அன்புள்ள அப்பா

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 9,305 
 

‘நீ என்னப்பா பண்றே??’

எங்க அப்பாவோட அத்தை மகன் மும்பைலேர்ந்து இப்போத் தான் வந்து எறங்கினாரு .

சின்ன வயசுல எப்போவோ பாத்தது . பல வருஷம் கழிச்சு ரிடயர்மென்ட் வாங்கி இன்னிக்கித் தான் எங்க எல்லோரயும் பார்க்கணும்னு ஆசை வந்து கிளம்பி வந்திருக்காரு.

“நான் இன்ஜினியரிங் முடிச்சுட்டு இங்க டிவிஎஸ்ல வேலையா இருக்கேன்.”

“ஏன்பா மேல படிக்கலியா ? 21 வயசு தானே ஆகுது ?? எதுக்கு அதுக்குள்ள வேலை?? என் புள்ள அமெரிக்காவுல MS முடிச்சிட்டு இப்போ அங்கயே செட்டில்ஆகிட்டான் .”

” அண்ணே இப்போத் தானே வந்திருக்கீங்க..கொஞ்சம் காபி சாப்டிட்டு பேசலாம்.” அவசரமாக எங்கம்மா நான் பதில் சொல்றதுக்குள்ளப் புகுந்துடாங்க.

‘காப்பியா ? கபின் உடம்புக்கு கேடுன்னு இப்போ நேரிய வெப்சைட் ல வருதே..நீங்க எல்லாம் பாக்கரதில்லியா ? நான் எப்போவும் கிரீன் டீ தான் குடிப்பேன். எனக்கு கொஞ்சம் கிரீன் டி போட்டு குடும்மா..”

இப்போ எங்கம்மா முழிச்சாங்க.

எங்கப்பா என்ன கூப்டாரு..’டேய் பக்கத்து அண்ணாச்சி கடைல போய் பெரியப்பா சொன்னத வாங்கிகிட்டு வந்துடு.’ நீங்க போய் குளிச்சிட்டு வாங்க அண்ணே நீங்க கேட்டது ரெடியா இருக்கும் ‘ ன்னு சொன்ன உடனே..

‘ என்னது?? அண்ணாச்சிக் கடையா? இங்க சுப்பெர்மார்கட் எதுவும் கிடையாதா ?? இன்னும் பொட்டலம் போடற கடைலியா பொருள் வாங்கறீங்க??’
எல்லோரும் திரு திருன்னு முழிச்சோம்

‘ ஆமா உன் பெரிய மகன் கண்ணன் எங்க?? ‘ பெரியப்பா கேட்டாரு அம்மா சொன்னாங் க ‘அவன் பொண்டாடிக்கு இது பிரசவ டைம் அவன் அவங்க மாமியார் வீட்டுக்குப் போய் இருக்கான்.ரெண்டு நாள் பார்த்துட்டு பிரசவம் முடிஞ்சு தான் வருவான்.’

‘ இங்கே உங்க கூடவா இருக்கான் கண்ணன்?? நாங்க என் பெரிய பையான் கல்யாணம் ஆனா உடனே தனிக்குடித்தனம் வெச்சுட்டோம். இது என்ன அந்த காலம் மாதிரி பசங்க கூடவே ஓட்டிகிட்டு த் திரியறது.. அவங்கள ப்ரீயா விட வேண்டாமா??

அப்பா முகம் செத்துப் போச்சு .

இதுக்கு ஒரு முன் கதை சுருக்கம் இருக்கு..

உலகத்துலேயே ரொம்ப நல்லவர்னு யாரையாவது சொல்லணும்னா ஆறுமுகத்தை சொல்லலாம்.

ஆறுமுகம் எங்க அப்பா.

பாசம்ன பாசம் அவ்ளோ பாசம்.

தன் பசங்க,மனைவி,நண்பர்கள்,எல்லார் மேலயும்..

தனியா ஒத்த புள்ளையா வளர்ந்த மனுஷன். மனுஷ சகவாசத்துக்கு ஏங்கி கிடப்பாரு.அப்பாவுக்கு ஒரே அத்தை. அவங்க கல்யாணம் ஆகி மும்பைல செட்டில் ஆகிட்டாங்க.சின்ன வயசுல அப்பாவுக்கு அத்தைன்னா உயிரு.அத்தை பசங்க மட்டும் தான் கூட்டாளிங்க. சம்மர் லீவுக்கு வரும் போது எல்லாம் பீச் சினிமான்னு நல்லா சுத்துவாங்க. அவங்க பெரியவங்க ஆகி கல்யாணம் காட்சின்னு ஆனப்புறம் எந்த போக்குவரத்தும் இல்ல. அவங்க நல்ல படிச்சு பெரிய உத்தியோகத்துல உசந்த இடத்துல இருந்தாங்க.

எங்கம்மா கோமதி ஜாடிகேத்த மூடி. எப்போதும் புன்சிரிப்போட எல்லோர் கிட்டேயும் ப்ரியமா இருப்பாங்க.அவங்க கூட பொறந்தவங்க 5 பேரு. கூட்டு குடும்பத்துலேர்ந்து வந்ததால செட்டும் கட்டுமா இருப்பாங்க.

தங்கத்துக்கும் வைரத்துக்கும் பொறந்தது பித்தளை ஆகுமா??
நாங்க ரெண்டு புள்ளைங்களும் ரெண்டு ரத்தினங்கள்.

பெத்தவங்க கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டோம் அப்பா நாங்க எது கேட்டாலும் மாட்டேன்னு சொல்ல மாட்டாரு.

‘நமக்கு தான் சின்ன வயசுல கேட்டதை வாங்கி தர அளவுக்கு நம்ம பெத்தவங்களுக்கு வசதி இல்லை.நம்ம பசங்க எதுக்கும் ஏங்கக் கூடாது’ இப்படி சொல்லுவாரு.

சாதாரண கம்பனில கணக்கு வேலை பார்கறவங்களுக்கு என்ன சம்பாத்தியம் இருக்கும்??

அத வெச்சு எப்படி பசங்க ஆசைப்பட்டத எல்லாம் வாங்கித் தர முடியும்???
அங்க தான் அம்மா வராங்க. எங்கப்பா சம்பளம் வாங்கி அவங்க கைல கொடுத்த அப்புறம் அவருக்கு பஸ் காசு தவிர வேற செலவு கிடையாது.

சின்ன வயசுல எங்கண்ணன் பக்கத்து வீட்டு புள்ள வெச்சு இருக்கிற மாதிரி பொம்மை வேணும்னு கேட்டான்.

அம்மா சொன்னாங்க ‘ உனக்கு எதாவது புடிச்சு வேணும்னு கேளு. தேவையானா கண்டிப்பா வாங்கித் தரேன்.. பக்கத்து வீட்டுக்காரன் வச்சுருக்கான்னு சொன்னினா எதுவும் கிடையாது. அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் .ஆழும் பாழும் பண்ண கூடாது.”

இத கேட்டு வளர்ந்த நாங்க அளவுக்கு அதிகமா எதுவும் ஆசைப்பட்டதும் இல்லை கேட்டதும் இல்லை.

அவங்களே பார்த்துப் பார்த்து எங்களுக்கு அவசியமானத செஞ்சிருவாங்க.
குறை எதுவும் இல்லை.

இப்போ பல வருஷம் கழிச்சு அண்ணன் ஊர்லேந்து வந்திருக்காரு. வந்த பத்து நிமிஷத்துல அப்பா கொஞ்சம் குறுகின மாதிரி ஆயிட்டாரு .

குளிச்சிட்டு வந்த பெரியப்பா அம்மா போட்டு வெச்ச டீயை குடிச்சிட்டு..’ இங்க பக்கதுல எங்க கோவில் இருக்கு?? நான் தினமும் காலைல சாமி தரிசனம் பண்ணாம ஒண்ணும் சாப்பிடறது கிடையாது.’

இது அப்பாக்கு புடிச்ச மாட்டர். ‘ வாங்க அண்ணே பக்கத்து த்தெருல அம்மன் கோவில் இருக்கு போயிட்டு வந்து டிபின் சாப்பிடலாம்னு சொல்லி ஸ்கூட்டர் சாவி எடுத்தாரு.’ ஓ வண்டி வெச்சுருக்கியா?? என்ன வண்டி??”

அவரு கேட்டதும் அப்பாக்கு பெருமை தாங்கலை.. அவருக்கு அவரோட லம்பெர்டா ஸ்கூட்டர் மேல பயங்கரப்பற்று ‘எங்க அப்பா காலத்துல வாங்கின ஸ்கூட்டர் அண்ணே..அப்பா நான் வேலைக்கு சேர்ந்தப்ப எனக்கு ஆசையா வாங்கிக் குடுத்தாரு அது இன்னும் இருக்கு ஓடிகிட்டு..நான் ஓட்டறது கிடையாது. பையன் தான் ஆபீசுக்கு எடுத்துக்கிட்டு போறான்.”

‘எந்த காலத்துலடா இருக்கே நீ.. வேலைக்கு போற பையன். காருல போகலாம்ல . என் பையன் காலேஜ் கடைசி வருஷம் முடிக்கும் போது அவனுக்கு புது கார் வாங்கி குடுத்தேன்.’

இது எங்கப்பா முகத்தை இன்னும் சுருக்கியது. என்னை நிமிர்ந்து பார்க்காமலே. ‘ நீ பெரியப்பா கூட கோவிலுக்கு போட்டு வந்துரு செல்வம். நான் அம்மா கூட ஒத்தாசையா பலகாரம் பண்ண இருக்கேன்’ என்று சொல்லிட்டு பதிலுக்கு காத்திருக்காம உள்ளே போயிட்டாரு.

அடுத்த மூணு நாளும் பெரியப்பா புராணம்.அவரு எவ்ளோ காசு சம்பாரிச்சாரு . எவ்ளோ வீடு வாங்கினாரு,பெரியம்மா கிட்ட எத்தனை பவுன் நகை இருக்கு.பசங்களுக்கு எனென்ன பொருள் எந்தெந்த வயசுல வாங்கிக் குடுத்தாரு. எல்லாம் எங்களுக்கு மனப்பாடம் ஆயிருச்சு.

ஒவ்வொரு நாள் முடிவுலும் அப்பா ஒரு அடி குறைஞ்ச மாதிரி ஒரு பிரமை.

அன்னிக்கித் தான் பெரியப்பா ஊருக்கு கிளம்பணும் . ராத்திரி வண்டி. சண்டே என்கிறதால எனக்கும் லீவு .

‘ அம்மா கோமதி நான் வந்ததுலேர்ந்து நீ ஓடி ஓடி வேலை செஞ்சு கிட்டே இருக்கே..இன்னிக்கி நீ சமையல் செய்ய வேண்டாம். நான் ட்ரீட் தரேன் . எதாவது ஒரு நல்ல ஹொடெல்ல போய் சாப்பிடலாம்.

அம்மாவுக்கு குஷி.

சீக்கிரமே டிரஸ் பண்ணி ஒரு கால் டாக்ஸி கூபிட்டோம். அப்பா எதுக்குடா..நாம பஸ்ல போய்டலாம்னு சொன்னாரு.நான் தான் ‘கொஞ்சம் சும்மா இருங்கப்பா ..நான் பாத்துக்கேறேன். இன்னிக்கி ஒரு நாள் நீங்களும் அம்மாவும் என் பேச்சை கேளுங்க’ன்னு சொல்லிக் கூட்டிட்டு போனேன்.

செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு வந்து ஒரு பெரிய மாலுக்கு போனோம். பெரியப்பா ஏதோ அங்கே தினமும் சுத்றவர் மாதிரி சகஜமா இருந்தாரு. அப்பாவுக்கு எஸ்கலேடர் மேல கால் வைக்கக் கூட பயம்.

அங்கிருந்த கடைகள், சினிமா பூட் கோர்ட் ..எல்லாம் அப்பாவை பிரம்மிக்க வைச்சிச்சு .

இன்னும் ஒரு அடி குறுகி போனார். என்னால எங்க அப்பாவை இப்படி பாக்க முடியலை. எப்போவும் எங்களுக்கு அன்பை தவிர வேற எதுவும் அவர் காமிச்சது கிடையாது. அவருக்கு கோபம் வருமான்னு கூட எனக்கு தெரியாது.

பெரியப்பாவும் அம்மாவும் எதோ ஒரு கடைக்குள் போனாங்க .நானும் அப்பாவும் மட்டும் தனியா . எதோ யோசனையா நின்னுட்டிருந்த அப்பா கிட்ட ” ஏன் பா என்ன அப்படி யோசனை. இந்த இடம் உங்களுக்குப் புடிக்கலியா?’ னு கேட்டேன்..

‘செல்வம். சத்தியமா சொல்லு.. நான் உங்களுக்கு ஒரு நல்ல தகப்பனா இருந்திருக்கேனா ? என்னை சுத்தி இருக்கிற உலகத்தை நான் பார்க்கவே இல்லை போல இருக்கு.உங்களுக்கு எந்த குறையும் வைக்கக் கூடா துன்னு ஓடி ஓடி உழைக்க தெரிஞ்ச எனக்கு உங்களுக்கு நிஜமாவே வேண்டியது என்னன்னு யோசிக்க தெரியலையோனு இப்போ சந்தேஹமா இருக்கு.’

‘ இந்த உலகத்துல உங்கள விட நல்ல அப்பா, நல்ல மனுஷன் யாருக்கும் கிடைக்கவே மாட்டாங்க’ அப்பாவை இறுக்கிக் கட்டிக்கிட்டு சொன்னேன். பொது இடமானதால அவரு கஷ்டப்பட்டு கண்ணீரை அடக்கிகிட்டாரு

பெரியப்பா வை அப்படியே ஏர்போர்ட்ல இறக்கி விட்டோம்.
போகும் போது பெரியப்பா சொன்னார்.

‘ பசங்க எல்லாம் செட்டில் ஆயாச்சு. இனிமே நாம் உங்க அண்ணியும் மட்டும் தான். இங்கேயே ஒரு ரிடயர்மென்ட் ஹோம் இருந்தா பார்த்து வை.பசங்களுக்கு அவங்க அவங்க வேலை . எங்களுக்குத் தனிமை ரொம்ப கஷ்டம்.’

அப்பா சொன்னாரு..’ நானும் எவ்ளவோ சொன்னேன்பா என் பசங்க கிட்ட உங்களுக்கு உங்க வேலை நேரிய இருக்கு நீங்க உங்க வாழ்கைய பார்த்துகோங்க . நாங்க கிராமத்துல இருக்கோம்னு.. இந்த பசங்க எங்கள தனியா விட மாட்டோம்னு ஒரே அடம். என்ன பண்றது.’

இப்போது ஐந்தரை அடி உயர அப்பா ஆறடி உயரம் நின்றார்.

– டிசம்பர் 2013.

Print Friendly, PDF & Email

1 thought on “அன்புள்ள அப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *