அம்மா சர்க்கரை!

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,478 
 

உறவினரகள் எல்லாம் ஒன்று பட்ட லட்டு போன்ற அழகிய குடும்பம் அது.””மீனுக்குட்டி, அம்மாவை டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப்போறோம். ஹோம் வொர்க்க செஞ்சுட்டு சமத்தா விளையாடு, ஏழு மணிக்கெல்லாம் வந்துடுவோம்.” அப்பா சற்றே கடுமையடன் கூறினாலும் அதிரசம் மாதிரி இனிய வர்தான். இரட்டை ஜடை ஆட… ஆட… குண்டு விழிகளை உருட்டியப்படி, சாக்லெட் வழியும் வாயுடன் “”சரிப்பா” என்றால் மீனு.

“”மீனு, உங்க அம்மா டாக்டர்கிட்ட எதுக்கு போறாங்க?” எதிர் வீட்டுப் பூரணி ஆன்டி பதமாய்ச் செய்யாத அல்வா போல இழுக்க, “”ம், தெரியுமே, அம்மாவுக்கு சுகராம், டெஸ்ட் பண்ணத்தான்.”

அம்மா சர்க்கரை“”அப்போ” இனிமே உங்க வீட்ல ஸ்வீட்டே கெடையாதுன்னு சொல்லு”-குண்டு ஒன்றை பூரணி தூக்கிப்போடவும், அது சர்க்கரை போட மறந்த கேசரியாய் மீனுவை பயமுறுத்தியது.
“”ஏன், ஆன்டி?” – என்றாள் மீனு. கேக்கின் நடுவில் இருக்கும் சிவப்பு செர்ரியாய், இருந்தது அவள் வியப்பு!

“”எங்க அம்மாவுக்கும் கூட, என் சின்ன வயசுலேயே சுகர் வந்துடுச்சு மீனு, பிறகு எங்க வீட்ல எந்த ஸ்வீட்டும் செய்ய மாட்டாங்க. அம்மா சாப்பிடக் கூடாது இல்லையா? அதனால தான்” -பூரணியின் இனிப்பற்ற சிறு வயது ஞாபங்கள் கசப்பாய் வெளிப்பட்டன.

பூரணி கூறிய செய்தியாய், அழுத்திப் பிடித்த சோன்பப்டியாய் உதிர்ந்துபோன மீனு, பூரணி கேட்டதுபோல, இனிமே நம்ம வீட்ல இனிப்பே செய்யமாட்டோமா, சாப்பிடக்கூடாதா? நடு ஹாலில் கூடி இருந்த குடும்பத்தினர், தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, அப்பா, அண்ணன் – அனைவரின் முன்பும் கேட்க, அந்தக் கேள்வி, சுடச் சுட ஜீராவில் முக்கி எடுத்த ஜிலேபியாய் எல்லோரையும் கவரத்தான் செய்தது.

“”இனிமே, கேசரி, சர்க்கரைப்பொங்கல், அல்வா, லட்டு- இதுபோன்ற எந்த ஸ்வீட்டும் நம்ம வீட்ல செய்யமாட்டோமா? செஞ்சா, அம்மா சாப்பிடாம, அவங்களுக்கு ஏக்கமா இருக்கும்தானே…?”

மீனுவின் அம்மா துடித்துப் போனாள், அவள் மனம் வாயிலிட்ட மைசூர்பாகுவாகக் கரைந்தது. “”செல்லமே, வாடி…” என மீனுவைக் கட்டிக் கொண்ட அம்மாவின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் முற்றிய சர்க்கரைப் பாகுவைப் போல முத்து முத்தாய்…

“”எனக்கு ஸ்வீட் பிடிக்கும்தான் மீனுக்குட்டி. ஆனால் ஸ்வீட்டை விட உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் செல்லமே.” இனிய கற்கண்டாய் அந்தக் கணங்கள் கரைய…””அப்போ நாங்க சொல்றதை நீ கேட்கணும்.” மீனுவின் கண்கள் குளோப் ஜாமூன்போல பளபளக்க, “”சரிடா கண்ணு – சொல்லு கேட்டுக்கறேன்.” துண்டமிடப்பட்ட முந்திரி கத்லியாய் இருந்தது அந்த சரணாகதி.

“”இனி வீட்டில் மற்றவர் இனிப்பு சாப்பிடும்போது, அந்த இனிப்புக்குரிய ரூபாய் ஒரு உண்டியலில் போடப்படும். இதுதான் அது…” என்னவோ போல இருந்தாலும் மீனுவுக்காக அம்மா அதை ஏற்றுக் கொள்கிறாள், ஜீராவைத் தனக்குள் ஊத்திக்கொண்ட அழகிய ரசகுல்லாப்போல. அம்மாவின் பங்குக்குரிய பணம் ஆறு மாதங்களிலோ, சில சமயம் நான்கு மாதங்களிலோ கூட உண்டியலை நிறைத்தது. இனிப்பு சாப்பிடாத அம்மாவின் கைகளில் அந்தப்பணம், அம்மாவுக்குப் பிடித்த உடையாகவோ நகையாகவோ, புத்தகமாகவோ குடும்ப நபர்களால் பரிசாகத் தரப்பட்டது.

மீனுவுக்குத் திருமணம் முடிந்தது அறுசுவை விருந்தில் ஸ்வீட் மீட்டும் காணோம். மீனுவுக்காக, அவள் கணவராகப் போகும் மாப்பிள்ளையே கூறி நிபந்தனைதான் அது. மீனு தேனுக்குள் இருக்கும் இனிப்பைப்போல, இரு குழந்தைகளுக்குத் தாயானாள்.
இந்த முறை அம்மா வீட்டுக்குப்போகும் போது வீட்டில் உள்ள மற்றவர்களுக்காக ஸ்வீட், காரம், பழம் வாங்கிய மீனு, அம்மாவுக்கென என்ன வாங்குவது? யோசித்து, சரி… அம்மாவிடம் கேட்ட பின் வாங்கலாம்.

“”அம்மா – உங்களுக்கு என்னம்மா வேண்டும்?” மீனுவின் கேள்வி, தாகத்துக்கு இனிய லெமன் ஜூஸாய் இருந்தது அம்மாவுக்கு.

“”பணமா கொடுத்துடு மீனு”-அம்மா சட்டெனச் சொல்லவும் பொருள் விளங்காய் உருண்டையாய் மீனு யோசித்தாள்.
“”எனக்கு வயசாயிடுச்சு மீனு, அன்னிக்கு நாக்கை அடக்க, இனிப்பு சாப்பிடாம நான் இருக்க, நீங்க எல்லாம் வாங்கிக்கொடுத்த நகை, புடைவை இதெல்லாம் இப்போ எனக்கு வேண்டாம்டா”-அம்மா ஐஸ்கிரீமாய் உருகினாள். பிறகு, “”ஆனா தினமும் கோவிலுக்குப் போகும்போது, ஏழைகளுக்குத் தரவும், வயதான முதியவர்களுக்கு உடையோ, உணவோ, வெற்றிலைப்பாக்கோ வாங்கித் தரத்தோணும்போது, அனாதை ஆசிரமங்களுக்கு, படிக்க ஆசைப்படும் ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு, முதியோர் இல்லத்துக்கு – இப்படி… எல்லாத்துக்கும் தர பணம் வேண்டி இருக்கு மீனு, அதனாலதான் பணம் கேட்டேன்.” உலகின் மொத்த இனிப்புகளின் கூட்டுச் சுவை கூட இப்படி இனிக்குமா என்ன?

அம்மா நாக்கை கட்டுப்படுத்திக் கட்டுப்படுத்தி ஞானி ஆனாளா? மனத்தைக் கட்டுப்படுத்திக் கட்டுப்படுத்தித் தனக்கும் எதுவும் வேண்டாம் எனத் தன்னலமற்றுப் போனாளா? சர்க்கரை, அம்மாவை இன்னும் இனிப்பாக்கி இருந்தது.

-ஜெயகுமாரி தணிகாசலம் (மார்ச் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *