அனுபவம் புதுமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2022
பார்வையிட்டோர்: 4,375 
 

(1965 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தி சாயும் நேரம், எங்கும் ஜனத்திரள். அங்காடி வியாபாரிகளின் தொல்லை; பிச்சைக்காரர்களின் சோம்பல், அழுகை; கூலிகளின் வீரமொழி; இவைகள் அங்கு காதைப் பிளந்தன. அமோக ஆரவார நெருக்கடியில், பாதையில் கவனமாக நடக்க வேண்டும் என்ற பாதசாரிகளின் விரைவு தூசிப் படலத்தைப் பறக்கச் செய்கிறது. கார், பஸ் வண்டிகளின் ஓசை இதுதான் கொழும்பு’ எனக் காட்டிக் கொண்டிருந்தது. இந்த வேளையில்….

“ராமு…என்னப்பா அமைதியாக வருகிறாய், சம்பளம் கிடைத்தவுடன் மௌன விரதமோ?”

“ம்…இல்லை கேசன், நாளைக்கு ஊருக்கு போய் வர வேண்டும்” என நினைத்தேன்.

“இப்போது ஊர் நினைவு ஒன்று வந்தால்….போடா…உனக்கு எல்லாம்…சரி…சரி”

“மறுத்துப் பேசாதே! இரண்டு நாள் லீவு…நீயும் வரவேண்டும்.”

“என்னடா… ஒரே அடியாக… என்னையும்….”

“ஆமாம். கட்டாயம் நீ வரவேண்டும். நாளை போயா தினம். காலை எட்டுமணிக்கு வா…. கட்டாயம்… இல்லை, நான் உன் வீட்டுக்கு வருவேன்.”

“ம்…. சரி… வருகிறேன். ஆட்சேபனை இல்லை . ஆனால் இன்று ஒரு ஷோ பார்க்க வேண்டும் என நினைத்தேன். நீயும் வருகிறாயா? “பூமாலை”… திறமையான கதையமைப்புக் கொண்ட படமப்பா.

“வேண்டாமடா….. நான் இருக்கும் வீட்டார் யாவரும் கதிர்காம உற்சவத்துக்கு போய் இருக்கிறார்கள். நான்தான் இப்பொழுது வீட்டுக்குக் காவல், நாளை அவர்கள் வருவார்கள். அடுத்த வாரம் படத்தைப் பார்ப்போம்…. ம்…. இடம் வந்து விட்டது. வரட்டுமா….? நாளை காலை மறந்து விடாதே….”

“சரி”.

அமைதியான இரவு நேரம். மழை சிறிது பெய்கிறது. டங்… டங்…. டங்… எட்டு மணி அறிவிக்கும் ஓசை எங்கிருந்தோ காற்றிலே பறந்து வந்தது.

அதே நேரம்….. “அம்மா …” – ஒரு பெண் குரல்.

புத்தகமொன்றில் தன்னை மறந்திருந்த ராமு…. ஜன்னலைத் திறந்து சத்தம் வந்த திசையைப் பார்க்கிறான். மங்கிய மின் ஒளியில் மங்கை ஒருத்தியைக் காண்கிறான். அவனைக் கண்ட அவள் “ஐயா…” என்கிறாள், இதைச் சொல்லும் போது அவள் வேல் போன்ற விழிக் கூட்டில் முத்தென் கண்ணீர் அரும்பிற்று. அரும்பிய கண்ணீர் ஆறாக ஓட, “ஐயா…. என்னைக் காப்பாற்றுங்கள் ஐயா…” என்கிறாள். அவனுக்குப் பகீர் என்றது. ஊரடங்கிக் கொண்டு வரும் நேரம் தன்னந்தனியே ஒரு பெண்… அதுவும் அடாத மழையில்… தனிமையாக இருக்கும் ஓர் ஆணிடம் வேண்டுகிறாள். பிரமிப்பு அடைந்த ராமு சிறிது தைரியத்தைக் கூட்டி, “ஊரடங்கிக் கொண்டு வரும் நேரமம்மா….. பொலிஸ்காரர்கள் உலா வர ஆரம்பித்து விட்டார்கள். உள்ளே வாருங்கள்!” என்றான் மனம் குழம்பி நின்ற படியே.

அமைதியாக வந்து அவன் காட்டிய ஆசனத்தில் அமர்கிறாள். பௌடர் அப்பி, குளிர் லெக்டோ பூசி, ரோல்கோல்ட் சிலையெழில் மேனியாக அவள் இருந்தாள். பாதாதி கேசம் வரை பார்க்கிறான் அவன். பீறிட்டுக் கிளம்பும் அழுகுரலைச் சேலைத் தலைப்பால் வாய்பொத்தி அடக்க முயல்கிறாள் அவள். கண்களில் தாரைதாரையாக நீர் வழிந்து கொண்டே இருந்தது. அவளைக் கண்டு அவன் இதயம் கண்ணீர் வடிக்கிறது. தொண்டை அடைக்க, “என்னம்மா…. தன்னதந்தனியாக இரவில்… அதுவும் அடாத மழையில் இப்படிக் கண்ணீர் ததும்ப நிற்கிறீர்களே?” என்றான்.

சிறிது மௌனத்துக்கிடையே…. “இல்லை … ஐயா… இல்லை … நீங்கள் நல்லவராக இருக்கின்றீர்கள். நான் உங்கள் சகோதரி போல, எனக்குக் கை கொடுத்து உதவும் தெய்வம் நீங்கள்’ என்று அவன் காலைப் பிடிக்கிறாள் அவள்.

தர்ம சங்கடமாகி விட்டது அவனுக்கு. “என்னம்மா சொல்கிறீர்கள்?”

“ஆம்… ஐயா. நான் இந்த ஊரைச் சேர்ந்தவளல்ல. எனது ஊர் பண்டாரவளை. நண்பர்களுடன் கதிர்காம உற்சவத்துக்குப் போய், வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். இரவுச் சாப்பாட்டை இங்கே ஒரு மைதானத்தில் இறங்கி சாப்பிட்டோம். சாப்பிட்ட பின் எல்லோரும் வந்து விட்டார்கள் என நினைத்து என்னை மட்டும் விட்டு விட்டுச் சென்று விட்டனர்.” எனக் கூறி ஒப்பாரி வைத்தாள்.

லர் என்ன சொல்வதென்று தோன்றவில்லை….அச்சத்துடன் தொடர்ந்தும் அவள்..ஒப்பாரிக்கிடையே, “நான் அப்படி அவர்கள் திரும்பி வருவார்களா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாரும் வரவில்லை. நீண்ட நேரம் அங்கே நின்றுவிட்டேன். பலர் என்னைப் பார்த்து “விசில்” அடிப்பதும், நெருங்கி வந்து மேலே மோதிச் செல்லுவதுமாக இருந்தனர். நான் பயந்து விட்டேன். கடவுளே…. பயந்துகொண்டே ஓட்டமும் நடையுமாக வந்தேன். வந்த இடத்தில் மழை பிடித்துக் கொண்டது.”ாப எனக் கூறி சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தாள்.

அவனுக்கு உச்சி முதல் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. வெளியே அனுப்புவோமா என்றால் இளகிய மனம் இடங்கொடுக்கவில்லை. “அம்மா …. தவறாக நினைக்க வேண்டாம். இந்த வீட்டில் யாரும் இல்லை… இந்த அறையில்தான் நான் இருக்கிறேன். காலையில் நான் உங்கள் ஊருக்கு வண்டி ஏற்றி விடுகிறேன். பயப்படாமல் இக்கட்டிலில் படுத்துத் தூங்குங்கள்.”

அவனை ஆச்சரியத்துடன் பார்க்கிறாள் அவள்…என்ன கூறுவதென்று தோன்றவில்லை அவளுக்கு. வெளியே படுப்பதென்றால் ‘அடாத’ மழை.

“நான்.. வந்து…தவறாக நினைக்க வேண்டாம். கீழே பாயை விரித்துப் படுக்கிறேன். நீங்கள் பயப்படாமல் தூங்குங்கள். ஏதாவது பேச வேண்டுமென்றால் காலையில் பேசுவோம்” என்றான்.

அவள் ஒன்றும் பேசவில்லை. கட்டிலருகே வந்து தலையணையில் முகத்தை வைத்து அழுகிறாள். நிலைமை தர்மசங்கடமாய் இருக்கிறது. அவன் வேறு பாய் ஒன்றை விரித்துக் கீழே படுத்து விடுகிறான். மனம் திக்…. திக் என அடிக்கிறது, அவளைப் பார்க்கிறான். அவள்…எரிந்து கொண்டிருக்கும் விளக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். மனம் படபடக்க “குப்பி விளக்கை அணைக்கட்டுமா?” என்கிறான் அவன். தலையசைக்கிறாள்.

விளக்கு அணைகிறது. அங்கே இருள். வெளியே “சோ” என்ற மழை. அவன் முகத்துக்கு நேரே சூடான காற்று. கையொன்று அவனைத் தழுவுகின்றது. இளங்காளையல்லவா அவன்! உணர்ச்சி வசப்படுகிறான்.

வெளியே ‘சோ’ எனப் பொழியும் மழையை பூமாதேவி தழுவிக் கொள்கிறாள். உள்ளே…ஈருடல் ஓருடல் ஆகின்றது.

டாங்.. டாங்.. டாங்..

ஏழு மணி. படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்தான் ராமு. அவன் செவிப்பறையைக் கிழித்துக்கொண்டு அவ்வொலி அதிர்ந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்க்கிறான். பக்கத்திலே அவள் இல்லை. அறையை நோட்டம் விடுகிறான். தூக்கி வாரிப் போடுகிறது அவனுக்கு. அங்கே… தன் குட் கேஸ், சம்பளப் பணம், ஆசையாகத் தங்கைக்கு என வாங்கிய வைர நெக்லஸ், மேசையில் இருந்த தன் அழகிய ரிஸ்லட், பார்க்கர் பேனா…. ஒன்றுமே அங்கு இல்லை; அவன் நெஞ்சத்தில் நினைவலைகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. துடித்தான்…துவண்டான், கோ… எனக் கதறி அழவேண்டும் போலிருந்தது. தலையைக் கரங்களால் மோதிக் கொண்டான். அதே நேரம் வாசலில்….

“ராமு….” எனும் குரல்.

பதறுகிறது உடல். அவமான உணர்ச்சி கண்ணீரைச் சொரிகின்றது. சேகரன் வருகிறான். ராமு நிலை கண்டு திடுக்கிட்ட அவன், “என்னப்பா, என்ன?” என்கிறான். இரத்தமேறி விடுகின்றன அவன் கண்கள். மான உணர்ச்சி வாய்க்குப் பூட்டுப் போடுகிறது. சிந்தனைச் சாளரம் மூடி மூடித் திறந்து கொண்டிருக்கிறது. சேக்கா….எனக் கட்டி அணைக்கிறான். பதறுகிறான் கேசகன்.

“அன்று… நயவஞ்சகத்தையும் நம்பிக்கைத் துரோகத்தையும் கை முதலாகக் கொண்டு செயல்படும் ஒரு கூட்டம் உண்டு என்றாயே; இன்று அக்கூட்டத்துக்குப் பலியாகிவிட்டேனப்பா.”

“என்ன உளறுகிறாய்….”

நேற்று இரவு நடந்தவைகளைக் கூறுகிறான் அவன். கேசகன் உடல் பதறுகிறது. “இதே தொழிலாகக் கொண்ட பல கூட்டங்கள் நகரத்தில் பல பகுதிகளிலும் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தெரியாத ரகசியம் யாருக்கும் தெரியாது. உன் வீட்டில் யாரும் இல்லை. சந்தர்ப்பத்தை உணர்ந்து செயல்பட்டார்கள். வெற்றியும் பெற்றார்கள்…நீ முதலில் கொழும்புக்கு வந்த போது எச்சரித்தேன். அது நடந்து விட்டது. நீ மட்டுமல்ல. பெரிய பெரிய இலட்சிய வாதிகள், இந்தச் சாக்கடையில் வீழ்ந்து தத்தளித்துள்ளனர். உன்னைப் போன்ற கௌரவமான வாலிபர்கள் பஸ்களிலும், ரயில்களிலும் இவர்கள் வலையில் சிக்கி அடி, உதை படுகின்றனர். இக்கூட்டங்களுக்குப் பெரும்பான்மை டாக்ஸி டிரைவர்கள் தான் கூட்டாளிகள். என்ன செய்ய…பெண்மை, கற்பு நூல்களிலே தான் காணக்கிடைக்கிறது.

“ஐயோ…கேசகா…உன் அனுபவ வார்த்தை அன்று கேட்டேன். இன்றும் கேட்கிறேன். இது எனக்குப் பேரிடி. என் உடை, ஆசையாய்த் தங்கைக்கு வாங்கி வைத்த வைர நெக்லஸ், கடிகாரம்….. ஐயோ…. எல்லாம் அந்தக் கள்ளி எடுத்து விட்டாளே. இதைப் பொலிஸில் சொல்ல வேண்டும். வா போகலாம்.”

சிரிக்கிறான் கேசகன். “என்னப்பா…அவமானத்தைப் பறை சாற்றுகிறாயா? இப்படியான கேஸ் எவ்வளவோ போலிஸுக்கு வந்து விட்டது. அவர்களும் எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். ம்… போனது போகட்டும். நீ இனிமேலும் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள். ஏனெனில் ஒழுக்கத்தை உயிராக மதிக்கும் உன் பெற்றோருக்கும், ஊராருக்கும். இது தெரிந்தால் என்ன நடக்கும் ராமு..?

கேசகன் சிறிது நிறுத்திவிட்டுக் கூறுகிறான்:

“ஒன்று சொல்ல விரும்புகிறேன். எக்காலமும் மனதில் வைத்துக்கொள். கற்பு பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களுக்கும் உண்டு. இதை உணராது செயல்பட்டாயே…அதற்கு இது நல்ல பலன். படித்துவிட்டால் மட்டும் போதாது. அனுபவமும் வேண்டும்.”

– ராதா – 1965, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *