அவள் பணக்காரி…!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2013
பார்வையிட்டோர்: 14,427 
 

“ ஷைலு.. இன்னிக்கு எல்லாமே உன் மெனுதான்.. எதையாவது ஆர்டர் பண்ணு..” தருண் மெனு கார்டை நீட்டினான்.

ஷைலு புன்னகையை உதிர்த்து ஆராய்ந்து கொண்டிருந்தாள். டிஸைனர் சாரியில் தேவதையாய் தெரிந்தாள்.

“ம்.. ரொட்டி பனீர், அப்புறம் ரவா மசாலா..”

சொல்லிவிட்டு காத்திருந்த வேளையில் அவர்கள் மேசையில் காலியாக இருந்த இரண்டு நாற்காலிகளில் அந்த தம்பதிகள் உட்கார்ந்தனர். அந்த ஆள் மக்கலாக பழுப்பேறிய சட்டையுடன், அந்த பெண் ஒரளவு பவுடர் பூசி தலையில் மல்லிகை வைத்து கொண்டு புது புடவையோடு.. மிஞ்சி போனால் இரு நூறை தாண்டாது.

“ ஏ புள்ள.. பொறந்த நாள் அதுவுமா… உனக்கு புடிச்சதா சாப்பிடு.. என்ன வோணூம்னாலும் வாங்கிக்க… துட்ட பத்தி கவலைப் படாத..”

“ போ மாமா.. அதுக்குன்னு இந்தா பெரிய ஓட்டலுக்கு கூட்டிட்டு வருவே…? வீணா எதுக்கு செலவு பண்றே…? செல்லமாய் கடிந்தாள்.

பிறகு அவனை பூரி, மசால் தோசை என்று ஏகத்துக்கும் வரவழைத்தான். இருவரும் தட்டை வழித்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்ட விதம் ஷைலுவிற்கு எரிச்சலை தந்தது.

மெல்ல தருணின் காதில் கிசு கிசுத்தாள், “ நாம வேறு டேபிளுக்கு போகலாமா..?”

“ அதெல்லாம் நல்லாருக்காது. சர்வர் கொண்டு வந்து வச்சாச்சி… பேசாம சாப்பிடு..”

“ என்னால முடியாது.. ஓண்ணு வேற டேபிளுக்கு வாங்க இல்ல நான் சாப்பிடலை..”

“ சரி சாப்பிடாட்டி போ… தருணே… இரண்டையும் சாப்பிட்டான். அவள் கோபமாக அந்த பக்கம் திரும்பி கொண்டாள்.

எதிரில் உட்கார்ந்திருந்த அந்த பெண் வெகுளியாய், “ என்ன சார்.. அவங்களை விட்டுட்டு நீங்க மட்டும் சாப்பிடறீங்க…”

“ இல்லங்க அவங்களுக்கு வயிறு சரியில்லையாம்…” சமாளித்தான்.

சாப்பிட்டு கை கழுவும் போது அந்த பெண், “ என்ன மாமா.. தினந்தான் நான் உன்னைய நினைச்சி சந்தோஷமா இருக்கேன்…? பத்து நாள் உழைப்பை ஒரே நாள்ல செலவு பண்ணனுமா..?”

“ ஏய் சும்மா செலவை பத்தியே யோசிச்சிட்டிருக்காத .. எனக்கு மட்டும் உன்னை மகாராணி மாதிரி பார்த்துக்கனும்னு எண்ணம் இருக்காதா..? “ சிரித்துக் கொண்டே கை கோர்த்துக் கொண்டு கிளம்பினார்கள்.

காரின் கதவை கோபமாக சார்த்திவிட்டு சீட்டில் உட்கார்ந்த ஷைலு, “என் பர்த்-டே அதுவும் எங்கூட சேர்ந்து சாப்பிடாம… என்னை விட்டுட்டே சாப்பிட்டங்க இல்ல..? அந்த பிச்சைக்காரங்களுக்கு வேற ஹோட்டலா கிடைக்கல… நம்ம எதிரே உட்கார்ந்து என் சந்தோஷத்தையே கெடுத்துச்சுடுங்க.. அந்தாளு குளிச்சானோ இல்லையோ ஒரே வியர்வை ஸ்மெல்..”

அதுவரை பொறுமையா இருந்த தருண், “ ஏய்.. மனுஷனை மனுஷனா பார்க்காம , புடவை, நகை வச்சி எடை போட்டு தரம் பிரிக்கிறே…யாரு பிச்சைக்காரங்க… நீதான் பிச்சைக்காரி, எல்லாம் இருந்தும் இன்னிக்கு உன்னால சாப்பிட முடியலை. அவங்க எதுவுமே இல்லைன்னாலும் சந்தோஷமா வாழனும்னு மனசு இருக்கு பாரு பார்க்க போனா அவங்கதான் நம்மை விட பணக்காரங்க…!”

ஷைலு முகத்தை திருப்பி கொண்டு விண்டோ வழியாக பார்த்தாள், அந்த பெண் இதழில் புன்னகை நிரம்பி பெருமையோடு அவன் சைக்கிளில் ஏறி உட்கார்ந்து அவன் தோளை அணைத்து கொண்டு போய் கொண்டிருந்தாள்.

– அக்டோபர் 12-18

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *