கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2021
பார்வையிட்டோர்: 4,594 
 

அப்போது பொங்கல் கழிந்து இரண்டு மூன்று நாள்கள் ஆகியிருக்கும். அவன் பக்கத்தூருக்கு ஆற்றைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். அதைக் கடப்பதில் சிரமம் கிடையாது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டால் போதும் பாதி ஆற்றில் காலில் ஏதோ தட்டுப் படுவது, போல் இருக்கவே, ஒற்றைக் காலில் நின்று கொண்டே மற்றொன்றால் வெளியே தூக்கிப் பார்த்தால் அது ஒர் அட்டிகை. தங்கமாகத் தான் தெரிந்தது. அதை அப்படியே கையாலெடுத்துக்கொண்டு வருவதைத் தவிர வேறு எதுவும் செய்திருக்க முடியாது. அப்பாவின் காலத்திலிருந்தே தெரிந்த மாணிக்கம் ஆசாரியிடம் அதை எடுத்துக் கொண்டு மறுநாள் கீழுருக்குப் போனான். அவன் இருப்பது ஊரின் மேலப்பகுதி – மேலுர்.

ஆசாரி அதை மிகக் கூர்மையாகப் பரிசோதித்துப் பார்த்தார். தங்கம்தானா இல்லையா என்ற கேள்விக்கே இடங்கொடுக்காமல் குரலை சிறிதாக்கிக் கொண்டு, ‘முத்து – இதை வைச்சுக்கிட்டு இருக்கது தப்பு- ரொம்ப கஷ்டத்துக்கு ஆளாக வேண்டி வரும். அதனாலே நீ என்ன செய்றே-எங்க பாத்தியோ அந்த இடத்திலே இதை போட்டுடு அது தான் நல்லது. இந்த ஊருக்கும் அதுதான் நல்லது – இதப் பாத்தியா’ என்று அந்த அட்டிகையின் பின் பக்கம் செதுக்கப்பட்டிருந்த கிறுக்கல்களைக் காட்டினார். ஒர் எட்டுக்கால் பூச்சியின் படம் போலத் தான் அவனுக்கு அது தெரிந்தது. கூட்டெழுத்து என்று ஆசாரி விளக்கினார். பேய்ச்சி என அதைப் படித்துக் காட்டினார். பிறகு மேற் கொண்டு எதுவும் பேசாது தான் சொன்னதை நினைவூட்டி அவனை அனுப்பி வைத்தார்.

அந்த நாள்களில் எல்லாம் இராப்பாடி வருவான். அறுவடை அநேகமாக முடிந்திருக்கவேண்டும். நாய்க்குரைப்பை அலட்சியம் செய்து படி வாங்கிச் செல்வான். அவனிடம் அதுபற்றி குறி கேட்கலாமா என்று வெளித்திண்னையில் யோசித்துக் கொண்டிருந்தான். பாட்டுச் சத்தம் கீழத்தெருவில் கேட்டுக் கொண்டிருந்தது. –

தெருப்பக்கம் வந்ததும் அவனது இராப்பாடி பாட்டை நிறுத்தி முத்துக் கருப்பன் வீட்டருகே நின்றான். எதிர் வீட்டு மீனாட்சி அம்மாள் தெரு நடையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். சாதாரணமாக படி எதுவும் இராப்பாடிக்குத் தர மாட்டாள்.

நடு இரவாகவிருந்தாலும் இராப்பாடி ஒரக்கண்ணால் தன்னையே பார்ப்பதாக முத்துக் கருப்பன் நினைத்தான். இராப்பாடியைப் பார்த்து பயந்திருந்த நாள்களெல்லாம் போய்விட்டன. சாதாரணமாக வயதானவர்கள் தாம் குறி கேட்பார்கள். அடுத்த வயலறுப்பு முடிந்து இராப்பாடி வருகையில் குறிகேட்பவர்களில் பெரும்பாலோர் செத்துப் போயிருப்பார்கள். ஆனால் இராப்பாடி செத்துப் போவது குறித்து யாருமே பேசியதில்லை.

சாதாரணமாகப் பேசும் குரல் போலல்லாமல் இராப்பாடி மெதுவாகச் சொன்னான். அது முத்துக் கறுப்பனுக்கு மட்டுமே கேட்டது.

பேச்சி கழுத்துக்குச் சொந்தமானது. வேறு யாரிட்டையும் இருக்கப்படாது – விளாங்காமப் போயிருவா – நாச்சியாரு வீடு பால் பொங்கணும் – அழியக் கூடாது’

இடையே இராப்பாடியின் பின்பாட்டுக்காரன் ‘படி போடுங்க’ என்று கூவிக் கொண்டிருந்தான். வழக்கமாக அவன் தாயார் தான் நெல் கொண்டு வந்து போடுவாள். அன்று அயர்ந்த துக்கம் முத்துக் கறுப்பன் உள்ளே சென்று அரிசிப்பானையில் கை நுழைத் தான். எதுவோ அவன் கையைத் தடவுவது போலிருந்தது- அட்டிகைதான்.

நாழி நெல்லும் உப்பும் இராப்பாடிக்குத் தர வேண்டும். நெல் சாக்கை இரவில் அவிழ்க்க முடியாது. அரிசியும் இரண்டு சக்கரத்தையும் கொண்டு வந்து தந்தான். சிறிது நேரம் வாசற்படியிலேயே நின்று கொண்டிருக்க- இதையெல்லாம் எதிர்வீட்டு மீனாட்சி அத்தை உறங்காது கவனித்துக் கொண்டிருந்தாள் என்பதை அறியவில்லை. இராப்பாடி போய்விட்டான் என்பதை உறுதி செய்துகொண்டு அந்த அத்தை அவனைப் பார்த்து சத்தம் போடத் தொடங்கினாள்.

‘லேய் – நீ மாந்தையனா – இந்த வயசிலே ராப்பாடிக்கிட்ட குறி கேக்கனுமாக்கும் – கொஞ்சமாவது ஒனக்கு இது இருக்கா’

‘யத்தே – இண்ணைக்கு உறக்கம் வரல்லே – அவனும் வந்தான் – எப்பவுமா கேக்க போறோம் – சவம் ஏதாம் ஒரு தரம்’

‘நல்ல சீருதான் – போய் படு என்று சலித்துக் கொண்டே தெருத்திண்ணையிலே எதுவும் விரித்துக் கொள்ளாமல் தலையைச் சாய்க்கலானாள்.

அன்றிரவு அவன் தூங்கவில்லை. சாதாரணமாக படுத்த உடனேயே தூங்குபவன் உடம்பெல்லாம் சுடுவது போல் இருந்தாலும், சுரம் மாதிரி இல்லை.

அதிகாலையில் அவன் மிதந்துகொண்டிருப்பது போன்ற தோற்றம் காலையில் கண்ட கனவு பலிக்குமாமே – அப்படித்தானிருந்தது. எழுந்த பின்னரும் மிதப்பது போன்றவாறே இருந்தது. குளித்துவிட்டு வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று துண்டை எடுத்துக் கொண்டு கிளம்பியவன். கீழத்தெரு குளத்திற்குச் சென்றே குளித்திருக்கலாம். அவனுக்கு ஏனோ நடக்க வேண்டுமென்று தோன்றியிருந்தது. மெதுவாக யோசனை எதுவும் அதிகமில்லாது ஆற்றிற்கே போனான். ஒரு மைல் துரமிருக்கும். கிராமத்திலிருந்து டவுன் பக்கம் போவதற்கு ஆற்றைக் கடந்து வரப்பு வழி நடந்தால் போதும் ஊரிலுள்ள இரண்டு உத்யோகஸ்தர்கள் – ஒருவர் சினிமா தியேட்டரில் நோட்டிஸ் கொடுப்பவர் – இன்னொருவர் டவுன் பள்ளிக்கூடத்தில் மணியடிப்பவர் – போய் வருதல் இப்பாதையில்தான்.

ஆற்றையொட்டி அதன் படிக்கட்டுகளை ஒட்டியே இருப்பது சிவன் கோவில். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வெள்ளம் அடித்துப் புரட்டிக் கொண்டு வந்தால், யார் தயவுமில்லாமல் சிவலிங்கம் அபிஷேகம் முடித்துக் கொள்ளும். பகல் நேரத்திலேயும் இருள் அடையச் செய்து விடுகிற கோவிலைச் சுற்றியுள்ள மரங்கள். அன்று அங்கே குளிக்க வரப் போகிறோம் என்று அவன் நினைத்தவனல்ல.

வேட்டியை அவிழ்த்து படிக்கட்டில் சுருட்டி வைத்து விட்டு கோவணத்தோடு இறங்கும் போது எதிர்க்கரையில் ஒர் உருவம் – சமுக்காளத்தை தலை மீது போட்டு அதனால் உடம்பு பூராவும் மூடிக் கொண்டிருந்த உருவம் தை மாதத்தில் கூட் வேர்த்து விடுகிறபடி உடம்பை மூடி ஒரு வட புலத்து மனிதன் தோற்றத்தில் நின்றது.

சரி – நின்றால் நின்றுவிட்டு போகட்டும் என்று முத்துக் கறுப்பனால் இருக்க முடியவில்லை. காலையில் வந்து போன கரம் மாதிரி ஒரு வேகம். யாரு உரத்தக் குரலில் கேட்டான். கேட்ட சப்தம் எதிர்கரைக்கு எட்டியிருக்கும். சமுக்காளம் இரண்டு கைகளையும் தூக்கி நின்றது. நயினாரே’ என்று பதிலுக்கு அழைத்தது. அந்த காலை வேளையில் உடம்பு குளிர ஆற்றுத் தண்ணீர் பட்டு நிற்கையில் மரங்கள் எதிலும் பறவைகள் அமர்ந்து ஓசை எழுப்ப வில்லை. காலளவு தண்ணீர் என்றாலும் ஒடும் தண்ணீர் அதன் சப்தம் கூட கேட்கவில்லை.

முத்துக் கறுப்பன் அந்தப் பதிலில் – நயினாரே என்ற கூப்பாட்டில் – அந்த நிசப்தத்தை அறிந்தான்.

அது இராப்பாடி அவனைப் பகலில் காண்பதரிது. அவன் முகத்தை யாரும் பார்த்ததில்லை – பார்க்க கூடாது என்றும் சொல்கிறார்கள். இரவு முடிந்த அந்த நாள் காலையில் பெற்ற தரிசனம் வேறு எதையும் நினைக்கவிடாது தடுத்தது. படுத்துக் கிடந்தே குளித்துக் கொண்டிருந்தவன் ஒரே எழும்பலில் நிமிர்ந்து நீரோடும் பகுதியை கடந்து மேட்டில் ஏறி அக்கரையில் அந்த உருவம் பக்கம் போய்ச் சேர்ந்தான்.

சமுக்காளம் மறைத்த பகுதி தவிர உருவத்தின் வேறு உறுப்புகள் ஒளிவு மறைவாகத்தான் தெரிந்தன. தாடையில் தெரிந்த தாடி – கறுப்பாக – அந்த ஆளை அதிக வயதினனாக காட்டவில்லை. ஏதோ முன்னரே ஏற்பாடு செய்த சந்திப்பு போல முத்துக் கறுப்பன் அவன் முன்னால் போய்நின்றான்.

‘நயினாரே – ராப்பாடில்லா’

‘என்ன இப்ப இந்தப்பக்கமா’

தூரமாகவிருந்த மலைப் பகுதியைச் சுட்டிக் காட்டி ‘நாங்க அந்தப் பக்கம் தான் – நயினாரு நேத்தைக்கு உறங்கினேளா’ என்று கேட்டான்.

முத்துக் கறுப்பன் பேசவில்லை.

‘நயினாரு தப்பா நினைக்கக் கூடாது. பேச்சு கழுத்துக்குள்ளது வேற யாரிட்டையும் இருக்கப்படாது – சொன்னேனே கேட்டயளா’,

இராப்பட்டி சிறிது தள்ளி ஆற்றின் நடுவே ஒரு பகுதியைச் சுட்டிக்காட்ட காட்டிய விரலை மட்டும் முத்துக் கறுப்பன் பார்த்துக் கொண்டிருக்க, நின்ற ஒரு கணத்தில் பெற்ற அதிர்வால் திரும்பி இராப்பாடியை உற்று நோக்கி, ஏதோ அவனுடன் ஒர் இரண்டாயிரம் ஆண்டு காலமாக பழகுபவனாக நினைத்துக் கேட்கிறான்.

‘அப்படியுமா நடக்கும்’

‘நயினாரே இங்கதான்’

கிட்டதட்ட முத்துக் கறுப்பன் அந்த அட்டிகையைக் கண்டெடுத்த ஆற்றுப் பகுதியைச் சுட்டிக் கொண்டிருந்தது விரல்.

சிறிது நேரம் எங்கோ இருந்த அவனை நோக்கி ராப்பாடி திரும்பவும் கேட்கிறான். ‘நயினாரே – ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா’

அசைவு கூட இல்லாது நின்றிருந்தான். ஒரு பெருமூச்சை வெளியேற்றியவாறு ராப்பாடி ‘நானும் இப்படித்தான் ராப்பாடி ஆயினேன் நயினாரே’ என்கிறான்.

சொல்லி விட்டு அவன் திரும்பிப் பாராது நடந்தான் – வடக்கே தூரத்தே தெரிந்த மலையடிவார காட்டுப்புதூர் கிராமம் பக்கமாக,

காட்டுப்புதூர் அடிவாரப் பகுதியில் பாம்புகள் அதிகம் என்று முத்துக் கறுப்பன் அறிவான். ஆனால் அவை ராப்பாடியை ஒன்றும் செய்து விடாது. மந்திரங்கள் தெரியும் அவனுக்கு.

‘உன் மேல் ஆணை

என் மேல் ஆணை

திரு நீலகண்டன் மீதானை’

என்று உச்சரித்து இரு கைகளையும் படரத் தூக்கினால், அவை தலை தாழ்த்தி பின்வாங்கும்.

ராப்பாடி மலையேறி விட்டான். இனி அடுத்த வயலறுப்பின் போது தான் அவனைப் பார்க்க முடியும்.

முத்துக் கறுப்பன் வீடு திரும்பிய போது ஊர் மூத்தவர் பெத்தாய்ச்சியா பிள்ளை உள்பட நாலைந்து பேர் வெளித் திண்ணையில் உட்கார்ந்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

– அக். 98

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *