கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 13,506 
 

நான் மனைவியைத் தேடி வீட்டிற்குள் சென்றபோது அவள் குளிப்பை முடித்து, அழகான சேலையில்… சுவாமி தரிசித்து, பூச்சூடி, குங்குமப் பொட்டிட்டுப் புனிதமாகத் தோன்றினாள்.

“இந்த வீட்டுக்குக் குடிவந்த நாளிலிருந்து இப்பதான் என்ர மனம் நிறைஞ்சிருக்கு!” என்றேன்.

அவள் நாணம் மேலிட, “எப்பிடி வெளிக்கிட்டாலும் உங்களுக்கு ஏதாவது குறைதானே…? சரி, சரி! இப்பவாவது இந்தத் திருவாய் மலர்ந்தது போதும்!” எனத் தனது மகிழ்ச்சியை மனக்குறை போல வெளிப்படுத்தினாள்.

“நான் அதைச் சொல்லயில்லை..!”

“குருவிப்பிள்ளையள் கூடு கட்டுகினம்!”

“உண்மையாவா?” ஆச்சரியம் அவள் முகத்தில் மலர்ந்தது.

நகருக்கு அப்பால் அமைதியான சூழலில் இடமெடுத்து நாங்கள் வீடு கட்டியதற்கே ஓர் உட்காரணம் இருந்தது. இங்கு வந்த நாளிலிருந்து எங்களுக்குள் ஓர் ஆசை.. எதிர்பார்ப்பு.. இந்த வீட்டில் ஒரு சரணாலயம்போல் பிராணிகள் தானாகவே வந்து கூடு கட்டி வாசம் செய்யவேண்டும் என்று! அதற்காக வீட்டைச் சூழ பல, பழ மரங்களையும், பன மரங்களையும் வளர்த்து ஒரு சோலையைப்போல ஆக்கி வைத்திருக்கிறோம். மரங்களில் சிறிய தட்டுக்களை அடித்து வைத்து அவற்றில் சிறு தானியங்களைப் போட்டுவிடுவோம். குருவிகள் பழவகைகளைச் சாப்பிட வரும். பூக்களில் தேன் குடிக்கும். அணில் தானியங்களைப் பொறுக்கிச் செல்லும். ஆனால் ஒன்றுதன்னும் எங்கள் வீட்டில் கூடு கட்டிச் சீவனம் செய்யவில்லை.

மரங்களில் வந்திருந்து ராகமெடுத்துப் பாடுகின்றன. தங்களுக்குள் ஏதோ பேசி மகிழ்கின்றன. ஆனால் இரவில் நித்திரைக்கு எங்கோ பறந்துவிடுகின்றன. இது எங்களுக்கு ஒரு குறையாக இருந்தது. இப்போது அந்தக் குறை தீர்ந்தது போலோர் உணர்வில் என் பின்னே ஓடிவந்தாள் மனைவி.

குருவிகளைப் பார்த்துவிட்டு மகள் சொன்னாள்: “அப்பா! உங்கட கொண்டைக்குருவியள்தான் கூடு கட்டுகினம்…என்ன?”
அவற்றுக்குக் கொண்டைக்குருவி எனப் பெயரிட்டதே நாங்கள்தான். உண்மையான பெயர் தெரியாது.

ஒரு கையிலடங்கக்கூடிய சைஸ். நீளமான வால். முதுகுப்பகுதி பிரவுண் நிறம். நெஞ்சின் கீழ்ப்பகுதி சாதுவான வெண்மை கலந்திருக்கும். வாலின் தொடக்க அடிப்பாகம் சிவப்பு. தலைப்பகுதி கறுப்பு. உச்சியில் எடுப்பான கொண்டை.

விடியற்காலையில் முற்றத்தில் பிரம்புக் கதிரையைப் போட்டுச் சற்று நேரம் அமர்வேன். மகளும் வந்து என்னோடு இருப்பாள். அப்போது இந்தக் குருவிகள் வந்து மரக்கிளைகளில், ஒவ்வொரு கொப்பாக மாறி மாறித் தாவி இருந்து பாட்டுப் பாடும்.

நானும் மெல்ல சீக்கா (விசில்) அடித்து அவற்றைப்போல ஒலி எழுப்புவேன். மகள் விநோதமாகப் பார்ப்பாள்.

“என்னப்பா குருவியோடை கதைக்கீறீங்களா?”

“ஓமம்மா…”

“என்ன கதைக்கீறீங்கள்?”

“எப்படி சுகமா இருக்கிறீங்களா?… உங்களுக்கு என்ன பெயர்… இப்படி ஏதாவது கேக்கிறேம்மா..”

“என்ன பெயராம்?”

“கொண்டைக்குருவி”

குருவிகளுக்கென வேண்டி வீட்டில் வைக்கப்பட்டுள்ள சாமைஇ வரகு போன்ற தானியங்களை மகள் எடுத்து வந்து வீசுவாள். நிலத்தில் தத்தித் தத்தி வந்து அவை தீன் பொறுக்கும்.

சில நாட்களில் குருவிகளைக் காணாவிட்டால் “குருவியளைக் காணயில்ல… கூப்பிடுங்கோ!” என மகள் கேட்பாள். நான் சீக்கா அடிப்பேன்.

சீக்கா சத்தம் கேட்டதும் அவை வந்துவிடும். சீக்கா ஓசைக்கும், சாப்பாட்டுக்கும் இடையில் அவை ஏதோ அர்த்தத்தைப் புரிந்து வைத்திருக்கின்றன.

நாங்கள் தூர நின்று கவனித்தோம். கொண்டைக்குருவிகள் இரண்டும் ஒவ்வொரு செடிகளாகப் பறந்து சென்றன. கூடலான செடிகளுக்குள்ளே சென்று சோதித்துப் பார்த்து வந்தன. ஒரு செடியின் இலை சடைத்த 4 கிளைகள் காற்றில் ஆடி மரத்துக்குப் பெலப்பில்லாமல் இருந்தமையால் சப்போட் ஆக ஒரு கம்பை நாட்டி 4 கிளைகளையும் சேர்த்துக் கட்டியிருந்தோம். குருவிகள் கூடு அமைப்பதற்கு அது பொருத்தமான இடமாக அமைந்துவிட்டது போலும். எங்கோ பறந்து சென்று தும்பு போன்ற மெல்லிய இலைகளைக் கொண்டுவந்தன.

“அட உண்மைதான்!” என்றாள் என் மனைவி.. இப்போதுதான் நான் சொன்ன விஷயத்தை நம்புபவள்போல.

மகள் என்னிடம் ஒரு கேள்விளைப் போட்டாள்: “அப்பா! குருவி எப்பிடிக் கூடு கட்டுற இடத்தை டிசைட் பண்ணும்..?”

“மறைவான… பாதுகாப்பான இடமாகத் தேடி எடுக்கும்.”

“ஏன்?

“அவையளுக்குப் பயம்..”

“என்ன பயம்..? குண்டு விழுமென்றா?”

“பெரிய பறவையள் பிடிச்சிடும்தானே..? பிராந்து வல்லூறு…”

“அப்ப… பிளேனுக்கு? பிளேன் குண்டு போடும்தானே? பிளேனுக்குப் பயமில்லையோ?”

அவளது கவலை எனக்குப் புரிந்தது. உள்நாட்டு யுத்தம் நடக்கிறது. விமானங்கள் திடுதிப்பென வந்து குண்டுகளை வீசுகின்றன.

“ஓமம்மா! பிளேனுக்கும் பயம்தான்! குண்டுச் சத்தம் அதுக்கு அதிர்ச்சியாயிருக்கும். முட்டை கலங்கும். குஞ்சு பொரியாது.”

தென்னந் தும்பைச் சுருட்டி எப்படியோ அதை ஒரு வளையம் போல ஒட்டி அலகிலே தூக்கிவந்தன. தூர ஒரு மரத்தில் இரண்டும் இருந்து, எச்சரிக்கையாக நாலாபுறமும் நோட்டமிட்ட பிறகு ஒன்று தும்புவளையத்தைக் கொண்டு செடியிலுள்ளே போகும். அது மீண்டும் வரும்வரை மற்றது எல்லாப் பக்கமும் நோட்டம் பார்த்தவாறே இருக்கும்.

மூன்று நாட்களாக ஓய்வொழிச்சல் இல்லாது தூரத்தூரப் பறந்து சென்று ஒவ்வொரு தும்பாகக் கொண்டுவந்த வேலை முடிந்திருந்தமையால், மெதுவாகச் சென்று எட்டிப் பார்த்தேன். ஒரு பாதிச்சிரட்டையின் அளவில் மிக நேர்த்தியாகத் தும்பு வளையங்களை அடுக்கி அடுக்கி, மென்படுக்கையாக அந்தக் கூட்டை அமைத்திருந்தன.

“பாப்பம்! அப்பா, நானும் பார்க்க.. காட்டுங்கோ!” என மகள் அங்கலாய்த்தாள். அவளைத் தூக்கி, செடியினுள் உயரத்திலிருந்த கூட்டை இலைகளை விலக்கிக் காட்டினேன்.

கொண்டைக்குருவிகள் இரண்டும் ஒன்றையொன்று அணைத்துக்கொண்டு தூர மரக்கிளையிலிருந்து எங்களையே பார்த்துக்கொண்டிருந்தன.

நாங்கள் அப்பால் விலகினோம். கூடு அமைந்திருக்கும் அந்தச் செடியை வேறு பிராணிகள் அண்மித்தால் மின்னல் வேகத்தில் பறந்துபோய்த் தாக்கி அவற்றைக் கலைக்கும் குருவிகள், எங்களை நிதானமாகப் பார்த்துக்கொண்டிருப்பது ஆச்சிரியத்தை அளித்ததது. ‘எங்களால் தங்களுக்கு எவ்வித ஆபத்துமில்லை’ என அவை நம்புகின்றன போலும்!
இது எங்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்து விட்டது என்றே சொல்லலாம்! நாட்டில் யுத்த நடவடிக்கைகள் காரணமாக எனக்கு அலுவலகமும் இல்லை… பிள்ளைகளுக்கு ஸ்கூலும் இல்லை, முற்றத்தில் கதிரையைப் போட்டு அமர்ந்துவிடுவோம்…

“கீ…கீ…”

புதிய குரல் கூட்டிலிருந்து கேட்டது. குருவி எத்தனை முட்டைகள் இட்டது, எத்தனை குஞ்சுகள் பொரித்தன போன்ற விவரங்கள் எங்களுக்குத் தெரியாது. அதைப் பார்ப்பதற்குப் போனால் குருவிகள் குழப்பமடையக்கூடும்.. மிரட்சியில் வேறு இடத்துக்கு மாறிப் போய்விடக்கூடும் என்பதில் நாங்கள் எச்சரிக்கையாக இருந்தோம்.

“கீ…கீ…கீ..!”

“அநேகமாய் ரெண்டோ அல்லது மூன்று குஞ்சுகள் இருக்கும்!” என எனது உத்தேசத்தைத் தெரிவித்தேன். ஒரு ஊகம்தான். தற்செயலாக அது ஒரே ஒரு குஞ்சாகவும் இருக்கலாம்.

“அப்பா! குஞ்சுகளை நாங்கள் வைச்சு வளர்ப்பமா?”

“வளரட்டும்… இப்ப அதுகள் சின்னக் குஞ்சிகள்தானே?”

ஆனால் அதற்கு ‘சான்ஸ்’ இல்லாமற் போய்விட்டது. ஒரு நாள் பகற்பொழுது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். இரவு முழுவதும் ஒயாத குண்டுச் சத்தத்தினால் உறங்க முடியவில்லை. இராணுவ முகாமிலிருந்து ஏவப்படும் குண்டு எங்கெல்லாம் விழுந்து யாரையெல்லாம் பலியெடுக்கிறதோ என்ற பதற்றம். ஒருவேளை அது இந்தப் பக்கமும் வந்து விழுமோ? மகளை கொங்கிறீட் ஃபிளாட்டின் கீழ் படுக்க வைத்துவிட்டு நானும் மனைவியும் விழித்துக்கொண்டிருந்தோம்.

காலையில் சத்தங்கள் ஒய்திருந்தன. பத்திரிகையை வாசித்தவாறு கதிரையில் இருந்து அப்படியே கண்ணயர்ந்து கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் மனைவியின் குரல் கேட்டது.

“ஓடி வாங்கோ! ஓடி வாங்கோ!” முற்றத்தில் மனைவி பதறிக்கொண்டு நின்றாள்.

“இஞ்ச ஓடி வாங்கோ!”

எழுந்த வேகத்தில் மகளையும் தூக்கிக்கொண்டு பதுங்கு குழியை நோக்கி ஓடினேன். குண்டு வீச்சு விமானம் வருவதாக இருக்கலாம். அதுதான் மனைவி இப்படிப் பதறுகிறாள்.

நான் ஓடுகிற ஓட்டத்தைப் பார்த்து மனைவி சினங்கொண்டாள். “ஏன் இப்படிப் பயந்து சாகிறியள்?”

அப்போதுதான் நிதானித்தேன். விமானத்தின் இரைச்சல் ஏதும் கேட்கவில்லை. ‘மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ..’ என்ற கதைதான். அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் கையிலிருந்த மகளைக் கிடத்திவிட்டு.. மனைவி அருகில் போனேன்.

“செண்பகம்!… குருவிக் குஞ்சு…” எனத் தடுமாறியபடி குருவிக்கூட்டுப் பக்கம் கையைக் காட்டினாள். என்னையும் பதற்றம் பிடித்துக்கொள்ள, கூட்டை நோக்கி ஓடினேன்.

குருவிக்கூடு தும்புதும்பாகச் சின்னாபின்னமாகியிருந்தது. குஞ்சுகளைக் காணவில்லை. யுத்த நடவடிக்கையால் காணாமற்போன தங்கள் பிள்ளைகளின் கதி அறியாது பதறும் பெற்றோர்களைப்போல, பெரிய குருவிகளிரண்டும் அவலக்குரலில் கத்தியவாறு சுற்றிச் சுற்றிப் பறந்தன. பறந்து பறந்து தேடின. செண்பகம் கச்சிதமாகத் தனது வேலையை முடித்திருந்தது.

செண்பகம் பொல்லாத பட்சி. சிவந்த, அனல் கக்குவது போன்ற கழுகுக் கண்கள். குத்திக் கிழிக்கும் கூரிய சொண்டு (அலகு), சிறிய பாம்புகளையும், விஷப் பூச்சிகளையும் தனது ஆகாரமாக ;லபக்’ கென விழுங்கக் கூடியது. பொதுவாக இது விஷ ஜந்துக்களை ஒழித்துக்கட்டும் பிராணி என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால், ஒன்றும் அறியாத அப்பாவியான சிறு ஜீவன்களையும் சாப்பிட்டு ஏப்பம் விடுகிறதா?
நான் சோர்ந்து போனேன். “குஞ்சு…செத்துப்போச்சா?” என மகள் கேட்டாள். அவள் கண்களில் நீர் துளிர்த்து வந்தது.

‘யுத்த நடவடிக்கையால் நவம்பர் மாத இறுதிவரை வடபகுதியில் 16,545 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன’ சற்று முன்னர் வாசித்த பத்திரிக்கைச் செய்திகூட என்னைப் பெரிதாகப் பாதிக்காதது போலிருந்தது. அழுது குளறும் இந்தக் குருவிகளுக்கு எப்படி ஆறுதல் கூறமுடியும்.
மீண்டும் போய்க் கதிரையில் விழுந்தேன். தூக்கத்திலாழ்ந்து ஏதோ அர்த்தமில்லாத அரைக் கனவுகளில் மூழ்கிவிட்டேன் போலிருக்கிறது.

“ஓடி வாங்கோ! ஓடி வாங்கோ!”

முற்றத்தில் மனைவி திரும்பவும் பதறிக்கொண்டு நின்றாள்.

“இஞ்ச ஓடி வாங்கோ… அந்தா பாருங்கோ! எவ்வளவு சின்னக் குஞ்சு! குருவிக் குஞ்சு!”

குருவிக் குஞ்சா? அவள் கை காட்டிய திசையிற் பார்த்தேன். அந்தப் பெரிய வாசற்கதவு இடைவெளியூடு தத்தித் தத்தி வந்தது.

அப்போதுதான் நடை பழகும் ஒரு குழந்தையைப் போல நடக்கமுடியாது கஷ்டப்படுவது தெரிந்தது. எனினும் இங்கிதம் தெரிந்த ஒரு பெரிய ஆளைப்போல வாசலில் நின்று ‘கீ! கீ!’ எனக் கூப்பிட்டது. ‘உள்ளே வரலாமா?’ எனக் கேட்பதுபோல முனங்கியது. காதுக்குச் சரியாக எட்டாமல் முனகும் குரல்.

ஓடிப்போய் அதைத் தூக்குவதற்காகக் கையை நீட்டினேன். அப்படியே நிலத்தோடு படுத்துக்கொண்டது. பயத்தில் கையிலெடுத்தபோது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அதன் நெஞ்சு துடித்துக்கொண்டிருப்பதைக் கையில் உணர முடிந்தது. அப்போதும் முனகும் குரல் “கீ…கீ…”

“அப்பா காட்டுங்கோப்பா பாப்பம்!” என் மகள்.

“எங்க…பாப்பம்…? என்ன, உங்கட… குருவிக் குஞ்சு தானே?” என் மனைவி.

கையை மெதுவாக நீக்கிப் பார்த்தோம். அப்போதுதான் இறகுகள் முளைக்கத் தொடங்கியிருந்தன… மீன் செதில்களைப் போல.

“எவ்வளவு சின்னக்குஞ்சு!” என மகிழ்ந்தவாறே, மகள் அதன் முதுகில் தன் விரலால் தடவினாள். அது உடலைச் சிலிர்த்தது… “கீ! கீ..!”
பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.

இந்த வீட்டுக்கு வந்த புதிதில் ஒரு தென்னை மரத்தடியில் எங்கள் கண்;களில் முதலில் பட்டது கலைக்கப்பட்டிருந்த ஒரு கூடுதான். தாறுமாறாய்ச் சிதறிக் கிடந்த தும்புகளை எல்லாம் விலக்கிவிட்டுப் பார்த்தோம். உள்ளே எதையும் காணோம். ஏதோ ஒரு துஷ்டப் பிராணி கூட்டை சம்ஹாரம் பண்ணியிருக்கிறது என்பது புரிந்தது. பாதிக்கப்பட்டது எதுவோ என்று நாங்கள் விசனித்திருக்கையில்தான் அந்தச் சத்தம் வந்தது.

“கீச்…கீச்..” என்ற மெல்லிய சத்தம்.

ஒரு செடியின் பின்னால், மூலையில் அரண்டபடி காட்சியளித்தது ஒரு அணில் குஞ்சு. பெரிய அணிலைப் போல முழுமையாக ரோமம் முளைத்திருந்தாலும், தானாகத் தீன் எடுக்கும் வயது வந்திருக்கவில்லை. தாயைப் பிரிந்து தவிக்கிறது என்பதை மிகவும் ஹீனமான ‘கீச்..கீச்..’சத்தத்தின் மூலம் அது காட்டியது. அதை மெதுவாக எடுத்து என் உள்ளங்கையில் வைத்துக்கொண்டேன். தன்னுடைய அழகிய வாலைச் சுருட்டிக் கொண்டு அடக்கமாகப் படுத்துக்கொண்டது. என உடல் சூடு அதற்கு இதமாக இருந்திருக்கவேண்டும்.

அந்த அணில் குஞ்சுக்கு முதலில் ஏதாவது ஆகாரம் கொடுக்கவேண்டும் என்று நினைத்தவனாய், மகளை அழைத்து ஃப்ரிஜ்ஜில் இருந்து பால் கொண்டுவரச் சொன்னேன். கிண்ணத்தில் இருந்து பாலை ஒரு இங்க் ஃபில்லரால் எடுத்து அந்த அணில்குஞ்சின் வாயில் விட்டேன். அது முகத்தை உதறி பாலைக் குடிக்கமாட்டேன் என்கிறது. என்ன செய்வது என்று நான் விழித்தேன். அப்போது என் மனைவி “உடம்புச் சூட்டில் தாயப்;பால் கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும்” என்று எடுத்துச் சொல்லிய பிறகுதான் உறைத்தது. அவள் சொன்ன மாதிரியே பாலை இளஞ்சூடாக்கிக் கொடுத்தபோது அந்த அணில்குஞ்சு குடித்தது.!

ஆகாரம் எடுத்துக்கொண்ட அந்த அணில் குஞ்சு தன்னிச்சையாகப் போகட்டும் என கொண்டுபோய் தென்னை மரத்தின் அடியில் விட்டேன். ‘கீச்…கீச்..” என்று மரத்தைச் சுற்றி வந்ததே தவிர, மரம் ஏறிச் செல்ல அதற்குத் தெரியவில்லை. எங்களை ஒரு ஏக்கத்தோடு பார்த்தது அது. ‘என்னை இப்படியே அநாதையாக விட்டுவிடுவீர்களா?’ என்கிற கேள்வி அதன் பார்வையில்.

“இந்த அணில் குஞ்சை நாங்கள் வெச்சு வளர்ப்பமா?” என மகள் ஆசைப்பட்டாள். வெகு சீக்கிரத்தில் அது எங்கள் குடும்பத்தில் ஒன்றாகிவிட்டது. தினமும் நாங்கள் சாப்பிடும் போதெல்லாம் அது சுயாதீனமாகப் பக்கத்தில் வந்து அமர்ந்து அதற்கு வைக்கும் உணவைத் தன் முன்னங்கையால் எடுத்துத் தின்னும். அந்தக் காட்சியே அலாதி அழகாக இருக்கும். அதைப் பார்த்து மகள் கைதட்டி ஆனந்தப்படுவாள்.
‘உடல் தெம்பும், பலமும் கூடிவிட்ட அணில் குஞ்சை சுந்திரமாக உலவவிடலாம்’ என முடிவெடுத்தோம். அதை அடுத்தமுறை தென்னை மரத்தின் அடியில் கொண்டுபோய்விட்டபோது, இதற்கு முன்னால் ஏதோ பயிற்சி பெற்றதுபோல், சரசரவென்று உச்சிக்குச் சென்று திரும்பி எங்களைப் பார்த்து வாலைத் தூக்கித் தூக்கி ஆட்டி “கீச்…கீச்..” என்றது. ‘இனி என்னைப் பற்றிய பயம் வேண்டாம்’ என அது எங்களுக்குச் சொல்வது போல் இருந்தது.

இந்த அனுபவம் மகளுக்கும் நினைவுக்கு வந்திருக்கவேண்டும்.

“அப்பா! அணிலைப் போல இதை நாங்கள் வைச்சு வளர்ப்பமா?”
என்னிடத்திலும் அந்த ஆசை தோன்றியிருந்தாலும், அது எப்படிச் சாத்தியமாகும் என்ற கவலையும் கூடவே இருந்தது.

எனினும், “ஓமோம்! வளர்க்கலாம்!” எனச் சொல்லி வைத்தேன்.

“ஐயோ பாவம்! சின்ன குஞ்சு தீனைக் கொத்திச் சாப்பிடக்கூடத் தெரிஞ்சிருக்காது… செத்துபோயிடும்!” எனத் தனது அச்சத்தைத் தெரிவித்தாள் மனைவி.

“விரலாலை சொண்டைத் திறந்து… ஊட்டிவிடலாம் தானே?”

“அதுக்கு என்ன சாப்பிடக் குடுப்பீங்கள்?”

“வரகு, சாமை, பழவகைகள்!”

“நல்லாய்த்தான்! நீங்கள் நினைக்கிறமாதிரியில்லை! இது குழந்தை! பதப்படுத்தாமல் குடுத்தால் தொண்டையிலேயே அடைச்சுச் செத்துப்போயிடும்!”

அவள் இரண்டாவது முறையாகவும் “செத்துப்போய்விடும்” என்றதும் நான் உஷாரடைந்தேன். குருவிக்குஞ்சை வளர்ப்பதனால் சாப்பாடு ஒரு பிரச்சினைதான். குருவிகள் குஞ்சுகளுக்கு என்ன ஊட்டுகின்றன என்று தெரியவில்லை. ப+ச்சி புழுக்களா அல்லது பழவகைகளா..? அவற்றைத் தங்கள் வாயிலேயே மென்று பதப்படுத்திக் கொடுப்பதாகவும் இருக்கலாம்.

பூச்சி புழுக்களை என் வாயில் போட்டு மெல்வதாவது….
குருவிக்குஞ்சை கண்ட சந்தோசத்தில் நாங்கள் கல கலத்துக் கொண்டிருக்க, கொண்டைக்குருவிகள் பறந்து வந்தன. எங்களைச் சுற்றிப் பறந்து கீச்சிட்டு முறையிட்டன. மரக்கிளையில் போயிருந்து பார்த்தன. சற்று வித்தியாசமான தொனியில் அழுவது போல குரலெழுப்பின. ஆ! இந்தக் குருவிகளெல்லாம் எவ்வளவு அருமையாகத் தங்கள் குதூகலத்தையும் மகிழ்ச்சியையும், வேதனைகளையும், சோகங்களையும் தெரிவிக்கின்றன.

தாயின் குரல் கேட்டுக் குஞ்சு கத்தத் தொடங்கியது.

“பாவம்! அதுக்குப் பசிக்குது போல… தாயும் வந்திருக்கு… விடுங்கோ போகட்டும்!”

ஒரு மரக்கிளையில் குருவிக்குஞ்சை விட்டோம். தாயக்;குருவி அண்மையில் பறந்துவர இது வாயைப் பிளந்து கொண்டு கத்தியது. தாய் தீன் ஊட்ட எத்தனிக்கையில் எங்கிருந்தோ அந்தச் செண்பகம் பறந்து வந்தது. குண்டு வீசப்போகும் விமானத்தைபோலப் குத்திப் பதிந்து தாக்க வந்தது. குருவிகள் இரண்டும் தொலைவில் பறந்து போயிருந்து அவலக்குரல் எழுப்பின. குஞ்சு ‘தொப்’ பெனக் கீழே விழுந்தது “கீ…கீ…”
அடைக்கலம் தேடிவந்த குஞ்சைத் திரும்பவும் அந்த யமனின் கையில் கொடுக்கப் பார்த்தோமே என்ற கவலையுடன் ஓடிப்போய்த் தூக்கினோம். நல்ல வேளையாகக் காயமேதும் பட்டிருக்கவில்லை. குருவிக்குஞ்சைக் கையில் வைத்துக்கொண்டு… இனி என்ன செய்யலாம் என ஆராய்ந்தோம். அப்போது மனைவி ஒரு திட்டத்தைச் சொன்னாள்.

“கிளிக்கூடு போல… கம்பி வலையால் அடைச்ச கூட்டிலை குஞ்சை விட்டு ஒரு மரத்திலை கட்டிவிடலாம். வலையை ஓரிடத்திலை கொஞ்சம் நீக்கி பெரிய ஓட்டை ஆக்கிவிட்டால் தாய்க்குருவி அதற்குள்ளாலை எட்டித் தீன் குடுக்கும்…. குஞ்சு பறக்ககூடியதாய் வளர்ந்தவுடனே திறந்தவிடலாம்.”

இது நல்ல ‘ஐடியா’ வாகப் பட்டது. நான் குதூகலத்துடன் சொன்னேன்.

“அப்ப எங்கட வீட்டிலையும் ஒரு அகதி முகாம்.”

“அகதி முகாமோ…. என்னவோ… அடைக்கலம் எண்டு வந்த ஜீவனைப் பாதுகாக்கவேண்டியது எங்கட பொறுப்பு.”
இதற்குப் பிறகு நாங்கள் துரித கதியிற் செயற்பட்டுக் கூட்டிலே குஞ்சை விட்டு, மரக்கிளைகளில் கட்டினோம். இப்படிச் செயற்கையான கூட்டில் அடைக்கப்பட்டிருக்கும் குஞ்சுக்கு ஊட்டுவதற்கு தாய்க்குருவி வருமா என்ற சந்தேகம் எனக்கும் இருந்தது.

கொண்டைக்குருவிகள் ஒவ்வொரு மரமாகப் பறந்து பறந்து குஞ்சைப் பெயர் சொல்லி அழைத்தன. குஞ்சு வாயைப் பிளந்து குரல் கொடுத்ததும், ஒரு குருவி சட்டெனப் பறந்து வந்து கூட்டுக்கு அண்மையில் இருந்தது! கூட்டின் ஒவ்வொரு வலைக்கண்களுடும் முகத்தைச் செலுத்திச் செலுத்தி… உள்ளே நுழையப் பிரயத்தனம் செய்தது. அந்த பெரிய ஓட்டை.. அதனூடு தலை மிக இலகுவாக உட்சென்றதும்… இன்னும் கொஞ்சம் முயற்சித்தது…ம்..ம்.. எனச் சிறகை ஒடுக்கி… நுழைந்து உள்ளே போய்விட்டது. ‘அப்பாடா’ என மூச்சு வாங்குவதற்குள் அதற்குப் பயம் பிடித்துக்கொண்டதுபோலும். ‘பிள்ளையைச் சிறை மீட்க வந்து தானும் அகப்பட்டுக்கொண்டேனா?’ – குருவி வெளியேறுவதற்காகச் சிறகடித்துக் கூட்டுக்குள்ளேயே பறந்து பறந்து வலைக்கண்களில் முகத்தைக் குத்திக் குத்தி அமர்களப்படுத்திக் கொண்டிருந்தது.

ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன்.

“அப்பா! திறக்க வேணாம்! ரெண்டையும் வளர்த்தால்… தாய், குஞ்சுக்கு தீன் குடுக்கும்தானே?”

“இல்லையம்மா! பாவம், அது பயப்படுது.. போகட்டும்!”

கதவைத் திறந்ததும், எய்த அம்புபோல வெளியே பறந்து போனது.
ஆனால் தாயப்பாசம் யாரை விட்டது? சிறு பூச்சி, புழுக்களைக் கொத்திக்கொண்டு திரும்பவும் கூட்டுக்கு அண்மையாக வந்திருந்து சோகமாக அழத் தொடங்கியது. மற்றது பக்கத்தில் வந்து வேறு தொனியில் பேசியது.

“கீச்!கீச்”– பசியில் அழும் குழந்தைக்கு ஒரு புதிய குரலில் ஆறுதல் சொன்னவாறு மெல்ல மெல்ல ஒவ்வொரு கிளையாக முன்னேறி… எதற்கும் துணிந்ததுபோல் சட்டெனக் கூட்டுக்கு அண்மையில் பறந்து துளையைத் தேடி “ம்…ம்…” ஒரே மூச்சில் உள்ளே போய்விட்டது. நாங்கள் ஆவலுடன் பார்த்தோம். “சரி!சரி குஞ்சுக்குத் தீன் குடுக்குது” என துள்ளிக் குதித்து மகிழ்ந்தாள் மகள்.

குஞ்சுக்குத் தீனூட்டிய பின்தான் குருவிக்கு அடுத்த பிரச்சினை தெரிந்தது. இனி எப்படி வெளியே போவது? சிறகடித்து அதே எத்தனிப்பு. வலைக்கண்களில் முகத்தைக் குத்திக் குத்தி…

கதவைத் திறந்துவிட்டபோது கவனித்தேன்.. பாவம், தாய்க்குருவியின் அலகுக்கு மேலாக, வலைக்கம்பியில் உரசிய சிதைவில் ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் அன்று முழுவதும் குருவி பலமுறை வந்து… தீன்கொடுத்து வலைக்கண்களில் முகத்தைக் குத்திக் குத்தி வெளியே வரத் தவித்தது. நாங்கள் திறந்துவிட, பறந்துபோனது.

இவ்வளவு தெரிந்த குருவிக்குப் பொறுமையாக இருக்கத் தெரியவில்லையே… வேலையில்லாத ஒருவன் வந்து திறந்து விடுவான் என்று புரியவில்லையே என்ற கவலை எங்களுக்கு. மாலைக்குள் அதன் முகக் காயம் ஒரு புண்ணாக மோசமடைந்திருந்தது. எனினும் குருவி அதை லட்சியம் செய்யவில்லை.

அதற்கு தன் தாய்பாசம் பெரிதாக இருக்கலாம். அதனால் தன் முகப்புண்ணைப் பெரிதுபடுத்தாமல் வந்து போகலாம். ஆனால் இதை எங்களால் அலட்சியம் செய்யமுடியவில்லை. மறுநாள் மிருக வைத்தியரிடம் கேட்டு அதன் புண் ஆறக்கூடியதாக மருந்து வேண்டி வந்தோம். அடுத்த முறை குருவி கூட்டுக்குள் வந்ததும் திறந்துவிடுவதற்கு முன், பிடித்து அதன் புண்ணில் மருந்தைத் தடவிப் பறக்கவிட்டோம்.

“ஓட்டை பெரிசாய் இருக்கிறபடியால்தான் குருவி கூட்டுக்குள்ளை போகுது! அதை கொஞ்சம் சிறுசாக்கி விடலாம்… தலை மட்டும் உள்ளே நீட்டக் கூடியதாக!”

தனது முன்னைய ஐடியாவிற்கு ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தாள் மனைவி. எனினும் அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை. வேறொன்றுமில்லை.. மனைவியின் பேச்சையெல்லாம் எடுத்தமாத்திரத்தில் அங்கீகரிக்கிற ஆளாக இருக்கக்கூடாதே என்ற பெருந்தன்மைதான்!

“அதெப்படி..? குஞ்சு அருகில் வந்து தீன் வாங்கவேண்டுமே!”

“நீங்கள் அப்படிச் செய்து பாருங்கோவன்! ரெண்டு மூன்று முறைக்குப் பிறகு குஞ்சு தானாகவே பழகியிடும்!”

அவள் சொன்னது சரிதான். இத் திட்டம் வெற்றியளித்தது. குருவி கூண்டுக்கு உள்ளே போக முடியாமல் தலையை மட்டும் உள்ளே விட்டு, இரக்கமான குரலில் பிள்ளையை அழைத்தது. தாயின் அழைப்பைக் கேட்டதும் குஞ்சு முதலில் தயங்கி, பிறகு பசி உந்தலில் தட்டுத் தடுமாறி தாயின் அருகில் வந்து தீன் வாங்கியது.

இப்போது எவ்வித கஷ்டமுமில்லாமல் அந்தச் சிறு ஓட்டை வழியே தாய் தலையைவிட்டு தீனூட்ட, குஞ்சு சாப்பிட்டு வளர்ந்துகொண்டிருந்தது. நாளும் பொழுதும் அதன் சிறகுகள் வளர்ச்சியடைந்து குருவிக்குஞ்சு அழகான தோற்றமெடுத்தது. ஒரிருமுறை அதைத் திறந்துவிட்டுப் பார்த்தோம். “பறக்குமோ?”
அதற்குச் சரியாகப் பறக்கத் தெரியவில்லை. சிறகடித்து மெல்ல உயரப் பறந்து கீழே விழும். திரும்பவும் கூட்டில் பிடித்து விடுவோம்.. அது நல்ல வளர்ச்சியடையும் வரை!

அதை இப்போது குஞ்சு என்று சொல்ல முடியாது. அதனால் இப்போது பறக்கமுடியும். திறந்துவிடலாம் எனத் தீர்மானித்த போது மகள் கவலைப்பட்டாள்.

“வேண்டாமப்பா! அதை வைச்சு வளர்ப்பம்!”

“அடைச்சுவைக்ககூடாது! பாவம்தானே..? திறந்துவிட்டாலும் அது இஞ்ச நிண்டு வளருமம்மா”– மகளை ஆதரவாக அணைத்துக்கொண்டேன். கூட்டின் கதவைத் திறந்துவிட்டு, அதையே பார்த்துக்கொண்டு நின்றோம்.

கூட்டிலிருந்தபடியே எங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்தது. சிறகைச் சிலிர்த்து உதறியது. மெல்லத் தாவி கூட்டின் வாசலில் அமர்ந்தது. சட்டெனப் பறந்து மரக்கிளைக்குப் போனது. அலகினால் ஒவ்வோர் இறகுகளாகக் கோதிவிட்டுச் சரிபார்த்தது. அங்கிருந்தபடியே எங்களைப் பார்த்து… “கீ! கீ!” நன்றி! நன்றி!

இதற்குள் கொண்டைக்குருவிகள் இரண்டும் எங்கிருந்தோ பறந்து வந்து குஞ்சின் பக்கத்தில் அமர்ந்தன. குதூகலத்தில் மகிழ்ந்து கத்தியவாறே குஞ்சுடன் சேர்ந்து வேறொரு மரத்துக்குப் பறந்தன.

ஒருவிதமான திருப்தியுணர்வும் ஆனந்தவிம்மலும் என் நெஞ்சை நிறைக்க, பக்கத்தில் நின்ற மனைவியையும் மகளையும் திரும்பிப் பார்த்தேன். என்னடா இது! உத்தியோகத்துக்காக அவளைப் பிரிந்து நான் எந்தப் பரதேசமெல்லாம் போய்வந்தாலும் சிணுங்காத என் மனைவி கண்கள் கலங்கிக் கொண்டு நின்றாள். மகள் வைத்த கண் வாங்காது குருவிகளைப் பார்த்தவாறே கையசைத்துக் கொண்டிருந்தாள்….

“பை! பை!”

“கீ! கீ!”

– ஆனந்தவிகடன் 1991 – தெரியாத பக்கங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: பிப்ரவரி 1997, மல்லிகைப்பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *