கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 5,862 
 

‘புத்’ என்ற நரகத்தில் இன்றைய மனிதனுக்கு நம்பிக்கை இல்லை. பிள்ளை இல்லாதவர்களுக்கென்றே ஒரு தனி நரகம் என்றால், நரகத்திற்கு அதிபதி எவனோ , அவன் நரகத்தின் பெரும் பகுதியையே இந்தப் ‘பாபி’களுக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கி வைக்க வேண்டுமே! இந்த வகையைச் சேர்ந்தவர்களின் தொகை எண்ணில் அடங்காது. ஆயிரமாயிரமாக நோன்புகள் நோற்கிறார்கள்; தானதரு மங்கள் செய்கிறார்கள்; வைத்தியர்களிடம் ஆலோசனை கேட்டு மருந்து உண்கிறார்கள்; கத்தி வெட்டுச் சிகிச்சையும் செய்து கொள்கிறார்கள். செயற்கை வழிகளில் பாழ்பட்ட உதரங்களில் கருவேற்ற முயலு கிறார்கள்…. எல்லாம் தம் சந்ததி அழிந்து படாமல் இருப்பதற்காக!

என்ன மமதை! சந்ததி அழிந்து போனால், ஏதோ பெரும் தீங்கு விழைந்து விடப் போகிறது என்று நினைப்பதற்கு ஒரு தனி மனிதன் இந்தப் பிரபஞ்சத்தின் அகன்ற படைப்புத் தொடரில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவனா?

வழமைபோல் என் அலுவலகத்தில் கடுதாசி களையும் ‘பைல்’களையும் புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். பிரதம லிகிதர் அப்பொழுது தான் அன்று வந்த கடிதங்களைத் தன் குறிப்புகளுடன் என் பார்வைக்கு அனுப்பி விட்டிருந்தார்.

என் சிறிய அறைக்கு வெளியே குழந்தை அணில்கள் குரலும் குதிப்பும் பழகிக்கொண்டிருந்தன. கடிதங்களில் கண் ஓடவில்லை . குழந்தை அணில்கள் என்ற எண்ணம் கோழிக்குஞ்சுகள், நாய்க் குட்டிகள், ஆட்டுக்குட்டிகள், பூனைக்குட்டிகள் என்று ஓடி மனிதக் குட்டிகளிற் போய் நிலைத்தது….

அறைவாசலில் இருந்து விம்மல் விக்கல்களுடனும் கண்ணீரு டனும் கலந்த ஒரு பெண் குரல், “ஐயா, என் குழந்தை ….” என்றது.

சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்தேன். என் அலுவல கத்தில் மனிதர்கள் வந்து தமது கஷ்டங்களைச் சொல்லி அழுவதும் மூக்குச் சிந்துவதும் அவ்வளவு அரிதான சம்பவங்கள் அல்ல. ஆனால் இதில் ஏதோ சாதாரணம் அல்லாதது இருந்தது. அது முகத்தில் தெரிந்தது. குரலில் தொனித்தது. என் ஊற்றுப் பேனாவை – அது உண்மையில் மை ஊற்றுகிற பேனாதான் – மேசைமேல் வைத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். உடனே என் நாற்காலியின் சாய்வுப் பகுதியில் பிரம்புப் பின்னலின் தொளைகளில் பதுங்கிக் காத்திருந்த மூட்டைப் பூச்சிகளுக்கு என் வீரத் தமிழ் இரத்தம் மணத்துவிட்டது. இன்னம் ஒரு பத்து நிமிஷங்களுக்காவது அவை களுக்கு நல்ல வேட்டை!

“ஏன், என்ன? இதோ இப்படி இந்த நாற்காலியில் அமருங்கள். ஏதோ உங்கள் குழந்தை என்றீர்கள்…”

அந்தப் பெண் தன் கையில் இருந்த பையிலிருந்து ஒரு சாணளவு கைக்குட்டையை எடுத்துத் தன் கண்களை லேசாக ஒற்றிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தாள். கண்ணீர் பட்ட இடங்களில் அவள் முகத்தில் பூசியிருந்த வாசனைமா அழிந்திருந்தது. ‘நீலிக் கண்ணீ ர்’ என்று முதலில் நினைத்த நான், பவுடர் அணியும் பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று அறிந்ததும் அதனால் உண்டான என் ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டேன்.

அவள் அழகான, ஆனால் மலிந்த ஒரு ‘நைலான்’ சேலையும் அதற்கு நிறப் பொருத்தமுடைய ஒரு ‘சோளி’ ரவிக்கையையும் அணிந்திருந்தாள். ஒரு மணிக்கட்டில் ஒரு அடக்கவிலைக் கைக் கடியாரம், மற்ற மணிக்கட்டில் ஒரு பவுண் அல்லது இமிட்டேஷன் பவுண் காப்பு. காதுகளில் பிளாஸ்டிக் குண்டலங்கள். கழுத்திலும் மூக்கிலும் ஒன்றும் இல்லை. எனக்கு ஆச்சரியம் குறையவில்லை. அவள் ஒன்றையும் கவனியாதவள் போலத் தன் கைப்பையை எடுத்து அதில் அடங்கியிருந்த ரகஸ்ய சாதனங்களைக் கொண்டு தன்னை அழகு செய்ய எத்தனித்துக் கொண்டிருந்தாள் – நான் ஒரு வெறும் மனிதன் அவள் முன்னால் இருக்கிறேன் என்பதையும் கவனியாமல்!

எனக்குச் சிரிப்பு வந்தது. பெண்களின் சுயகௌரவம்! கௌரவம், என் ஆண்டவனே! அழுத பெண் அலங்காரம் செய் கின்றாள்; கண்ணீர் காய்வதன் முன்!

“இது அலங்காரம் செய்யும் இடம் அல்ல; இது ஒரு கந்தோர். இது ஏழைகள் ஆதரவும் உதவியும், சிறிதளவு அன்பும் தேடிவரும் ஒரு ஆலயம் போன்றது. கூறவேண்டிய முறைப்பாடு இருந்தால் உடனே கூறவேண்டும். ஆவன செய்வேன்.”

“என் முதற் குழந்தையை உங்கள் அதிகார எல்லைக்குள் இருக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட பொம்பிளை வளர்த்து வருகிறாள். அக்குழந்தையை என் கையில் எடுத்துத் தரவேண்டும் ஐயா!”

அவள் கருதியது, பலாத்காரமாகப் பறித்துத் தரவேண்டும் என்று!

“உங்கள் முறையீடு எதுவென்று விபரமாகச் சொல்வீர்களா?”

“என் குழந்தை என்றோ ஒருநாள், கிட்டத்தட்ட ஏழு வருடங் களுக்கு முன்… அது வேறு ஒரு தேசம். வேறு ஒரு சூழ்நிலை…..அங்கே ….”

ஆ! குதிரையின் முன் வண்டியை இணைக்க முயலும் ஒரு மூடனைப் போல – நான் பின்வருவதை முன்னால் கூற முயல் கின்றேன்…

மன்னிக்கவும்.

இவை எல்லாம் என் கடமைகளில், ஒருநாள் ஒரு பொழுது என்பது போல; ஆனால் இது அடுத்த நாள்.

“என்ன நயிந்தை, உமக்குச் சொக்குப் பொடி போட்டுட் டாளாம் அந்த – என்ரை வாயிலை ஏன் வருகுது — பாக்க. ஓ! சொல்லிப் போட்டன்!” அவள் கோபித்தவள் போலப் பேசி னாலும் அன்பாகவே, அந்தப் பூரணமான ஆனால் பொருட் செல்வம் குன்றி ஏழ்மையடைந்திருந்த இருதயம் எவ்வளவு அன்பைப் பேச்சில் வெளிப்படுத்த முடியுமோ, அவ்வளவு அன்பையும் வெளிப்படுத்தினாள்.

அவள் பெயர் மாதி.

அவள் தன் ‘காடு வெட்டி’ச் சேலையின் முந்தானையால் தன் வயோதிப மார்புகளை மறைப்பதற்குக் குறுக்குக் கட்டாக அணிந்திருந்தாள்.

“போ, மாதி!”

“என்ரை ஐயாச்சி, உண்மையைச் சொல்லு! ஆர் இஞ்சை நேத்து வந்தது நம்மைத் தேடி…”

அவள் கிழக் கண்களிலே திடீரென்று கண்ணீர் மல்கிப் பெருகியது – ஆறாக. சேலையின் முந்தானையை எடுக்க முடியா தாகையால், தன் கைகளால் கண்ணீரைத் துடைத்தாள். ஆனால் துடைக்கத் துடைக்க மீண்டும் பெருகுகிறது…

இரக்கம் என்ற உணர்ச்சி சாதாரணமாக இல்லாத என் மனத்திலும், ஆழியில் அலை பொங்குவது போல என் அநுதாப உணர்ச்சி தலை தூக்கியது.

“ஏன், என்ன ?”

“நயிந்தை, என்ரை பிள்ளையை, எண்ணைக் கிடங்கிலை போட்டு வளத்த பிள்ளையை, நான் கிழவி எண்டாலும், ஒரு குமரியைப் போலே பாடுபட்டு வளத்த பிள்ளையை, என்ரை பிச்சைச் சம்பளக்காசையும் சிலவழிச்சுப் படிக்க வைச்ச பிள்ளையை..”

என் மனத்தை என்னவோ செய்தது. தலையைக் குனிந்து கொண்டேன்.

ஆம், அவள், அரசாங்கத்தார் தரும் தருமப் பணம் பெறுபவள்தான் – பத்து ரூபாய் மாத வீதம்!

“நயிந்தை, நீர் யோசிக்கிறது எனக்குத் தெரியும். நான் கூலி வேலை செய்து, அதில்லாட்டிப் பிச்சை எடுத்து அந்தப் பொடி யின்ரை சீவனையும் என்ரை சீவனையும் காப்பாத்துவன் எண்டது தானே!”

“நீ கெட்டித்தனமுள்ள ஒரு பெண்!”

“ஏன் நீரும் ஒரு… என்ரை பிள்ளை என்னோடை எப்பவும் இருக்கவேணும். அதுக்கு எனக்கு உதவி செய்யவும், என்ரை துரை!”

இவள் முதலில் அழுத கண்ணீர் உண்மையோ என்று ஒரு கணம் மலைத்தேன். அல்லது இவளுடைய சிரிப்புக் கலந்த பேச்சுத் தான் உண்மையோ ? இந்த மாதிரி அந்த முதியவள் என்னுடைய அன்புக்கு முன்னரே பாத்திரமானவள்.

என்னுடைய அகங்காரத்தையும் என்னுடைய உத்தியோக கௌரவத்தையும் நிலைநாட்டி என் முன்னால் அழுது சிரித்த அந்த ஏழைக்கு என்னால் ஆன உதவி செய்யவேண்டும் என்று என் மனம் மிகவும் பேதலித்தது. அதனால் என்னுடைய கற்பனை உலகில் புகுந்துவிட்டேன். அணைத்துக் காத்து, பாலூட்டா விட்டாலும் தாலாட்டிச் சீராட்டி, செல்வம் எனப் போற்றித் தன்னுடைய வயோதிப வாழ்வை வாழ்விக்க வந்த தெய்வம் என ஏற்றி வைத்து வளர்த்த ஒரு செல்வனுக்காக இவள் ஏங்குகிறாள் என்று நான் நினைத்தேன். இவை எல்லாம் கற்பனை என்று முன்னரே சொல்லிவிட்டேனே! எனக்கோ இந்த மூதாட்டியின் முறையீடு சற்றுமே விளங்கவில்லை. என்னுடைய கீழ் அதிகாரி யிடம் இதை அனுப்பலாம் என்றால் அதுவும் எனக்கு உடன் பாடாக இல்லை.

அதற்குள் என் காரியாலயத்திலுள் பலர் கூடிவிட்டனர். என் அறையின் வாசலிலே – ஏதோ ருசிகரமான நாடகம் நடப்பதாக எண்ணி!

என் மனம் வேதனைப்பட்டது அந்தக் கிழவிக்காக.

“சென்று அடுத்த திங்கள் வா” என்று நான் சொன்னேன்.

அவள் தான் அணிந்திருந்த விலை குறைந்த அந்த ‘காடு வெட்டி’ச் சேலையின் முந்தானையைச் சிறிதே தளர்த்தி மறுபடி தன் தொங்கும் மார்புகளின் மேல் வரிந்து கொண்டு போனாள்.

என் மனத்தில் துக்கம் பொங்கியது! எத்தனை ஏழைகள்… ஆனால் எத்தனை தாய்மார்கள்…

***

முதல் முறை வந்த அந்த, சினிமாக்காரி போன்ற உடை அணிந்த பெண் மறுபடியும் என் முன் உட்கார்ந்திருந்தாள். இன்று அவள் முகத்திலே வாசனைமா மட்டும் அல்ல, கன்னத்துக்குச் சிவப்பும், வாய்க்கு ‘லிப்ஸ்டிக்’ என்று அதனிலும் கோரமான கடுஞ்சிவப்பும் அணிந்திருந்தாள். அவள் தன் கழுத்திலே அணிந் திருந்த வாசனைமா அலங்கோலமாக வரிவரியாக, அவளுடைய வேர்வையின் ஈரம்பட்டு அதன் நிறம் குன்றி வெள்ளை வெளீ ரெனத் தெரிந்தது. அந்த அழகில்லாத காட்சியைப் பார்க்கும் பொழுது, “ஏய், உன் கழுத்தைச் சாண் அளவு கைக்குட்டையால் ஒருதரம் துடைத்துக்கொண்டு விடேன்” என்று சொல்ல எனக்குத் தோன்றியது. ஆனால் எனக்குச் சிரிப்பது சாத்தியமில்லை. என்னுடைய உத்தியோகப் பரம்பரை என்னுடைய வெளிப்படைச் சிரிப்பைக் கொன்றே விட்டுவிட்டது. எனக்குச் சிரிக்கத் தைரிய மில்லை. ஏன், சிரிப்பதற்கு ஆண்மையில்லை என்று கூடச் சொல்லி விடலாம்.

“ஏன்?”

“அன்று நான் வந்த விஷயம் எப்படியாயிற்று?”

“எந்த விஷயம்?”

“என் மகனின் விஷயம்.”

“அதுவா? அதை இன்றே தீர்த்து வைக்கிறேன்!” –

அவள் மீண்டும் அழுதாள். அழுதாள் என்பதென்ன; தன் கண்களை ஒரு சாண் கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டாள். அவள் உடனே எழுத்து நின்று ஆவேசம் வந்தவள் போலப் பேசினாள்.

“ஓய்! நீர் ஒரு உத்தியோககாரன் என்று தேடி வந்தால் எனக்கு ஞாயம் பேசுகிறீர். என்னுடைய பிள்ளையை இன்று என்னுடைய கையில் ஒப்படைக்கவேண்டும்.”

“அம்மா, அந்தப் பிள்ளை உங்களுக்கு எப்படி வாய்த்தது?”

“அது என் பிள்ளை.”

“எப்படி?”

“என் பிள்ளை என்று கூறுமிடத்து நீர் திருப்தி அடைய வேண்டும்.”

எனக்குக் கோபம் வந்தது, இந்தச் சினிமாக்காரியின் உதா சீனத்தைச் சகிக்க வேண்டுமா என்று!

“இந்தக் குழந்தை உன்னுடைய திருமணத்தால் பிறந்த குழந்தை யானால் உன் கணவன் இங்கு வந்து நிற்கவேண்டுமே! அவன் அல்லவோ குழந்தைக்காக வாதாடவேண்டும்.”

அவள் மீண்டும் அழுதான். அத்துடன் அந்த மூதாட்டியும் வந்தாள். அவளுடைய ஒக்கலையில் ஒரு ஒன்பது வயதுக் குழந்தை ஒருவன் இருந்தான். என் மனம் மிகவும் சங்கடப்பட்டது, இதை எங்ஙனம் இருவர் மனமும் நோகாமல் தீர்த்து வைக்கலாம் என்று!

அந்த மூதாட்டி சொன்னாள்:

“நயிந்தை, இது என்ரை பிள்ளை. நயிந்தை எண்டாலும், மற்றது சுப்பிறீம் கோட்டு ராசா எண்டாலும், என்ரை பிள்ளையைப் பறிச்சு, இந்தப் பொம்பிளையிட்டை குடுக்குறதெண்டால் அப்ப என்ரை உசிர் என்ரை உடம்பிலை இருக்கும் எண்டுதான் நயிந்தைக்கு எண்ணமோ?”

“பெத்தா, யார் அப்படிச் சொன்னார்கள்? யான் அப்படி ஒரு நாளும் சொல்லவில்லை. ஏன் உன்னுடைய பிள்ளை என்று கூறுகின்றாய்?”

“நான் பெத்த பிள்ளை இல்லை, நயிந்தை வளர்த்த பிள்ளை! இந்தப் பிச்சைச் சம்பளம் பத்து ரூபாவை வைச்சுக் கொண்டு, அதோடை என்ரை பிள்ளைக்கு காற்சட்டை சப்பாத்து வாங்கிக் குடுத்து, அதை ஒரு ஆளாக்கி விட எண்டுதான் எண்ணினன் நயிந்தை.”

எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. என் மனத்தை மறுபடி என்னவோ செய்தது.

“இந்தப் பிள்ளை உண்மையில் யாருடைய வயிற்றில் பிறந்தவன்?”

“ஏன் நயிந்தை என்ரை வயித்திலை அல்லது என்ரை மேனின்ரை வயித்திலை இப்படிப் பிள்ளை பிறக்கப்படாதோ?”

நான் சொன்னேன், “இந்தக் குழந்தையின் சம்மதத்தை முதலில் கேட்கலாம்” என்று.

“ஓம் ஐயா!”

“ஆம், அப்படியே. குழந்தை உன் அம்மாவிடம் வருகிறாயா?”

அழுகை.

“ஐயோ, என்ரை குஞ்சு என்னத்துக்கு அழுகிறாய். நான் வளத்த குஞ்சு!”

அந்த சினிமாக்காரி போன்றவள் மறுபடியும் விம்மினாள். என் மனம் அவள்பால் பெரிதும் வயிரம் அடைந்திருந்தாலும் சிறிது இளகிற்று.

“நயிந்தை உந்த மாய்மாலங்களுக்கு நீர் இளகப்படாது. என்ரை பிள்ளை என்னோடை எப்பவும் இருக்கவேணும்.” அவள் மறுபடி சிரித்தாள். “நயிந்தைக்கு வயது போதாது போலே; அது தான் இப்படி யோசிக்குது….”

நான் மறுபடி சிரித்தேன். எனக்குச் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் இது என்னுடைய கடமை.

“நான் யோசிக்கவில்லை, மாதி.”

“நயிந்தைக்கு விளங்கிச்சுதோ?”

“என்ன மாதி, எனக்கு நீயோ என்ரை உத்தியோகத்தைச் சொல்லித் தரப்போறாய்?”

“என்ன நயிந்தை சொல்லுகுது?”

“நான் என்னத்தைச் சொல்லுகிறது? இது உன்ரை பிள்ளை இல்லை – உன்னைப் போன்ற வயோதிப மாதிற்கு இந்த வயதிலே இப்படி ஒரு இளம் வயதுப் பிள்ளை எப்படிப் பிறக்கும்? அது உன்ரை பேரப்பிள்ளையும் இல்லை.”

அந்த நவநாகரீக நங்கை உடனே எழுந்து நின்றாள். அவள் எழுந்த உடன் வாசனை என் முகத்தில் வந்து வீசியது.

“என் பிள்ளை எனக்கு இல்லையோ?” என்றாள்.

“உமக்கு இந்த உத்தியோகம் தகாது!”

“அம்மா, ஏன் இவனை உங்கள் மகனென்று கூறிக் கொள்கிறீர்கள்?”

“அதை நான் உமக்கு எதற்குக் கூறவேண்டும்? நீங்கள் தான் நீதி செய்யமாட்டேன் என்று கூறிவிட்டீர்களே!” அவள் வேகமாக எழுந்து ‘நைலான்’ ஆடை சிலுசிலுக்க நடந்துவிட்டாள்.

நான் கலங்கினேன். மாதி சிரித்தாள்.

“நயிந்தை, என்ன ஒரு மாதிரித் துக்கமாய் இருக்குது. என்ரை பிள்ளையை அந்தத் தேவடியாளிட்டைப் பறிச்சுக் குடுக்கேல்லை எண்டது போலை துக்கம்? என்ன நயிந்தை?”

என் மனம் உடனே தெளிவு பெற்றது.

“மாதி என்ன விஷயம்?”

“என்ன நயிந்தை! பாவத்துக்குப் பிள்ளைப் பெத்தா பரியாரி என்ன செய்யிறது? நான்தான் என்ரை ‘சீமாட்டிக்கு’ ஒரு எதிரி!

வா மேனே போவம்! இந்தக் கிழட்டுக் கட்டை இருக்கும் வரைக்கும் என்ரை ‘ராசாத்தியை’ ஆரேன் கொண்டு போற தெண்டால், எடியே என்ரை ராசாத்தி, உடனே நானும் யமராசா வோடை போடுவன்.”

அணிற் குஞ்சுகள் –

– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *