கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 9,583 
 

அந்தப் பங்களாவின் வாசலில் நின்று கேட்டுக்கு அப்பால் தெரியும் வீதியைப் பார்ப்பதும், பங்களாவின் உட்புறம் பார்ப்பதும், பின் இருப்புக் கொள்ளாமல் இங்குமங்கும் நடப்பதுமாக இருந்தார் ராமேசன்.

“ஏங்க உங்களைத்தானே, சந்நியாசிகளை இன்னும் காணோமே..?” எனக் கூறிக் கொண்டே உள்ளேயிருந்து வந்தாள் அவரின் சகதர்மிணி பர்வதம்.

“நம்ம டிரைவரைக் காரோடு அனுப்பியிருக்கேன் பர்வதம். சத்திரம் சாவடி, நடராஜர் கோயில், தில்லைக் காளி கோயில், இளமையாக்கினார் கோயில் பக்கமெல்லாம் தேடி, எப்படியாச்சும் அஞ்சாறு சந்நியாசிகளை அழைச்சுகிட்டு வான்னு சொல்லி அனுப்பிச்சேன். இப்ப வந்துடுவான். உள்ளே சமையல் வேலையெல்லாம் முடிஞ்சுதா? பூஜைக்கு வேண்டியது எல்லாம் தயாரா இருக்கா..?”

“ஓ, வடை பாயஸமெல்லாம் ஆச்சு. அப்பளம் பொரிச்சால் முடிஞ்சுது. பூஜைக்கும் எல்லாம் தயாரா இருக்கு..”

“என்னப்பனே விநாயகா, விக்னமில்லாமல் இந்தப் பூஜை முடிஞ்சு குலம் விளங்கணும் அப்பா!” என்று ராமேசன் முனகினார்.

காசியிலிருந்து வந்திருந்தார் சுவாமிகள் ஒருவர். துறவு வாழ்வை மேற்கொண்டிருந்த அவரிடம், குழந்தைச் செல்வம் இல்லாத தன் குறையைக் கூறி வருந்தியபோது சுவாமிகள் கூறிய யோசனை இது:

“ஒவ்வொரு கிருத்திகை அன்னிக்கும் ஏழைகளை, பிச்சைக்காரங்களை, சந்நியாசிகளை அழைச்சு அதிதி பூஜை நடத்தி, அவங்க வயிறு குளிர அன்னதானம் அளிச்சு, உபவாசமிருந்து
தம்பதிகள் இறைவனை வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும்..”

அவர் கூறிவிட்டுப் போனபிறகு வந்த முதல் கிருத்திகை தினம் இது; அதுவும் ஆடிக் கிருத்திகை!

(2)
ரயில் வரப் போவதற்கு அறிகுறியாக மணி ஒலித்தது. பிளாட்பாரம் சுறுசுறுப்படைந்தது. பரபரப்புடன் பேசினாள் தங்கம்.

“வள்ளி, அத்தை ஊரிலேர்ந்து வந்ததும் என்னைக் காணோமின்னு கத்துவாங்க. ரகளை பண்ணுவாங்க. உன்னைக் கேட்டால் தெரியாதுன்னு சொல்லிடு!”

“அதை நீ சொல்லணுமா தங்கம்? அதிருக்கட்டும்..கையிலிருந்த காசுக்கெல்லாம் டிக்கெட் வாங்கிட்டியே, வழிச்செலவுக்கு, சாப்பாட்டுக்கு என்ன செய்வே? இந்தா இதை வெச்சிக்கோ!”

“வேணாம் வள்ளி. சிதம்பரத்துல என்னோட படிச்ச, உசிருக்கு உசிராய் பழகின தோழி இருக்கா. அவ மூலமா ஒரு சின்ன வேலை தேடிக்கிட்டு எப்படியாவது வாழ்ந்துக்குவேன்..”

“கடவுள் காப்பாத்துவார் தங்கம். தைரியமாப் போ! இந்த நரகத்துலேர்ந்து சீரழியறதுக்குப் பதிலா, நீ எங்கியாவது போறதுதான் நல்லது. எனக்கு மட்டுமாச்சும் உன் சௌக்கிய சமாச்சாரங்களுக்கு அப்பப்ப தபால் எழுது..என்ன?”

“நிச்சயம் எழுதுவேன் வள்ளி!”

தடதடவென்று நிலையத்தினுள் ரயில்வண்டி நுழைந்தது. கண்ணீரில் கரைந்த விழிகளுடன் தோழியிடம் விடைபெற்றுக் கோண்டாள் தங்கம்.

முந்தின நாள் இரவு.வீட்டில் நிர்ப்பயமாக உறங்கிக் கொண்டிருந்தவளது தோளில் ஓர் ஆடவனின் வலுவான கரம் விழுந்தபோது திடுக்கிட்டுக் கண்விழித்தாள் தங்கம். எதிரே ரத்தினம், அவளுடைய மாமன்.

தாய் தந்தையற்ற தங்கத்துக்கு ஒரே ஆதரவாக இருந்த அத்தையின் கணவன்.

கொஞ்ச நாட்களாகவே அவருடைய பார்வையும் பேச்சும் ஒரு மாதிரியாகவே இருந்தன.

அத்தை குடவாசலுக்குப் போயிருந்தாள். கணவனையும் தங்கத்தையும் தன் கறிகாய் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போனாள்.

மாமன், மருமகளைக் கடையில் சீண்டிப் பார்த்தார் பேச்சில். அங்கு நாலு பேர் பார்க்க அதுதான் முடியும். ஆனால், வீட்டில், தனிமையில், இரவில்…

மாமனின் கன்னத்தில் பலங்கொண்ட மட்டும் ஓங்கி அறைந்துவிட்டு, ஆக்ரோஷத்துடன் ஒரு தடியைக் கையில் ஏந்திக் கொண்டு, “நீ மான ரோஷம் உள்ள ஆம்பிளையானால் வெளியே போ! போ வெளியே! இல்லை, உன்னைக் கொன்னுடுவேன்!” என்று வெறிபிடித்தவளாய்க் கத்தினாள் தங்கம்.

மாமன் நடுநடுங்கி வெளியேறியதும் கதவைச் சாத்தி உட்புறம் தாழிட்டுக் கொண்டு உட்கார்ந்து தங்கம் பிழியப் பிழிய அழுதாள். விடியும்வரை அழுது தீர்த்தாள். பொழுது விழ்்தபோது ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக, தோழி வள்ளியிடம் மட்டும் விடைபெற்றுக்கொண்டு ரயிலேறினாள்.

(3)
யாரு அஞ்சலையா? எங்கே இந்தப் பக்கம்? சிமெண்ட் வர இன்னும் ஒரு வாரமாகும். அப்புறம்தான் கட்டிட வேலைன்னு சொன்னேனே?”

“ஆமாங்க மேஸ்திரி, இன்னும் ஒரு வாரம் கழிச்சு நா வேலை பாத்து, காசு சம்பாதிச்சு, அப்புறமா சோறு திங்கணும்னா அதுவரிக்கும் என் ஒடம்புல உசிர் தரிக்க வேணாமா? கைல பைசா இல்லியே. ஒரு வார வயித்துப்பாடு ஓட என்ன வழின்னு தெரியல. உங்களைப் பார்த்தா ஏதாச்சும் வழி சொல்வீங்கன்னு வந்தேன்..”

அஞ்சலை நீர் தளும்பிய தன் கண்களைச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள். சிற்றாள் வேலையின் நிலையற்ற வருமானத்தை நம்பித் தன் வாழ்வு இருப்பதை வேதனையோடு நினைத்துக் கண்கலங்கினாள் அவள்.

அஞ்சலையின் கணவன் கூட கொல்லத்து மேஸ்திரியாக இருந்தவன்தான். கட்டிட வேலையின்போது நான்காவது மாடியிலிருந்து கால் தவறிக் கீழே விழுந்து அஞ்சலையையும் அவள் மகளையும் அநாதையாக்கிவிட்டுப் போய்ச் சேர்ந்து விட்டான் அவன்.

ராமு மேஸ்திரி யோசனை செய்தார்.

“அஞ்சலை, நாளைக்குக் காலையில இங்கே வா. மேல வீதியில ஆறுமுக நாவலர் ஸ்கூலுக்குப் பக்கத்துல ஒரு தெரிஞ்சவர் மளிகைக் கடையில உனக்கு வேணும்கிறதைக் கடனாத் தர ஏற்பாடு பண்றேன். உனக்கு வாரக்கூலி பட்டுவாடா பண்றப்ப கொஞ்சம் கொஞ்சமா தொகையைப் பிடிச்சு நானே அந்தக் கடனை அடைச்சிடறேன், சரிதானே?”

மேஸ்திரியின் இந்தப் பேச்சு அஞ்சலையைப் புல்லரிக்கச் செய்தது. ராமு மேஸ்திரி நல்லவர். தன் கணவனின் கீழ் வேலை பார்த்த விசுவாசம் உடையவர். அவருடைய உதவிக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் என்று கண்கலங்கிக் கைகூப்பினாள் அஞ்சலை.

“மேஸ்திரி, நீங்க நல்லா இருக்கணும்!” நன்றிப் பெருக்கில் வேறு எதுவும் பேச வாய் வரவில்லை. திரும்பி நடந்தாள்.

“இந்தா அஞ்சலை நில்லு! வேகமாக அவளருகில் வந்தார் மேஸ்திரி. நாளைக்குத் தானே மளிகைச் சாமான் வாங்க ஏற்பாடு பண்ணப் போறேன். இன்னிக்கு என்ன வழி..?”

அஞ்சலை மௌனம் சாதித்தாள்.

“அதுதானே கேட்டேன். இந்தா! இந்தப் பத்து ரூபாயை வெச்சிக்கோ. என்கிட்டயும் காசு கொஞ்சம் டல்லாத்தான் போயிடுச்சு..” அவர் நீட்டிய ரூபாய்த் தாளை வாங்கிக்கொண்டு,
“கூலி கொடுக்கிறப்போ இதையும் ஞாபகமா என் கணக்கில் கழிச்சுக்குங்க மேஸ்திரி!” என்று கூறிவிட்டு வேகமாகத் திரும்பி நடந்தாள்.

இன்னும் அங்கே நின்றால் தான் அழுது விடுவோமோ என்கிற பயம் அவளுக்கு.

“யம்மோவ், பசிக்குது!” என்று மகள் தேவானையின் கூப்பாடு ஒலிப்பது போல் பிரமை.. “இதோ வந்துட்டேண்டி கண்ணு!” என்று முனகியபடி நடையைத் துரிதப் படுத்தினாள்.

செட்டியார் கடைக்குப் போய் அரிசிக் குருணை வாங்கிக் கொண்டாள். கொசுறாகக் கொஞ்சம் வெங்காயம் கேட்டு வாங்கினாள். கஞ்சி வைத்தால் இரண்டு வேளை அரை வயிற்றுப் பாட்டை ஓட்டிவிடலாம்… யோசித்துக் கொண்டே நடந்தபோது மழை வரும்போல் வானம் இருட்டிக் கொண்டு வந்தது. ஜில்லென்ற குளிர் காற்று உடம்பை ஊடுருவியது. ஈர மண் வாசனை, பலமான மழை வரப் போகிறது என்று அஞ்சலைக்குச் சொல்லாமல் சொல்லியது.

நடையை எட்டிப் போட்டாள்.

(4)

“யார் அது?” – ராமேசன் கேட்டார்.

வாசல் கேட் அருகே யாரோ ஓர் பெண் கையில் பையுடன் நின்றாள். பயமும் கவலையும் பசி அலுப்பும் முகத்தின் சோர்வில் துல்லியமாகப் புலப்பட்டது.

“யாரம்மா நீ, என்ன வேணும்? ” அதட்டினார் ராமேசன்.

அவள் தயக்கத்துடன் உள்ளே வந்தாள். கண்களில் நீர் துளிர்த்திருந்தது. நேரே பர்வதத்தின் அருகில் வந்து நின்றாள். பொலபொலவென்று கண்ணீர் சிதற அவள் பேசினாள்.

“பர்வதம், என்னைத் தெரியலையா? நான்தான் தங்கம். கும்பகோணம் முனிசிபல் பள்ளிக்கூடத்தில் ஒண்ணாப் படிச்சோமே! நான் இப்போ அத்தை கூடத்தான் இருக்கேன். அம்மாவும் அப்பாவும் செத்துப் போய் அநாதை மாதிரி இருக்கேன். அத்தையும் ஆதரவில்லை. மாமனும் நடத்தை சரியில்லை. உன்னைப் பார்த்து இந்த ஊர்ல ஒரு சின்ன வேலை, கூலி வேலையானால் கூடப் பரவாயில்லை.. வாங்கிக்கிட்டு, மானமாப் பிழைக்கலாமின்னு வீட்டை விட்டு வந்துட்டேன். பர்வதம், நீ சௌக்கியம்தானா?”

பர்வதம் அவளை உற்றுப் பார்த்தாள். தங்கத்தின் பசியால் வாடிய முகம், எளிய உடை, அலங்கோலமான தோற்றம், வீட்டை விட்டு ஓடி வந்திருக்கும் செய்தி… முகத்தைச் சுளித்தாள் பர்வதம்.

“இவளுக்கு வேலை வாங்கித் தரணுமாமே! என்ன வேலை இவளுக்குக் கிடைக்கும்? அதுவரைக்கும் சோறு வேறே தண்டம். சுத்தபத்தமாக வீட்டில் பூஜை நடக்கிற சமயத்தில் தலைவிரி
கோலமா வந்து நிக்கிறதைப் பாரு. இவள் வரலைன்னு யார் அழுதாங்க?”

முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு கூறினாள்.

“பர்வதமா நான் பர்வதமில்லை. என் பெயர் வேறே. நீ தப்பான விலாசத்துக்கு வந்திருக்கேன்னு நினைக்கிறேன்…”

தங்கம் திடுக்கிட்டு அவளைப் பார்த்தாள். ராமேசன் கூட வியப்போடு மனைவியை நோக்கினார். அவள் சைகையைப் புரிந்து கொண்டவராய், “அதுதானே, இங்கே பர்வதம்னு யாருமில்லே!” என்று ஒத்துப் பாடினார்.

பசி மயக்கத்தைக் கூடப் பொருட்படுத்தாதவளை இந்த எதிர்பாரா அதிர்ச்சி, மயக்கத்தை வரவழைத்து விடும் போலிருந்தது. ஒரே ஆதரவு என்று எண்ணி அவள் யாரைத் தேடி வந்தாளோ அவளே நீ தவறான விலாசத்துக்கு வந்திருக்கிறாய் என்று துணிந்து பொய் கூறுகையில் என்ன செய்வது? தான் எப்பேர்ப்பட்ட தவறு புரிந்து விட்டோம் என்று இபோது புரிந்தது தங்கத்துக்கு. அலைகடலில் மூழ்கும்போது துரும்பு கூடப் படகாகத் தெரியுமாம். அந்நிலையில்தான் இந்தத் துரும்பைப் படகாக நினைத்துவிட்டேனா?

திரும்பி, விடுவிடென்று நடக்க ஆரம்பித்தாள் தங்கம்.

அழுகையையும் ஆத்திரத்தையும் கண்கள் அருவியாய் வெளிப்படுத்தின. பசி வேறு இப்போது கோரத் தாண்டவம் மாட ஆரம்பித்தது.

திடுமெனத் தூறல் விழுந்தது. சிறு தூறலாய் ஆரம்பித்த மழை, சட சடவென்று வலுத்தது. ஒதுங்க இடம் தேடினாள். அப்போது அவளை உரசினாற்போன்று ஒரு கார் விரைந்து வந்து அந்தப் பங்களாவினுள் நுழைந்தது.

“நம்ம கார் வந்துடுச்சி!” என்று ராமேசன் குதூகலத்துடன் கைநீட்டிச் சொன்னார். அவர் மனைவி பர்வதமும் ஆவலுடன் பார்த்தாள்.

டிரைவர் காரிலிருந்து இறங்கினான். அவனுடன் வேறு யாரையும் காணலையே! சந்நியாசிகள் என்ன ஆனார்கள்?

(5)

மழை சோவென்று கொட்டியது. அத்துடன் சுழன்று வீசிய காற்றும் சேர்ந்து கொண்டது.

“யம்மோவ், பசிக்குது!” என்ற தேவானையின் குரலைக் கேட்டு எரிச்சல் அடைந்த அஞ்சலை, அடுப்பூதும் குழலால் அவளை அடிக்க ஓங்கினாள். “சனியன்! இந்த அடுப்பு எரியலைன்னு நான் அவதிப்படறேன். நீ வேற வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறியே? அடுப்பு எரிஞ்சி கஞ்சி ஆனாத்தானே உன் வயத்துக்குக் கொட்ட முடியும்?”

“யம்மோவ், கொழம்பு என்னா?”

“உம்.. கத்திரிக்காயும் கருவாடும் போட்டுப் புளிக் கொழம்பு. எட்டி உதைச்சேன்னா பல்லு எல்லாம் உதுந்துடும். மேஸ்திரி கால்ல கையில விழுந்து கடன் வாங்கியாந்தேன்.. குடிக்கக் கஞ்சி கிடைச்சாப் போதாது? குழம்பு கேக்குதா குழம்பு? ஏய், வாசல் கதவைச் சாத்தேண்டி சனியனே, காத்துல அடுப்பு எரியவே மாட்டேங்குது…”

வாசல் கதவை மூடப்போன தேவானை, “யம்மா, இங்கே ஒரு அக்கா நிக்குது!” என்றாள்.

“ஆருடீது?” அஞ்சலை வாசலுக்கு வந்தாள். குடிசையின் முன் குறட்டுத் திண்ணையில் மழைக்கு ஒதுங்க நின்ற பெண்ணைப் பார்த்தாள். கையில் ஒரு பையை இறுகப் பற்றிக் கொண்டு
மிரட்சியுடனும் கவலையுடனும் நின்றாள் அந்தப் பெண்.

“இப்படி உள்ளே வந்து நில்லும்மா. எதுக்கு மழையில் நனையறே? ஊருக்குப் புதுசா?”

அஞ்சலையின் கனிவான அழைப்பைக் கேட்டு, தயங்கியபடி குடிசைக்குள் நுழைந்து மழைச்சாரல் படாத இடத்தில் நின்றாள் அவள். அவளை உற்றுப் பார்த்த அஞ்சலை, “ஏம்மா, அழுதியா என்ன? முகம் வீங்கிப் போயிருக்கே? என்னம்மா கஷ்டம் உனக்கு?” என்று அந்தப் பெண்ணுடைய கையை ஆதரவாகப் பற்றிக்கொண்டு கேட்டாள். “கூடப் பொறந்த பொறப்பாட்டம் நினைச்சு என்கிட்டே சொல்லேன். என்னால் முடிஞ்ச உதவியைச் செய்யறேன்…”

அந்தப் பெண்ணின் அழுகை திடுமெனப் பிரவாகமெடுத்தது. விம்மி விம்மி அழுதாள் அவள்.

“என் பேர் தங்கம். எனக்கு ஒரு கூலி வேலை இந்த ஊர்ல வாங்கித் தர முடியுமா?” என்று தன் அழுகையினூடே கேட்டபோது அஞ்சலை சிரித்தாள்.

“ப்பூ இவ்வளவுதானா? வீடு கட்டற சித்தாள் வேலைதான் நான் செய்யறேன். சம்மதமானா உனக்கும் சித்தாள் வேலை வாங்கித் தர்றது கஷ்டமில்லை. அதிருக்கட்டும்மா, உன் ஊர் எது? எதுக்கு இங்கே வந்தே? ஏன் வருத்தப்படறே என்கிற விவரமெல்லாம் சொல்லலியே?..”

தனக்கு ஒரு கூலி வேலை கிடைக்கும் என்று தெரிந்ததும் தங்கத்தின் மனத்தில் கொஞ்சம் நிம்மதி பிறந்தது. தன் கதையை மெல்ல அஞ்சலையிடம் கூறினாள். அஞ்சலை அவளது நிலையைக் கேட்கக் கேட்க நெகிழ்ந்து போனாள்.

“அடிக் கூத்தே! பணம் காசு வந்திட்டா கண்ணு கூடவா அவிஞ்சு போயிடும்? அவ கெடக்குறா சீமாட்டி. நீ என்கூடவே இந்தக் குடிசையில் என் கூடப் பிறந்தவளாட்டம் இரும்மா. கஷ்டத்தையும் சுகத்தையும் பங்கு வெச்சுக்குவோம். என்ன?” என்று அன்போடு சொன்னாள்.

அந்த உண்மையான அன்பில் பரவசம் அடைந்து மெய்ம்மறந்து நின்றாள் தங்கம்.

“யம்மோவ், பசி!” என்று குறுக்கிட்டது, பசி பொறாத சிறுமியின் குரல்.

“பாரு, புது உறவு வந்ததும் நான் அடுப்பையே மறந்துட்டேன். சித்தே இரு தங்கம், கஞ்சியை இறக்கிட்டு வர்றேன்.”

அடுப்பிலிருந்து கஞ்சியை இறக்கி, அலுமினியத் தட்டில் ஊற்றி முதலில் தங்கத்திடம் நீட்டினாள் அஞ்சலை.

“இருக்கட்டும் அக்கா. எனக்குப் பசியில்லை. குழந்தைக்குக் கொடுங்க. நீங்க சாப்பிடுங்க!”

“நீ எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளிம்மா. உனக்குத்தான் முதல்லே. நீ சாப்பிட்ட மீதிதான் எங்களுக்கு.”

(6)

டிரைவர் கையைப் பிசைந்து கொண்டு நின்றான்.

“என்ன ஆச்சு டிரைவர்? சாமியாருங்க யாரும் கெடைக்கலியா?” என்று பரபரத்தார்கள் ராமேசனும் பர்வதமும்.

டிரைவர் கூறினான்: “நான் தேடாத இடமில்லை எஜமான். இன்னிக்கு ஆடிக் கிருத்திகையாச்சே? அதனால் சாமியார்கள் எல்லாம் வைத்தீஸ்வரன் கோயில், சுவாமி மலைன்னு போயிட்டாங்களாம்!”

ராமேசனும் பர்வதமும் அதிதி பூஜைக்கு சாமியார்கள் கிடைக்காத அதிர்ச்சியில் திகைத்துப் போய் நின்றார்கள். வீட்டினுள் தடபுடலான விருந்து சீந்துவாரற்று ஆறிக் கொண்டிருந்தது.

(ஆனந்த விகடன் வார இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *