அம்மையப்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2021
பார்வையிட்டோர்: 3,775 
 

அம்மா இட்லிஎடுப்பதைப்பார்க்க எனக்குப்பிடிக்கும். இட்லிக்குட்டுவம் ஒருமாதிரி விம்மிப் பொருமி பெருமூச்சுவிடுவதுபோலிருக்கும். செம்பிப்பசு பிரசவத்துக்கு நின்றபோது இப்படித்தான் தெரிந்தது. அதன் வைக்கோல்நிறம் நன்றாக சிவந்துவிட்டதுபோல. அதன் வயிறோ விலாவோ வெடித்துத் திறந்துவிடும் என்பதுபோல. அதன் செம்புல்சருமம் மீதிருந்து ஆவி கிளம்பியது. தலையைத் தாழ்த்தி அது பெருமூச்சுவிட்டது. காலின் குளம்பால் தரையை தட் தட் என்று அடித்தது. சற்றுநேரத்தில் சூடான வெந்நீர் அதன் பின்பக்கத்தைத் திறந்துகொண்டு பீரிட்டது. மெல்லிய படலத்தால் சுற்றப்பட்ட வெள்ளைநிறமான கன்றுக்குட்டி உள்ளிருந்து சலவைக்காரியின் மூட்டை போலப் பிதுங்கி வெளிவந்தது.

அம்மா இட்லிக்குட்டுவத்தின் மூடி மேலே இருந்த கைப்பிடியைப் பிடித்துத் தூக்கியபோது ஆவி பொங்கி விறகடுப்பு மேலே உத்தரங்களில் அமர்ந்திருந்த கருப்பட்டிப்பத்தாயத்தை சூழ்ந்தது. நான்கு இட்லித்தட்டுகள். நான்கு குட்டிகள். தட்டுகளைக் கவிழ்த்து அந்த வெம்மையான துணிப்படலத்தை மெல்ல உரித்து எடுத்தபோது ஒவ்வொன்றும் ஆறு குட்டிகள். குட்டிகளல்ல, ஆறு மென்மையான வெண்ணிறமான கோழிக்குஞ்சுகள். முட்டை ஓட்டை உடைத்து அப்போதுதான் வெளிவந்தவை.

அதில் ஒன்றில் வெந்துவிட்டதா என்று பார்க்க அம்மாவின் கை அழுந்திய பள்ளம் இருக்கும். அது என்னுடைய இட்லி. ஆதை நான் சின்னவயதில் இருந்தே அம்மையப்பம் என்று சொல்லி விசேஷ சலுகையாகத் தின்று வந்திருக்கிறேன்.அந்த இட்லியைப் பிறர் தொடுவதுகூட எனக்கிழைக்கப்படும் மாபெரும் அநீதியாகவே எடுத்துக்கொள்வேன். அம்மா அந்தக் கைத்தடம் பதிந்த இட்லியை எடுத்து ஒரு அலுமினியத்தட்டில் போட்டு முந்தையநாள் மிஞ்சிய மீன்குழம்பில் கொஞ்சம் அள்ளி ஊற்றினாள். ‘குழிலே குழிலே’ என்று நான் அடம்பிடித்தேன். துளி சிந்தாமல் அந்தக்குழிக்குள் மீன்குழம்பு விடப்படவேண்டும். அதைப் பக்குவமாக எடுத்துக்கொண்டு நடந்து வெளித்திண்ணைக்கு வந்தேன்.

வெளித்திண்ணையில் வாழைப்பூ என்று என்னால் பெயரிடப்பட்ட சிவப்புக்கோழி என்னைக் காத்து நின்றிருந்தது. கீழ்த்தாடை துருத்திபோல அசைய கொண்டை சிலும்ப அது வெடுக் வெடுக்கென்று தலைதிருப்பி என்னைப் பார்த்தது. அலகு சற்றே திறந்து உள்ளே சிறிய நாக்கு அசைவது தெரிந்தது. நான் ஒட்டுத்திண்ணையில் அமர்ந்துகொண்டேன். மேலாங்கோட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடனுக்காக மொட்டையிடப்படும் நோக்குடன் ஒருவருடமாக வளர்ந்து வந்து தோளிலும் மார்பிலுமாகக் கிடந்த என்னுடைய கூந்தலில் அம்மா கட்டியிருந்த ரிப்பனைப் பிய்த்து வீசிவிட்டு குந்தி அமர்ந்து இட்லியை மெதுவாகப்பிய்த்து சாப்பிட ஆரம்பித்தேன். கோழிக்கு அவ்வப்போது சற்று பிய்த்து வீசினேன். வாரியல்தடங்கள் வளையம்வளையமாகப் படிந்த மணல்விரிந்த முற்றத்த்தில் நெடுந்தொலைவுக்கு அதைத் தூக்கி வீசினேன். கோழி சற்றே இறக்கையை விரித்து எம்பிப்பறந்துபோய் அதைக் கொத்தி , தலையைத் தூக்கி அண்ணாந்து அவ் அவ் அவ் என்று விழுங்கியது. அதன் தூவியடர்ந்த மெல்லிய கழுத்துவழியாக இட்லி உள்ளே செல்வதைக் காணமுடிந்தது.

வீட்டின் வலப்பக்கம் தொழுவத்தில் குட்டப்பன் ஆவேசமாகக் குரைத்தான். பெரிய செம்புக்குட்டுவத்தில் செம்பு அகப்பையால் அடிப்பதுபோன்ற ஒலி அந்தக் குரைப்புக்கு. அப்பா ஆபீஸ் கிளம்பும் நேரம். அப்போது அவரது அறைவாசலில் கல்படிகளில் குட்டப்பன் வாலை நீட்டி குந்தி அமர்ந்திருப்பான். வாயைச்சுற்றும் ஈக்களை அவ்வப்போது மூக்கைச்சுழற்றிக் கவ்வமுயல்வது, காலைமாற்றிவைத்து சப்புக்கொட்டுவது, தொலைதூர ஒலிகளுக்குக் காதுகளை மடிப்பது தவிர வேறு அசைவுகள் அந்நேரம் அவனில் இருக்காது. அதைமீறித் தொழுவத்துக்குச் சென்றிருக்கிறான் என்றால் யாரோ விரும்பத்தகாதவர் வந்திருக்கிறார் என்றுதான் அர்த்தம். யார்? அப்பாவுக்கு நஸ்யசூரணம் கொண்டுவந்து கொடுக்கும் அப்பு பணிக்கரா? இலைக்காரி நாணம்மையா? இல்லை தலையாட்டிமாடுடன் பண்டாரமா? குரங்குடன் குறவனேதானா?

நான் இட்லித்தட்டை நாக்கால் ஒருமுறை முழுமையாக நக்கி அதை அங்கேயே போட்டுவிட்டு தோளில் சரிந்த கால்சட்டையின் நாடாவை எடுத்து மேலே விட்டுக்கொண்டு முற்றத்தில் குதித்து தொழுத்துப்பக்கமாக சென்றேன். குட்டப்பன் குரைப்புடன் கொட்டாங்கச்சியைத் தரையில் உரசினாற் போன்ற உறுமலையும் சேர்த்துக்கொண்டிருந்தான். நான் அங்கே சென்றதும் என்னைநோக்கி ஓடிவந்து வாலை இருமுறை வீசிவிட்டு திரும்பிக் குரைத்தான். குட்டிச்சுவருக்கு அப்பால் கிறுக்கனாசாரி குந்தி அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

கிறுக்கனாசாரி என்னைக் கண்டதும் சிவந்த கூழாங்கற்கள் போன்ற பற்களைக் காட்டி சிரித்து ‘ஆகா…கொச்சேமான் மீங்கறியில்லா தின்னிருக்கு…ஆசாரிக்கு உண்டா மீனும்சோறும்?’ என்றார். நான் இடுப்பை நெளித்துத் தலையை ஆட்டினேன். கையில் எஞ்சிய மீன்கறி வாசனையை நக்கிக்கொண்டேன். கிறுக்கனாசாரிக்கு நல்ல கறுத்த சுருண்ட கூந்தல். அதைக் குடுமியாக உருட்டிப் பின்மண்டையில் கட்டிவைத்திருந்தார். அவருடைய மீசையும் தாடியும் கரிய குருவிக்கூடு போலிருந்தன. அவற்றுக்குள் வெற்றிலைச்சிவப்பேறிய உதடுகள். மூக்கில் மூக்குத்தி போட்ட துளை. நெற்றிப்பொட்டாக பச்சைகுத்தப்பட்ட நாகபடம். மெலிந்த தோள்களிலும் முழங்கைகளிலும் இலைகளும் பூக்களும் பாம்புகளும் பச்சைகுத்தப்பட்டிருந்தன. முன்பு கடுக்கன் போட்டிருந்த காதுத் துளைகளில் இரு அரளிமலர்களை செருகி வைத்திருந்தார். காலருகே ஒரு தோல்பையில் அவரது பணிச்சாமான்கள். நீளமான முழக்கோல்.

நான் அவரை மேலும் நெருங்கிக் கூர்ந்து பார்த்தேன். ஆசாரி காலையில் கோயிலுக்குப் போயிருந்தார். மெல்லிய களப குங்கும மணம் அடித்தது. ஆனால் நெற்றியில் திலகம் இல்லை. ஆசாரி என்னைப்பார்த்து ‘அப்பா உண்டுமா உள்ள?’ என்றார்.

நான் குட்டப்பனைச் சுட்டிக்காட்டி ‘பட்டி கடிக்கும்….இது கடிக்குத பட்டியாக்கும்’ என்றேன்.

ஆசாரி சிரித்து ‘ஆசாரிமாரை பட்டி கடிக்காது கொச்சேமான். அதுக்கில்லா இது இருக்கது?’ என்று முழக்கோலைத் தூக்கிக் காட்டினார். ‘மாட்டுக்குக் கொம்பும் பிச்சக்காரனுக்குக் கம்பும்னாக்கும் சொல்லு. …’

அப்பா வெள்ளைச்சட்டையின் கைகளை மடித்து மேலேற்றியபடி வெளியே வந்தார். நெற்றியில் அழிந்த மேகத்தீற்றல்போல திருநீறு. ‘என்னடே?’ என்றார்.

ஆசாரி ‘கண்டுகிட்டு போலாம்னாக்கும்…’ என்று சொன்னபடி எழுந்தார்.

குட்டப்பன் பாய்ந்துசென்று அப்பாவின் முன்னால் நின்று காதுகளைப் பின்னால் மடித்து வாலைச்சுழற்றிப் புட்டத்தைக் குழைத்து முன்காலைத்தூக்கி வைத்து மெல்லிய நடனமொன்றை ஆடினான். ’கண்டாச்சுல்லா…போ…உனக்ககிட்ட இங்க வரப்பிடாதுன்னுல்லா சொன்னேன்?’ என்றார் அப்பா

ஆசாரி “அப்ப்டி சொல்லப்பிடாது…பாவங்களாக்கும்…இவ்விடத்துக் கருணையாலே ஒருவாய் கஞ்சி குடிக்கப்பட்ட சனமாக்கும்’ என்றார்.

‘டேய், உனக்க வாய் தேனாக்கும்ணுட்டு எனக்குத்தெரியும். ஆனால் உனக்க கையிருப்பு மோசம்லா? நாற வெள்ளத்தைக் குடிச்சிட்டு அண்ணைக்கு ஜங்ஷனிலே நிண்ணு என்னைப்பாத்து நீ என்னடே சொன்னே?’

ஆசாரி பம்மி ‘அது நான் சொன்னதில்லை ஏமானே…நாறவெள்ளத்துக்க ஊற்றம் அதாக்கும்…தாயளி இந்த எறும்பன்தாமஸு அதிலே ஊமத்தைவெதையாக்கும் அரைச்சுக் கலக்குதான். குடிச்சாப்பின்னே எங்க போறது எங்க நிக்கப்பட்டது ஒண்ணும் பிடியில்ல’ என்றார்.

‘டேய் அதெப்பிடிடே உனக்க உள்ளுக்குள்ள இல்லாததாடே வெளிய வருது?’ என்றார் அப்பா.

’எல்லாம் உள்ளுக்குள்ள இருக்கப்பட்டதுதான். மனுஷனுக்குள்ள ஏளு பிசாசுண்டுண்ணுல்லா கதை?’ என்றார் ஆசாரி.

அப்பா சட்டென்று சிரித்துவிட்டார் ‘அதுசெரி…அப்பம் மிச்சம் ஆறையும் காட்டவாக்கும் வந்திருக்கே’

ஆசாரி ‘அதில ஒண்ணு இப்பம் இந்நா வந்து நிக்குது…அது பசியாக்கும்…இனியிந்த வீட்டுக்கு முன்னாலயிருந்து கும்பித்தீயோட திரும்பிப் போறதுக்காக்கும் சொல்லுகதுண்ணா போறேன்…போட்டு…அப்டியும் ஒரு காலம் வந்தாச்சுண்ணு நெனைச்சுட்டு போறேன்’ என்றார்

அப்பா தணிந்தார் ‘அதுக்குச் சொல்லல்லடே…போ, போயி என்ன உண்டுமோ அதை வேங்கித் தின்னுட்டு போ’ .

ஆசாரி ‘அதெப்பிடி. சும்மா குடுத்தா திங்கியதுக்கு நான் என்ன எரப்பாளியா ? கலையுள்ள ஆசாரியில்லா?’

அப்பா எரிச்சலுடன் ‘டேய் நீ கிறுக்கன். உனக்கு என்னடே சோலி தாறது?’

‘எனக்குக் கிறுக்காக்கும். ஆனா எனக்க உளியும்கொட்டுவடியும் கலையுள்ளதாக்கும்’

‘உனக்க உளி மசுத்திச்சு…டே, அண்டுகோட்டு வீட்டிலே நீ என்னலே பணிசெய்தே? சொல்லு’

‘அதிப்பம்…’

‘என்ன இப்பம்? நீ செய்த பணி என்ன, அதைச்சொல்லு…’

ஆசாரி வேறுபக்கம் பார்த்து ‘போறவளியிலே விளிச்சு ஒரு சோலியச் சொன்னாவ’

’சும்மா சொல்லல்ல…வயறுநெறைய உனக்குப் பழங்கஞ்சியும் சக்கைப்புளிக்கறியும் குடுத்தபிறவு ஒரு வேலை சொன்னாங்க. ஒரு நெலைக்கண்ணாடிக்க சட்டத்துக்குள்ள கண்ணாடி ஆடிட்டிருக்கு .சட்டத்தை ஒண்ணு இறுக்கிக்குடு ஆசாரீண்ணு சொன்னாங்க…ஒரு பதினஞ்சு மினிட்டு சோலி. நீ என்னடே செய்தே? சொல்லு’

ஆசாரி ஒன்று சொல்லாமல் மெலிதாக நெளிந்தார்.

’நீ என்னடே செய்தே? சொல்லுடே’.

‘எளகினா ஆப்பு வைக்கியதாக்கும் ரீதி…’

’அடிச்செருப்பாலே…டே, நீ சட்டத்துக்கும் கண்ணாடிக்கும் நடுவிலே ஒரு ஆப்ப அடிச்சு கேற்றினே. கண்ணாடி சில்லுண்ணு உடைஞ்சு போச்சு. அந்தால உளியையும் கொட்டுவடியையும் எடுத்துக்கிட்டு கடந்துபோட்டே… அந்தக்கிளவி இப்பமும் கிடந்து கூப்பாடு போடுதா. அவளுக்க கெட்டினநாயரு அந்தக்காலத்திலே பர்மாவிலே இருந்து கொண்டுவந்த பெல்ஜியம்கண்ணாடியாக்கும்.. இப்பம் நினைச்சா வாங்கமுடியுமா?’

’அது பெல்ஜியம் கண்ணாடி இல்ல. டூப்பு. பெல்ஜியம்கண்ணாடி உடையாது’

‘உனக்ககிட்ட பேசவந்த என்னைய செருப்பாலே அடிக்கணும்…நீ ஒரு சோலியும் செய்யாண்டாம்…இங்க எதிலயாவது நீ கைய வச்சே அந்தக் கைய ஆளவச்சு அடிச்சு முறிப்பேன்’

‘கோளிக்கூட்டுக்குக் கதவு உடைஞ்சிருக்குண்ணு சொன்னாவ’

’நீ சரியாக்கினபிறவு கோளியெல்லாம் பறந்து போறதுக்கா? நாறப்பயலே நீ அதிலே கைய வைக்கப்பிடாது. நீ செய்துகுடுத்த மணையிலே இருந்தா அங்கயும் இங்கயும் சாமியாடவேண்டியிருக்குண்ணு அப்ப்டியே தூக்கி அடுப்பில வச்சாச்சு…நாட்டில உள்ள நல்ல மரத்தையெல்லாம் வெறகடுப்புக்குக் கொண்டுபோறதுதானேடே உனக்க ஆசாரிப்பணி? மயிராண்டி, உனக்க சுண்ணிக்க கனமில்லாதபயக்கள்லாம் இண்ணைக்கு கொலேரம் நாறோயில்ணு போயி செத்தி அடுக்கி கைநிறைய காசுமாட்டு வாறான். சிவாஜிகணேசன் மாதிரி நெத்தியிலே முடியச் சுருட்டிவிட்டுக்கிட்டு சில்க்கு சட்டையும் பௌடறும் போட்டு விசிலும் பாட்டுமாட்டு அலையுதான்…நீ நாறவெள்ளம் குடிச்சுட்டு நாட்ட நாறடிக்குதே…’

‘இப்பம் தொளிலறியாதவனுக்குல்லா காலம்? கலிகாலமாக்குமே’ என்றார் ஆசாரி

அப்பா தளர்ந்துபோனார். ‘வேணுமானா போயி வல்லதும் வாங்கித் தின்னுட்டுப்போ…சோலி மயிருண்ணு உளிய வெளியிலே எடுத்தே, உனக்குக் காலம் முடிஞ்சாச்சுண்ணாக்கும் அர்த்தம்…’ உள்ளே சென்று பையையும் குடையையும் எடுத்துக்கொண்டு வெளிவந்தார். டயர்செருப்பைப் போடும்போது குட்டப்பன் அப்பாவின் கால்களை முகர்ந்தான்.

‘சும்மா கூலி வாங்குதது ஆசாரிதர்மமில்லை’

‘உனக்க கிட்ட பேச எனக்கு நேரமில்ல’

அப்பா பையுடன் இறங்கி நடந்து ஆற்றுக்குச் செல்லும் பாதையில் இறங்கினார். குட்டப்பன் அவருக்கு முன்னால் ஓடினான். ஆசாரி என்னைப்பார்த்துக் கண்ணடித்து ‘கொச்சேமான் அம்மைக்கிட்ட சொல்லணும். கிறுக்கனாசாரி வந்திட்டுண்டுண்ணு…’

நான் உள்ளே சென்றேன். அம்மா பாத்திரங்களை அள்ளிக் கொல்லைப்பக்கம் போட்டுக்கொண்டிருந்தாள். கொல்லைப்பக்கம் தங்கம்மை பாத்திரம்கழுவ உட்கார்வதற்கு முன்பாக வெற்றிலை போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன்னால் ஏழெட்டு காகங்கள் அமந்திருந்தன. வாழைப்பூ வெளியேபோடப்பட்ட சட்டிகளில் ஒன்றுக்குள் தலை நீட்டிக் கொத்திக்கொண்டிருந்தது.

‘என்னடா ?’ என்றாள் அம்மா

‘கிறுக்கனாசாரி வந்திருக்காரு…மீன்குளம்பும் சோறும் கேக்காரு’

தங்கம்மா “ஆமா, கேப்பான். அவனுக்க அம்மைக்க ஆமக்கன்லா இங்க மீங்கறி காய்ச்சி வச்சிருக்கு…கொச்சேமான் அவன போவச்சொல்லணும்…’ என்றாள்

‘பாவம், குடலுகாய்ஞ்சு வந்திருப்பான்’ என்றாள் அம்மா

‘குடலு காயுதது எரிப்பன் குடிக்கதனாலயாக்கும்…இந்நேற்று ஆற்றுங்கரையிலே கோமணத்தையும் அவுத்துப்போட்டுட்டு நிண்ணு ஆடுதான்…என்னைக் கண்டப்பம் ஒரு வேளம் சொன்னான்…உம்மாணை அம்மிணியே அவனுக்க வெண்டைக்காய அப்பமே நான் நறுக்கியிருப்பேன். பின்ன ஆசாரியில்லா, வித்தைக்காரனுல்லாண்ணு நானும் ஒண்ணு பொறுத்தேன்…’

அம்மா என்னிடம் ‘அவரை இந்தால வரச்சொல்லு…இட்டிலி தின்னுட்டுப் போலாம்னு சொல்லு’ என்றாள்

‘அம்மிணியாக்கும் இவனுகளக் கெடுக்கது’ என்றபடி தங்கம்மா எழுந்தாள். சட்டிவிளிம்பில் ஏறிய வாழைப்பூ அதைக் கவிழ்த்து சமநிலை இழந்து சிறகடித்துப் பின்னால் பாய்ந்தது. காகங்கள் சிறகடித்து காற்றில் ஏறிக்கொண்டன.

நான் கிறுக்கனாசாரியிடம் ‘இட்டிலி தின்ன அம்மை வரச்சொன்னா’ என்றேன்

ஆசாரி ‘மீங்கறி உண்டுமா? புளிக்கறியானா நான் சாபம் போடுவேன் எண்ணு அம்மைக்கிட்ட கொச்சேமான் சொல்லணும்…’ என்றபடி பணிப்பையையும் முழக்கோலையும் எடுத்துக்கொண்டு வந்தார்.

ஆசாரி கைகழுவி வந்து அமர்ந்தார்.அம்மா ஆசாரிக்குத் தலைவாழை இலை போட்டு அதில் ஏழெட்டு இட்லியைப் போட்டு மீன்கறி விட்டாள். ’சாளையாக்குமா அம்மிணி?’ என்றார் ஆசாரி

‘ஏன் வேற மீனானா திங்க மாட்டீரோ? வே , உன்ன லெச்சணத்துக்குத் தலைவாழ எல வேணுமா?’ என்றாள் தங்கம்மை

‘நான் ஆசாரியாக்கும்…சரஸ்வதிய கையிலே வைச்சிருக்கப்பட்டவன். இன்னொருத்தன் தின்ன எச்சில் தட்டிலே நான் கை வைக்கப்படாது…’ என்றார் ஆசாரி

‘உம்ம கையிலே சரசதி இருக்காளாக்கும்…நாறவெள்ள நாத்ததிலே அவ ஓடிப்போயி பல வருசமாச்சுல்லா’

ஆசாரி முழுக்கவனத்துடன் இட்லியை சாப்பிட ஆரம்பித்தார். நடுவே வாய் நிறைய இட்லியுடன் ஏறிட்டுப் பார்த்து என்னிடம் ‘கொச்சேமான் இட்டிலி தின்னாச்சுல்லா?’ என்றார்.

‘நான் அம்மையப்பம் தின்னேன்’

‘அது என்னது?’

‘இப்பிடி இருக்குமே…அம்மைக்க கை …’

அம்மா சிரித்தபடி ‘வெந்தாச்சாண்ணு குத்திப்பாக்குத இட்டிலியிலே அவனுக்கு அப்பிடி ஒரு இஷ்டம்…அது கிட்டல்லண்ணா இங்க அடிபிடிதான்…’

‘பின்னே? அம்மைக்க விரலுள்ள இட்டிலியில்லா? அம்மிணி, இட்டிலிகளிலே அதுக்கு மட்டுமில்லா அதைப் படைச்ச மகாசக்திக்க அனுக்கிரகம் கிட்டியிருக்கு’ என்றார் ஆசாரி ‘இம்பிடு மீனு…’

சாப்பிட்டு முடித்து ஏப்பத்துடன் எழுந்து இலையை சுருட்டிக்கொண்டு மாமரத்தடிக்குச் சென்றார் ஆசாரி . கைகழுவியபின் மாமரத்தைப்பார்த்து ‘உறப்புள்ள தடியாக்கும்….’

‘அது அங்க நிக்கட்டும்வே’ என்றாள் தங்கம்மா

‘நீ என்னட்டி கண்டே தங்கம்மை ,பொன்னம்மை ,செல்லம்மை… ஏட்டி எல்லாக் கல்லுக்குள்ளயும் சாமியுண்டு. கலையுள்ள கை தொட்டா படுதாவ நீக்கி சாமி வெளிய வரும்…எல்லா மரத்திலயும் வாஸ்துலச்சுமி உண்டு….விஸ்வகர்மனுக்க கை படணும்….’

தங்கம்மை பிரமித்து வாய் திறந்து பார்த்தாள்.

‘அம்மிணியே…கூலி கிட்டியாச்சு. சோலி குடுங்க’

‘அய்யோ அம்மிணி…வேண்டாம்…இவன் கைபட்டா மரம் பாழாப்போவும்’ என்றாள் தங்கம்மா

’செத்தி எடுத்துப்போடுவேன் ரெண்டெண்ணத்தையும் ‘ என்று ஆசாரி உளியைக் காட்டினார். உள்ளே பார்த்து ‘அம்மிணி…என்னமாம் சோலி குடுங்கம்மிணி…செய்துட்டுப் போறேன்’

‘அம்மிணி வேண்டாம்…நான் சொல்லியாச்சு’

‘கோளிக்கூடு கதவு உடைஞ்சுபோட்டுல்லா?’

‘அதை நாகப்பனாசாரி செரியாக்கியாச்சு’

‘அவன் ஆரு? ஆசாரிண்ணா தொளிலறியணும்…அவன் மரங்கொத்தியாக்குமே…’

அம்மா உள்ளே இருந்து வந்து ‘ஓண்ணும் வேண்டாம் ஆசாரியே நீ போ’ என்றாள்

‘அப்பிடிச் சொல்லப்பிடாது…அனுக்ரஹிக்கணும்’

‘உனக்கு ஒரு சோலியும் குடுக்கப்பிடாதுண்ணாக்கும் அவ்வோப்பா கண்டிசனாட்டு சொல்லியிருக்காரு’

அது பழைய ஆசாரி…ந்தா இப்பம் திருந்தியாச்சு. குடிய விட்டாச்சு அம்மிணி… இனி அதைக் கையாலயும் தொடுகதில்ல… கண்ணாணை, உளியாணை… விட்டாச்சு…இப்பம் ஆசாரிக்குக் கையிலே கலை உண்டு…’

அம்மா பலவீனமாக ‘வேண்டாம் ஆசாரியே’ என்றாள்

ஆசாரி சுற்றுமுற்றும் பார்த்து ‘ஆ…அந்நா கிடக்குல்லா முளை…அது என்னத்துக்கு?’ என்றார்

‘அது ஏணி கூட்டுகதுக்காக்கும்…’

‘என்னம்மிணி…ஒரு ஏணி கூட்டத்தெரியாதா ஏழுகலை கண்ட மூத்தாசாரிக்கு…இங்க எடுங்க…நான் கூட்டித்தாறேன். ஒரு மணிநேரத்துக்க சோலி’

‘இல்ல ஆசாரியே…வேண்டாம்’

‘அம்மிணி சும்மா இருங்க….நான் சோலிய முடிக்குதேன்’

அம்மா பரிதவித்து நிற்க ஆசாரி இரு மூங்கில்களையும் கொண்டு சென்று தோட்டத்து நிழலுக்குள் போட்டார். பூவரசுத்தடி ஒன்று கிடந்தது. அதைக் கொண்டு சென்று அருகே போட்டு பணிப்பையைப் பிரித்து உளிகள் கொட்டுவடிகள் ரம்பம் எல்லாவற்றையும் எடுத்துப் பரப்பினார். ‘அம்மிணியே ஒம்பது பழுதுதானா?’

அம்மா ’வேண்டாம் ஆசாரியே’ என்றாள் தழுதழுத்த குரலில்.

‘இந்த நீளத்துக்கு ஒம்பது பழுதுவேணும்…நான் பாத்துக்கிடுதேன்…’ ஆசாரி வேட்டியைத் தார்ப்பாய்ச்சினார். பூவரசு மரத்தை எடுத்து சட் சட்டென்று வெட்டி ஒன்பது துண்டுகளாக ஆக்கினார். ‘ கொச்சேமான் இம்பிடு குடிவெள்ளம் கொண்டுவரணும்…கண்ணிமாங்காயோ நெல்லிக்காயோ உண்டெங்கி அதும் வரட்டு’

தண்ணீர் குடித்தபின் ஒன்பது துண்டுகளையும் செதுக்கினார். அவற்றை அப்படியே போட்டுவிட்டு வாழைநிழலில் கால்நீட்டி அமர்ந்துகொண்டு ‘கொச்சேமான் உள்ள போய் வெத்தில கொண்டுட்டு வரணும்…’ என்றபின் ரகசியமாக ’அப்பா பிடிக்கப்பட்ட சுருட்டு உண்டெங்கி ஒரு நாலு சுருட்டும் எடுக்கணும்…அப்பனுக்குக் கணக்கெல்லாம் இருக்காது’

நான் வெற்றிலைச்செல்லத்தையே கொண்டுவந்தேன். அதற்குள் சுருட்டுக்கட்டு இருந்தது. ஐந்து சுருட்டுகளையும் எடுத்து மடியில் செருகியபின் ஆசாரி வெற்றிலை போட்டுக்கொண்டார். அதை துப்பியபின் ஒரு சுருட்டைப் பாதி வரை இழுத்து விட்டார். புகையைப்பார்த்தபடி ‘உள்ள இருக்கப்பட்ட நெனைப்புகளாக்கும் கொச்சேமான் இந்தா புகையா போறது…சுருட்டுபிடிச்சா உள்ளுக்குள்ள ஒண்ணுமில்லாம ஆயிடும்’

’உள்ளுக்குள்ள என்ன இருக்கு?’ என்றேன்

‘ஆசாரிக்க உள்ளுக்கு கவலையில்லா?’

‘என்ன கவலை?’

‘ஏமான், கலையிருக்கப்பட்ட எடத்திலே கவலையும் உண்டுல்லா? சீதேவி இருந்தா அங்க அவ அக்கா மூதேவியும் வந்திருப்பா…ரெண்டாளுக்கும் அப்டி ஒரு சொருமிப்பாக்கும்’

‘என்ன கவலை ஆசாரி?’

‘எனக்க கெட்டினவ விட்டுட்டு போனாள்லா? பாவி மட்ட எட்டுமாசம்கூட சேந்து வாளல்ல…காலில விளுந்து விளிச்சேன். வரமாட்டேன் போடான்னு சொல்லிப்போட்டா…பிறவு அவளுக்கு மாடன் ஆசாரிக்க கூட தொடுப்பாச்சு…நானும் விட்டுப்போட்டேன். இந்நா கெடந்து சீரளியுதேன்’

மூங்கில்களில் ஒன்பது ஒன்பது ஓட்டைகளையும் போட்டபின் மீண்டும் வந்து அமர்ந்துகொண்டார். மீண்டும் வெற்றிலை, சுருட்டு.

நான் ‘ஆசாரிச்சி இப்பம் இருக்காளா?’ என்றேன்

‘இருக்கா…இருக்கா…இப்பம் அவளுக்கு அதில எட்டு பிள்ளைய.நல்ல களுத்து கனக்க மாலையும் காதுவடிய பாம்படமும் போட்டுக்கிட்டு ராணி கணக்காட்டு இருக்கா…சும்மா சொல்லப்பிடாது . இப்பமும் அவ காண நல்ல அளகாக்கும். செத்திவச்ச செலையாக்குமே…நான் செலசமயம் அங்க போறதுண்டு…மாஞ்சிறக்கோணம் வயலுக்கு அந்தாலயாக்கும் அவளுக்க குடி. ஒருநாளில்லாட்டி ஒருநாளு காலம்பற எந்திரிக்கும்பம் அவளுக்க நெனைப்பு வரும். செரீண்ணு வச்சு ஒரு நடப்பு. நேராட்டு போயி அவளுக்க குடிக்க பக்கத்திலே ஒரு முளங்கூட்டம் உண்டு. அதுக்க நெளலிலே கேறி நிப்பேன்.அங்க நிண்ணா அவ அடுக்களையிலயும் பொறவாசலிலேயும் பெருமாறுதது தெரியும்….மொலையும் கொலையுமா சேலாட்டு இருப்பா…அங்க நிண்ணு அப்டியே மத்தியான்னம் வரை பாத்துக்கிட்டு நிக்கது…பின்ன திரும்பி வந்துபோடுவேன்…ஒண்ணுரெண்டுதடவ அவ திட்டினா. மாடன் ஆசாரி வந்து ஒருக்கா செவி பொத்தி ஒரு அடி அடிச்சான். அடியோட அந்தால வந்துபோட்டேன்…எட்டுநாள் செவியிலே பொன்னீச்ச பறக்குத சத்தம்…அடுத்த தடவை போயி நிண்ணப்ப அவன் அடிக்க வந்தான். இவ வந்து கைய நீட்டி ‘தொடப்பிடாது’ண்ணு சொல்லிப்போட்டா. பாத்தா வனபத்ரகாளி மாதிரி இருக்கா… கண்ணெல்லாம் செவந்து இருக்கு. தேகம் அடுப்பிலே கெடந்து சுட்டு பளுத்த கல்லு மாதிரி ….மாடனாசாரி அந்தால திரும்பி போயிட்டான். இவ எனக்ககிட்ட ’எதுக்குவே வாறீரு’ண்ணு கேட்டா. நான் சொன்னேன் ‘எனக்கு வேற கெதியில்ல.நான் கிறுக்கனாக்கும்’ணு. வாரும்ணு கூட்டீட்டுப்போயி வயறு நெறைய கஞ்சி குடுத்தா. ’இனிமே வந்தா வந்து திண்ணையிலே இரியும். கஞ்சி குடிச்சுட்டு போவும்’ணு சொன்னா. இப்பம்லாம் நேரா போயி பொறவாசல் திண்ணையிலே இருந்து அவளக் கண்ணு நெறைய பாத்து கஞ்சியும் குடிச்சுட்டு வாறது. அவளுக்க பயக்க வளந்துட்டானுவ. மூத்தவனுக்கிப்பம் பதினாறு வயசாக்கும். அவனும் வளீல கண்டா ஒரு ரூவா சக்கறம் எடுத்துக் குடுத்திட்டுப் போவான்….’

’ஆசாரியே சோலி தீரல்லியா?’

‘இந்நா தீந்தாச்சு…’ என்றார் ஆசாரி என்னிடம் ‘இது ஒரு சோலியா? ஒம்பது கம்ப எடுத்து ரண்டு முளைக்கு நடுவிலே வைச்சு ஒரு ஆப்பு அடிச்சிறுக்கினா ஏணி…இது ஆசாரிப்பணி இல்ல கொச்சேமானே…இது சும்மா’

நான் ‘எனக்கு ஏணி பிடிக்காது’ என்றேன். ஒருமுறை ஏணியில் இருந்து நான் விழுந்திருந்தேன்.

‘ஏமானுக்கு என்ன பிடிக்கும்?’

‘அம்மையப்பம்’

‘ஆசாரிக்குப் பிடிச்சது அம்மையப்பனாக்கும்’

‘அதென்னது?’

‘ரெண்டும் ஒண்ணுதான்’

‘திங்க முடியுமா?’

‘திங்கமுடியாது…ஆனா இனிப்பா இருக்கும்….ஏமான் ஒரு நல்ல மரக்கட்டை எடுத்துக்கிட்டு வரணும்…ஆசாரி அதை செஞ்சு தாறேன்’

நான் வீட்டுக்குள் சென்றேன். மரக்கட்டையா? அப்படி என்ன இருக்கிறது? அம்மா உட்கார்ந்து காய்கறி வெட்டும் கட்டை கிடந்தது. ஆனால் அதை என்னால் தூக்க முடியாது. நான் அப்பாவின் அறைக்குள் செல்வதற்குள் பக்கவாட்டு வச்சுபூட்டு அறையைப் பார்த்தேன். திறந்து கிடந்தது. உள்ளே அரையிருட்டு. உள்ளே நுழைந்தேன். துணிவைக்கும் கால்பெட்டிகள், பலவகையான சிறிய பெட்டிகள். மேலே சித்திரைநாற்றுவேலைக்குக் கொண்டுவந்து நிறைத்த நெற்கதிர்களுடன் கட்டப்பட்ட தாழம்பூக்குலைகள். தாழம்பூப்பொடியும் கரப்பான்பூச்சி உருண்டையும் எலிப்புழுக்கையும் கலந்த மணம்.

அதைக் கண்டதுமே நான் முடிவுசெய்துவிட்டேன். அது சந்தனமணை. அப்பா வருடம்தோறும் அவரது அப்பாவுக்கு ஊட்டு கொடுத்து புரையில் வைக்கும்போது இலையில் பதினான்குவகை கறிகள், ஏழுவகை பாயசங்கள், சோறு, குழம்பு, பப்படம் ,பழம் எல்லாம் பரிமாறிவிட்டு அந்த சந்தன மணையைத்தான் போடுவார். அதன்பின் சத்தமில்லாமல் அறைக்கதவை மூடிவிடுவார். இருட்டுக்குள் அப்பாவின் அப்பா வந்து அந்த உணவை சாப்பிட்டுவிட்டுப் போவார் என்று தங்கம்மா சொன்னார். ஆனால் உணவை யாரும் சாப்பிடவில்லை, நான் பார்த்தேன். சென்ற முறை மொத்த சாப்பாட்டையும் அப்படியே எடுத்துக்கொண்டுபோய் காக்காய்க்காக வைக்கோற்போர்மீது வைத்தார் அப்பா.

நான் சந்தனமணையை எடுத்துக்கொண்டு துரத்தப்பட்டவன் போல மூச்சுவாங்க ஓடி ஆசாரியை அடைந்தேன். அவர் மல்லாந்து படுத்து வானத்தைப்பார்த்து ஏதோ முனகியபடி கால்களை ஆட்டிக்கொண்டிருந்தார்.

‘இந்தா ஆசாரி’ என்றேன்

‘இதா…இது சந்தனமாக்குமே…நல்ல அசல் ரத்தசந்தனம்…கொள்ளாம்’ என்றார் ஆசாரி. ‘ஏமான் அந்த சிற்றுளியை எடுங்க’

சிறிய உளியால் அவர் மெல்ல மெல்ல அதை செதுக்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘இது என்ன ஆசாரியே?’

‘இதா…இதாக்கும் அம்மையப்பம்’

அம்மா ‘ஆசாரியே…ஏணி கூட்டியாச்சா? சோறு உண்ண வாறேரா?’ என்றாள்:

‘இந்நா வாறேன்…’ என்றபின் அந்த சந்தனமணையை சருகுக்குள் செருகினார். ‘இந்த எளவெடுத்த ஏணிய முதல்ல கூட்டிப்போடுவோம் ஏமான்’ என்றார்.

ஏணியை மளமளவென்று கூட்டினார். கூட்டி ஆப்படித்துப் பார்த்தபோது ஏணியின் ஒன்பதுபழுதுகளும் கோணலாக இருந்தன.

‘ஓ’ என்றார் ஆசாரி

‘கோணலா இருக்கு’ என்றேன்

‘ஆமா…கண்ணால கணக்கு போட்டா போரும்ணாக்கும் நினைச்சேன்….இந்த எளவுக்கென்னத்துக்கு கணக்கும் மயிரும்…செரி வந்து கூட்டுவோம்’ மளமளவென்று ஏணியைப் பிரித்துப்போட்டார். ‘வாங்க முதல்ல சோத்த திம்போம். அன்னலெச்சுமி காத்திருக்கமாட்டாள்லா?’

இலையில் கூம்பாரமாக சிவப்புச்சோற்றைக்குவித்து அதன்மேல் வெள்ளரிக்காய்போட்டுத் தாளித்த செந்நிறத் தேங்காய்க்குழம்பை கொதிக்கக் கொதிக்க விட்டு ஒட்டுமொத்தமாகப் பிசைந்து பூசணிக்காய்பயறுக்கூட்டும் முருங்கையிலைத் துவரனும் காணச்சம்மந்தியுமாக ஆசாரி நிறைவாகச் சாப்பிட்டார். நான்குமுறை கைநிறைய மோர் வாங்கி குடித்தார். எழும்போது ஏப்பம் விட்டார். ‘அம்மைக்க கைப்பக்குவத்திலே வித்தை உண்டும்’ என்றார்

‘ஏணி எப்பம் ரெடியாவும்?’ என்றாள் அம்மா

‘இந்நா…ஒரு செக்கண்டு…ஓட்டை போட்டு பழுதும் செத்தியாச்சு. வச்சுப் பூட்டி ஆப்படிச்சா ஏணி…ஏணி கூட்ட ஆசாரி என்னத்துக்கு?’ என்றார் ஆசாரி

சாப்பிட்டபின் இன்னொருமுறை வெற்றிலை போட்டுக்கொண்டார். உற்சாகமாக எழுந்து ‘ஜீவப்பிரியே சியாமளா என் ஜீவப்ரியே சியாமளா…சியாமளா சியாமளா’ என்று பாடியபடி சந்தமணையைச் செதுக்க ஆரம்பித்தார். நான் அவர் அருகே அமர்ந்து அந்த உளியின் நுனியில் இருந்து சிறிய நுணுக்கமான உருவங்கள் எழுவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். முந்தைய கணம் இல்லாமலிருந்தவை. காற்றுக்கு அப்பால் ஒளிக்கு அப்பால் உள்ள ஏதோ ஓர் இடத்தில் இருந்து அவை வந்தன. காற்றை விலக்கி ஒளியை விலக்கி. மெல்லிய கொடிகள் மலர்கள் . அவற்றினூடாகத் துள்ளிய மான்களின் சரடு. துதிக்கை பிணைத்த யானைகளாலான மணிமாலை. அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து ஒன்றைப்பார்க்கையில் அனைத்தும் தெரிந்தன அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ஒன்றுமட்டும் முந்தி எழுந்து என்னைப் பார்த்தது. கண்ணெதிரே ஒரு கனவு கையால் தொடமுடியக்கூடியதாக இருந்துகொண்டிருந்தது. கனவுபோல இதுவும் தொடுவதற்குக் கைநீட்டினால் அப்படியே கலைந்து மறைந்துவிடுமா என்று நினைத்தேன்.

‘இது ஏன் இப்பிடி இருக்கு?’ என்றேன். பின்னிப்பிணைந்திருப்பதை என்னால் சொல்லமுடியவில்லை. ஆகவே கைகளைப் பின்னிக்காட்டினேன்

‘கொச்சேமான், தனித்தனியா இருக்கப்பட்டது மனுஷனுக்க அகங்காரம் மட்டுமாக்கும். மத்த எல்லாமே பின்னிப்பிணைஞ்சுல்லா கெடக்கு…’ கையால் சற்று மண்ணை அள்ளி விலக்கிக் காட்டினார். வாழையின் வெள்ளைவேர்கள் அடர்ந்து பின்னி இருந்தன. கண்களைத் தூக்கியபோது அந்த மணையின் வடிவங்கள் விசித்திரமான வேர்ப்பின்னலாகத் தெரிந்தன. உயிருள்ளவை, நெளிபவை.

‘இது என்ன ஆசாரி?’

‘இதாக்கும் அம்மையப்பம்’

நான் ஆசாரியின் விரல்களைத்தவிர எதையுமே பார்க்கவில்லை. அனைத்தையும் உருவாக்கிக்கொண்டிருக்கும் விரல்கள். அவை அப்படியே முடிவில்லாமல் செதுக்கிக் கொண்டே இருக்கும் என நினைத்தேன்.இதேபோல வானத்தில் உள்ள கைகள் பூமிமீது மலைகள் மரங்கள் வீடுகள் மனிதர்கள் மிருகங்கள் என செதுக்கிக்கொண்டே இருக்கின்றன. எல்லாம் சேர்ந்து பின்னிப்பிணைந்து ஒரே படலமாக ஆகிவிட்டிருக்கின்றன. குளத்துப்பாசி போல. ஒரு நுனியைப்பிடித்து எடுத்தால் எல்லாம் சேர்ந்து அசைந்து இழுபட்டு வரும்.

நுணுக்கமான உருவங்களாலான ஒரு பெரிய வட்டமாக அந்த சந்தனமணையை ஆசாரி மாற்றியிருந்தார். யானைக்கூட்டங்களுக்குள் அணியணியாக நடனமிடும் ஆணும் பெண்ணும். அதற்கு உள்வட்டத்தில் பல்வேறு தேவர்களும் தேவதைகளும் கைகளில் மலர்களுடன் தழுவிப்பின்னி நின்றிருந்தனர்.. அந்த வட்டத்திற்கு நடுவே இரு உருவங்களை நான் கூர்ந்து பார்த்தேன். ஆசாரி செதுக்கிக்கொண்டே இருந்தார். உளி தூரிகையாக மாறி வரைவதுபோல, ஒரு மெல்லிய தூவியாக மாறி தூசுப்படலத்தை விலக்கி உள்ளிருந்து அந்த பிம்பங்களை எடுப்பதுபோல.

‘இது யாரு?’ என்றேன்

‘இது அம்மை’ என்றார். ‘ஜெகதம்பா…இவளாக்கும். காளி….காளிதாசன்னு ஏமான் கேட்டிட்டுண்ணா?’

நான் ‘இல்லை’ என்றேன்

‘அவனுக்க வாயில காளி தாம்பூலத்த துப்பிக்குடுத்தா…தாயோளி அந்தால பெரிய கவியா ஆயிட்டான்….’

காளிக்குப் பதினாறு கைகள். எல்லாக் கைகளிலும் ஆயுதங்கள். அவள் கண்கள் தெறிப்பவை போல விழித்திருந்தன. நாக்கு நீண்டு தொங்கியது. நாக்கின் இருபக்கமும் கோரைப்பற்கள். கழுத்தில் மண்டைஓட்டு மாலையை ஆசாரி செதுக்கிக்கொண்டிருந்தார். மண்டை ஓடுகள் ஒரு பயறுமணி அளவுக்கு இருந்தன. ஒவ்வொன்றிலும் பற்களையும் கண்களையும் செதுக்கினார்.

‘இது?’ என்றேன்

‘இது அப்பன்…முக்கண்ணன், சிவன். ஆடவல்லான். அம்பலவாணன்…’

‘எங்க சிவன்?’

‘இருங்க…வாறாரு’

சிவன் மல்லாந்து ஒரு பாறைமீது சாய்ந்தவராகக் கிடந்தார். பாறைமேல் சடை பரவிக்கிடந்தது. நான்கு கைகள். ஒன்றில் மான். அதை அவர் செதுக்கும்போதே நான் கண்டுகொண்டேன்

‘இது உளிதானே?’

‘சிவனுக்கு எங்க உளி? இது மளுவாக்கும்’

சிவனின் கால்களும் இடுப்பும் உருவாகி வந்தன. சிவனின் நெஞ்சுக்குழி மீது காளி தன் காலைத்தூக்கி வைத்திருந்தாள். கட்டைவிரலால் நெஞ்சுக்குழியை ஆழமாக அழுத்தியிருந்தாள். சிவன் இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பியிருந்தார். கண்கள் மூடியிருந்தன

‘உறங்குதாரா?’

‘ஏமான் அது தியானமுல்லா? தியானமில்லாம கலை உண்டுமா?’

‘காளி எதுக்கு சவிட்டுதாங்க?’

‘அது அனுக்ரமாக்கும்….சிவனுக்க நெஞ்சில குளியக்கண்டுதா? அங்கிணயாக்கும் அக்கினி இருக்கப்பட்டது.’

’எங்க?’

‘உள்ள இருக்கு…அதை இந்தக் கையிலே எடுப்பாரு. அந்தக்கையிலே உடுக்க எடுப்பாரு. எந்திரிச்சாருண்ணு சொன்னா ஒரு ஆட்டமாக்கும்…அதாக்கும் நடராஜநிருத்தியம்….ஏமான் நான் இதுவரை ஒம்பது நடராஜ நிருத்யம் செத்தியிட்டுண்டு…ஆனால் இதுவரை ஊர்த்துவநிருத்யம் செத்தினதில்லை. கட்டை வேவறதுக்குள்ள அதும் ஒண்ணு செத்தணும்’

‘ஆசாரியே…ஏணி என்ன ஆச்சு?’

‘ஓ…இந்தபார எளவுலே இல்லியா எனக்க பாழும் சென்மம் வந்து கெட்டிக்கிடக்கு’ என்றபடி ஆசாரி படுவேகமாக செதுக்கினார்.

தங்கம்மா வரும் ஒலி கேட்டது

‘ஒண்ணையாவது முளுக்க செத்திமுடிக்க யோகமில்லை…வாறா’ என்றார் ஆசாரி. ‘ஏமான் இத அந்தால வைக்கணும்…இன்னும் கொஞ்சம் சோலி இருக்கு’

தங்கம்மை வந்து ‘ஏணி கூட்டியாச்சா?’ என்றாள்

‘இந்தா’ என்றபடி ஆசாரி உளியையும் கொட்டுவடியையும் எடுத்தார். மளமளவென்று இன்னொரு ஒன்பது ஓட்டைகளைப் போட்டு ஒன்பது கழிகளையும் அந்தத் துளைகளில் செருகி ஆப்படித்தார். கழிகள் முன்பைவிடக் கோணலாக இருந்தன.

‘இதென்னது சறுக்கி வெளையாடுததுக்கா?’ என்றாள் தங்கம்மா

‘நீ சும்மா கெடட்டி…’ என்று ஆசாரி தட் தட் என அடித்து ஏணியைக் கழற்றினார். மூங்கிலைப் புரட்டி மீண்டும் ஒன்பது துளைகள் போட்டார்

தங்கம்மா கண்களைச் சுருக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தாள். ஆசாரி இம்முறை ஏணியை ஆப்பு பூட்டாமலே கோணலைக் கண்டுகொண்டார். மீண்டும் ஒன்பது துளைகள். ஆனால் இம்முறை துளைகள் குழம்பிவிட்டன. எந்தத் துளையில் எந்தக் கழியை செருகுவதென்று தெரியவில்லை.

‘அம்மிணி…இங்க நம்ம ஆசாரி ஒரு அருமையான சோலியில்லா செய்திருக்காரு? வந்து பாருங்க…முளையிலே தேன்கூடு செய்திருக்காரு…’ என்றாள் தங்கம்மை

‘இருட்டி…இந்தா ஒரு அஞ்சு நிமிசம்’

ஆசாரியின் கைகள் நடுங்கின அவர் அங்குமிங்கும் பரபரத்தார். முழக்கோலால் அளந்தபோது அவருக்கு அளவுகள் குழம்பின. ஒரு துளைக்கும் இன்னொரு துளைக்குமான தூரத்தை அளக்கையில் வெவ்வேறு துளைகளை எடுத்துக்கொண்டார். புதிய ஒன்பது துளைகள்.

தங்கம்மா ‘அம்மிணியே…வந்து இந்த கூத்தப்பாருங்க’ என்றபடி ஓடினாள்

ஆசாரி பரபரவென்று தன் பணிப்பையை எடுத்து எல்லா சாமான்களையும் அதற்குள் அள்ளி அள்ளிப்போட்டார். முழக்கோலை எடுத்துக்கொண்டு என்னிடம் ‘கொச்சேமான் அந்த சந்தனவட்டைய ஆரிட்டயும் காட்டவேண்டாம்… அப்ப்டியே எடுத்து ஆத்தில போட்டிருங்க…நான் வாறேன்’ என்றபடி தோட்டத்திற்குள் பாய்ந்தார்.

மறுபக்கம் அம்மா ‘என்னட்டி சொல்லுதே?’ என்ற கூச்சலுடன் வரும் ஒலி கேட்டது. வேலியின் அன்னாசிச்செடிகளைப் பிய்த்து விலக்கி அதில் பொத்திப்பிடித்து ஏறி அந்தப்பக்கம் சென்று அப்படியே கோயில் நந்தவனத்துக்குள் ஆசாரி செல்வதைப் பார்த்தேன். மரக்கூட்டங்கள் நடுவே அவர் மறைந்தார்

அம்மா வந்து மூங்கில்களைப் பார்த்தாள் ‘அய்யோ…எனக்க கோரோயில் முருகா…நான் இனி அவ்வோப்பாகிட்ட என்ன சமாதானம் சொல்லுவேன்? யம்மா’ என்று தலையில் கைவைத்தாள். தங்கம்மா சிரிப்பை அடக்கிக்கொள்வதைக் கண்டேன்.

அந்த அம்மையப்பத்தை வாழைச்சருகுகளுக்குள் போட்டு அதன் மீது நான் அமர்ந்திருந்தேன். ’இவன் என்னத்துக்கு முட்டையிடுத கோளி கணக்காட்டு இருக்கான்?’ என்று அம்மா சீறினாள்

‘அம்மணி, கொச்சேமான் பொதையலு எடுத்திருக்காருல்லா…’ என்றாள் தங்கம்மை சிரித்தபடி.

– February 17, 2013 (நன்றி: https://www.jeyamohan.in)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *