அப்பாவின் கறுப்புக்கோட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 8,461 
 

“குட்டி, அதைக் கலைக்காதேடா, என்னங்க, இங்க கொஞ்சம் வரீங்களா? உங்க பொண்ணை கொஞ்சம் தூக்கிட்டுப் போங்க, என்னை பீரோவில் துணி அடுக்க விட மாட்டேங்கறா. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமைதானே, இன்னிக்காவது கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக்கொள்ளக்கூடாதா?”

மனைவி கங்காவின் குரல் கேட்டு டிவியை அணைத்துவிட்டு உள்ளே போனான் ராகவன். அங்கு 2 வயது நிம்மி துணிகளுக்கு நடுவில் உட்கார்ந்துகொண்டு கங்கா மடித்து வைத்திருந்த ஆடைகளை எல்லாம் ஒவ்வொன்றாக கலைத்துக்கொண்டிருந்தாள்.

அறை வாசலிலேயே சிறிது நேரம் நின்றுகொண்டு அவள் விளையாட்டை ரசித்தான். கங்காவுக்கு பொறுமை போய்க்கொண்டிருந்தது. அதையும் ரசித்துக்கொண்டிருந்தவன் தனக்குப் மிகவும் பிடித்த ஒரு துணியை கையிலெடுத்து அவள் கீழே போட்டு பிரட்ட ஆரம்பித்ததும் பொறுமையிழந்து அருகில் சென்று அந்த துணியைப் பிடுங்கினான். கலகலவென சிரித்த கங்கா, “அதானே பார்த்தேன், உங்கப்பா கோட்டை யாரையும் எடுக்கவிட மாட்டீங்களே.” என்றாள். பதில் பேசாமல் புன்னகைத்துக்கொண்டே கோட்டை எடுத்து நீவி ம்டித்து மேல் தட்டில் வைத்தான். “நான் நிம்மியை பார்த்துக்கிறேன். நீ அடுக்கிவைத்துவிட்டுவா” என்றபடியே வரவேற்பறைக்கு வந்தான். குழந்தைக்கு விளையாடப் பொம்மைகளை எடுத்துக் கொடுத்து, அருகில் உட்கார்ந்து விளையாட்டுக் காட்ட ஆரம்பித்தான். அதே சமயம் மனம் பழைய நினைவுகளில் மிதக்க ஆரம்பித்தது. கங்கா கிண்டல் செய்த அந்தக் கறுப்புக்கோட்டைப் பற்றின ஞாபகங்கள்.

வக்கீல் சங்கரன் என்றால் அந்த ஊரில் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். இப்ப மாதிரி அந்தக்காலத்தில் கிடையாது. வக்கீல், டாக்டர் என்றால் ரொம்ப மதிப்பு, மரியாதை எல்லாம் உண்டு. வக்கீலைய்யா என்றுதான் எல்லோரும் மரியாதையுடன் அழைப்பார்கள். அவர் வெள்ளைப் பாண்ட், வெள்ளை முழுக்கை ஷர்ட், அதன்மேல் கறுப்புக்கோட்டு, கழுத்தில் டை அணிந்துகொண்டு, ஷூவுடன் கம்பீரமாக போவது இன்னும் அவன் கண்ணில் அப்படியே நிழலாடுகிறது. அந்தக் கறுப்புக் கோட்டு, அதுதான் ராகவனுக்கு மிகப்பிடித்த விஷயம். வழவழப்பாக வெல்வெட்ப்போல் ஆழ்ந்த கறுப்புநிறத்தில் இருக்கும். அதற்கென்று ஒரு பிரஷ் இருக்கும். அம்மா அந்த பிரஷ் வைத்துக்கொண்டு கோட்டின்மேல் படிந்திருக்கும் மெல்லிய தூசிகளை சுத்தம் செய்து போட்டுக்கொள்வதற்குத் தயாராக ஹாங்கரில் மாட்டி வைப்பாள். அவள் அப்படி செய்துகொண்டிருக்கும்போது இவன் சிலசமயம் அவனுக்கு மாட்டிவிடச் சொல்வான். அது அவனையே மூடிவிடும் அளவில் கனமாகத் தோன்றும். அப்படிப்பட்ட அந்தக்கோட்டைத்தான் அவன் அப்பா மறைவிற்குப் பிறகு பொக்கிஷமாக வைத்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு கல்யாணமான புதிதில் கங்கா, உபயோகமில்லாத துணிகளுடன் சேர்த்து மூட்டைகட்டி வைத்துவிட்டாள். அதற்குப்பிறகு கங்கா, அவனிடம் பட்டப்பாடு இப்ப நினைத்தாலும் கங்காவுக்கு அழுகைவரும். ராகவன் அந்தக்கறுப்புக்கோட்டைத் தடவிக்கொடுக்கும் பாவனையில் செல்லமகளைத் தடவிக்கொடுத்துக்கொண்டு மெய்மறந்திருந்தான்.

வாசலில் காலிங்பெல் அடித்தக்கொண்டிருந்தது. என்ன, கறுப்புக்கோட்டு நினைவில் மூழ்கியாச்சா? என்று கங்கா அவனைத் தட்டி நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தாள். “வாசலில் யாரு பாருங்க.”

அவனுடைய நண்பன் திவாகர்தான், அவனுடைய பையன் மகேஷுடன் வந்திருந்தான். வரவேற்று உட்காரவைத்து பேசிக்கொண்டிருந்தான். அலுவலகம், அரசியல் எல்லாம் பேசிமுடித்துவிட்டு விஷயத்திற்கு வந்தான். மகேஷ் பள்ளியில் சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பாரதியார் வேஷத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்கு அவன் வைத்துக்கொண்டிருக்கும் கோட்டை இரவல் கேட்டான். ராகவனுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. கொடுக்காமல் எப்படி சமாளிக்கலாமென்று யோசனை. கங்காகூட இவன் என்ன பதில் சொல்கிறான் என்று கேட்க அறைவாசலில் ஆவலுடன் நின்றாள்.

சிறிது யோசனைக்குப்பிறகு, இன்னிக்குத்தேதி பத்துதானே. பதினைந்தாம் தேதி அவன் பள்ளியில் நானே கொண்டுவந்து தருகிறேன். அப்பொழுதுதான் நாடகம் முடிந்ததும் நான் திருப்பி எடுத்துவர வசதியாக இருக்குமென்று சொன்னான். நண்பனும் அதுவும் சரிதானென்று கிளம்பினான்.

ராகவன் இப்பொழுதிருந்தே தன் பிரியமான கறுப்புகோட்டு நாடகத்தில் நடித்துவிட்டு நல்லபடியாக திரும்பி தன் கைக்கு வரவேண்டுமே என்று கவலைப்பட ஆரம்பித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *