அப்பாவைத் தேடி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2019
பார்வையிட்டோர்: 6,386 
 

1

இரவு மணி 10.00. கட்டிலில் நீண்டு மல்லாந்து படுத்திருந்த நிர்மல் வயது 45. இப்போதுதான் ஒரு தெளிவு, தீர்க்கமான முடிவிற்கு வந்து அருகில் படுத்திருந்த மனைவி நித்யாவைப் பார்த்தான்.

அவள் கருமமே கண்ணாய்ப் புத்தகத்தில் மூழ்கி இருந்தாள். எலுமிச்சை நிறம். அழகான வட்ட முகம். அளவான கண்கள். அவளுக்கு இரவில் தூங்குமுன் படிக்கப் பிடிக்கும். ஒரு அரை மணி நேரமாவது படிப்பாள்.

வேலை பளுவில்….. ”எனக்குத் தூக்கம் வருது. அப்புறம் படி.” என்று கணவன் சொன்னாலும் அவனின் தேவைகளை முடித்துவிட்டு மீண்டும் படிப்பாள். பி.எஸ்சி பட்டப்படிப்பு, வீட்டு மனைவி என்றாலும் சராசரி பெண்களிலிருந்து சற்று மாறுபட்டவள்.

தொலைக்காட்சிப் பெட்டிகளில் மறந்தும் தொடர்கள் பார்க்க மாட்டாள். அவைகளின்பால் அவளுக்கு நல்ல அபிப்பிராயமேக் கிடையாது. எந்தத் தொடரிலும்…. கதையாயினும் சரி, கருத்தாயினும் சரி. சரியாகவே இல்லை என்கிற அப்பட்டமான உண்மையை அவள் நன்றாக தெரிந்து வைத்திருந்தாள். கதையை நீட்டிக்க வேண்டி கன்னாபின்னாவென்று இழுத்து மக்களுக்குச் சொல்லக் கூடாதவைகளையெல்லாம் சொல்கிறார்கள் என்பதால் அவைகளின் மேல் அவளுக்கு வெறுப்பு.

இன்றைக்குக் கொலை, கொள்ளை, ஆண் பெண் கள்ளத்தனக் கலாச்சாரங்கள் பெருகியதற்குக் காரணம் சினிமா, தொலைக்காட்சிகளின் பங்கு அளப்பபரியது என்பது அவளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கற்பனைகளை விரிவாக ஒட்டி, அதை விளக்கமாகக் காட்டி, தெரியாதவர்களுக்கும் தெரியவைத்து, மக்கள் மனதில் தவறுகளைப் பற்றிய பயம், அச்சத்தைத் தெளியவைத்து பெருக்கி விட்டார்கள்.

விளைவு ? இன்றைக்கு வளரும் குழந்தைகளும் அந்த அச்சம், பயம் நீங்கி கணனி, கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டிகளிலெல்லாம் அது மாதிரியான விளையாட்டுகளையே விளையாடிப் பழகி விஷ வித்துகளை மரமாக வளர்த்து வளர்கிறார்கள் என்பதை இவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக இவர்களின் குழந்தைகளான ஆகாஷ், அபிஷேக்கை அந்த மாதிரியான விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வில்லை. அந்த குழந்தைகளின் கற்பனா சக்திகள் வளர ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ராமாயாண, மகாபாரத கதைகளையும்@ அலெக்சாண்டர், நெப்போலியன், வீரபாண்டிய கட்ட பொம்மன் போன்றோர்களின் வீர தீரங்களைப் பற்றி தினமும் அவர்களுக்குக் கதைகளாகச் சொல்லி வருகிறாள்.

பால்குடி மறக்கடிக்கப்பட்டதிலிருந்து குழந்தைகளுக்குத் தங்கள் அறையில் தனி படுக்கை என்று பிரித்து…. படுக்க வைத்திருந்தாலும் அதில் படுத்து அவர்கள் தூங்குவரை கதைகள் சொல்வாள்.

இன்றைக்கு அவர்களுக்கு ஐந்து, எட்டு வயது. ஒரே அறையில் படுக்க வைத்து கணவன் மனைவி சுதந்திரத்தைப் பறிக்காமல் பக்கத்து அறையில் படுக்கைகள் போட்டு அவர்களைப் பழக்கி இருக்கிறாள். மாலை பள்ளி விட்டு வந்ததும் அவர்களுக்குக் காபி கொடுத்து சுதந்திரமாக விளையாட்டு. அப்புறம் ஆறு மணியிலிருந்து ஏழு ஏழரைக்குள் அவர்களுக்குப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து படிப்பு. அதன் பின் அவர்கள் தொலைக்காட்சிப் பார்ப்பு, எட்டரைக்குச் சாப்பாட்டு போட்டு ஒன்பது மணிக்கு அவர்கள் படுக்கையில் அவர்களோடு படுத்து கதை சொல்லி தூங்க வைத்து விட்டு அவர்கள் தூங்கிய பின் எழுந்து மற்ற வீட்டு வேலைகளை முடித்து விட்டு இவர்கள் படுக்கைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாள்.
ரொம்ப அருமையான மனைவி. அம்மா இவளை எப்படித்தான் கண்டு பிடித்து இவனோடு சேர்த்தாள் என்பது இவனுக்கேத் தெரியாத ஆச்சரியம். இவள் இப்படித் தான் வாழ வேண்டும், பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று கற்பனை செய்து திட்டமிட்டு வந்திருப்பாள் போல. அப்படியே செய்கிறாள். அவள் செய்கை, நடப்பெல்லாம் இவனுக்குப் பிடித்திருக்க…. அவைகளை மௌனமாகப் பார்த்து ரசிக்கிறான். அப்படியே அவளை ஆழமாக நேசிக்கிறான்.

”நித்யா!” நிர்மல் அவளை மெல்ல அழைத்தான்.

”ம்ம் ? ” புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமல் வாசிப்பை நிறுத்தாமல் முணகினாள்.

”ரொம்ப நாளா எனக்குள்ளே ஒரு உறுத்தல், ஆசை. அதுக்கு இன்னைக்குத்தான் முடிவு ஏற்பட்டிருக்கு.”

”என்ன ? ”

”எனக்கு என் அப்பா வேணும். அவரைத் தேடனும்.”

”என்ன உளர்றீங்க ? ” அவள் துணுக்குற்று புத்தகத்தை மூடி அவனைப் பார்த்துத் திரும்பிப் படுத்தாள்.

”ஆமாம் நித்யா. எனக்கு அவர் வேணும், பார்க்கனும், பேசனும். தேடனும்.”

”என்ன திடீர்ன்னு சின்னக் குழந்தை போல அப்பா வேணும், அம்மா வேணும்ன்னு அடம் ? ”

”என்னவோ தெரியலை நம்ம குடும்பம், உறவில் நான் மட்டும் அந்தரத்துல அனாதை நிக்கிற உணர்வு.”

”புரியலை…?!” சிறு குழந்தையாய் உளறும் அவனைக் குழப்பமாகப் பார்த்தாள்.

”புரியும்படி சொல்றேன். உனக்கு பொறந்த வீட்டில் அம்மா, அப்பா,அக்கா,தம்பி எல்லாம் இருக்காங்க. எனக்கு என்னைத் தவிர அப்பா,அம்மா, கூடப் பொறந்த யாரும் இல்லே. அம்மா இருந்தவரை இந்தத் தாக்கம் இல்லே. அம்மா இறந்து நாம குடும்பம் குழந்தையான பிறகு திடீர்ன்னு இப்படி ஒரு தாக்கம். யோசிச்சுப் பாரு புரியும்.! ” சொல்லி மனைவி முகத்தை உற்றுப் பார்த்தான்.

விவாகரத்துப் பெற்ற தாய், மகன். நல்ல வேலை, சம்பளம். நல்ல குணநலன். வரன் வந்தது. அம்மா அப்பா முறைப்படி பார்த்தார்கள், பேசினார்கள், முடிந்தது. குடும்;பம். இவர்கள் பாத்தாண்டு கால வாழ்க்கையில் இவளுக்கு இவனையும் இவன் அம்மாவை மட்டுமே தெரியும். மற்றப்படி கணவர் அப்பா யார், அவர் எங்கிருக்கிறார், மேலும் உற்றார் உறவினர்@ சகோதரன், சகோதரி உண்டா எதுவும் தெரியாது.

”எனக்கு அவர் மேல ரொம்ப பிரியம், ஆசை, பாசம் நித்யா.” தொடர்ந்தான்.

”பின்னே ஏன் அவரை விட்டுப் பிரிஞ்சீங்க ? ” இவள் அவனைத் திருப்பிக் கேட்டாள்.

”நான் பிரியலை! அவராப் பிரிச்சி என்னை அம்மாவோட சேர்த்தார். நம்முடைய பத்தாண்டு வாழ்க்கையில் நான் மனசு திறந்து ஒன்னும் சொல்லலை. நீயும் கேட்கலை. அதற்கான சந்தர்ப்பங்களும் வாய்க்கலை. இன்னைக்குச் சொல்றேன் கேள்.” சொல்லி எழுந்து அமர்ந்தான்.

நித்யாவும் எழுந்து அமர்ந்து கேட்க தயாரானாள்.

”எனக்கு அப்போ வயசு நாலு. மழலையர் படிப்பு. அப்பா அம்மா ரெண்டு பேருமே பக்கத்துப் பக்கத்து ஊர்களில் பள்ளி ஆசிரியர்கள். தாத்தா பாட்டியோட கூட்டுக்குடும்ப வாழ்க்கை. தம்பதிகளுக்குள் என்ன தகராறோ எனக்குத் தெரியாது. அப்பா மேல வருத்தப்பட்டு அம்மா விவாகரத்து வேணும்ன்னு கோர்ட் வரை போனாள். அப்பாவுக்கு அம்மாமேல ரொம்ப ஆசை, பாசம். விவாகரத்துக்காக வருத்தப்பட்டாலும் தடுக்கலை. தங்களுக்கு விவாகரத்து கிடைச்சுடும் என்கிற காலம் நெருங்கும்போது…. பிரிஞ்சு போற மனைவிக்கு யார் துணை என்கிற அக்கரை. விளைவு…? அந்த புரியாத வயதிலும் எனக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்லி அம்மாவுக்கு நீதான் துணையாய் இருக்கனும், உன்னை விட்டால் வேறு ஆள் கிடையாதுன்னு மனசை மாத்தினார். கோர்ட்டுல அம்மா உன்னைக் கேட்பாள். நீதிபதியும் உன் விருப்பத்தைக் கேட்பார். அம்மாவோட போறேன் அம்மா வேணும் சொல்லு அனுப்பி வைப்பாங்க. சொன்னார். அவர் சொன்னபடி செய்தேன். வந்தேன்.”

”விவாகரத்துப் பெற்றும் அம்மாவுக்கு அப்பா மேல உள்ள வக்கிரம் தீரலை. அவர் முகத்துல விழிக்கக் கூடாது, அவர் மூச்சுக் காத்து மகன் மேல் பட்டு பிள்ளை மாறி பிரியக் கூடாது, அருகில் இருந்தால் இதெல்லாம் நடக்கும், தமிழ் நாட்டிலேயே இருக்கக் கூடாதுன்னு பெங்களுர் வந்து குடியேறிட்டாள். தன் படிப்புக்கு ஒரு வேலையைத் தேடி என்னை வளர்த்து ஆளாக்கி உன்னைத் தேடி கட்டி வைச்சு கண்ணையும் மூடினாள்.” முடித்தான்.

”நீங்க அம்மாவோடு வந்தபிறகு அப்பா நெனப்பே இல்லையா தேடலையா ? ”

”ஆரம்பத்தில் நான் அப்பா,அப்பான்னு அழுது, அடம். அம்மா என்னை மிரட்டி அடிச்சும் என் ஆர்ப்பாட்டம் குறையலை. தோத்து கடைசியாய் உன்னைவிட்டா எனக்கு யார் துணைன்னு என்னைக் கட்டிப் பிடிச்சு அழுதாள். பாவம் விட்டுட்டேன்.” என்றான்.

2

நித்யாவிற்குக் கணவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

”அப்பாவைத் தேடியே ஆகனுமா ? ” கேட்டாள்.

”கண்டிப்பா.! நாளைக்கு என் பிள்ளைங்க…..அம்மா தாத்தா பாட்டி இருக்காங்க, அப்பா தாத்தா பாட்டி இல்லையான்னு என்னைக் கேட்கக் கூடாது, குழம்பக் கூடாது. அப்பம்மா பாட்டியைப் பார்த்துட்டானுங்க. அப்பப்பா பாட்டனைப் பார்;க்கலை. அவர் இருக்கார்ன்னு காட்டனும். என் வேர் அவர்களுக்குத் தெரியனும். நான் ரொம்ப அனாதையாய்த் தெரியறேன் நித்யா!” நிர்மல் குரல் அடைக்கச் சொல்லி கலங்கினான்.

இவளுக்குக் கணவனைப் பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது. மனம் குழைந்தது.

ஆளைத் தேற்றும்விதமாய் அவனை நெஞ்சில் சாய்த்து, ”அவர் எங்கே இருக்கார்ன்னு தெரியுமா ? ” வாஞ்சையாய்க் கேட்டாள்.

”தெரியாது.” கண் துடைத்தான்.

”எப்படி கண்டு பிடிப்பீங்க ? ”

”நாங்க வாழ்ந்த பூர்வீகக் கிராமத்துல போய் விசாரிச்சா தெரியும்.”

”இப்போ அவருக்கு வயசு என்ன இருக்கும் ? ”

”என் வயசுல முப்பதைக் கூட்டிக்கோ.”

”நாப்பத்தஞ்சும் முப்பதும் எழுபத்தஞ்சு!”

”அதுல அஞ்சு கழி. எழுபது.!”

”கேட்கிறேன்னு தப்பா நெனைக்காதீங்க. மாமா உயிரோடு இருப்பாரா ? ”

”இருப்பார்;! இருக்கனும்.!!!”

”இல்லாத மாயமானைத் தேடப் போறீங்களோன்னு கவலையாய் இருக்கு.”

”இருக்கா இல்லையான்னு தேடினால்தான் தீர்வு கிடைக்கும் நித்யா.”

”அடுத்த சந்தேகம்.”

”கேள்.”

”மாமாவுக்கு இந்த வயசுல உங்களை அடையாளம் தெரியுமா, இல்லே… உங்களுக்குத்தான் அவரை அடையாளம் தெரியுமா ? ”

”பெத்தவருக்குப் பிள்ளையை அடையாளம் தெரியும். எனக்கும் அவர் முகம் தெரியும். ”

”எனக்கென்னவோ இது வீண் கஷ்டம் தெரியுது.”

”கஷ்டம்தான். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. பரவாயில்லே.”

இவளுக்கு என்ன சொல்வது தெரியவில்லை.

”நித்யா ! நான் வாழ்க்கையில் நிறைவாய் இருக்கேன். அதில் குறை கூடாது. முயற்சி செய்வதில் தப்பே இல்லே.”

”உங்களுக்கு அம்மா அப்பா இல்லா குறையை என் அம்மா அப்பா நிறைவு செய்யலையா ?”

”என் மேல் பரிதாப்பட்டு பாசம் காட்றாங்க. ஆனா.. அது எனக்கு அவுங்க என்மேல அனுதாபப்பட்டு போடுற பிச்சை. அதுவே எனக்கு உள் காயமாய் உறுத்துது. என் மேல பச்சாதாபப்படுறாங்களேன்னு வருத்தமாய் இருக்கு. இது என்னோட சுய இரக்கம், தாழ்வு மனப்பான்மை. என்பது எனக்கு நல்லா தெரியுது. இதிலேர்ந்து நான் விடுதலை ஆகனும்ன்னா நான் என் அப்பாவைத் தேடியே ஆகனும்.!” அழுத்தமாய்ச் சொன்னான். அந்த அழுத்தத்தில் உறுதி இருந்தது.

நிர்மல் பேச்சிலிருந்து கணவன் மனநிலையும் கஷ்டமும் நித்யாவிற்குத் தெரிந்தது. இதற்கு வழி ? விட்டுப் பிடிப்பதுதான் சரி. புரிந்தது. இளகினாள்.

”சரி. உங்க விருப்பம் செய்யலாம். எப்போ தேடப் போறீங்க.? ”

”நாளைக்கேக் கிளம்பலாம்.”

”சரி. அவரைத் தேடி கொண்டு வாங்க. நானும் பார்க்கறேன்.”

”வேணாம்.! இப்பவே கொண்டு வர்றேன்.!” சொல்லி….சடக்கென்று எழுந்து அகன்று அடுத்த அறைக்குள் நுழைந்தான்.

‘ஒளித்து வைத்திருப்பவரைக் கொண்டு வரப்போகிறாரா ?!’ சட்டென்று நித்யா துணுக்குற்றாள்.

ஆனால் சிறிது நேரத்தில் நிர்மல் தனியேதான் வந்தான். கையில் ஏதோ இருந்தது.

இதுதான் என் அப்பா ! தபால் கார்டு அளவில் பாதியை எடுத்து நீட்டினான்.

வாங்கிப் பார்த்த நித்யா….அதில் நிர்மல் உருவத்தில் அவர் நின்றார்.

”இது தம்பதிகள் ஜோடியாய் எடுத்த புகைப்படம் நித்யா. தன்னோடு கணவர் புகைப்படத்தில் கூட இருக்கக்கூடாதுன்னு அம்மா எடுத்து வெட்டிப் போட்டாள். நான் எடுத்துப் பத்திரப்படுத்தினேன். இதையும் ஒரு நாள் கண்டு பிடிச்சு தூக்கி எறிய முயற்சி செய்தாள். நான் உன்னோடு இருக்கனும்ன்னா கொடுன்னு மிரட்டி வாங்கி பத்திரப்படுத்தினேன்.” சொன்னான்

‘ஒரு பெண்ணால் எந்த அளவிற்கு இப்படி கணவனை வெறுத்து ஒதுக்க முடியும்? இப்படி வெறுக்கும் அளவிற்கு அவன் மேல் அப்படி என்ன கசப்பு ? ‘ நித்யாவிற்குள் சிந்தனை ஓடியது.

”இதை வைச்சி என்ன செய்யப் போறீங்க ? ” கேட்டாள்.

”நிறைய ஐடியா இருக்கு. இந்த புகைப்படத்தின் கீழே… ‘அன்பு அப்பா! சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் நான் ஐந்து வயதாய் இருக்கும் போது தங்களைத் தொலைத்தேன். தற்போது தேடுகிறேன். தாங்கள் இந்த விளம்பரத்தைக் கண்டவுன் சந்திக்கவும், அல்லது தகவல் தெரிவிக்கவும். இவர் சம்பந்தமாக தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும் !’ அப்படின்னு தமிழ், ஆங்கில தினசரிகளில் விளம்பரம் கொடுத்தால் நிச்சயம் எங்கிருந்தாவது ஏதாவது ஒரு பதில் வரும். அடுத்து…. இன்டர் நெட்டில் உள்ள என் முகப் புத்தகத்தில் இதே விளம்பரத்தைச் செய்தாலும் பலன் இருக்கும். பத்து நாள்ல இது சம்பந்தமா எந்தவித தகவல்களும் இல்லேன்னா…..அடுத்து களத்துல இறங்கி தேடல். இதுதான் நான் பல நாளா யோசிச்சு வைத்திருக்கம் திட்டம்.” சொன்னான்.

நித்யாவிற்கு கணவன் யோசனை திருப்தியாய் இருந்தது.

”அப்புறம் ? ” ஏறிட்டாள்.

”தேடலின் முதல் கட்டம் சொல்றேன். அப்பா, தாத்தா வாழ்ந்த பூர்வீக ஊர் கும்பகோணத்துக்கு அருகில் இருக்கு. அங்கே போனால் ஆள் இருந்தா பிடிச்சுக்கலாம், இல்லேன்னாலும் அங்கிருப்பவர்களைக் கேட்டு விபரம் சேகரிச்சுக்கலாம்.”

”அங்கே மாமா கண்டிப்பா இருப்பார்;, விபரம் கிடைக்கும்ன்னு எதிர்பார்க்கிறீங்களா? ”

”நிச்சயமாய் எதிர்பார்க்கிறேன். அது தாத்தா பரம்பரையாய் வாழ்ந்த ஊர். அவர் பூர்வீகக் குடி, மிராசு. கண்டிப்பாய் நமக்குத் தேவையானது கிடைக்கும்.!” உறுதியாய்ச் சொன்னான்.

”உங்க பெரியப்பா, சித்தப்பா பாகம்; பங்கு பிரிச்சு வெளியேறி இருக்கலாமில்லையா ?”

”அப்பா மட்டும் தாத்தா பாட்டிக்கு ஒரே ஆண் வாரிசு. அடுத்தெல்லாம் அப்பாவுக்கு ஐந்து தங்கைகள். அத்தைகளெல்லாம் திருமணமாகி போய் பாகம் பங்கு பிரிச்சுக் கொடுத்து தாத்தா செத்துப் போயிருந்தாலும் அப்பா அந்த ஊரை விட்டு வெளியே போக வாய்ப்பே இல்லே. அப்படியே போயிருந்தாலும் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கும். இல்லேன்னாலும் அத்தைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். அங்கே போய் அப்பா, தாத்தா அந்த குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்.”

”உங்க அப்பாவுக்கு மறுமணம் ஆகி குழந்தை குட்டிகளோடு இருந்தால் உங்க சந்திப்பு அவருக்குத் தர்மசங்கடம், சங்கடத்தை ஏற்படுத்தும். இதனால் அவர் உங்களைப் பார்க்கத் தவிர்க்கலாமில்லையா ? ”

அப்பா மறுமணம் செய்ய வாய்ப்பில்லே. அம்மா போல அவரும் தனிச்சே இருக்கலாம்.! ஒருவேளை அப்பா, தாத்தா பாட்டி வற்புருத்தலுக்காக மறுமணம் முடித்து பிள்ளை குட்டிகளோடு இருக்கலாம். அப்படி இருந்தாலும் அவர் என்னைப் பார்த்துச் சந்தோசப்படுவார். என் சந்திப்;பில் அவருக்கோ அவர் மனைவி மக்கள் குடும்பத்துக்கோ ஏதாவது சங்கடம் இருந்தாலும் நான் இங்கே பாகம் பங்கு கேட்க வரலை. அப்பா பாசம் உங்களைப் பார்க்க ஆசையேத் தவிர வேற எதுவும் இல்லேன்னு கறாராய்ச் சொல்லி அதைத் தவிர்ப்பேன். ”

”நான் அதைச் சொல்லலை. மாமா முதல் திருமணம் மறைச்சி மறுமணம் முடிச்சிருக்கலாம். அப்பாவிற்கு உங்களைச் சந்திக்க ஆவல் சந்தோசமாய் இருந்தாலும் அவர் மனைவி வருத்தப்படுவாள். இதனால் அவர் குடும்பத்தில் குழப்பம், சந்தோசப் பாதிப்பு….ஏன் பிறந்த குழந்தைகள்கூட மதிக்காது இல்லையா ? ”

”நிறைய குழப்பங்கள் இருக்கு நித்யா. தயங்கினால் முட்டுக்கட்டைகள்தான் விழுமேத்தவிர முயற்சி இருக்காது. முடிவு எடுத்தப்பின் எதையும் ஓரளவிற்குத்தான் யோசிக்கனும், அடுத்துத் துணியனும் அதுதான் சரி.”

”மாமா, இன்டர் நெட் உபயோகம் தெரிஞ்சு வைச்சிருக்கிற அளவுக்கு விபரமான ஆளா ? ” சந்தேகமாக் கேட்டாள்.

3

”அப்பா சகலமும் தெரிந்தவர் நித்யா. அப்பவே அவருக்கு எல்லாத்தையும் கத்துக்கனும்ன்னு ஆர்வம். தவறி..அவருக்குத் தெரிய வாய்ப்பில்லேன்னாலும்…அவருக்குப் பிறந்த மக்கள் என்னைப் போல் இந்தக் காலப் பிள்ளைகள். அவர்கள் படிப்பிற்காக வீட்டில் அலைக்கற்றைகள் வசதிகள் இருக்கும். அவர் பார்க்கலைன்னாலும் அவர் பிள்ளைகள் பார்த்து சொல்லிடுவாங்க. அதனால் இந்த வழியும் நமக்கு வீணில்லே. பிரயோசனம்.”

‘மனிதனுக்குள் ஒரு முடிச்சு விழும்வரைதான் குழப்பம், குதர்க்கம் எல்லாம். விழுந்து தெளிவுற்றபின் அது குறித்து மேன்மேலும் பேசினால் வாக்குவாதங்கள்தான் தொடருமேத் தவிர….தீர்வாகாது!.’ – நித்யாவிற்கு இந்த உண்மை நிதர்சனமாகத் தெரிந்தது.

”சரிங்க. உங்க விருப்பம்.” சொல்லி நிம்மதியாகப் படுத்தாள்.

நிர்மல் படுக்கவில்லை. மனைவியிடம் அனுமதி பெற்றுவிட்ட உற்சாகம். உள்ளம் சுறுசுறுப்படைந்தது. அதே சுறுசுறுப்பில் கணணி முன் அமர்ந்தான். நித்யாவிடம் சொல்லியது போல் முகப்புத்தகத்தில் விளம்பரத்தைப் பதிவு செய்தான். தினசரிகளில் கொடுக்க அதை அப்படியே ஒரு தாளில் பதிவிறக்கம் செய்து பத்திரப்படுத்தி வந்து படுத்தான்.

காலை. முதல் வேலையாக அதை எடுத்துக் கொண்டு தினத்தந்தி, தினமலர், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் தினசரி நிருபர் அலுவலகங்கள் தேடி கொடுத்து விட்டு அலுவலகம் சென்றான்.
மறுநாள்….தான் கொடுத்த விளம்பரம் அந்தந்த தினசரிகளில் வந்திருக்கிறதா என்று ஆராய்ந்தான். அவன் கொடுத்தது அனைத்தும் ஒரு எழுத்து விடாமல் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் வந்திருந்தது.

ஒரு வாரம் காத்திருப்பில் அந்த விளம்பரங்களினால் எந்த வித பயனும் இல்லை. ஒரு தபால், கைபேசி அழைப்பு, கதவு தட்டல் நிகழ்வு… எதுமில்லை.

விளம்பரம் யார் கண்ணிலுமா படவில்லை ? நிர்மலுக்கு வியப்பாய் இருந்தது.

‘மாமா இல்லையா, அவர் சம்பந்தப்பட்டவர்கள் எவர் கண்ணிலும் படவில்லையா ? ‘ கணவனைப் பார்த்து மனைவி குழம்பினாள்.

”நித்யா !” நிர்மல் அழைத்தான்.

”என்ன ? ”

”நான் கிளம்பறேன்.”

”எங்கே ? ”

”நான் சொன்னபடி அப்பா, தாத்தா வாழ்ந்த பூர்வீக இடத்துக்கு.”

”எப்போ ? ”

”இன்னைக்கு ராத்திரி.”

”எப்படி இப்படி உடனே ? ”

”முன்னேற்பாடாய் சொகுசு பேருந்துல முன் பதிவு செய்திருக்கேன்.”

”தமிழ்நாடு. கும்பகோணம் பக்கம் கிராமம். இடம் தெரியுமா ? ”

”இடம் மாறாது. மனசுல பசுமையாய் இருக்கு. காலமாற்றம் அங்கே மனிதர்கள் மட்டும் மாறி இருப்பாங்க. நான் கிளம்பறேன். நீ குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி பத்ரமா இரு.”

”குழந்தைங்க கேட்டா என்ன சொல்ல ? ”

”அலுவலக விசயமா ஊருக்குப் போயிருக்கேன். திரும்ப ஒரு வாரம், பத்து நாள் ஆகும்ன்னு சொல்லு ? ”

”ஏன் உண்மையைச் சொன்னாலென்ன ? ”

”சொல்லலாம். அவர்கள் மனதில் எதிர்பார்ப்புகள் வரும். நான் அப்பா கிடைக்காமல் வெறுமனே திரும்பினால்… ஏமாறுவார்கள். இந்த வீண் ஏமாற்றம் தேவை இல்லாதது.”

”சரி. நீங்க சொன்னபடியே சொல்றேன். பத்ரமா போய் பத்ரமா திரும்புங்க.”

நிர்மல் சரி என்று தலையசைத்து சூட்கேசில் பேண்ட், சட்டைகள் எடுத்து வைத்து மறக்காமல் ஏ.டி.எம் கார்டையும் எடுத்து பயண ஏற்பாடுகளில் ஆயத்தமானான்.

இரவு 9.00 மணிக்கு வீட்டை விட்டு பெங்களூர் பேருந்து நிலையம் வந்து முன் பதிவு செய்த பேருந்தில் ஏறி அமர்ந்தான். பயணிகள் நிரம்பி அது புறப்பட….. இவனுக்குள் கோபுரங்கள் நிறைந்த கும்பகோணத்தைத் தாண்டி உத்திரை கிராமம் விரிந்தது. வடக்கே ஒரு கிலோ மீட்டருக்குள்….காவிரி கிளை வடிகால் நதி கொள்ளிடம் ஆற்றுப் பாசனத்தில் கொஞ்சும் ஊர். எங்கு பார்த்தாலும் நெல், கரும்பு, சோளம், கம்பு, இத்தியாதி பயிர்கள்…… என்று பசுமை, பசுமை. ஊர் ஆரம்பத்திலேயே ஒரு குளம். அதன் வடக்குக் கரையை ஒட்டி மேற்கே கிழக்கு மேற்காக அக்கிராகத் தெரு. எல்லாம் சுத்து கட்டு ஒட்டு வீடுகள். முதல் வீடு நடுப்பண்ணை. அது மட்டுமே அக்கிரகாரத்திற்கு அடையாளமாய் பிராமணக்குடும்பம். இரண்டாம் வீடு முதல் பண்ணைக்கு சேமிப்பு இடம். அடுத்துப் பெரியபண்ணை, இவன் தாத்தா பாட்டி பூர்வீகம். கடைசி சின்னப்பண்ணை, மரைக்காயர் பண்ணை ஆளில்லா வீடுகள். முதல் வீட்டிற்கும்,இவன் வீட்டிற்கும் நேரெதிரில் குட்டிக் குட்டித் தேர்களாகக் குந்தி இருக்கும் நெற்களஞ்சிய இடங்கள். தெரு கடைசியில் கிழக்கு முகமாக கீற்றுக் கொட்டகையில் ஒரு பிள்ளையார். அதற்குத் தெற்கே வடக்குத் தெற்காக நீண்டு பரந்த இடம். சுற்றுப்பட்ட வயல்களுக்கான அறுவடைக் களம்.

இந்த தெருவிற்குப் பின் வடக்கே இரு தெருக்கள். அவைகளை இணைக்கும் தெற்கு வடக்கு சாலைகள். எல்லாரும் பண்ணைகளில் வேலை செய்யும் கூலி ஆட்கள். அந்த தெரு கடைசிகளில் ஒரு காமன் கோயில். அது இவனுக்கத் தெரிந்து தாத்தா கட்டியது. கும்பாபிஷேகத்தன்று தாத்தா தலையில் சரிகைத் துண்டு முண்டாசு பரிவட்டம் கட்டி தண்ணீர் கலசத்துடன் ஏறி அபிஷேசகம் செய்தது இன்னைக்கும் இவனுக்குள் பசுமை மாறாத காட்சி.

அதைத் தாண்டி வடக்கே….ஒரு ஈச்சங்காடுகளுக்கு நடுவில் ஒற்றையாய் ஊரை மிரட்டும் ஒர் ஐயனார் கோயில். இவர் இரவில் குதிரை ஏறி ஊர் சுற்றி காவல் காப்பார் என்ற கதை. அதற்கு அடையாளமாய் பக்தர்;கள் காணிக்கையாய்ச் செலுத்திய மண்ணில் பதித்த சிதைந்தும் சிதையாமலும் இருக்கும் மண் சிப்பாய்கள், குதிரைகள். வருடா வருடம் வயல்களுக்கு நடுவில் இருக்கும் அந்தத் தனித் தீவு சுத்தம் செய்யப் பட்டு பந்தல் போட்டு திருவிழா நடக்கும். கொண்டாட்டமான ஊர். தெருக்களில் இவன் பாட்டியோடு தலை காட்டினான்ல் போதும் எல்லாரும் இவனைப் ‘பெரிய பண்ணைப் பேரன்!’ என்று கொஞ்சுவார்கள். – நிர்மல் இந்த நினைவுகளுடனேயே உறங்கிப் போனான்.

காலை கண் விழிக்கும் போது பேருந்து கும்பகோணத்தில் நின்றது. எல்லாப் பயணிகளுடன்; இறங்கியவனுக்கு… தாய் மண்ணில் கால் வைத்த சிலிர்ப்பு. அதை விநாடி நேரம் அனுபவித்துவிட்டு சூட்கேசுடன் நடந்து அருகில் உள்ள விடுதியில் நுழைந்து அறை எடுத்து காலைக்கடன்கள் முடித்து, குளித்து சாப்பிட்டு விட்டு நிமிர்ந்தான். அறையைப் பூட்டி விட்டு அடுத்து உத்திரையை நோக்கிப் பயணப்பட மீண்டும் பேருந்து நிலையம் வந்தான்.

எந்த பேருந்தில் ஏற வேண்டும் என்று பார்த்தான். எந்த பேருந்திலும் உத்திரை பேர் இல்லை. எவரிடமும் விசாரிக்காமல் பேருந்து பெட்டிக் கடையில் விசாரித்தான்.

”திருப்புறப்பியம் அல்லது இன்னமூர் நகரப் பேருந்துல ஏறினா போகும்.” சொன்னார்.

திருப்புறப்பியம் இவன் அம்மா, அப்பா வேலை செய்த ஊர் படித்த பள்ளி ஞாபகத்திற்கு வந்தது.

அதை ஒட்டி இருந்த நகரப்பேருந்து நிறுத்தம் வந்து….திருப்புறப்பியம் பேருந்து ஏறினான். அது சர்க்கரைப் படித்துறை, காவேரி புதுப்பாலம், யானையடி என்று கூவிக்கொண்டு கிராமத்திற்குள் நுழைந்தது.

அரை மணி நேரத்தில் உத்திரை ! நடத்துனர் குரல் கொடுத்து இறக்கினார்.

ஊரே மாறிப் போயிருந்தது. கிராமத்தின் எடுத்த எடுப்பிலேயே சாலையை ஒட்டி மேற்கால் அல்லியும் தாமரையும@; விராலும் கெண்டையுமாய் துள்ளி விளையாடி ஊரேக் கொண்டாடியக் குளம் காணாமல் போய்…..ஆகாசத் தாமரைகளால் மொத்தமும் மூடி இருந்தது. படித்துறைகள் இடிந்து பாழடைந்து கிடந்தது. அதன் ஓரத்தில் இதன் அழிவிற்குக் காரணமான கிராம பஞ்சாயத்து குடி நீர் குழாய் இருந்தது. அதிலிருந்து வழியும் உபயோகப்படுத்தப் பட்ட நீர் குளத்தில் ஓடி மாசு படுத்தியது.

கிராமத்தில் குடி நீர், குழாய் மூலம் ஊருக்குள் வராதவரை குளம், குட்டை என்று மழை நீர் சேகரிப்பு இடங்களெல்லாம் மக்கள் பயன்பாட்டு புழுக்கத்தில் இருந்து பராமரிப்பாக இருந்தது. அது நுழைந்த தினத்திலிருந்து….மொத்தமும் பாழ். மக்கள் குளம் குட்டைகளை மறந்து மாடு கன்றுகளைக் கூட குழாயடிகளில் குளிப்பாட்டுகிறார்கள். விளைவு…?

கோயில், குளம், வீடாய் எதுவாய் இருந்தாலும் பயன்படுத்தாதெல்லாம் பாழ் !

உச்சி வெயிலில் ஊருக்குள் ஆள் நடமாட்டம் கம்மியாக இருந்தது. எதிரும் புதிருமாக கடந்த ஒன்றிரண்டு முகங்கள் இவனுக்குத் தெரியாத ஆட்களாக இருந்தது. நடந்து… குளத்தை ஒட்டிய அக்கிரகாரத்தில் நுழைந்தான். முதல் வீடு அன்றைக்குப் பார்த்தது போலவே இன்றும் இருந்தது. தெருவில் அதிகம் நடமாட்டம் இல்லாததால். மரங்களிலிருந்து உதிர்ந்த இலைகள் ஒதுக்கப்படாமல் குப்பையாக கிடந்தது.

4

முதல் வீட்டில் குடித்தனம் இருப்பதற்கடையாளமாய் வாசல் அரைவட்டமாய்க் கூட்டி, கோலம் போட்டு சுத்தமாக இருந்தது. அதை ஒட்டி உள்ள சேமிப்பு கிடங்கு வீடு எப்போதும் போல் பூட்டி இருந்தது.

அடுத்திருந்த இவன் பூர்வீக வீட்டைப் பார்க்க அதிர்ச்சி. வாசலும் திண்ணையும் மட்டுமிருக்க… பின்கட்டு முழுதும் இடிந்து விழுந்து குட்டிச்சுவர்.

அடுத்த சின்னப்பண்ணை, மரைக்காயர் பண்ணை வீடுகள் இருந்த இடம் தெரியவில்லை. காடுகள் மண்டி கட்டாந்தரைகளாக இருந்தது.

பிள்ளையார் கோயில் மட்டும் தற்போது கட்டி முடித்து பயன்பாட்டிற்கு வந்தது போல் சின்னக் கோபுரக் கோயிலாக உருமாறி இருந்தது. அதன் தென் புறத்தில் அறுவடைக்காலக் களம் வெறிச்.

நிர்மல் இருந்து விட்டுப் போன இடம் இப்படி இடியாய்த் தாக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஏதோ கொஞ்சம் மாறிப் போயிருக்கும் என்று எதிர்பார்த்து வந்தவனுக்கு இப்படி உருக்குலைந்து போயிருக்கும் என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

மெதுவாய் நடந்து முதல் வீட்டு வாசலில் நின்றான். வாசல் வராண்டா. அதைத்தாண்டி திண்ணை. உள்ளே சன்னல் கதவு திறந்து வாசல் கதவு சாத்தி இருந்தது.

”சார்ர்ர்….” அழைத்தான்.

யாரும் எட்டிப் பார்க்கவில்லை, குரல் கொடுக்கவில்லை. மறுபடியும் அழைக்க….

”ஏன்னா! வாசலில் யாரோ நிக்கறா !” எலுமிச்சை நிறத்தில் அழகான பெண்ணின் முகம் சன்னலில் தெரிந்து மறைந்தது.

”யாருடீ ? ” ஆண் குரல்.

”நேக்கென்னத் தெரியும். பாருங்கோ.”

அடுத்த நிமிடம் ஐம்பது வயது ஆள் எட்டிப் பார்த்தார். பின் அவரே வாசல் கதவைத் திறந்து வெளியே வந்து, ”யார் நீங்க ? ” கேட்டார்.

”நா….நான் பக்கத்து வீடு, பெரிய பண்ணை!”

”அங்கே ஆளே இல்லையே!….. நீங்க எங்கிருந்து வர்றேள் ?!” கிராமத்திற்கு அறிமுகமில்லாத இவனை மேலும் கீழுமாகப் பார்த்தார்.

”நான் பெங்களூர். இம்போசிஜஸ் இன்ஞ்னியர்.”

”உள்ளே வாங்கோ.”

மனிதனுக்கு இல்லாத மதிப்பு, மரியாதை பணத்திற்கும் பதவிக்கும் உடன் வந்தது.

”பரவாயில்லே.”

”நான் இந்த ஊர் பூர்வீகக் குடி இல்லே. வந்து நாலு வருசம் ஆச்சு. பக்கத்துல சுவாமிமலையில தாசில்தாரா இருக்கேன். இது என் ஒன்னு விட்ட மாமா பையன் வீடு. அவன் இந்த வீட்டையும் கொஞ்ச நிலத்தையும் மட்டும் எனக்கு வித்துட்டு பாக்கி எல்லாத்தையும் வித்து சுருட்டிட்டு சென்னையோட போய்ட்டான். அவன் செய்ஞ்சது ரொம்ப நல்ல காரியம். இப்போ தண்ணி, கூலி ஆள் பஞ்சம், விலையேற்றம்ன்னு விவசாயமே பாழ். நீங்க யார் சொன்னேள் ? ”

”நான் பெரிய பண்ணை ஆத்துப் பேரன்.”

”பிராமணாளா ? ”

”இல்லே. உங்க பேச்சுல நேக்கும் அப்படி வந்துடுச்சு. தவிர்க்க முடியலே.”

”இல்லே. நக்கல்!”

”மன்னிக்கனும். எதிரி பேசினா பேசுவாளையும் உடன் பிடிச்சு விடும் தொத்து வியாதி. நான் இந்த ஊரை விட்டுப் போய் நாப்பது வருசமாயிடுச்சு. தேடி வந்திருக்கேன்.”
அவருக்கு இவன் மீது வந்த நல்லெண்ணமும் சட்டென்று விலக….

”காசிநாதா !” வழியில் சென்ற இளைஞனை கூவி அழைத்தார்.

”சாமி !” அவன் சட்டென்னு பவ்வியமாகி இவர்கள் அருகில் வந்தான்.

”இவர் பெரிய பண்ணைக்குச் சொந்தமாம். உன் பாட்டன்கிட்ட கொண்டு விடு. விசாரிச்சுக்கிடட்டும். .” சொல்லி வீட்டிற்குள் சென்றார்.
நிர்மல் காசிநாதனுடன் சென்றான்.

குடிசைக்குப் பின்புறம் கயிற்றுக் கட்டிலில் தொன்னூறு தொன்னூற்றைந்தைத் தொடும் அந்த வயசானவர் நீண்டு மெலிந்து நாறுந்தோலுமாய்ப் படுத்திருந்தார்.

நிர்மலுக்கு இவரை எங்கோ பார்த்தது போல் தோன்றியது. மூளையைக் கசக்கினான்.. தாத்தாவின் நண்பர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.!

”தாத்தா! உங்களைப் பார்க்க வந்திருக்கார். ஐயர் விட்டார். பேசுங்க.” முதுமை காது கேட்காது போல. அவரிடம் கொஞ்சம் உரக்கக் கத்தினான் காசிநாதன்.

”நான் பெரிய பண்ணை பேரன் நிர்மல்!” இவனும் உரக்கக் கூவினான்.

அவர் விழிக்க….. மீண்டும் இரைந்தான்.

‘புரியலை ?’ என்பது போல் அவர் கையை மட்டும் அப்படி இப்படி அசைத்தார் ”தாத்தா ! இவர் பெரிய பண்ணை பேரன் !” காசிநாதன் அதிக சத்தத்தில் அவர் காதில் கூவினான்.

”அன்பரசன் பையனா ? ” அவருக்கு இப்போது காது கேட்டது.

”ஆமாம் தாத்தா !” நிர்மல் சத்தமாக சொல்ல தொண்டை வலித்தது.

காசிநாதன், தாத்தா அருகில் அமர்ந்து பேசுவதற்காக ஒரு மர ஸ்டூல் கொண்டு வந்து கட்டிலருகில் போட்டான். நிர்மல் அமர்ந்தான்.

”அம்மா எப்படி இருக்கா ? ”

”இல்லே.” மேலே கைகாட்டி, ”எங்கே என் தாத்தா,பாட்டி, அப்பா….? ” சைகை காட்டி கேட்டான்.

”யாரும் இல்லே. அந்த நல்லவங்களெல்லாம் போனபிறகு ஊரும் சிதைஞ்சு போச்சு.”

”புரியலே….!” இப்போதும் அப்படியே சைகையும் குரலும் கலந்த கலவை.

”விவாகரத்தாகி அம்மாவும் நீயும் போன பிறகு அப்பா கலியாணமே வேணாம்ன்னு இருந்தார். ஆனா… பக்கத்து வீட்டுப் பிராமணப்பெண் சாவித்திரி கேட்கலை. பக்கத்துப் பக்கத்து வீடு. சிறு வயசிலேர்ந்து ஒன்னா விளையாடி பழகினதால எப்போதும் போல் அப்பா திருமணத்துக்குப் பிறகும் அவுங்க அப்படிப் பழகினாங்க. உன் அம்மா இதைத் தப்பாப் புரிஞ்சு ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்குன்னு புருசனோட தினமும் சண்டை. அவனை நிம்மதியாய் இருக்க விடாமல் தொந்தரவு. ஒரு கட்டத்துக்கு மேல உங்க அம்மாவாலேயே தாங்க முடியாமல் இதைக் காரணம் காட்டி விவாகரத்து வாங்கி பிரிஞ்சாள். இந்த விபரம் தெரிஞ்ச அந்த சாவித்திரி, என்னால உன் வாழக்கைக் கெடக் கூடாது. நானே கலியாணம் பண்ணிக்கிறேன்னு ஒத்தக் கால்ல நின்னாள். யார் புத்தி சொல்லியும் கேட்கலை. கடைசியாய் அவளே உன் அப்பன் வீட்டுக்குள் புகுந்து உட்கார்ந்து, நான்தான் இந்த வீட்டு மருமகன். நான் அன்பரசனோட வாழ்வேன் இல்லே சாவேன்னு அடம்பண்ணினாள். வழி இல்லாமல் பெத்தவங்களே….உன் அப்பாவுக்கு அவளைத்; திருமணம் செய்து முடிச்சுட்டு…வீடும் கொஞ்சம் நிலமும் விட்டுட்டு மட்டும் மத்ததெல்லாம் வித்து சென்னையில போய் செட்டிலாகிட்டாங்க. அதுக்கப்புறம் உன் அப்பாவுக்கு திருச்சிக்கு மாற்றல் வந்து போனார். உன் தாத்தா,பாட்டி சாகிறவரை அப்பப்போ தான் மட்டும் வந்து தலைக்காட்டிப் போனார். அவுங்களும் போனபிறகு சொத்தெல்லாம் பொண்ணுங்களுக்குக் கொடுத்துட்டுப் போனார். அப்புறம் திரும்பலை. உன் அப்பாருக்கு ரெண்டு ஆம்பளைப் புள்ள. ஒரு பொட்டப் புள்ள இருக்கிறதா கேள்வி. நான் பார்க்கலை. இங்கேயும் வந்து யார் கண்ணிலேயும் காட்டலை.” முடித்து மூச்சு வாங்கினார்.
இவனுக்குப் பார்க்கப் பாவமாக இருந்தது.

”திருச்சின்னா அங்கே எங்கே தாத்தா ? ” தன் தொண்டை வலியைப் பொறுத்துக் கொண்டு கேட்டான்.

”அதுவா…..? திருக்காட்டுப்பள்ளி.!”

”விலாசம் ? ”

”அதெல்லாம் தெரியாது. அரசாங்க பள்ளிக்கூடம்தானே. அங்கே போய் எதுன்னு கேட்டு விசாரிச்சா விபரம் தெரியும்.”

”அவரைக் கடைசியாய் எப்போ பார்த்தீங்க ? ”

”ஞாபகமில்லே. பத்து பதினைஞ்சு வருசமிருக்கும்.”

”ஆள் உயிரோடு இருப்பாரா தாத்தா ? ”

”அவன் அப்பன் வயசுல உள்ள நான் இருக்கும் போது உன் அப்பன் இருப்பான். ஆனாலும் விதி எதுன்னு சொல்ல முடியாது.”

நிர்மலுக்கு முகம் தொங்கியது.

”கவலைப்படாதே. ஆள் இருக்கான்னு நெனைச்சே தேடு. எல்லாம் நல்லபடியாய் நடக்கும்.”

”வர்றேன் தாத்தா !” விடைபெற்று எழுந்து பைக்குள் கைவிட்டு இரு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து கிழவர் கைக்குள் திணித்தான்.

”வேணாம் !” அவர் தலையை இப்படியும் அப்படியும் அசைத்தார்.

”பரவாயில்லே தாத்தா. உங்களைப் பார்த்ததுக்கு இது மரியாதை.” சொல்லி நகர்ந்தான்.

”பெரிய பண்ணைக்கே உள்ள தயாளக் குணம் வாரிசுகிட்ட அப்படியே இருக்கு. உன் அப்பனைக் கண்டா நான் விசாரிச்சதா சொல்லு.” என்றார்.

”சரி தாத்தா.” தலையாட்டி நிர்மல், காசிநாதனிடம் விடை பெற்று நடந்து கடைசியாய் அந்த ஊரை ஒரு பார்வை பார்த்துவிட்டு பேருந்து ஏறினான்.

‘திருக்காட்டுப்பள்ளியில் அப்பா கிடைப்பாரா ? ‘ மனசுக்குள் ஓட….. கைபேசி அலறியது.

எடுத்தான். நித்யா!

”சொல்லும்மா ? ”

”எங்கே இருக்கீங்க? ”

”கும்பகோணம்.”

”மாமா இருக்காரா ? ”

”கெடைக்கலை. திருக்காட்டுப்பள்ளியில் தேடணும்.”

”வெயில்ல ரொம்ப அலைச்சல் வேணாம்.”

”உன் கரிசனத்துக்கு நன்றி. பசங்க எப்படி இருக்காங்க.? ”

”நல்லா இருக்காங்க.”

”பள்ளிக்கூடம் ? ”

”கவலைப்படாதீங்க. அதெல்லாம் தவறாமப் போறாங்க.”

”வீட்டுக்கு ஏதாவது செய்தி வந்திச்சா? யாராவது போன் பண்ணினாங்களா? ”

”இல்லே. மதியம் கூட தபால் பெட்டியைப் பார்த்தேன். வெறுமையாய் இருந்துது. வந்தா சேதி சொல்றேன். வைச்சுடுறேன்.” வைத்தாள்.

5

திருக்காட்டுப்பள்ளி ! காவிரியை ஒட்டிய ஊர். அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளி பிரமாண்டமாக இருந்தது. நடுவே பெரிய விளையாட்டுத் திடல். சுற்றிலும் வகுப்பறைக் கட்டிடங்கள். கடைசியில் ஒரு ஓரம் ஒதுக்குப்புறமாய் ஆழ்குழாய் குடிநீர்த் தேக்கத் தொட்டி, கழிப்பறைகள், சுற்றுச் சுவர் என்று எல்லாமே சரியாக இருந்தது.

இது போல் அனைத்து வசதிகளுடன் எத்தனைப் பள்ளிகள் தமிழ்நாட்டில் இப்படி இருக்கும்.! வகுப்பறைகளே இல்லாமல் எத்தனையோப் பள்ளி மாணவ மாணவிகள் மரத்தடி மண்தரைகளில் அமர்ந்து, ஒரு கரும்பலகை ஆசிரியருமாய் இயங்குகின்றதை தொலைக்காட்சி செய்திகளில் காட்டுகிறார்கள். கல்விக்கென்று ஒரே துறை, ஒரே மந்திரி. பிறகு எப்படி இந்த ஏற்றத்தாழ்வு, வித்தியாசம். வாய் உள்ளவன் பிழைத்துக் கொள்வான். பலம் உள்ளவன் வெல்வான் என்கிற பாகுபாடா ?! – இப்படித்தான் நிர்மல் மனதில் ஓடியது.

சைக்கிள்கள், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள் எல்லாம் நிறைந்திருந்தது. ஒரே அளவு, வண்ணத்திலிருந்தே மாணவ மாணவிகள் சைக்கிள்கள் அரசாங்க இலவசம் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

கர்ம வீரர் காமராசர் பிள்ளைகள் வயிற்றுச் சோற்றிற்காக உழைத்து கல்வியை இழக்கக் சுடாது என்பதற்காக மதிய உணவுத்; திட்டத்தை செயல்படுத்தி பிள்ளைகளைப் பள்ளிக்கு வரவழைத்தார்.

இன்று அதுவே விரிந்து…சத்துணவு, சீருடை,காலணி, நோட்டு புத்தகங்கள்@ சைக்கிள், லேப்டாப், கல்வி ஊக்கத்தொகை, உதவித்தொகை, உயர்படிப்பிற்கென்று வங்கிக் கடன் என்று எத்தனை விரிவாக்கம்.!? – நிர்மலுக்கு வியப்பாக இருந்தது.

பள்ளிக்கூட முகப்பு நுழைவிலேயே இடது பக்கம் தகவல் பலகையும் அதில், ‘ஒழுங்காகப் படி’ என்ற வாக்கியமும், வலப்புறத்தில் தலைமை ஆசிரியர் அறையும் இருந்தது.
உள்ளே ஐம்பத்தைந்தை நெருங்கிய ஒல்லி, ஒனசலான நெடிய உருவம் சோடாபுட்டி கண்ணடி, கையில் பேனாவுடன் மேசைமீது எதையோ மேய்ந்து கொண்டிருந்தது.
தலைமை ஆசிரியர் அறையை ஒட்டிய வாசல் பெஞ்சில் நாற்பத்தைந்து விதவைப் பெண் கடைநிலை ஊழியை வெற்றிலை வாஞயுடன் இருந்தாள்.

”சாரைப் பார்க்கனும்.” நிர்மல் அவளிடம் தகவல் தெரிவித்தான்.

அவர் எழாமல் உடலை வளைத்து அறையை எட்டிப் பார்த்தாள். யாருமில்லை, போகலாம் என்பதை உறுதி செய்து கொண்ட பின் உள்ளே சென்று சேதி சொன்னாள்.

அவரிடமிருந்து வாய் வார்த்தையாய்ப் பதில் வரவில்லை. தலையசைத்தார்.

அவள் வெளியே வந்து, ”போங்க..” மெல்ல சொல்லி தன் இருக்கையில் அமர்ந்தாள்.

உள்ளே நுழைந்து எதிரில் நின்ற நிர்மலை தலைமை ஆசிரியர் நிமிர்ந்து பார்க்காமலேயே கையிலுள்ள பேனாவை விலக்காமல் எதிர் நாற்காலியில் அவனை அமரச் சொல்லி கையைக் காட்டினார். நடு நாற்காலியில் அமர்ந்தான்.

”சொல்லுங்க ? ” அவர் இப்போதும் நிமிரவில்லை.

”சார் ! நான் அன்பரசன் தலைமை ஆசிரியர் மகன் நிர்மல். பெங்களுர். அவர் விலாசம் வேணும்.” தான் வந்த விசயத்தைச் சொன்னான்.

அப்படியா ? என்று கேட்டு வேலையிலிருந்து விலகி சுதாரிப்புக்கு வந்து நிமிர்ந்த தலைமை ஆசிரியர், ”அன்பரசன் ! அப்படிப் பட்ட பேரையே நான் கேள்விப் பட்டதில்லையே!,,,’என்று ரொம்ப சர்வசாதாரணமாக சொன்னார்.

நிர்மல் திடுக்கிட்டான். ”சார்! அவர் கும்பகோணம் திருப்புறம்பியத்திலேர்ந்து இங்கே மாற்றலாகி வந்தவர்.” விபரம் சொன்னான்.

”எப்போ ? ” அவரின் அடுத்த கேள்வி.

ஆண்டு, தேதி தெரியாமல் விநாடி விழித்து, ”பதினைஞ்சு வருசத்துக்கு முன் சார் !” குத்துமதிப்பாக சொன்னான்.

அவருக்கு இப்போதும் ஆள் தெரியவில்லை. அழைப்பு மணி அழுத்தினார்

கடைநிலை ஊழியை தலைக் காட்டினாள்.

”கடைசி அறையில் உடற்பயிற்சி ஆசிரியர் வேதாச்சலம் இருப்பார் வரச் சொல்.”

அவள் அகன்று மறைந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பெரிய தொந்தி, ஏற்றி சீவிய நெற்றி, உப்பலான கன்னம், குட்டி யானையாக அவர் உள்ளே நுழைந்தார்.

‘இவரா உடற்கல்வி ஆசிரியர் ?!’ நிர்மலுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

‘இவரெப்படி மாணவ மாணவிகளுக்கு உடற்பயிற்சி அளிப்பார், செய்வார். வரிசையாக அவர்களை எதிரே நிறுத்தி. காலை இப்படித் தூக்கு, கையை அப்படித்துர்க்கு, குதி, குந்து, விளையாடு சொல்வாரோ !’ நினைத்தான்.

”சார்! உங்க பிரச்சனையை இவர்கிட்ட சொல்லுங்க. சார், இங்கே இருபதாண்டு காலமா வேலை செய்றார்.” தலைமை ஆசிரியர் தன் மீது விழுந்த பாரத்தை வந்தவர் மீது நகர்த்தினார்.

”என்ன சார் ? ‘ அவர் இவன் அருகில் அமர்ந்தார்.

”ச…சார் ! அன்பரசன் தலைமை ஆசிரியர்…..” முழுதும் முடிக்காமல் இழுத்தான்.

”ஆமா. அவருக்கென்ன ? ”

‘அப்பாடி! ஆளைத் தெரிந்து கொண்டார். ‘ நிர்மலுக்கு உயிர் வந்தது.

”அ….அவரைப் பத்தின தகவல்…..”

”ஏன் ? ”

”நான் அவர் பையன்! ”

”மகனா !? சந்தோசம். சார், ரொம்ப கறார், கண்டிப்பு. அதனால் சில பிரச்சனை, கஷ்டங்களைச் சந்திச்சார். விளைவு…. நிர்வாகமே அவருக்கு சேலத்துக்கு மாற்றல் கொடுத்து அனுப்பிச்சு.”

”தேதி, வருசம் ? ” தற்போது விழித்ததன் விளைவு…எச்சரிக்கையானான்.

வெங்கடாசலம், தலைமை ஆசிரியர் பின் புற சுவரைப் பார்த்தார். காந்தி, பாரதியார் படத்திற்குக் கீழ் பணி செய்து சென்ற தலைமை ஆசிரியர்கள் பெயர் பட்டியல் தேதி, வருடங்களுடன் இருந்தது.

நிர்மலும் அதைக் கவனித்தான். யாரையும் கேட்காமலேயே…தன் சட்டைப் பையிலிருந்து பாக்கெட் டைரி எடுத்து குறித்தான்.

”நன்றி. வர்றேன் சார் !” எழுந்தான்.

”ஒரு நிமிசம் !” அவனை அமர்த்திய வெங்கடாசலம் பையிலிருந்து தன் கைபேசியை எடுத்தார்.

”ஹலோ..!” யாருடனோ தொடர்பு கொண்டார்.

”…………………………….”

”ராமநாதன்! நான் வெங்கடாசலம் பேசறேன்;.”

”…………………..”

”அன்பரசன் தலைமை ஆசிரியர் உங்க பள்ளியிலேர்ந்துதானே ஓய்வானார் ? ”

”……………………”

”எனக்கு அவர் விலாசம் வேணும்.”

”…………………..”

”என் நண்பர் ஒருத்தர் பெங்களுர்லேர்ந்து அவரைத் தேடி வந்திருக்கார். உதவனும்.”

‘எப்படி இப்படி கேட்காமலேயே உதவும் மனிதர்கள்!’ நிர்மலுக்கு அவர் மேல் மதிப்பு மரியாதை வந்தது.

”தலைமை ஆசிரியர் விடுப்பில் இருக்கார். பைல் பார்த்துச் சொல்ல முடியாதா?! எப்படியாவது உதவனும். ரொம்ப நெருங்கிய நண்பர்.”

”……………………..”

”அவர் ஓய்வூதியம் பெறும் கருவூல அலுவலகத்தில் போய்க் கேட்டால் சரியான முகவரி கிடைக்கும்ங்குறது சரி. அதுக்கு அவர் ஓய்வூதிய எண் வேணுமே.”

”……………………”

சட்டையிலிருந்து பேனா எடுத்து அருகிலிருக்கும் வெள்ளைத் தாளை நகர்த்தி, ”சரி. சொல்லு ? ” சொல்லச் சொல்ல எழுதி முடித்து, ”உன் உதவிக்கு நன்றி. நண்பரை அனுப்பிட்டு அப்புறம் பேசறேன்.” அணைத்து, நிர்மல் பக்கம் திரும்பி, ”சார்! இது அன்பரசன் சார் ஓய்வு பெற்ற தேதி, வருசம். நீங்க இதை எடுத்துப் போய் சேலம் கருவூலத்துல காட்டி விபரம் சேகரிச்சுக்கோங்க.” கொடுத்தார்.

வாங்கிப் பார்த்த நிர்மல், ”சார் ஓய்வூதிய எண். ? ” என்றான்.

”தேவை இல்லே. தைரியமா போங்க. எங்களைப் போல் உதவி செய்ய ஆளிருப்பாங்க.”

”சேலத்துல கருவூல அலுவலகம் எங்கிருக்குத் தெரியுமா ? – தலைமை ஆசிரியர் தன் பங்கு உதவிக்குக் கேட்டார்.

”தெரியாது சார்.”

”நகர மத்தியில் இருக்கு.” இருப்பிடம் சொன்னார்.

”சரி சார் !” நிர்மல் திருப்தியாய் எழுந்து விடை பெற்றான்.

‘அங்கே இவர்களைப் போல் நல்லவர்கள் இல்லையென்றாலும் காசு பணம் லஞ்சம் கொடுத்தாவது அப்பா விலாசம் பெற வேண்டும்.!’ முடிவோடு நடந்தவனுக்குள் வேறொரு வழி உதித்தது. உடன் திரும்பி வந்து, ”சார்! அங்கே உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா ? ” இருவரையும் பார்த்துக் கேட்டான்.
தலைமை ஆசிரியர் வெங்கடாசலத்தைப் பார்த்தார்.

அவர், ”எனக்கு யாரையும் தெரியாது. என் நண்பனுக்குத் தெரியலாம். கேட்டுச் சொல்றேன். உட்காருங்க.” கைகாட்டி கைபேசி எடுத்தார்.

நிர்மல் அமர்ந்தான்.

”ராமநாதா! கருவூலத்தில் உனக்குத் தெரிஞ்ச ஆட்கள் இருக்காங்களா? ”

”……………………………”

”நண்பன் பேர் சொல்லு ? ”

”……………………….”

”பேர், முத்துவேல் முதுநிலை எழுத்தர்.! சரி. ஆள் இருந்தாலும் இல்லாட்டிப் போனாலும் அங்கே வேலை செய்யும் ஒரு ஆள் பேர் தெரிஞ்சா போதும் சமாளிச்சுக்கலாமம். யாரும் தெரியாம போய் நின்னாதான் முகம் தெரியாத ஆள்ன்னு அங்கே யாரும் உதவ முன் வரமாட்டாங்க. பேர் சொன்னால் ஆள் இருந்தாலும் லாபம், இல்லாது போனாலும் நஷ்டமில்லே. அடுத்து இருப்பவன் அவர் நண்பர்ன்னு நினைச்சு உதவுவான்.” சொன்னார்.

”நன்றி சார் !” நிர்மல் அவர்களுக்கு மனதார சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

6

சேலம் கருவூல அலுவலகம் மூன்றடுக்கு கட்டிடமாக இருந்தது. மேலே அரசாங்க கணக்கு வழக்கு அலுவலகம். கீழே கருவூலம் இருந்தது.

வாசலில் தொங்கிய கரும்பலகையில், ‘ஓய்வூதியர்கள் கவனத்திற்கு…வழக்கம் போல் இந்த மாதம் 30ந் தேதியிலிருந்து தங்கள் ஓய்வூதியத் தொகையை வங்கி மூலம் பெற்றுக் கொள்ளலாம். பயனாளிகள் அதிகாரியைச் சந்திக்கும் நேரம் காலை 10.00 – 1.00.’ எழுதி இருந்தது.

நிர்மல் அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

தெற்கு வடக்கு திசைகளில் எதிரும் புதிருமாய் ஐந்து, ஐந்து பத்து நாற்காலி மேசைகளில் ஊழியர்கள் அமர்ந்து பணியில் மூழ்கி இருந்தார்கள்.

அவர்களை மேற்பார்வைப் பார்த்து கவனிக்கும் கண்காணிப்பு அதிகாரி இரு பிரிவிற்கும் நடுவில் உள்ள மேசை நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் மூழ்கிருந்தார். கணனி உயிர்ப்பித்திருந்தது.

முத்துவேல் முகம் தெரியாத நிர்மல், யாரிடம், எப்படி விசாரிப்பது என்ற யோசனையில் ஊழியர்களைப் பார்த்தான். யாரும் நிமிரவில்லை. நேராய் அதிகாரியின் முன் சென்று, ”சார்! முத்துவேல்…” இழுத்தான்.

”என்ன விசயமா அவரைத் தேடுறீங்க ? ” நிமிர்ந்தார்.

”அ…. அலுவலக வேலையாய். நான் பெங்களூர், இம்போசிஸ்ல வேலை”

”உட்காருங்க.” மறுபடியும் வேலைக்கும் இடத்திற்கும் மரியாதை.

அமர்ந்தான்.

”முத்துவேல் இப்போ இங்கே இல்லே. சென்ற வாரம் இங்கிருந்து மாற்றலாகி கன்னியாக்குமரி பொதுப்பணித்துறையில் பணி. இப்போ உங்களுக்கு என்ன உதவி தேவை கேளுங்க.”

”சார்! இந்த தேதியில் ஓய்வான தலைமை ஆசிரியர் அன்பரசன் விலாசம் வேணும்.” தான் கொண்டு வந்திருந்த தாளை நீட்டினான்.

வாங்கிப் பார்த்த அவர், ”ஓய்வூதிய எண் இல்லே. இருந்தால் சுலபமா கண்டுபிடிக்கலாம். எதுக்கு உங்களுக்கு அவர் விலாசம். ? ” இவனை ஏறிட்டார்.

”சார். நான் அவரோட முதல்தாரத்து மகன்.!….” என்று ஆரம்பித்து எல்லா விசயத்தையும் விலாவாரியாக எடுத்துச் சொன்னான்.

அதிகாரி அவனை ஆழமாகப் பார்த்தார்.

”சார்! நான் சொல்றது சத்தியபூர்வமான உண்மை. எனக்கு அப்பாவைச் சந்திக்கிறதைத் தவிர வேற எந்த நோக்கமுமில்லே. பத்திரிக்கைகள்ல விளம்பரம் கொடுத்து பதில் இல்லாம புறப்பட்டு வந்திருக்கேன்.” சொல்லி தன் தோல் பையிலிருந்த தினசரிகளை எடுத்து அவரிடம் நீட்டி ஆதாரங்கள் காட்டினான்.

அதிகாரி பத்திரிக்கைகளை வாங்கி விளம்பரங்களைக் கவனமாக மேய்ந்தார்.

”சார் ! அவர் இருந்த இடமெல்லாம் தேடி விசாரிச்சு கடைசியாய் இங்கே வந்திருக்கேன். அவர் உயிரோடு இருந்தாலே சந்தோசம். பார்த்தால் போதும். ” பரவசப்பட்டான்.
அதிகாரிக்குள் மனம் இறங்கியது.

”அன்பரசன் அப்பா பேர் என்ன ? ”

”தாமோதரன் சார்.!” தன் தாத்தா பெயரைச் சொன்னான்.

அவர் கணனியைத் தட்டி த. அன்பரசனை ஆராய்ந்தார். ஐந்து விநாடிகளுக்குப் பிறகு…”பயப்படாதீங்க அவர் இந்த மாசம் வரை ஓய்வூதியம் எடுத்திருக்கார்.” நிமிர்ந்தார்.

நிர்மல் வயிற்றில் ஜிலீரென்று பனிக்கட்டி உணர்வு.

”ரொம்ப சந்தோசம் சார்.” உணர்ச்சிப் பெருக்கில் கை கூப்பினான்.

அதிகாரி அதை சட்டை செய்யாமல், ”ஆனா….ஆள் உயிரோடு இருக்காரா இல்லையாய்ன்னு உத்திரவாதம் சொல்ல முடியாது.” குண்டைத் தூக்கிப் போட்டார்.

”என்ன சார் சொல்றீங்க ???? ” அதிர்ந்தான். சடக்கென்று முகம் வேர்த்தது.

”பதற்றப்படாதீங்க. இப்போ சம்பளம், ஓய்வூதியம், அரசாங்க பணப் பட்டுவாடாக்கள் எல்லாம் வங்கி மூலம்தான் பரிவர்த்தனை. அந்த வகையில் ஏ.டி.எம் கார்டு யார் கையில் இருந்தாலும் பணம் எடுக்கலாம். அப்படி அவர் பணம் இந்த மாதம் வரை பட்டுவாடா ஆகி இருக்கு. வருசத்துக்கு ஒரு முறை மே மாதம் மட்டும் பயனாளிகள் அலுவலகத்துக்கு நேரில் வந்து இங்கே கோப்புகளில் கையெழுத்துப் போட்டு தான் உயிரோட இருக்கிறதை உறுதி செய்வாங்க. அந்த வகையில் அன்பரசன் சென்ற ஏப்ரல் மாதம் இங்கே வந்து கையெழுத்துப் போட்டிருக்கார். இப்போ ஏப்ரல் தாண்டி ஆகஸ்டு. இந்த இடைவெளியில் ஆள் இருக்கலாம். இல்லாமல் போகலாம். அடுத்த மே மாதத்தின் தான் ஆள் எப்படி தெரியும். அதனால் அப்படிச் சொன்னேன்.” விளக்கமளித்தார்

நிர்மலுக்கு அவர் சொல்வது ஏற்றுக்கொள்வதாய் இருந்தாலும் வயிற்றைக் கலக்கியது. என் மனசுல பட்டதைச் சொன்னேன். அதுக்காக வருத்தம் வேணாம். நம்பிக்கைதான் வாழ்க்கை. உங்க அப்பா அன்பரசன் நிச்சயம் இருப்பார். கண்டிப்பாய்க் கிடைப்பார். அப்படியே கிடைக்கலைன்னாலும் வருத்தப்படுவதால் இழந்தது எதுவும் வந்துவிடாது. தேடினோம். இருக்கிறார், இல்லே நிம்மதி. சரியா ? ” கேட்டு எதிரில் இருந்த நிர்மலை உற்றுப் நோக்கினார்.

”சரி சார்.” இவன் தலையசைத்து கவிழ்ந்தான்.

”நான் உங்களை ரொம்ப கலவரப்படுத்திட்டேன்னு நெனைக்கிறேன். அவர் இப்போ அந்த இடத்திலே இருக்காரோ இல்லையோ….எங்ககிட்ட இருக்கிற அவர் விலாசம் சொல்றேன் எழுதிக்கோங்க.”

நிர்மலுக்கு அவரின் இந்த பேச்சிலும் உதை விழுந்து வலி வந்தது.

”எண் 10. ஐந்தாவது குறுக்குத் தெரு. காந்தி நகர் விரிவாக்கம். சேலம்.”

எழுதி நிமிர்ந்தான்.

”சார்! அவர் கை பேசி, தொலைபேசி எண் ? ” கேட்டான்.

”தொலைபேசி, கைபேசி எண் ரெண்டும் இருக்கு. எது கிடைச்சாலும் பயன்படுத்திக்கோங்க.” எண்களைச் சொன்னார்.

நிர்மல் அவைகளைக் கைபேசியில் பதிவு செய்து அந்த எண்களைத் தொடர்பு கொண்டான். தொலைபேசி எண்களில் உயிர் இல்லை. கைபேசி எண்கள்…..

”தாங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் உபயோகத்தில் இல்லை.” பதில் அதிலும் உயிர் இல்லை.

”நீங்க சொன்னது ரொம்ப சரி சார். இந்த காந்தி நகர் இங்கே எங்கிருக்கு சொன்னால் நான் நேரடியாய்ப் போறேன்.” ? என்றான்.

”ஏற்காடு போற வழியில மலையடிவாரம். பழங்காலத்து மார்டன் ஸ்டுடியோ நேர் எதிர்க்கப் போகனும். நீங்க ஆட்டோ பிடிச்சுப் போங்க. சரியாய்க் கொண்டு விடுவாங்க.” சொன்னார்.

”சரி சார்.” எழுந்து கை குலுக்கிவிட்டு வெளியே வந்தான். சிறிது தூரம் நடந்து ஆட்டோ பிடித்து விலாசம் சொல்லி ஏறி அமர்ந்தான்.

அரைமணி நேரத்தில் அது அந்த விலாசத்தில் இறக்கி விட்டு விட்டுச் சென்றது.

சாவித்திரி பவனம். ஒந்றை மாடி வீடாய் எந்த வித அலங்காரமுமில்லாமல் ரொம்ப அமைதியாய் இருந்தது. நகருக்குப் பின் பச்சைப் பசேல் மலை. அப்பா இயற்கைப் பிரியர். வயல்வெளிகளுக்குச் சென்றால் உடன் வர மாட்டார். ரசிப்பார். பசுமை என்றால் அவருக்கு உயிர். அந்த வகையில் இந்த இடம் தேர்வு. நிர்மலுக்குத் தெளிவாகியது.

‘இது அவர் விருப்பமில்லாமல் குடும்ப உறுப்பினர்கள் மனைவி மகன்கள் விருப்பமாகக் கூட இருக்கலாம்.!’ – நினைத்தான்.

வாசல் கதவு சாத்தி இருந்தது. அழைப்பு மணி அழுத்தினான்.

‘அப்பா திறக்கப் போகிறார்.! பார்க்கப் போகிறோம்!’ …..மனம் திக் திக் அடித்தது.

கதவு திறக்க…..வேறு ஆள் வேட்டி பனியனில் வெளியே வந்தார்.

”யார் சார் நீங்க ? ” கேட்டார்.

”இது அன்பரசன் வீடுதானே ? ”

”ஆமாம்.”

”அவரைப் பார்க்கனும்.”

”அவரில்லே.”

”எங்கே ? ”

”அவர் வீட்டை வாடகைக்கு விட்டுட்டு ஏற்காட்டுல ஒரு முதியோர் இல்லத்துல இருக்கார்.”

எதிர்பார்க்கவில்லை. துணுக்குற்றான். ‘முதியோர் இல்லம் ‘ குழப்பமாக இருந்தது.

”அவர் மனைவி, மகன்கள், மகளெல்லாம் வெளிநாட்டுல இருக்காங்க. இவர் மட்டும் இங்கே தனிச்சு இருக்கார். பேச்சுத் துணைக்கு ஆளில்லாமல் அவருக்கு இவ்வளவு பெரிய வீட்டில் தனியா இருக்கப் பிடிக்காமல் முதியோர் இல்லத்தில் இருக்கார்.”

குழப்பத்திற்கு விடை கிடைத்து மனம் நிம்மதி அடைந்தது.

”அவர் இங்கே எப்போ வருவார்.? ”

”வர்றதில்லே. வீட்டு வாடகையை நாங்க அதை மாசாமாசம் அவர் வங்கிக் கணக்கில் சேர்த்திடுவோம.;”

”அவர் கை பேசி எண் இருக்கா ? ”

”இருக்கு. ஆனா…. எவருக்கும் கொடுக்கக் கூடாதுன்னு கண்டிப்பு. ஏன் நாங்களே அதில் பேசினதில்லே.”

”முதியோர் இல்லம் விலாசம் ? ”

”அது சொல்லலாம். ஏற்காட்டில் இறங்கி அன்னை அபிராமி முதியோர் இல்லம்ன்னு கேட்டால் எல்லாரும் வழி காட்டுவாங்க. ஆட்டோவுல ஏறினால் அஞ்சு நிமிசத்தில் கொண்டு விடுவான். ”
நன்றி சொல்லி திரும்பினான். மனைவியுடன் தொடர்பு கொண்டு பேசி முடித்து. ஆட்டோ ஏறி ஏற்காட்டு பேருந்தில் அமர்ந்தான்.

7

ஏழைகளின் ஊட்டி ஏற்காடு. கண்களுக்கு குளிர்ச்சியாய் பசுமையும், உடலுக்கு இதமான குளிருமாய் இருந்தது.

ஏரி, பேருந்து நிலையம், பூங்கா எல்லாம் அருகருகிலேயே இருந்தது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருந்து ஆவரவாரமில்லாமல் மிதமான நடமாட்டத்தல் நகரம் இருந்தது. மக்கள் எல்லா இடங்களிலும் இருந்தார்கள். ஏரியில் படகு விட்டார்கள். பூங்காக்களில் பெண்கள் கூட்டம். குழந்தைகள் கும்மாளம்.

நிர்மல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வரிசையாய் நின்ற ஆட்டோ நோக்கி சொன்றான்.

”சார் ஆட்டோ ? ” அவர்களில் ஒருத்தன் இவனை நெருங்கி சவாரிப் பிடித்தான்.

”அன்னை அபிராமி முதியோர் இல்லாம் போகனும்.”

”வாங்க.”

ஆட்டோ ஒரு சின்ன மேடு ஏறி இறங்கி அதன் வாசலில் நின்றது.

பெரிய வாசலில் அரைவட்ட வடிவில் ‘அன்னை அபிராமி முதியோர் காப்பகம்’ என்று பெரிதாக எழுதி இருந்தது. கதவு அகலத் திறந்து வெளிர் நீல நிற சீருடையில் வாயில் காப்பாளி அமர்ந்திருந்தார். வாசல் கதவில் ‘இடம் காலி இல்லை’ என்று அறிவிப்பு தொங்கியது.

வாசல் கதவைப் பார்த்தப்படி பர்ணசாலை அமைப்பில் அலுவலகம். அதன் நடுவில் மேசை நாற்காலியில் நாற்பத்தைந்து வயதில் ஒரு பொறுப்பாளர். அவர் முன் ஒரு கணனி. அருகில் ஒரு உதவியாளர். அவர் மேசை மீது சில கோப்புகள், கணனி. அலுவலகத்தைச் சுற்றிலும் தோட்டம். அழகாய் வெட்டிவிடப் பட்ட வண்ண வண்ண செடிகள், பூக்கள். அவைகளுக்கு இடையே அங்கங்கே ஓய்வெடுக்க சிமெண்ட் பெஞ்சுகள். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஜோடியாகவும், தனித்தும் முதியோர்கள். இடைவெளி விட்டு பின்னால் ரொம்ப தாராளமாக இடைவெளி விட்டு முதியோர்கள் தங்குமிடங்கள்.

நிர்மல் வாசலை நெருங்க….

”சார்! யாரைப் பார்க்கனும். ? ” காவலாளி தடுத்து விசாரித்தான்.

”அலுவலகம் போகனும்.”

பேசாமல் வழி விட்டான்.

நிழல் தெரிய…. பொறுப்பாளர் நிமிர்ந்தார்.

நிர்மல் அவருக்கு வணக்கம் சொல்லி தான் வந்த விசயத்தைச் சொல்லி அமர்ந்தான்.

”குருஜி ! அன்பரசன் இருக்காரா ?” பொறுப்பாளர் அருகில் இருந்தவரைக் கேட்டார்.

”இல்லே சார்.”

”எங்கே ? ”

”நாகப்பட்டினம் போயிருக்கார் சார்.”

”ஏன் ?? ”

”தன் முதல் மனைவி பையனைத் தேடிப் போறேன்னு சொன்னார்.”

இதைக் கேட்டு நிர்மல் துணுக்குற்றான்.

”மகன் அப்பாவைத் தேடி வந்திருக்கிறார். அப்பா பிள்ளையைத் தேடிப் போயிருக்கார். என்ன விசித்திரம் !? ” வியந்த பொறுப்பாளர். ”எப்போ போனார் ? ” கேட்டார்.

”போய் ஒரு வாரமாச்சு. அங்கே தன் முதல் மனைவி தோழியைப் பார்த்து தாய் புள்ளையைப் பத்தி விசாரிக்கனும்ன்னு போனார். பேர் மும்தாஜ்ன்னு சொன்னார்.”

”மும்தாஜ் முகவரி தெரியுமா ? ”

”சொல்லலை சார். நானும் கேட்கலை.”

”ஏன் ? ”

”அது அவர் சொந்த விசயம்ன்னு விட்டேன்.”

”தப்பு. இப்போ அவரைக் காணோம்ன்னா எப்படித் தேட ? சரி. அவருக்குப் போனைப் போடுங்க. நீங்க தேடிப் போன மகன் இங்கே வந்திருக்கார்ன்னு சேதி சொல்லுங்க.”

குருஜி தன் மேசை மேலிருந்த தொலை பேசியை எடுத்து அன்பரசனின் கைபேசி எண்களை அழுத்தி காதில் வைத்தார்.

‘நீங்க தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொலைபேசி எண் சுவிட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.’ தகவல் சொல்லியது.

அதை குருஜி அப்படியே பொறுப்பாளரிடம் சொன்னார்.

பொறுப்பாளர் தன் கைபேசியை எடுத்து அதே எண்களுக்குத் தொடர்பு கொண்டு சோதனை செய்தார்.

அதே செய்தி இவருக்கும் ஒலித்தது.

”அன்பரசன் இப்படியெல்லாம் அநாவசியமா கைபேசியை அணைக்க மாட்டார். ஒருவேளை அதை பயணத்தில் தொலைச்சிருப்பாரா ? ” முணுமுணுத்து பொறுப்பாளர் நெற்றியில் கைவைத்து குழப்பமாக குருஜியைப் பார்த்தார்.

”இருக்கலாம் சார்”

”அன்பரசன் வைச்சிருக்கிறது அதி நவீன கைபேசி. அதிலேயே வெளிநாட்டில் இருக்கும் பையன் பேரன் பேத்திகளோடு 3ஜி அலைக்கற்றையில் முகம் பார்த்து பேசுவார். அவ்வளவு அஜாக்கிரதையாய் அதை தவற விட வாய்ப்பில்லே. திருடு போயிருக்குமா ? ” பொறுப்பாளார் மூளையைக் கசக்கினார்.

நிர்மலுக்குக் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத ஏமாற்றம். ‘நாகப்பட்டினத்தில் அம்மாவின் தோழி யார் ? ‘ யோசனையைத் திசை திருப்பினான்.

அம்மா பள்ளிக்கூடம் இவன் பள்ளிக்கூடமும் ஒரே ஊரில் அருகருகில் இருந்தாலும் நாலைந்து முறைதான் அம்மா பள்ளிக்குச் சென்றிருக்கிறான். மழலைப் பள்ளியில் சேர்த்த ஆரம்ப காலத்தில் எல்லாக் குழந்தைகளையும் போல் இவனுக்கும் அழுகை முறை. அழுதான். அழுகை அதிகமாகும் போது பள்ளி ஆயாவால் இவன் அவளிடம் அழைத்துச் செல்லப்பட்டான்.
அம்மாப் பள்ளி பெரிய அரசாங்கப் பள்ளி. இவன் அங்கு ஆசிரியைகள் தங்கும் அறையில்தான் எப்போதும் தங்க வைக்கப்பட்டான்.

அங்கு அம்மாவுடன் வேலைப் பார்க்கும் அழகு அழகு ஆசிரியைகள், வருவார்கள், கூடுவார்கள், வகுப்பறைகளுக்குச் செல்வார்கள். அவர்கள், ‘ஏய் ! வள்ளிப் பையா அழகா இருக்கே!’ வந்து கொஞ்சுவார்கள். தாவங்கொட்டையைத் தடவி முத்தம் கொடுத்துச் செல்வார்கள்.

அம்மாவும் ஒரு முஸ்லீம் பெண்ணும் மட்டும் இணையாக வந்து செல்வார்கள். அந்த முஸ்லீம் பெண் கருப்பு நிற பர்தா போட்டு முகத்திரையைத் தூக்கி விட்டிருப்பாள். பள்ளிக்கூட வளாகத்திலெல்லாம் அவள் அப்படித்தான் வலம் வருவாள். அவளே பள்ளியை விட்டு வெளியே வந்தால் முகத்திரையை இழுத்து விட்டு முகத்தை மறைத்துச் செல்வாள். பொட்டில்லாமல் அவள் முகமும் அழகாய் இருக்கும். அவளும் வந்து இவனைக் கொஞ்சுவாள். எல்லாம் அந்த பள்ளியில் வேலை செய்த வரையில்தான். இவள் விவாகரத்துப் பெற்று பெங்களுர் வந்து குடியேறிய பிறகு தாய் யாருடனும் பேசியதாய் ஞாபகம் இல்லை.

வேலை, வீடு, தாய், மகன் என்று இப்படித்தான் அவள் எல்லா உறவு நட்புகளையும் துண்டித்துத் தனித் தீவாய் வாழ்ந்தாள். எங்கிருந்தும் கடிதம், தொலைபேசி,கைபேசி பேச்சு என்று எந்த ஒரு தொடர்பும் இல்லை. இவனுக்குப் பெண் தேடும் படலத்திலும் அலட்டலில்லை. கல்யாண மாலையில் தேடினாள். நெட்டில் வலைவீசினாள். நித்யா கிடைத்தாள். முடித்தாள்.

”என்ன சார் யோசனை ? ” பொறுப்பாளர் நிர்மலைக் கலைத்தார்.

”ஒன்னுமில்லே சார். அப்பா நாகப்பட்டினத்துக்குத் தேடிப் போன ஆளைத் தேடறேன். யார்ன்னு யோசனை. சின்ன வயசுல பார்த்தது. சரியா முகம் ஞாபகத்துக்கு வரலை.”
பொறுப்பாளர் சிறிது நேரம் யோசனையிலிருந்தார். அடுத்து ஒரு முடிவிற்கு வந்தாவராய்……

”குருஜி ! அன்பரசன் அறை சாவி உங்களிடம் குடுத்துப் போனாரா ? ” திடீரென்று கேட்டார்.

”குடுத்திருக்கார் சார்.”

எடுத்துக்கிட்டு கிளம்புங்க. அங்கே அவர் தேடிப்போன இடம் பத்தி தகவல் கிடைக்குமான்னு பார்க்கலாம். எழுந்தார்.

ஆளில்லா சமயம் அவர் அறையைப் பரிகோதிக்கிறது தப்பில்லையா சார் ? நிர்மல் வாய்வரை வந்ததைக் கேட்டான்.

”தப்புத்தான்.! வழி ? யாரும் அனாதை இல்லே நிர்மல். எந்த மனித உயிரும் அல்பம் கிடையாது. அதுக்காகத்தான் யார் எங்கே போனாலும் யார் வந்து அழைச்சுப் போனாலும் எங்கள் அனுமதி பெற்றுத்தான் போகனும் அறை சாவியை ஒப்படைச்சுப் போகனும் என்பது இங்கே சட்டம், கண்டிப்பு. .இதுவரையில் தப்பில்லே. இப்போ சின்ன இடறல். இப்போ….உங்களுக்கே உங்க அப்பா எங்கே போயிருக்கார்ன்னு நாங்க பதில் சொல்லனும். யோசிச்சுப் பாருங்க.” என்றார்.

நிர்மலுக்கு அவார் யோசனை சரியாகப் பட்டது. எழுந்தான்.

மூவரும் சாவியுடன் நடந்தார்கள்.

”சார் ! இது என் கனவு காப்பகம். இங்கே பணக்காரனும் பரம ஏழையும் கடைசி காலத்தில் பாதுகாப்பா தங்கனும் நல்ல முறையில் இருக்கனும் என்கிற எண்ணத்தோடு வடிவமைச்சு இயக்கி வர்றேன்.” பொறுப்பாளர் சொல்லி நடந்தார்.

”உங்க அப்பா தங்கி இருக்கிற இரண்டு மாடிக் கட்டிடங்கள் இரண்டிலும் முப்பது முப்பதாய் அறுபதாய் இரண்டுகட்டிடங்களிலும் மொத்தம் நூத்தி இருப்பது அறைகள் இருக்கு. அத்தனை அறைகளிலும் தனி கட்டில் மெத்தை, மேசை நாற்காலி, இணைப்பு கழிவறை குளியறை. இது வசதியானவர்கள் தங்கும் இடம். அடுத்து, ரெண்டு கட்டிடங்கள் சாதாரண நடுத்தர மக்கள் தங்குமிடம். இதுவும் ரெண்டடுக்குதான் என்றாலும் பெரிய ஹால். அதில் மருத்துவமனைகள் போல் கட்டில் மெத்தை, தலைமாட்டில் அவர்கள் உடமைகள் வைத்துக் கொள்ள…. பெட்டிகள். இங்கே எல்லாரும் சுதந்திரமா பழகலாம். தினம் ஒரு மணி நேரம் மருத்துவர் வர்றாப் போல ஒரு மருத்துவமனை. மூன்று ஷிப்ட்ல ஆறு செவிலிகள். அப்புறம் தரமான சாப்பாடு. நான் இங்கே மத்தவங்க பிறந்த நாள், இறந்த நாள், திருமண நாள் கொண்டாட்;ட சாப்பாடு, சமையல், பலகாரங்களை அனுமதிக்கிறது இல்லே. அவுங்க, ஒரு நாள் கொண்டாட்டத்துக்காக கண்டதெல்லாம் கொடுத்து முதியோர்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துட்டு;ப் போவாங்க. பாவம் வயசான காலத்தில் இவுங்கதான் சிரமப்படுவாங்க. இதனால் நான் அதையெல்லாம் அனுமதிக்கிறதில்லே. மத்தப்படி இங்கே தோட்ட வேலைக்கென்று வேலைக்காரர்கள். முதியோர்களைக் கவனிக்க ஆயாக்கள்ன்னு ரொம்ப அருமையாய்ப் பண்ணி இருக்கேன்.” சொல்லி முதல் மாடியில் 26 ஆம் எண்ணுள்ள அறை முன் நின்றார்.

குருஜி கதவில் சாவியை விட்டுத் திறந்தார். உள்ளே கட்டில் சுத்தமாக இருந்தது. போர்வைகள் மடித்து அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. படுக்கை கன்னாபின்னாவென்று இருந்தால் அவருக்குப் பிடிக்காது. பார்த்தாலே படுக்க வேண்டும்போல் தோன்ற வேண்டும் அவருக்கு.

நிர்மல் அலமாரியைத் திறந்தான். அவர் ஆடை.. சட்டை, வேட்டி, பேண்டுகள். அப்பா வாசனை அடித்தது. இவனுக்கு அப்பா வாசனைப் பிடிக்கும் அவரோடு இருந்தவரை அவரைக் கட்டிக்கொண்டுதான் படுத்தான்.

குருஜியும் பொறுப்பாளரும் ஆளாளுக்கு ஆராய்ந்தார்கள்.

நிர்மல் அலமாரியில் உள்ள இழுப்பறை இழுத்தான். அதில் அப்பா டைரி இருந்தது. எடுத்தான். பிரித்தான். கருப்பு வெள்ளையில் அம்மாவும் அந்த முஸ்லீம் தோழியும் புகைப்படமாய் கீழே விழுந்தார்கள். எடுத்துத் திருப்பிப் பார்த்தான். அ. மும்தாஜ், 80, நீலா கிழக்கு வீதி, நாகப்பட்டினம் விலாசம் இருந்தது.

8

இந்த விலாசத்தில் அம்மாவின் தோழி கிடைப்பாளா? இல்லை, அப்பாப் போல குடும்பம் இடம் மாறிப் போயிருக்குமா ? இல்லை, வேலை செய்த திருப்புறம்பியத்திலேயே தங்கி குடி இருப்பாளா, அம்மா அப்பா ஓய்வு பெற்றதைப் போல் இவளும் ஓய்வு பெற்று எங்கு தங்கி இருப்பாள் ? அப்பா எந்த தைரியத்தில் இவளைத் தேடிப் போயிருக்கிறார். தனக்கு இவளை அடையாளம் தெரியுமா ? – பேருந்து பயணத்தில் நிர்மல் எண்ணங்கள் இப்படியெல்லாம் சுழன்றது.

அப்பா எந்த தைரியத்தில் நாகப்பட்டினம் போயிருக்கிறார் ? அப்பா அறையிலிருந்து எடுத்து வந்த அந்தப் புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான் நிர்மல்.

மார்பளவில் இளம் வயதில் அம்மாவும் மும்தாஜீம் புன்னகையுடன் இருந்தார்கள்.

அம்மா எதற்காக திருமணம் செய்து விவாகரத்துப் பெற்று, மகனைத் தவிர எல்லா உறவுகளையும் தள்ளி தனி மனுசியாய் வாழ்ந்து இறந்தாள். அவள் எதை எதிர்பார்த்தாள். அது கிடைக்காமல் இப்படி வாழ்ந்து இறந்தாள். அவளுக்கு வேண்டியது என்ன? குணம் எப்படி ? அவள் ஒரு புழு பூச்சியைப் போல் வாழ்ந்தாள், இறந்தாளா?

இல்லை, இது என் குணம். நான் இப்படி. என்னால் எதற்கும் வளைந்து நெளிந்து கொடுத்து வாழ முடியாது. நான் அக்கம் பக்கம் திரும்பாத நேர்க்கோட்டுப் பாதை.! செத்தாளா ?
தன்னையும் இப்படித்தான் வளர்த்தாளா ? தனக்கு ஒரு துணை வேண்டிதான் அணைத்தாளா ? தாயன்பு, குழந்தைப் பாசத்தால் தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை, வளர்க்கவில்லையா. நான் பள்ளிக்கூடம் சென்றேன், படித்தேன், வேலைக்குச் சென்றேன், அம்மா பார்த்த பெண்ணை முடித்தேன், பிள்ளைகள் பெற்றேன். அம்மாவைத் தாண்டி நான் எதையும் செய்யவில்லை,மீறிவில்லை. அம்மாவும் தன்னை அணைத்து அன்பு காட்டி, பாசம் காட்டி, நேசம் கொட்டி வளர்க்கவில்லை. சிறுவயதில் அப்பாவை நினைக்காதே, கேட்காதே என்பதுதான் அம்மா கண்டிப்பு, கட்டுப்பாடு. அதைச் செய்யாதே இதைச் செய்யாதே, அவனோடு சேராதே, இவரோடு பேசாதே என்று மற்ற எதிலும் அவள் தலையீடு இல்லை. அம்மாவிற்கும் பிள்ளைக்கும் ஒட்டுமில்லாத உறவுமில்லாத வாழ்க்கை! இவனுக்குப் புரிந்தது.

ஆனாலும் நான் அம்மாவைப் போல் யாரையும் ஒதுக்காமல் எல்லாரையும் வெறுக்காமல் வாழ்கிறேன்! எப்படி ? இது யாரையும் காயம் படுத்தாமல் அணுசரித்துப் போகிற அப்பா குணம். இது தானாக வந்த வரம். அப்பாவினால் பெற்ற குணம். – நிர்மலுக்குள் இப்படி புரிதல் தோன்றியது.

அம்மா இன்றிருந்தால் 65 வயது. 60ல் ஓய்வு பெற்று, தனக்குத் திருமணம் முடித்து, மருமகள் பேரப்பிள்ளைகளோடு மகிழ்ச்சியாய் வாழ்ந்து, இறந்தாள். அப்படி என்றால் இந்த மும்தாசுக்கும் வயசு 65 அல்லது எழுபது. இப்படி கணக்குப் போட்டு மும்தாசை வயதான தோற்றத்தில் கற்பனை செய்தான். கண்டு பிடிக்க முடியுமா ? இருப்பாளா இறந்திருப்பாளா ? மனசு குழப்பியது.

அப்பா எப்படி இவளைத் தேடிப் புறப்பட்டார். விவாகரத்திற்குப் பின் இவளிடமிருந்து தன் மனைவி,மகன் இருப்பிடம் சேதி அறிந்து கொண்டிருந்தாரா. அம்மா, தனக்குத் தெரியாமல் தோழியுடன் பேச்சு வார்த்தையில் இருந்தாளா. அப்பா இவளைத் தேடிப் போக இதைவிட எது சரியான காரணமாக இருக்க முடியும். இல்லை, தன்னைப் போல்….பாசம் துணிந்து என்று புறப்பட்டாரா.

மும்தாஜின் வயதான தோற்றத்தைக் கற்பனையில் கொண்டு வந்து கண் மூடினான் நிர்மல். அப்படியேத் தூங்கியும் போனான். விழித்துப் பார்க்கும்போது பேருந்து நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் நின்று பயணிகள் எல்லோரும் இறங்கினார்கள்.

காலை கண் விழிப்பில் பேருந்து நிலையம் பளிச்சென்றிருந்தது. எல்லா கடை வாசல்களும் பெருக்கி, ஈக்கள் மொய்க்காமலிருக்க மஞ்சள் நீர் தெளித்து, கடைகளிலிருந்தவர்களும் குளித்து, பளிச்சென்ற முகத்தோடு காணப்பட்டார்கள். இது எங்கும் காலை நேரததிற்கே உள்ள களை. நேரம் செல்லச் செல்ல இந்த அமைப்பே மாறும். கடைக்காரர் முகங்களும் கருகும்.
நிர்மல் ஆட்டோப் பிடித்து அந்த விலாசத்தில் இறங்கினான்.

மும்தாஜ் பவனம் வெள்ளை நிறத்தில் பெரிய மாளிகையாய் பழங்காலக் கட்டிடமாக இருந்தது. வாசல் கதவு சாத்தி இருந்தது,

அழைப்பு மணி அழுத்தி காத்திருந்தான்.

தலையில் வெள்ளை நிற குல்லா, மல் பனியன், குறு வெண்தாடி, வெண் கைலியுடன் ஒரு வயோதிக முஸ்லீம் பெரியவர் திறப்பார் என்று எதிர்பார்த்தவனுக்குள் சின்ன ஏமாற்றம்.

ஐந்து வயதில் கால்சட்டை, மேல் சட்டை போட்ட பையன் திறந்தான். ஆளைப் பார்த்து விட்டு, ”அம்மா ! யாரோ வந்திருக்கா.” பிராணாள் பாஷையில் சொல்லி உள்ளே ஓடினான்.
பக்கத்து வீட்டு பிள்ளையா, தத்துப் பிள்ளையா, அப்பா அந்த இனம்,பெண் இந்த இனமா ? சட்டென்று நிர்மலுக்குள் குழப்பம்.

பளிச்சென்று வெளிர்நிறத்தில் இளம் பெண்ணொருத்தி தலையில் முக்காட்டுடன் எட்டிப் பார்த்தாள்.

”யார் சார் ? ” கேட்டாள்.

”மும்தாஜ் வீடு…? ”

”இதுதான்.”

”அவுங்க இருக்காங்களா ? ”

”இருக்காக.”

”பார்க்கனும்.”

”நீங்க ? ”

”அவுங்க தோழி வள்ளி பையன். நீங்க? ”

”மும்தாஜ் மகள்! வாங்க” அழைத்து உள்ளே சென்றாள்.

சுவரில்….கருப்பு வெள்ளை, கலர் படங்களில் நிறையப் புகைப்படங்கள் மாட்டி இருந்தது. அதில் இவன் கையில் இருக்கும் புகைப்படமும் கண்ணாடி சட்டமிட்டு மாட்டி பழசாய் பழுப்பேறி இருந்தது.

தலையில் பூப்போட்ட மஞ்சள் துணி முக்காடிட்டு தடிமான வயதான முஸ்லீம் பெண் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். கண்ணில் தடி கண்ணாடி. முகம் மாறி அவள் மும்தாஜ் என்று என்று நிர்மல் அவளை அடையாளம் கண்டு கொள்ள ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருந்தது.

”அத்தா! உங்களை யாரோ பார்க்க வந்திருக்காக.” சொல்லி மகள் அகன்றாள். உள்ளிருந்து வந்த சிறுவனும் அவளுடன் சேர்ந்து மறைந்தான்.

”ஆரு ? ” அவள் இவனை ஏறிட்டாள்.

சொன்னான்.

”வள்ளி பையனா நீ ?! ”

”ஆமா.”

”அடையாளம் தெரியலை….! உன்னை நாலைஞ்சு வயசுல பார்த்தது. அந்த முகச்சாடை இப்போ கொஞ்சமா இருக்கு. உட்கார்.”

”எனக்கும் உங்களைக் கண்டுபிடிக்க முடியலை.” அமர்ந்தான்.

”அம்மா எப்படி இருக்கா ? ”

”மேலே எப்படி இருக்காங்கன்னு தெரியலை ? ”

”செத்துட்டாளா ? ”

”ஆமா. ஆயுசு கம்மி.”

”என்னை வைச்சு சொல்றீயா ? ”

”இல்லே. பொதுவா.”

”நீ ? ”

தன் படிப்பு, வேலை, மனைவி, மக்கள் எல்லாவற்றையும் சொன்னான்.

எல்லாவற்றையும் அமைதியாய்க் கேட்ட மும்தாஜ், ”உன் அம்மா ஒரு வித்தியாசமான மனுசி.” மெல்ல சொல்லி பெருமூச்சு விட்டாள்.

நிர்மல் வாயைத் திறக்காமல் அமைதியாய் இருந்தான்.

”அவளுக்குத் தன்னைச் சார்ந்தவர்கள் எல்லாரும் சரியான பாதையில நடக்கனும். மாறினால் மீறிப் போவாள். கோபம்! பேசமாட்டாள், துண்டித்துக் கொள்வாள்.”

இப்போதும் இவன் பேசவில்லை.

”நானும் வள்ளியும் கல்லூரிப் படிக்கும் காலத்திலிருந்தே உயிருக்குயிரான தோழிங்க. அவளுக்குச் சொந்த ஊர் கும்பகோணம். எனக்கு நாகப்பட்டினம். நான் விடுதியில் தங்கி படிச்சேன். திரும்புறம்பியத்தில் ரெண்டு பேருக்கம் வேலைக்கிடைக்க ரொம்ப நெருக்கம். அப்போதான் உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணம்.”

”நீ பொறந்து மூணு வருசம் வரை பொண்டாட்டி புருசன் சந்தோசமா இருந்தாங்க. அடுத்துதான் உன் அம்மாவுக்கு அப்பா மேல சந்தேகம். எப்பவும் உன் அப்பாவைப் பத்தி புகார் கூறுவாள், உம்முன்னு இருப்பாள். நானும் அப்பாவை விசாரிச்சேன். மனைவியின் வீண் சந்தேகத்தை விலாவாரியாய்ச் சொன்னார். எனக்குப் புரிஞ்சுது. நான் அவளுக்கு ரொம்ப புத்தி சொன்னேன். கேட்கலை. அவள் குணம் வாழ்;க்கையைப் புரட்டிப் போட்டுடுச்சு. கேட்காமல் விவாகரத்து வாங்கி பெங்களுர் கிளம்பிட்டாள். அடுத்து என் திருமணத்துக்குக் கூட அவ திரும்பலை.”

”ஏன் ? ? ”

”என் கணவர் பிராமிண். காதல் திருமணம். அவளுக்குப் பத்திரிக்கை அனுப்பி, கைபேசியிலும் தகவல் சொன்னேன். வரலை. அதுக்கப்புறம் நான் ரெண்டு மூன்று தரம் கைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். கெட்ட குணம் எடுக்கவே இல்லே. அடுத்து, என் மேல ரொம்ப கோபம். சிம்மையே மாத்திட்டாப் போல. தொடர்பு கொள்ளும் போதெல்லாம் கைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. பதில். அவள் குணம் தெரிஞ்சு நானும் விட்டுட்டேன்.” முடித்து மூச்சுவிட்டாள்.

நிர்மலுக்கு இப்போது அம்மாவின் குணம் தௌ;ளத் தெளிவாய்த் தெரிந்தது.

”அத்தே ! உங்களை அப்பா தேடி வந்தாரா ? ” கேட்டான்.

”அவருக்குப் பத்திரிக்கையைத் தபாலில் அனுப்பினேன். திருமணத்துக்கு வந்தார். அதன்பிறகு அவரும் மறந்தார். இப்போதான்…..எனக்கும் வள்ளிக்கும் தொடர்பு இருக்கும்ன்னு நெனைச்சு விபரம் விசாரிக்க என்னைத் தேடி வந்தார்.”

”எப்போ ? ”

”தேதி சரியா ஞாபகமில்லே. ஆனா ஒரு வாரத்துக்கு முன் தேடி வந்தார். எனக்கு என் மகனைப் பார்க்கனும், அவன் வேணும்… வள்ளி விலாசம் வேணும்ன்னு கேட்டார். நான் எங்கள் துண்டிப்பு சேதியைச் சொல்லி, என்கிட்ட அவள் பழைய விலாசமும் கைபேசி எண்ணும்தான் இருக்கு. கைபேசி எண்ணில் உயிரில்லே. வள்ளி இப்போ அந்த விலாசத்துல இருப்பாளா இல்லையா தெரியலை. இருக்க வாய்ப்பில்லே. அது வாடகை வீடு. இப்போ சொந்த வீடு கட்டி வேறு இடம் போயிருக்கலாம். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அங்கே இருப்பாள். முயற்சி செய்ங்க சொல்லி விலாசத்தைக் கொடுத்தேன். புறப்படடு போனார். நீங்க எங்கே இருக்கீங்க ? ” கேட்டு நிர்மலைப் பார்த்தாள்.

”அந்த வாடகை வீட்டையே விலைக்கு வாங்கி அங்கேயேத்தான் அத்தே இருக்கோம்.” ”அப்போ உன் அப்பா அதிர்ஷ்டக்காரர். கண்டு பிடிச்சிருப்பார்.” என்றாள்.

இல்லே. கண்டு பிடிக்கலை. அப்படி கண்டு பிடிச்சிருந்தால் இந்த நேரம் சேதி வந்திருக்கும். என் மனைவி தகவல் கொடுத்திருப்பாள். அவருக்காக நான் பத்திரிக்கை விளம்பரம், நெட் விளம்பரம் எல்லாம் செய்திருக்கேன். ” சொல்லி தினசரிகள் காட்டினான்.

அப்படின்னா தேடுவார். என்று பத்திரிக்கைகளைத் திருப்பினாள் மும்தாஜ்.

”இருக்கலாம் !” என்று யோசனையுடன் நகத்தைக் கடித்த நிர்மல், ”அப்பா கைபேசி எண் இருக்கா? ” கேட்டான்.

”தொலைஞ்ச உறவு. விடுவேனா..!..நானும் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்து அவரிடமும் வாங்கி வைச்சிருக்கேன். குறிச்சுக்கோ.” அவள் அருகிலிருந்த நோட்டை எடுத்து சொன்னாள்.

நிர்மல் அதை தன் கைபேசியில் பதிப்பித்து தொடர்பு கொண்டான்.

‘நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் சுவிட் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. பதில் வந்தது.’ அடுத்தடுத்து முயற்சிகளிலும் அதே பதில்.

அடுத்து தன் மனைவியோடு தொடர்பு கொண்டான்.

”அப்பா வந்தாரா? ” கேட்டான்.

”இல்லீயே…! ”

அணைத்தான். ‘எங்கே போயிருப்பார். ? ‘ யோசனை.

”மறுபடியும் உங்களைப் பார்க்கிறேன் அத்தே.” எழுந்தான்.

”பார்க்கிறதோடு நிறுத்தாதே நிர்மல். நம் உறவு தொடரனும். அப்பாவைக் கண்டுபிடிச்சதும் சேதி சொல்லு.” சொன்னாள்.

விடை பெற்று வெளியே வந்தான்.

‘அப்பா பெங்களுரில் எங்கு எப்படி அலைகிறாரோ ?!’ கவலையில் பேருந்து நிலையம் வந்து தாமதமில்லாமல் செல்ல கண்ணில் பட்ட திருச்சி பேருந்தில் ஏறினான்.
அது அம்மாபேட்டையில்…..

9

நிர்மல் கண்விழிக்கும்போது தலையில், காலில் கட்டு. விண் விண்ணென்ற வலி. தலையை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தான். வரிசையாய் கட்டில்கள், நோயாளிகள். நடமாடும் செவிலிகள்.

மருத்துவமனை! துல்லியமாகத் தெரிந்தது.

எப்படி வந்தோம், என்ன நடந்தது, ? இவனுக்குள் கேள்விகள் முளைக்க….கட்டிலுக்கு முன் தள்ளு வண்டியில் மருந்துகளுடன் நகரும் செவிலியை, ”நர்ஸ் !” அழைத்தான்.
அவள் திரும்பினாள். ”என்ன வேணும் ? ” பின்னால் ஒரு பெண் குரல் கேட்டது.

”யார் ? ” திரும்பிப் பார்த்தான். தலைமாட்டில் கையில் ஊசியுடன் ஒரு செவிலி.

பக்கவாட்டில் வந்து, ”திரும்பிப் படுங்க. இடுப்புல ஊசி போடனும்.”

திரும்பிப் படுத்தான். பூப் போல் விரல் வைத்து வலி தெரியாமல் அவள் ஊசிப் போட்டாள். ஒரு சிலருக்குத் தான் இப்படி நோயாளிக்கு வலி இல்லாமல் ஊசிப் போடத் தெரியும். அது அவர்கள் கைவாகு. தொழில் நுணுக்கம். சிலர் ஊசியைக் குத்தினாலே போதும் சுருக்கென்று வலி வரும். சிரஞ்சியை அழுத்தி மருந்து ஏற்றும்போது வலி இன்னும் அதிகமாகும். சிலர் போட்டால் போட்ட இடம் வீங்கி விடும். மேலும் சிலருக்கு மருந்து பரவி உடலில் கலக்காமல் அது கட்டியாகி அந்த இடத்தை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும்.
இவள் ஊசியைப் போட்டதுமில்லாமல் நல்லா தேய்ங்க என்று நோயாளிக்குக் கட்டளையிடாமல் நன்றாகத் தேய்த்தும் விட்டாள்.

”நன்றி சிஸ்டர் ? ” சொல்ல வேண்டும்போலிருந்தது சொன்னான்.

”பரவாயில்லே. எதுக்கு அழைச்சீங்க ? ”

”நா….நான் எப்படி இங்கே வந்தேன்னு தெரியலை.”

”சொல்றேன். நீங்க நாகப்பட்டினத்தில் ஏறி பயணம் செய்த திருச்சி பேருந்து அம்மாப் பேட்டையில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து. நிறைய பேருக்குப் பலத்தக் காயம், அடி. அதுல நீங்க ஒருத்தர். ஓட்டுநரும் நடத்துநரும் ஐ.சி,யுல இருக்காங்க. உயிருக்கு ஆபத்தில்லே. அபாயக்கட்டத்தைத் தாண்டியாச்சு.”

”இ… இது என்னைக்கு நடந்துது ? ” எச்சில் விழுஙகினான்

”முந்தா நேத்து.”

”இது எந்த இடம். ? ”

”தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி.”

”என் சூட்கேஸ், கைபேசி…? ”

”சூட்கேஸ் நீங்க படுத்திருக்கிற கட்டிலுக்கு அடியில் இருக்கு. உங்க கைபேசி, பாக்கெட்ல வைச்சிருந்த அலுவலக அடையாள அட்டை,பர்ஸ் தலையணைக்குக் கீழே இருக்கு.”

”எ…..என் வீட்டுக்கு சேதி….? ”

”சொல்லiலை. வீட்ல அதிர்ச்சியைத் தாங்க முடியாதவர்கள் யாராவது இருக்கலாம்ன்னுதான் யார் வீட்டிலும் தகவல் தெரிவிக்கலை. நோயாளிகளைக் கேட்டப்பிறகுதெரிவிக்கலாம்ன்னு பெரிய டாக்டர் உத்தரவு. ஓட்டுநர் நடந்துநர் மட்டும் அபாயக்கட்டத்துல இருக்கிறதால தகவல் தெரிவிச்சு உறவினர்கள் வந்திருக்காங்க. நீங்க இன்னைக்குத்தான் கண்விழிச்சிருக்கீங்க. எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான்.”

”நா….நான் வீட்டுக்கு நான் தகவல் சொல்லிக்கலாமா ? ”

”அது உங்க விருப்பம். தாராளமா சொல்லிக்கலாம்.” அவள் நகர்ந்தாள். ஒரு வெள்ளுடை தேவதை வந்து தனக்கு மருத்துவம் பார்த்து சேதி சொல்லிவிட்டுச் செல்வது போலிருந்தது.
தலையணை அடியில் கைவிட்டு கைபேசி எடுத்தான். உயிர்ப்பித்தான் செத்துப் போயிருந்தது. சார்ஜ் போட வேண்டும் ! சுற்றும் முற்றும் பார்த்தான். அதே தேவதை திரும்பி வந்தாள்.

”சார்ஜ் இல்லையா ? ” கேட்;டாள்.

”ஆமா. பெட்டியைத் திறந்து அதை எடுக்கனும்.”

”அதுக்கான அவசியமில்லே. இதுக்கான சார்ஜர் என்கிட்ட இருக்கு. எடுத்து வர்றேன். உங்க தலைமாட்டிலேயே போட்டுத் தர்றேன்.” சொல்லிவிட்டுச் சென்றாள். ஐந்து நிமிடத்தில் வந்து செய்துவிட்டும் சென்றாள். இப்படி நோயாளி குறிப்பறிந்து நடப்பவர்கள் எத்தனை பேர் ? நெகிழ்ந்தான்.

‘சில நிகழ்வுகள் எதிர்பாராதது. மனிதனை மீறியவை. நடப்பவை யாவும் நல்லவை என்று நினைத்தால் எதுவும் கடந்து போகும்.!’ நினைத்தான்.

தலைமாட்டில் இருந்த கைபேசிக்கு உயிர் வந்ததும் ஒலித்தது.

அழைப்பது மனைவி நித்யா என்பதை அதன் அழைப்பு ஓசையிலேயே தெரிந்தது. இவனுக்கும் அவளுக்குமானப் பிடித்தப் பாட்டு.

பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன்

கடல் மீதில் ஓர் துளி விழுந்ததைத் தேடி தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே… என் விழி காணும் உன்னை

என் ஜீவன் நீ ஓடோடி வா…. அருமையான பாட்டு ஜீவனுள்ள வரிகள். பாட்டைப் போலவே அவளும்.

பாட்டு முடியுமுன் எடுத்தான்.

”என்ன ரெண்டுநாளா போனைக் காணோம்.”

”மன்னிக்கனும். வேலையாய் இருந்தேன். பேச முடியலை.”

”எங்கே இருக்கீங்க ? ”

”தஞ்சாவூர்ல.”

”தேடினது போதும் வாங்க.”

”ஏன் ? ”

”உங்க அப்பா வந்தாச்சு.”

இவனுக்குள், ‘ஆயிரம் தாமரை மொட்டுகளே! ஆனந்த கும்மி பாடுங்களேன்!’ பாடினார்கள்.

”எப்போ ? ” தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.

”மூணு நாளாச்சு.”

”நித்யா!!” ஆனந்தம் உணர்ச்சிப் பெருக்கை அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் தழுதழுத்தான்.

”நிசம்தாங்க. நீங்க கொடுத்த விளம்பரத்தோடு எப்படியோ தட்டுத்தடுமாhறி படியேறிட்டார்.”

”என்னால நம்பவே முடியலைம்மா….!”

”என்னாலேயும்தான்.! வந்த ரெண்டு நாள்ல பேரப் புள்ளைகளோடு ஒன்றி ரொம்ப உற்சாகமாய் இருக்கார். அவர் வந்ததிலிருந்து நான் உங்களுக்குப் போன் அடிச்சுப் பார்க்கிறேன். போன் சுவிட் ஆஃப் சேதி வருது. சார்ஜ் போட மறந்திட்டீங்களா ? ”

”ஆமாம்.”

”வேற உடம்புக்கு ஒன்னுமில்லையே…?! ”

”இல்லே.”

”மாமா! உங்களை தேடி ஒருவாரத்துக்கு முன்னே புறப்பட்ருக்கார். அவர் வந்த பேருந்து கிருஷ்ணகிரி பக்கம் எதிரில் வந்த பேருந்தோடு மோதி விபத்து. அதுல நாலு பேர் செத்திருக்காங்க. பலருக்குப் பலத்த அடி. இவருக்குக் கொஞ்சம். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்திருக்கார். அப்போ.. பக்கத்து கட்டிலுக்கு வந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரிக்கும் போது கிடைச்ச பழைய தினசரியில்; நீங்க கொடுத்த விளம்பரம் கண்ணில் பட்டிருக்கு. படிச்சுப் பார்த்து பத்திரப்படுத்தி வீட்டுக்குத் தகவல் கூட சொல்லாம ஆனந்த அதிர்ச்சி அளிக்கனும்ன்னு வந்து நிக்கிறார். எனக்கு ஆளைப் பார்த்த அதிர்ச்சி கையும் ஓடலை, காலும் ஓடலை. பசங்களும் ரெண்டு மணி நேரம் ஒட்டலை. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பேசி இப்போ ரொம்ப ஒட்டிட்டாங்க.”

”மாமா! ரொம்ப நல்லவருங்க. லண்டன் அமெரிக்காவுல இருக்கிற தங்கள் மகன்கள்கிட்டக்கூட உங்களைத் தேடப் போறேன்னு சொல்லிப் புறப்பட்டிருக்கார். அவுங்களும் கண்டுபிடிச்சதும் தகவல் சொல்லுங்க. நாங்களும் வந்து கொண்டாடுறோம்ன்னு சந்தோசமா சொல்லி இருக்காங்க. மாமா கைபேசியில் என்னை அவுங்களோட பேச வைச்சார் நானும் பேசினேன். அண்ணன் வந்ததும் வர்றோம் சேதி சொல்லுங்கன்னு சொன்னாங்க. இன்டர்நெட்ல வெப் மூலமாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப் பேசினோம். அவுங்க வீடு, குடும்பம், குழந்தைகளையெல்லாம் காட்டினாங்க. மாமாவும் இங்கே என்னை நம்ம பிள்ளைகளையெல்லாம் அவுங்களுக்கு அறிமுகப்படுத்திக் காட்டினார். நீங்க உடனே கிளம்பி வாங்க.” மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.

”வர்றேன் !” நிர்மல் ரொம்ப சுருக்கமாய்ச் சொல்லி கைபேசியை அணைத்தான். கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.

– 19-4-14

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *