அவன் பெயர் நாகராஜன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 4,970 
 

அவன் தன் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தான். இனிமேல் அவன் மறுபடியும் உள்ளே நுழைய வேண்டிய அவசியமில்லை.

ஒரு வாரத்துக்குரிய சம்பளத்தைக் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

இது அவன் தில்லிக்கு வந்த இந்த மூன்று மாதங்களில் பதினைந்தாவது வேலை. இங்குதான் அவன் அதிக நாட்கள் வேலை செய்தான். இன்னொரு வேலையை தேடிச் சென்றானானால் அங்கு ‘இண்டர்வியூ’வில் கேட்பார்கள்.

“அநுபவம்?”

“மூன்று மாதங்கள்.”

“எங்கு வேலை செய்து கொண்டிருந்தாய்?”

“கடைசியாக வீலர் அன்ட் பாட்லிபாய்.”

“கடைசியாகவா?” அந்தக் குரலில் நிச்சயம் ஆச்சரியம் இருக்கும்.

“ஆமாம். மூன்று மாதங்களில் பதினைந்து வேலை பார்த்து விட்டேன். யாருக்கு இவ்வளவு அனுபவம் இருக்கிறது?”

அவன் மனத்துக்குள் சிரித்துக் கொண்டான். அவர்களை இப்படித்தான் பழி வாங்கவேண்டும். வேலை கொடுக்கிறார்களாம் வேலை… யாருக்கு இனி வேலை வேண்டும்?

அவன் பைக்குள் முப்பது ரூபாய் இருந்தது. ஒரு வாரச் சம்பளம். இதை வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் காலம் தள்ள முடியும்? எதற்காகக் காலம் தள்ள வேண்டும்?

அவனுக்கு உற்றார் உறவினர் யாருமில்லை. அவனைப் பற்றிக் கவலைப்பட வேண்டுமானால், கரோல் பாக் ‘மெஸ் ‘காரர் நாணுவய்யர் ஒருவர்தான் இருக்கிறார். அவருக்கு இந்த மாசக் கணக்குப் பாக்கி. எழுபது ரூபாய் இருக்கலாம்.

அவனுக்கு உற்றார் உறவினர் இல்லை என்று சொல்ல முடியுமா? இருக்கிறார்கள்; அவனைப் பொறுத்தவரையில் இல்லை.

அப்பா இருந்தார், அவர் போய் ஐந்து வருஷங்கள் இருக்குமா? – பேராசிரியர் கல்யாணசுந்தரமய்யரின் சீமந்தபுத்திரன் தில்லியில் பதினைந்தாவது வேலையையும் போக்கிக் கொண்டு பையில் முப்பது ரூபாயுடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கிறான்….கல்யாணசுந்தரமய்யரின் பெயரை அவன் விளங்கவைக்க வேண்டு மென்ற அவசியமில்லை. சித்தியின் பிள்ளைகள் இருக்கிறார்கள். என்ஜினியர், டாக்டர், பிஸினஸ் எக்ஸிக்யூடிவ்…அவன் அம்மா இறந்து அப்பா இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டபோது தம் சினேகிதர்களிடம் அவர் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது.

“நாப்பது வயசிலே எதுக்குக் கல்யாணம்னுதான் பார்த்தேன்… ஆனால் இந்தப் பையன் இப்படி இருக்கானே, மூளை மந்தமா, பைத்தியமா? ஒண்ணும் புரியலே…”

“மெட்ராஸுக்கு அழைச்சிண்டு போய் யாராவது ‘சைக் காட்டிரிஸ்ட்’கிட்டே காமியுங்களேன்…”

“‘சைக்காட்டிரிஸ்டா’?… எல்லாரும் பணம் பிடுங்கித் திம்பாங்க. இவன் பொறவியிலேயே இப்படித்தான். எல்லாம் நாம கொடுத்து வைச்சது…”

அவன் அப்பாவுக்கு மட்டுமல்ல, அவனுக்கே புரியவில்லை. தனக்கு மூளை மந்தமா, இல்லாவிட்டால் அப்பா சந்தேகப் பட்டதுபோல் தான் பைத்தியந்தானா?

இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டு, ‘ஸிந்தியா ஹவுஸ்’ அருகே அவன் நின்றபோது, அவனை உராய்ந்தவாறு ஒரு பஸ் வந்து நின்றது. பஸ் தன்னை ‘வா’ என்று அழைக்கும் போது உட்காராமல் இருப்பது அதன் நட்பை அலட்சியம் செய்வது போல. அவன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

பஸ்ஸில் கூட்டமில்லை. அவன் போய் உட்கார்ந்த பிறகு தான் கவனித்தான். பக்கத்தில் ஒரு பஞ்சாபிப் பெண். அவளும் அவனை ஒரு கண நேரம் பார்த்து விட்டு முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டாள். முகத்தில் தெரிந்தது ஏமாற்றமா?

கண்டக்டர் அவன் அருகில் வந்து நின்றான்.

“டிக்கட் பாய் சா(ஹ)ப்….”

“கிதர் பீ” அவன் பையிலிருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தான்.

அந்தப் பஞ்சாபிப் பெண் அவன் பக்கமாகத் திரும்பி அவனை உற்றுப் பார்த்தாள்.

“கியா?” கண்டக்டருடைய குரலில் எரிச்சல் வெளிப்படை யாகத் தெரிந்தது. எங்கே போக வேண்டுமென்றால், ‘எங்கே வேண்டுமானாலும் கொடு’ என்று ஒருவன் பதில் சொன்னால் அவன் கோபமடைவதில் ஆச்சரியமில்லை. தனக்குப் போகவேண்டிய இடம் எதுவுமில்லை என்று அவனிடம் விளக்கிக் கொண்டிருக்க முடியுமா?

“மத் கேலோ … கிதர் ஜானா?”

தான் அவனுடன் விளையாடுவதாக அவன் ஏன் நினைக்கிறான்? – தனக்கு இப்பொழுதுதான் வேலை போய்விட்டது; மெஸ்ஸுக்கும் திரும்ப முடியாது – பணம் பாக்கி என்று இவனிடம் சொல்லலாமா? பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு டிக்கெட் கேட்பவனிடமா பணம் இல்லையென்று அவன் நம்புவான்?

“தீஸ் பைசே டிக்கெட்…”

“குல்லே நை?”

தன்னிடம் சில்லறை இல்லை என்பதற்கு அடையாளமாக அவன் தலையை ஆட்டினான். கண்டக்டர் முணுமுணுத்துக் கொண்டே டிக்கட்டையும் மீதியையும் கொடுத்தான்.

மீதிப் பணத்தை பையில் போட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணை அவன் மறுபடியும் கவனித்தான். நல்ல சிவப்பு. இடுப்புக்குக் கீழே சற்றுத் தள்ளி புடவையைக் கட்டியிருந்தாள். அது எப்படிக் கீழே விழாமல் அப்படியே நிற்கிறது? ஊசிகள் செருகியிருக்கலாம்; கண்ணுக்குத் தெரியவில்லை.

அவன் பார்வைக்குப் பௌதீக சக்தி இருந்ததோ என்னவோ தெரியவில்லை. அவள் திடீரென்று அவன் பக்கம் திரும்பினாள்.

“கியா பாத் ஹை?” அவள் சீறினாள்.

“குச் நை.”

அவள் அங்கிருந்து எழுந்து வேறோர் இடத்தில் போய் உட்கார்ந்தாள்.

அவன் நினைத்தான், தன்னைக் கண்டு ஏன் எல்லாரும் ஓடுகிறார்கள், அல்லது ஒதுங்குகிறார்கள்? தான் இப்பொழுது ஒரு தவறும் செய்யவில்லையே! அந்தப் புடவை எப்படி விழாமல் இடுப்பில் இருக்கிறது என்று ஆச்சர்யப்படுவது குற்றமா?

அந்தப் பெண் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஓர் இளைஞனிடம் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“வோ பாகல் ஹை.”

அப்படியானால் நிச்சயமாக அவன் பைத்தியந்தானா…?

….தான் பைத்தியமென்று அப்பாவுக்குத் தெரிந்திருந்தும் எதற்காகத் தனக்குக் கல்யாணம் பண்ணிவைத்தார்? ஆம், அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. உற்றார் உறவினர் ‘லிஸ்டி’ல் மனைவியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்…..

அவளும் இந்தப் பஞ்சாபிப் பெண்ணைப் போல் அழகாகத்தான் இருந்தாள். அப்பா எப்படியோகஷ்டப்பட்டு, யார் யாருக்கோ பணம் கொடுத்து அவளை மாட்டுப்பெண் என்று வீட்டுக்கு அழைத்து வந்தார். சாந்திக் கல்யாணத்தின் போது அந்தப் பெண் அவனிடம் பாலைக் கொடுத்துவிட்டு கேட்டாள்.

“நீங்கள் பைத்தியமா, எல்லாரும் சொல்கிறார்களே!”

அவள் அவனைவிட நல்ல உயரம், வளர்த்தி. அவன் ‘ஆமாம்’ என்று அவள் கேள்விக்கு பதில் சொன்னாலும் தயாராக இருப்பவள்போல், மிகுந்த சகஜ பாவத்துடன் அதற்குக் கேட்டாள். அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். பதில் சொல்லவில்லை.

தான் அவளைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. அப்பா கட்டாயப்படுத்தினபோது வீட்டைவிட்டு ஓடிப்போயிருக்க வேண்டும். தனக்குப் பைத்தியம் என்று ஒரு பட்டத்தை கட்டி எதற்காக அவர் கல்யாணத்தைச் செய்து வைத்தார்? அவர் மீது ஆத்திரமாக வந்தது. எவ்வளவு பரிகாசப் பேச்சுகள் ஊரெங்கும்!

“ஏண்டா, உன் ஆம்படையா உன்னைவிட உசரமோடா? ராணி மங்கம்மா கணக்கான்னா நடக்கிறா…!”

“உன் ஆம்படையாளை எங்கேயும் தனியாக போகச் சொல்லாதேடா, நீயும் போ…!”

“அவன் போறதுக்கு வெட்கப்பட்டுண்டுன்னா போகலே, அவள் எப்படி இருக்கா, இவன் எப்படி இருக்கான்… பாவம் அவன் கிட்டே போய்…மத்த பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆகணுமேன்னு இவனுக்கும் கல்யாணம்னு ஒண்ணு பண்ணியிருக்கு…”

இந்தப் பேச்சுகளைக் கேட்கக் கேட்க அவனுக்கு அப்பாவின் மீது பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது. தனக்குக் கல்யாணம் ஆகாவிட்டால், தம்பிகளுக்கு ஆகாது இதுதானா காரணம்?

மனைவியிடம் தஞ்சம் அடைந்தான்….. “நீ என்ன வேண்டு மானாலும் செஞ்சுக்கோ… நீதான் எனக்குப் பாதுகாப்பு…”

மனைவியின் சாமர்த்தியத்தால் பாகப் பிரிவினையாயிற்று உள்ளூரிலேயே தனிக் குடித்தனமும் வைத்தாகிவிட்டது பரம்பரை பரம்பரையாக வந்த சொத்து சிதறுவதற்கு அவன் காரணமென்று எல்லாரும் அவனை ஏசினார்கள்.

அவன் எஸ்.எஸ்.எல்.ஸி. பாஸ் செய்திருந்தானே தவிர, அவனுக்குத் தெரியும், தான் எந்த வேலைக்கும் லாயக்கில்லை யென்று. ஆனால் மனைவி அவனை வேலைக்குப் போகும்படி வற்புறுத்தினாள். ஒரு ‘பாங்கி ஏஜெண்ட்’ அவன் வீட்டுக்கு அடிக்கடி வருவார்; அவன் மனைவிக்கு ஏதோ தூரத்து உறவாம். தூரத்து உறவு நெருங்கியதன் விளைவாக அவனுக்கு வேலை கிடைத்தது ‘பாங்க் கில். முதலில் அவன் சந்தேகப்படவில்லை. விஷயம் தெரிந்ததும் மனைவியை நேரடியாகவே கேட்டு விட்டான். அவள் சுயரூபம் அவனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது. அவளுக்கு வேண்டியது அவன் பணந்தானே!… பேராசிரியர் கல்யாண சுந்தரமய்யரின் வாரிசாக அவள் இருந்தால் என்ன, தானிருந்தால் என்ன? அவன் தன் ஊரை விட்டு சென்னைக்குப் பயணமானான்…

… ‘கஸ்தூரிபாகாந்தி மார்கில்’ பஸ் நின்றதும், திமுதிமுவென்று ஒரு கூட்டம் ஏறியது. பள்ளிக்கூடம் விட்டு குழந்தைகள், கிருதா வைத்த வாலிபர்கள், அழகான பெண்கள், டிஃபன்பாக்ஸை இறுகப் பற்றிக்கொண்டே பஸ்ஸின் கைப்பிடியில் தொங்கி உயிருக்கு மன்றாடும் நடுத்தர வயதுக்காரர்கள்-டிரைவர் பின்னால் திரும்பி இந்தப் போராட்டத்தை, முகத்தில் எந்தவிதமான உணர்ச்சி பாவமுமில்லாமல், ரஸித்துக் கொண்டிருந்தான். அவன்பக்கத்தில் ஒரு பெண் வந்து உட்கார்ந்தாள். முதலில் உட்கார்ந்திருந்த பெண்ணைப்போல் அவ்வளவு அழகும், நாகரிகத் தோற்றமும் இல்லை …சராசரியான முகம், ஆனால் கண்கள் மிகவும் வசீகரமாக இருந்தன.

இவளால் வேறு இடத்துக்கு எழுந்து போக முடியாது. பஸ் பொங்கி வழிந்தது. தன்னை பைத்தியம் என்று இவளும் முடிவு செய்தாளானால் என்ன செய்வாள்?… நிற்கத்தான் வேண்டும்.

அவன் முதலில் தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண்ணைப் பார்த்தான். அவள் மிகவும் சுவாரசியமாக தன்னருகில் அமர்ந்திருந்த இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்தாள். நடுநடுவே தோளைக் குலுக்கிக்கொண்டாள். நாணயம் சிதறுவதுபோல் சிரிப்பு. தன்னை அவள் நினைவிலிருந்து அடியோடு அகற்றி விட்டாள் போலிருக் கிறது பைத்தியத்தை நினைவிலே இருத்திக் கொண்டிருப்பார்களா?

…….. அவனுடைய மனைவியே அவனை இப்பொழுது அடியோடு மறந்திருக்கலாம். சகோதரர்கள் ஒவ்வொரு நிமிஷத் தையும் பாங்கில் கணக்காக ஏற்றும் வெறியில், அவனை ஞாபகம் வைத்துக் கொண்டா இருக்கப் போகிறார்கள்?- சென்னையிலேயே அவன் பல இடங்களில் வேலை செய்தான். யாருக்கு அவனைப் பற்றிய நினைவு இருக்கும்?

சென்னையில் ஓர் அச்சாபீஸில் வேலை செய்து கொண்டிருந்த போது நடந்த சுவையான நிகழ்ச்சி அவானல் அதை மறக்க முடியாது. முதலாளிக்கு ஐம்பது வயசுக்கு மேலிருக்கும். ‘தொள தொள வென்று கதர்ச் சட்டை. நெற்றியில் திருநீறும் குங்குமமும் ‘பளிச் சென்று தெரியும். ‘முருகா!’ என்று சொல்லிக் கொண்டு காலையில் வந்து ஆபீஸில் உட்கார்ந்தாரானால், கைவலிக்கச் சாயந்திரம் காசை எண்ணி விட்டுத்தான் இடத்தை விட்டு எழுந்திருப்பார். அவரைத் தேடிக்கொண்டு அடிக்கடி ஒரு பெண் ஆபீஸுக்கு வருவாள். அவளை அவர் ‘தங்கச்சி’ என்று அருமையாகக் கூப்பிடுவார். அவனும் அவளை அவர் தங்கையென்றே நினைத்து வந்தான். ஒருநாள் அவர்கள் இருவரையும் எதேச்சையாகப் பார்க்க நேர்ந்த நிலையினின்றுதான், ‘தங்கச்சி’ ஏன் அடிக்கடி ஆபீஸுக்கு வருகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. உடனே மனத்தில் ஒரு குரூரமான விளையாட்டு விளையாட வேண்டும் போல் தோன்றிற்று. முதலாளி மனைவியைப் பார்த்து ஒரு நாள் சொன்னான்: “உங்க நாத்தனார் அடிக்கடி ஆபீஸுக்கு வராங்க. நல்லாகலகலப்பா இருக்காங்க……”. “நாத்தனாரா?” அந்த அம்மாள் திடுக்கிட்டாள். அவன் விளக்கமாகச் சொன்னான். அடுத்த நாள் வேலை போய்விட்டதென்றாலும் அவன் மனத்தில் ஒருதிருப்தி ஏற்பட்டது…

… இந்தியா கேட் வந்துவிட்டது. ‘இங்கே இறங்கி விட்டாலென்ன என்று அவனுக்கு தோன்றியது. முப்பது பைசாவுக்கு டிக்கெட் வாங்கி விட்டு பதினைந்து பைசாவுக்கு மட்டும் பிரயாணம் செய்தால் கண்டக்டர் கோபித்துக் கொள்வானோ?

அவன் கீழே இறங்கும்போது, கண்டக்டர் தன்னை ஒரு கணம் உற்றுப் பார்ப்பதுபோல் அவனுக்குத் தோன்றிற்று. இது தன்னுடைய பிரமையாகவும் இருக்கலாம்.

குழந்தைகள் பூங்காவில் நல்ல கூட்டம். எதிர்காலச் சிந்தனை யில்லாமல் மழலையே சாசுவதமென்று நினைத்து குழந்தைகள் ஊஞ்சலாடியும் ஓடிப்பிடித்தும் விளையாடிக் கொண்டிருந்தன. மனிதன் எந்தெந்தப் பருவத்தில் இருக்க விரும்புகிறானோ, அந்தந்தப் பருவத்திலேயே இருக்கும் படியான சலுகையை இயற்கை அளித்திருக்கக் கூடாதா? அவன் கால் இடறியது… குனிந்து பார்த்தான். ஒரு சின்ன அழகான நாய்க்குட்டி, கறுப்பும் வெள்ளையுமாக… கீச்சுக்குரலில் அது குரைத்தது. அதை அப்படியே தூக்கி அவன் முத்தமிட்டான்.

“‘கியா பாத் ஹை?” என்ற குரல் கேட்டதும் அவன் திரும்பினான். பதினாறு வயதுப் பெண்ணொருத்தி ‘ஜீன்ஸி’ல் நின்று கொண்டிருந்தாள். ஒரு ‘ஸ்டண்ட்’ படக் கதாநாயகியைப் போல் அவள் இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நின்றாள்.

“பப்பி அச்சா ஹை” என்றான் அவன்.

“டீக்ஹை …சோடுதோ …”

எஜமானியைப் பார்த்து விட்ட உற்சாகமோ என்னவோ நாய்க்குட்டி இன்னும் ஆக்ரோஷத்துடன் குரைத்தது. பைத்தியம் பிடித்த நாயைக் கண்டு மனிதன் பயப்படுவது போல், ஒரு பைத்தியம் பிடித்த மனிதன் தன்னை முத்தமிட்டு விட்டானே என்ற ஆத்திரமாகவும் இருக்கலாம்… பைத்தியம் பிடித்த மனிதன் நாயைக் கடித்து விட்டால், நாய்க்கு ஊசி போடுவார்களா? அவனுடைய எண்ணற்ற சந்தேகங்களில் இதுவும் ஒன்று. இந்த மாதிரி சந்தேகங்களைக் கேட்கப்போனால் தான் பைத்தியம் என்று முடிவு கட்டி பரிதாபமாகப் பார்க்கிறார்கள்.

அதோ… இந்தக் குழந்தை ஆகாயத்துக்கும் பூமிக்குமாக ஊஞ்சல் ஆடுகின்றதே, அதைப் பார்த்தால் உலகத்தை ஊஞ்சலாக்கி வேறொரு நினைவுமில்லாமல், அப்படியே ஆடிக்கொண்டிருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதற்காக? சமூகம் ஏன் இப்படிச் சிக்கலாகி விட்டது?

அன்று மத்தியானம் நடந்த நிகழ்ச்சி அவனுக்கு அப்பொழுது ஞாபகம் வந்தது. அவன் வேலை பார்த்த ஸ்தாபனம், ‘வீலர் அண்ட் பாட்லி பாய்’ விளம்பர அலுவலகம். ‘ஐந்து லட்சம் மக்கள் தினந்தோறும் இந்த சோப்பைத் தான் உபயோகிக்கிறார்கள்’ என்று ‘டைப் அடிக்கும்போது, ஒரு சைபரை விட்டு விட்டான். மானேஜிங் டைரக்டர் அவனைக் கூப்பிட்டு கத்தினார்: “ஐந்து லட்சம் மக்களை ஐம்பதினாயிரமாகக் குறைத்து விட்டாயே, படுபாவி…”

“வேண்டு மென்றால் இரண்டு சைபராகக் கூட்டி ‘டைப்’ அடிக்கிறேன்” என்றான் அவன்.

“என்ன உளறுகிறாய்?”

“மனிதனே வெறும் சைபர் மதிப்பில் தான் இயங்குகிறான்… ஒரு சைபராக இருந்தால் என்ன, இரண்டு சைபராக இருந்தால் என்ன, எவ்வளவு சைபர்கள் வேண்டும் உங்களுக்கு?”

“கெட்அவுட், யு மாட்ஃபெல்லோ .”

தான் சொன்னதை மானேஜிங் டைரக்டரால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை? பைத்தியம் என்று சொல்லி வேலையை விட்டு நீக்கி விட்டார்.

அவன் பூங்காவுக்குள் சென்று புல் தரையில் உட்கார்ந்து கொண்டான். குழந்தைகளுடன் தான் அந்தப் பூங்காவுக்கு வரவேண்டும் என்ற அறிவிப்பு பலகை அவன் கண்ணெதிரே தொங்கியது. தானே ஒரு குழந்தைதான் என்று தோட்டக்காரனிடம் சொன்னால் அவன் நம்புவானா? அவனிடமும் ‘பைத்தியம்’ என்ற பட்டத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். வெளியே போய் அநாதைக் குழந்தைகள் இரண்டு மூன்றை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தால் என்ன?

சமூகத்தில் எவ்வளவு கட்டுப்பாடுகள்? ‘குழந்தைகளை அழைத்து வரக்கூடாது’ என்ற கட்டளையுடன் காட்டப்படும் திரைப்படங்கள்!…கனாட் பிளேஸில் ஒரு ஹோட்டலில் இளைஞர்களின் வெறியாட்டம் நடக்கும் விடுதி அது, ஹோட்டல் என்று சொல்லக்கூடாது – ஒரு பெண்ணுடன் சென்றால்தான் ஓர் ஆணுக்கு உள்ளே அனுமதியுண்டு. இல்லாவிட்டால், தனித்துச் செல்லும் ஆண் அபராதம் போல் இரட்டிப்புப் பணம் தரவேண்டும். அவனுக்கு உள்ளே சென்று என்ன நடக்கிறது என்று பார்க்க ஆசை ஏற்பட்டது. ஒருநாள். அப்பொழுது எட்வர்டு ஸ்டோன் என்ற கம்பெனியில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வேலையில் சேர்ந்திருந்தான். கூட அழைத்துச்செல்ல ஒரு பெண் வேண்டுமே…? மிகவும் தயங்கித் தயங்கி, அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த பஸந்த் குமாரி என்ற பெண்ணை கேட்டான்.

“‘வாட்?” அவள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானவள்போல் கேட்டாள்.

“கூட வந்தால் போதும்… நான் தப்பான எண்ணத்தில் கூப்பிடவில்லை … என்னிடம் நாற்பது ரூபாய் இருக்கிறது.”

அவள் அதற்குப் பிறகு அரை மணி நேரம் வரை அவனுடன் பேசவேயில்லை. இடைவேளை சிற்றுண்டிக்குப் பிறகு அவனிடம் சொன்னாள்: “ரிஸர்வ் செய்ய வேண்டுமே அங்கு போவதானால்?”

அவனுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது. “அப்படியா?”

அப்பொழுது அவளுடன் வேலை செய்யும் வினோத் அங்கு வந்தான். பஸந்த் குமாரி வினோத்துடன் வெளியே செல்வதை அவன் பார்த்திருக்கிறான்.

“என்ன ரிஸர்வேஷன்” என்று கேட்டுக் கொண்டே வந்தான் வினோத்.

பஸந்த் குமாரி அவனிடம் விஷயத்தைச் சொன்னாள். வினோத் பெரிதாகச் சிரித்துக் கொண்டே அவன் முதுகில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.

“கோ அஹட் மை பாய்… ரிஸர்வ் செய்யப் பணம் வேண்டும், கொடு… உங்கள் இரண்டு பேருக்குமாக, நான் போய் செய்து விட்டு வருகிறேன்…”

“எவ்வளவு” என்று கேட்டான். “நாற்பது ரூபாய்…” என்றாள் பஸந்த் குமாரி.

வினோத் பணத்தை வாங்கிக் கொண்டு போனான். அன்று அவன் திரும்பி வரவேயில்லை …

அடுத்த நாள் அவன் மிகுந்த கோபத்துடன் வினோத்திடம் பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டான். வினோத் பஸந்த் குமாரி இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். வினோத்தை கொலை செய்ய வேண்டும் என்ற வெறி அவனுள் எழுந்தது. ஆனால் ஆறடி உயரத்துக்கு கொரில்லா மாதிரி இருக்கும் அவனுடன் சண்டை போடுவது முட்டாள் தனமென்று விவேகம் சொல்லிற்று. அவன் தன் எதிர்ப்பு உணர்ச்சியை எப்படித்தான் காட்டுவது? ஆறடி உயரத்துக்கு ஒருவனையும், ஐந்தடி உயரத்தில் மற்றொருவனையும் படைத்து விட்டு, வேடிக்கை பார்க்கும் இயற்கையின்மீது தன் ஆத்திரத்தை எப்படித் தீர்த்துக் கொள்வது? அடுத்த நாளிலிருந்து அவன் வேலைக்குப் போகவில்லை.

நான் தில்லிக்கு வந்திருக்கக் கூடாது என்று அவனுக்கு அப்பொழுது தோன்றிற்று. சென்னையிலேயே இருந்திருக்கலாம். அவன் தன் ஊரை விட்டு சென்னைக்கு வந்தபோது உறவுக்காரர்கள் வீட்டுக்குப் போகலாமா என்று நினைத்தான். ஆனால் எங்கும் போகவில்லை , கையிலிருந்த பணம் செலவழிந்த பிறகு சோறு ஒரு பிரச்னையாயிற்று. மவுண்ட்ரோடில் ஒரு நாள் மயக்கம் போட்டு விழுந்தான். ஹோட்டல் முன்னால் விழுந்த அதிர்ஷ்டம், அவனுக்கு அந்த ஹோட்டலிலேயே வேலை கிடைத்தது. ஹோட்டல் முதலாளி அவன் எஸ்.எஸ்.எல்.ஸி. வரை படித்திருக்கிறான் என்று தெரிந்ததும், டைப், சுருக்கெழுத்து இரண்டும் கற்றுக்கொள்ளும்படி அவனைத் தூண்டி அதற்கு வேண்டிய வசதியும் செய்தார். அவை இரண்டையும் அவனால் மிகச் சுலபமாகக் கற்றுக்கொள்ள முடிந்தது, அவனுக்கே ஆச்சரியத்தைத் தந்தது. பேராசிரியர் கல்யாண சுந்தரமய்யரின் வாரிசு எல்லாவற்றிலுமா சோடையாக இருப்பான்? இந்தத் திறமைதான் அவனை தில்லிக்கும் அழைத்து வந்தது.

ஹோட்டல் முதலாளி ஒரு கம்பெனியில் அவனுக்கு வேலையும் வாங்கிக் கொடுத்தார். இவ்வளவு நல்லவராக ஒருவர் இருக்கமுடியுமா என்று அவன் வியந்து கொண்டிருந்த போது, அவருடைய நல்ல தன்மையின் காரணம் அவனுக்குப் புரியத் தொடங்கியது. அவருடைய அக்காவின் மகள் ஊமை. கட்டைக் குட்டையாக ஆமையை எடுத்து நிறுத்தி வைத்த மாதிரி இருப்பாள். தனக்குக் கல்யாணம் ஆகிவிட்ட செய்தியையும் ஊரில் இருக்கப் பிடிக்காமல் வந்த விஷயத்தையும் அவன் அவரிடம் விளக்கமாகச் சொன்னான் அவர் கேட்கவில்லை, மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். அவன் ஒரேயடியாக மறுத்ததும், வாய்க்கு வந்தபடி பேசத் தொடங்கி விட்டார். அவர் வாங்கிக் கொடுத்த வேலையை அவன் ராஜிநாமா செய்தான். அதற்குப் பிறகு சென்னையில் அவன் பல இடங்களில் வேலை பார்த்தான். இரண்டு மாதங்களுக்கு மேல் ஒரே வேலையில் அவனால் இருக்க முடியவில்லை.

சென்னையிலிருக்கும்போது தான் அவனுக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. கையில் பணம் இருந்தால் புஸ்தகம் வாங்கி விடுவான். சிறுவயதில் அவனை அண்ட நெருங்கிய சரஸ்வதிக்கு திடீரென்று அவன் பேரில் அவ்வளவு மோகம் எப்படி உண்டாயிற்றே தெரியவில்லை. தத்துவ நூல்களையெல்லாம் கரைத்துக் குடித்தான். அவனுக்கு கர்வம் ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என்று சொல்ல வேண்டும்.

அவன் வேலை பார்த்த ஓரிடத்தில் மானேஜருக்கு ஆங்கிலம் சுட்டுப் போட்டாலும் வராது. அவர் ஜம்பமாக அவனைக் கூப்பிட்டு கடிதம் ‘டிக்டேஷன்’ எடுத்துக் கொள்ளச் சொல்வார்… ‘வித் ரெஃப்ரென்ஸ் டு யுவர் லெட்டர்…’ இவ்வாறு ஆரம்பித்தாரானால் நாக்கு அப்படியே நின்று விடும். அவருக்குத் தெரிந்த ஆங்கில வார்த்தைகளெல்லாம் எங்கோ போய் ஒளிந்து கொண்டு விடும். ஒரு கடிதத்தைச் சொல்லி முடிக்க ஒருமணி நேரமாகும். ஒருநாள் அவர் சொல்லிக் கொண்டிருந்த போது, அவன் எழுதவில்லை. அவர் அவனைக் கேட்டார்: “எழுதவில்லையா?” “நீங்கள் சொல்லும் ‘வேகத்தில்’ எனக்குக் கடிதம் மனப்பாடம் ஆகிவிடுகின்றது… சொன்னதையே திருப்பித் திருப்பி சொல்கிறீர்கள்…” அவர் மிகுந்த கோபத்துடன் கத்தினார்: “எனக்கு இங்கிலீஷ் தெரியாது என்று சொல்கிறாய்?” அவன் அதற்கு பதில் சொல்லவில்லை; புன்னகை செய்தான். “நீ பைத்தியம் என்று தெரிந்தும் வேலைக்கு வைத்துக் கொண்டேனே, என் முட்டாள்தனம்… போ வெளியே…” அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று தான் சொன்னதற்குக் காரணம் தன்னுடைய கர்வந்தான் என்று அவர் உணர்ந்தும், அவர் அதை ஒப்புக் கொள்ளாமல், பைத்தியம் என்று அழைத்து, அவனை வேலையிலிருந்து நீக்கி விட்டார். ஒரு வேளை இது அவருக்கு ஆறுதலை அளித்திருக்கலாம். மற்றவர்களிடமும் சொல்லலாம் அல்லவா? ‘அவன் ஒரு கிறுக்கு ஸார், நமக்குச் சரிப்பட்டு வரல்லே …”

…”பாய், சா (ஹ)ப்… டைம் ஹோகயா” என்ற குரல் கேட்டதும் அவன் திரும்பினான். தோட்டக்காரன். அந்தப் பூங்காவில் சாயந்திரம் இந்த நேரம் வரைதான் உட்காரலாம் என்ற கட்டுப்பாடு அவன் நினைவுக்கு வந்தது. அவன் எழுந்திருந்தான். நன்றாக இருட்டி விட்டது.

தோட்டக்காரனுக்கு அறுபது வயதிருக்கும். பெரிய அச்சுறுத்தக் கூடிய மீசைகள் வைத்திருந்தாலும், கண்களில் சாந்த பாவம் குடிகொண்டிருந்தது. இந்தியாவின் பழைமையும், பண்பாடும் உருவெடுத்தாற்போல் இருந்தான். அவன் பையிலிருந்து ஓர் ஐந்து ரூபாயை எடுத்து தோட்டக்காரனிடம் நீட்டினான்.

“கியா பாத் ஹை?” தோட்டக்காரனுக்கு ஒன்றுமே விளங்க வில்லை. ஆச்சரியத்தோடு பார்த்தான்.

“ஆப்கா ஹை…ரக்லோ …”

ஐந்து ரூபாயைக் கண்ட அவசரத்தில், அதிசயத்தில் தோட்டக் காரனுடைய கை நீண்டது… ஆனால் முகம் தயக்கத்தில் ஆழ்ந்திருந்தது.

பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்த அவனுக்குத் தோன்றிற்று… தோட்டக்காரன் என்ன நினைப்பான், ‘யார் இந்தப் பைத்தியம்?’ – இந்த முப்பது ரூபாயை எப்படியாவது இன்று செலவழித்துவிட வேண்டும்… –

போகத் தீர்மானமாகி விட்டது, பை கனத்துடனா போக வேண்டும்?

போகத் தீர்மானமாகி விட்டதா?… இருந்து என்ன பயன்? ஒவ்வோர் உயிருக்கும் வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது…. தனக்கு?…

ஒன்றுமில்லை… குடும்பப் பெயரை விளங்க வைக்க வேண்டும் என்றோ மனைவி மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றோ, புகழ் அரிப்புக்குத் தீர்வு காண வேண்டுமென்றோ வாழ்வதற்கான ஒரு நிர்ப்பந்தமும் தனக்கு இல்லை… முகம் இல்லாத, பெயர் இல்லாத பசி என்ற ஒரே ஒரு பௌதிகக் காரணத்துக்காக மட்டும் வாழ்கிற மனித விலங்கு… தான் யாரென்று சுவடு தெரியாமல் தன்னை அழித்துக் கொண்டு விட வேண்டும்… கொஞ்ச நாட்கள் தற்கொலை என்ற காரணத்தால், தன்னைப் பற்றிய ஃபைலுக்குப் போலீஸில் உயிர் இருக்கும்… அதற்குப் பிறகு சுவாரசியம் இழந்து மூலையில் போட்டு விடுவார்கள். தான் ஃபைலாக மாறி தூக்கியெறியப்படும் காட்சி அவன் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

அப்பொழுது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. தூற்றலாகத் தொடங்கியது, பெருமழையாக வலுத்துவிட்டது. தெரு விளக்குகள் அணைந்தன. மழைக்கு ஏதாவதோர் இடத்தில் ஒதுங்கலாமாவென்று நினைத்தான். அவனுக்குச் சிரிப்பு வந்தது; சாகத்துணிந்தவனுக்கு ஜலதோஷம் பிடிக்காமல் சாகவேண்டுமென்ற ஆசையா?

ஷாஜஹான் ரோட்டில், யு.பி.எஸ்.ஸி. கட்டடத்தருகே அவன் நடந்து கொண்டிருந்தான். மின்னல் வெளிச்சத்தில், ஜனங்கள் பஸ் நிலையத்திலும், சின்னச்சின்ன பெட்டிக்கடையருகிலும் மழைக்காக ஒதுங்கியிருப்பது தெரிந்தது. ஒரு பிச்சைக்காரக் குடும்பம், வாழ்ந்துதான் தீர வேண்டும் என்ற வெறியில் சுவரோடு சுவராக ஒண்டிக் கொண்டு, இடையிடையே ‘பாபுஜி’ என்ற குரலை எழுப்பியவாறு முடங்கிக் கிடந்தது. அவன் தன் பையிலிருந்த பணத்தையெல்லாம் எடுத்து அங்கு மிரள மிரளப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு குழந்தையின் கையில் திணித்தான்.

ரூபாய் நோட்டுக்களாக இருக்கக் கண்ட அந்தக் குழந்தையின் தாய், “பாபுஜி, கியா கர்த்தே ஹோ?” என்று குரலில் நடுக்கம் தோன்றக் கேட்டாள்.

அவன் பதில் சொல்லவில்லை …மேலே வேகமாக நடந்தான்.

அவன் சிறிது தூரம் சென்றிருப்பான். தன்னைத் துரத்திக் கொண்டு அந்தக் குழந்தை வருகிறது என்பதை அவன் உணர்ந்து, நடைபாதையிலிருந்து இறங்கி தெருவைக் கடந்து செல்ல முற்பட்டான்.

“பாபுஜி, பாபுஜி…” என்று கீச்சுக் குரலில் கத்திக்கொண்டே வந்தது அக்குழந்தை. பணத்தைக் கண்டு இவ்வளவு பயமா? மாடிக்கு மேல் மாடியாகக் கட்டப்பட்ட அரசாங்க வீடுகளில் வாழும் அதோ, அந்தச் சீமான்களுக்கு இக் குழந்தையின் குரல் கேட்குமா?

தெருவெங்கும் ஒரே மழைத் தண்ணீர். அவனால் விரைந்து செல்ல முடியவில்லை. குழந்தை பின்தொடருகிறதா என்று திரும்பிப் பார்த்தான். அதுவும் வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது வலப் பக்கத்திலிருந்து ஒரு பஸ் வேகமாக வந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. இதுதான் சரியான சந்தர்ப்பம். சரித்திரம் தனக்காகத் தேர்ந்தெடுத்த தருணம். முகம் இல்லாமல், சுவடு இல்லாமல் போவதற்கான வாய்ப்பு… வாய்ப்பு… ஆனால்…

குழந்தை ‘வீ’லென்று கத்தியது. பஸ் எமன் அதனருகே வந்து விட்டது. பாசக் கயிறு வீசினாற் போலத் தான். அவன் குபீரென்று பாய்ந்து குழந்தையைத் தன் பக்கமாக இழுத்தான்.

பஸ் ஒரு குலுக்கலுடன் நின்றது. நடந்தது என்னவென்று நன்றாக உணர்ந்த ‘டிரைவர்’ பஸ்ஸை விட்டு கீழே இறங்கி அவனை தோளில் தட்டிக் கொடுத்தான்.

“கமால் கர்தியா பாய் சா(ஹ)ப்…கமால் கர்தியா…”

கூட்டம் கூடிவிட்டது, ‘டிரைவர்’, அவனுடைய சாகஸத்தைப் பற்றி எல்லாருக்கும் விளக்கமாகச் சொன்னான். குழந்தையின் தாயார் அப்பொழுது அவன் தங்களுக்கு ரூபாய் நோட்டுக்களைகொடுத்து விட்டுப் போன செய்தியைக் கூறி குழந்தை அவனை ஏன் பின் தொடர்ந்ததென்றும் சொன்னாள்.

அக்கூட்டத்தில் ஒரு பத்திரிகை நிருபர் இருப்பாரென்று அவன் எதிர் பார்க்கவில்லை. ஆயிரம் கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்து விட்டார். அவன் ஒன்றுக்கும் பதில் சொல்லவில்லை.

அடுத்த நாள் பத்திரிகைகளில் அவனைப் பற்றி பத்தி பத்தியாகச் செய்திகள் வந்தன. முகம் இல்லாமல், பெயர் இல்லாமல், சுவடு இல்லாமல் போக வேண்டும் என்ற அவன் ஆசை நிறைவேறவில்லை.

சரித்திரம் ஒவ்வொருவரையும் ஏதோவொரு காரணத்துக்காக தேர்ந்தெடுத்திருக்கிறது என்பது பொய்க்கவில்லை.

அவன் பெயர் நாகராஜன்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *