அப்பாவின் கண்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 14,801 
 

ராத்திரி எல்லாம் அப்பாவோடுதான் இருந்தான் சங்கரன். பொட்டு தூக்கம்கூட இல்லை. அப்பா, இருமிக்கொண்டே இருந்தார். சங்கரனின் கை விரல்களைப் பிடித்து நகத்தைத் தடவியவாறே ஓரக்கண்ணால் பார்த்தார். ‘நகத்தை வெட்டுடா சங்கரா… படிக்கிற பையன் மாதிரியா இருக்க!’ என அப்பா சொல்லும் வழக்கமான வசவு, சங்கரனின் காதுகளில் ஒலித்தது.

நிரம்பியிருந்த மூத்திரப் பையை எடுத்துச் சென்று பாத்ரூமில் ஊற்றினான். திரும்பி வரும்போது நைட் டியூட்டி நர்ஸ், டேபிளின் மீது இருந்த காகிதத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அவரிடம் அப்பாவின் ஆரோக்கியம் பற்றி ஏதாவது கேட்கலாம் என நினைத்து அருகில் சென்றான். தலையைத் தூக்கி அவனைப் பார்த்தார். ‘எல்லாமே முடிந்துபோய்விட்டது. அப்புறம் என்ன சொல்வது?’ என்பதுபோன்று இருந்தது அவருடைய பார்வை. அதற்கு மேல் சங்கரன் அங்கு நிற்கவில்லை.

அப்பாவின் கண்கள்

அந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வியாதி. ஒருவரின் மூக்கில் செயற்கை சுவாசம் ஏறிக்கொண்டிருந்தது. இன்னொருவரின் நெஞ்சுப் பகுதியில் 10, 15 ஒயர்களுடன் பக்கத்தில் ஒரு மெஷின் வைத்திருந்தார்கள். மற்றொருவர் தூக்கத்தில் முனகிக்கொண்டு இருந்தார். அந்த அறையில் தூங்கமுடியாமல் துடித்துக்கொண்டிருந்தது சங்கரனின் அப்பா மட்டுமே. அவருக்காக அவனும் விழித்திருந்தான்.

தலைக்கு மேல் ஓடிய மின்விசிறியை அடிக்கடி பார்த்தார் அப்பா. அவரது நெஞ்சை கைகளால் நீவிவிட்டவன், அவரது வலது கண்ணோரம் நீர் வழிவதைக் கவனித்தான். அதைப் பார்த்ததும் சங்கரனின் கண்களும் கலங்கின. அவரைக் கொஞ்சம் நெருங்கினான். கட்டிலில் உட்கார்ந்து அவருடைய தலையை நீவி, கண்களைத் துடைத்தான்.

‘சிறுநீரகங்கள் இரண்டும் பழுதாகிவிட்டன. எந்தவித மாற்று சிகிச்சையும் பலன் அளிக்காது’ என்று டாக்டர் சொல்லி, இரண்டு மாதங்கள் ஆகின்றன. வயதின் காரணமாக எந்தவித மருத்துவ சிகிச்சையும் செய்யமுடியாத சூழல். நீரிழிவு நோய் கடுமையாகவே தாக்கியிருந்தது. தினந்தோறும் இன்சுலின்கள், மருந்து மாத்திரைகள் என இரண்டு மாதங்களாக இதே மருத்துவமனையில், இதே படுக்கையில் சங்கரனின் அப்பா.

”உனக்கு ஒண்ணும் இல்லப்பா… நாளைக்கு வீட்டுக்குப் போயிடலாம்” என்று அவர் காதுகளில் நா தழுதழுக்கச் சொன்னான். மீண்டும் அவரது கண்களில் நீர் வழிந்தது. அவரது கைகளை இறுகப் பற்றி கண்களைத் துடைத்துவிட்டான்.

பொழுது விடிந்தது. சங்கரனின் கண்களில் ஒரே எரிச்சல். இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததால் கண்கள் சிவந்திருந்தன. அண்ணன், வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வந்தார். ”என்னாச்சு… டாக்டர் ஏதாவது சொன்னாரா?” என்று கேட்டார். ‘எதுவும் சொல்லவில்லை’ என்பதுபோல உதட்டைப் பிதுக்கினான் சங்கரன். அப்பா இன்னமும் தூங்கவில்லை. தண்ணீர் தொட்டு அப்பாவின் கை-கால்களைத் துடைத்தான். அப்பாவின் சூடு அவன் கைகளில் ஏறியது. அப்பாவின் முகத்தைத் துடைத்து கண்களை ஈரமான பஞ்சுகொண்டு ஒத்தி எடுத்தான்.

”சரி நீ போயிட்டு வா. நான் பார்த்துக்கிறேன்!” என்று அண்ணன் சொன்னார்.

சங்கரன், அரைகுறை மனதுடன் கிளம்ப முடிவுசெய்தான். அப்போது, அவன் கையைப் பிடித்து அப்பா இழுப்பதுபோன்ற ஓர் உணர்வு. கையை விடுவித்து அப்பாவைப் பார்த்தான். அவரது கண்கள் அவனையே உற்றுநோக்கிக் கொண்டிருந்தன. ‘போகாதே…’ என்று சொல்வதாக அவனுக்குப்பட்டது. இருந்தாலும் அவன் கண்கள் ஓய்வை விரும்பின. கண் எரிச்சல் தாங்க முடியாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறி வீட்டுக்கு வந்தான்.

யாரிடமும் பேசாமல் படுக்கையில் படுத்த சிறிது நேரத்தில், அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. ‘துக்கம் தொண்டையை அடைக்கும்’ என்பார்களே… சங்கரன் அதை உணர்ந்தான்…அப்பாவின் மரணச் செய்தியைக் கேட்டபோது!

மருத்துவமனைக்குள் நுழைந்ததும், அண்ணன்கள் இருவரும் அவனைப் பார்த்து ‘ஓ…’வென அழத் தொடங்கினர். அப்பாவின் அருகில் சென்றான். அவர் கண் மூடித் தூங்குவது போலவே இருந்தது. வலது கண்ணின் ஓரத்தில் நீர் காய்ந்திருந்தது. அவரை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

அப்பாவின் உடல் வீட்டுக்கு வந்தது. ஊர்ஜனம் எல்லாம் கூடியிருந்தனர். ஆம்புலன்ஸ் வீட்டின் வாசலில் நின்றதும் எல்லோரும் கூடிக்கொண்டார்கள். ‘எங்க அய்யா… சாமி…’ என்றெல்லாம் ஒப்பாரிக் குரல்கள். கேட்கக் கேட்க சங்கரனின் கண்களில் இருந்து சாரை சாரையாக நீர் வந்துகொண்டே இருந்தது.

நடுவீட்டில் அப்பாவின் உடல். முக்கிய பிரமுகர்கள், ஊர்ப் பஞ்சாயத்தார்கள் எல்லாம் சங்கரனின் அண்ணனைச் சுற்றி ஏதோ கேட்டுக்கொண்டிருந்தனர். வாழைமரங்கள் வந்து இறங்கின. பெரிய அண்ணனின் நண்பர், அண்ணனிடம் ஏதோ ஒரு காகிதத்தைக் காண்பித்துப் பேசிக்கொண்டிருந்தார். பிறகு, இருவரும் சங்கரனை நோக்கி வந்தனர்.

”அப்பா, கண் தானம் பண்ணியிருக்காராம்!” என்று அண்ணன் மெல்லிய குரலில் சொன்னார். ”ஆமா சங்கரா… 10 வருஷத்துக்கு முன்னாடியே அப்பா கண் தானம் பண்ணிட்டார். எங்க ரோட்டரி க்ளப்புக்கு உறுதிமொழி கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கார்… பாரு!” என்று சொல்லி அந்தக் காகிதத்தை அண்ணனின் நண்பர் அவனிடம் தந்தார். அவன் அதில் அப்பாவின் அழகான கையப்பத்தை மட்டும்தான் பார்த்தான். ”நீ சொன்னா இப்பவே கண் ஆஸ்பத்திரிக்கு சொல்லி ஆம்புலன்ஸையும் டாக்டரையும் வரச் சொல்றேன். ரெண்டு நிமிஷம்தான் ஆகும்” என்று சங்கரனின் பதிலுக்காகக் காத்திருந்தனர். ”அப்பாவின் ஆசைப்படியே செய்யுங்கண்ணே” என்று சொல்லிக் கலங்கினான் சங்கரன்.

அரை மணி நேரத்துக்குள்ளாக ஒரு டாக்டர் மற்றும் இரண்டு செவிலிகள் ஆம்புலன்ஸில் வந்து இறங்கினர். நர்ஸ் ஒருவரின் கையில் சிறு கண்ணாடி டம்ளர், சிறிய பெட்டி ஆகியவை இருந்தன. மூவரும் வீட்டினுள் நுழைந்தனர். அம்மாவுக்கு விஷயம் தெரிந்ததும் ‘ஓ’வென்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டார். சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தார்கள். அப்பாவின் உடலை யாரும் பார்க்காதவாறு இரண்டு பேர் சுற்றி நின்று வெள்ளைத் துணியை வைத்து மறைப்பு ஏற்படுத்தினர். டாக்டர், தனது வேலையைத் தொடங்கினார்.

அப்பாவின் கண்கள்2

அப்பா கோபப்படும்போது அவருடைய கண்களைப் பார்க்க முடியாது. ஏதேனும் தப்பு செய்து அவர் முன் நிற்கும்போது, ‘டேய்… என் கண்ணைப் பார்த்துப் பேசுடா!’ என்றுதான் சொல்வார். அப்போது கருவிழியில் சிறு மின்னல் பளிச்சிட்டு மறையும். ‘கண்ணோடு கண் பார்த்துப் பேசினால், பொய் பேச வராது’ என்று அடிக்கடி சொல்வார். வீட்டு வாசற்படியில் ஈரிழை சிவப்புத் துண்டை தோளில் போட்டுக்கொண்டு, கால் மேல் கால் வைத்து, அப்பா சார்மினார் சிகரெட் பிடிக்கும் அழகை தெருவே பேசும். 60 வயதுக்கு மேல்தான் அப்பா கண்ணாடி அணியத் தொடங்கினார். அந்தக் கண்ணாடி அவ்வளவு சுத்தமாக இருக்கும். மஞ்சள் கலர் துணியைக்கொண்டு அடிக்கடி துடைத்துக்கொண்டே இருப்பார். கண்களில் லேசாகத் தூசு விழுந்தால்கூட, ‘சங்கரா… இந்தக் கண்ணு மருந்தைக் கொஞ்சம் போட்டுட்டுப் போப்பா’ என்று சொல்வார்.

சங்கரன் பைக் வாங்கி முதன்முதலாக அதில் வேலைக்குப் புறப்பட்டபோது, ‘ஏதாவது கண்ணாடி வாங்கிப் போட்டுட்டு போப்பா. ரோட்ல ரொம்பத் தூசியா இருக்கும்!’ என்று அவன் அப்பா சொன்னது சங்கரனுக்குள் இப்போதும் எதிரொலித்தது.

டாக்டர், தனது வேலையை முடித்துக்கொண்டு வெளியே வந்தார். அப்பாவின் உடலை நோக்கி மலர் வளையங்களும் மாலைகளும் சென்றன. ‘எது கேட்டாலும் கொடுக்கற எங்க ராசா… செத்தும் கண் கொடுத்த மகராசா…’ என்று ஒப்பாரிக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. சங்கரனின் அப்பா கண் தானம் கொடுத்த தகவல், காட்டுத் தீ போல ஏரியா முழுதும் பரவியது.

அப்பாவை இடுகாட்டுக்கு அழைத்துச் செல்ல பல்லக்குத் தயாராகிக்கொண்டிருந்தது. அவரைக் குளிப்பாட்டினார்கள். தேவாரம் பாடியபடியே கட்டியங்காரர் அப்பாவின் நெற்றியில் திருநீறு பட்டையை எடுத்து அப்பினார். சங்கரன் கண்களை மூடிக்கொண்டான்!

”அப்பாவின் கண், இனி யாருக்கோ பொருத்தப்படுமாம். ஒருவரிடமிருந்து பெற்ற கண்களை இருவருக்குப் பொருத்துவார்களாம்” என்று, மறுநாள் காலை பத்திரிகையில் அப்பா கண் தானம் கொடுத்த செய்தியைப் படித்துவிட்டு அண்ணன், சங்கரனிடம் சொன்னான்.

நாட்கள் ஓடின. மூன்று மாத காலம் கழிந்த நிலையில், நகரின் பிரபலமான கண் மருத்துவமனை ஒன்றிலிருந்து சங்கரன் வீட்டுக்குக் கடிதம் ஒன்று வந்தது. அது, அப்பா கண் தானம் அளித்ததற்கு நன்றி தெரிவித்து வந்த கடிதம். அப்பா தானமாக அளித்த இரண்டு கண்களில் ஒன்று பழுதாகி இருந்ததாம். அவருடைய வலது கண்ணை மட்டும் எடுத்து ஒருவருக்குப் பொருத்தியிருக்கிறார்களாம். அவருக்குப் பார்வை திரும்பக் கிடைத்துள்ளதாம். இது தொடர்பான மகிழ்ச்சியையும் அந்தக் கடிதத்தில் மருத்துவமனை நிர்வாகம் பகிர்ந்திருந்தது.

கடிதத்தைப் படித்ததும் சங்கரன் பெருமூச்சு விட்டான். அப்பாவின் கண் இப்போதும் வாழ்கிறது என்று உள்ளுக்குள் மகிழ்ந்தான். அப்பாவின் கண்ணை யாருக்குப் பொருத்தியிருப்பார்கள்? அவர் எப்படி இருப்பார். அவரைப் பார்க்கலாமா? என்றெல்லாம் சங்கரனுக்குள் கேள்விகள் எழுந்தன.

ஆவல் உந்தித் தள்ள அந்தக் கண் மருத்துவமனைக்குச் சென்றான். அப்பாவின் பெயரைச் சொல்லி, ”அவருடைய கண்ணை யாருக்குப் பொருத்தியிருக்கிறீர்கள்?” என்று கேட்டான். ”அந்தத் தகவலை யாருக்கும் சொல்ல மாட்டோம்” என்று மருத்துவமனை வரவேற்பாளர் கூறினார். தலைமை மருத்துவரைச் சென்று பார்த்தான். அவரும் கைவிரித்துவிட்டார். சங்கரன் எப்படிக் கேட்டும் அவனது முயற்சி அங்கு பலன் அளிக்கவில்லை. ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான். ஆனால், அப்பாவின் கண்ணால் உலகைப் பார்க்கும் அந்த மனிதனைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் மட்டும் அவனிடம் நீர்த்துப்போகவில்லை.

சில நாட்கள் கழித்து, வேறொரு வேலையாக கண் மருத்துவமனை இருக்கும் தெருவுக்குள் போய்க்கொண்டிருந்தான். ‘இந்த முறை கேட்டுப் பார்க்கலாம்’ என்று மனதுக்குள் நினைத்த சங்கரன், தன்னுடைய டூ வீலரை வாசலில் நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்குள் நுழைந்தான். தலைமை மருத்துவரின் அறைக்கு முன்னர் இருந்த நாற்காலியில் அமர்ந்து காத்திருந்தான். ‘இந்த முறை எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி, அப்பாவின் கண் பொருத்தப்பட்ட அந்த மனிதரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்’ என்ற உறுதியை மனதுக்குள் ஏற்படுத்திக் கொண்டான். டாக்டரின் அறையில் இருந்து ஒருவர் வெளியே வந்ததும், இவன் முறை வந்து உள்ளே நுழைந்தான்.

”டாக்டர் நான் சங்கரன்… என் அப்பா கண் தானம் செஞ்சிருக்கார். அவருடைய கண்ணை யாருக்குப் பொருத்தியிருக்கீங்கனு தெரிஞ்சுக்கணும். நான் ஏற்கெனவே இங்க வந்து கேட்டேன்…” என்று இழுத்தான்.

”ஸாரி ஸார்… நான்தான் ஏற்கெனவே உங்ககிட்ட சொன்னேனே… ஒருத்தரோட முழுக் கண்ணையும் எடுத்து இன்னொருத்தருக்குப் பொருத்த முடியாது. கருவிழிகளைத்தான் எடுத்துப் பொறுத்துவோம். உங்க அப்பாவோட கருவிழியைத் தானமா வாங்கினவங்களை நீங்க பார்க்கணும்னு சொல்ற உங்க உணர்வை நான் மதிக்கிறேன். அதே நேரம் தானமா வாங்கினவங்களுக்கு உங்களைப் பார்க்கும்போது, அவங்க மேலயே அவங்களுக்கு ஒருவிதப் பரிதாப உணர்வு வரலாம். நீங்க அவங்களை அடிக்கடிப் பார்க்கப் போனீங்கன்னா, ‘நாம இவன் அப்பாக்கிட்டேருந்துதானே கண்ணைத் தானமா வாங்கினோம். என்ன இருந்தாலும் இது நம்ம கண்ணு இல்லையே’ங்கிற தாழ்வு மனப்பான்மை அவங்களுக்கு வரும். அது அவங்க மனசைப் பாதிக்கும். தவிர, நீங்க பார்க்கும்போது உருவாகிற ஒரு எமோஷனல் பாண்டிங்கை அவங்க விரும்பாமக்கூட இருக்கலாம். அதனாலதான் சொல்றேன்…” – உளவியல் காரணங்களைச் சொல்லி சங்கரனைத் தவிர்த்தார் டாக்டர்.

”அது வந்து… டாக்டர். ப்ளீஸ்… என் அப்பாவோட கண்களை…” என்று மீண்டும் சங்கரன் ஆரம்பித்தபோது…

கொஞ்ச நேரம் அவனைத் தீர்க்கமாகப் பார்த்த டாக்டர், ”தயவுசெஞ்சு புரிஞ்சிக்கங்க…” என்று சொல்லிவிட்டு, அடுத்த நோயாளியை அழைப்பதற்கான மணியைப் பலமாக அழுத்தினார். வெளியே இருந்து வயதான ஒரு பெண்மணி, கறுப்பு கண்ணாடி அணிந்தபடி தட்டுத்தடுமாறி உள்ளே நுழைந்தார். சங்கரன் எழுந்து அந்தப் பெண்மணியைப் பிடித்து தன்னுடைய நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு டாக்டரைப் பார்த்தான். ‘இதுதான் உங்க முடிவா… அந்த ரகசியத்தைச் சொல்ல மாட்டீங்களா?’ என்று கேட்பது போல இருந்தது அவனுடைய பார்வை. அவன் பார்த்ததை டாக்டர் கண்டுகொள்ளவே இல்லை. வந்திருந்த பெண்மணியின் கண்களைச் சோதிக்கத் தொடங்கிவிட்டார்.

நிலைமையை உணர்ந்த சங்கரன், அந்த அறையில் இருந்து வெளியேறி வாசலுக்கு நடந்தான். அப்போது ஒரு கை அவனைப் பற்றியது. அவன் திரும்பிப் பார்த்தான். அவன் கையைப் பிடித்தது, வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர்.

”தம்பி… இந்தச் சொட்டு மருந்தை என் கண்ணுல கொஞ்சம் போட்டுவிடுப்பா” என்றார்.

மருந்தை அவரிடமிருந்து வாங்கி, ”எந்தக் கண்ல போடணும்?” என்று கேட்டான். அவர் தன்னுடைய வலது கண்ணைக் காண்பித்தார். அதில் மருந்து போடும்போது அந்தக் கருவிழியை உற்றுப் பார்த்தான். அப்பா கண்டிக்கும்போது அவரது கருவிழியில் ஒரு மின்னல் தோன்றி மறையுமே. அந்தச் சிறு மின்னல் பளிச்சிட்டு அது, அவனை வாஞ்சையோடு ஈர்த்தது. ‘அப்போ இது… அப்பாவின் கருவிழியா?’ – சங்கரனின் உடலில் மின்சாரம் பாய்ச்சியது போன்றதோர் உணர்வு. அப்போது பெரியவரின் விழி மீது மருந்து சொட்டுகள் விழ, இமைகள் மூடிக்கொண்டன. மூடிய வலது இமையின் ஓரமாக மருந்தும் கண்ணீரும் கலந்து வழிந்தது. சங்கரன் அதைத் துடைத்தான். கைகள் நடுங்கின. அவனது கண்களிலும் நீர் பெருக்கெடுக்கத் தொடங்கியது!

– அக்டோபர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *