அவன் கேட்ட பாடலுக்கு அவள் சொன்ன வேதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,734 
 

நிழல் உதிர்த்து விட்டுப் போகும் கனவு வாழ்க்கையிலிருந்து மீண்டு வர அவளுக்கு ஒரு யுகம் பிடித்தது பூரணி என்று மிகவும் அர்த்தபுஷ்டியான பெயர் தான் அவளுக்கு நிஜவாழ்க்கையைப் பொறுத்த வரை பூரணத்துவம். அவள் பெயரில் மட்டும் தான் சராசரி ஒரு பெண்ணைப் போலக் காட்சி, உலகின் நிறைகுட விளக்காக என்றைக்குமே கண்கள் ஒளிரக் கொடி கட்டிப் பறந்ததில்லை. அவள் அப்படிப் பறக்காமல் விட்டாலும் எதிலும் பங்கமுறாத தான் ஒரு சத்திய தேவதையே என்பதை ஒரு போதும் அவள் மறந்ததில்லை.

சிறு வயதிலிருந்தே பெரும்பாலும் ரேடியோ கேட்பதிலேயே அவள் பொழுது கழிந்து போகும். அந்தக் காலத்துப் பழைய சினிமாப் பாடல்களென்றால் மிகவும் விரும்பிக் கேட்பாள். அதிலும் ரேடியோ சிலோன் வர்த்தக சேவை நிகழ்ச்சிகளை அவள் தவற விடுவதில்லை. அதன் அபிமான ரசிகை அவள் பாட்டுக் கேட்பதோடு மட்டும், நின்று விடாது அவ்வப்போது நிகழ்ச்சிகளுக்கேற்ப எழுதவும் செய்தாள். தமிழ் எழுதுவது அவளுக்குக் கை வந்த கலை, சரளமாகத் தமிழ் எழுத வரும். கவிதை நடையிலும் எழுதுவாள், கட்டுரைச் சொற்பிரயோகமாக வாழ்க்கை பற்றி அவள் எழுதும் தத்துவங்கள் உயிர்ப்பு நிலை பெறும் போது லயம் பிசகாமல் ஒரு கனவு மயக்கமாக உள்ளார்ந்த சிலிர்ப்புடன் கேட்கத் தோன்றும்.

ரேடியோ சிலோன் வர்த்தக சேவையில் வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்குத் தவறாது இசையும் கதையும் ஒலிபரப்புவார்கள் அவள் அதற்கு எழுதாவிட்டாலும் கேட்கத் தவறுவதில்லை கதையை விட அதில் இடையிடையே ஒலிக்கும் பாடல்கள் தாம் ரசனையைத் தூண்டும் தரமான பழைய பாடல்களின் சிரஞ்சீவித்தனம் குறித்து அவள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாள் அந்தச் சிரஞ்சீவித்தனமான புனிதங்கள் வாழ்க்கையிலும் மாறாது என்று அவள் நம்பினாள் அவள் எதைப் புனிதமென்று நம்பினாளோ அதுவும் வீழ்ந்தது

கல்யாண வேள்வி அன்பு கறைபட்டுப் போகாத ஒரு தெய்வீக வரமாகத் தன்னை வந்தடையுமென்று அவள் கனவு கண்டதற்கு மாறாகத் தன்னைத் தீக்குளிக்க வைப்பதற்கே அது என்பது காலம் கடந்த ஞானமாகவே அவளுக்குப் பிடிபடலாயிற்று. அவள் அப்படி அன்பு வரண்ட பாலைவனத்தில் இருந்த நேரத்தில் தான் அப்படியொரு விபரீத சூழ்நிலைக்கு மிகவும் பரிதாபகரமாக முகம் கொடுக்க நேர்ந்தது நெருப்பை மடியில் கட்டிக் கொண்டு அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் இந்த எழுதும் கலை தான் அதுவும் ரேடியோவுக்கு எழுதுவது நிஷ்டை கூடிய தவம் மாதிரி அவளுக்கு

வர்த்தக சேவையில் தேர்ந்த இசை என்றொரு நிகழ்ச்சி போகும் அவளது ஐந்தாவது குழந்தை பிறந்த சமயம் வவுனியாவில் இருக்கும் கணவன் ஆனந்தனைப் பிரிந்து அப்போது அவள் தாய் வீட்டில் இருந்தாள் அன்புக்குப் பஞ்சமில்லாத ஒரு புண்ணிய பூமி அது தாய் வீடு மட்டுமல்ல ஊர் கூட உயிர் ஞானம் கை கூடிய அப்பழுக்கற்ற சாந்தி நிறைவோடு இயற்கை அழகு மிளிரக் காட்சி கொண்டு களை கட்டி நிற்கும் அதை உள்ளுணர்வோடு பார்க்கப் பார்க்க ஒரு கலை வழிபாடு செய்வது போல இன்னும் நிறைய எழுத வரும் மடியில் பால் குடித்த குழந்தை தூங்கித் தலை தொங்கி விழுவது கூட அறியாமல் அவள் அப்படி மெய் மறந்து எழுத்துத் தவத்தில் நிலைக்கும் போது அம்மாவின் குரல் அவளை ஊன உலகிற்கு அழைப்பது போல் சடம் மரத்து ஒலிக்கும்

அந்தச் சடங்களைக்கடந்து போகும் மிதவாத குணம் மாறாமலே கண்களில் ஆழ்ந்த சோக வடுக்கள் கொண்ட இருளின் கனம் வற்றிப் போன உயிர்ப்பு நிலை பெற்ற பார்வையின் ஒளி தீட்சண்யமாய் மிளிர அப்போது அம்மாவை நிமிர்ந்து பார்த்து அவள் கேட்பதுண்டு.

“என்னம்மா குழப்புறியள்?இப்படி எழுதுறது தான் என்னை மறக்கிறதுக்கு நான் கொண்டு வந்த வரம். அதைக் கூடவா செய்யக் கூடாதென்கிறியள்?”

“நல்லாய் எழுது நான் தடுக்கேலை அதென்ன உன்னை மறக்கிறது? அப்படி உன்னை மறக்கிற நிலையிருந்தால், அதுக்கு நீ ஆசைப்பட்டிருந்தால் நீ ஏன் கல்யாணம் செய்ய வேணும்? சாமியம்மாவாகவே இருந்திருக்கலாம் தானே”

“உண்மையில் அதுக்குத் தான் நான் ஆசைப்பட்டது. நடக்கேலையே எங்கை விட்டியள்?இப்ப ஒன்றுமில்லாமல் தோலுரிஞ்சு போய் நிக்கிறன் சரி அதை விடுங்கோ? நான் எழுதினால் உங்களுக்கு ஏன் நோகுது? என்ரை ஆத்ம திருப்திக்காக இது கூடவா நான் செய்யக் கூடாது?”
“நல்லாய் செய் நான் தடுக்கேலை அங்கை பார் பிள்ளையின்ரை தலை தொங்குது அதைக் கவனிக்காமல் அப்படியென்ன எழுதிக் கிழிக்கப் போறாய்?”

“அதையும் நான் கவனிச்சுக் கொண்டு தான் இருக்கிறன் என்ரை மூச்சு இதிலையும் தான் இருக்கு குடும்பக் கடமை பற்றி நீங்கள் சொல்லித் தர வேண்டியதில்லை அது எனக்கு மற்றுமொரு யோகம் மாதிரி கண்ணை மூடிக் கொண்டு தவம் செய்கிறவள் நானில்லை “

அதைக் கேட்ட பிறகு அம்மா பேச வராமல் உணர்ச்சி முட்டிய மெளனத்தில் உறைந்து போனாள்”

திடீரென்று கள்வனிக் காதலி படத்தில் பி பானுமதி பாடிய பாரதியார் பாடல் ஒன்று ஏனோ அவள் நினைவுக்கு வந்தது நல்லதோர் வீணை செய்தே என்ற பாடல் அன்பு பற்றி மிகவும் ஆழமான கண்ணோட்டத்துடன் அப் பாடலுக்குத் தேர்ந்த இசை நிகழ்ச்சிக்காக அவள் எழுதி அனுப்பிய விமர்சனம் இரு நாட்கள் கழித்து வர்த்தக சேவையில் ஒலிபரப்பான போது வவுனியாவிலிருந்த ஆனந்தன் அதைக் கேட்க நேர்ந்தது அவளைப் பற்றி அதிலும் களங்கமில்லாத அவளின் தூய அன்பைப் பற்றி ஒரு பிழையான முடிவை அவன் எடுப்பதற்குக் காரணமானது கூட அவள் கொண்டு வந்த பாவக் கணக்கின் ஒரு உயிர் வரண்ட நிழல் வெளிப்பாடாகவே அவளை வந்தடைந்தது

அதைக் கேட்டவுடன் வழக்கமான அவளை நோகடிக்கும் குரூர புத்திமாறாமல் சன்னதம் கொண்ட அவன் தன் உச்ச கோப வெறிக்கு ஒரு வடிகாலாய் அவளுக்கு எழுதிப் போட்ட கடிதம் அப்பாடலுக்கான மெய்யான பூரண அறிவு ஒளி விடும் அன்பு பற்றி தீர்க்கமாக அவள் எழுதிய பிழையற்ற விமர்சன உரை என்னும் கலங்கரைக் கோபுர விளக்கையே மாசு படுத்தி வேரோடு பிடுங்கி எறிவது போல அவன் எழுதிய வக்கிர நினைப்புடன் கூடிய அந்தக் கடிதம் நெருப்பு அம்பாக வந்து அவளைத் தைத்தது.

தன்னைக் குறி வைத்தே அதை அவள் எழுதிருப்பதாக அவன் நினைப்பு அதன் பலனாக அவன் கேட்கிறான். முட்டையில் மயிர் பிடுங்கிறாயா? அவள் பிறந்ததிலிருந்தே சுத்த சைவம். அவன் வேண்டும் என்பதற்காக முட்டை மட்டுமல்ல மீனையும் கை கொண்டு அளைந்த அவளை அவளின் மகத்தான அன்பு வேள்வியையே கொச்சைபடுத்திக் குழி பறிப்பது போல இது என்ன மடத்தனமான கேள்வி?

மயிரேயில்லாத முட்டையில் போய் மயிர் பிடுங்குவதென்றால், அதற்கு என்ன அர்த்தம்?. அன்பிலே கறையற்ற சிறந்த குணாதிசயங்களைக் கொண்ட ஒருவனா உண்மையில் அவன்?. அவனோடு வாழ்ந்து பார்த்த அவளைத் தான் கேட்க வேண்டும். அந்தக் கறைபட்ட சரித்திரத்தை தோலுரித்துச் சந்திக்குக் கொண்டு வருவதற்காக இதை அவள் எழுதவில்லை இது அவள் ஆற்றுகின்ற அன்பு வேள்வியின் பயனாய் பிறந்த மாசற்ற எழுத்தோவியமான ஒளி கொண்டு மிளிரும் ஒர் ஒப்பற்ற கலங்கரை விளக்கு அது மட்டும் தான் அவள் கையில் அதைப் புரிந்து கொள்ள மறுக்கிற அவனின் வரட்டுப் பிடிவாதமான ஆளைச்சாகடிக்கவே காத்துக் கிடக்கும் மிக மிலேச்சனத்தனமான துருவ மறை பொருளான ஜடம் மரத்துப் போன காட்சி வெறுமையின் முன் அவன் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அறிவு சூனியமாகிப் போன உயிரே இல்லாதொழிந்த இருள் வந்து மறைக்கிற ஜடம் மரத்த உலகின் நிழல் சுவடுகள் மட்டும் தான் இந்த நிழலை ஊடுருவிக் கொண்டு அன்பு வேதம் ஒன்றையே வழிபட்டு வாழ்ந்து காட்டும் அவளை அவள் வழியில் இனம் காண முடியாமல் அவனின் உயிர் திரிந்து நடை பிசகிப் பயணிக்கும் முற்றிப் பழுத்த நடத்தைக் கோளாறுகளின் விளைவாக வந்து சேர்ந்த அக் கடிதத்துக்கு என்ன பதில் எழுதுவது என்று பிடிபடாத மயக்கத்தோடு அவள் தன்னிலை மயங்கி இருந்த வேளையில் தான் அதற்குப் பதில் அறிந்து போகும் மனக் கொதிப்போடு அவளை நாடி வந்திருந்தான் அவன்.

அவன் இப்படி அடிக்கடி வருபவன் தான். அவளையோ குழந்தைகளையோ சுகம் கண்டறிந்து போகவல்ல அவன் வருகையெல்லாம். வாழ்க்கை போதித்திருக்கிற இல்லற தர்மங்களை விட மனைவி என்பவள் அற்ப சுகம் தருகிற வெறும் போதைப் பொருள் தான் என்று நம்பி அதையே வழியென்று கடைப் பிடிக்கிற அவன் வேறு எதற்காகவும் அவள் இருப்பிடம் நாடி வராதவன் இன்று வந்திருப்பது அவளைத் தலை கொய்து நெருப்பில் போடத்தான்

அவசரமாக அவன் வரும் போதே அவளுக்குப் பூடமாகப் புரிந்தது இன்று நல்ல வேட்டை தான். நான் எழுதிய பாட்டை மையமாக வைத்துப் பூகம்பம்தான் வெடிக்கப் போகுது கடவுளே! இது என்ன சோதனை என்னைக் காப்பாற்று”

பயணக் களைப்போடு படியேறி உள்ளே வந்தவன் கையில் கொண்டு வந்த சூட்கேஸை அவள் முகத்தில் படும்படியாக ஆவேசம் கொண்டு எறிந்து விட்டு சூடு பறக்க அவளைக் கேட்டான்
“என்ன பாட்டுக்கு விமர்சனம் எழுதுறாய்? முட்டையிலை மயிர் பிடுங்கிற கணக்காய் சொல்லு “தன்னைச் சுதாரித்துக் கொண்டு அவனை அவள் நிமிர்ந்து பார்த்த போது ஒரு கேள்வியின் சரம் மனதின் நுனி வரை எட்டிப் பார்த்த போதும் அவளால் வாய் திறந்து அதைக் கேட்க முடியாமல் உயிர் பாஷையே உன்னத உயிர்ப்பு நிலை என்ற நினைவுப் பிரக்ஞை மாறாத அதீத தெய்வீக ஒளி ஓர் ஒப்பற்ற உயிர் ஜோதியாய் மனதில் மிளிர வாயடைத்துப் போய் அவள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு மீண்டும் குரலை உய்ர்த்தி அவன் கேட்டான்

“ வாய்க்குள்ளை என்ன கொழுக்கட்டையே சொல்லு என்னை நினைச்சுத் தானே அந்தப்பாட்டுக்கு நீ எழுதிய விளக்கவுரை?”

அவளுக்குப் புரிந்தது அவள் அவனை நினையாமல் பொதுவாக அன்பு குறித்துச் சொல்லிய அந்த வேதம் தனக்குத் தான் என்று அவனை நம்ப வைத்தது எது? அன்புக்குப் பஞ்சமாகிப் போன அவனின் குற்ற மனம் தானே காரணம் அப்படியிருந்தும் அவன் சொல்கிறான் தான் முட்டை தான் என்று என்ன திமிரோடு நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறான்.என்னே மடமை அவள் நினைத்தாள் நீங்கள் முட்டை இல்லையென்று சொன்னால் மட்டுமே இதற்கு ஒரு நீதி கிடைக்கும் ஆனால் வெறும் வாய்த் தர்க்கத்தாலை என்னைப் புடம் காட்டுற மாதிரி, நான் சொன்னால் இதை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டுமே. அப்படிச் சொல்லப் போனால் எனக்கு நீதி கிடைக்குதோ இல்லையோ அவனுள் கோபம் தான் வளரும் அப்படிக் கோப நெருப்பு மூட்டிக் குளிர் காய்கிற குரூர புத்தி எனக்கு வர வேண்டாம் இது தெளிவானவுடன் அவனைச் சமாதானப்படுத்துகிற பெருங்கருணை தலை தூக்க கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட இளகிய மனசோடு அவனை நிமிர்ந்து பார்த்து அவள் சொன்னாள்

“அன்பை எப்பவுமே வேதம் என்று நம்புகிறவள் நான் நான் பொதுப்படக் கூறியதை நீங்கள் ஏன் தலையில் சுமக்க வேண்டும் உங்களை வேதம் சொல்லி வழி நடத்துற அளவுக்கு நான் ஒரு போதும் புத்தி குழம்பினதில்லை இது தான் உண்மை”

இதற்கு மேல் பேச்சை வளர்த்தால் குதர்க்கங்களாலே நியாயப்படுத்துகின்ற வீண் தர்க்க வாதங்களுக்குத் தான் முகம் கொடுக்க நேரும்

மனம் துடைத்து மற்றவர்களை வாழ்விக்கும் உன்னத குணங்களோடு பிரகாசிக்கின்ற ஒருவனாகத் தன்னைப் பிரகடனப்படுத்தித் தான் மேல் ஓட்டில் மயிர் முளைக்காத முட்டை தான் என்று நம்பத் துணிந்த அவனின் கீழ் மட்டமான அறியாமைச் செருக்கை நினைத்து அவன் மீது அவளுக்குப் பரிதாபம் தான் மிஞ்சியது.

அன்பு வேதம் சொல்லியே தான் எழுதிய அப் பாடலுக்கான விளக்கவுரை தன் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கத்தான் என்று அவனை நம்ப வைத்த அறிவு தெளிவில்லாத அவன் போதிக்க முன் வந்த வாழ்க்கைச் சித்தாந்தம் தன்னை தீக்குளித்து வழிநடத்துகின்ற மற்றுமொரு பாடமாகவே தன்னைப் புடம் போடுவதற்காகவே கண் திறந்து காத்துக் கிடப்பதாய் அவள் மிகவும் நம்பிக்கையுடன் நினைவு கூர்ந்தாள்.

இந்த உயிர் ஒளி கைகூடுகின்ற விடியலுக்கே தனது அந்த வாழ்க்கை பயணமும் என்று சொன்னால் அவனா நம்புகிறவன்? அவளை அவன் புரிந்து வைத்திருக்கிற லட்சணம் தான் இப்போது கொடி கட்டிப் பறக்கிறதே

அதன் உயரத்தில் அவன் தலைகீழாக நிற்பது போல அதன் வேகம் கொண்ட சுழற்சியில் அழியாத உயிரின் தத்துவமாகத் தன்னையே இனம் கண்டு புல்லரித்துப் போகின்ற பெருமிதம் அவளுக்கு. இப்போது அது மட்டும் தான் மடியில் நெருப்பில்லாத அப்படியொரு சுகமான அந்த வாழ்க்கைப் பயண அனுபவச் சுவடுகள் தன்னை மேம்படுத்தவே தன் காலடி தேடி வந்து கொண்டீருப்பதாய் அந்த நினைவு முத்தோடு அவள் ஒளிர்ந்து நிலை கொண்டு நிற்பதைக் கண்டறியாமல் போன ஒரு வெறும் மனிதனாய் தரை தட்டி நின்ற அவன் நிழற்கோலம் காற்றில் கரைந்து போகத் தான் என்று அவளுக்கு உறைத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *