொண்டே அவைகளை எல்லாம் கேட்டுக் கொண்டு வந்தாள்.

ஜோதி ‘நாம் ‘இந்த மாதிரி’ ஒரு இடத்திலே பொறந்து இருக்க வேண்டிய பெண்ணே இல்லே’ன்னு நினைத்தாள்.அங்கு இருந்த வந்த பெண்களைப் போல் அவளுக்கு வாழ்ந்துக் கிட்டு வரவே பிடிக்ககலே.அவள் தன் பாட புஸ்தகங்களில் வரும் ‘கண்ணியமாக’ வாழ்ந்து வந்து சரித்திரம் படைத்த பெண்களைப் போல நல்லாப் படிச்சு,சென்னை போன்ற பெரிய நகரங்களில் ஒரு ‘நல்ல’ ஆடவனைக் கல்யாணம் பண்ணிக் கிட்டு, குழந்தைகளைப் பெத்துக் கிட்டு,கணவனுக்கு ஏத்த நல்ல மணைவியாகவும், குழந்தைகளுக்கு நல்ல தாயாக வும் இருந்து வந்து,தனக்கு என்று ஒரு பிடித்த வேலையை செஞ்சு வந்து,அதில் வருமானத்தில் பல நல்ல காரியங்கள் எல்லாம் செஞ்சு வந்து, சந்தோஷமாக வாழ்ந்து வரவேணும்’ என்று கனவு கண்டு வந்தாள்.

இருட்டி விடவே தன் நோட்டு புஸ்தககங்களை எல்லாம் குடிசைக்கு உள்ளே கொண்டுப் போய் வைத்து விட்டு ‘அரிகேன்’ விளக்கின் வெளிப்புர கண்ணாடியை நன்றாகத் துடைத்து விட்டு மண்ணெண்னை விட்டு ஏற்றீனாள் ஜோதி.

ஜோதி பத்தாவது க்ளாஸ் பாஸ் பண்ணினாள்.

காளி குடித்து குடித்து அவன் உடம்பு மிகவும் கெட்டுப் போய்,அவன் வேலைக்குக் கூட போக முடியாமல் சதா ஒரு ‘ஈஸி’ச் சேரைப் போட்டுக் கொண்டு படுத்து கொண்டு இருந்தான்.அவனுக்கு கண் பார்வை மிகவும் மங்கி விட்டது. ‘எத்தனை நாளைக்குத் தான் வயாதான தன் அம்மா தனியே கஷடபட்டு வேலை செஞ்சு வருவா ங்க.வீட்டு செலவுக்கு பணம் வேணுமே. நாமும் கூடப் போய் கொஞ்சம் உதவலாமேன்னு’ ன்னு நினைச்சு ஜோதியும் தன் படிப்பு முடிந்தவுடன் மேலே படிக்கும் ஆசையை விட்டு விட்டு,தன் அம்மாவுடன் வீட்டு வேலைக்கு போய் கொஞ்சம் பணம் சம்பாதிதிச்சு வந்துக் கொண்டு இருந்தாள்.

“எனக்கு வயசு அதிகமாகி கிட்டு வருது முத்தம்மா.என் புருஷன் ஒன்னுக்கும் உதவா கட்டையாகி விட்டாரு.அவனை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லே.என் தலை தரையிலே விழறத்துகுள்ளார,நம்ம ஜோதியை ஒருத்தன் கையிலே நான் பிடிச்சி குடுத்திட்டேனா,நிம்மதியா கண்னை மூடுவேன்.இந்த எண்ணம் தான் ராவு பகலா என் மனசே உறுத்திக் கிட்டு இருக்குது முத்தம்மா” என்று தன் தங்கை முத்தம்மாவிடம் சொல்லி அழுதாள் செண்பகம்.

“எனக்கு புரியுதுமா உன் கவலை.அது அதுக்கு நேரம் காலம் வர வேணாவாம்மா.நான் வேணா என் புருஷன் கிட்டே சொல்லி வக்கிறேன்.இந்த ‘குடிகாரன்’ இன்னொரு ‘குடி காரனை’ கொண்டு இங்கே வந்து நிறுத்து வானோன்னு பயப் படுகிறேம்மா.அவருக்கு தெரிஞ்சவங்க எல்லாம் குடிகார பயங்க தானே அம்மா” என்று சொல்லி வருத்தப் பட்டாள் முத்தம்மா.

கொஞ்ச நேரம் கழிச்சு முத்தம்மா ”பாக்கலாம்மா. நல்லவ ஒருத்தன் கிடைப்பாம்மா. அப்படி ஒரு பய கிடைக்காட்டி அண்ணி செத்துப் போன பிறவு அண்ணன் மணி ‘ஊர் பொறுக்கி’ தடியனா தானே சுத்திக் கிட்டு இருக்கான்.பேசாம மணிக்கு ஜோதியை ரெண்டாம் தாரமா கல்யாணம் கட்டிக் குடுத்துடும்மா. கல்யாணத்து க்கு அப்புறமா நீ,நான்,ஜோதி மூனு பேரும் அவனை வழிக்கு கொண்டு வந்து விடலாம்மா” என்று சொல்லிவிட்டு தன் வேலை யை கவனிக்கப் போய் விட்டாள் முத்தம்மா.

‘தன் அக்காவும்,அம்மாவும் தனக்கு ஒரு குடிகாரன்,ஊர் சுத்தி,தடியன்,ரெண்டாம் தாரம்ன்னு ‘ஒருத்தனை’ கல்யாணம் பண்ணி வைக்க ஏற்பாடு பண்றாங்க ளே,நம் ஆசைக் கனவுங்க என்ன ஆவுறது’ என்று புரியாமல் தவித்தாள் ஜோதி. அவள் யோஜனைப் பண்ணினாள். எந்தக் காரணம் கொண்டும் இந்த குடிசை வாழும் எந்த ‘ஆம்பளையையும் கல்யாணம் பண்ணிக் கிட்டு கஷ்டப் பட்டு வரக்கூடாது என்று முடிவு பண்ணினாள்.

ஜோதி தான் வேலைக்கு போய் வரும் இடத்தில் ஆட்டோ டிரைவர் சேகரை சந்தித்தாள்.சேகர் பார்க்க நல்ல கட்டு மஸ்தான உடம்புடன் அழகாக இருந்தான் ஜோதிக்கு அவனை மிகவும் பிடித்து இருந்தது.ஜோதி சேகருடன் நன்றாக பழகி வந்தாள்.யாரும் பார்க்காத நேரத்தில் அவளுக்கு இனிப்புகள் வாங்கி குடுத்தான் சேகர்.அவளுக்கு நிறைய ‘மேக்கப்’ பொருள்க¨ளையும் வாங்கிக் குடுத்தான் அவன்.இந்த ரகசிய சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியது.

சேகர் ஜோதியை சந்திக்கும் போதெல்லாம் கல்யாணம் பண்ணிக் கொள்ள வற்புருத்தி வந்தான்.“இருய்யா.ரொம்ப அவசரப் படாதே.அப்புறம் முதலுக்கே மோசமாயிடும்.நாம் சமயம் பாத்து எங்க அம்மாவே கேக்றேன்” ஜோதி சொன்ன பிறகு தான் சேகர் அவளை அவசரப் படுத்துவதை நிறுத்தி விட்டு சும்மா இருந்து வந்தான்.

“ஜோதி, முத்தம்மா புருஷன் ஒரு பையனை பார்த்து சொன்னா.அந்த பையனே நீ பாத்துட்டு உனக்கு பிடிச்சி இருந்தா நீ கண்ணாலம் கட்டிகிறியா“ என்று கேட்டாள் செண்பகம்.

“எனக்கு இப்ப என்னாம்மா கல்யாணத்துக்கு அவசரம்.இன்னும் கொஞ்சம் நாளாவட்டு மேம்மா” என்றாள் கொஞ்சலாக ஜோதி அவள் ஒரு முடிவுக்கு வந்தாள்.அடுத்த நாள் காலை யிலே வேலைக்குப் போகும் போது சேகரை ரகசியமா சந்தித்து எல்லா விஷயத்தையும் சொன்னாள் ஜோதி.

சேகர் உடனே “நாம ராவோட ராவா இந்த ஊரை விட்டு சென்னைக்கு ஓடிப் போயிடலாம். அங்கே என் அண்ணனும், அண்ணியும் இருக்காங்க.அவரும் என்னே போல ஒரு ஆட்டோ டிரைவர் தான். சென்னையிலே நான் ஆட்டோ ஓட்டி உன்னை காப்பாத்தறேன்,என்னை நம்பு ஜோதி” என்று கெஞ்சினான் சேகர்.

ஜோதி பயந்துக் கொண்டே நிற்பதைப் பார்த்த சேகர், ”நான் சொல்றபடி பண்ணு ஜோதி.நீ,இன்னைக்கு ராத்திரி எல்லோரும் தூங்கிப் போன பிறவு மெல்ல உன் ‘டிரஸ்சை’ எல்லாம் எடுத்துக் கிட்டு,கிளம்பி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துடு.நாம ரெண்டு பேரும் ராத்திரி பாசஞ்சர் வண்டிலே சென்னைக்கு ஓடி போயிடலாம்” என்று ஐடியா கொடுத்தான்.

“சரிய்யா,நீ சொன்னபடி செய்யறேன்”என்று சொல்லி விட்டு வேலைக்குப் போனாள் ஜோதி.

அன்று இரவு பூராவும் ஜோதி யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள். அவள் மூளை குழம்பியது.’கடவுள் மேலே பாரத்தே போட்டு சேகரோடு ஓடிப்போயிடலாம்’ விடலாம்’ என்று முடிவு பண்ணினாள்.

வேலைக்கு போய் வந்த செண்பகத்திற்கு அலுப்பு அதிகமா இருந்தது.படுத்துக் கொண்டதும் தூங்கி விட்டாள். அம்மா நல்ல தூங்கின பிறகு ஜோதி மெல்ல எழுந்து ஒரு பேப்பரில் நான் “என் காதலுடன் ஓடிப்போறேன்.என்னைத் நீங்க தேடவேணாம்” ன்னு மொட்டையாய் எழுதி வைத்துவிட்டு தன் துணி மணிகளை எல்லாம் ஒரு பையில் போட்டுக் கொண்டு ஓசை படாமல் கதவைத் திறந்துக் கொண்டு,ஒளிந்து, ஓளிந்து,மெல்ல ரயில்வே ஸ்டேஷனுக்கு போனாள்.

ஸ்டேஷன் நுழை வாயிலில் சேகர் ஒரு மறைவான இடத்தில் நின்றுக் கொண்டு இருந்தான்.ஜோதி வந்தவுடன் அவளை அழைத்துக் கொண்டு போய் ‘ப்ளாட்பாரத்தில்’ இருக்கும் ஒரு இருட்டான பகுதியில் நின்றுக் கொண்டு இருக்குமாறு சொல்லி விட்டு சென்னைக்கு இரண்டு ‘டிக்கட்’ வாங்கி வந்தான். பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த சேகரின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

பேசஞ்சர் வண்டி ‘ப்ளாட்பாரத்துக்கு வந்தது. சட்டென்று சேகர் ஜோதியை கூட்டிக் கொண்டு அவர்களுக்கு எதிரே இருந்த பெட்டியில் ஏறிக் கொண்டான்.

காலையில் சென்னை வந்து சேர்ந்தார்கள் இருவரும்.பிறகு ஒரு ஆட்டோ பிடித்து சேகர் சேத்து பட்டில் இருக்கும் அவன் அண்ணன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

சேகரைப் பார்த்ததும் “உள்ளே வாப்பா” என்று சொன்னவள் தன் மச்சினன் ஒரு வயசுப் பொண்ணோடே நின்னுக் கிட்டு இருப்பதைப் பார்த்ததும் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“என்னப்பா சேகர்,யாருப்பா இந்தப் பொண்ணு” என்று கலவரத்துடன் கேட்டாள் அண்ணி தேவி. சேகர் தன் கதையை பூராவும் தன் அண்ணி யிடம் சொன்னான். தனக்கு ஒரு ஆட்டோ டிரைவர் வேலை கிடைக்கும் வரை அவன் ஜோதியுடன் இங்கு இருப்பதாயும், வேலை கிடைத்தவுடன் அவன் வீடு பார்த்துக் கொண்டு தனியே போய் விடுவதாயும் அண்ணியிடம் கேட்டு கெஞ்சினான்.

“ஏம்ப்பா,ஒரு வயசுப் பொண்ணை இப்படி அவ வீட்டில் இருந்து தனியா அழைச்சுக் கிட்டு வந்து இருக்கியே.அவங்க தகவல் தெரிஞ்சு இங்கே வந்து கலாட்டா பண்ணினா என்னப்பா பண்றது” என்று ஒரு வித பயத்துடன் கேட்டாள் தேவி.

ஒரு வழியாக அண்ணி தேவியை சம்மதிக்க வச்சு, ஜோதியும் சேகரும் அங்கே தங்கினார்கள்.

காலையில் எழுந்து பார்த்தாள் செண்பகம்.ஜோதி படுத்து இருந்த இடம் காலியாக இருந்து. அவ தலையணையின் மேல் ஒரு மடித்த காகிதம் இருந்தது. வெளிச்சத்தில் வந்து பிரித்துப் படித்தாள் செண்பகம் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.‘ஓ’ என்று கத்திக் கொண்டு தன் குடிசையை விட்டு வேளியே வந்து முத்தம்மா விடம் ஓடி வந்து அந்த காகிதத்தைக் காட்டினாள். காகிதத்தை படித்துப் பார்த்த முத்தம்மா “அடி பாவி மகளே,எப்படியடி உனக்கு எங்களை எல்லாம் விட்டு விட்டு ஓடிப் போக தைரியம் வந்திச்சு, இதுக்காடி உன்னே அம்மா இவ்வளவு நாள் சோறு போட்டு ஒரு கஷ்டம் தெரியாம வளத்தா.நன்றி இல்லாத கழுதைடீ நீ” என்று திட்டினாள் முத்தம்மா.

இரவு வீட்டுக்கு வந்ததும் லக்ஷ்மணன் ”யாரு சேகரா,எங்கேடா இந்தப் பக்கம்,யாருடா இந்த பொண்ணு” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

“நீங்க கை காலை எல்லாம் கழுவி கிட்டு வாங்க.நீங்க காலைலே வேலைக்குப் போனது. நான் சாப்பாடு எடுத்து வக்கிறேன்.சாப்பாடு சூடா இருக்கு .சாப்பிட்டு கிட்டே இருங்க.நான் எல்லா விவரமா உங்களுக்கு சொல்றேன்” என்று சொல்லி தட்டை வைத்து சோறு பறிமாறினாள். லக்ஷ்மணன் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது எல்லா சமாசாரத்தையும் புருஷனுக்கு விவரமாகச் சொன்னாள் தேவி.

அவர் உடனே “நீ வந்தது நல்லதாப் போச்சு சேகர்.இன்னைக்கு காலையிலே தான் என் நண்பன் ஒருத்தன் தான் ஒரு புது ஆட்டோ அவன் வாங்கி இருக்கான்.அவன் பழைய ஆட்டோவை ஓட்ட யாராவது நல்ல பையனா தெரிஞ்சா சொல்லுன்னா.நான் அவனை உனக்குக் காட்டி விடுறேன்.நீ அவன் பழைய ஆட்டோவை நீ ஓட்டி வா” என்று சொன்னான் லக்ஷ்மணன்.”ரொம்ப தாங்க்ஸ் அண்ணே”ன்று சொன்னான் சேகர்.சேகரும், ஜோதியும் சந்தோஷப் பட்டார்கள்.அந்த நண்பனும் லக்ஷ்மணன் சொன்னதால் தன் பழைய ஆட்டோவை ஓட்டி வர சேகரிடம் கொடுத்தார்.

மூன்று மாசம் ஓடி விட்டது.

சேகர் கே.கே. நகரில் ஒரு சின்ன வீடாக வாடகைக்குப் பார்த்துக் கொண்டு ஜோதியுடன் அங்கு வந்து குடித்தனம் பண்ண ஆரம்பித்தான். ஜோதி தனக்குப் பிடித்த மாதிரி புடவை,கொஞ்சம் நகை எல்லாம் பண்ணிக் கொண்டாள்.

இதற்கிடையில் சேகர் பணத்தாசைப் பிடித்து,கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து ‘கஞ்சா’ கடத்தி நிறைய பணம் சம்பாத்தித்து வர ஆரம்பித்தான்.நண்பர்களிடயே விரோதம் வந்து ஒரு நாள் ஒருவன் சேகரை போலிஸ்க்கு காட்டிக் கொடுத்து விட்டான். தகவல் கிடைத்த போலீஸ் சேகரை கையும் களவுமாகப் பிடித்து ‘கேஸ்’ புக் பண்ணி விட்டார்கள். விஷயம் கேள்விபட்ட ஜோதி அண்ணன் லக்ஷமணனிடம் ஓடி வந்து அழுது கொண்டே சொன்னாள்.

லக்ஷ்மணன் உடனே போலீஸைப் பார்த்து “சார்,நான் நீங்க கைது பண்ணி இருக்கும் சேகரின் அண்ணன். நான் அவனுக்கு ‘ஜாமீன்’ வாங்கி வந்த நீங்க அவனை ‘ரிலீஸ்’ பண்ணுவீங் களா”என்று கேட்டார். அங்கு இருந்த போலீஸ் இன்ஸ்பெகடர் ”இது ஒரு கஞ்சா ‘கேஸ்ங்க’.இதுக்கு ஜாமீனே கொடுக்க மாட்டாங்க.இவனைத் தான் நாங்க கையும் களவுமாப் பிடிச்சி இருக்கோமே.இவன் இப்போ வெளியே வரவே முடியாது” என்று சொல்லி சிரித்தார்.

வீட்டுக்கு வந்து ஜோதியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொன்னதை சொன்னார் லக்ஷ்மனன். இடிந்துப் போனாள் ஜோதி.யோஜனைப் பண்ணின ஜோதி .‘சரி,இனிமே நாம் ஒன்னும் செய்ய முடியாது.நாம இப்போ வீட்டு வேலை செஞ்சு வந்து.இந்த சென்னை வாழ்க்கையை அனுபவிச்சு வரலாம் என்று வீட்டு வேலைகுப் போய் வர ஆரம்பித்தாள்.‘தன் தம்பி இனிமே வெளியே வர முடியாது’ என்று தெரிந்ததும் லக்ஷ்மணன் ஜோதிக்கு ஆறுதல் சொல்ல வருவது போல,அவ வீட்டுக்கு வந்து, அவ கிட்டே பேசி, அவளை தன் ‘சின்ன வீடா’ இருந்து வரும்படி ஆசை காட்டினார்.

சேகர் ஆட்டோ நண்பர்கள் ஜோதி இப்ப ஒரு ‘வேலி இல்லாத பயிர்’ தானே என்று அவளை சுற்றி வட்டம் இட ஆரம்பித்தார்கள்.இப்படி பல ‘கழுகுகள்’ நடுவில் பாதுகாப்பு இல்லாமல் மாட்டிக் கொண்ட ஒரு ‘கோழிக் குஞ்சை’ப் போல் தவித்தாள் ஜோதி. அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது.

நாளாக நாளாக ஒரு பலசாலியான ‘கழுகு’ நிச்சியம் தன்னை கடிச்சு கொதறிடும் என்று பயந்தாள் ஜோதி. யோஜனைப் பண்ணீன ஜோதி தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு இரவு பத்து மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாள் ஜோதி .

விழுப்புறம் பஸ் ஸ்டாண்ட் வரும் போது காலை மணி நாலடித்து விட்டது.தன் துணிப்பையை எடுத்துக் கொண்டு நேரே தன் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினாள். கதவைத் திறந்த முத்தம்மா ஜோதியைப் பார்த்ததும் “வாடீ ஜோதி,எவனோ முன் பின் தெரியாதவனோடு ராவோடு ராவா ஏண்டி ஓடிப் போனே. என்று நன்றாகத் திட்டி விட்டு சொல்லி ஜோதியை உள்ளே வரச் சொன்னாள்.

ஜுரத்துடன் படுக்கையில் படுத்து இருந்த செண்பகம் மெல்ல எழுந்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டே ஜோதியைப் பார்த்து “வாடீ,ஓடிப் போன வளே.எங்கேடீ உன்னை ‘இஸ்துக்கிட்டு’ ஓடினவன்.உன்னே நடுத் தெருலே வுட்டுட்டு போயிட்டா னா”என்று கத்தினாள்.

“போவட்டும் விடும்மா,வயசுக் கோளாறு,இப்போ ஏமாந்துப் போய் வந்து இருக்கா” என்று சொல்லி விட்டு ஜோதியைப் பார்த்து “இனிமே இந்த மாதிரி பண்னாதேடீ ஜோதி. எங்களோடவே இருந்து வா” என்று சென்னவுடன் ஜோதியும் அழுதுக் கொண்டே நடந்த எல்லா விவரத்தையும் சொன்னாள்.

கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் முத்தம்மா புருஷன் வடிவேலு,அவன்’ தோஸ்த்’ துரை,ஊர் சுத்தி தடியன் மணி மூனு பேரும் நாலைந்து ‘க்வார்டர் பாட்டில்’,மசால் வடை, மிளகா பஜ்ஜி எல்லாம் வாங்கிக் கொண்டு,சிரித்துக் கொண்டே வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.‘க்வார்டரை’க் குடிக்க லோட்டா எடுக்க வீட்டுக்குள் வந்தான் காளி.ஜோதியைப் பார்த்ததும்அவள் கிட்டே வந்து “அடே ஓடிப் போன ‘செவப்பி’ திரும்பி வந்துட்டாளா.வாம்மா செவப்பி,எங்களே எல்லாம் வுட்டுட்டு எவன் கூடவோ ஓடிப் போனியே.எங்களை எல்லாம் பாத்தா உனக்கு ஆம்பிள்ளைங்கப் போல தெரிலையா” என்று கிண்டல் பண்ணினான்.

அவன் வெளியே போனதும் முத்தம்மா ”அம்மா,யாராவது ஜோதியை ‘இஸ்துக்கிட்டு’ப் போவறதுக்கு முன்னாடி நமக்குத் தெரிஞ்ச ஒருத்தனை கண்ணாலம் கட்டி வைச்சடலாம்மா” என்று சொன்னாள். இரவு சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு எல்லோரும் படுத்தார்கள்.

வேலை செய்து விட்டு வந்த முத்தம்மா படுத்தவுடன் தூங்கி விட்டாள்.பகலிலேயே சரியாக கண் தெரியாத செண்பகம் ஜுர வேகத்தில் தன் கண்களை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டு இருந்தாள்.ஜோதிக்குத் தூக்கமே வரவில்லை. அவள் யோஜனைப் பண்ணினாள். ‘சென்னையில் ஒரு நல்ல கணவரோடும்,குழந்தைகளோடவும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கிட்டு வரணூம்ன்னு நாம் ஆசைப் பட்டோம்.ஆனா அந்த வாழ்க்கை நமக்கு அமையலே.நம்ம ‘தலை எழுத்து’ இந்த குடிசை வாழ் பகுதியில் வாழ்ந்து வரவேணும்ன்னு இருக்கே.இந்த குடிசை வாழ்க்கை எனக்கு வேணவே வேணாம்’ என்று முடிவு பண்ணி ஒரு காகித்தைதை எடுத்து எழுதினாள்.அதை நன்றாக ஒட்டினாள்.

எப்போது பொழுது விடியும் என்று நினைத்து புரண்டு புரண்டுப் படுத்துக் கொண்டு இருந்தாள்.காலையில் முத்தம்மா எழுந்து வாசல் தெளித்து விட்டு கோலம் போட்டு விட்டு ‘திரி ஸ்டவ்வில்’ ‘டீ’ போட்டு தனக்கும், ஜோதிக்கும்,அம்மாவுக்கும் கொடுத்தாள்.‘டீயை’க் குடித்து முடித்ததும் ஜோதி ”அக்கா, நான் கொஞ்சம் கோடியிலே இருக்கிற கோவிலுக்குப் போயாரேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

கோவிலுக்கு வந்து அங்கு விநாயகருக்கு நடந்த அபிஷேகத்தை கண் குளிரப் பார்த்தாள்.’கடவுளே எனக்கு அடுத்த ஜென்மத்திலாது நான் ஆசைப் பட்ட ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடு” என்று பிள்ளையாரை நன்றாக வேண்டிக் கொண்டாள் ஜோதி.

கோவிலை விட்டு வெளியே வந்தாள் ஜோதி.வீட்டுக்குப் போய்க் கொண்டு இருக்கும் வள்ளியைப் பார்த்தாள்.உடனே ஜோதி “வள்ளி,இந்த கடிதாசை என் அக்கா முத்தம்மா கிட்டே கொஞ்சம் கொடுக்க முடியுமா”என்று கேட்டதும் வள்ளி “குடுங்க அக்கா.நான் கடுதாசை குடுத்துடறேன்” என்று சொன்னதும் ஜோதி தன் இடுப்பில் சொருகி இருந்த கடிதத்தை எடுத்து வள்ளியிடம் கொடுத்தாள்.கடவுளை வேண்டி கொண்டு அடுத்த ரெண்டாவது நிமிஷத்திலே ஜோதி கோவிலுக்குக் கிழக்காலெ இருந்த பாழும் கிணத்திலே குதித்து விட்டாள்.

வள்ளிக் கொடுத்த கடிதாசைப் பிரித்துப் படித்தாள் முத்தம்மா.‘அக்கா,அம்மா எனக்கு இந்த குடிசை வாழக்கை சுத்தமாகப் பிடிக்கலே.அடுத்த ஜெனமத்திலாவது நான் ஆசைப் பட்ட ஒரு நல்ல வாழக்கையே எனக்குக் குடுன்னு சொல்லி பிள்ளையாரை நான் வேண்டிக்கிட்டேன்.நான் இந்த உலகத்தே விட்டே போக முடிவு பண்ணிட்டேன்.நான் கோவிலுக்கு கிழக்காலெ இருக்கும் பாழும் கிணத்திலெ குதிச்சு என் உயிரைப் போக்கிக் கொள்ளப் போறேன். இந்தக் கடிதாசு உங்க கையிலே கிடைச்சு, நீங்க என்னை வந்துப் பார்க்கிறபோ நான் அந்த பாழும் கிணத்திலெ பிணமா மிதந்துக் கிட்டு இருப்பேன்.நீங்க ரெண்டு பேரும் என்னை மன்னிச்சுடுங்க.இப்படிக்கு ஜோதி’ என்று எழுதி இருந்தது.

தங்கள் தலையில் அடித்துக் கொண்டு அழுதுக் கொண்டு கோவிலுக்கு ஓடினார்கள் முத்தம்மாவும் சென்பகமும்.

கோவில் குளத்தை பயத்துடன் எட்டிப் பார்த்தார்கள்.இருவரும்.மங்கிய தன் கண் பார்வையிலூம்,பாசி படர்ந்த அந்த பாழும் குளத்தில்,அரக்கு சிவப்பு புடவையுடன் மிதந்துக் கொண்டு இருந்த ஜோதி.செண்பகத்துக்கு நல்லா தெரிஞ்சது.

தங்கை முத்தம்மாவை கட்டிக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் செண்பகம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *