அம்மா ஒரு அகதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 8,719 
 

‘அம்மா பாவம்’ என்று தனது தாயில் பரிதாப்படுவதற்கு அப்பால், தாயின் நிலை பற்றி மேலதிகமாக யோசிக்க மாலினியால் முடியவில்லை. மாலினியின் கணவன்,புண்ணியமூர்த்தி, ‘நான் மட்டும் உனது அம்மாவைப் பார்க்கும் பொறுப்பை ஏன் எடுக்க வேணும்?’ என்று மாலினியிடம் முணுமுணுத்தான்.

அம்மாவுக்குப் பல பிள்ளைகள் பிறந்தும் என்ன பலன்? கடைசிக் காலத்தில் அவளைப் பார்க்கும் பொறுப்பை எடுக்க யாரும் முன்வரவில்லை.

தம்பி பொன்னம்பலம் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் தொடர்பாகவிருக்கிறான். அந்த விடயம் அவனின் சகோதரர்களுக்கும் சொந்தக் காரர்களுக்;கும் பிடிக்கவில்லை. அதனால் தம்பி பொன்னம்பலத்துக்குப் புத்தி சொல்ல அம்மா ஊரிலிருந்து அழைக்கப் பட்டாள்.

தம்பி பொன்னம்பலம், அகதியாய் வந்தவன்,சகோதரிகளின் கல்யாணத்துக்கு உதவிசெய்ய இரணடு மூன்று வேலைகள் செய்து உழைத்து உதவியவன். இப்போது,ஒரு லைப்ரரியில் வேலை செய்கிறான். அங்கு வந்த ஜெனிபர் என்ற ஆங்கிலப்பெண்ணுக்கும் அவனுக்கும் காதல் மலர்ந்தது. பொன்னம்பலம், மற்றவர்களுக்கு உதவும் தாராள மனம் கொண்டவன். ஜெனிபர், தனது பட்டப்படிப்பு முடிந்ததும் ஆங்கிலப் பெண்களில் பலர் செய்யும் வேலையாக, இந்தியா,நேப்பாளம்,என்று சுற்றிவிட்டு வந்தாள்.

லைப்ரரி;க்குப் புத்தகங்களை எடுக்க அவள் வந்தபோது,அவன் அவளுக்கு உதவி செய்தான்.லைப்ரரிப் புத்தகத்தைத் திருப்பித் தரவேண்டிய நாளை முத்திரையிட்டுக்கொடுத்தவனின் மனதில், என்றும் தன்பக்கம் வைத்திருக்கும் காதல் முத்திரையைப் பதித்து விட்டாள் ஜெனிபர்.

இளம் வயதிலிருந்து லண்டனில் பல இந்தியக் குழந்தைகளுடன் படித்தவள். சாதாரணமாகவே இந்தியர்களுடன் அன்புடன் பழகும் ஜெனிபருக்கு பொன்னம்பரத்தின்; தாராள குணமும், பெண்களுடன் பழகும் மரியாதையான பண்பாடும் பிடித்துக் கொண்டது. அவர்கள் ஒருத்தொருக்கொருத்தரின் அன்புப்பிடியில் விழுந்து விட்டார்கள். அந்தப் பிடிப்பு அவனின் குடும்பத்தாருக்குப் பிடிக்கவில்லை;. அவனுக்கு உதவி செய்ய- அறிவுரை கூற அம்மாவை ஊரிலிருந்து வரவழைத்தார்கள்.

பொன்னம்பலத்தின் பெரிய அண்ணா கனடாவிலிருக்கிறார். தமக்கைகளில் ஒருத்தியான மாலினி; லண்டனிலிருக்கிறாள். மற்ற இருவரும் ஜேர்மனியிலிருக்கிறார்கள்.

எல்லோரும் தொலைபேசிமூலம் நடத்திய பெரிய மகாநாட்டைத் தொடர்ந்து, தம்பியைத் திருத்த அம்மா லண்டனுக்கு இறக்குமதி செய்யப்பட்டார். அவள் வந்து கொஞ்ச நாட்களில் அவளை வைத்துப் பராமரிப்பது யார் என்ற பிரச்சினை வந்து விட்டது.

அம்மாவுக்கு அறுபத்தைந்து வயது.ஆசிரியையாகவிருந்து ஓய்வு பெற்றவள்.பத்து வயதுக்கு முன்னால் அப்பா இறந்துவிட்டார். நல்ல பென்சன் பணம் வருகிறது. அம்மாவுக்கு வெளிநாட்டிலிருந்து அவளுடைய ஐந்து பிள்ளைகளும் சேர்ந்து கொழும்பில் ஒரு பிளாட் வாங்கிக் கொடுத்திருந்;தார்கள்.

அந்த வீட்டில்,அம்மா தங்களுடைய ஒரு சொந்தக்காரப் பெண்ணுடன் வசித்து வந்தவள்.அடிக்கடி கோயில் குளங்களுக்குப்போயும்,எப்போதாவது இருந்து விட்டு யாழ்ப்பாணம்போய்ச் சொந்தக்காரர்களைப் பார்த்து வருவதிலும் தன்வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தாள்.அத்துடன் ஒவ்வொருவருடமும்,வெளிநாட்டிலிருக்கும் அவளுடைன மகன்கள், மகள்கள் தங்கள் குடும்பத்துடன் கொழும்புக்கு வந்து அவளைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.அது அவளுக்கு மிகவும் சந்தோசமான விடயமாகவிருந்தது. ‘ உனக்கென்ன குறை, ஒவ்வொரு பிள்ளைகள்; கைநிறைய அனுப்புகிறார்கள்’ என்று மற்றவர்கள் பொறாமைப்படும்படி, தன்வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த அம்மாவின் வாழ்வில் அவளின் கடைசி மகன் பொன்னம்பலத்தின் காதல் வாழ்க்கையில்ப் பிரச்சினையைக்கொண்டு வந்தது.

லண்டனில் அவளுடைய கடைசி மகனின் காதல் விடயத்தைக் கவனிக்க அவள் வரவழைக்கப்பட்டாள்.அவள் வந்திறங்கியதும் பொன்னம்பலத்தின் விடயம் விவாதிக்கப் பட்டது. பொன்னம்பலம், தற்போது கல்யாணம் செய்ய ஜெனிபர் விரும்பவில்லை என்றும்,அவள் விரும்பும்போது திருமணத்தை வைத்துக்கொள்ளப்போவதாகச் சொல்லி விட்டான்.அவர்கள் கல்யாணம் செய்யாமல் ஒன்றாக வாழ்கிறார்கள்.

ஆனாலும், தனது பிரச்சினையால் லண்டன் வந்த அம்மாவைத் தன்னுடன் வரச்சொன்னான். பொன்னம்பலம் வீட்டுககுப்போன அம்மாவுக்கு, ஒன்றிரண்டு கிழமையில், அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. தனது கடைசி மகனின் காதலி ஜெனிபரை அம்மாவுக்கு நன்றாகப் பிடித்தது.ஆனால் அவள் வதக்கும் ஆட்டிறைச்சி,பன்றியிறைச்சிகளின் மணம்,வாழ்க்கை முழுதும் மரக்கறி சாப்பிட்ட அம்மாவாற் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அம்மாவைப் பராமரிக்கும் பொறுப்பு மாலினியின் தலையில் விழுந்து விட்டது. மற்ற மாப்பிள்ளைகளைவிடத் தனக்குத் தந்த சீதனம் போதாது என்று மாலினியுடன் பொருமிக்கொண்டிருந்த அவள் கணவன் புண்ணியமூர்த்திக்கு, மாலினி தனது அம்மாவை வைத்துப் பராமரிப்பது பிடிக்கவில்லை. மாலினியின் பெரியண்ணா கனடாவிலிருக்கிறார். மருமகளுடன் போயிருப்பது அம்மாவுக்குப்பிடிக்காது,ஆனால் அதைச் சொல்லாமல்,’கனடாவில் லண்டனை விடக் குளிராம், என்னால் அதைத் தாங்கமுடியாது என்று சொல்லிவிட்டாள்.

ஜேர்மனியிருக்கும் ஒரு மகள் சரியான நோஞ்சான், எப்போதும் ஏதோ சுகமில்லை என்று படுத்திருப்பவள்.மற்றவளுக்கு இன்னும் அகதித் தஞ்சம் கிடைக்காததால்,அம்மாவையும் அங்கு எடுத்துப் பிரச்சினைப்படவிருப்பமில்லை என்று சொல்லி விட்டாள்.

மாலினியின் கணவருக்குத் தன்னில் தனது மாமியாரைப் பார்க்கும் பொறுப்பு தலையில் விழுந்தது ஆத்திரம் வந்தாலும், அம்மாவை அகதியாகப் பதிவு செய்து அதனால் வரும் பணத்தைக் கண்டதும் மவுனமாகிவிட்டான்.

அம்மாவுக்குக் கொழும்பில் வரும் பென்சன், கொழும்பு பிளாட்டால் வரும் வாடகை எல்லாவற்றையும்,அம்மாவைப்பார்ப்பதற்குத் தேவையான செலவு என்ற போர்வையில் மாலினியின் வரவில் வைத்துக்கொண்டான்.

லண்டன் மாப்பிள்ளையாகிய தனக்கு அதிகம் சீதனம் தராததற்கு இப்போது’கடவுள்(?) அருள் புரிந்ததாக நினைத்துக் கொண்டான். மாலினி வீட்டில் வாழும் அம்மாவுக்கு, லண்டன் சிறை வாழ்க்கை பிடிக்கவில்லை. காலையில் மாலினியும் கணவரும் வேலைக்குப்போய்விடுவார்கள். குழந்தைகள் வளர்ந்தவர்கள் பாட்டியிடம் செல்லம் கொஞ்சும் வயதைத் தாண்டியவர்கள். அவர்களுடன் ஒன்றிணையக் கூடிய ஆங்கில அறிவு அம்மாவுக்கு இல்லை. மாலினியின் குழந்தைகள்,பெரும்பாலும் ஆங்கிலம் பேசுபவர்கள். தேவையான விடயங்களுக்காகப் பாட்டியிடம் பேசிவிட்டத் தங்கள் அறையினுள் தங்கள் வேலைகளுடன் பொழுதைப் போக்குபவர்கள்.

லண்டனிலுள்ள ஒரு சில உறவினர்கள் வாரவிடுமுறையில் வந்து பார்ப்பார்கள்.மாலினி தனக்கு நேரம் கிடைக்கும்போது,அம்மாவைக் கோயிலுக்குக் கூட்டிக்கொண்டுபோவாள்.

கொழும்பில், காலை தொடக்கம் மாலை வரையும் ஏதோ செய்துகொண்டிருந்த அம்மாவுக்கு ஒரேயடியாக,ஓரு இடத்தில், ஒரு பூட்டிய வீட்டுக்குள் இருப்பது வேதனையைத் தந்தது. அதுவும் குளிர்காலமென்றால்,லண்டன் குளிர் அம்மாவின் முதிர்ந்த எலும்புகளை ஊடறுத்து அவளின் ஆத்மாவை நடுங்கப் பண்ணியது.

அம்மா,இருவருடங்களுக்கு முன் லண்டனுக்கு வரும்போது நல்ல உடல் நலத்துடன்வந்தாள்.ஆனால், நாட்கள்; போக, வித்தியாசமான சாப்பாடுகளால், சுவாத்தியத்தால்,~-சூழ்நிலையால் அவளுக்குச் சில பிரச்சினைகள் தலை காட்டின. மூட்டு உளைவு என்று தொடங்கி.தலைசுற்று,பிளட்பிரஷர் என்று தொடர்ந்தது. கொழும்பில், சாதாரணவாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த தாய்க்கு, லண்டனில் அசாதரணச் சூழ்நிலையுண்டாக்கிய பல தொல்லைகளால் அவளின் குழந்தைகள் மிகவும் வருந்தினார்கள்

அம்மாவுக்கு ஞாபக மறதி வரத் தொடங்கியதும்,அவளைத்தனியாக வீட்டில் இருக்கவிடுவதே பெரிய பிரச்சினையாகவிருந்தது.

‘ ஊருக்குப்போய்க் கொழும்பில இருக்க வேணும்போல இருக்கு’ அம்மா சில வேலைகளிற் புலம்புவாள்.

சாதாரணமாச் செய்யும் வேலைகளே அவளுக்குப் பிரச்சினையாகத் தொடங்கியது. சமையலறையில் கொழுத்திய குக்கர் நெருப்பை அணைக்க மறந்து விடுவாள்.சிலவேளைபகளில், காப்பித்தூளுக்குப் பதில் மிளாகய்த்தூளைப் போட்டு விடுவாள். முன்கதவைத் திறந்தால் பூட்ட மறந்து விடுவாள்.

அம்மாவின் ஞாபகசக்தி சரியில்லை,அதனாற் பல பிரச்சினைகள் வரும் என்று தெரிந்தும்,அவளுக்கு உதவியாக யாரையும் வீட்டில் வைத்துப் பார்க்கத்தேவையான பணத்தைச் செலவளிக்க யாரும் தயாராகவில்லை. அம்மாவைப்பார்க்க,ஒருத்தரும், தங்கள் வேலையை விடத் தயாராகவில்லை.தனது முது வயதில் தன்னை ஒரு,முதியோர் விடுதிக்கு அனுப்பவேண்டாம்; என்று எப்போதோ சொல்லி விட்டாள்.

வாரவிடுமுறையில் அம்மாவை ஜெனிபரும் பொன்னம்பலமும்; வந்து கூட்டிக்கொண்டுபோவாள். ஆனால், அம்மாவுக்கு அவர்கள் வீட்டுச் சாப்பாடு பிடிக்காது. பொன்னம்பலம் தன்னால் முடிந்தவரைக்கும்,அம்மாவுக்காகச் சைவச் சாப்பாடு செய்வான்.அதுவும் அம்மாவுக்கு அவ்வளவு திருப்தி தராது. அங்கிருந்து மாலினி வீட்டுக்குத் திரும்பி வரும்போது சாப்பாடு பற்றி முணுமுணுத்துக்கொண்ட வருவாள்.

தங்கள் பாடசாலை, விடுதலைக் காலங்களில் ஒரு கொஞ்ச நேரம் தங்கள் பாட்டியைக் கவனிக்கும் மாலினியின் குழந்தைகள், முழுநேரமும் பாட்டியுடன் இருக்க அவர்களால் முடியவில்லை.

அகதி என்பவர்கள், ஒரு நாட்டில் பாதுகாப்பாக இருக்க முடியாமல் இன்னொரு நாடு செல்பவர்கள். ஆனால்,வீட்டில் வைத்துப்பார்க்க யாருமற்ற அனாதைமாதிரித் தன்னை, அம்மா சிலவேளை நினைத்துக்கொள்வாள்.

வெளியில் நல்ல வெயில் அடிக்கும்போது,அடைபட்டுக்கிடக்கும் வீட்டை விட்டு வெளியிற்போய்க் காற்றாடவேண்டும்போலிக்கும்.ஆனால்,வெளியிற்போனால் திரும்பவும் எப்படி வீட்டுக்கு வருவது என்பதைச் சிலவேளைகளில் மறந்துவிடுவாள் என்பதால், மாலினி வெளியில் போகும்போது. அம்மாவுக்குத் தேவையான சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டுக் கதவுகளைப் பூட்டிவிட்டுச் செல்வாள்.

நாளடைவில், வீட்டிலிருந்து எல்லோரும் வெளிக்கிட்டதும், தனது அறையில் ஒடுங்கி வாழ அம்மா பழகி விட்டாள். பெரும்பாலும்,ஒன்றும் செய்யாமல் வீட்டில் இருக்கும் நிலையால் அம்மாவின் மூளைக்கும் அதிகம்வேலையில்லை.மூளைவேலை செய்யாவிட்டால், ஞாபகங்கள் தடுமாறும்,அன்றாட பழக்கவழக்கங்களே அன்னியமாகிவிடும்.அம்மா தனது பழக்கமான செயல்பாடுகளைச் செய்யவே ஞாபகற்ற நிலைக்குப் போய்க்கொண்டிருந்தாள்.

லண்டனில் அம்மா தன்னை ஒரு நாளும் முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டாம் என்று சொன்னதைப்பற்றிச் சகோதரர்கள் கலந்துபேசினார்கள். அம்மா கேட்பதுபோல்,அம்மாவைக்கொழும்புக்கு அனுப்ப முடிவுகட்டினார்கள். அம்மாவீட்டிலிருக்கும் சொந்தக்காரப்பெண்ணும் அதைச் சநதோசத்தடன் ஏற்றுக்கொண்டாள். அந்தப்பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டிலிருப்பவள்.அம்மாவைப் பார்த்துக்கொள்வது பிரச்சினையில்லை என்று சொன்னாள்.

அம்மாவுக்கு,அந்த விடயத்தைச ;சொன்னதும் மிகவும் சந்தோசப்பட்டாள்.அம்மாவின் பெயரிற் கிடைக்கும் அகதிப்பணம் வராமற்போகும் என்று புண்ணியமூர்த்தி முணுமுணுது;தான். அந்த வாரவிடுமறையில் மாலினி வீட்டில் பலரும் வந்து அம்மாவை ஊருக்கு அனுப்புவது பற்றிச் சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் வீட்டில் எல்லோரும் இருந்தபடியால் முன்கதவு பூட்டுப்படமல் சாத்தப்பட்டிருந்தது.

அம்மா,கொஞ்ச நாட்களாக வீட்டுக்குத் திரும்பிப்போகும் சந்தோசத்திலிருந்தாள்.அவள் மனம் அங்குமிங்கும் பறந்தது.

அம்மா எப்படிக் கதவைத் திறநது விட்டு வெளியே போனாள் என்று யாரும் பார்க்கமுதல், வீட்டுக்கு அருகில் பெரிய சத்தத்துடன் ஒருகார் சட்டென்று நின்ற சத்தம்கேட்டு வெளியே

எட்டிப்பார்த்தார்கள்.

பக்கத்து வீட்டுக்காரன் பரபரப்புடன் ஓடிவந்தான்.’ ஐயோ என்ன பரிதாபம், உங்கள் அம்மா காரில் அடிபட்டு…….@’

(யாவும் கற்பனையே)

– லண்டன் ‘அகதி ‘பத்திரிகை பிரசுரம்-1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *