கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 10,216 
 

“ஏனுங்கோ. கருவேப்பிலை வாங்கி வாங்களேன்” சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் சீதை.

“என்னது ? நான் இன்னா செய்துட்டிருக்கேன், எத்தனை தடவை சொல்றது, தியானம் பண்ணும்போது இடைஞ்சல் செய்யாதே-ன்னு கேட்கவே மாட்டியா ! நீயே போய் வாங்கிக்கோ” என்று சொல்லிவிட்டு கண்களை மூடி தனியறையில் தியானத்தைத் தொடர்ந்தான் இராமன்.

“இவக, எதுக்குத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டாங்களோ?, கட்டுன பொஞ்சாதிக்கு ஒரு கருவேப்பிலைக் கூடவா வாங்கி தர முடியாது, நான் என்ன ? நகைநட்டா வாங்கி தாங்க-ன்னு கேட்டேன்” முனகியபடியே கடைக்கு போக தயாரானாள்.

கடைக்கு போனால், திரும்பிவர கால்மணி நேரமாவாது ஆகும், அதுவரைக்கும் கேஸ் ஸ்டவ் எரியவிட்டா, கேஸ் விரயமாகும், நாற்பது நாள் வர்றது, முப்பது நாள்லேயே தீர்ந்திடும், அதுக்கும் அவர்கிட்ட மல்லுக்கட்டணும்-ன்னு கேஸ் ஸ்டவ்வை ஆப் செய்து விட்டு, கருவேப்பிலை வாங்க கடைக்கு போனாள்.

கடைக்கு போன சீதை, எதிரில்பட்ட மாலா, கீதா, இரமா, தோழிகளிடம் பேசிவிட்டு, கருவேப்பிலை வாங்கிவர, அரைமணி நேரமாகி விட்டிருந்த்து.

மறுபடியும் கேஸ் ஸ்டவ் பற்றவைத்து “கருவேப்பிலை” மணக்க சமையலில் மும்முரமானாள்.

கண்களை மூடி தியானத்திலிலிருந்த இராமனின் மனதில் “கருவேப்பிலை வாங்க கடைக்கு போன சீதை, ஒழுங்காக ரோடை கிராஸ் செய்வாளா ? வண்டிகள் வேகவேகமாய் வருகிறதே, இரண்டு பக்கமும் பார்த்து ரோட்டை கிராஸ் செய்ய வேண்டுமே, என்ன செய்தாளோ, பத்திரமாக திரும்புவாளோ?” இந்த எண்ணங்களிலேயே தியானத்தில் மூழ்காமல், அரைகுறையாக முடித்து கொண்டு கண்களைத் திறந்தவனின் எதிரிலிருந்த சுவர்கடிகாரம் மணி எட்டைக் காட்டியது.

அரக்க பரக்க எழுந்து, “அடியே சீதா, சமையல் ஆச்சா, ஆபிஸ்க்கு லேட்டாச்சு, சீக்கிரமா கிளம்பணும்…. ஆர்ப்பாட்டத்த்தோடு, காலை டிபனை வாயில் திணித்து, அரைகுறையால் மென்று விழுந்கி, மதிய சாப்பாட்டை கட்ட சொல்லி ஆபிசுக்கு கிளம்பினான்.

போகிற வழியில் “சே, இன்னைக்கு தியானத்துல ஒக்காரும்போதே, “கருவேப்பிலை” வாங்கியான்னு முட்டுக்கட்டைப் போட்டா சீதா, ஆதனால, இன்னைக்கு திருப்தியே இல்லே” என்று மனதுக்குள் பேசிக் கொண்டான்.

அலுவலகம் வேலை முடித்து, இரவில் வீடு திரும்ப நேரமாகி விடுகிறது. அசதியில் தூங்கி விடுவதால், அதிகாலையில் எழுந்து தியானம் செய்ய முடிவதில்லை. ஆறுமணிக்கு எழுந்து காலைக்கடன்கள் முடித்து, குளித்து, தியானத்தில் ஒக்காரும்போதுதான் “கடைக்கு போய் பால் வாங்கியா ! கருவேப்பிலை வேணும், பரண்ல இருக்கிற பாத்திரத்தை எடுத்துக் கொடு-ன்னு குடைசல் கொடுக்கறா சீதா, இவ பன்ற அலம்பல் தாங்க முடியலே, சொல்லாம, கொள்ளாம காட்டுப்பக்கம் ஓடிடலாமோ” இப்படிகூட நினைத்தான்.

அவனே, உண்மையிலேயே, தியானத்தைப் பத்தி சீதாவுக்கு தெரியலையா? இல்லே, நாம மட்டும்….மாங்கு…மாங்குன்னு சமையல் கட்டுல வேலை செய்யறோம், இவர் மட்டும் தியானம்ஙகற பேர்ல சொகுசா ஒக்காந்துண்டு, ஏமாத்தறோம்-ன்னு நினைக்கறாளோ” என்றும் நினைத்து கொண்டான்.

“நாம பன்ற தியானத்துக்கு, சீதாவால இடையூறு வரக்கூடாது, யார்கிட்ட யோசனைக் கேட்கலாம்-ன்னு நினைச்சிகிட்டிருக்கும் போதே… அடியே திவ்ய மஉறாலில் ஒரு சாமியார் வந்திருக்கிறாராம், இன்னா பிரச்சினைன்னாலும், உடனே தீர்த்து வைச்சு, ஆசிர்வதித்து அனுப்புறாராம், நான் பார்க்க போறேன், நீயும் துணைக்கு வாயேன்” தோழிகளின் பேச்சு இராமனின் காதில் விழுந்தன.

“அட, இதுகூட நல்ல யோசனைதான், சீதாவைக் கூட்டிபோய், சாமியார்கிட்ட அறிவுரை சொல்ல சொல்லி, தியானத்துக்கு இடையூறு இல்லாம இருக்க வழி பண்ணனும்ன்னு” தீர்மானித்தான்.

மறுநாள் ஆபிசுக்கு லீவு எழுதிக் கொடுத்தான்

லீவுக்கான காரணம்”மனைவியை மருத்துவமனைக்கு கூட்டி செல்வதற்கு” என கோரிக்கை விடுத்திருந்தான் இராமன்.

திவ்ய மஉறாலில், காலையிலேயே கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தன. கூட்டம் நீண்டு கொண்டேயிருந்த்து. வரிசையில், இராமனும், சீதாவும் நின்றுநெளிந்து…நெளிந்து சென்று .வெகுநேரத்திற்கு பிறகு சாமியாருக்கு அருகில் சென்று விட்டார்கள்.

சாமியாரை வணங்கி“சாமி, நான் தினமும் காலையில் தியானம் செய்கிறேன். அப்பொழுதுதான் இவள்“ கருவேப்பிலை வாங்கியா, பால் வாங்கி வந்தியா, பரண்மேல இருக்கிற பாத்திரத்தை எடுத்து கொடு, பாத்திரத்தை பரண்மேல எடுத்து வை-ன்னு அற்ப விஷயங்களுக்காக, என்னுடைய தியானத்தைக் கெடுக்கிறாள். நீங்கதான் அறிவுரை சொல்லி ஆசிர்வதிக்கணும்-ன்னு“ கைக்கட்டி வணங்கி நின்றான்.

“நான் ஒன் மனைவிக்கு அறிவுரை சொல்லும்போது, நீ வெளியே இருப்பா” என்று இராமனை அனுப்பி விட்டார்.

சாமியார், சீதாவைப் பார்த்தார்.

சீதாவோ, மெல்லிய சிரிப்பை சிந்தினாள். மனதுக்குள் “இவரே, குடும்ப பொறுப்பை சுமப்பதற்கு பயந்துதானே கல்யாணமே வேணாணும்ன்னு, சாமியாரானார், இவரென்ன? நமக்கு அறிவுரை சொல்வது, என்று நினைத்தாள்.

சீதாவின் எண்ண ஓட்டத்தைப் படித்து விட்டார் சாமியார்.

“அம்மையே, நீ என்ன நெனைக்கிறேன் தெரிஞ்சுக்கிட்டேன், அதெல்லாம் போட்டு குழப்பிக்காதே, ஒன் புருஷன் தியானம் பண்ணும் போது, இடைஞ்சல் செய்யாதே,, ஏன்னா, அவர் பன்ற தியானத்தின் பலன்களில் பாதியளவு தானாகவே ஒனக்கு சேர்ந்திடும், இதுதான் பெண்களுக்கு உரிய வரப்பிரசாதம்.

பெண்கள் செய்யும் அர்ப்பணிப்பான வேலைகள், தியானத்திற்கு ஈடானதுதான். தனியாய் தவம், தியானம் செய்ய தேவையில்லை, நீடுழி வாழ்க என்று ஆசிர்வதித்து“ஒன் புருஷனை வரச்சொல்” என்றார்.

சாமியாரின் அருகில் பவ்யமாய் கைக்கட்டி நின்றிருந்தான்.

“மகனே, குடும்ப வாழ்க்கைய ஏத்துகிட்ட பிறகு எல்லாத்துலேயும் சரிசம்மாக நடந்துக்க வேண்டும், அதைவிட்டுட்டு, நான் தியானத்துல இருக்கேன், கருவேப்பிலை வாங்கியான்னு சொல்றா, இடைஞ்சல் பன்றா“ன்னு குறைப்பட்டுக்க கூடாது. சின்ன சின்ன வேலைகளை செய்து கொடுத்து. அதில் அவங்களுக்கு ஏற்படுத்துற சந்தோஷத்தைப் பார்க்குறதுதான் உண்மையான தியானம். நீ தியானத்துல அனுபவிக்கிற அனுபூதி தன்மையைவிட ஆயிரம் மடங்கு மேலானதாகும், கடவுள் ஆசி கிடைக்கும்” என்று வழியனுப்பினார்.

இராமனின் முகம் தெளிவாய் மாறியது. வெளியே வந்தான். சீதாவின் கரத்தைப் பற்றி கொண்டு நடந்தான். “ சீதா, கருவேப்பிலை வாங்கி வந்து தராத தற்கு மன்னித்து கொள்” என்றான் இராமன்.

அதைக் கேட்டவுடன், அவளின் கரங்கள் இராமனின் தோளைப் பற்றியிருந்ததில் தெளிவானது “சீதை, இராமனை மன்னித்து விட்டாளென்றே”.

– டிசம்பர் 1-7 2017

Print Friendly, PDF & Email

1 thought on “அனுபூதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *