அம்மா ஏன் இப்படி ?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 5,361 
 

சோத்து மூட்டையைக் கட்டிக்கொண்டு அம்மாவுடன் லொங்கு லொங்கென்று நடக்கும் பாவாடை தாவணி மீனாட்சிக்கு வேலைக்குச் செல்ல விருப்பமில்லை.

அப்பா அல்ப ஆயுசில் இறந்து விட்டாலும் அனாதையாக விட்டுப் போகவில்லை. உழைத்துப் போட இரு அண்ணன் ஆண் வாரிசுகள். அப்புறம் இருக்கிற குக்கிராமத்தில் சொத்தாய் மூன்று காணி நிலம்.

கரும்பு வாழை, நெல்…என்று காணியின் விளைவே போதும். அண்ணன் தங்கை அனைவருக்குமே குறை படிப்பு. இருந்தாலும் அண்ணன்கள் சொந்த நிலத்தில் கூலி இல்லாமல் உழைத்து லாபம் பார்க்கிறார்கள். அது மட்டுமில்லாமல் கூலி வேலைக்கும் சென்று வந்து அம்மாவிடம் கொடுக்கிறார்கள். தாயும், மகளும் அவர்களுக்கு ஆக்கிப் போட்டு ராணி போல இருக்கலாம்.

ஆனால் அம்மா….இவளை இழுத்துப் போய் சொந்தக் கழனிகளில்;; நடவு, களைப்பறிப்பு என்று வேலை வாங்குவது மட்டுமில்லாமல் கூலிக்கும் கொண்டு செல்கிறாள்.

ஏன்….. ?

‘இருக்கும்வரையில் பெண்ணைப் பிழிந்து காசாக்கி அண்ணன்கள் சுமை குறைக்கிறாளா ? தன் திருமணத்திற்கு தானும் சேர்ந்து உழைத்து பாரம் குறைக்கட்டும் நினைப்பா? இல்லை…பெண்ணைத் தனியே வீட்டில் விட்டுச் செல்ல பயம். அழைத்துக்கொண்டு அலைகிறாளா ?’  அவளுக்குள் நினைவுகள் சுழல…. சட்டென்று நின்றாள்.

”அம்மா !” அழைத்தாள்.

”என்ன கண்ணு !” முன்னே சென்ற மரகதம் மகள் அழைப்பு கேட்டு நின்றாள்.

”நான் கேட்கிறதுக்குக் கொஞ்சம் பதில் சொல்லேன்.”

”கேளு.”

”நானும் உன்னோடு வந்து உழைக்கனுமா ?”

”………………………….”

”இது உனக்குத் துணையா இல்லே எனக்குப் பாதுகாப்பா ?” பார்த்தாள்.

”அதெல்லாம் ஒன்னுமில்லே. அண்ணன்கள்  செய்யவேண்டியதெல்லாம் சிறப்பாய் செய்து குறை இல்லாம உன்னைக் கொண்டவன் வீட்டுக்கு அனுப்பினாலும் என் பங்குக்கு சீர்வரிசையாய் எனக்குத் தெரிஞ்சதை உனக்குக் கத்துத் தர்றதுதான் இது. பெண்ணுக்கு ஆக்க மட்டும் தெரிஞ்சிருந்தால் போதாது. இருக்கிற இடத்துக்குத் தகுந்தமாதிரி இருக்கிற வேலைகளையும் கத்துக்கனும். அது பின்னால பயன்படும். பயன்படலைன்னாலும் பரவாயில்லே. தொழில் யாருக்கும் தெம்பு தைரியம்.” சொன்னாள்.

மீனாட்சிக்கு அம்மாவின் மனம் தெரிந்தது.  குளிர்ந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *