அப்பாவின் இந்துமதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 10,938 
 

பின்னேரம் கிட்டத்தட்ட மூன்றுமணியாயிருக்கும்.

அப்பாவின் அறை மிகவும் அமைதியாயிருக்கிறது. அவரின் கண்கள் மூடியிருக்கிறது. தூங்குகிறார் போலும் என்று ராகவன் தனக்குள்ச் சொல்லிக் கொண்டாலும்,அப்பாவின் வாழ்க்கையின் சட்டென்று வந்த அதிர்ச்சியின்; பிரதிபலிப்புத்தான் அவர் தன்னைமறந்து விட்ட இந்நிலைக்குக் காரணம் என்று அவனின் அடிமனம் முணுமுணுத்தது.அவன் மனம் வலித்தது.அந்த வலியின் நோவை அவனால்ச் சகிக்க முடியாமலிருக்கிறது.

தன்னால் முடிந்தவரை தனது குடும்பத்தின் வளர்ச்சிக்கு,குடும்பத்தினரின் திருப்திகளுக்காக,அன்பான நெருக்கமான உறவுக்காகத் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த மனிதன் இன்று தன்னைச் சுற்றியிருப்பவர்கள் யாரென்று என்று தெரியாமல்த் தவிப்பதைப் பார்க்க அவனால்த் தாங்கமுடியாதிருக்கிறது. மற்றவர்களின் திருப்தியை நிறைவுசெய்து வாழ்ந்த அப்பாவின் அடிமனதில் ஆழ்ந்து கிடந்த தெய்வீகமான.அவரின் ஆத்மீகத்துடன் பிணைந்த காதலின் ஏக்கத்தை இனியும் தாங்கமுடியாது என்ற துயர் வந்த அந்தக் கணத்தில் அவரின் பழைய நினைவுகள் அத்தனையும் அவரின் உணர்விலிருந்து ஓடிவிட்டதா?

கோயிலுக்குப் போகாத ஒரு கோயிலாக வாழ்ந்து தன்னைச் சார்ந்தவர்களின் வேணடுகோள்களை அவரால் முடிந்தவரை செய்தவர்.வாழ்க்கையில் அவருக்குக் கொடுக்கப் பட்ட கடமைகளைத் தன்னால் முடிந்தவரைவரை செய்து முடித்த அப்பாவைப்போல ஒரு நல்ல மனிதனை வருத்திய உலகிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள அவர் ஆழ்மனம் உத்தரவிட்டதா?

ராகவன் அப்பாவுடன் தனியாக இருக்கும்போது இப்படிப் பல சிந்தனைகளின் வேதனையைத் தாங்காமல் அழுதுவிடுவான். அப்பாவைப் பற்றி அவனுக்குத் தெரிந்த பல விடயங்களை அவனால் அவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களுடனும் தற்போது பகிர்ந்து கொள்ள முடியாது.

அப்பாவின் அறையில் மருந்து நெடி அவனின் நாசியைத் துளைத்தது. அந்த நெடியையும்;; மீறி ஏதோ இனம் தெரியாத ஒரு வலிமையான வாடை,அவனின் நாசியால் நுழைந்து அவன் சிந்தனையை உலுக்கியது. இதுதான் மரணவாடையா?அந்த நினைவின் அழுத்தம் அவனைக் குலுக்கியது.அவனால் ஓவென்று அலறவேண்டும் போலிருந்தது.

ராகவன் அப்பாவின் கட்டிலில் உட்கார்ந்து மிகவும் மெல்லமாக மூச்சுவிடும் அவரை உற்று நோக்கினான். அறுபத்திரண்டு வயதாகும் அப்பா,இருவருடங்களுக்கு முன் சட்டென்று நோயாளியாகியானார். அதுவரைக்கும் மிகவும் வாட்ட சாட்டமாகத்தானிருந்தார். விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற கலாநிதி.பெரிய உத்தியோகத்திலந்தவர்;. அதன் நிமித்தமாக,உலகமெல்லாம் அடிக்கடி பிரயாணம் செய்தவர். மூன்று குழந்தைகளின் வாழ்க்கைக்கும்; அவரின் உறவுகளுக்கும் தன்னால் முடிந்தவரை உதவி செய்யப்; பாடுபட்டவர்.

அவரின் முதல் மகன் மாதவன் ஆங்கிலேயப் பெண்ணைத் திருமணம் செய்தபோது ராகவனின் தாய் அதையிட்டுத் தர்மசங்கடப்பட்டபோது அவளைத் தேற்றி மகனின் காதல் வெற்றி பெற உதவி செய்தவர்.

இரண்டாவது மகள் செல்வியின் காதற்திருமணம் தோலிவியானதால் அதையிட்டுத் துயர்படும் மகளையும் அவள் நிலைகண்டு தவிக்கும் மனைவியையும் அன்புடன் தேற்றிக் கொண்டிந்தவர்;.

மூன்றாவது மகன் ராகவன் அவனுக்குப் பிடித்த செந்தாமரை என்ற தமிழ்ப்பெண்ணைப் பற்றித் தகப்பனிடம் சொல்லியபோது அவனை மனதாரவாழ்த்தி அவனின் எதிர்காலத்திற்கு ஆசிர்வாதம் கொடுத்தவர்.அப்படியான பெருந்தன்மையும் பாசமும் கொண்ட தகப்பன் இந்த நிலைக்குத் தள்ளப் பட்டதற்கான அதிர்ச்சிக்கு நானா காரணம்?

சொல்லாமற் கொள்ளாமல் வந்த பிரளயத்தில் சிதைந்த இடமாக அவர் வாழ்க்கை மாறிப் போனதற்கு நான் காரணமா?

பாட்டி இறக்கும்போது எனக்குச் சொன்ன சில விடயங்களை நான் அப்பாவுக்குச் சொன்னதால் அவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி அவரை இந்த நிலைக்கு மாற்றியதா?

கீழ் மாடியில்,ராகவனின் தாய் சங்கரி,ராகவனின் மனைவி செந்தாவுடன்(செந்தாமரை) ஏதோ சொல்லி விம்முவது அவனுக்குச் சாடையாகக் கேட்கிறது. ராகவனின் தாய் சங்கரி அவளின் அன்புக் கணவனின் சடுதியான துயரநிலையைத் தாங்கமுடியாது தவிக்கிறாள்.

அப்பாவின் தந்தையின் மரணத்தின்பின்,அவரின் அன்பான தாய் செல்வமலரால் வளர்க்கப் பட்டு,ஒரு கௌரவமான மனிதராக வாழ்ந்து கொண்டிருந்த அப்பா முரளியின் மனதுக்குள் சிறைப் பட்டிருந்த இரகசியம் அம்மா சங்கரிக்குத் தெரியவேண்டாம். அவளுக்குத் தெரியவேண்டிய அவசியமுமில்லை. அவளுக்குச் சாடையாகத் தெரிந்திருந்தாலும் அதை அவள் இதுவரை வெளிக்காட்டவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்,அப்பாவின் எதிர்கால நன்மையைக் கருதிச் செய்வதாகப் பாட்டி எடுத்த முடிவு இன்று எத்தனை மாற்றங்களையுண்டாக்கியுருக்கிறதா? ராகவன் ஒரு மருத்துவ டாக்டர்,அப்பாவின் நிலைபற்றி அவனுக்குத் தெரியும். அப்பாவைக் கவனித்த டாக்டர்கள் மட்டுமல்ல அப்பாவோடு நெருக்கமாக இணைந்திருந்து அவருக்குப் பணி செய்யும் அவனுக்கும் அவர் நிலை தெரிவதால்; பெருமூச்சுவிடுகிறான்.அம்மா சங்கரி அப்பாவின் நிலையைக் கடவுள் மாற்றித்தரவேண்டும் என்ற எண்ணிக்கையற்ற பூசைகள் செய்தும் விரதமிருந்தும் உலகத்துக் கடவுள்களைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள்.

ராகவனின தாய் சங்கரி இலங்கையின் கிழக்கிலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்டவள். அமானுஷ்யத்தை நம்பும் பலரைப்போல் அவளும் மனிதர்களுக்குப் பல பிறப்புகள் இருப்பதாக நம்புவள்.ராகவன் பிறந்தபோது அவனின் தகப்பன் முரளிதரனையே உரித்து வைத்தமாதிரிப் பிறந்தாகச் சொன்னாள்.அவன் மூன்றாவது குழந்தை.அவளின் முதல் மகன் மாதவன் கிட்டத்தட்ட சங்கரியின் சாயலிற் பிறந்தான்.இரண்டாவது பெண் செல்வி, மறைந்து விட்ட சங்கரியின் தாயின்சாயலில் இருப்பதாகச் சொல்லித் தனது தாயே தனது வயிற்றில் குழந்தையாகப் பிறந்ததாகப் பூரித்தாள். சங்கரி பழைய பிறவிகள் புதிய வாரிசுகளாகப் பிறப்பதை நம்புவது மட்டுமல்ல, பேய் பிசாசுகளிலும்; மிகவும் நம்பிக்கை கொண்டவள். செய்வினை சூனியங்கள் மூலம் கெட்டமனிதர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களின் நலவாழ்க்கையை நாசமாக்கிவிடுவதான கதைகளைக் கேள்விப்பட்டு வளர்ந்தவள்.

ராகவனின் அப்பா முரளிதரனுக்குச்; சுகமில்லை. கடந்த இருவருடங்களாகச் சுகமில்லாமற்தானிருக்கிறாh.; தன்னைச் சார்ந்தவர்களின் நன்மைக்காக எதையும் செய்யும் அப்பா சுகமில்லாமல் வந்ததற்கு,அவரின் நல்வாழ்க்கையைப் பொறுக்காத யாரோ சூனியம் செய்ததாகச் சொல்லி அம்மா புலம்பிக் கொண்டிருக்கிறாள். அவனின் தந்தை யாரையும் பகைத்துக் கொள்ளாத ஒரு நல்ல மனிதன். அவரை எதிரியாக நினைத்து பேயை ஏவி விட்டு; அப்பாவின் சுகத்தைக் கெடுக்கச் சூனியம் செய்யும் தமிழர்கள் லண்டனில் இருப்பதாக லண்டனிற் பிறந்து வளர்ந்த ராகவனுக்குத் தெரியாது.

ராகவனின் தாய் சங்கரி அடிக்கடி கனவு காண்பவள்.இறந்தவர்கள், அல்லது கடவுள்கள் அவள் கனவில் வந்து அம்மாவுக்குப் பல விடயங்களைச் சூசகமாகச் சொல்வதாக நம்புவள். அவளின் மூன்று குழந்தைகளில் முதல் மகன் அம்மாவின் தமிழ்க் கலாச்சார விழுமியங்களைத் தாண்டி ஆங்கிலப் பெண்ணைத் திருமணம் செய்தபோது அவள் மிகவும் கலங்கி விட்டாள். அதற்கு முதல் சில மாதங்களாகத் தனக்கு ஏதோ மனக்கலக்கம் வரப்போவதாகக் கனவு கண்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தவளுக்குத் தனது மகன் ஒரு ஆங்கிலப்; பெண்ணைக் கல்யாணம் செய்த போது துடித்து விட்டாள்.

தனது முதல் மகன் அவன் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்வான் என்ற சங்கரியின்; எதிர்பார்ப்பு தோல்வியானபோது அவளின் ‘மனக் கலக்கத்தை’ மறைத்துக்கொண்டு அவர்களை ஆசிர்வதித்தாள். அது அப்பாவின் தூண்டுதலாக இருக்கலாம் அப்பா சாதி மத, குல கோத்திரம் பார்க்காதவர். விஞ்ஞானத்தின் மூலம் உலகைப் பார்க்கும் ஒரு பயலோயிஸ்ட். எல்லோர் உயிரிலும் ஒரே அளவான இரத்த அளவும், நான்கு வீதமான இரத்தப் பிரிவுகளிலும், இருநூறுவிதமான உடற்கலங்களும், எல்லோருக்கும் உடலின் அங்கங்கள் ஒரே இடத்தில் ஒரேமாதிரி இருப்பதாகவும் பல காரணங்களைச் சொல்லி சாதி மதம் பேசுபவர்களின் வாயை அடைப்பார்.

அன்பான மனித உறவில் உலகம் வாழ்வதாகச் சொல்வார்.தனது பெரிய மகனின் வாழ்க்கைத் துணைவியை அன்புடன் வரவேற்றார்.பெரியமகனின் ஆங்கிலேய மனiவி தனது கணவனுக்குப் பிடித்தமாதிரி இலங்கையர்களின் சமையல் செய்ய மாமியாரின் உதவியைத் தேடியபோது,அம்மா மருமகள் தனது மகனில் வைத்திருக்கும் அளவற்ற அன்பைக் கண்டு பூரித்துவிட்டாள்.அத்துடன் அவள் மாமியாரிடம் ‘தமிழ்க்’ கலாச்சாரப் பாரம்பரியங்களை அறிந்து கொள்ள எடுத்த ஆவல்கள் அம்மாவை உச்சி குளிரப்பண்ணியது.

இரண்டாவது மகள் செல்வி ஒரு தமிழனைக் காதலித்தபோது சங்கரி அளவற்ற ஆனந்தத்துடன் மிக ஆடம்பரமாகக் கல்யாணம் செய்து வைத்து சந்தோசப் பட்டாள். ஆனால் அந்தக் கல்யாணம் இருவருடத்தில் விவாகரத்தில் முடிந்தபோது தனது குடும்பத்தில் பொறாமை கொண்ட யாரோ அவர்களுக்குப் பிரிவு சூனியம் செய்து குடும்பத்தை நாசமாக்கியதாகப் புலம்பிக் கொண்டிருக்கிறாள்;.ஆனால், முற்போக்கு சமுதாய சூழலைக் கொண்ட லண்டனிற் பிறந்து வளர்ந்தாலும் அவளின் மருமகன்,பழைய சிந்தனையுள்ள ஒரு ஆணாதிக்கவாதியாகத் தனது மகளை இரண்டாம்தரப் பிரஜைமாதிரி நடத்தியபோதுதான் பிரச்சினை வந்தது என்று தன்மானம் பிடித்த மகள் செல்வி தனது தாய்தகப்பனுக்கச் சொல்லாமல் மறைத்துவிட்டது அம்மாவுக்குத் தெரியாது..

ராகவன் அவனுடன் வேலை செய்யும் ஒரு தமிழ்ப் பெண்ணை ‘செந்தாமரை’ என்ற செந்தாவை விருப்புவதாகச் சொன்னபோது அம்மாவின் பூரிப்பு சொல்ல முடியாததாகவிருந்தது. ஆனாலும் அந்தப் பெண்ணும் ஒரு டாக்டர் என்று தெரிந்தபோது, மகனுக்குச் சமமாகப் படித்த அந்தப் பெண் தனது மகளை எப்படி நடத்துவாளோ என்பதைக் கணவரிடம் மெல்லமாகச் சொல்லி முணுமுணுத்தாள்.தனது ஒரே ஒரு மகளின் வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததால் துடித்துப்போன அம்மா,அவளது கடைசி மகன் ராகவன் அவனுக்குச் சமமான படிப்பு படித்த தமிழ்ப் பெண்ணை விரும்புவதாகச்; சொன்னபோது ஆயிரம் கேள்விகள் கேட்டாள்.அம்மா எதிர்பார்க்கும் மிக அடக்கமான தமிழ்ப் பெண்ணாக செந்தாவை எதிர்பார்த்தாள்.

அம்மாவின் மனநிலை தெரிந்த ராகவன்;;.லண்டனிற் பிறந்து வளர்ந்த செந்தாமரை பெரும்பாலான பிரித்தானியப் பண்பாட்டுடன் வளர்ந்த முற்போக்குவாதி என்பதைத் தகப்பனுக்குச் சொன்னான். பழம்பெரும் கொள்கைகள், நம்பிக்கைகள்,அத்துடன்; வாழ்க்கை முறைகளையும் விடாது பிடித்துக்கொண்டிருக்கும் தாயை விடத் தனது தகப்பன் தன்னைப் புரிந்து கொள்வார் என்று அவனுக்குத் தெரியும்.அவர் விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டம்பெற்றவர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ‘எம்மதமும் சம்மதமே’போன்ற கொள்கைகளையுடையவர்.சமத்துவத் தத்தவத்தைக் கடைப்பிடித்து, தான் விரும்பும் செந்தா என்ற பெண்,நிற,வர்க்க வேறுபாடின்றி கல கலவென்று பலருடனும் பழகுபவள் என்று ராகவன் தகப்பனுக்குச் சொல்லியிருக்கிறான்.பழைமையைத் தூக்கிப்பிடிக்கும் அம்மா,செந்தாவில்; ஏதோ ஒரு பிழை பிடித்து ராகவனைத் துன்புறுத்துவதை ராகவனின் அப்பா விரும்பவில்லை.தனது மகன் அவனது தாய்தகப்பனுக்குப் பிடிக்காத பார்க்கமாட்டான் என்ற நம்பிக்கை அவருக்கிருந்தது.

ராகவனின் அம்மா சங்கரி செந்தாவைப் ‘பெண்’ பார்க்க முதல்,ராகவனின் காதலி செந்தாவை பார்க்க அப்பா தனியாக வர விரும்பியதாகச் சொன்னபோது ராகவன் மிகவும் சந்தோசப் பட்டான்.ராகவனின் தந்தை முரளிதரன் மனிதநேயத்தை உலகமெல்லாம் பரப்பினால் இந்த உலகில் போட்டி பொறாமை, இருக்காது என்று நம்பும் ஒரு கற்பனைவாதியான நல்ல மனிதன்.

அவர் செந்தாவை பார்க்க வருவதாகச் சொன்னபோது அவர்கள் சந்தித்துக் கொள்ள ஹாம்ஸ்ரெட் ஹீத் என்ற லண்டனின் மிகப் பெரிய பார்க் ஒன்றைத் தேர்ந்தெடுத்தபோது, தகப்பனை ஆச்சரியத்துடன் பார்த்தான் ராகவன். ஏன் இவர் ஒரு நல்ல ரெஸ்டாரண்டடைத் தெரிவு செய்யவில்லை என்று அவன் தனக்குள் யோசித்தான் ஆனால் அவரிடம் கேட்கவில்லை. அவருக்குக் கடற்கரைக்குப் போவதும் பெரிய அடர்த்தியான பார்க்குகளுக்குப் போவதும் பிடிக்கும் என்று அவனுக்குத் தெரியும். பல விருடசங்களையுடைய அழகிய தோட்டத்துடன் அமைந்த வீடு கிழக்கிலங்கையின் அழகிய வாவியை அண்டியிருப்பபதால் அதன் ஞாபகமாகக் கடற்;கரையையும் பார்க்குகளையும் அப்பா நாடுவதாக ராகவன் சிலவேளை நினைப்;பதுண்டு.

அப்பாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்று அவன் பல தடவைகள் கேள்வி கேட்டிருக்கிறான்.

மிகவும் ஆடம்பரமில்லாh ராகவனின் தகப்பன் முரளிதரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தந்தைக்கும் கிழக்கிலக்கிலங்கையைச் சேர்ந்த செல்வமலர் என்ற தாய்க்கும் நடந்த காதல் கல்யாணத்தின் வாரிசு என்று அம்மா சங்கரி சொல்லியிருக்கிறாள்.; அப்பாவின் தகப்பனார் கிழக்கிலங்கைக்கு ஆங்கில ஆசிரியராக வேலைபார்க்கப்; போனபோது,ராகவனின் பாட்டி செல்வமலரைக் காதற் கல்யாணம் செய்து கொண்டதால் வர்க்க,பிராந்திய வெறிபிடித்த அவரின் குடும்பத்திலிருந்து விலத்தி வைக்கப் பட்டார் என்று ராகவனுக்குச் சாடையாகத் தெரியும்.

தாத்தாவின் அகால மரணத்தின்பின் தாத்தாவின் குடும்பம் பாட்டியியைக் கண்டபாட்டுக்கு வைதார்களாம். மட்டக்களப்புக்கு வேலைக்குப் போன தனது மகனை ‘வசியம்’ பண்ணிப் பிடித்தபடியால் கடவுள் அந்தக் கொடுமையைத் தாங்காமற் தங்கள் மகனைத் தன்னுடன் எடுத்துக் கொண்டதாகக் கூப்பாடு போட்டது மட்டுமல்லாமல், வருடக் கணக்காக அவருடன் ஒரு தொடர்பும் வைத்திருக்காதவர்கள் அவர் வருத்தம் வந்து இறந்ததும் உடனடியாக ஓடிவந்து தாத்தாவின் பிணத்தைத் தங்கள் ஊருக்குக் கொண்டுபோய் எரித்தார்களாம். தனது கணவனின் இறப்பு மட்டுமல்ல அவரின் சொந்தக்காரர்களால் நடந்த அவமானங்களைத் தாங்கமுடியாது தவித்தபோது லண்டனிலிருந்த தாத்தாவின் தம்பி ஒருத்தர் தனது தமயனின் மனைவியான பாட்டியை அன்புடன் பார்த்துக் கொண்டார். மூன்று குழந்தைகளுடனும் துயர்படும் மைத்துனிக்கு அவரால் முடிந்த உதவிகள் செய்து அவளையும் தமயனின் குடும்பத்தையும் பாதுகாத்தார்; என்ற வரலாறு ராகவனுக்குத் தெரியும்.

1977ம் ஆண்டு,இலங்கையில் சிங்கள அரசால் தமிழருக்குப் பிரச்சினை வந்தபோது, பாட்டி லண்டனிலிருந்த தாத்தாவின் சகோதரனைக் கெஞ்சிக் கூத்தாடி ராகவனின் தந்தை முரளி லண்டனுக்குப் படிக்க வந்ததாகவும் ராகவனின் அம்மா சங்கரி அவளுக்குத் தெரிந்த சில விடயங்களைத் தனது குழந்தைகளுக்குச் சொல்லியிருக்கிறாள். தாத்தாவின் அகால மரணமும் யாரோ ஏவிவிட்ட சூனியப் பேயின் தாக்கத்தால் நடந்ததாக அம்மா சங்கரி சிலவேளை முணுமுணுப்பாள்.

இலங்கையில் தமிழர்களுக்கெதிராகத் தொடர்ந்து நடந்த சிங்கள அரசியல் பயங்கரவாதத்தால் ராகவனின் தாய் சங்கரியின் படிப்பு தடைபட்டாம். அம்மா சங்கரி பட்டப் படிப்பு ஏதும் படிக்காதவள். சாதாரண மனிதர்களின் சாதாரணவாழ்க்கை நெறிகள் போர்ச் சூழ்நிலையால் அகாலமாகிப் போன கால கட்டத்தில் வாழ்க்கையே பயமும் பீதியும் நிறைந்த கிராமியச் சூழ்நிலையில் வளர்ந்தபடியாலும் இளவயதில் இலங்கை அரச பயங்கரவாதத்தால் அவளின் குடும்பத்தில் பலரை இழந்ததாலும் அதன் பிரதிபலிப்பாக பேய் பிசாசுகளை நம்புவள்.

அம்மா சங்கரியை அப்பாவுக்கு மனைவியாகத் தேர்ந்தெடுத்த அவனின் பாட்டியார் செல்வமலர் கூடப்படித்தவள். ஆசிரியையாக வாழ்க்கையைக் கொண்டிழுத்தவர். இளவயதில் தகப்பனையிழந்த தன் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய பாட்டியால்; அன்புடனும் அறிவுடனும்; வளர்க்கப் பட்டவர் ராகவனின் தகப்பன் முரளிதரன். லண்டனிற் படித்துப் பட்ம் பெற்றாலும் அவரது தாய் பார்த்த கிராமத்துப் பெண்ணான சங்கரியைச் செய்து கொண்டவர்.

அப்படியான பெருந்தன்மையான குணங்களைக் கொண்ட ராகவனின் தந்தை முரளிதரன் சட்டென்று ராகவனின் காதலியைச் சந்திக்க விரும்பியதாகச் சொன்னபோது ராகவன் மிகவும் சந்தோசப் பட்டான்.

அன்று அப்பா ராகவனின் காதலி செந்தாவைப் ‘பெண்’பார்க்கத் தனியாகப் பார்க்குக்கு வந்தபோது அவனும் அவளும்,ஹாம்ஸ்ரெட் ஹீத் பார்க்கிலுள்ள,சிறிய தடாகத்தினருகில் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். அவ்விடத்திற்தான் அப்பா அவர்களைத் தனக்காகக் காத்திருக்கச் சொன்னாhர்.

ஏன் அந்த இடத்தில் அமரச் சொன்னார் என்று அவரைக் கேட்கவேண்டும் என்று தனக்குள்ச் சொல்லிக் கொண்டான். அப்பா அவ்விடம் வந்ததும் செந்தாவை அறிமுகப் படுத்திய கையோடு; ராகவன் தனது தகப்பனை நிமிர்ந்து பார்த்தபோது அவர் முகபாவனை சட்டென்று மாறியதையும் அதை மறைத்துக் கொண்டு,’பிரமாண்டான பார்க்கில் அளவிடமுடியாத இடங்களில் உட்காரலாம். ஆனால் அந்தக் குளத்தருகே இருந்தால் கண்டுபிடிக்க சுகமாக இருக்கும்’ அவன் மனதில் படர்ந்த கேள்வியைப் படம் பிடித்தவர் மாதிரிப் பதில் சொன்னதும் அவனுக்கு இன்னும் திகைப்பையுண்டாக்கியது.

அந்தச் சந்திப்புக்குப் பின் எத்தனையோ மாறுதல்கள். செந்தாவைக் கண்டதும் அவரின் முகம் ஏன் பேயடித்தமாதிரி இருந்ததை என்பதைஅவரிடம் கேட்கத் தைரியம் வரவில்லை.அவருக்குத் தெரிந்த யாரையோ ஞாபகப் படுத்தியிருந்தால் அப்பாவின் அந்த ஞாபகத்திலிருக்கும் பெண் யாராயிருக்கலாம் என்று தலையைக் குழப்பிக் கொள்ள அவன் அப்போது நினைக்கவில்லை.

இன்று பழைய ஞாபகங்களுக்கப்பால் வேறு எதோ ஒரு உலகத்தில் வாழ்வதுபோல தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு விரக்கியாகப் படுத்திருக்கும் அப்பாவுக்கு,ராகவன் செந்தாவைக் கலயாணம் செய்ததுகூட தெரியாது. செந்தாவை ராகவன் இலங்கைக்கு கூட்டிக்கொண்டுபோய்ப் பாட்டியைச் சந்தித்து விட்டு லண்டன் வந்ததும்; ஒரு நாள் ராகவனுடன் பேசிக் கொண்டு வந்தவர் காரால் இறங்கும்போது விழுந்து விட்டார். தலையிலடிபட்டு இரத்தப் பெருக்கேற்பட்டு அதைத் தொடர்ந்த சத்திர சிகிச்சைக்குப் பின் அவரின் ஞாபகசக்தி மட்டுமல்ல அவர் வாழ்க்கையே சின்னாபின்னமாகி விட்டது.

நீண்ட கால ஹொஸ்பிட்டல் வைத்தியத்துடன் மாரடித்து விட்டு,இனி ஒன்றும் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற வைத்திய விஞ்ஞானம் சொன்னபின் அப்பா வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். இப்போது அவரின் நிலை நாளுக்கு நாள் வாழ்வின் இறுதியை நோக்கிக் கொண்டிருக்கிறது என்று டாக்டரான ராகவனுக்குத் தெரியும்.

ஆனால் அம்மா உலகத்திலுள்ள கடவுளர்களுக்கு பூஜைகள், சடங்குகள் என்று பல செய்து கோயில் பூசகர்களுக்கு லஞ்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.அவளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அப்பாவைத் தவிர உலகத்தில் எதையும் பற்றிச் சிந்திக்க முடியாமலிக்கிறது.

அப்பாவின் நிலமையைப் புரிந்து கொண்ட அவரின் மூன்று குழந்தைகளும்; ஒருத்தர் மாறி ஒருத்தராக அங்கு வந்து அம்மாவுக்குத் துணையாக நிற்கிறார்கள்.ராகவன் ஒரு டாக்டர். தகப்பனின் வைத்தியம் சார்ந்த நிலையை ஓரளவுக்குத் தெரிந்துகொண்டவன். கடந்த ஆறுமாதங்களாகச் செந்தாமரை பார்ட்ரைம் வேலை செய்துகொண்டு மாமிக்கும் மாமாவுக்கும் துணையாகவிருக்கிறாள்.

ராகவனின் அம்மா சங்கரி பழங்கால சடங்குகளைப் பாதுகாப்பவள். கணவனுக்குப் பின் தூங்கி முன்தொழும் திருவள்ளுவர் காலப் பெண்மணி. தனது மூன்று மக்களையும் நல்லதொரு முப்பெரும் மனிதர்களாக வாழப் பழக்கிக் கொடுத்தவள். அவளுடைய பழங்காலப் பண்புகள் சார்ந்த வாழ்க்கை முறையைப் பற்றி அப்பா அவளுடன் ஒரு நாளும் கேள்வி கேட்டதாகவோ விவாதம் செய்ததாகவோ ராகவனுக்கு ஞாபகமில்லை. லண்டனிற் படித்த அப்பா ஏன் அம்மா மாதிரி அதிகம் ஒரு படிக்காத பெண்ணைத் திருமணம் செய்தார் என்ற கேள்வியை அவன் தனக்குள்ச் சிலவேளை கேட்டிருக்கிறான். அதற்கான பதிலை அவனது பாட்டியிடமிருந்து தெரிந்துகொண்டதைப் பற்றி அம்மாவிடம் அவன் சொல்லவில்லை,அதற்கு எந்த அவசியமுமில்லை. அம்மா சங்கரி அதிகம் படிக்காவிட்டாலும் அவளது உயிரையே அப்பாவிடம் வைத்திருப்பவள்.அவரும் மிக அன்பான கணவர். அவரைப் பெற்றெடுத்த பாட்டியும் தாத்தாவும் அருமையான மனிதர்களாக இருந்திருக்க வேண்டும். பாட்டியாற் தெரிவு செய்யப் பட்ட சங்கரி என்ற அதிகம் படிக்காத -ஆங்கிலம் தெரியாத சங்கரியை ராகவனின் அப்பா முரளிதரன் திருமணம் செய்து கொண்டதிற்கான காரணங்களை சங்கரி ஒரு நாளும் தெரிந்து கொள்ளப் போவதில்லை.அப்படித்தான நடந்திருக்க வேண்டும் என்று அவளுக்கு ஏதோ ஒரு சந்தேகமிருந்தாலும் அவள் அதைப் பற்றி அலட்டிக் கொள்ள அவசியம் இல்லாதிருந்திருக்கலாம்..

கடந்த பலமாதங்களாக, அவன் இப்படிப் பல தடவைகளில் இந்த விடயங்களைச் சிந்தித்திருக்கிறான். அவனது உயிரோடும் உணர்வோடும் கலந்த செந்தாவுக்கும் அவன் இந்த விடயங்களைச் சொல்லவில்லை. ஒரு நாளைக்கு அவளுக்கு மனம் திறந்து அப்பாவின் கதையைச் சொல்வேனா? ராகவன் பல தடவைகளில் இந்தக்; கேள்வியைத் தனக்குள்க் கேட்டுக் கொண்டிருக்கிறான்.அவரிடம் மெல்லமாகக் குனிந்து ‘அப்பா உங்கள் மருமகள்,எனது மனைவி செந்தாமரை-செந்தா வந்திருக்கிறாள்’ என்று சொன்னான்.

அவரின் கண்கள் திறக்கவில்லை. அவன் அடிக்கடி இந்த வார்த்தைகளை அவரின் காதுகளிற் கிசுகிசுக்கிறான். யாருமில்லாத நேரங்களில் ‘அப்பா ‘உங்கள் இந்து’ வந்திருக்கிறாள்’ என்று இரகசியமாகச் சொல்கிறான்.கண்கள் திறந்து அவனைப் பார்த்தாலும்; அவரால் அவனுடன் பேசமுடியாது. அவருக்கு நடந்த விபத்தில் தலையில் அடிபட்டதால் அவர் ஞாபக சக்தியை இழந்திருக்கலாம் என்று வைத்தியர்கள் சொன்னார்கள். ‘இந்து’ என்ற பெயரைக் கேட்டால் ஏதோ ஒரு தடவை கண்களைத் திறந்து பார்ப்பவருக்கு தன்னைச் சுற்றி வரும் இவர்கள் எல்லாம் அந்நிய மனிதர்களாகவிருக்கலாம்.

அவர் கண்திறந்து அவரை ஏறிட்டுப் பார்த்தாலும் அவருக்கு அவன் தன் மகன் என்ற ஞாபகம் வராது என்று அவனுக்குத் தெரியும்.ஆனாலும் ‘இந்து வந்திருக்கிறாள்’ அவன் சொன்னதும் அவர்கண்களில் நீர்வழிவதை அவன் பல தடவைகளில் அவதானித்திருக்கிறான்.அவரின் அடிமனத்தின் ஆழத்தில் ‘இந்துமதி’ என்ற அவரின் உயிர்க் காதலியின் பிம்பம் இன்னும் அவருடன் இணைந்திருக்கிறதா? ராகவன்; விஞ்ஞானம் படித்தவன் அந்தப் பரிமாணத்தில் மனித உணர்வுகளை அளவிடுபவன். அதற்கப்பாலிருக்கும் அசாதாரண பிணைப்புக்களுக்கும் அமானுஷ்ய நம்பிக்கைகளுக்கும் விளக்கம் தெரியாதவன்.

கீழ்மாடியில் அவனின் தாய் அவனின் மனைவி செந்தாவுடன்; மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருக்கிறாள். செந்தாமரைக்கு இம்மாதம் வரவேண்டிய மாதவிடாய் இருவாரங்களாகத் தடைபட்டிருக்கிறது.அவள் கர்ப்பவதியா இல்லையா என்று பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளும்வரை அம்மாவிடம் அதுபற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன் என்று செந்தா சொல்லியிருக்கிறாள்.

அப்பாவின் இறுதி நிலைபற்றி வைத்தியர்கள் மறைமுகமாகச் சொன்ன நாளிலிருந்து அம்மா மிகவும் கலங்கிப் போயிருக்கிறாள். செந்தாவின் கர்ப்பம் பற்றித் தெரிந்தால் செந்தாவுக்குக்; குழந்தை பிறந்து அழும்போதாவது அப்பாவுக்குச் சுயசிந்தனைவரும் என்று கற்பனையில் காலம் தள்ளுவாள் என்று ராகவனுக்குத் தெரியும்.

அப்பாவின் ஞாபகத்தைச் சிதறிக்கப் பண்ணிய அதிர்ச்சிக்குப் பின்னால் அவரின் இளவயதில் அவரின் இதயத்தில் குடியிருந்த இந்துமதியின் வாழ்க்கையின் மாற்றங்கள் என்பது அம்மாவுக்குத் தெரியவேண்டும்? செந்தாவை முதற்தரம் கண்டதும் அவரின் முகத்தில் வந்த மாற்றத்திற்குச் செந்தா அவரின் பழைய நினைவுகளைக் கிளறப் பண்ணிய இந்துமதியை ஞாபகப்படுத்தியதுதான் என்ற செய்தி அவன் தனது பாட்டியைச் சந்திக்கும்வரை அவனுக்குத் தெரியாது. செந்தா வந்து அவருக்குப் பணிவிடை செய்வதை அவரின் அடிமனம் புரிந்துகொள்ளுமா? செந்தாவின் குரல் அப்பாவின் பழைய காதலி இந்துவை அப்பாவுக்கு ஞாபகப் படுத்துமா?

‘அவர் அடிக்கடி கதவடியில் பார்வையை நிலைத்து வைத்துக் கொண்டு விம்முகிறார். அவருக்குத் தெரிந்த இறந்த மனிதர்கள் யாரும் வந்து அவரை அழைக்கிறார்களோ தெரியாது’ அம்மா இப்படி எத்தனையோ தரம் சொல்லியிருக்கிறாள்.

‘அம்மா, அப்பா அவருடைய இறந்து விட்ட காதலி இந்துமதியின் வரவைப் பார்த்துக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை’ என்று டாக்டரான ராகவனாற் சொல்ல முடியாது.

அப்பா முதற்தரம் செந்தாவைக் கண்டதும் அதிர்சியடைந்ததற்கான காரணத்தை.அவன் செந்தாவுடன் இலங்கைக்குச் சென்று பாட்டியைச் சந்தித்தபோது அவனின் பாட்டியார் சொன்னதன் பின்னர்தான் அவனுக்குப் பல உண்மைகள் புரிந்தன. அவையிற் சில தகவல்கள் அவன் சிந்தனையில் குவிகின்றன.

———— —————–

செந்தாவை ராகவனின் தந்தை சந்தித்த சில கிழமைகளில் அப்பாவின் தூண்டுதலால் செந்தாவைப் பெண்பார்க்கும் படலம் நடந்தது. அம்மா எதிர்பார்த்ததுபோல் படித்தவள் என்ற அகங்காரமில்லாமல் மிகவும் அன்புடன் ராகவன் குடும்பத்துடன் பழகினாள். அவளைக் கண்டதும் அப்பா மிகவும் சந்தோசமாக இருப்பதற்கு அவள் ஒரு தமிழ்ப் பெண்ணாக இருப்பதுதான் என்ற அம்மா தனக்குள் முடிவுகட்டிக் கொண்டாள்.

இலங்கையிலிருக்கும் தனது தாயிடம் செந்தாவைக் கூட்டிக் கொண்டுபோகச் சொன்னார் அப்பா.அவர் குரலில் ஏதோ ஒரு அவசரம்;.’அம்மா சுகமில்லமலிருக்கிறாள்.உனது கல்யாணத்திற்கு அம்மாவை அழைக்கலாமோ தெரியாது. வயதுபோன எனது அம்மாவுககுக ஏதும் நடக்கமுதல் நீ செந்தாவைக் கூட்டிக்கொண்டு போய் உனது எதிர்கால மனைவியுடன் உன்னுடைய பாட்டியைப் பார். அவளின் மூத்த பேரன்; ஆங்கிலப் பெண்ணைச் செய்ததற்காக எத்தனையோ குறைபாடுகள் சொன்னாள் ஆனால் உனது தமயன் தனது மனைவியுடன் பாட்டியைப் பார்க்கப் போனதும் அவள் மிகவும் சந்தோசப் பட்டாள்.ஒரு இலங்கையைனைத் திருமணம் செய்து அவனின் கலாச்சாரத்தை உணர்ந்து நடக்கும் ஒரு ஆங்கிலேயப் பெண்ணை மனதார வாழ்த்தினாள்.’ அப்பா ராகவன் உடனடியாக செந்தாவைத் தன் தாய் கட்டாயம் காணவேண்டும் பிடிவாதம் பிடித்ததை அவனால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.

பெரும்பாலான மனிதர்களுக்குத் தங்கள் வாழ்க்கையின் இறுதி நெருங்குகிறது என்ற உள்ளுணர்வு இறக்கும் தருணம் வரு முன்னரே அவர்களின் ஆழ்மனத்தில் மெல்ல மெல்லமாக வரத் தொடங்குமாம். ராகவனின் தமக்கையின் திருமணம் இரண்டு வருடங்களுக்கு முன் விவாகரத்தில் முடிந்தது. இருபத்திண்டு வயதில் திருமணமாகி இருபத்திநான்கு வயதில் ‘வாழாவெட்டி(?)’யான தமக்கை செல்வியின்; வாழ்க்கை அப்பாவைக் குலுக்கி விட்டதா? தனது கடைசி மகனுக்கும் அப்படி ஏதும் நடக்காமல் அவன் விரும்பும் பெண்ணை அவன் திருமணம் செய்வதை வரவேற்றுத் தனது குழந்தைகளின் சந்தோசமான எதிர்காலத்திற்துத் தன்னால் எதையும் செய்ய வெண்டும் என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாரா? வாழ்க்கையின் இறுதி நெருங்குகிறது என்ற ஏதோ உள்ளுணர்வு அவருக்கு உறுத்திக் கொண்டிருந்ததா,அப்பா தனது கடமைகளை நிறைவேற்ற அவசரப் பட்டாரா?

அப்பா அவசரப் படுத்தியதுபோல் ராகவனுக்கும் செந்தாவுக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. அதன் நீட்சியாக,இலங்கைக்குச் சென்று ராகவன் தம்பதிகள் பாட்டியைச் சந்திக்க வேண்டும் என்று அப்பா அவசரப்பட்டார். ராகவன்-செந்தாவின் சமயச் சடங்குகள் சார்ந்த திருமணவிழாவைச் சிலமாதங்களில் செய்வதற்கான ஆயத்தங்களை இரு குடும்பத்தினரும் எடுத்துக் கொண்டனர்.

‘ சுகமில்லாமலிருக்கும் பாட்டியைப் பார்த்துவிட்டுவரச் சொல்லி அப்பா கேட்கிறார்’ ராகவன் மெல்லமாகத் தயக்கத்துடன் செந்தாவிடம் சொன்னதும் அவன் எதிர்பாராத விதமாக,செந்தா,’அதெற்கென்ன இரண்டு கிழமை லீவு எடுத்துக்கொண்டு போய் வரலாமே’ என்றாள்.

ராகவனின் தந்தை லண்டனுக்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேலாகிறது. இதுவரைக்கும் இலங்கைக்கு ஒருதடவையும் போகவில்லை.அவரின் இருபத்திரண்டாவது வயதில் லண்டன் வந்து சேர்ந்து விட்டார். பல தடவைகள் இந்தியா சென்று அவரின் தாயையும் சொந்தக்காரர்களையும் இந்தியாவுக்கழைத்துச் சந்தித்து விட்டு வந்திருக்கிறார் இலங்கையிற் தொடர்ந்த போர் காரணமாக அவர் இலங்கைக்குப் போவதை விரும்பவில்லையா?

அவர் இலங்கைக்குத் திரும்பிப் போகாமலிருப்பதற்கு அவருக்கு ‘இந்து’ என்ற பெண்ணும் ஒரு காரணமாக இருந்ததா?

வெளியிலடித்த இளம்காற்று அவனின் மனதிலெழுந்த கேள்விக்குப் பதில் சொல்வதுபோல் அவனைத் தீண்டிச் செல்கிறது.

அவன் அமைதியான அந்த அறையிலிருந்துகொண்டு தகப்பனின் கைளை இறுகப் பிடித்துக் கொண்டு மௌனமாக விம்முகிறான். அப்பாவின் கண்கள் சாடையாகத் திறக்கின்றன. அவன் அவரிடம் இப்படி ஏதோவெல்லாமோ தனது மனக்குமுறலைச் சொல்லியழும்போது அவரின் பார்வை அவனில் நிலைத்து நிற்கும். அவருக்கு அவன் கேள்விகள் கேட்பதும் அழுவதும் புரிகிறதா என்று அவனுக்குத் தெரியாது. புரிந்தால் மனம் விட்டு அவரின் தன் அன்பு மகனுக்கு அவரின் பழைய காதற் கதையைச் சொல்வாரா?

தகப்பனற்ற தன்னை வாழவைத்த ஒரு தெய்வம் என்று அவர் பூஜித்த அவரின் தாய்,அவளின் மகனின் எதிர்கால நன்மைகருதிச் செய்வதாக அவள் சொன்ன பொய்யான ஒருவிடயம், தன்னுடைய வாழ்க்கையைக் குழம்பிய கதையை அவனுக்குச் சொல்வாரா? பாட்டி சொன்ன விபரங்களின்படியும்,அதைத் தொடர்ந்து அவன் கிழக்கிலங்கை சென்றபோது ராகவனுக்குத் தெரிந்த தகவல்களின் நிமித்தமும் தகப்பன் முரளிதரன் பற்றிய சில விடயங்கள் அவனுக்குப் புரிகிறதா? அவனால் புரிந்து கொள்ளமுடியுமா? அப்பா முரளிதரன் மனம்விட்டுப் பல விடயங்களைத் தன் அன்பு மகனுக்குச் சொல்லியிருப்பாரா? பாட்டி சொன்ன கதைகளுடன் மட்டுமல்லாது பலவித குழப்பங்கள் நடுவே அவனின் சிந்தனை எங்கேயோ போகிறது.

-………………. ………………… ……………………. ……………………

2.

ராகவன்; சிறுவயதில் தனது தந்தை தாயுடனும் சகோதரர்களுடனும் பாட்டியைப் பார்க்க இந்தியாவுக்குப் பல தடவைகள் சென்றிருக்கிறான்;. இலங்கையில் போர் நடந்ததால் வெளிநாடு வாழும் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்குத் தங்கள் சொந்தக்காரரை அழைத்துப் பார்த்து விட்டு வருவது வழக்கமாயிருந்தது. போராளிகளுக்கும் அரசுக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து வந்த ஓரு சிறு இடைவெளியில் கிடைத்த அமைதிக்காலத்தில் அம்மாவுடனும் சகோதரர்களுடனும் இலங்கை சென்றபோது,கிழக்கிலங்கையின் அழகு தெய்வம் கொடுத்த கொடையின் பிரதிபலிப்பு என்று நினைத்தான்.

அந்த அழகிய பூமியிற்தான ராகவனின் தந்தையான முரளியின் தந்தையும் தாயும்; ஒருத்தரில் ஒருத்தர் காதல் கொண்டார்கள்.ராகவனின் தாத்தாவின் குடும்பம் அவர்கள் காதலை எதிர்த்து வெறுத்து அவர்களின் காதலைத் துண்டிக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்துத் தோல்வியடைந்தார்கள். ராகவனின் தகப்பன் முரளிதரன் அவனின் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை. இரு தமக்கைகளுக்குப் பின் பிறந்த ஆண்குழந்தை. பாட்டியின் கண்மணி. இரு அக்காக்களின் செல்லம் தாத்தாவின்; அருமை மகன்.

முரளி பிறந்த அடுத்த ஆண்டு 1958ம் ஆண்டு தமிழர்களுக்கெதிராகக் கொழும்பில் கலவரம் நடந்து. இனவாதம் பிடித்த அரசியல்வாதிகளால் ஏவி விடப் பட்ட சிங்களக் காடையர்களால் தமிழர்களுக்கெதிரான இனக்கலவரம் நடந்தது. அக்கால கட்டத்தில்,தங்கள் மூன்று குழந்தைகளுடனும் தாத்தாவும் பாட்டியும் கொழும்பில் தமிழர்கள் பெரும்பாலும் வாழும் வெள்ளவத்தை என்ற இடத்தில் இருந்தார்கள். இலங்கை அரசு மிகப் பயங்கரமான அடக்கு முறைகளை அவிழ்த்து விட்டிருந்தது. கொழும்பில் நடந்த தமிழர்களுக்கெதிரான இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தாத்தாவின் குடும்பம் அகதிகளாக யாழ்ப்பாணம் போக முடியவில்லை.தாத்தாவுக்கும் அவர் குடும்பத்திற்கும் பெரிய உறவொன்றும் கிடையாது. கிழக்கிலங்கையிலுள்ள பாட்டியின் தாய் தகப்பன் ஏற்கனவே இறந்துவிட்டார்கள்.

பாட்டி செல்வமலர் அவள் குடும்பத்தில் ஒரே பெண். ஓரளவு நில புல செல்வங்களுகுச் சொந்தக்காரி. அவளுக்கு கிழக்கிலங்கையில் நெருங்கிய சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். கொழும்பில் வாழ்வது அபாயம் என்றபடியால் கிழக்கிலங்கைக்கே சென்று விட்டார்கள். மட்டக்களப்பு நகரையண்டிய அழகிய இடமான பிரதேசத்திலுள்ள பாட்டியின் பரம்பரை வீடொன்றில் வாழத் தொடங்கினார்கள். ராகவனின் பாட்டி செல்வமலர் அவளின் குடும்பத்தில் ஒரே ஒரு குழந்தை என்பதால் அவளின் சொந்தக்காரர்கள் அவர்களில் மிகவும் அன்பாக இருந்தார்கள்.அதே விதத்தில் பாட்டியும் தன்னைச் சார்ந்தோரிடம் மிகவும் அன்பாகவிருந்தாள்.பாட்டியின் பெரியம்மாவின் மகனான தேவராஜா பாட்டியைத் தனது சொந்தச் சகோதரியாக நடத்தினார்.பாட்டி மூன்று குழந்தைகளுக்கும் அன்பும் பாதுகாப்பும் தேவை என்பதால் சொந்தங்களை அணைத்துக் கொண்டாள்.

ஆனால் கிழக்கிலங்கைக்குடி பெயர்ந்து சில வருடங்களில் முரளிதரனின் அப்பாவுக்குச் சடுதியாக வந்த வருத்தத்தில் ஒரு சிறியகால கட்டத்துக்குள் அவர் இறந்ததைப் பாட்டியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மூன்று சிறு குழந்தைகள், வாழ்க்கையின் போராட்டங்கள் அவளைப் பயமுறுத்தின. இளம் வயதில் விதவையான அவளின் எதிர்கால வாழ்க்கை சூனியமாகாமலிருக்க ஒன்றைவிட்ட தமயனான தேவராஜாவின் உதவி; அவளுக்குக் கடவுள் கொடுத்த அனுக்கிரஹமாகவிருந்தது.

கிழக்கிலங்கையின் அழகிய சூழ்நிலை, அமைதியான வாழ்க்கைமுறை, அன்பைப் பொழியும் உறவினர்கள் போன்ற பன்முகக் கட்டுமானங்களுக்குள் அவர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. தந்தையற்ற குழந்தைகளின் தவிப்பை தேவராஜா மாமாவால் முற்றுமுழுதாக நிறைவேற்றமுடியாவிட்டாலும் அவரின் அன்பும் ஆதரவும் முரளிதரனையும் அவனது சகோதரிகளையும் பாதுகாப்பாகவாழ உதவியது.

தேவராஜா மாமா இந்தியாவில் சங்கீதம் கற்றவர்.கிழக்கிலங்கையின் பழமைசார்ந்த கல்விக் கூடத்தில் சங்கீத ஆசிரியராகவிருந்தவர்.அன்பு,அறிவு.பாசம் என்பவற்றின் இலக்கணமாக வாழும் மனிதர்களிலொருத்தர்.

தேவராஜா சிறுவயதிலிருந்தே தனது பெரியம்மாவின் மகள் செல்வமலரைத் தனது தங்கையாக வளர்த்தவர்.அவள் இப்போது மூன்று குழந்தைகளுடனும் தவித்தபோது அவளைத் தனது பொறுப்பாக எடுத்துக் கொண்டார்.

முரளியின் தந்தை இறந்த கொஞ்ச நாட்களில் தேவராஜா மாமாவுக்கு இந்துமதி மகளாகப் பிறந்தாள்.கணவன் இறந்த துயரில் தாங்கமுடியாது தவித்தழுதுகொண்டிருந்த பாட்டிக்கு,அவரின் அன்பு மகள் இந்துமதி,முரளியின்; வீட்டுச் ‘செல்ல’மானாள்.

தேவராஜா மாமாவின்; அழகிய மகள் இந்துமதி பிறக்கும்போது முரளிதரனுக்கு ஐந்துவயது அவனின் இரு தமக்கைகளும் முரளியும், யாரையும் கவரும் கொள்ளை அழகுடன் மாமாவுக்குப் பிறந்து அவர்களின் வீட்டை வலம் வரும் இந்துவைக் கண்ணே மணியென்று கொஞ்சி வளர்த்தார்கள்.மாமாவின் குடும்பம் அதிலும் முக்கியமாக அவர்களின் வீட்டு அழகிய இளவரசியான இந்துமதி முரளிதரன் குடும்பத்துக்கும் இளவரசியானாள்.அவளை எல்லோரும் ‘செல்லம்’ என்றழைத்தார்கள். முரளியின் தந்தையார் தனது கடைசிக் குழந்தையும் ஒரே ஒரு மகனுமான முரளியை ‘என்னுடைய முரளிக் குஞ்சு அல்லது முரளிக் குட்டி’ என்று பாசமும் அன்பும் கொட்டக் கூப்பிடுவார். தகப்பன் இறந்த துயரில் தவித்த முரளிக்கு மாமாவின் குழந்தை இந்துமதியின் வரவு மிக மிக சந்தோசத்தைக் கொடுத்தது. தகப்பன் முரளியை அன்புடன் அழைத்ததுமாதிரி,ஜந்து வயதான முரளியும் அந்தச் அழகிய குழந்தையை’இந்துக் குஞ்சு அல்லது இந்துக் குட்டி’ என்று செல்லம் பண்ணுவான்.

தேவராஜா மாமாவுக்கு இரண்டு ஆண்பிள்ளைகளும் அவர்களின் கடைசிக் குழந்தையாக இந்துவும் அந்த அன்பான வீட்டில் பவனி வந்தார்கள்.அந்த இரண்டு வீட்டுக்குழந்தைகளிலும் அவள்தான் இளம் குட்டி. முரளிதரனைவிட ஐந்து வயது இளைய இந்துவைக்; கைபிடித்து வாவியின் கரைகளில் விளையாட உதவியவன் முரளிதரன். மாமா வீட்டு மல்லிகைக் கொடியும் கவிதை பாடும் என்பதுபோல் இந்துமதி இளமையிலேயே இனிமையாகப் பாடுவாள்.

முரளிதரனின் அம்மா தனது குழந்தைகளுக்குத் தேவாரம் திருவாசகம் சொல்லிக் கொடுக்கும்போது தனது மழலை மொழியில் இந்துவும் தேவார திருவாசகங்களை மனமுருகப் பாடுவாள்.அவளுக்கு இறைவன் கொடுத்த கொடை அவளது குரலாக இருந்தது.

அவள் பாடசாலைக்குச் சேர்ந்து சில நாட்களிலேயே அவளது அற்புத இனிய குரல் எல்லோரையும் கவர்ந்தது.

முரளிதரன் வீட்டிலேயே இந்துமதி பெரும்பாலும் வளர்ந்தாள்.மாமியின் அரவணைப்பில் அந்தச் சிறு குமரிச் செல்லம் உலகத்தைக் கிரகித்தாள்.முரளியின் இளமை வளர்ச்சியில் அந்த அழகுச் சிலை ஆயிரம் வர்ணஞாலங்களை அவன் மனதில் வரையப் பண்ணியது.

வாழ்க்கை தொடர்ந்தது.முரளிதரன் பாடசாலையில் முதலாவதாக வந்தான். விளையாட்டில் வீரனாக வந்தான். சொந்த பந்தங்கள் பாராட்டும் பண்புள்ளவனான வளர்ந்தான். மட்டக்களப்பு வாவியை அண்டிய அவர்களின் வீடு அவனைப் பொறுத்தவரையில் ஒரு அழகிய நந்தவனம். அவர்களின் வேலியுடன் முத்தமிடும் வாவி, தூரத்தில் தெரியும்,ஒல்லாந்தரின் கோட்டை கிழக்கிலங்கை ஒருகாலத்தில் இலங்கையின் முக்கிய கேந்திரமாயிருந்ததைச் சொல்லும். பிரித்தானியர் கட்டிய பிரமாண்டமான கல்லடிப்பாலம், அதன் மேலால் நெருங்கி விரையும் வாகனங்கள், மக்கள். பௌர்ணமியில் அந்த அழகிய வாவியின் ஆழ்நீரில் இசைபாடும் அற்புத மீன்வகைகள் என்ற பல அழகியற்சூழ்நிலை எந்த ஒரு மனிதனையும் அற்புதக் கவிஞனாக்கும்.

அந்த அளவிட்டுச் சொல்ல முடியாத அழகிய சூழ்நிலையில்,அன்புள்ள குடும்பத்தின் அணைப்பில் தகப்பனையிழந்த சோகத்தை வெளியிற் காட்டிக் கொள்ளாமல் மாமா தேவராஜாவின் பாதுகாப்பில் முரளி வளர்ந்தான்.

முரளிதரன் வாலிப வயதை எட்டிக் கொண்டிருக்கும்போது கிழக்கிலங்கையின் அழகிய இயற்கையின் அற்புத காட்சியில் பின்னணியில் அவனின் தந்தையும் தாயும் சந்தித்து காதல் வயப்பட்டதை அவன் புரிந்து கொண்டான்.

மட்டக்களப்பு நகரின் பாரம்பரியக் கல்லூரியொன்றில் படித்து,அதைத் தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் பையலோயில் பட்டப் படிப்பைத் தொடர்ந்த காலத்தில் ஒவ்வொரு சிலமாதங்களுக்கு ஒருதரம் ஊருக்குத் திரும்பும்போது இந்துவின் அழகிய வளர்ச்சியின் அற்புத அழகு அவனைத் திண்டாடப் பண்ணியது. படிப்பை முடித்து ஊருக்குத் திருப்பியபோது பதினாறு வயதாகி கண்கவரும் அழகிய தேவதையாகக் காட்சியளித்த இந்துமதி அவனின் இருதயத்தில் அவனையறியாமல் அவன் மனதைக் கவர்ந்த குமரியாக நுழைந்து விட்டாள்.

அதே கால கட்டத்தில்,1977,இலங்கைத் தமிழர்கள்,சிங்கள அரசின் இனவெறிக் கொள்கைகளைத் தாங்க முடியாமல் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று இலங்கைத் தமிழர்கள் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்தார்கள். அதைத் தொடர்ந்து தமிழர்களுக்கெதிரான இனக்கலவரம் இலங்கை எங்கும் வெடித்தது .

இனி இந்த இலங்கை நாட்டில் பாதுகாப்பாக வாழமுடியாது என்று பெரும்பாலான தமிழர்கள் பயந்து நடுங்கினார்கள். அவர்கள் பிறந்து.தவழ்ந்து,வளர்ந்த தாய் நாடே அவர்களின் உயிரை எடுக்கக் கங்கணம் கட்டத் தொடங்கியதைக் கண்ட தமிழினம் பாதுகாப்பின்றித் தவித்தது. ஆங்கிலப் படிப்பும் பட்டமும் பெற்ற தமிழ் உத்தியோகத்தர்களும் பண வசதி படைத்த ஒரு சில தமிழர்களும் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். இலங்கைத் தமிழ் வாலிபர்கள் தங்களின் தமிழ் ஈழப் போராட்டத்திற்கு ஆயதம் எடுத்துப் போராட ஆயத்தமானார்கள்.

முரளிதரனின் தாய்க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.தனது ஒரே மகன் முரளிதரனைக் காப்பாற்ற லண்டனிலுள்ள தனது மைத்துனரைக் கெஞ்சியழுதாள். சித்தப்பாவின் உதவியுடன் முரளிதரன் அவனின் இருபத்தி இரண்டு வயதில் அவசர அவசரமாக லண்டனுக்கு அனுப்பப்பட்டான்.

அவனுக்கு அவனது அன்பான குடும்பத்தை விட்டுப் பிரிவது முடியாத காரியமாகவிருந்தது. அதைவிட அவனது உயிரோடும் உணர்வோடும் கலந்து விட்ட அவனுடைய’இந்துக் குட்டியை’ பிரிவது அவனால்த் தாங்கமுடியாதிருந்தது.யாரிடம் சொல்லியழுவது என்று தெரியவில்லை. துக்கத்தை யாரிடமும் சொல்ல முடியாது. பெரும்பாலான தமிழர்கள் சிங்கள இனவாதத்தால பெரும் துயர்களையனுபவித்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் கால கட்டத்தில் உயிரைக் காப்பாற்ற ஊரைவிட்டோடுவது அத்தியாவசியமானது.

இந்துவின் அந்தப் புனிதமான புன்னகையில், நளினமான சிரிப்பில், கொள்ளை கொள்ளும் இசையில் தனது ஆத்மாவைப் பிணைத்திருந்து அந்த ஆண்மையின் துயரம் பொங்கியோடும் வாவிக் கரையிலந்து அவள் பிரிவைத் தாங்காமல் அழுகையாகக் கொட்டியது. வானம் தழுவும் முழநிலவும் வாசம் கொட்டும் மலர்க்கொடிகளும் அவனின் மனவலியைச் சாட்சியம் கொண்டன. மீன்பாடும் வாவிக்கரை குமுறும் அவன் உளத்துயரை மவுனத்துடன் தழுவிக் கொண்டது.

அவனது காதலை அவளிடம் அவன் சொன்னது கிடையாது. சொல்லத் தேவையில்லை.தென்றல் தன் காதலை மலரிடம் சொல்லத் தேவையில்லை. வெண்ணிலவு தன் உள்ளம் கிடக்கையை தன்னைத் தழுவும் மேகத்திடம் சொல்லத் தேவையில்லை.

இந்து பிறந்த நாளிலிருந்து அவனது ஸ்பரிசத்தில் வளர்ந்த அவள், பன்னிரண்டாவது வயதில் பெண்மை மலர்ந்தபோது அவனின் பூஜைக்கான மலரானாள். தூரத்திலிருந்து ரசிக்கும் சித்திரமானாள். கைகள் இணைந்து தொடாத அவர்களின் அந்தப் புனிதக் காதலுக்கு இந்த உலகத்தில் எதுவும் நிகரில்லை.

அவர்கள் காதலர்களாகத் தனியாகச் சந்தித்துக் கொள்ளவில்லை.கண்ணே மணியே என்று தங்கள் உள்ளக் கிடக்கைகளை உளறிக் கொட்டவில்லை. அவை ஒன்றும் இரு உள்ளங்கள் ஒன்றிணந்த புனித சன்னிதியில் அர்த்தமற்றவை.

‘கவனமாகப் படியுங்கோ’ யாரும் பக்கத்திலில்லாதபோது அவனருகில் கண்ணிர் மல்கக் கிசுகிசுத்தாள். பதினேழுவயதுப் பெண்மையின்; அந்த இனிய குரல் அவன் இதயத்தை வெட்டிப் பிழந்தது.

‘அடிக்கடி கடிதம் எழுதுங்கோ’என்று அந்த இளம் மொட்டு தன் வேண்டுகோளை அவனுக்குச் சொல்லவில்லை.

‘என்னை மறந்து விடாதேங்கோ’ என்று கெஞ்சவில்லை

‘சீக்கிரமா வாங்கோ’ என்றுமட்டும் சொல்லி அவனின் உயிரின்பாதி உருகிக் கலங்கியது.

அவனை வெளி நாட்டுக்கு அனுப்ப இந்துமதி உட்பட,வீட்டார் எல்லோரும் கொழும்புக்கு வந்தார்கள். கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து நகரிலிருந்து தலைநகர் கொழும்புக்கு இலங்கையின் உயர்ந்த மலைப் பிNhசங்களையூடறுத்து வருவது ஒரு அபாயமான பிரயாணம், அதே நேரத்தில் அவர்கள் கடந்து வரும் அற்புதமான இயற்கைக் காட்சிகள்,இறைவன் என்பவன் ஒரு அழகிய கலைஞன் என்று வாய்விட்டுச் சொல்ல வைக்கும்.

அந்தப் பிரயாணம்தான் இந்துவும் முரளியும் ஒன்றாக வந்த முதற் பிரயாணம். அதுதான் அவர்களின் கடைசிச் சந்திப்பும் பிரயாணமுமாகவிருக்கும் என அந்த இளைஞன் கற்பனைகூடச் செய்யவில்லை.

குடும்பத்தினர் அத்தனைபேரும்; முரளிதரனை லண்டனுக்கு அனுப்பவதற்காக கொழும்புக்கு வரும்போது,கண்டியிலுள்ள புத்தரின் புனித பல் வைக்கப் பட்ட தலதா மாளிகையைக் கடந்து வரும்போது குடும்பத்துடன் சேர்ந்தெடுத்த ஒரே ஒரு புகைப்படம்தான் முரளிதரனும் இந்துமதியும் சேர்ந்திருந்த வாழ்க்கையின் ஒரே தடயம்.

முரளி லண்டன் வந்ததும்’ ஐ லவ் யு,ஜ மிஸ் யு’ என்று ஒருநாளும் இந்துவுக்கு எழுதவில்லை.அவன் உயிரை,ஆத்மாவை ஆட்சி கொள்ளும் அவளின் காதலுக்கு அவனின் வார்த்தைகள் தேவையில்லை.

கடல் கடந்து வாழ்ந்தாலும் காதலால் சங்கமித்த இருமனங்களும் எழுத்துக்களாலோ வார்த்தைகளாலோ தங்கள் இதயக் குமுறல்களை; கொட்டத் தொடங்கினால் அதற்கு நேரம் போதாது. அவளின் நினைவு அவனைத் தாங்காமல் வருத்தும்போது லண்டனின் பிரமாண்டமான ஹாம்ஸ்ரெட்ஹீத் பார்க்குக்குப் போயிருந்து தனிமையில் அழுவான். தேம்ஸ்நதியின் கரைகள் மீன்பாடும் மட்டுநகர் வாவியல்ல ஆனாலும் தென்றலில் மெல்நடைபோடும் நீரலைகள் இந்துவின் ஞாபகத்தை அவன் நினைவில் தவழவிட்டன.

– —————— —————- ————

3

தகப்பன் முரளிதரன் சொன்னபடி ராகவன தனது எதிர்கால மனைவி செந்தாவைப் பாட்டியிடம் கூட்டிக்கொண்டு சென்றபோது செந்தா கிழக்கிலங்கையின் அழகில் சொக்கிப்போய்விட்டாள். அவளின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். தகப்பனார் கண்டியில் டாக்ராக வேலை பார்த்தவர்.செந்தாவோ அல்லது அவளின் குடும்பத்தினரோ கிழக்கிலங்கையை எட்டிப் பார்க்காதவர்கள்.

கொழும்பிலிருந்து கிழக்கிலங்கைக்குச் செல்லும் மலையகப் பகுதியும் அந்த இடத்தில் கடும் உழைப்புடன் வாழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் அவளை மிகவும் துன்பப் படுத்தியது.பல கேள்விகள் கேட்டாள்.அவள் இலங்கையிலிருந்தால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான மனித உரிமைப் போராளியாவாள் என்பது அவளின் குமுறலிலிருந்து ராகவனுக்குப் புரிந்தது.

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பை நெருங்கியபோது அந்த இயற்கையழகு அவளைத் திக்குமுக்காடப் பண்ணியிருக்கவேண்டும். அவனைக் கட்டிக்கொண்டு,’இந்த அழகிய பூமியில் பிறக்க என்ன தவம் செய்ய வேணும்’ என்று முணுமுணுக்கத் தொடங்கிவிட்டாள்.’ஐ லவ்யு ஸோ மச் மை டார்லிங்’ என்று புலம்பத் தொடங்கிவிட்டாள்.

‘எனது யாழ்ப்பாணத்துத் தாத்தா எனது மட்டக்களப்புப் பாட்டியை இவ்விடத்தில் காதல் கொண்டபோது உன்னைப்போல் ஆங்கிலத்தில் உளறிக் கொட்டியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை’ என்று செந்தாவுக்குக் கிண்டலாககச் சொல்லிச் சீண்டினான் ராகவன்.

அவர்களின் கார் பாட்டியின் வீட்டையண்டியபோது செந்தாவின் பார்வை ஆச்சரியத்தில் பரபரத்தது.

ராகவனின் தந்தை முரளிதரன் பிறந்தவீடு. பாட்டியின் பாரம்பரியவீடு. வாவி தழுவும் வளவு நிறைய மாமரமும். தென்னையும், தோடையும், அன்னாசியும்,எலுமிச்சையும் என்ற எத்தனையோ பழ வகைகளுடன் வீட்டுக்குப் பின்புறத்தில் தக்காளியும், வெண்டையும் செழித்துக் கொட்டிக்கிடந்த அந்தச் சோலை வீட்டுக்குள்க் காலடி எடுத்து வைத்தபோது,சிந்து ராகவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களில் ஒரு அசாதாரணமான பாவம்.கண்கள் கலங்கி.குரல் கரகரக்க அவனிடம் நெருங்கி வந்து’ இந்த வீட்டில் வளர்ந்த உனது தந்தை மிகவும் கொடுத்து வைத்த நல்ல மனிதன்’ ராகவன் மறுமொழி சொல்லவில்லை.. ‘கலைகள் நர்த்தனமாடும் அழகு’அவள் குரல் மென்மையாகவிருந்தது.

அவளின் குரல் வித்தியாசமாகவிருந்தது. ஏதோ தனக்குத் தெரிந்த,வளர்ந்த வீட்டுக்குள் நுழைவதுபோல் வந்தாள்.அவளுடன் ஏதோ ஒரு பழைய உலகுக்கு வந்ததுபோன்ற உணர்ச்சி ராகவனை ஆட்கொண்டது.

துரத்தில் ஏதோ ஒரு கோயிலிற்பாடும் பாட்டு காற்றொடு காற்றாக வந்து அவனின் காதில் படிந்தது.செந்தாவின் கைகள் அவனை அன்புடன் இணைத்துக்கொண்டன.

பாட்டியார் சுகவீனம் காரணமாக,எழும்பமுடியாத நிலையில்ப் படுத்த படுக்கையாகவிருந்தார்.

ராகவன் அவனின் சிறு வயதில் அவனின் தாய் சங்கரியுடன் இலங்கைக்கும், தகப்பனுடன் இந்தியாவுக்கும் சென்று பல தடவைகள் பாட்டியை கண்டிருக்கிறான். ஆனால் இப்போது அவள் மிகவும் பெலவீனமாகத் தெரிந்தாள்.

அவளது கைகளை அவர்களுக்கு முன் நீட்டியபடி,கண்களை இடுக்கிக் கொண்டு,அவளின் பொக்கைவாயில் புன்னகையைக் கலந்தபடி தனது பேரனையும் அவனுடன் வந்த பெண்ணையும் பார்த்தாள். அவளின் கண் பார்வை பரவாயில்லாமலிருந்தது,பேச்சு தெளிவாக இருந்தது.அப்போது, மாலைச் சூரியனின் மஞ்சளும் சிவப்பும் கலந்த வெளிச்சம் பாட்டி படுத்திருந்த அறையின் ஜன்னலால் ஓடிவந்து செந்தாவின்; முகத்தைத் தொட்டது.

அவர்களை ஏறிட்டுப் பார்த்த பாட்டியின் பார்வை செந்தாவின்; முகத்தில் அப்படியே நிலைத்து நின்றது. உடனடியாகப் பாட்டியின் கண்களிலிருந்து பொல பொலவென நீர்வழியத் தொடங்கியது. ராகவனும் செந்தாவும்; ஆளுக்கொரு பக்கமாகப் பாட்டியின் கட்டிலில் அமர்ந்தார்கள். பாட்டியின் கைகளைத் தடவிக்கொண்டு அவளை அன்புடன் பார்த்தார்கள். ராகவனின் எதிர்கால மனைவி பற்றி ராகவனின் தந்தை எழுதியிருப்பார் என்று தெரியும்.ஆனால் அவள் எப்படியிருப்பாள் என்ற எழுதியிருப்பாரோ தெரியாததால் பாட்டி செந்தாவை வைத்த கண் எடுக்காமற் பார்ப்பதாக ராகவன் நினைத்தான்.

பாட்டியின் கைகளை ராகவன் அன்புடன் தடவியபடி,’பாட்டி இவள்தான் நான் கல்யாணம் செய்யப் போகும் பெண். பெயர் செந்தாமரை,நாங்கள் செந்தா என்று கூப்பிடுவோம் ‘ என்று சொன்னான்.பாட்டி செந்தாவை ஆழமாகப் பார்த்தாள்.

‘ என்ன வருடம் பிறந்தாய் செல்லம்’ பாட்டியின் குரல் மிகவும் பலவீனமாகவிருந்தது. பாட்டி செந்தாவை அவளின் பெயர் சொல்லி அழைக்காமல்’ செல்லம்’ என்று அன்புடன் அழைத்தது ராகவனை நெகிழப்பண்ணியது. அவள் பிறந்த வருடத்தைச் சொன்னாள். வந்ததும் வராதுமாக, பாட்டியார் செந்தா பிறந்த வருடத்தைக் கேட்டது டாக்டரான ராகவனுக்குச் சற்று ஆச்சரியத்தைத் தந்தாலும் அவளின் வயது. வருத்தம் காரணமாக அவன் பாட்டியின் பாசத்தில் தோய்ந்தெழும் வார்த்தைகளைப் பெரிதாக எடுக்கவில்லை.

பாட்டி செந்தாவை இழுத்துப் பிடித்து செந்தாவின்; கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.’என்ர அழகிய செல்லமே’ என்று பாட்டி முணுமுணுத்தாள். பாட்டி எழுந்திருக்கு மிக மிகச் சிரமப் பட்டாள். முடியுமானவரை செந்தாவைத் தடவியபடியிருந்தாள்.

ராகவனின் தந்தையான தனது மகன் முரளியைப் பற்றிப் பாட்டி கேட்டாள். அவர் உத்தியோக விடயமாக அமெரிக்கா போயிருப்பதாக ராகவன் தனது பாட்டிக்குச் சொன்னான்.மருமகள் சங்கரியைப் பற்றிக் கேட்டாள்.அதைத் தொடர்ந்து பல கேள்விகள் குடும்பத்தைச் சுற்றி வந்தன. ராகவனின் தமக்கை செல்வியின் விவாகரத்து விடயத்தை அப்பா இதுவரையும் பாட்டிக்குச் சொல்லவில்லை என்பது பாட்டியுடன் பேசும்போது தெரிய வந்தது. ஏன் அப்பா அதுபற்றிப் பாட்டிக்குச் சொல்லவில்லை, பாட்டியால் அந்த அதிர்ச்சியைத் தாங்கமுடியாது என்ற நினைப்பா?

பாட்டிக்குச் சுகமில்லை என்று அப்பாவுக்குத் தெரியும்.ஆனால் அவள் மிகவும் பலவீனமாக இருக்கிறாள் என்ற உண்மை நிலை தெரிந்தால் அப்பா உடனடியாக அவரின் தாயைப் பார்க்க வருவாரா? ராகவன் தனக்குள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டான். இலங்கையில் தமிழருக்கு நடந்த கலவரம் காரணமாகத் தனது ஊரை விட்டு லண்டன் சென்ற தகப்பனார்,அதன்பின் இதுவரைக்கும் அவரின் அழகிய ஊரை எட்டிப் பார்க்கவில்லை. இலங்கையிற் தொடர்ந்த போரால்,அவரை இலங்கைக்கு வரவேண்டாம் என்று பாட்டி சொன்னதாக ராகவனுக்கு அவனது தாய் சொல்லியிருக்கிறாள்.

லண்டனில் அப்பாவின் படிப்பு முடிந்த அதே வருடம் 1983;,இலங்கையில் தமிழர்களை அழித்தொழிக்கும் நோக்குடன் சிங்கள இனவாதம் தனது பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. அதைத் தொடர்ந்து தமிழர்கள் எண்ணிக்கையற்ற விதத்தில் அரச கொடுமையால் இறந்தொழிந்தார்கள்.பல்லாயிரக் கணக்கான இலங்கைத் தமிழர் நாட்டை விட்டோடிக் கொண்டிருந்தார்கள். ஓடமுடியாத ஏழைத்தமிழ் இளைஞர்களும் கன்னிப் பெண்களும் எதிரியின் கைகளில் அகப்பட்டு அழுவதைவிடத் தங்கள் இனத்திற்காகப் போராடி உயிரைத் தியாகம் செய்யப் பல விடுதலைப் போராட்டக் குழுக்களிற் சேரத் தொடங்கினார்கள்.

படிப்பை முடித்துக் கொண்ட முரளியை இலங்கைக்கு அனுப்பினால் அவனின் உயிருக்கு ஆபத்து என நினைத்த சித்தப்பா,லண்டனில் முரளிக்குத் திருமணம் செய்யப் பெண்பார்க்கத் தொடங்கினார். அதன் நீட்சியாக வந்த மாற்றங்கள் ராகவனுக்குத் தெரியாது.

பாட்டியைக் கண்டதும் அவளிடம் கேட்கவேண்டும் என்று சேர்த்து வைத்திருந்த பல கேள்விகளை எப்படிக் கேட்பது என்று ராகவன் தர்ம சங்கடப் பட்டான்.

ராகவனும் செந்தாவும் கிழக்கிலங்கை வந்து ஒன்றிரண்டு நாட்கள்வரையும் பாட்டியையும்,ராகவனையும் அவனது எதிர்கால மனைவியையும் பார்க்க அவர்களின் உறவினர்கள் அடிக்கடி வந்தார்கள். பாட்டியும் தன்னால் முடியும்வரை அவர்களுடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாள்.

மூன்றாம் நாள்,பாட்டியின் சொந்தக்காரப் பெண்ணொருத்திச் செந்தாவைக் கடைத் தெருவுக்குக் கூட்டிக்கொண்டு போனபின்;,ராகவன் பாட்டியின் வேண்டுகோளின்படி அவளது தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு வாவிக்கரைக்குச் சென்றான். பாட்டி நீண்டநேரம் மெல்லலையில் தவழும் வாவியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.சூரியன் தனது மாயாஜால வாணங்களைப் பூமியிற் தடவிக்கொண்டு வானத்தில் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.

ராகவனின் கைகளைத் தடவி விட்டபடி அவனை நிமிர்ந்துபார்த்தாள்.முதிர்ச்சியால் தளர்ந்த அவளது முகத்தசைகளின் சுருக்கம் மாலைச்சூரியனின் மங்கிய ஒளியில் பிரகாசிதத்து. ‘நீ உனது அப்பாவை உரித்து வைத்தபடி பிறந்திருக்கிறாய் தெரியுமா?’ விம்மலுடன் சொன்னாள். அவன் மவுனமாகத் தலையாட்டினான்.

‘செந்தா நல்ல பெண்’ பாட்டியின் குரல் தளர்ந்து கரகரத்து விம்மியது.முதுமையின் அழுகை அவனையும் நெகிழப் பண்ணியது. அவள் ஒரு சொற்ப நேரம் அவளது பார்வையைத் தூரத்தில் பதித்திருந்து விட்டு,

‘செந்தாவைக்; கண்டதும் உனது அப்பா என்ன சொன்னார்?’என்று கேட்டாள்.பாட்டியின் கேள்வி ராகவனை எங்கேயோ இழுத்துச் சென்றது. தனது மருமகளாக வரப்போகும் பெண்ணைப் பற்றி உனது தாய் என்ன சொன்னாள் என்று பாட்டி ஏன் கேட்கவில்லை என்று அவனுக்குள் வந்த கேள்வியைப் பாட்டியிடம் கேட்காமல் அவள் கேட்ட கேள்விக்கு மறுமொழி சொல்வதைப் பற்றிச் சிந்தித்தான்.அவள் அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்கக் காத்திருந்தது அவளின் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது.

.

செந்தாவை முதற்தரம்; கண்டதும் அப்பாவின் முகம் திடுக்கிட்டமாதிரியிருந்தது என்பதைப் பாட்டிக்குச் சொல்லாமா?; ராகவன் தர்மசங்கடப் பட்டான்.

பாட்டியின் பார்வை பின்னேர வெயிலின் தங்கநிற ஒளியைத் தழுவி நெழியும் வாவியின் அலைகளிற் படிந்திருந்தது.

‘இந்த இடத்திற்தான உனது அப்பா அவனின் செல்லக் குட்டியான இந்துவுடன் விளையாடினான்,வளர்ந்தான்,அவளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தான். அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு வாவியின் கரைகளில் ஓடிவிளையாடினான். பின்னேரம் சூரியன் மறையும் வரை சந்திரன் உதிக்கும்வரை அவனுடைய இந்து செல்லத்துடன்; இணைபிரியாது இந்த இடத்திற்தான் உனது தகப்பனின் வளர்ந்தான்’ பாட்டியின் குரல் தடுமாறியது.

பாட்டி ஏன் அவனுக்கு இதுவரை தெரியாத ஒரு பெயரான இந்துவைப் பற்றி அவனிடம் சொல்லி அழுகிறாள்?

அவனின் தர்மசங்கடத்துடன் தவித்தான். யார் இந்த இந்து என்று ராகவன் பாட்டியிடம் கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாளா,அப்பாவுக்கும் இந்துவுக்கும் என்ன தொடர்பு ? அதைப் பாட்டியிடம் எப்படிக் கேட்பது?

ராகவன் பாசத்துடன் அவனின் கண்ணீரைத் துடைத்துவிட்டான். அவள் ராகவனின் கைகளை அன்புடன் இறுக்கிப் பிடித்தாள்.

‘நீ உனது தோற்றத்தில் மட்டுமல்ல, மற்றவர்களுடன் அன்பாகப் பழகுவதிலும் உன்னுடைய தகப்பன் முரளி மாதிரியே இருக்கிறாய்’ அவளின் சுருக்கம் விழுந்த கன்னங்களில் கண்ணீர்த்துளிகள் உருண்டு வழிந்து கொண்டிருந்தன.

‘தகப்பன் மாதிரித்தானெ குழந்தைகளும் இருப்பார்கள்’ என்று சொல்ல நினைத்தவன் அதைச் சொல்லவில்லை.

இந்துவுடன் அப்பா பாசமாகப் பழகியதைப் பாட்டி நினைவு படுத்திக் கொள்கிறாளா?

மகனைக் காணாத துயரில் வெடிக்கும் அந்தத் துயரைப் பார்க்கத் தர்மசங்கடமாகவிருந்தது.

தனது மகன் தன்னைப் பார்க்க வாரததற்கு இப்படித் தவிக்கிறாளா? ராகவன் தனக்குள் அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டான்..

அப்பா முரளிதரன் எத்தனையோ தடவை இந்தியாவுக்குப் பாட்டியை வரவழைத்து சந்தித்திருக்கிறார். இப்போது இலங்கையில் போர் முடிந்து எத்தனையோ வருடங்களாகிவிட்டன ஆனாலும் அவர் இலங்கைக்கு வந்து பாட்டியைப் பார்க்கவில்லை.அதற்குக் காரணம் தொடர்ந்து நடந்த போர் மட்டுமல்லாது இப்போது ‘இந்து’ என்று சொல்லி பாட்டி அழும் பெண்ணும் காரணமா, அவனுக்கு ஏதோ புரியத் தொடங்கியது,அதை எப்படிப் பாட்டியிடம் கேட்பது?

‘;அப்பா வராததற்கு நான் மன்னிப்புக் கேட்கிறேன் பாட்டி’அவன் அவளின் கைகைளை வருடியபடி சொன்னான்.

‘ ஏனப்பா நீ அப்பாவுக்காகத் துன்பப் படுகிறாய். உனது தகப்பன் மாதிரி ஒருத்தனை இந்த உலகத்துக்குக் கொடுத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்.’ அவள் பெருமூச்சு விட்டாள்.

சில நிமிடங்களின்பின் அவள் தொடர்ந்தாள்,’நான்தான் எனது மகனை இந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கவேண்டாம் என்று சத்தியம் பண்ணச் சொல்லிக் கேட்டேன்’ பாட்டி மெல்லமாகச் சொன்னாள் அவள் விம்மல் தொடர்ந்து கொண்டிருந்தது.

‘எனது மரணத்திற்கும் அவன் வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன்’ பாட்டி அப்படிச் சொல்லும்போது கதறிவிட்டாள்.

ராகவன் திடுக்கிட்டு விட்டான். இது என்ன கொடுமை? தனது மரணச் சடங்குக்கும் தனது ஒரே ஒரு மகன் வரக்கூடாது என்று எந்தத் தாயாவது சொல்வாளா?

அவன் தனது அதிர்சிசியை அவனின் மவுனத்திற்குள் மறைத்துத் தவித்தான்.

‘எனது மகன் இந்த நாட்டில் நிறையத் துன்பங்களைக் கண்டு விட்டான். இனி அதெல்லாம் அவனைத் தொடரவேண்டாம்,அவனைப் பிரிந்து பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன். நான் இந்த நிமிடம் இறந்துவிடலாம். எனது வயதும் நிலையும் அப்படியானது. அப்படி ஏதும் நடந்தால் எனது கடைசிச் சடங்குகளை செந்தாமரையுடன் சேர்ந்து நீ செய்தால் சந்தோசப்படுவேன்.ஆனால் எல்லாம் கடவுள் விட்டவழி. நீ இன்னும் சில நாட்களில் திரும்பிப் போய்விடுவாய். அதுவரைக்கும் செந்தாமரைச் செல்லத்தைக் கண்ணால் கண்டு பரவசப்பட்டுக்கொண்டிருப்பேன்’.

அவள் அவனைத் தனக்கு முன்னால் இழுத்து வைத்து அவன் கன்னங்களில் முத்தமிட்டாள்.

‘இந்துவும் உனது அப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் உயிரையே வைத்திருந்தார்கள். அந்த உறவைக் கடவுளைத் தவிர யாராலும் புரிந்துகொள்ள முடியுமோ தெரியாது.’ பாட்டியின் குரலிருந்த சோகம் அவனை வாட்டியது.

‘; நீங்கள் சொல்லும் இந்துமதி என்ற பெண் யார், இந்துவுக்கு என்ன நடந்தது?’

பாட்டி அவனின் இந்தக் கேள்வியை எதிர்பார்த்தவள்போல் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.அவள் முகத்தில அவனால் புரிந்து கொள்ளமுடியாத ஒரு அழகிய புன்முறுவல் படர்ந்து மறைந்தது. ஒரு அற்புதமானமான வரலாற்றின் முன்னறிவிப்பா அது?

‘இந்துமதி என்ற ஒரு கலைச் செல்வி முரளிதரன் என்ற ஒரு அன்பான மனிதனுக்காகக் கடவுளால் அனுப்பப் பட்ட தேவதை..’ அவள் நிறுத்தினாள். நேரம் அழகிய பின்னேரச் செஞ்சூரியனின் தகதகப்பில் அவர்கள் இருந்த வாவியைத் தங்கத் தொட்டிலாகத் தாலாட்டிக் கொண்டிருந்தது.

அவளது அறையிலுள்ள அலுமாரியிலுள்ள அல்பத்தில் 1977ம் ஆண்டு என்று எழுதப்பட்ட அல்பத்தை எடுத்துவரச் சொன்னாள். அந்த ஆண்டுதான் இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடந்த கலவரத்தால் அவனது தகப்பன் லண்டன் சென்றார் என்று அவனுக்குத் தெரியும்.

பாட்டியை நோக்கி நடந்து கொண்டு ஆல்பத்தைத் திறந்தபோது,அவளின் ஒரேயொரு மகனான ராகவனின் அப்பா முரளிதரனின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் புகைப் படங்களாகத் தொகுந்திருந்தாள் என்று புரியத் தொடங்கியது. பாட்டியின் தாய் தகப்பனாருடனிருந்த படத்தில் அவளுடடைய தகப்பனாரின் மடியில் பாட்டி செல்வமலர் சிறு குழந்தையாயிருப்பது முதற் படமாக அந்த ஆல்பம் ஆரம்பித்தது. ஒவ்வொரு படத்திற்குக் கீழும் அந்தப் படத்திலிருப்பவர்கள் யார் என்ற விபரமும் படம் எடுத்த ஆண்டும் குறிப்பிடப் பட்டிருந்தது.

அந்து ஆல்பம், பாட்டி செல்வமலரின் பரம்பரைச் சரித்திரத்தின் ஒரு பகுதியை என்றாலும் அவளின் சந்ததியினர் அறிந்து கொள்ளவேண்டும் என்ற உணர்வுடன் தொகுக்கப் பட்டிருந்தது என்பது அவனுக்குப் புரிந்தது. பாட்டியை நெருங்கும்போது அவள் ராகவனின் வருகையை மிகவும் ஆவலுடன் காத்திருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. மாலை வெளிச்சத்தில் அவள் மிகவும் அழகாகத் தெரிந்தாள். வயதுபோன மூதாட்டியாகவில்லாமல் ஒரு குழந்தைத் தனமான பாவம் அவள் முகத்தில் பரவியிருந்தது. அந்த ஆல்பத்தில் அவளின் வாழ்க்கையின் சில பதிவுகள் இருக்கின்றன அதை அவளின் பேரன் ஆர்வத்துடன் கவனிக்கப் போகிறான் என்ற ஒரு விதமான பெருமை அவள் முகத்திற் தெரிந்தது. பாட்டியின் இரு பெண்களும் மிகவும் இளவயதில் திருமணமாகி வெளி நாடு சென்றுவிட்டார்கள். இலங்கையில் தொடர்ந்த போரின் காரணமாக அவர்கள் இலங்கைக்கு வந்தது மிகக்குறைவு. அத்துடன் அவர்களின் கணவர்கள் பொருளாதார ரீதியாகப் பாட்டியைப் பார்த்துக்கொண்ட அளவுக்கு அன்பு சார்ந்த தொடர்ந்த உறவுகளைப் பாட்டியின் மகள்களுடன்; தொடர உந்துதல் கொடுக்காமலிருந்திருக்கலாம்.ஆனால் அவளின் மகன் முரளி மட்டும் அடிக்கடி இந்தியாவுக்கு அவளையழைத்துப் பார்த்துச் சென்றார்.அவளின் மகன் முரளியுடன்; பாட்டிக்கிருந்த நெருக்கம் அவள் குரலிலும் செயல்களிலும் பிரதிபலித்தது.

ராகவன்; எதையெல்லாமோ யோசித்துக் கொண்டு பாட்டியை நெருங்கியபோது,ராகவனின் சிந்தனையைப் படம் பிடித்தவள் மாதிரி ‘எனது மூன்று குழந்தைகளுக்கும் ஒவ்வொரு ஆல்பம் வைத்திருக்கிறேன்’; என்றாள்.’ஆனால் இப்போது உன் தகப்பனைப் பற்றித்தான் உன்னுடன் பேசப்போகிறேன்’ என்று பாட்டி மறைமுகமாகச் சொல்கிறாளா?

பாட்டி ஆல்பத்தை ராகவனிடம் வாங்கி மிகவும் கவனமாக ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டத் தொடங்கினாள்.இதுவரையும் அவள் தனது மகன் முரளிதரனைப்பற்றி மனம் திறந்து சொல்லவேண்டியபல அவளின் கண்ணீருடன் கலந்த சொற்களாகக் காற்றில் கலந்து கொண்டிருந்தது.

தந்தையின் அன்பு வழிநடத்தலுடன் ஒரு எதிர்காலத்தை இழந்த ஐந்துவயது மகனைத் தன்னால் முடிந்தமட்டும் ஒரு நல்ல மனிதனாக வளர்க்கப் பாடுபட்டதை அவள் சொல்லும்போது அவளின் வாழ்க்கைப் போராட்டம் எத்தனை கொடியதாக இருந்திருக்கவேண்டும் என்று ராகவனாற் கற்பனை பண்ணமுடியவில்லை.

‘ஆனால் எனது மகனைத் துன்பக் குழியிலிருந்து மீட்டவள் எங்கள் செல்லம் இந்துமதி’ என்று சொல்லத் தொடங்கிய பாட்டியிடமிருந்து முரளி-இந்துமதி என்ற இருகுழந்தைகள், இரு வாலிப வயது இளமனிதர்கள், காலத்தின் கோலத்தால், இலங்கையில் நடந்த கொடுமையான இனவெறிப் போரால் பிரிக்கப் பட்டுத் துயர்பட்ட இரு மனிதர்களின் கதை ராகவனுக்குச் சொல்லப்பட்டது.

‘நீ லண்டனுக்குப் போனதும் முதல் வேலையாக உனது தகப்பனிடம் நான் சொல்வதை ஒரு வார்த்தை பிசகாமல் சொல்லவேண்டும் என்று நான் கேட்பதைச் செய்வாயா’ பாட்டியிடமிருந்து ராகவன் இந்த வேண்டுகோளை எதிர்பார்க்கவில்லை.

அவன் தர்மசங்கடத்துடன் பாட்டியைப் பார்த்தான். மாலைநேரப் பூசைக்கு எங்கோவிருந்து மணியோசை கேட்டது. பாட்டி ராகவனின் கைகளை ஒருகையால் வருடியபடி ஆல்பத்தைக் காட்டிப் பழைய உலகத்தை விபரித்துக் கொண்டிருந்தாள். அவள் குரல் ஒரு இனிமையான தொனியைத் தொட்டது. பழைய இனிய நினைவுகள் வரும்போது பலரின் உணர்வுகள் கடந்தகாலத்தைத் தழுவுவது அவள் குரலில் பிரதிபலித்தது. ஆல்பத்திலிருந்த கண்டியைச் சார்ந்த ஒரு பிரதேசத்தில் எடுத்த ஒரு படத்தைக் காட்டி,’ இதுதான் உனது தகப்பனும் இந்துவும் முதலாவதாகவும் கடைசியாகவும் ஒன்றாக எடுத்தபடம்’என்றாள்.

அந்தப் புகைப் படம் கொழும்புக்கு வந்து விமானம் ஏறி அப்பா லண்டனுக்கு வரமுதல் எடுத்த கடைசிப் படம் என்றாள். தேவராஜா மாமா குடும்பத்தாருடன் கொழும்பு வரும்போது எடுத்த படம். முரளி என்ற கம்பீரமான வாலிபனுக்குப் பக்கத்தில் இந்துமதி என்ற அழகிய தேவதை ஒன்றாக இணைந்து நின்றெடுத்த கடைசிப் படம்.

இந்துமதியின் புகைப் படத்தைக் கண்டதும் ராகவன் திடுக்கிட்டான். இந்து என்ற அந்தப் பெண் அவனின் எதிர்கால மனைவி செந்தாமரையின் தோற்றத்தில் புகைப் படத்திலிருப்பது போன்றிருந்தது. அவன் தனது அதிர்ச்சியை மறைத்துக் கொண்டான். செந்தாமரையை முதற்தரம் கண்டதும், அவனது தந்தை, அவனது பாட்டியார் ஏன் திடுக்கிட்டார்கள் என்ற அவனுக்குப் புரிந்தது. என்ன விந்தை இது? இறந்து விட்ட இந்துமதியின் அச்சாக இருக்கிறாளே செந்தாமரை?

அவனின் அதிர்ச்சியைக் கவனிக்காத பாட்டி தனது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தாள். அந்த ஆல்பத்தைப் பார்க்கும்போது அவனுக்கும் அதிர்ச்சி வரும் என்று அவள் எதிர்பார்த்தாளோ என்னவோ அவன் முகத்தை அவள் பார்க்கவில்லை.

‘அதன் பின் எங்கள் வாழ்க்கை தலைகீழாகிவிட்டது. இலங்கைத் தமிழர்களுக்கெதிரான சிங்கள அரசின் இன ஒழிப்பு நடவடிக்கைகளும் அதை எதிர்த்துப் போராட தமிழ் இளைஞர்கள் ஆயதப் போராட்டத்தை ஆதரித்ததும் சாதாரண வாழ்க்கையை அசாதாரணமாக்கியது.தமிழ் மக்கள் எப்படியும் எங்காவது தப்பிப்போகத் தொடங்கினார்கள்.இளம் வயது தமிழ் ஆண்கள்,பெண்களை இனவெறி பிடித்த சிங்கள் அரசாங்கம் வேட்டையாடத் தொடங்கியிருந்தது.

1983ம் ஆண்டு உனது தகப்பனின் படிப்பு முடிந்து இலங்கை வருவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது,அவன் வந்ததும் அவனுக்கும் இந்துவுக்கும் திருமணத்தை முடித்து உடனடியாக லண்டனுக்கு அவர்களை அனுப்பத் தேவையான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தோம்.’ பாட்டியின் குரல் கரகரத்தது.தொடர்ந்தாள். கதைகளைச் சொல்லும்போது கதறினாள்.

அவனுக்குப் பல விடயங்கள் புரியத் தொடங்கின. அவை அந்த மூதாட்டியால் தாங்கிக் கொள்ளமுடியாத பழைய நினைவுகளைக் கிண்டலாம்.அவளை மேலே பேசவிடாமற் கெஞ்சினான் ராகவன்.

‘நான் கட்டாயம் உனக்கு இவற்றைச் சொல்ல வேண்டும்- செந்தாமரைச் செல்லம் கடையிலிருந்து திரும்பி வரமுதல் நான் சொல்ல வேண்டும்’ பாட்டி பிடிவாதம் பிடித்தாள். தொடர்ந்தாள். துயரத்தில் தோய்ந்த பழைய சரித்திரத்தைத் தொடர்ந்தாள்.

முரளி லண்டனுக்குப் போகமுதல்’ கெதியாகப் படிப்பை முடித்துவிட்டு வாங்கோ’ என்று இந்துமதி சொன்னதை முரளி அவனுக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயமானதும் தாய்க்குச் சென்னதைச் சொன்னான்.அவன் குரலில் ஏகப்பட் சந்தோசம். முரளி லண்டனுக்கு மாஸ்டர் டிகிரி செய்யவந்தவன் அவனின் கெட்டித்தனத்தால் கலாநிதிப்பட்டத்தைத் தொடர சந்தர்ப்பம் கிடைத்தது. இந்துவைப் பார்க்காமல் லண்டனில் இன்னும் சில வருடங்களா? அவன் பற்களை இறுகப்பிடித்துக் கொண்டு படிப்பை முடித்தான். அவனின் திறமைக்கு லண்டனில் வேலை தேடிவந்தது.

இலங்கைக்கு ஓடிப்போய் அவனின் இந்துவை அழைத்துவரவேண்டும்.அவனின் படிப்பு முடியும்வரை அவளுடன் எந்தவிதமான எழுத்துத் தொடர்பும் இல்லை. அது அவர்கள் இருவருக்குமிடையில் வாய்விட்டுச் சொல்லப்படாத சங்கற்பம். வீட்டு விடயங்கள், உறவினர் சுக துக்கக்கங்களை மகனுக்கு எழுதும்போது தன்னைப் பற்றியும் அவனுக்கு அம்மா எழுதுவாள் என்று இந்துவுக்குத்; தெரியும்.அவனைப் பற்றி அவனின் படிப்பு பற்றி, திறமை பற்றியெல்லாம் முரளியின் தாய் செல்வமலர்; இடைவிடாமல் இந்துவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

இந்துமதியும் ஆசிரியை பயிற்சி பெற்று,கிழக்கிலங்கை பாடசாலையொன்றில் ஆசிரியையாகக் கொஞ்ச காலம்; கடமையாற்றிக் கொண்டிருந்தாள்.அவளின் பண்பும் அன்பும் பல இளமாணவிகளை அவளுடன் இணைத்தது.அதில் ஒருத்தி சங்கரி என்ற இளம்பெண். இந்துமதியின்; தூரத்துச் சொந்தக்காரப் பெண். சாதாரணகுடும்பத்துப் பெண், இனக் கலவரத்தில் அவளின் குடும்பத்தில் பலரையிழந்தவள்.அசாதாரணமான அன்பை மற்றவர்களிடம் சொரிந்து கொட்டுபவள், இந்துமாதிரியே வாழவேண்டும் என்று வாய்விட்டுச் சொல்பவள்.

இந்துவின் உயிருடனிணைந்த முரளியின் படிப்பு லண்டனில்; முடிந்து விட்டது. வேலையிலும் சேர்ந்து விட்டான். இந்துவுடன் இணையவேண்டும் என்ற மகனின் ஆசை அபிலாசைகளை அறியாதவளா தாய்?

‘ஊருக்கு வந்து இந்துவைக் கைபிடித்துக் கல்யாணம் செய்து அவளை லண்டனுக்கு அழைத்துச் செல்’ என்று தன் மகன் முரளிக்கு அம்மா நேரடியாகவே சொல்லி விட்டாள். முரளியின் கனவு நனவாகப்போகிறது

அவனின் கடிதம் வந்தது. 1983 யூலைமாதக் கடைசியில் மூன்றுமாத லீவில் இலங்கை வருவதாக எழுதியிருந்தான். தனது ஒரே ஒரு மகனின் திருமணத்தைப்; படாடோபமாகச் செய்யத் தாய்மனம் ஆசைப் பட்டது.

உற்றார் உறவினர்களுக்கு விடயம் அறிவிக்கப்பட்டது.

செல்வமலரின் குடும்பத்தின் பாரம்பரிய நகைகளைத் தனது இரு மகள்மாருக்கும் கொடுத்துவிட்டாள். தனது ஆசை மகனின் மனைவிக்குப் புதிதாக அழகான நகைகள் செய்தாள்.அம்மா இந்துவை அழைத்துக்கொண்டு இந்தியாவுக்குப் போய்க் கல்யாணத்திற்கான பட்டுச்சேலைகள் தொடக்கம் மகனுக்கான பட்டு வேட்டி எற்றெல்லாம் ஆசையாக வாங்கி வந்தாள். வீடு அழகாகத் திருத்தப் பட்டு அலங்கரிக்கப் பட்டது.

வீட்டு வேலியை முத்தமிட்டு அலைபாயும் வாவி தன்னில் கால் பதித்து விளையாடிய முரளியின வருகைக்காக வேலியைத் தடவிப்பார்த்து நகர்ந்து கொண்டிருந்தது. இந்துமதி தன் காதலனைக்; கைபிடிக்கும் கனவில் மிதந்துகொண்டிருந்தாள்.வீPடு புதுக்கோலம் கண்டது. உற்றார் உறவினர் வருகை திருவிழாக் காலம்போலிருந்தது.முரளிதரன் லண்டனிலிருந்து வருவதற்கு இன்னும் சில நாட்களேயிருக்கின்றன.

23.7.1983ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் 13 இலங்கை இராணுவ வீரர்களைக் கொன்றதால் அதன் எதிரொலியாகத் தமிழர்களுக்கெதிராக இலங்கையில் நடந்த கொடுமைமையைக் கண்டு உலகமே அதிர்ச்சியடைந்தது. இலங்கையின் தலைநகர் கொழும்பில் கடந்த பல நூற்றாண்டுகளாக அங்கு பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், வேலைக்காகவும் படிப்பதற்காகவும் வந்தவர்கள் என்று பல்லாயிரக்கணக்கில் வாழ்ந்த தமிழர்கள் ஒரு சில நாட்களில் அகதிகளாக்கப் பட்டார்கள். தங்களைப் பாதுகாக்க வேண்டிய மந்திரிகளே தமிழர்களின் பெயர் விலாசம்கொண்ட அட்டைகளுடன் வீடு வீடாகச் சென்று தமிழர்களைச் சிங்கள இனவாதக் காடையர்களுக்குக் கொலைசெய்யச் சொல்லிக் காட்டிக் கொடுத்தார்கள். தமிழர்கள் நடுத் தெருவில் உயிருடன் கொழுத்தப் பட்டார்கள். அவர்களின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப் பட்டன.

அவர்கள் அணிந்திருந்த ஆடையுடன் மட்டும் உயிருக்குத் தப்ப ஓடிய தமிழர்கள் பட்ட துயர் எழுத்தில் வடிக்கமுடியாதவை.அவர்கள் கொழும்பிலுள்ள தமிழ்க் கோயில்களில் அடைக்கலம் தேடினார்கள். மூன்று நாட்களாகத் தமிழர்களுக்கெதிரான வெறியாட்டம் தொடர்ந்தது. இக்கொடுமைகளைக் கண்டு,கொழும்பில் பல வெளிநாட்டார் திகைத்துப் பதறினர். ஆனால் தமிழருக்கெதிரான இனக்கலவரத்தை அடக்கித் தமிழரைக் காப்பாற்ற அன்றிருந்து ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவார்த்தனா எந்த முயற்சியும் எடுக்கவில்லை.அவர் மேற்கு நாடுகளின்; ஏவலாளி.அதனால் மனித உரிமை பேசும் மேற்குலகம் மவுனம் காத்தது.

முரளிதரன் இலங்கைக்குத் திரும்ப முடியாது. அவனின் காதலியைக் கைப்பிடிக்க முடியாது.அவன் போன்ற ஆயிரமாயிரம் தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் சின்னாபின்னமானது. தமிழ்ப்பகுதிகளில் இலங்கை இராணுவம் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. இளம் தலைமுறையினர் ஆடுமாடுகள் மாதிரி வளைத்துப் பிடிக்கப் பட்டு சொல்லவொண்ணாச் சித்திரவதைக்காளாகிக் கொலை செய்யப் பட்டார்கள். அரச ஒடுக்குமுறைக்கெதிராகப் பல தமிழ் விடுதலைப் போராட்டக் குழுக்கள் களமிறங்கின.

பல்லாயிரம் இளம் தமிழ் ஆண்களும் பெண்களும் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இலங்கை இராணுவத்திடம் அகப்பட்ட தமிழ்ப் பெண்கள் பட்ட கொடுமைகளைச் சொல்லப் பல காவியங்கள் எழுதப்படவேண்டும். தங்கள் குழந்தைகள் போராட்டத்தில் குதித்து இறந்து முடியாதிருக்கச் சில பெற்றோர் தங்கள் பெண்களுக்குப் பதினைந்து பதினாறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கத் தொடங்கினார்கள்.

சில வருடங்கள் கடந்தன.தமிழர்கள் நாட்டை விட்டோடிக் கொண்டிருந்தார்கள். தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து இந்துவுக்குக் கல்யாணம் செய்ய முரளியின் தாய் பட்டபாடு சொல்லில் அடங்காது. முரளிதரன் இலங்கைக்கு வந்து இந்துவைத் திருமணம் செய்வது தடைபட்டுக் கொண்டே போனது. போதாக் குறைக்கு,இந்துமதியின் இருதமயன்களும் விடுதலைப் புலிகள் என்று பிடிபட்டபோது இந்துவுக்கு எந்த நிமிடமும் இலங்கை இராணுவத்தால் ஆபத்து வரப் போவதையுணர்ந்த அவளின் பெற்றோரும் உற்றோரும் அவளுக்கு அயலூரில்த் திருமணம் செய்து அவளை மட்டக்களப்பு அப்பால் அனுப்ப முடிவு செய்தனர்.

அவளுக்கு அதைச் சொன்னதும் அவள் அவர்களை உற்றுப் பார்த்தாள். ‘என்னை இலங்கை இராணுவம் பிடிக்கப் போகிறது என்று பயந்து எனக்குத் திருமணம் செய்ய யோசிக்கிறீர்கள். என் உயிரோடு பிணைந்து விட்ட என் முரளியை மறந்து விட்டு இன்னொருத்தனை எப்படி நான்; கைபிடிக்க முடியும்?’

அவள் வேதனையுடன் விம்மினாள். அவள் துயரை அவர்கள் அறிவார்கள்.அவளுக்கு முரளியிலுள்ள காதல் பற்றி அவர்களுக்குத் தெரியாதா? அவள் அவனுக்காகவே பிறந்தவள் என்று அவர்களால் சொல்லப் பட்டு வளர்க்கப் பட்டவள்.

இரு உடலும் ஓருயுருமாய் இணைந்து வளர்ந்த அவர்களின் புனித காதலை அவர்கள் அறிந்தவர்கள்.ஆனாலும் அவள் இலங்கையில் உயிருடனிருப்பதானால் அவளின் காதலை மறக்க வேண்டும். மாற்றானைக் கைபிடிக்கவேண்டும்.முரளிதரன் என்ற அவளின் அன்பனை அவள் மறக்க வேண்டும். நடக்கக் கூடிய காரியமா?

அன்றிரவு இந்துமதி அவர்கள்; வீட்டிலிருந்து மாயமாக மறைந்து விட்டாள்.அதிர்சியால் தவித்த பெற்றோரும் முரளியும் தாயும் அவளைத் தேடியலைந்தபோது, தூரத்திலுள்ள ஒரு காட்டில் இலங்கை இராணுவத்தால் பிடிக்கப் பட்ட பல இளம் தமிழ்ப் பெண்களும் ஆண்களும் சித்திரவதை செய்யப் பட்டு உயிருடன் கொழுத்தப்பட்டு எரிந்து கொண்டிருப்பதாகச் செய்தி பரவியது.அந்த நிகழ்வில் இந்துவும் அழிந்திருக்கலாம்; என்ற செய்தி அவளின் வீட்டுக்கு வந்தது.

இருமகன்களையும் இராணுவத்திடம் பறி கொடுத்த தேவராஜா மாமா தனது ஒரே ஒரு மகளையும் இழந்தபோது நடைப்பிணமானார். யாருடனும் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டார்.அவருடைய மனைவி சில மாதங்களில் மூன்று குழந்தைகளையும் இழந்த துக்கத்தில் படுத்த படுக்கையாயிருந்து இறந்துவிட்டாள்.

முரளிக்கு இந்துவுக்கு நடந்த கொடுமையை எழுதியபோது அவன் எப்படித்துடிப்பான் என்று அவனின் தாய்க்குத் தெரியும். இந்து இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப்பட்டதாக நினைத்து முரளிக்கு அவன் தாய் லண்டனுக்கு கடிதம் எழுதிய சில வாரங்களில் இந்துமதியிடமிருந்து கடிதம் வந்தது.

முரளியில்லாத வாழ்க்கை தனக்குத் தேவையில்லை என்றும்,அவளின் எதிர்காலத்தைத் தமிழ் மக்களின் விடுதலைக்கு அர்ப்பணப்பணிக்கப் போராட்டத்தில் சேர்ந்து விட்டதாகவும்,இதுபற்றி முரளிக்கு எதுவும் எழுதவேண்டாம் என்றும் எழுதியிருந்தாள். ‘எனது விதி அதுதான் ஆனாலும் முரளியின் காதலுடன் இவ்வளவு காலமும் உயிர்வாழ்ந்தேன். இந்தப் போராட்டத்தில் இன்றோ நாளையோ நான் இறக்கலாம் ஆனால் எனது முரளியின் இனிய நினைவுகளுடன் இறப்பேன்’;

இந்துமதியின் கடிதம் முரளியின் தாயை நிலைகுலையப் பண்ணியது. தன் மகனில்லாத போலியான ஒரு திருமண வெற்றுவாழ்வுக்குள் தன்னைப் பிணைத்து நடைப் பிணமாக வாழ்வதைத் தவிர்த்துத் தன் மக்களுக்காகப் போராடத் துணிந்த அவளின் மனப்போக்கு முரளியின் தாய் செல்வமலருக்கு அப்பட்டமாகப் புரிந்தது. இந்துவும் முரளியும் வெறும் உணர்வுகளால் இணைக்கப் பட்டவர்களல்ல என்று அந்தத் தாய்க்குத் தெரியும்.

முரளியின் தகப்பன் இறந்தகாலத்தின் சொற்பநாட்களில் இவ்வுலகில் அவதரித்த இந்துமதி,தனது தகப்பனையிழந்த துடித்த முரளியின் துயரைப் போக்கிய அற்புத சக்தி. அவன் வளர்ந்தகாலத்தில் அவன் கைகோர்த்து,இயற்கையை ரசித்து, வாழ்க்கையிற் புரிந்து கொள்ள முடியாத இறுக்கமான தொடர்பால் வளர்ந்த தெய்வீக உறவு அவர்களுடையது. அவளைத் தன் மாமா மகளான ஒரு பெண்ணாகப் பார்க்காமல் தனது வாழ்வின் நாடித்துடிப்பாக நினைத்து முரளிவாழ்வது அவனின் தாய் செல்வமலருக்குப் புரியும்.

ஏதோ பூர்வீகத் தொடர்பால் ஒன்றாக இணைந்து விட்ட இரு மனங்களின் சங்கமம் தொலை தூரத்து வாழ்வின் பிரிவால் ஒருநாளும் மாற்றமடையாது, அவர்களின் இரு உயிர்களும் இந்த உலகில் உலவும்வரை, உலகத்து ஐம்பூதங்களும் இயற்கையின் கடமையைத் தொடர்வதுபோல் அவர்களின் சிந்தனையும் ஒருத்தருக்கொருத்தரில் தங்கியிணைந்து தொடரும் என்று அவளுக்குத் தெரியும்.

இந்துமதிக்குத் தெரியும் அவள் உயிரோடிருப்பதைக் கேள்விப்படால் அவளைப் போராட்டத்திலிருந்து மீட்டெடுக்க முரளி ஓடோடிவருவான்.அவன் இலங்கைக்கு வந்தால் எத்தனையோ பிரச்சினை;.முரளியின் உயிருக்கு ஆபத்துண்டு. அத்துடன் போராட்டத்திலிருந்து அவள் இனி விலகமுடியாது. அதைத் தெரிந்தால் அவன் இலங்கையிலேயே நின்றுவிடுவான். அதன் விளைவு என்னவாக இருக்கும்? அவள் உயிரோடிருப்பதை முரளிக்குச் சொல்லவேண்டாம் என்று இந்துமதி முரளியின் தாயை வேண்டிக் கொண்டாள்.

இந்துவின் கடிதத்தால் நீண்ட கால மனப் போராட்டத்தில் முரளியின் தாய் தவித்தாள்.

‘மகனே தமிழருக்குக் கொடுமை செய்யும் இந்த நாட்டில் ஒரு நாளும் காலடி எடுத்து வைக்காதே’ தாய் உருக்கத்துடன் மகனை மன்றாடினாள்.

‘எனது இந்துவைப் பலி எடுத்த அந்த நாட்டுக்கு நான் வரமாட்டேன்’ இந்து போராளியாகப் போனதையறியாத வேதனையுடன் விம்மினான் முரளி. அவளின் நினைவில் தன் மகனின் எதிர்காலம் சிதைந்து போவதை எந்தத் தாய் விரும்புவாள்?

சிலவருடங்கள் தீவிர யோசனை செய்தபின்,முரளிக்கு எப்படியும் ஒரு திருமணத்தை லண்டனில் செய்து வைக்கச் சொல்லித் தன் மைத்துனருக்கு எழுதினாள் செல்வமலர் பாட்டி.

முரளியின் பெரியப்பா லண்டனிற் பார்த்த எந்தப் பெண்ணையும் முரளி ஏறெடுத்தும் பார்க்கவில்லை. எனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று வேதனையுடன் முணுமுணுத்தான்.

1987ம் இந்திய இராணுவம் இலங்கைக்கு அமைதிப் படையாக வந்த காலத்தில் கிடைத்த அமைதிக்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பலர் இலங்கைக்கு வந்து போனார்கள். மகனும் வரவேண்டும் அவனுக்குத் திருமணம் நடக்கவேண்டும் என்ற செல்வமலரின் கெஞ்சல் பொறுக்காமல் ‘சரி யாரையும் ஊரிலிருந்து பாருங்கள்’ ஏனோ தானோ என்று முரளி பொருமினான். இந்துமதியின் மாணவியும்; அவள் தாயின்வழியில் தூரத்துச் சொந்தமுமான சங்கரிக்கும் முரளிக்கும் கல்யாணம் பேசினார்கள். முரளிக்கு சங்கிரியின் வயது வித்தியாசம் திடுக்கிடப் பண்ணியது.

சங்கரியிடம் முரளி போனில்;.’வயதில் மூத்த என்னைத் திருமணம் செய்ய ஏன் விரும்புகிறாய் என்ற கேட்டான். ‘அன்பு,ஆதரவு,இணைவு என்பவை வயதோடு சம்பந்தப்பட்தில்லை.உங்களின் குடும்பத்தை எனக்குத் தெரியும்.அதில் நானும் ஒரு அங்கம் என்றால் அதைப் பெருமையாக ஏற்றுக் கொள்வேன்’ சங்கரி ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகச் சொன்னாள்.அவளின் புகைப் படத்தை முரளி பார்த்திருக்கிறான். இப்போது அவளின் குரலைக் கேட்;கிறான்.ஏதோ ஒரு உந்துதலில் அம்மாவின் தெரிவை மதித்தான்.முரளிக்கும் சங்கரிக்கும் இந்தியாவில் திருமணம் நடந்தது. முரளிக்கு மனைவியாகச சங்கரியைத் தெரிவு செய்தவள் இந்துமதி என்பதை செல்வமலர் தனது மகனுக்கு எப்படிச் சொல்வாள்?

கொஞ்ச காலத்தில் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் போராட்டம் வெடித்தது.இந்திய இராணுவம் திரும்பச் சென்றதும் பழையபடி இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் ஆரம்பித்தது. சில வருடங்களாளாக,இலங்கை இராணுவத்துடனான சமரில் இந்துமதி கொல்லப்பட்டதாக முரளியின் தாய்க்குச் செய்தி வந்தது.

அப்போது முரளிக்கு மூன்று குழந்தைகள்.அடிக்கடி இந்தியா வந்து தாயைப்பார்த்துச் சென்றான்.

இப்போது அவன் மகன் ராகவன் முரளியின் தாயைப் பார்க்க வந்திருக்கிறான்.அவனின் மனைவி செந்தாமரை இந்துமதியை நகல் எடுத்தமாதிரியான தோற்றத்துடனிருக்கிறாள். செந்தாமரையைக் கண்டதும் முரளியின் தாய்க்குப் பழைய ஞாபகங்கள் அவள் மனதில் பேரலையாகப் பிரவகித்ததை ராகவன் புரிந்து கொண்டான்.

‘நான் எனது மகனுக்குப் பொய் சொல்லி வளர்க்கவில்லை. இந்துமதியின் வேண்டுகோளின்படிதான் அவனுக்கு அவள் உயிருடனிருப்பதைச் சொல்லாமல் விட்டேன். அவளைத் தேடி அவன் வந்தால் என்ன நடக்குமோ என்ற பயத்தில், எனது இறப்புக்கும் அவன் வரக் கூடாது என்று கேட்டுக் கொண்டேன்’ பாட்டி திரும்பத் திரும்பச் சொல்லி அழுதாள்.

இரவு தன் கறுப்புப் பட்டாடையால் உலகை மறைத்துக் கொள்ளத் தொடங்கியது. மட்டக்களப்பு வாவியில் வானத்து நட்சத்திரங்களின் பிம்பங்கள் மாயாஞாலம் காட்டத் தொடங்கியது.

‘இந்துமதி இpறந்த அதே வருடம் செந்தாமரை பிறந்திருக்கிறாள். எனக்கு உனது தாய் சங்கரி மாதிரி பழம் நம்பிக்கைகள் பெரிதாக இல்லை. இந்துவின் ஆவிதான் செந்தாமரையாக எங்கள் குடும்பத்துக்கு வந்திருக்கிறாள் என்ற நான் பிதற்றத் தயாராகவில்லை.ஆனாலும் செந்தாமரையைப் பார்த்தால் எனது இந்துச் செல்லம் வந்து எனக்கருகில் இருப்பதுபோலிருக்கிறது. செந்தாமரையைக் கண்டதும் உனது அப்பா திடுக்கிட்டிருப்பான் என்று எனக்குத் தெரியும் செந்தாமரையைக் காணுவது அவனுக்குச் சந்தோசமாகவிருக்கும் என்று நினைக்கிறேன்.முரளியைத் தவிர யாரையும் கல்யாணம் செய்ய விரும்பாத இந்து போராட்டத்தில் சேர்ந்து இறந்த துயர்க்கதையையும் அதுபற்றி நான் அவனுக்கு உண்மையைச் சொல்லாமல் மறைத்ததையும் நான் இறக்க முதல் எனது மகனுக்குச் சொல்லத் துடித்தேன். அவன் இலங்கைக்கு வரமாட்டான். செந்தாவைக் கண்டதும் இந்துவின்; ஞாபகங்கள் என்னைச் சித்திரவதை செய்கின்றன’

‘எனது அம்மாவுக்குச் செந்தாவைக் கண்டதும் அவளுக்கு இந்துமதியின் ஞாபகம் வந்திருக்காதா?’ குழப்பத்துடன் தன் பாட்டியைக் கேட்டான் முரளி.

‘இந்துவின் தாய்வழியில் தூரத்துச் சொந்தமான சங்கரிக்கு இந்துவை ஒரு கொஞ்சகாலம் அவளுடைய ரீச்சராக மட்டும்தான்; தெரியும்.அத்துடன் இந்துவின் மாணவிகள் பலர்போல் சங்கரியும் இந்துவில் நல்ல மரியாதையான ஈர்ப்புடன் பழகினார்கள்.சங்கரிக்குச் செந்தாவைக் கண்டதும் ஏதோ பழைய ஞாபகங்கள் நினைவில் வந்த தட்டுப் பட்டிருக்கலாம். ஆனால் இந்துவையும் முரளியையும் இணைத்து யோசித்திருக்க முடியாது ஏனென்றால் எங்களைப்போல் இந்து பிறந்த நாள் தொடக்கம் அவள் பழகவில்லை. இந்து -முரளியின் கல்யாணத் திட்டங்கள் அவளுக்குத் தெரிந்திருக்கமுடியாது.அவள் நீண்டகாலம் வெளியூர்களில் வாழ்ந்துவிட்டுப் போர் உக்கிரமானபோதுதான் இந்தப் பக்கம் வந்தாள்.அத்துடன் சங்கரிக்கு முரளியின் மனைவி என்ற இடத்திற்குப்பால் அவளின் சிந்தனை தொடராமலிருந்திருக்கலாம்.அதுவும் நல்லதுதான்’

.

பாட்டி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். கடைக்குப் போயிருந்த செந்தாமரை வந்து விட்டாள் என்பதற்கான அறிகுறிகள் துரத்தில் கேட்டன.

பாட்டி ராகவனைத் தடவியபடி சொன்னாள்’நான் எவ்வளவு காலம் இருப்பேனோ தெரியாது. எனது இறப்புக்குப் பின் நீ கட்டாயம் உனது தகப்பனுக்கு உண்மை விபரங்களைச் சொல்லவேண்டும்.இலங்கை இராணுவத்தால் கொடுமை செய்யப் பட்டு அவள் இறக்கவில்லை. அவர்களுடன் போராடி இறந்தாள் என்று சொல்லவேண்டும். அவள் முரளியிலுள்ள காதலால் இன்னொருத்தனைக் கல்யாணம் செய்ய மறுத்தாள். முரளியற்ற வெறுமையான போலி வாழ்க்கை வாழ்வதை விட இறப்பைத் தெரிவு செய்தாள் என்பதைச் சொல்,ஆனால் தைரியமற்றவளாகத் தற்கொலை செய்துகொள்ளவில்லை,தனது இனத்திற்கும் எங்கள் அடையாளத்திற்குமெதிராகத் துப்பாக்கிதூக்கியவனுடன் சமர் செய்து வீரமரணம் அடைந்தாள் என்று சொல்லவேண்டும்.’

முரளி பேச்சற்றிருந்தான். கதிரவன் பாட்டியின் துயர் கதை தாங்காமல் தன்னை அடிவானத்தில் மறைத்துக்கொண்டான்.

‘ என்னுடைய அருமைப் பேரனே காதல் என்பது மகத்தான சக்தி என்பதை உணர்ந்திருப்பாய் என்று நினைக்கிறேன,உலகத்தின் சரித்திரங்கள் மாறியிருக்கின்றன. காப்பியங்களும் இதிகாசங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன.எவ்வளவோ படித்து மனித மனங்களை உணரும் அறிவுள்ள உனக்குக் காதலின் தோல்வி தாங்கமுடியாதது என்பதை நான் உனக்கு விளக்கத் தேவையில்லை.’ பாட்டி தொடர்ந்து,இந்துமதி-முரளிதரன் பற்றிய பல உண்மைகளைச் சொன்னாள். பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் உண்மைகளின் தாக்கத்தின் அதிர்ச்சிப் பிரதிபலிப்பு அவன் முகத்தில் தாண்டமாடியதைப் இருண்ட பொழுதின் தாக்கத்தில் பாட்டியால் கண்டுபிடித்திருக்கமுடியாது.

அப்போது இவர்களை நோக்கி செந்தாமரை வந்து கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் வானத்தில் நிலா பவனி வரத் தொடங்கியது. ‘செந்தாமரைச் செல்லம்’ பாட்டி வாஞ்சையுடன் செந்தாமரையின் கைகைளைப் பற்றிக் கொண்டாள்.’எங்கள் குடும்பத்துச் செல்லம் என் ஆசைச் செல்லம்;’ ஆசை தீர பாட்டி செந்தாமரையை முத்தமிட்டாள்.அவள் இந்துவின் நினைவில் செந்தாவை அணைத்து முத்தமிடுகிறாள் என்று ராகவனுக்குப் புரிந்தது. பாட்டியின் அந்த அளவற்ற அன்பைத் தாங்கமுடியாமல் செந்தாமரை திணறினாள். தனது மனதிலுள்ள பாரத்தைத் தன் பேரனிடம் சொன்னதாலோ என்னவோ,பாட்டியின் முகத்தில் ஒரு அலாதியான பிரகாசம்.நிலவு வெளிச்சமும்,வீட்டிலிருந்து வந்த வெளிச்சமும் இரண்டும் அவளில் முகத்தைத் தடவி முத்தமிட்டுக்கொண்டிருந்தன.

அன்றிரவு பாட்டியும் செந்தாவும் உறங்கிவிட்டபின் இலங்கையின் கிழக்கின் அற்புதமும் மாயமும் நிறைந்ததான பிரமையையூட்டும் அந்த இரவின் சூழ்நிலையில் ராகவன் வேலியைத்தடவிப் புணரும்; வாவியின் அலைகளின் மெல்லிய சிறு ஒலியில் தனிமையில் உட்கார்ந்தான். இருளின் அணைப்பில் அன்று பின்னேரம் பாட்டி சொன்னவற்றைத் தன் மனதில் அசைபோட்டான்.

விஞ்ஞானத்தில் பல பெரிய படிப்புகளைப் படித்த ராகவளின் அப்பா முரளிதரன் ஏன் பாட்டியால் தெரிவு செய்யப் பட்டதாகச் சொல்லப்பட்ட ராகவனின் தாயான சங்கரி என்ற இந்தக் கிராமத்துப் பெண்ணைத் திருமணம் செய்தார் என்ற கேள்விக்குப் பதிலில் எத்தனை ஆச்சரியம் நிறைந்திருக்கிறது?

அப்பாவுக்குத் தான் வாழ்ந்த அழகிய,இயற்கையின் மாயா யாலங்களைத் தன்னுள் புதைத்த இந்தப் பூமியை,அவரின் ஆத்மாவில் வாழும் இந்துமதியை இடைவிடாமல் ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கும் அவரின் அடிமன ஏக்கத்தை நிவர்த்தி செய்யவா அன்பும் கடைமையும் தன் இருகண்ணென மதித்து அவருடன் வாழும் சங்கரியை எந்தக் கேள்வியுமில்லாமல் ஏற்றுக் கொண்டாரா? சங்கரியை அவருக்குத் திருமணம் செய்து வைக்கச் சொல்லி இந்துமதி பாட்டிக்கு எழுதியது அவருக்குத் தெரிந்தால் அவர் மனநிலை எப்படியிருக்கும்?

அவனுக்குப் பதில் தெரியாது.அடுத்த நாள் தூரத்து வீட்டுச் சேவலின் கூவலிற் கண்விழித்தபோது பாட்டியின் இருமல் கேட்டது. பாட்டியின் முகம் இரத்தமிழந்த நிறத்தைக் காட்டியது. வைத்தியர் வந்தார். லண்டனிற் படித்த டாக்டர் ராகவனை ஆழந்து பார்த்து விட்டு ‘என்னால் இனி ஒன்றும் செய்யமுடியாது’ என்ற சைகையைக் காட்டி விட்டு நகர்ந்தார்.

அன்று முழுதும் அவனும் செந்தாவும் பாட்டிக்கு உதவினார்கள். பாட்டியால் அதிகம் பேசமுடியவில்லை. இருபக்கங்களிலிமிருந்த ராகவன்-செந்தாவின் கரங்களை இறுகப் பற்றியபடி தன் கடைசி மூச்சுடன் போராடிக் கொண்டிருந்தாள்.வெளிநாட்டிலிருக்கும் பாட்டியின் இரு பெண்களும் உடனடியாக வருவதாகச் செய்தி வந்தது.

அடுத்தநாள் பாட்டி இறந்துவிட்டாள். ராகவன் வந்ததும் தனது மனத்துயரைக் கொட்டவேண்டும் என்று தவமிருந்தாளா?

ராகவனின் அப்பா முரளி-பாட்டியின் மகன், அமெரிக்காவில் மிகவும் முக்கியமான கொன்பிரன்ஸில் பங்கு பற்றுவதால் அவரால் வரமுடியவில்லை. ராகவன் பாட்டியின் இறுதிக் கடமைகளைச் செய்தான்.

———– —————– ————————

ராகவனும் செந்தாமரையும் லண்டனுக்கு வந்ததும் அப்பாவின் முகத்தைப் பார்த்ததும் ராகவன் குழந்தைமாதிரி ஓவென்றலறினான். முரளிதரன் மிகவும் வயதுபோன தனது தாயின் மரணத்தை எதிர்பார்த்திருந்தாலும் அவளின் இறப்பு அவரை எவ்வளவு தூரம் தாக்கியிருக்கிதென்று அவரின் தோற்றத்தில் தெரிந்தது.வாய் விட்டுச் சொல்லமுடியாத துயரத்தில் அவர் ஆழந்திருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது.

சில நாட்களின்பின் ராகவன் தகப்பனைப் பார்க்க வந்திருந்தான். அவனின் தாய் சங்கரி பாட்டியின் மறைவுபற்றித் துக்கம் விசாரிக்க வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.தகப்பனும் மகனும் அவர்கள் வழக்கமாகச் செல்லும் ஹாம்ஸரெட்ஹீத் பார்க்குக்குக் காரிற் சென்று பார்க்கில் நடந்து கொண்டிருந்தார்கள். அப்பாவுக்கு மிகவும் பிடித்த இடமது என்று ராகவனுக்குத் தெரியும். அவரின் மனதில் குழப்பங்கள் சூழும்போது அவனின் தந்தை முரளி இந்த இடத்திற்குத் தனியாக வந்து சிந்தனையைத் தெளிவாக்கிக் கொள்கிறார் என்பது அன்று ராகவனுக்குப் புரிந்தது. ஹாம்ஸரட்ஹீத் பார்க்குக்குள் உள்நிழைந்தால் அவ்விடத்தில் அடர்ந்து வளர்ந்து கிடக்கும் பெருமரங்கள் சார்ந்த இயற்கையின் தழுவலில் எந்த மன உளைச்சலும் குறையத் தொடங்கும் என்பதை ராகவன் புரியத் தொடங்கினான்.

பார்க்கின் அடர்பகுதியில் நடந்து கொண்டிருந்தபோது அந்தப் பார்க்கின் சூழ்நிலையில் அந்த இடத்தையண்டிய லண்டனில் பிரமாண்டான கட்டிங்கள் மறைந்து விட்டன. அவ்வப்போது ஒன்றிரண்டு மனிதர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள்.சிலர் காதலர்கள், ஒருசிலர் தனிமனிதர்கள், ஒருசிலர் நாயின் துணையுடன் நடைபோடுபவர்கள்.

பெரும்பாலான நேரத்தில் அவ்விடத்தில் ஒரு அசாத்தியமான இயற்கைச் சூழ்நிலை அவனை வியக்கப் பண்ணியது. லண்டனில் நடுவில்,ஆனாலும் யதார்த்திற்கு அப்பாற்பட்ட அமைதியான இவ்விடத்தைக் கார்ல் மார்க்ஸ் போன்ற உலகின் பிரமாண்டமான சிந்தனையாளர்கள் ஏன் தெரிவு செய்து தங்களின் சிந்தனையைத் தெளிவுபடுத்தத் தனிமையான நடையை மேற்கொண்டார்கள் என்று ராகவனுக்குப் புரிந்தது. அந்த அழகிய சூழ்நிலை இயற்கையின் தனித்துவத்தின் பிரதிபலிப்பு. உண்மையின் உயர்த்துடிப்பு. அங்கு அவ்வப்போது கேட்கும் பறவைகளின் இனிய குரல்களைத் தவிர வேறெந்த ஒலியும் கிடையாது.அந்தச் சூழ்நிலையில் தந்தையுடன் தன்னைப் பிணைத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தது அவனை உணர்ச்சி வயப்படுத்தியது.

ராகவனின் தந்தை முரளி மவுனமாக நடந்துகொண்டிருந்தார். தாயின் இழப்பைத் தனக்குள் அமிழ்த்தித் துயர்படுகிறாரா?

நீண்ட நேர அமைதிக்குப் பின்,முரளி தனது மகனிடம் தனது தாயின் கடைசி நாட்களைப் பற்றிக்கேட்டார்.அதிக நாட்கள் படுக்கையிற் கிடந்து அவதிப்படாமல் தனது பேரன் வந்து தன்னுடன் தங்கிய நாட்களில் அவள் இந்த உலகிலிருந்து விடைபெற்றது அவருக்குப் பல உண்மைகளைக் காட்டியதா?முரளிதரன் அவளின் ஆசைமகன் அவன் வராவிட்டாலும் அவனின் மகன் முரளி தன்னுடன் நிற்கும்போது இவ்வுலகிலிருந்து விடைபெறவேண்டும் என்று முரளியின் தாய் நினைத்தாளா?

‘பாட்டியின் கடைசி நிமிடங்கள் அதிகம் துன்பத்தை அவளுக்குக் கொடுக்கவில்லை.குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் பலர் பக்கத்திலிருந்தோம்’ தகப்பனின் மனநிலையை அறிந்தவன் மாதிரி ராகவன் சொன்னான்.

‘அம்மாவுடன்; கடைசி நிமிடத்தில் இருக்கவேண்டியவர்கள் இருக்கவில்லையே’ அப்பாவின் குரலில் ஒலித்த துயரை ராகவனாற் தாங்கமுடியாதிருந்தது. முரளியின் அன்னைக்கு மிகவும் பிடித்த இந்துமதியும் முரளிதரனும் தனது இறுதிக்காலகட்டத்தில் தன்னுடனிருக்கவில்லை என்று பாட்டி நினைத்திருப்பாள் என்று அவர் சொல்கிறாரா?

ராகவனின் மனதில் அமிழ்ந்து கிடக்கும் பாட்டி சொன்ன விடயங்களை அவனால் இனியும் மறைத்து வைக்க முடியவில்லை. அவரிடம் எதையும் இனி மறைக்காதே என்று யாரோ அவன் காதில் தென்றலுடன் சேர்ந்து வந்து கிசுகிசுப்பதுபோலிந்தது. இருவரும் வீட்டுக்குச் செல்லக் காரில் ஏறியபோது, அவனின் தந்தை அவர்கள் நடந்து வந்த பார்க்கைத் திரும்பி ஒரு தடவை பார்த்துவிட்டு அவனுடன் மவுனமாக நடந்து வந்து காரில் ஏறினார்;. அப்பா ஏன் அந்தப் பார்க்கைத் திரும்பிப் பார்த்தார்? அங்கு இனி வரமாட்டேன் என்று அவர் மனம் சொன்னதா?

இந்தப் பார்க்கில் உள்ள இயற்கையின் அழகு அவரின் பழைய ஞாபகங்களைக் கிண்டுகிறதா? அந்த நினைவில் இந்துவும் வந்துபோவாளா? அந்த நிமிடத்தில் அவன் தன் மனதில் கிடப்பவற்றைச் சொல்லத் தொடங்கினான். அந்த உந்துதலை அவனாற் கட்டுப்படுத்த முடியவில்லை. முரளி தகப்பனுடன் ஆரம்பித்தான்.

‘பாட்டி உங்களையும் இந்துவையும் பற்றிச் சொன்னாள்..’ என்று ஆரம்பித்தவன்,தனது தகப்பனின் முகத்தைப் பார்க்காமல் காரைச் ஸ்ரார்ட பண்ணினான். அவன் காரில் ஏறமுதல் அவர் முகத்தைப் பார்த்துச் சொல்ல வேண்டிய விடயங்களைத் தன் பார்வையைப் பாதையில் பதித்தபடி காரை ஓட்டினான்.

அவன் ‘உங்களையும் இந்துவையும் பற்றி.. என்று தொடங்கிய கணத்தில் அவரின் முகத்தைப் பார்த்திருந்தால் அவன் பேச்சைத் தொடர்ந்திருக்க மாட்டான். அவரின் மனதில் தாயின் மறைவோடு இந்துவும் நினைவுகளும் பூகப்பத்தைக் கிளம்பிக் கொண்டிருக்கிறது என்பதை ‘இந்து’ என்ற பெயரை அவன் உச்சரித்த நிமிடத்திலிருந்து தகப்பன் மனதில் ஆரம்பித்ததை அவன் அறியான்.

ராகவன்,பாட்டி தனது மகனான முரளிதரனுக்கு இந்துவின் கடைசி நாட்கள் பற்றிச் சொல்லச் சொன்னவற்றை அடுக்கிக் கொண்டு போனான். பாட்டி இந்துமதி பற்றிய முழு உண்மைகளையும் சொல்லித் தன்னை மன்னிக்கும்படி தனது மகனிடம் சொல்ல வேண்டும் என்று அவளின் பேரனான ராகவனிடம் உறுதிமொழி வாங்கியிருந்தாள். ராகவன் தொடர்ந்தான்,

‘பாட்டி நினைத்ததுபோல் இலங்கை இராணுவத்தின் கொடுமைகளால் உங்கள் இந்துமதி இறக்கவில்லை.இந்துமதி உங்களைக் கல்யாணம் செய்ய முடியாத சூழ்நிலை வந்தபோது, வேறுயாரையும் திருமணம் செய்ய விருப்பமில்லாததால்,தனது உயிரைத் தமிழருக்காகப் போராடித் தியாகம் செய்தாள். அவள் போராளியான தகவல் பல மாதங்கள் ஆனபின் பாட்டிக்குக் கிடைத்ததால் இந்து இறந்து விட்டாள் என்ற துயரை நீங்கள் மறந்து கொண்டிருக்கும்போது,அவள் உயிருடனிருப்பது தெரிந்தால் நீங்கள் இந்துவைத்தேடி இலங்கைக்கு வந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என்று இந்துமதி எழுதியிருந்ததால் அந்தப் பயத்தில் பாட்டி உங்களிடம் உண்மையைச் சொல்லவில்லையாம்;.அத்துடன் லண்டனில் அவரின் சித்தப்பா பார்க்கும் பெண்கள் யாரையும் செய்யமாட்டேன் என்று சொன்னபோது ‘என்னுடைய பழக்க வழக்கங்களில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் சங்கரியைச் செய்யச் சொல்லி முரளியைக் கேளுங்கள்,சங்கரிக்கு அவரை விட பத்து வயது குறைந்தவளென்றாலும்;, அத்துடன் சங்கரிக்கு அமானுஷ்யமான விடயங்களில் அபரிமிதமான நம்பிக்கையிருந்தாலும் அவளின் அன்பில்,அவளின் இனிமையான உருக்கமான பாடல்களில் அவர் ஒரு புதிய உலகைக் காணுவார்.அவள் எப்போதும் என்னை மாதிரி வாழவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவள்.அவருடன் வாழமுடியாத என்னிடத்தை நிரப்பி வாழச் சங்கரியால் முடியும் எனவே, சங்கரியைச் செய்யச் சொல்லி நீங்கள் சொன்னால் அவர் உங்கள் பேச்சைக் கேட்பார்’ என்று இந்துமதி பாட்டிக்கு எழுதியிருந்தாளாம்.’

ராகவன் பேசிகொண்டிருந்தான். பாட்டி அவனிடம், இந்துவைப் பற்றிய விபரங்களை முரளிதரனிடம் சொல்ல வேண்டும் என்று அவள் இறக்கும்போது கேட்ட வாக்குறுதியைத் தனது தந்தையிடம் சொல்லி முடிக்கவேண்டும் என்ற கடமையுணர்ச்சியால் அவன் தந்தையின் முகத்தைப் பார்க்காமல் தொடர்ந்து அவசரமாகப் பேசிக் கொண்டு வந்தான்.

முரளியைத் திருமணம் செய்ய முடியாத கட்டம் வந்தபோது,இந்துமதி போராளியாகப்போன விடயத்தையும் அதைப்பற்றி முரளிக்குத் தெரியப் படுத்தவேண்டாம் என்று முரளியின் தாய் செல்வமலர் பாட்டியிடம் இந்துமதி வாக்குறுதி வாங்கியதையும் ராகவன் சொன்னபோது காரில் அவனுக்குப் பக்கத்திலிருந்த அவனின் தகப்பன் இருதயம் கிட்டத்தட்ட செயலிழக்கத் தொடங்கிவிட்டதின்; பிரதிபலிப்பை ராகவன் அறியான்.

போர் நிறுத்தம் வந்து அமைதி வந்த கால கட்டத்தில் போராளிகள் தங்கள் வீடுகளுக்கு வந்த செல்ல அனுமதி கொடுக்கப்பட்டபோது இந்துமதி செல்வமலர் வீட்டுக்கு வந்து முரளியின் திருமணப் படங்களைப் பார்த்துக் கண்ணீர் வடித்ததையும் முரளியின் மூன்று குழந்தைகளின் படத்தைத் தடவி முத்தமிட்டதையும் ராகவன் சொல்லவில்லை. ஆனால் முரளியின் அச்சாகப் பிறந்திருக்கும் ராகவனின் படத்தை மட்டும் இந்துமதி எடுத்துக் கொணடு போனதாகப் பாட்டி சொன்னதைத் தகப்பனுக்குச் சொல்லிக் கொண்டு வந்தான்.

தகப்பனுடன் பேசிக் கொண்டு, அவன் செல்லும் பாதையில் தனது காரைப் பாதுகாப்பாக ஓட்டிக் கொண்டு வந்தவனுக்கு,’ இந்து’ என்ற பெயரைக் கேட்டதும் தனது தகப்பனின் முகத்தில் படர்ந்த வார்த்தைகளால்; விபரிக்க முடியாத உணர்வுகளைக் கண்டு கொள்வதற்குச் சந்தர்ப்பமில்லை. தெரிந்திருந்தால் அவரின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியின் பிரதிபலிப்பு அவரின் உணர்வை எவ்வளவு தூரம் பாதித்தித்துக் கொண்டிருக்கிறது என்று ஒரு டாக்டரான ராகவனால் உணர்ந்திருக்கமுடியும்.அவன் மேற்கொண்டு பேசுவதைத் தடுத்திருக்கலாம். கார் லண்டனை ஊடறுத்து அவர்களின் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

நேரம் அந்தியை நெருங்கிக் கொண்டிருந்தது.

அவனின் பேச்சால் தனது ஆருயிர்த் தந்தையின் வாழ்வும் சட்டென்று அந்தியைத் தொட்டதை அவனறியவில்லை.அவன் பேசிக் கொண்டே வந்தான். தகப்பனிடமிருந்து எந்த விதமான வார்த்தைகளும் வராதபடியால் அவர் அவன் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு வருகிறார் என்று நினைத்தான்.அவர் தாங்கமுடியாத வேதனையில் தவிப்பதும் அவரின் கண்கள் கண்ணீரால் நிரம்புவதையும் அவன் கண்டு கொள்ளவில்லை. அவன் ஒரு தரம் திரும்பிப் பார்த்தபோது அவர் மகன் தனது கண்ணீரைப் பார்க்கக் கூடாது என்பதற்காகக் கார் ஜன்னலுக்கப்பால் அவரின் பார்வையைத் திரும்பியிருந்தார்.

அவரின் வீடு வந்ததும் அவன் காரைப் பார்க் பண்ண இடமில்லாததால்,’அப்பா நீங்கள் இறங்கிக் கொள்ளுங்கள் நான் காரைப் பார்க் பண்ணி விட்டு வருகிறேன்’ என்றான். அவர் மவுனமாக இறங்கிக் கொள்ள அவன் காரைக் கொஞ்ச தூரம் சென்று பார்க்பண்ணிவிட்டுச் சில நிமிடங்களிலத்; திரும்பி; வந்தான்.

அப்போது அவன் கண்ட காட்சி?

அவனது அருமைத் தந்தை அவனின் வீட்டுப் படிகளில் வீழந்து கிடந்தார் அவர் தலையிலிருந்து குருதி வழிந்து பெருகிக்கொண்டிருந்தது.அவரின் வாழ்வின் இருண்டகாலம் குருதியாக வழிந்து ராகவனின் பாதத்தை நனைத்தது.

அதன்பின்னர் நடந்தவை அவர்களின் வாழ்க்கையின் பிரமாண்டமான மாற்றங்களைக் கொண்டுவந்தவை. அப்பா நீண்டகாலம் ‘கோமாவிலிருந்தார்’பின்னர் எத்தனையோ வைத்தியங்கள்.அவரை முற்று முழுதான பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாத முயற்சிகளாகத் தொடர்ந்தன.

லண்டனில் பார்க்ககூடிய எந்த பிரமாண்டமான வைத்தியம் அப்பாவிடம் ஒன்றும் பலிக்கவில்லை. ‘கோமா நிலையிலிருந்து மீண்டாலும் அவரின் நினைவின் சக்தியுடன் உடலின் சக்தியும் அவரிடமிருந்து பெருமளவில் விடைபெற்று விட்டது. ஏதோ நடைப் பிணமாகக் கட்டிலிலோடு சங்கமமாகிவிட்டார். சிலவேளை ஏதோ ஒரு பொறியின் உந்துதலால் அவர் முகத்தில் சில உணர்வுகள் பிரதிபலிக்கும். அவரால் எதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாது.இந்து என்ற அபரிமிதமான சக்தியுடன் இணைந்திருந்த அவரின் உயிர் அவளைத் தேடத் தொடங்கி விட்டதா?

இன்று அப்பா எந்த நேரமும் அவர்களை விட்டுப் பிரியலாம் என்ற நிலையில் உயிருடன் போராடுகிறார். இந்துமதி இல்லாத வாழ்க்கை தனக்குத் தேவையில்லை என்று அப்பா எப்பவோ முடிவு செய்திருந்தால் அவர் அம்மா சங்கரியைத் திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்குத் தந்தையாகியிருக்கமுடியாது. இந்து இலங்கை இராணுவத்தால் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்ற தகவல் வந்தபின் அவர் அடைந்த துன்பங்களை அவரின் தாய் தெரிவு செய்ததாக அவர் நினைத்த ஆனால் இந்துமதி தெரிவு செய்த சங்கரி என்ற ஒரு அன்பான மனைவியால் ஓரளவு மறந்திருக்கலாம்.

ஆனால் இந்துமதி அவரைத் திருமணம் செய்ய முடியாததால் இந்து இந்த உலகத்தை விட்டுப் போகப் போராளியாகப் போனாள்,முரளிக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கத் தந்தையாகும்வரை அவள் வாழ்க்கை முரளியின் நல்வாழ்வுக்காகவும் தமிழர்களின் விடுதலைக்காகவும்; தியாகம் செய்யப்பட்டது.முரளியற்ற வாழ்வுக்கப்பால் மற்றவர்களுக்காக இந்துமதி வாழ்ந்து மறைந்தாள் என்ற உண்மையான தகவலின்; அதிர்ச்சி அவரை நிலை குலையப் பண்ணியதா?

அவனால் திரும்பத் திரும்ப ஒரே கேள்விக்குப் பதில் தேட முடியவில்லை. அப்பா ‘கோமாவிலிருக்கும்போது’ அம்மா சங்கரி கிட்டத்தட்ட ஒரு துறவிமாதிரியாகி விட்டாள். இப்போது இரவு பகலாக அவருக்குப் பணிவிடை செய்கிறாள்.தங்களால்,வைத்திய விஞ்ஞானத்தால் மீண்டும் முரளியின் ஞாபகத்தை மீட்க முடியாது என்று சொல்லப் பட்டபோதும் அவருக்கு முழுமையான ஞாபக சக்தி என்றோ ஒருநாள் திரும்பும் என்ற நம்பிக்கையில் எண்ணிக்கையற்ற கடவுள்களைப் பிரார்த்திக்கொண்டு அவரின் அன்றாட தேவைகளைச் செய்கிறாள்.

அவர்களின் வாழ்க்கை அவரின் தேவைகளைச் சுற்றித் தொடர்ந்தது. ஆனாலும் செந்தாமரையின் குடும்பத்தினரின் வேண்டுகோளை சங்கரியால் நிராகரிக்க முடியவில்லை.அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி அவர்களுக்குத்; திருமணம் நடந்தது. செந்தாமரை கல்யாண கோலத்தில் வந்து அப்பாவை வணங்கியபோது அவரின் கண்களில் வழிந்த நீர் அவனைத் திண்டாடப் பண்ணியது. இந்துவின் சாயலிருக்கும் செந்தாமரையைக் கண்டதும் அவருக்கு ஏதோ பழைய ஞாபகங்கள் வந்திருக்குமா? யாரோடும் வாய்விட்டுச் சொல்லமுடியாத அவனுடைய வேதனை ராகவனை வாட்டிக் கொண்டிருந்தது.

குழந்தை பிறந்தால் அப்பாவின் நிலையில் மாற்றம் வரலாம் என்று அம்மா நம்புகிறாள்.அம்மாவின் பிரார்த்தனையின்படி ராகவன்-செந்தா தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தால் குழந்தையொலியில் தகப்பனின் மாற்றம் வருமா? செந்தாமரைக்கு இந்தமாதம் மாதவிடாய் வரவில்லை.

செந்தாமரையும் மிகவும் சந்தோசமாகத் தெரிகிறாள். சோதனை செய்துபார்த்து அவளுக்குக் கர்ப்பம் தரித்துவிட்டதா என்பதையறிய அவள் துடிப்பது அவனுக்குத் தெரியும்.

இரவு நெருங்குகிறது. அவனையறியாமல் அவன் மனம் அலைபாய்கிறது. தனியாகப் போயிருந்து அழவேண்டும்போலிருக்கிறது. பாட்டி இந்துவைப் பற்றிச் சொன்னவற்றை அப்பாவிடம் சொல்லாமலிருந்தால் அவர் இப்போது வேறுவிதமாகவிருப்பார் என்று நினைத்தபோது குற்ற உணர்வு ராகவனைத் துன்புறத்துகிறது.

அன்றிரவு அவன் சரியாகத்தூங்கவில்லை.சொல்ல முடியாத வேதனை மனத்தையழுத்துகிறது. நித்திரைவராமற் தவித்தபின் சாடையாக் கணணயர்ந்தால் ஏதோ வித்தியாசமான கனவுகள் அவனைக் குழப்புபகின்றன.பாட்டியைச் சந்தித்தபோது அவள் இந்துமதி;,முரளி; திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த ஆடைகளை ராகவன்,செந்தாமரை இருவரையும் அணியச் செய்து அழகுபார்த்தாள். அந்த நினைவு கனவாக வந்தது. இந்துமதி கல்யாண கோலத்தில் வாசற்படியால் நிற்பதாகக் கனவு வந்தபோது திடுக்கிட்டு எழுந்தான்.

அறையின் வாசலில் இந்துமதிக்குப் பதிலாக செந்தாமரை நின்றிருந்தாள். சாடையான காலை வெளிச்சத்தில் அவள் முகம் மிகவும் மலர்ச்சியாகவிருந்தது. ஜன்னலால் வந்த காலைச் சூரியனின் ஒளிக்கீற்று அவளின் முகத்தில் பாய்ந்த அதே தருணம் அவள் வந்து அவனைக் கட்டியணைத்துக்கொண்டு,’ ப்ரக்னென்சி டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன்.. நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள்’ என்று முணுமுணுத்த அதே கணம் அப்பாவின் அறையிலிருந்து அம்மாவின் அலறல் அவனின் இருதயத்தை ஊடறுத்தது.

அப்பா போய்விட்டரா? அவன் மனைவியை அணைத்தபடி எழுந்தான்.அவள் முகம் அவன் கனவில் கல்யாண கோலத்தில் வந்த இந்துவை ஞாபகமூட்டியது. இந்து வந்து அப்பாவை அழைத்துச் சென்றாளா? அல்லது இந்துவின் சாயல் கொண்ட செந்தாமரையின் வயிற்றில் அப்பா அடுத்த பிறவி எடுக்கிறரா?

அம்மா சங்கரிக்கு,இந்துவும் அப்பாவும்; பற்றிய கதை தெரிந்தால் அப்பாவின் புதிய அவதாரம் பற்றிய விளக்கங்களைச் சொல்வாளா? இந்துவின் சாயலிலிருக்கும் செந்தாமரையின் வயிற்றில் வந்து குதித்து அப்பா அந்த வீட்டை வளைய வரப்போவதாகச் சந்தோசப்படுவாளா? ராகவன் அவனின் அப்பாவின் அறைக்கு விரைந்தான். அம்மா,மூச்சற்ற அப்பாவில் முகத்தைக் கைகளால் அணைத்தபடி கதறிக் கொண்டிருந்தாள்.

ராகவன் எதிர்பார்த்த விடயம்தான்.அப்பா அவர்களை விட்டுப் போய்விட்டார். அப்பாவைக் கவனித்துக்கொள்ள அப்பாவின் ஆருயிரான இந்துமதியால் அப்பாவுக்கு மனைவியாகத தெரிவு செய்த அம்மா சங்கரி அப்பாவின்; பிரிவுத் துயர் தாங்காமல் ஒப்பாரி வைக்கிறாள்.

அப்பாவின் உயிரின் பாதியான இந்துமதியின் உருவத்திலிருக்கும் செந்தா தன் கணவன் ராகவனின் தோளில் முகம் புதைத்து செந்தாமரை விம்மிக் கொண்டிருந்தாள். கர்ப்பத்தைச் சுமக்கும் செந்தாவை அவன் அணைத்தபோது அப்பா அவர்களை விட்டுப்பிரியவில்லை என்ற உணர்வு ராகவனை ஆட்கொண்டது. அந்த உணர்வுக்குக் காரணத்தை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

அப்பாவின் ஆத்மாவோடு இணைந்திருந்து அப்பாவின் வாழ்க்கைகாகத் தன்னைத் தியாகம் செய்த இந்துவின் உருவச்சாயலைக் கொண்ட செந்தாவின் வயிற்றில் அப்பா குழந்தையாக உருவெடுக்கப் போகிறாரா? ராகவன் விஞ்ஞானம் படித்தவன் அவனுக்குத் தெரியாத விடயங்களான அமானுஷ்யத்தின் செயற்பாடுகளைத் தெரியாதவன். அப்பா தங்களுடனிருக்கிறார் என்பது அவனின் யதார்த்தமற்ற உணர்வாக இருந்தாலும் அந்த நினைவு அவனுக்குப் போதும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *