அவங்க ஊர் விருந்தாளிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2014
பார்வையிட்டோர்: 9,348 
 

‘நம்ம ஊருல, பிள்ளையாரு, அம்மன், சிவன்னு எல்லா சாமிக்கும் கோயில் இருக்குது. ஆஞ்சநேயருக்கும் ஒரு கோயில் கட்டிடணும். அப்பதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு விடிவுப் பொறக்கும்”

‘அட போப்பா! கோயில் கட்டிட்டா, சரியாப் போச்சா? நம்ம பஞ்சாயத்து ஆளுங்க நெனைச்சா, இது ஒண்ணுங் கஷ்டமான வேலையே இல்ல!”.

‘எத்தனவாட்டி மனுக் குடுத்தாச்சு?, மறியல் பண்ணியாச்சு? அட! இளவட்டங்கள்லாம் ஒருதடவ, பஞ்சாயத்து ஆபிசு சுவருல்லயே அவனுகள, அசிங்கமாத் திட்டி, கரியால எழுதி வச்சிட்டானுகத் தெரியுமா?”

டீக்கடைப் பெஞ்சில், உட்கார்ந்தபடி அந்த இருவரும், அப்படி என்ன ஊர்ப்பிரச்சினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறீர்களா? இப்ப, காலையில எட்டுமணி. இன்னும் ஒரு மூணு மணி நேரங் காத்திருந்தால், அது என்னவென்று உங்களுக்கே தெரிய வரும்.

உள்@ர் பள்ளிக்கூடம், பத்து மணிக்கு ஆரம்பிக்கும். அந்த ஊரின் அறுபது, எழுபது வீடுகளிலிருந்தும் பிள்ளைகள் அந்தப் பள்ளிக் கூடத்தில் தான் படிக்கிறார்கள். பிள்ளைகளைப், பள்ளிக்கு அனுப்பியப் பிறகு ஆம்பிள்ளைகள் வேலைக்குப்போன பிற்பாடு, வீட்டுப் பெண்கள் எல்லாம், திண்ணையில் உட்கார்ந்து பேசுவதும், தாயம் விளையாடுவதுமாக பொழுது போக்குவார்கள். அமைதியாக இருக்கும் ஊரில் காகங்களின் சத்தமும், கலீர் கலீரென தாயக்கட்டை உருளும் சத்தமும் மட்டும்தான் கேட்கும்.

வடக்குத்தெரு சந்திரா, செண்டு, விஜயா மூணுபேரும் மும்முரமாகத் தாயம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ‘ஏ சந்திரா! காக்கா எல்லாம் வித்தியாசமாக் கத்துதே? ஒரு வேளை வந்துடுச்சோ?” அதில் ஒருத்தி இப்படிக் கேட்பாள்.

‘அடியே! வந்துடுச்சோ இல்ல! அங்க ஓட்டு மேலப் பாரு! படையெடுத்து வருது. நான் வாரேன்!“ தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடுவாள் இன்னொருத்தி! அவ்வளவுதான்! அடுத்த அரைமணி நேரத்தில் ஊரே தீப்பிடித்த மாதிரி பரபரப்பாகும். வீட்டிலிருக்கும் பெரிசுகள். ஆளுக்கொரு கட்டையோ, விறகோ கையில் தூக்கிக்கொண்டு, வாசலில் தயாராக நின்று கொள்வார்கள். பெண்கள் பின்வாசல் கதவைச் சாத்துவதும், ஜன்னல்களை மூடுவதுமாக பரபரப்பாக இயங்குவார்கள்.

‘தங்களின்’ மீதான இவர்களின் பயத்தை ரசித்தபடி ‘அவர்கள்” காம்பவுண்ட் சுவர்களின் மீதும், கூரைகளின் மீதும் ராஜநடை போட்டும், தாவியும் குதித்தும் குதூகலமாக வலம் வருவார்கள்.

மற்றவர்களுக்குத்தான் ‘குரங்குகள்’! அந்தப் ‘பூட்டுத்தாங்கி’ கிராம மக்களைப் பொறுத்தவரை, அவை, வில்லன்கள்! பூட்டுத்தாங்கியைப் பொறுத்தவiர் தண்ணிக்கோ, விளைச்சலுக்கோப் பஞ்சமில்லை. மக்கள் நல்ல உழைப்பாளிகள். செழிப்பான சின்ன ஊர் அது. தொழில்நுட்பப் பூச்சாண்டியின் கோரப்பிடியில் எந்த வகையிலும் சிக்கிக் கொள்ளாத அந்தக் கிராமத்து மனிதர்கள், கோவில், திருவிழா, தெருக்கூத்து என சற்;றேறக்குறைய, ஒரு நூற்றாண்டுக்கு முன் வாய்த்திருந்த, அமைதியான நிறைவானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள். அவர்களின் ஒரே பிரச்சனை, இந்தக் குரங்குகள்தான். மலையடிவாரக் கிராமம் என்பதால், பக்கத்திலிருக்கும் மலைக்காடுகளைச் சேர்ந்த, இந்தக் குரங்குக் கூட்டம், ஏதோ சுற்றுலா வருவதுபோல், இங்கு வந்து ஊரை சூறையாடிச் செல்லும்.

அநேகமாக, வாரத்தின் எல்லா நாளிலும் அவை வந்துவிடும். காலை பத்தரையிலிருந்து, பன்னிரெண்டு மணிக்குள். அரிதாக, ஒருசில நாட்கள் மட்டும் வராமல் போவதுண்டு. அதற்கடுத்து வரும் நாட்களில், மக்கள் கொஞ்சம் அசட்டையாக தங்கள் வேலைகளில் மூழ்கி விடுவார்கள். அன்றுதான் அவைகளுக்குக் கொழுத்த வேட்டையாக இருக்கும். பின்வாசல் வழியாகத் தாட்டான்களும் (பெரிய ஆண் குரங்கு) ஜன்னல் கம்பிகள் வழியாக, குட்டிக் குறுமாக்களும் அடுக்களைக்குள் புகுந்து அதகளம் செய்ய ஆரம்பித்து விடும்.

பருப்பு, அரிசி, சர்க்கரை, எல்லாம் தரையில் இரைத்து அள்ளித் தின்கும். பழங்கள், தின்பண்டங்கள் கிடைத்தால் வாயில் கவ்விக் கொண்டு ஓடி அருகிலிருக்கும் மரத்திலோ, கூரையிலோ உட்கார்ந்து சாவகாசமாக தின்று முடிக்கும். பெரிய தின்பண்டக் கவர்களை, அப்படியே எடுத்துப் போய்விடும் போதுதான் வீட்டு நபர்களுக்குக் கொலைவெறி வரும். கையில் ஒரு கம்பைக் எடுத்துக்கொண்டு அந்தக் குரங்குகளை, அடிக்கப்போவதுபோல் பாவனை செய்வார்கள். இருந்த இடத்திலிருந்தே ‘வீடு கட்டுவார்கள்’. பதிலுக்கு குரங்குகளும் அவர்களின் ‘உதாரை’ உதாசீனப்படுத்துவதாக, மேல்தாடை விரிய, கண்கள் மேலேற பல்லைக்காட்டி, ‘கொர்’ரென்றுப் பயமுறுத்திப் பார்க்கும். சில நேரங்களில், விடாமல் தட்டிதட்டிப் பயமுறுத்தும் நபர்களின் ‘வீரத்தில்’ சலித்துப் போனவைகளாக, பாதி காலி செய்த தின்பண்டக் கவரை, கீழே எறிந்து விட்டு, அடுத்த வீட்டிற்குப் போய்விடும், குரங்குகள்!

இந்த ஜம்பமெல்லாம், தாட்டான்களிடம் மட்டும் பலிக்காது. ரொம்பப் பெரிய தடியை எடுத்து வந்து ‘விஷ்க் விஷ்க்’கென்று சத்தம் வர, அதன் எதிரே சுத்துவார்கள், சில இளவயது, ‘சிப்பாய்கள். ஏதோ வித்தைக் காட்டுவதை வேடிக்கைப் பார்க்கும் முகபாவத்தோடு ‘ஐயோ பாவம்டா நீ!’ என்று இளப்பமாக ஒரு பார்வையை அந்த நபரின் மேல் வீசிவிட்டு, அசையாமல் உட்கார்ந்து அசை போட்டுக் கொண்டிருக்கும். அந்த ‘வித்தைக் காட்டும்’ ஆள், ‘கொஞ்சம் அதிகபடியாகத் துள்ளுகிறானோ’ என்று அதற்குத் தோன்றினால், முன்னங் கால்களை தரையில் அழுத்தி, கோபமாய்ப் பார்த்தபடி பாய்ந்து விடுவேன் என்பதாக பயமுறுத்தும் அவ்வளவுதான், கம்பு சுழற்றியவர், எப்பேர்பட்டத் துணிச்சல்புலியாக இருந்தாலும், வீட்டுக்குள் ஓடி கதவை சாத்திக் கொள்வார். எல்லாருக்குமே தாட்டான்களைக் கண்டால் பயம்தான். தாட்டான் குரங்குகள் ஒரு கூட்டத்தில், நான்கோ, ஐந்தோ இருக்கும். இவை கொடுக்கும் தைரியத்தில்தான், மற்ற குரங்குகள் அப்படி ஒரு அட்டூழியத்தில் இறங்கும்.

இன்னும், அந்தக் கிராமத்தில் முக்கால் சதவீதம் வீடுகளில் ஓட்டுக் கூரைதான். குரங்குகள் ஓட்டைப் பிரிப்பதில் கைதேர்ந்தவை. அவை பிரிப்பதும், வீட்டுக்காரர்கள், புது ஓடு வாங்கிப் பூசுவதும் அந்த ஊரில் வாடிக்கையான ஒரு சமாச்சாரம்.

குரங்குகளை மையப்படுத்தி அங்கு, வீட்டுக்கு வீடு எப்படியும் ஒரு கதை இருக்கும். வெளியூரிலிருந்து கல்யாணமாகி ‘பூட்டுத்தாங்கி’க்கு வரும் மருமகள்கள் முதல்முறையாக குரங்குகளை அவ்வளவு குளோசப்பில் பார்த்ததும், அலறிக்கட்டுவதும், புகுந்தவீட்டார் அவர்களை சமாதானப்படுத்துவதும் காலங்காலமாய் தொடர்ந்து வருகிறது.

புது மாப்பிள்ளைகள், தங்கள் ‘வீரத்தைக்’ காட்ட இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்வார்கள். கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு, ‘ஏய்! ஊய்!’ என்று கத்தியபடி, கம்பு வீசி அவர்கள் குரங்குகளை விரட்டும் ‘அழகைக் கண்டு, புது மனைவிகள், பூரித்துப் போவார்கள்!

பள்ளிக்கூடம், இல்லாத நாட்களில், சிறுவர்களுக்கு, கொண்டாட்டம்தான். குரங்குகளோடு, குரங்குகளாக, ஐக்கியமாகி விடுவார்கள். கல்லெடுத்து எறிந்து, பதிலுக்குக் குரங்குகள் காட்டும் முகபாவத்தைப் பார்த்து ரசிப்பதும், கையில் தின்பண்டங்களை வைத்துக் கொண்டு, ‘இந்தா!அந்தா!’ என்று நீட்டி, போங்குக் காட்டுவதும் அவர்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. விளையாட்டு வினையான கதையும் நடந்திருக்கிறது.

ஒருமுறை, ஏட்டு ராமசுப்புவின் மகன் விநாயகம் இப்படித்தான், கையில் ஒரு கடலைமிட்டாய்ப் பாக்கெட்டை வைத்துக் கொண்டு, தன் வீட்டு மாடிப்படிக்கட்டில் உட்கார்ந்திருந்த சில குரங்குகளிடம் நீட்டி, நீட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அதில் ஒரு குரங்கு கடலைமிட்டாயைக் கவர்ந்து விடுவதில் குறியாக இருந்தது. விநாயகம் ஆட்டங் காட்டிக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்தக் குரங்கு, அவன்மேல் பாய்ந்து விட, அவன் பயந்து அலறி கையிலிருந்த பாக்கெட்டை தூர வீசிவிட்டான்.

அங்கிருந்த மற்றொரு குரங்கு, ‘சட்’டென்று அந்தப் பாக்கெட்டை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டது. காத்திருந்து ஏமாந்த ஆத்திரத்தில், அவன் மேலே பாய்ந்த அந்தக் குரங்கு, நொடிப்பொழுதில் விநாயகத்தின் வலது காதைக் கடித்துவிட்டு படிகளில் தாவி ஓடி மறைந்தது.

எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலைக்குலைந்த விநாயகம் உள்நாக்கு அதிர அலறினான். அரை மயக்கத்தில் கீழே விழுந்துவிட்ட அவனை, வீட்டிலுள்ளவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள். காதில் பெரிய கட்டோடு சாயங்காலம் வீடு திரும்பினான். அக்கம் பக்கத்தினர் வந்து, துக்கம் விசாரித்துப் போனார்கள்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து, பள்ளிக்கூடம் போனபோதுதான் விநாயகத்திற்கு, அந்தக் குரங்கு ஜென்மப் பகையானது. அவனுக்கு ஆகாத, வகுப்புப் பையன் ஒருத்தன்,

‘ஏண்டா விநாயகம்! உன் காதைப் போயி குரங்குக்கு திங்கக் குடுத்துறிக்கியே? வேற ஏதாவது முறுக்கு, கிறுக்கு குடுத்திருக்கலாம்ல?” என்று வேண்டுமென்றே சத்தமாகக் கேட்டான். அதுவும், மைதானத்தில் சின்ன வகுப்புப் பொடிப் பசங்களெல்லாம் இருக்கும் போது!. அதுகள் இந்த நகைச்சுவைக்கு வெகுவாக சிரித்துவிட, விநாயத்தின் மொத்த ஆத்திரமும் அந்தக் குரங்கின் மீது திரும்பியது. போலீஸ்காரர் மகன் என்று மிடுக்காக மற்ற பையன்கள் மத்தியில் சுற்றி வந்தத் தன்னை, இப்படி காதைக் கடித்து அவமானப்படுத்திய அந்தக் குரங்கை சும்மா விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டுத் திரிந்தான்.

சம்பவம் நடந்து நான்கு வருஷங்கள் ஆனபின்பும் அவனுடைய கோபம் கொஞ்சமும் குறையவில்லை. அது குறையாமல், கூடப் படிக்கும் மாடசாமி அவ்வப்போது திரி கிள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பான். கூடவே இந்த சந்தேகத்தையும் கேட்பான், ‘எல்லா குரங்கும் ஒன்னுப் போலத்தான் இருக்குது. மனுசன மாதிரி வேற வேற ஜாடையாவாடா இருக்குது? எப்படிடா அத அடையாளங் கண்டுப்பிடிப்ப?”.

தன் காதைக் கடித்த குரங்கு இன்னமும் இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. அப்படியே இருந்தாலும் அதை அடையாளங் கண்டுபிடிப்பது மாடசாமி சொல்ற மாதிரி கஷ்டமான விசயம்தான், என்று விநாயகத்திற்கும் தெரியும். ஆனாலும் அவன் பழியுணர்ச்சி மட்டும் எரிந்து கொண்டேயிருந்தது. செந்தில் கதையைக் கேட்டதும், குரங்கு தனக்கு செய்த, துரோகம் எவ்வளவோப் பரவாயில்லை என்று சமாதானப் பட்டுக்கொண்டான் விநாயகம்.

அதே பள்ளிக்கூடத்தில் படிக்கும், நான்காம் வகுப்புச் செந்தில், சாயங்காலம் நாலு மணிக்கு நண்பர்களோடு பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான். முன்னும் பின்னும் பெண் பிள்ளைகளும் பையன்களும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய், குரங்குகள் அலைந்து கொண்டிருந்தன. திடீரென ஒரு குரங்கு சாலையில் தாவி வந்தது. தலை நிறைய வாடிய மல்லிகைப் பூவோடு வந்துக் கொண்டிருந்த, செந்திலின் வகுப்பில் படிக்கும் வசந்தியின் அருகில் வந்தது. தலையில் தொங்கிக் கொண்டிருந்த பூச்சரத்தைப் பிடித்து இழுத்தது. மற்ற சிறுமிகள் அலறினார்கள். அது ஓடி விட்டது.

‘மல்லியப் பூவக் கூட அது திங்குமாம்டா!”

‘ஏன் இன்னிக்கு நம்ப வீடுகள்ல எதுவுஞ் சாப்பிட அகப்படலையோ?”

இப்படியாக செந்திலும் நண்பர்களும் பேசிக்கொண்டு வரும்போதுதான், அவன் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்த, ‘விரும்பத்தகாத சம்பவம்’ நடந்தது. எங்கிருந்தோ வந்தக் குட்டிக் குரங்கு ஒன்று, செந்திலின் பின்னால் வந்து அவன் சீருடை ட்ரவுசரை இழுத்தது. யார் என்று அவன் திரும்பிப் பார்க்கும் முன்பு மீண்டும் ஒருமுறை பலமாக இழுத்து விட்டது. போனவாரம் தான் கொக்கி பிய்ந்துப்போனது. அதை எப்படியோ அருணாக் கயிற்றில் நுழைத்து, மேல்சட்டையை இழுத்து விட்டு, ஒரு படியாக சமாளித்துப் போட்டுக் கொண்டு வந்திருந்தான். குரங்கு இழுத்த வேகத்தில், அது கீழே கழன்று விழ ஆரம்பித்தது. பதறியபடி, மேலே இழுத்துக் பிடித்துக் கொண்டான். ஆபத்தில் உதவுவதாக அவன் அருமை நண்பர்கள் அவனைச் சுற்றி வளைத்து மறைத்துக் கொண்டார்கள். கீழே குனிந்து கல் எடுத்து அந்தக் குரங்கை விரட்டி அடித்தார்கள்.

அவர்கள் பின்னால் நடந்து வந்துக் கொண்டிருந்த பெண் பிள்ளைகள் இந்தக் காட்சியைப் பார்த்து ‘களுக்’கென சிரித்த சத்தம் செந்திலின் காதில் இடியாய் இறங்கியது. தன்னை மானப்பங்கப் படுத்திய அந்தக் குரங்கைப், பிடித்து கன்னத்தில் நாலு அறை விட வேண்டும் போல் இருந்தது. கண்கள் முட்டியது. ‘என்ன செய்வது? நாளைக்கு பள்ளியில் இந்தப் பெண்கள் முகத்தில் எப்படி முழிப்பது? எல்லாம் இந்த அம்மாவால் வந்தது. ட்ரவுசர் பொத்தானைத் தைத்துக் தரும்படி நான்கைந்து நாட்களாக அவன் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். அவள் காதில் வாங்கவே இல்லை. இப்படி இந்தக் குரங்கு அவமானப் படுத்தி விட்டதே!‘, மனசுக் கலங்க ஓட்டமும் நடையுமாக வீடு போய்ச் சேர்ந்தான். ‘அந்த’ நிலைமையில் அவனைத் தனியாக விடக்கூடாது என்று பின்தொடர்ந்து வந்த நண்பர்கள் முருகனும், மூர்த்தியும் சமாதானப் படுத்தினார்கள்.

‘விடுடா! அந்தக் குரங்க, நல்ல அடையாளம் பாத்து வெச்சிருக்கோம்ல! கையில சிக்கட்டும், சட்டினி ஆக்கிறலாம்”

‘ஆமாடா! அதுக்கு ஒரு கை, கரண்டுல பட்டோ என்னவோ கருகிப்போன மாதிரி இருந்துச்சு அதனால அத சட்டுன்னு அடையாளங் கண்டுக்கலாம்!.”

என்ன சொன்னாலும் செந்திலின் மனம் அமைதியாகவில்லை. பொம்பளைப் பிள்ளைகள் மத்தியில் தன்னைக், கேவலப்படுத்திய அந்த ‘வில்லனை’ அடுத்த இரண்டு நாட்கள் பள்ளிக்கு லீவுப் போட்டுத் தேடிப்பார்த்தான். அது அகப்படவே இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை அவனும் அந்த விரல் தேய்ந்துப்போனக் குரங்கை விடுவதாக இல்லை. அதுவும் இவன் கண்ணில் படுவதாக இல்லை. விநாயகம், செந்தில் போலவே குரங்கினால் அவமானங்களைச் சந்தித்த இன்னும் சிலபேரும் அந்த ஊரில் உண்டு.

தீபாவளி சமயத்தில் குரங்குக் கூட்டம் வரும்போது ஊரே அல்லோலகல்லோலப்படும். ஆங்காங்கே, முறுக்கும், அதிரசமும் சுடும் மணம் மூக்கைத் துளைக்க, ‘என்ன அடி வாங்கினாலும் சரி, பலகாரங்களை எல்லாம் ஒரு பிடி பிடித்து விடவேண்டும்’ என்ற , முடிவோடு குரங்குகள் வீடுகளுக்குள் படை எடுக்கும்.

சிறுவர்கள் சரவெடி கொளுத்திப்போட்டு விரட்டிப் பார்ப்பார்கள். ஆரம்பத்தில் பயந்த குரங்குகள் பிறகு வந்த தீபாவளிக்கெல்லாம் தேறிவிட்டன. எதற்கும் அஞ்சாமல் எல்லோர் வீட்டுப் பலகாரத்தையும் ருசி பார்த்தன. பூட்டுத்தாங்கி மக்களின், தீராதத் தலைவலியாக இந்த குரங்குப்பிரச்சனை, உருவெடுத்தது. அதற்கு தீர்வு காணத்தான், இப்போது ஊர்ப் பெரியவர்கள், கலந்துப்பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். சிறுவர்களும் அவர்களுக்குத் தோன்றிய கோக்குமாக்கான சில வழிகளை சொன்னார்கள்.

‘இது எதுவும் வேலைக்கு ஆகாதப்பா! வனத் துறைலேர்ந்து ஆளுங்கள வரவைப்போம்”;. இறுதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு மாதம் இழுத்தடித்த வனத்துரையினரை, ஊர்க்காரர்கள் தங்கள் விடாத நச்சரிப்பின் விளைவாக வரவைத்து விட்டார்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை நாள் குறிக்கப்பட்டிருந்தது. அன்று காலையிலேயே, ஊர் பரபரப்பாகி விட்டது. வனத்துறை ஆட்கள் ஆங்காங்கே சிறுசிறு கூண்டு வண்டிகளை நிறுத்தி வைத்திருந்தார்கள். வண்டிகளுக்குள் பொரி உருண்டை, வாழைப்பழம், பூந்தி, போன்ற வகைவகையான தின்பண்டங்கள் கடை விரிக்கப்பட்டிருந்தன. எல்லாம் ஊர் மக்களிடம் வசூலித்த பணத்தில் வாங்கியதுதான். ஊரே ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்க, வழக்கம் போலப் பத்தரை மணியளவில் குரங்குகள் விஜயம் செய்தன. மக்கள், என்ன நடக்குமோ என்ற திக் திக் நினைப்பில் எதுவும் நடக்காதது போல், அமைதியாக குரங்குகளை விரட்டாமல் வீட்டிலிருந்தபடியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் வீதிகளில் நமுட்டுச் சிரிப்பும் மெல்லியப் பேசுமாகச் நின்று கொண்டிருந்தார்கள்.

முதலில் குட்டிக் குரங்குகள் சில வண்டிகளுக்குள் ஓடின. விதவிதமான தின்பண்டங்களை அவை அள்ளிஅடித்து தின்னும் அழகைப் பார்த்த சில பெரிய குரங்குகளும் கூண்டு வண்டிக்குள் நுழைந்தன. எல்லா குரங்குகளும் உள்ளே நுழைந்து பத்து நிமிடம் வரைக்கும் எதுவும், ஆபத்தாக நடக்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்ட மிச்சம்மீதி தாட்டாங் குரங்குகளும், வண்டிகளுக்குள் நுழைந்து சாப்பிட ஆரம்பித்தன. அடுத்த அரைமணி நேரத்திற்கு எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்ட, வனத்துறை ஆட்கள் உணவின் சுவையில் குரங்குகள் மூழ்கியிருந்த நேரமாகப் பார்த்து கூண்டு வண்டிகளின் மேலிருந்த கதவுகளில், கட்டியிருந்த கயிறுகளை சற்றுத் தள்ளியிருந்து இழுத்து விட்டார்கள். ஆங்காங்கே ஒவ்வொரு வண்டியாக இப்படி மூடும் சத்தம் கேட்டது.

நிலைமையின் விபரீதம் உணர்ந்த குரங்குகள் தின்பதை விட்டுவிட்டு, கூண்டுகளின் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ‘கீரீச்; கீரீச’; என்று கத்த ஆரம்பித்தன. எங்காவது தப்பிக்க வழி இருக்கிறதா என்று அங்குமிங்கும் அலைபாய்ந்தன. எதற்கும் அசராத தாட்டான்கள்கூட இந்த எதிர்பாராத அசம்பாவிதத்தால் பரிதாபமாக ஆகிவிட்டன. கதவுகள் மூடிக் கொண்டதை உறுதிபடுத்தியதும் மக்கள் ஒவ்வொரு வண்டியின்; முன்பும் கூட்டம் கூடத் தொடங்கினார்கள்.

‘எல்லாத்தையும் பிடிச்சாச்சா?”

‘அது எப்படிங்க? ஒன்னு ரெண்டு எங்கயாச்சும் அகப்படாம, ஓடி இருக்கத்தான் செய்யும். ஆனாலும் முக்காவாசியப் பிடிச்சிட்டோம்னு நினைக்கிறேன்? மொத்தம் எத்தனக் குரங்குங்க, ஊருக்குள்ள வரும் தெரியுங்களா?” ஒரு வனத்துறை ஆள் கேட்டார்.

‘என்ன சார் நீங்க? அதுகள எண்ணியாப் பாக்க முடியும்? ஒரு நாப்பது, ஐம்பது இருக்கும்”.

‘இப்ப இந்த ஆறு வண்டியிலயும் சேர்த்து, முப்பத்தேழு குரங்கு மாட்டியிருக்குது. அப்படின்னா ஒன்னு ரெண்டு தான் தப்பிச்சிருக்கும்”.

‘அது பரவாயில்ல சார்! தன்னோடக் கூட்டத்தக் காணோம்னா, அதுங்களும் எங்கயாச்சும் ஓடிரும்”.

சக்கரங்கள் பொருத்தப்பட்ட அந்த கூண்டுவண்டிகளை தள்ளியபடியே வீதிவீதியாக வந்தார்கள். ஒவ்வொரு வண்டிக்குப் பின்னாலும் இளவட்டங்கள் ஊர்வலம் போல் பின்தொடர்ந்தார்கள். வீடுகளில் யாருமே இல்லை. எல்லோரும் குரங்குகளை வழியனுப்ப வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் ஒரே ராகமாக, ‘குரங்குத் தொல்ல, இனிமே இல்ல!” என்று பாடிக் கொண்டே வண்டிகளின் பின் ஓடினார்கள்.

உள்ளே மாட்டிக்கொண்ட குரங்குகள் இப்போது அமைதியாகி விட்டிருந்தன. இனம்புரியாத கலவரத்தோடு, பரிதாபமாக பார்த்தப்படி குரங்குகள் போவதை பார்த்த ஊர் மக்கள், குறிப்பாக பெண்கள் மனதில் ‘குரங்குகள் தொல்லையிலிருந்து இனி விடுதலை’, என்ற நிம்மதி ஒரு பக்கமும், கடந்த பதினைந்து, இருபது வருஷங்களாக தினந்தோறும் தங்கள் வீடுகளுக்கு வருகைப்புரிந்த ‘விருந்தாளிகளை’ இனிமேல் பார்க்க முடியாதே என்ற ஆதங்கம் ஒரு பக்கமுமாக எண்ணங்கள் அலையடிப்பதை உணர்ச்சிமயமாக காணப்பட்ட அவர்களின் முகங்கள் பிரதிபலித்தன.

தன் காதைக் கடித்த, குரங்கை இப்போதாவது கண்டுபிடித்துவிட முடியுமா என்று விநாயகமும், தன்னை தரக்குறைவாக (!) நடத்திய அந்த கருப்புக்கை குரங்கை எப்படியும் இன்று கண்டு பிடித்து கையில் தயாராக வைத்திருக்கும் அரைச் செங்கலை அதன் மண்டையில் ‘நச’;சென்று போட்டுவிட வேண்டும், என்று செந்திலும் மிகுந்த முனைப்போடு, ஒவ்வொரு கூண்டு வண்டியாக ஆராய்ந்தபடி ஓடிக் கொண்டிருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *