அப்பாவின் வாசனை

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 18,663 
 

அப்பாவின் வாசனைஇன்று அதிகாலையில் நடந்ததை உங்களிடம் சொல்லுகிறேன். நம்புவது உங்கள் விருப்பம். நடக்காததைச் சொல்லி, ஆக வேண்டியது எதுவும் இல்லை. காசு, பணம், வீடு, நகை, நட்டு என்று எதற்கும் அப்பா குறைவைக்கவில்லை. அம்மாவும் அப்பாவும் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொண்டதால், உறவுக்காரர்கள் என்று யாருமே வருவது இல்லை. அதை எப்போதுமே, ஒரு குறையாக உணர்ந்ததும் இல்லை. இன்றைக்கு நடந்ததை மட்டும் சொன்னால், உங்களுக்குப் புரியாதபடி நான் சொன்னேன் என்றாகிவிடும். அதனாலேயே இந்தச் சின்ன முன்னோட்டம்…

அம்மா படுக்கையில் விழுந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. வலது பக்கம் முழுவதும் வேலை செய்யவில்லை. வாய் இடது பக்கம் இழுத்துக்கொண்டது. யாரையாவது பார்த்துப் பழிப்புக் காட்டுகிற மாதிரி திருகிக்கொண்ட முகம். தரையில் விழுந்த மீனாக, நாக்கு துடித்துப் புரண்டதே தவிர, ஒரு வார்த்தை வரவில்லை. துருப்பிடித்துப் பழுதான இயந்திரத்தின் பற்சக்கரங்கள் இழுபடுவது போன்ற விநோதமான சத்தம் மட்டுமே வந்தது. கண்கள் இடவலமாகச் சுழன்றுகொண்டே இருந்தன. எல்லாவற்றையும் முதன்முறையாகப் பார்க்கிற வியப்பும், இருக்கிற நேரத்துக்குள் பார்த்து முடித்துவிட வேண்டும் என்கிற பதைபதைப்பும் எப்படி அந்தக் கண் களுக்கு வந்தது என்றே தெரியவில்லை. ஆனாலும், அம்மா என்ன சொல்லவருகிறாள், என்ன கேட்கிறார் என்பது எனக்குத் தெரியும்.

எல்லாமே படுக்கையில் என்றால், பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும். ஒரு நாளில் நான்கைந்து முறையாவது துணி மாற்ற வேண்டும். இப்படிக் கிடக்கிறவர்களுக்கு உணவு, தண்ணீரின் அளவைக் குறைத்துவிடுவார்கள். நான் எதையும் குறைக்கவில்லை. எந்தக் குறையும் வைக்கவில்லை. அம்மா படுக்கையில் விழுந்த புதிதில், தினசரி வந்து பார்த்துவிட்டுப்போன டாக்டர்கூட, இரண்டு நாளைக்கு ஒரு தரம் வர ஆரம்பித்து, இப்போது எல்லாம் கூப்பிட்டால்தான் வருகிறார். ‘அது தான் நீங்க நல்லாப் பாத்துக்கிறீங்களே… ஆயிரம் நர்ஸை வேலைக்கு வெச்சாலும் இப்படிப் பாத்துக்க மாட்டாங்க’ என்று சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டார்.

அப்பா இருந்த வரை, அம்மா இருக்கிற இடமே தெரியாது. வெளிவேலைகள் எல்லாமே அப்பாதான். என்னைக் கல்லூரிக்குக் கொண்டு விடுவது, அழைத்துவருவது, பாடங்கள் சொல்லித் தருவது, வீட்டுச் சாமான்கள் வாங்குவது, அவ்வளவும் செய்துவிடுவார். வீட்டில் ஒரு பொருள் இல்லையென்று அம்மா வாய்விட்டுக் கேட்டதே இல்லை. எந்த விசேஷம் என்றாலும் புதிய துணிகளைக் கடையில் இருந்து வீட்டுக்கே வரவழைத்துவிடுவார். எங்கும் போகவும் வரவும் எங்களுக்குப் பூரணமான உரிமை எப்போதும் இருந்தது. ‘எல்லாமே இருக்கிற இடத்துக்கு வந்தப்புறம், எதுக்கு வெளியில நடமாடணும்’ என்பாள் அம்மா. எந்த அதிகாரமும், கண்டிப் பும், சுடுசொற்களும் வெளிப்படாத அற்புதம் அப்பா. அழியாத, மெல்லிய குறுஞ்சிரிப்பு ஒன்றை எப்போதும் முகத்தில் அணிந்திருந்தார்.

ரயில்வே ஸ்டேஷனில் சரக்கு ஏற்றி இறக்குகிற கோடவுன், பல ரயில்வே வேலைகள் எல்லாம் எடுத்திருந்தார் அப்பா. அளவற்ற வருமானம். வேலை பார்க்கிற ஆட்களுக்கு அள்ளிக் கொடுப்பார். ‘கொஞ்சம் கணக்குப் பாத்துக் காசை நிறுத்தினாலும், வரத்து நின்னுபோகுது… கொடுத்தாத்தான் வரும்’ என்பது அவரது கொள்கை. ‘கொடுத்தாத்தான் வரும்கிறது காசு பணத்துக்கு மட்டும் இல்ல; எல்லாத்துக்கும் அதுதான்!’ என்பார். வேலை நேரம் போக மீதி நேரம் எல்லாம் வீட்டில்தான் இருப்பார். எல்லா வீட்டு வேலைகளும் அம்மாவுக்குப் பார்த்துக்கொடுப்பார். ‘வீடுகள்ல இருக்குற முரட்டு வேலைகளை ஆம்பளைங்கதான் செய்யணும்; அத பொம்பளப் புள்ளைங்களைப் பாக்கச் சொல்லக் கூடாது’ என்று சொல்லுவார். படிப்பதற்கு என்று புத்தகங்கள் வாங்கிக்கொண்டேயிருப்பார். இரவு உறங்கப்போவதற்கு முன்னால் ஒரு மணி நேரமாவது படிக்காமல், தூங்க மாட்டார். தினசரி மதியம் மூணு மணிக்குப் படுத்து, ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு, நான்கு மணிக்கு எழுந்துவிடுவார். நாலரை மணிக்குக் கல்லூரி வாசலில் நிற்பார்.

கல்லூரி வாசலில் என்னோடு பேசிக்கொண்டு இருக்கும் என் நண்பர்கள் எல்லோரிடமும் தானே அறிமுகம் செய்துகொள்வார். அவர்களில் யாரை எங்கு பார்த்தாலும், அவர்களைப் பெயர் சொல்லி அழைத்து, தானே போய்ப் பேசியும்விடுவார். நான் நான்கைந்து பையன்களோடு பேசிக்கொண்டிருந்தாலும் அல்லது ஒருவனோடு மட்டுமே பேசிக்கொண்டிருந்தாலும், ஒரு பார்வையால் அதை அங்கீகரிக்கும் நாகரிகம்தான் அப்பா. ஒரு பெண்ணுக்குத் தகப்பன் தருகிற, ஆகப் பெரிய அன்பின் அடையாளமான சந்தேகமற்ற நம்பிக்கையை எப்போதும் தந்த ஆச்சர்யம் அவர். இரண்டாவது வருடம் படிக்கிறபோது ஒரு சாயங்காலம் அழைத்துப் போக அப்பா வரவில்லை. உறக்கத்திலேயே உயிர் பிரிந்து முகத்தில் தேக்கிய அதே புன்னகையோடு, ஐஸ் பெட்டிக்குள்தான் அப்பாவைப் பார்க்க முடிந்தது.

‘அடடா… நல்ல சாவு’ என்று வந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். சாவு எப்படி நல்லதாக இருக்க முடியும்? தனது புன்னகையோடு எனது புன்னகையையும் அப்பா கொண்டுபோனது அன்றைக்குத் தெரியவில்லை. அப்பாவுக்கான காரியங்கள் முடிகிற வரை, அழுதுகொண்டே மௌனமாக ஒரு மூலையில் சுருண்டுகிடந்தார் அம்மா. பத்தாம் நாள் காரியங்கள் முடிந்ததும், எழுந்து நடக்க ஆரம்பித்தாள். முன் வாசலுக்கும் பின்புறத்துக் கொல்லைக்குமாக ஒரு நாளில் பத்து இருபது முறையாவது நடப்பாள். வீட்டின் முதல், இரண்டாவது மாடிகளில் வாடகைக்குக் குடியிருந்த குடித்தனக்காரர்களைப் பார்க்க நான்கைந்து முறை மொட்டை மாடிக்குப் போய் வருவாள். எல்லோரையும், எல்லாவற்றையும் கண்காணித்துக்கொண்டே, எதையும் காண விரும்பாததுபோலத் திரியும் நடை. கல்லூரிக்கு என்னைக் கொண்டுவிடவும், அழைத்துவரவும் நடந்தே வந்தாள். எங்கும், எப்போதும் நடந்துகொண்டேயிருந்தாள். எதற்கும், யாரோடும் பெருங் குரலெ டுத்துப் பேசத் துவங்கி இருந்தாள். அம்மா என்றாலே நடையும், பெருங் குரலும் என்றாகிவிட்டது. அப்பா தந்திருந்த எல்லாச் சலுகைகளையும் உரிமைகளையும் அடித்துப் பொடித்துக் கரைத்தாள்.

‘பொம்பளப் புள்ளைக்குப் பொறுப்பு வேணாமா?’

‘பொம்பளப் புள்ளைக்குக் கூச்சம் வேணாமா?’

‘பொம்பளப் புள்ளையா, லட்சணமா அடக்க ஒடுக்கமா இரு!’

‘சுத்தி என்ன நடக்குதுனு தெரியாம இருக்குமா, ஒரு பொம்பளப் புள்ள!’

‘சுத்தி என்ன பார்வை வேண்டிக்கிடக்கு, பொம்பளப் புள்ளைக்கு?’

‘தூங்குறது தெரியாம என்ன தூக்கம்? ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் வாரிச் சுருட்டிக்கிட்டு எந்திரிக்க வேணாமா?’

வேறுவேறு சொற்களில், வேறுவேறு தொனியில் என் உடலை எனக்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தாள். ஒரு தடவை, பாவாடை விலகி கணுக்காலுக்கு மேலே கால்கள் தெரியப் படுத்திருந்ததற்காக, விரல்கள் பதியக் காலில் அடித்தாள். செம்மண்ணைக் குழைத்துத் திருநீறு பூசியது மாறி தடம் பதிய அடித்தாள். அந்தத் தடம் இப்போதும் நினைவில் இருக்கிறது. மூன்றாவது வருடத்துடன் என் படிப்பை நிறுத்தினாள்.

‘எவனாவது ஒருத்தனப் பிடிச்சு அவன் தலையில கட்டிட்டா, என் கடமை முடிஞ்சுடும்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவள் சொல்லச் சொல்ல, அந்த முகம் தெரியாத எவனோ ஒருவன் மீது எனக்குக் கோபம் பெருகிக்கொண்டே இருந்தது. ‘அவுக அப்பன் இருந்தா இப்பிடி வுட்டுருவாரா’னு என்னை யாரும் கேட்டுறக் கூடாது’ எனக்கும் தனக்குமாக இதைப் பெருங் குரலில் சொல்லிக்கொண்டு, இரவெல்லாம் நடந்துகொண்டேயிருந்தாள். எனக்கொரு மாப்பிள்ளை தேடி அலைந்துகொண்டே இருந்தாள். பார்த்த எல்லா இடத்தையும் ஏதோ ஒரு காரணம் கண்டுபிடித்துக் கழித்துக்கொண்டே வந்தாள். 20 வருடங்களுக்குப் பின், தனது உறவினர்கள் வீடு தேடிப் போய் வரன் கேட்டு, அவமானப்பட்டுத் திரும்பினாள். எல்லா அவமானங்களையும் என் மீதே இறக்கினாள். ஏதாவது நியாயமாகப் பதில் சொன்னாலும், அதைக் குற்றமாக, குதர்க்கமாக எடுத்துக்கொண்டாள். நான் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாள். நான் என்னையே முற்றாக மறைக்கும் வண்ணம், மௌனத்தைச் சேறுபோல அள்ளி அள்ளி உடம்பெங்கும் பூசிக்கொண்டேன். உடம்பின் எல்லா உறுப்புகளுக்கும் மௌனம் அறிமுகமாகி, பின் அதுவே அனுபவமாகவும் ஆகிவிட்டது. ‘மௌனம் சம்மதம்’ என்று யார் சொன்னாலும் நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். பெரும்பாலான சமயங்களில் மௌனம் என்பது எதிர்ப்பு, நிராகரிப்பு, பெரும் கசப்பு.

10 நாளைக்கு ஒரு தரம், ‘உங்கப்பா கனவுல வந்தாரு… எங்கூடப் பேசுனாரு… பொம்பளப் புள்ளய உன்னய நம்பித்தான் விட்டுருக்கேன்னாரு’ என்று தனது எல்லாச் செயல்களுக்கும் அப்பாவின் சம்மதம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டாள். ‘உன் கனவுல வந்த அப்பா, என் கனவுலயும் வரட்டும்… வந்து சொல்லட்டும்’ என்று சொன்னதற்காக, கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு அடிக்க வந்தாள். ‘யார் கனவுல எப்ப வரணுமுன்னு அவருக்குத் தெரியும்!’ என்று பெருங் குரலில் கத்தினார். அப்பாவோ, ஒருமுறைகூட கனவில் வரவேயில்லை. பொங்கிப் பொங்கி வழிகிற உலைபோலக் கொதித்துக்கொண்டேயிருந்தாள் அம்மா. தன்னிடம் எப்போதுமே இல்லாத ஒன்றைத் தொலைத்துவிடுவோமோ என்கிற பதற்றத்திலேயே இருந்தாள். கடுமையான காயப்படுத்துகிற சொற்களைச் சுடுமணல்போல விசிறி அடித்துக்கொண்டேயிருந்தாள். ‘சூரியனைவிட மனம் சுடும்’ என்று எங்கோ படித்திருக்கிறேன். ‘அவரு இருந்த வரைக்கும் அவர எங்கிட்ட அண்டவிடாமல் பாத்துக்கிட்டது தவிர, வேற என்ன செஞ்சுட்ட நீ எனக்கு?’ என்று ஒருநாள் அம்மா சொன்னது, சுடுசாம்பலில் முகம் புதைந்தது போலாகிவிட்டது. அவள் சொற்களின் வெப்பம் தாங்காமல் என் சிரிப்பு, புன்னகை எல்லாமே ஆவியாகிப் போய்விட்டதை அவளும் நானும் ஒருசேர உணர்ந்திருந்தோம். படுக்கையில் விழுகிற நாள் வரை நடந்துகொண்டும், பெருங் குரலில் பேசிக் கொண்டும்தான் இருந்தாள்.

ஒரு சனிக்கிழமை, கிணற்றடியில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருந்தபோதே, மல்லாக்க விழுந்தாள் அம்மா. நல்லவேளையாகத் தலையில் அடிபடவில்லை. பக்கவாதம். வருஷமாக அப்படியே கிடக்கிறாள். அதுதான் ஏற்கெனவே சொன்னேனே… நான்தான் பார்த்துக்கொள்கிறேன் என்று. அம்மாதான் என்றில்லை. என் பொறுப்பில் யார் இப்படிக்கிடந்தாலும் பார்த்துக்கொள்ளத்தான் செய்வேன். அது சஞ்சலமற்ற, சந்தேகமற்ற கடமை உணர்வு. எல்லாச் சிரிப்பும் புன்னகையும் அடி வயிற்றுக்குள் சுருண்டு ஒளிந்துகொண்ட கடமை. வெளியில் எங்கும் போக வேண்டிய வேலையே இல்லை. அப்பாவோடு கடையில் இருந்த ஜெயராஜ் எல்லாவற்றையும், விசுவாசமாகப் பார்த்துக்கொண்டார். வீட்டில் மிஞ்சிய நேரம் எல்லாம், அப்பா வாங்கிவைத்த புத்தகங்கள் தான் உற்ற துணை. எல்லாத் துயரங்களையும் கடந்து ஏறிப் போக உதவும் ஏணிப்படிகள்தான் புத்தகங்கள். வீட்டில் நிலைத்து நின்றுவிட்ட மருந்துகளின் துர்நாற்றத்தை, புத்தகங்களின் நறுமணம்தான் மாற்றின. படிக்கத் துவங்கும்போது புத்தகத்தை விரித்து அதில் முகம் புதைத்தால், கோடி வேட்டி கட்டிய அப்பாவின் மடியில் தலைவைத்துப் படுக்கிற சந்தோஷம். எல்லா வேலைகளையும் முடித்து, எனது அறைக்குத் திரும்புகிறபோது எனக்கு முன்னதாகவே உறக்கம் வந்து என் கட்டிலில் படுத் துக்கொண்டு எனக்காகக் காத்திருக்கும். உறக்கம் எனக்கு எப்போதும், ஏறக்குறைய மரணம்தான். பிறகு, கனவுகள் எங்கிருந்து வரும்? கனவுகள் இல்லாத உலகத்துக்குள் அப்பா வர வாய்ப்பே இல்லை. இப்போதும் அம்மாவின் கனவில் அப்பா வருகிறாரா என்று தெரியவில்லை.

இன்றைக்கு அதிகாலையில் நடந்ததைத்தானே சொல்ல வந்தேன். ஆனால், என் கதை நீண்டுவிட்டது. இதற்காக நீங்கள் என்னைக் கோபித்துக்கொள்ளக் கூடாது. இத்தனை வருட வாழ்க்கையை, இவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முடிந்ததே சாதனைதான். மீண்டும் தடம் மாறுகிறேன்… என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

இன்று அதிகாலை நாலு மணி வாக்கில் ஒரு கனவு வந்தது. கனவில் அப்பா வந்தார். என்னைக் கல்லூரியின் வாசலில் இறக்கிவிட்டுப் போன அப்பா. அடர்ந்த புருவங்களை உயர்த்தியபடி எப்போதும் ஒரு மாறாத புன்னகையுடன், என்னை வியந்து பார்க்கும் அப்பா. இப்போதும் அது உறக்கமா, விழிப்பா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எப்போதும்போல, என் படுக்கையில் எனக்கு வலது பக்கமாக வந்து உட்கார்ந்துகொண்டார். என் வலது கையை, மெதுவாகப் பற்றி தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார். நம்ப முடியாமல் நான் திணறினேன். அப்பா பேச ஆரம்பித்தார். ஆம், அது அப்பாவின் குரல்தான்.

”நீ உங்கம்மாவப் பாத்துக்குற மாதிரி இந்த உலகத்துல யாராலயும் பாத்துக்க முடியாது. ஆனா, ஒரு சின்னச் சிரிப்பு இல்லாம, பரிவா ஒரு புன்னகை இல்லாம, என்ன பாத்து என்ன ஆகப்போகுது?

நீ தப்புப் பண்ணிருவேங்குற பயமோ, பதற்றமோ அவளுக்கு எப்பவுமே இல்லடா தங்கம். உனக்குத் தப்பா எதுவும் நடந்துறக் கூடாதேங்குற பதற்றம்தான் அவளுக்கு. அந்தப் பதற்றம் எனக்கும் இருந்துச்சு ராஜா. எம் பதற்றத்தை எனக்கு மறைக்கத் தெரிஞ்சுச்சு… அவளுக்கு மறைக்கத் தெரியல. அது கண்டிப்பா, கோபமா வெளிப்பட்டு இப்ப எல்லாமே இறுகிப்போய்க்கிடக்கு.

அவ படுத்துக்கிட்டதால, உன் கல்யாணம் நடக்காம இருக்குங்குற கவலை அவளை அரிக்குது. நாம செத்தாதான் பொண்ணுக்கு ஒரு துணை அமையும்னு நெனைக்குறா. அதையும் சொல்ல முடியாம வாயும் கோணி, வார்த்தையும் கோணிக்கிச்சு.

என் ராஜாத்தியில்ல… என் தங்கம்ல… நீ அவள மன்னிச்சுட்டனு அவளுக்குத் தெரியும்; எனக்கும் தெரியும். ஆனா, எதையும் மறக்காம மனசுக்குள்ள நீ வெச்சுக்கிட்டு இருக்கனு மனசுக்குள்ள அழுதுக்கிட்டே இருக்கா. எல்லாம் மறந்துட்டேம்மானு ஒரு வார்த்தை சொல்லு. வார்த்தைகூட வேணாம். ஒத்தச் சிரிப்பு உதட்டுல நின்னாப் போதும். அப்பா சொன்னாக் கேப்பதான… செய்வியாடா என் தங்கம்!” – தன் குளிர்ச்சியான விரல்களால் என் கன்னத்தை மிக மென்மையாகத் தொட்டார் அப்பா. ஐஸ் பெட்டியில் இருந்து வெளியில் எடுத்து வைத்தபோது இருந்த அதே குளிர்ச்சி. விழித்துக்கொண்டேன். உடம்பெங்கும் வியர்த்து நனைந்திருந்தது. அறை முழுவதும் அப்பாவின் ‘வாசனை’ பரவிக்கிடந்தது. பின் கழுத்துக்கு மட்டும் அப்பா போட்டுக்கொள்கிற பவுடர் வாசனையும் அப்பா குடிக்கிற சிகரெட் வாசனையும் சேர்ந்த ஒரு அலாதியான வாசனை அது. எனக்கு ரொம்பப் பிடித்த அப்பாவின் வாசனை. உடம்பெங்கும் புல்லரித்துப் புல்லரித்துப் பொங்கிக்கொண்டே இருந்தது. அப்பா எப்போதும் வீட்டுக்குள் புகை பிடித்ததில்லை. கொல்லையில், கிணற்றுக்குப் பக்கத்தில் இருக்கும் துணி துவைக்கிற கல்லின் மீது அமர்ந்துதான் புகை பிடிப்பார். ஏனோ, கிணற்றடிக்கு ஓடினேன். கிணற்றடி எங்கும் அதே வாசனை நிறைந்திருந்தது. மெலிதான காற்றுகூட இல்லாமல், கொல்லையில் இருந்த மரங்கள், செடிகொடிகள் எல்லாமே வரைந்துவைத்த ஓவியம் போல் இருந்தன. இருள் மெலிதாகக் கரைந்துகொண்டிருந்தது. அப்பா உட்காருகிற கல்லின் மீது அப்பா உட்காருகிற மாதிரியே உட்கார்ந்துகொண்டேன்.

எங்கும் பரவி நிற்கும் அப்பாவின் வாசனை அப்பாவே வந்துபோனதால் வந்ததா, அல்லது என் நினைவில் பதிந்துகிடக்கும் அந்த மணம் என்னுள் இருந்து வெளியேறி, என்னைச் சுற்றி நிற்கிறதா என்று என்னால் பிரித்தறிய முடியவில்லை. நடப்பதெல்லாம் நனவா, கனவா, கயிறா, பாம்பா என்று யூகிக்கவே இயலவில்லை. அன்றி, எல்லாமே கலந்து நடக்கிறதா? எனக்குச் சிலிர்த்துக்கொண்டே இருந்தது. கிணற்றுக்குத் தெற்கே, வெளிப்புறச் சுவரை ஒட்டி, முதல் நாள் துவைத்துக் காயப்போட்டிருந்த அம்மாவின் புடைவையும் துணிகளும் அசையாமல் கொடியில்கிடந்தன. அதை விலக்கியபடி, யாரோ போவதுபோலப் பிரமை தட்டியது. திகைத்துத் திரும்பிப் பார்த்தபோது, அதுவரை இல்லாத ஒற்றைக் காற்று, அன்றைய இரவின் இறுதிப் பெருமூச்சைப் போல, தெற்கில் இருந்து இறங்கி, அதே வேகத்தில் சுழன்று மேலேறிப் போனது.

அப்பா சொன்னதை உடனே செய்வது தவிர, வேறு எதையும் நினைக்கத் தோன்றவில்லை. கிணற்றடியிலேயே குளித்தேன். அறைக்குச் சென்று அப்பாவுக்குப் பிடித்தமான மஞ்சள் வண்ணப் புடைவையை அணிந்துகொண்டேன். சமையலறைக்குப் போய், காபி போட்டு எடுத்துக்கொண்டு, அரை மணி நேரம் முன்னதாகவே அம்மாவின் அறைக்குப் போனேன். அதிகாலைக் காபியை, அம்மா மிகுந்த விருப்பத்துடன் குடிப்பாள். இத்தனை ஆண்டுகளில் இல்லாத புன்னகை ஒன்று, இயல்பாக அம்மாவின் உதடுகளில் விரிந்து, மலர்ந்து பூத்து நின்றது. அம்மா, இன்னும் உறங்கிக்கொண்டிருந்தாள். வலது கையை மார்பின் மீது வைத்திருந்தாள். கையை எப்படி அசைத்தாள். எப்போது அத்தனை உயரம் கைகளைத் தூக்கினாள் என்று வியப்பாக இருந்தது. கைகளில் இருந்த அசைவைப் பார்த்த மகிழ்ச்சியில் என் புன்னகை மேலும் பூரித்தது. காபி டம்ளரை மேஜையில் வைத்துவிட்டு அவளைத் தொட்டேன். கூப்பிட்டேன். எழுந்திருக்கவில்லை. முகத்தில் இருந்த கோணல் நேராகி இருந்தது. அபூர்வமான அமைதியோடு இருந்தாள். ஏதோ தயக்கத்துடனும் தவிப்புடனும் அவளது மார்பில் கைவைத்துப் பார்த்தேன். எல்லாம் மௌனமாகி இருந்தது. இப்போது இந்தக் கணம் கொல்லையில் துணிகளை விலக்கியபடி, இரண்டு பேர் போனதுபோலத் தோன்றுகிறது.

எல்லோரிடமும் எல்லா வற்றையும் சொல்லிவிட முடியுமா? ஆனால், ஏனோ உங்களிடம் சொல்ல வேண்டும் என்றுபட்டது. சொன்னேன். நம்புவது உங்கள் விருப்பம்!

– ஜூன் 2013

Print Friendly, PDF & Email

1 thought on “அப்பாவின் வாசனை

  1. அருமை. வார்த்தைகளின் கோர்வை மிகவும் நேர்த்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *